நம் ஜீவியத்திலும் நம் ஊழியத்திலும் எப்பொழுது "கர்த்தருடைய ஆசீர்வாதம்" புலப்படத் தொடங்கியதோ ‘அன்றிலிருந்தே’ நமக்குப் பல அபாயங்கள் தோன்றும் என்பதை அறிந்திடக்கடவோம்! அந்த அபாயங்களைக் கீழ்காணும் மூன்று வகைகளில் நாம் சந்திக்க நேரிடுகிறது!!
1. ஆவிக்குரிய பெருமை:
இந்த அபாயங்களில், ஆவிக்குரிய பெருமையே முதலாவதும், பிரதானமுமாய் இருக்கிறது! எப்பொழுதெல்லாம் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறாரோ, அப்பொழுதெல்லாம் நம் ஆவிக்குரிய வளர்ச்சியையும், நம் ஊழியத்தையும் பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்க சாத்தான் நம்மைத் தூண்டுகிறான்! இந்த உலகில், விசுவாசியானாலும் அல்லது அவிசுவாசியானாலும், பெருமைக் கொண்ட ஒவ்வொருவருக்கும் தேவன் எதிர்த்தே நிற்கிறார். எனவேதான், நம் முகத்தைத் தேவனுக்கு முன்பாக "எப்போதும்" புழுதியில் வைத்து வாழ்வதே நமக்குப் பாதுகாப்பாய் இருக்கிறது!
பெருமை வந்தவுடன் நம்முடைய வரங்களை நாம் உடனே இழந்திட மாட்டோம். ஆனால், தேவனுடைய கிருபையை "உடனடியாக" இழந்துவிடுவோம். நாம் தொடர்ந்து ஒரு ஊழியத்தைச் செய்து கொண்டிருக்க முடியும். ஆனால், தேவனுடைய கிருபையும் அவருடைய அபிஷேகமும் நம்முடைய ஜீவியத்தில் இருக்காது!! பெருமையினால் லூசிபர் பாவம் செய்தவுடன் தன் அபிஷேகத்தை இழந்துப்போனான். ஆனால், தன் வரங்களையோ அவன் இழந்திடவில்லை. இன்றும்கூட அந்த வரங்களை அவன் வைத்திருக்கிறான்! இன்று யாரெல்லாம் தங்கள் வரங்களையும் அல்லது ஊழியத்தையும் குறித்து மேன்மைப் பாராட்டுகிறார்களோ, அவர்கள் யாவருக்கும் இது ஓர் எச்சரிக்கையாய் இருக்கக்கடவது!! கிருபைக்கும் வரங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பகுத்தறியத் தெரியாத முதிர்ச்சியற்ற விசுவாசிகள் வேண்டுமானால், நம்மைத் துதிபாடி இன்னமும் "தேவனுடைய அபிஷேகம்" நம்மிடம் தங்கியிருப்பதாகக் கூறலாம். ஆனால், உண்மை யாதெனில், நம் ஜீவியத்தின் எல்லையெங்கும், நம் ஊழியத்தின் எல்லையெங்கும் "தேவனுடைய மகிமை விலகிவிட்டது" என்ற அர்த்தத்தைக் கூறும் "இக்கபோத்" வார்த்தையே எழுதப்பட்டுவிட்டது! ((1சாமுவேல் 4:21). இன்னும் அபாயம் என்னவெனில், நம்மை முகஸ்துதி பாடுவோரின் சத்தமே நமக்கு நிலைவரமாகி, அச்சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் நம் இருதயத்தை உணர்த்திடும் "பரிசுத்தாவியின் சத்தத்தை" அகற்றித் தள்ளிவிடும்.
நம் ஜீவியத்தில் தேவனுடைய ஆசீர்வாதம் தங்கியிருப்பதை அறியும் மாறாத ஒரே ஒரு அடையாளம், நாம் நாளுக்குநாள் கிறிஸ்துவைப்போல் மாறி வருவதேயாகும்! இதற்காகவே தேவன் நம்மை முன்குறித்திருக்கிறார் (ரோமர் 8:29). நாம் பரலோகம் செல்லுவதற்கும் அல்லது ஓர் பெரிய ஊழியத்தைப் பெறுவதற்கும் தேவன் நம்மை முன்குறிக்காமல், "இயேசுவைப்போல் மாறும்படியே" நம்மை முன்குறித்திருக்கிறார்.
ஓர் "அபிஷேகம் நிறைந்த ஊழியம்" ஜனங்களை கிறிஸ்துவுக்குள் ஆழ்ந்த தியான ஐக்கியத்திற்குள்ளும், அதிகமான நொறுங்குதலுக்கும், பாவத்தை அதிகதிகமாய் வெறுப்பதற்குமே ஜனங்களை எப்பொழுதும் நடத்திச் செல்லும். "பேசும் திறமையைச்" சார்ந்த ஊழியமோ, ஜனங்கள் நம்மைப் புகழுவதற்கும், அவர்கள் நம்மோடு அதிகதிகமாக ஒட்டிக்கொள்வதற்குமே நடத்திச் செல்லும். அநேக அரசியல்வாதிகள் சிறந்த பேச்சாளர்களாயிருப்பதினிமித்தம், தங்களின் மணிக்கணக்கான பேச்சினால் ஜனங்களை ஸ்தம்பிக்க வைத்து அவர்களின் உணர்வு எழுச்சிகளையும் தூண்டிவிடுகிறார்கள். இதன் மூலமாய், ஜனங்களைத் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளுகிறார்கள். இன்றும், இவ்வித திறமைப் பேச்சாளர்களே சபையில் பெருமை கொண்டிருக்கிறார்கள். ஆனால், அபிஷேகிக்கப்பட்ட பிரசங்கிகளோ, தாழ்மையாய் இருக்கிறார்கள்!!
2. திருத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுத்தல்:
தான் திருத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள மனதில்லாதிருப்பதே இரண்டாவது அபாயமாகும். தேவன் நம் ஊழியத்தை ஆசீர்வதிக்க ஆரம்பித்தவுடன், "நம்மிடத்தில் எந்தத் தவறுமே இருக்காது" என சிந்திக்கத் துவங்குவது மிக எளிதாகும்.
அதற்குப் பதிலாக, எந்த திருத்துதலுக்கும் நம்மைச் சரியானவர்களென நியாயப்படுத்திக் கொண்டுதான் இருப்போம். யூதாஸ்காரியோத்தை ஆண்டவர் கடிந்து திருத்திய உடனே, அவன் (யோவான் 12:4-8 வசனங்களை மத்தேயு 26:10,14 வசனங்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள்). இப்படிதான், அவன் தன்னையே அழித்துக் கொண்டான். ஆனால், பேதுருவோ, இயேசு அவனை "சாத்தான்" என கடிந்தபோதும்கூட தன்னைத்தானே தாழ்த்தினான். இப்படியாகத்தான், பேதுரு தன்னை இரட்சித்துக் கொண்டான்!
"இயேசுவின் மகிமையையே" பரிசுத்தாவியானவர் நமக்கு எப்பொழுதும் காட்டுவதற்கு சிரத்தை கொள்கிறார். அவ்விதமாய், நாம் அந்த மகிமையைக் கண்டுவிட்டால், நம் நிர்பந்தத்தையும், தேவையையும் நாம் உடனே உணரத் துவங்கிவிடுவோம்!! இச்சமயத்தில், நாம் மெய்யான தேவபக்தியுள்ளவர்களாயிருந்தால், நம்மை உடனடியாக நியாயந்தீர்த்துக் கொள்பவர்களாய் இருப்போம். இவ்வாறு, "நம்மை நாமே சரியாய் நியாயம் தீர்ப்பவர்களாய் இருந்தால், தேவனால் நியாயந்தீர்க்கப்பட மாட்டோம்" (1கொரி 11:31) என்றே வேதம் நமக்கு வாக்குத்தத்தம் செய்கிறது. இந்த வசனம் தொடர்ந்து கூறுகையில், இவ்வாறு நம்மை நாமே சரியாக நியாயந்தீர்க்கவில்லையென்றால், "கர்த்தரே நம்மை சிட்சித்து திருத்துவார்" எனக் கூறுகிறது. அவ்வாறு அவர் நம்மைத் திருத்தி சிட்சிக்கும் ஒரே நோக்கம் "நாம் உலகத்தோடு ஆக்கினைக்குள்ளாகாமல்" நம்மை இரட்சிக்கும்படிக்கேயாகும் என வாசிக்கிறோம் (1கொரி 11:32).
3. நம்மை நாமே உயர்த்துதல்:
நம்மை தேவன் ஆசீர்வதிக்கும்போது, மற்றவர்களைக் காட்டிலும் நம்மை உயர்த்துவது நமக்கு மிக எளிதாக இருக்கும். இந்த நிலைக்கு நாம் வந்துவிட்டால், இன்றைய சினிமா நட்சத்திரங்கள் செய்வதுப்போல, நம்மை வியந்து புகழும் ஜனங்களைக்கொண்டு (குறிப்பாக, இளைஞர்கள்) கொஞ்சம் கொஞ்சமாய் "ரசிகர்கள் மன்றத்தை" நமக்கென கட்டத் துவங்கிவிடுவோம்! சாலொமோனின் மகன் "ரெகொபெயாம் ராஜா" தன் தேசத்திலுள்ள இளைஞர்கள் மத்தியில் தன் பிரபல்யத்தைத் தேடியதினிமித்தம் மூத்தவர்களின் ஆலோசனையை கேட்காமல் அதை அலட்சியப்படுத்திவிட்டான். இந்த இவனுடைய செயலே, இஸ்ரவேல் தேசத்தை பிளவுபடச் செய்துவிட்டது! இதைப்போன்றே, இன்றைய கிறிஸ்தவத்திலும் அநேக பிளவுகள் உண்டாயிருக்கிறது.
இதைக்குறித்து, அப்போஸ்தல நடபடிகளில் கூறப்பட்ட இரண்டு உதாரணங்களைச் சற்று கவனமாகப் பாருங்கள். எபேசுப்பட்டணத்தில் மாபெரும் எழுப்புதல் ஏற்பட்டதையும், அப்போஸ்தலர் நடபடிப் புத்தகங்களில் கூறப்பட்ட அற்புதங்களில் "மிக ஆச்சரியமான அற்புதங்கள்" இந்தப் பட்டணத்தில் நடந்ததையும் அப் 19:11-20 வசனங்களில் நாம் காண்கிறோம். ஆனால், மூன்று வருடங்கள் கடந்தப்பின்பு, "அங்குள்ள மூப்பர்களிடையில் ஓர் பிரிவினை ஏற்படும் அபாயம்" இருப்பதை அவர்களுக்கு எச்சரித்துக் கூறினார் (அப் 20:30). தான் எபேசுவை விட்டுச் சென்றவுடன், அவர்களுக்குள் சிலர் எழும்பி "சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்வார்கள்" என மூப்பர்களைப் பவுல் எச்சரித்தார். இப்படிப்பட்டவர்களே, தங்களுக்கென பெயரையும் தங்களுக்கென ஊழியத்தையும் விரும்பி, சபையைப் பிளவுப்படுத்துவார்கள். இவர்களின் செயல் எவ்வளவாய் கர்த்தருடைய நாமத்திற்கு அபகீர்த்தியும், "கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்கும்படியான முகாந்தரத்தையும் கொண்டுவரும்" (2சாமு12:14) என்பதைக் குறித்தெல்லாம் இவர்களுக்கு கரிசனை இருப்பதேயில்லை.
இவைகளுக்கு நேர்மாறாக நடந்த வேறொரு சம்பவத்தையும் இப்போது கவனித்துப் பாருங்கள். பவுலும், பர்னபாவும் இணைந்து ஊழியம் செய்து, மாபெரும் அறுவடை உண்டான சமயத்தில் அவர்களுக்குள் பிளவு ஏற்பட்டது (அப் 15:39). "மாற்குவைக்" குறித்த விஷயத்திலேயே அவர்களுக்குள் பிரிவினை ஏற்பட்டது. ஆனால், இந்த சம்பவத்திலோ, அந்தப் பிளவின் மூலமாய் தேவன் மகத்துவமான செயலை செய்து முடித்தார்! இந்தப் பிரிவினை மூலமாய், ஒரே ஒரே குழுவாய் இருந்ததற்குப் பதிலாய் 1. பவுலின் தலைமையிலான ஊழியர்களும் 2. பர்னபாவின் தலைமையிலான ஊழியர்களும் ஆகிய இரண்டு வலிய குழுக்களைத் தேவன் உருவாக்கிட முடிந்தது. அதன் பலனாய், சுவிசேஷம் இன்னும் அதிக வல்லமையாய் பிரபல்யமானது! இந்த "மாற்கு" சகோதரனும் ஆண்டவருக்கு மிகுந்த பிரயோஜனமுள்ள ஊழியனாய் பின்பு மாறி, மாற்கு சுவிசேஷத்தையும் எழுதினான்!
இந்த இரண்டாவது நிகழ்ச்சியில் சம்பவித்தப் பிளவின் மூலமாய் மிக நன்மையான பலனை உருவாக்கிட தேவனால் எப்படி முடிந்தது? அதற்கு ஓர் நல்ல காரணம் உண்டு. அந்த காரணம் யாதெனில், அந்த எபேசு மூப்பர்களைப்போல் அல்லாமல், இந்த பர்னபாவோ மிகுந்த ஆவிக்குரிய தன்மையோடு நடந்து கொண்டதேயாகும். ஆம், இந்த பர்னபா எந்த ஒரு சபையிலும் பிரிவினை ஏற்படுத்தவேயில்லை! தனக்கென விசுவாசிகளை அவன் இழுத்துக்கொள்ளவும் இல்லை! மாறாக, பவுலின் ஊழிய எல்லைக்குள் எந்த இடையூறும் செய்யாமல், கப்பல் ஏறி ஓர் முற்றிலும் புதிதான ஸ்தலத்திற்குச் சென்று, அங்கு அவர் மாற்குவுடன் சேர்ந்து ஊழியம் செய்தார் (அப் 15:39).
ஆகவேதான், "இந்தப் பிரிவினையை" தேவனால் ஆசீர்வதிக்க முடிந்தது. ஆனால், இந்த உத்தம பர்னபாவைப் போன்ற மனிதர்களை இன்றைய கிறிஸ்தவத்தில் காண்பதோ மிக மிக அரிதாகிவிட்டது.
மேலும், 1கொரி 11:19 கூறுகிறபடி, "உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் (பிரிவினைகள்-Division) உங்களுக்குள்ளே உண்டாயிருக்க வேண்டியது அவசியமே (must)" என்றும் வாசிக்கிறோம். ஆகவே, அவபக்தியுள்ளவர்களை வெளியரங்கப்படுத்தித் தன் சபையாகிய தோட்டத்திலுள்ள "பெருமையும் அகந்தையுமான" களைகளை அகற்றுவதற்கும் தேவன் பிவினைகளைப் பயன்படுத்துகிறார்!
பரலோகத்தில்கூட, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு "ஓர் பிளவு" ஏற்பட்டது! இப்படித்தான் தேவனும், லூசிபர் தன்னோடுகூட ‘சிறிதளவே’ பெருமையும் அகந்தையும் கொண்ட தூதர்களை இழுத்துக்கொள்ளும்படி தேவனே அனுமதித்தார் (வெளி 12:4 உடன் ஏசாயா 14:12-15 வசனங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்). இவ்வாறாகவே, பரலோகம் சுத்திகரிக்கப்பட்டது! எங்கெல்லாம் தேவன் கிரியை செய்கிறாரோ, அங்கெல்லாம் இதே சுத்திகரிக்கும் கிரியையைத் தேவன் இன்றும் சபையில் செய்துக்கொண்டுதான் இருக்கிறார். "உன் நடுவிலிருந்து பெருமையும் அகங்காரமும் கொண்டவர்களை விலக்கி, சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன்! அவர்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாக இருப்பார்கள்" என்றே கர்த்தர் சொல்லுகிறார். (செப் 3:11,12). இவ்வாறு சபையிலே மீதியாயிருக்கும் ஜனங்களிடம் காணப்படும் ஓங்கிய குணாதிசயம் யாதெனில், "அவர்கள் எந்த அநியாயமும் செய்வதில்லை, எந்தப் பொய்யும் பேசுவது இல்லை!" (செப் 3:13) என்பதுதான். இவ்வித அற்புத செயலுக்குப் பிறகுதான், ஆண்டவர் தன் சபையில் அகமகிழ்ந்து "சபையினிமித்தம் கெம்பீரித்து களிகூருவார்" (செப் 3: 17).
கர்த்தருடைய சமூகத்தைவிட்டு விலகிச் செல்பவர்களின் ஓர் முக்கிய குணாதிசயத்தை இங்கு கவனியுங்கள்: "அவர்கள் பொய் சொல்லத் துவங்குவார்கள்" என்பதுதான். அவ்வாறு சிறு சிறு பொய்களை இவர்கள் சொல்ல ஆரம்பித்து, முடிவில் "மனசாட்சியில் சூடுண்ட பொய்யர்களாய்" மாறிவிடுவார்கள் (1 தீமோ 4:1). இதற்கு நேர்மாறாக, ஆண்டவரைப் பின்பற்றிவருவோரின் அடையாளமோ "தங்களின் வாயிலிருந்து சகல பொய்யையும் (கபடையும்) கழுவிக் கொண்டவர்களாய் இருப்பார்கள்!" என்பதேயாகும் (வெளி 14:4,5).
சிறந்த மாதிரிகளும், மோசமான மாதிரிகளும்:
தேவன் தன்னுடைய வேதாகமத்தில் அநேக சிறந்த மாதிரிகளையும் தந்துள்ளார்!! ஓர் ஞானமுள்ள மனுஷனோ இந்த எல்லா மாதிரிகளிடமிருந்தும் கற்றுக் கொள்வான்.
1. ஆபிரகாம்:
தன்னுடைய மேய்ப்பர்களுக்கும் லோத்தின் மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டானபோது, ஆபிரகாம் தனக்கென "செழித்த பூமியைப்" பற்றிக்கொள்ள சிறிதுகூட எத்தனிக்கவேயில்லை. முதல் தெரிந்துகொள்ளுதலை, ஆபிரகாம் லோத்திற்கே விட்டுக்கொடுத்தான்! இந்த லோத்தோ, தனக்கென செழிப்பான பூமியை உடனடியாய், வாரி எடுத்துக்கொண்டான்!! (ஆதி 13:10). ஆனால், முடிவிலோ, சொல்லொண்ணா நஷ்டத்தையடைந்தான்! ஆபிரகாமோ, தன் சொந்த உரிமையையும் இழந்து விட்டுவிட்டான். ஆகவே, தேவன் இந்த ஆபிரகாமிற்கு "சகல பூமியையும்" சொந்தமாய் கொடுத்துவிட்டார்! "சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள்" என்பது எத்தனை உண்மையிலும் உண்மை!
2. யாக்கோபு:
துரதிருஷ்டவசமாய், இந்த யாக்கோபோ தன் தாத்தாவாகிய ஆபிரகாமின் நல்ல மாதிரியைப் பின்பற்றத் தவறிவிட்டான். இவனோ, தன் சகோதரன் ஏசாவின் சேஷ்டபுத்திரபாகத்தைத் தனக்கென அள்ளிக் கொண்டான். தன் தகப்பன் ஈசாக்கின் ஆசீர்வாதத்தையும் தனக்கென வாரிக்கொண்டான். தன் மாமன் லாபானின் புத்திரிகளையும் அவன் மந்தையையும் தனக்கென வாரிக்கொண்டான். ஆம், அவன் எப்பொழுது தேவனைப் பற்றிக்கொண்டானோ, அன்றுதான் இவ்வாறு பூமிக்குரியவைகளை வாரிச் செல்வதை நிறுத்தி முடிவில் இஸ்ரவேலாய் மாறினான்! (ஆதி 32:26).
3. தாவீது:
தாவீது, கர்த்தரால் இராஜாவாக அபிஷேகிக்கப்பட்டிருந்த போதும் கூட சவுலிடமிருந்து இராஜ்யபாரத்தை வாரிக்கொள்ளாமல், ஆபிரகாமின் நல்ல மாதிரியைப் பின்பற்றினான். இந்தக் குறிப்பிட்ட குணாதிசயத்தைப் பல வருடங்களாய் தேவன் தாவீதை சோதித்துப் பார்த்தார். ஆனால், அந்த சோதனைகளின் ஒரு சமயத்தில்கூட, இராஜ்ஜியபாரத்தை தனக்குச் சொந்தமாய் இழுத்துக் கொள்ள தாவீது முயற்சிக்கவேயில்லை. அதை தேவனே அவனுக்குத் தரும்வரை அவரிடத்தில் காத்திருந்தான். தேவனுடைய சரியான வேளை வந்தவுடன், இராஜ்ஜியபாரத்தை தாவீதுக்குத் தேவன் தந்தார்!!
4. அப்சலோம்:
இந்த அப்சலோமோ மாறுபாடாய் நடந்துக்கொண்டான். தன் தந்தை தாவீதின் புகழைக் குறித்து பொறாமை கொண்டவனாய், தன் தந்தைக்குத் தெரியாமல் சாதுரியமாகவும், தந்திரமாகவும் செயல்பட்டு தன் தகப்பனிடமிருந்த "இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துக் (திருடி) கொண்டான்" (2 சாமு 15:6) எனக் காண்கிறோம். பின்பு, தன் தகப்பனையே துரத்திவிட்டு, தானே இராஜாவாக மாறினான். ஆனால், தேவனோ அவனுடைய இராஜ்ஜியபாரத்திற்கு சொற்ப காலத்திற்குள் முடிவை ஏற்படுத்தினார்!!
நம்முடைய ஊழியம் தேவனே அருளியதாய் இருக்கவேண்டுமேயல்லாமல், நாமாகவே வாரிக்கொண்டதாய் இருக்கவே கூடாது! "பரலோகத்திலிருந்து ஒருவனுக்கு கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ள மாட்டான்" என யோவான் 3:27 ஆணித்தரமாய் கூறுவதைக் கவனியுங்கள். "நமக்கென நாமே வாரிக் கொள்ளும் எதுவும் தேவனிடமிருந்து வந்தது அல்லவே அல்ல!!" இந்த சத்தியங்களையெல்லாம் அறிந்துக் கொள்வது மிகவும் எளிது, இதைப் பிரசங்கிப்பதும் எளிது. ஆனால், இந்த சத்தியத்தின் கோட்பாட்டை நாம் கடைப்பிடித்து வாழாவிட்டால், நாம் என்னதான் அறிந்திருந்து பிரசங்கமே செய்து கொண்டிருந்தாலும், நாம் "ஆகாதவர்களாய்" (Disqualified) போய்விடமுடியும் (1கொரி 9:27). இதைக் குறிப்பிட்டு இயேசு கூறும்போது, நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால் மாத்திரமே பாக்கியவான்களாயிருப்பீர்கள்" (யோவான் 13:17).
இயேசுவோ, தந்திரமான திட்டம்தீட்டவோ அல்லது தனக்கென ஜனங்களை வாரிக்கொள்ளவோ ஒருபோதும், எத்தனிக்கவேயில்லை! ஜனங்களின் ஆதரவைப் பெறுவதற்காக அவர்களை அவர் ஒருபோதும் எத்தனிக்கவேயில்ல! ஜனங்களின் ஆதரவைப் பெறுவதற்காக அவர்களை அவர் ஒருபோதும் முகஸ்துதி செய்ததும் இல்லை! தன்னுடைய குழுவில் வந்து சேரும்படி அவர் ஜனங்களைக் கட்டாயப்படுத்தியதும் இல்லை! மாறாக, "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்" (யோவான் 6:39) எனக் கூறும்படியான மனோபாவத்தையே எக்காலத்தும் உடையவராய் இருந்தார்! ‘திரளான’ சீஷர்களை உருவாக்க வேண்டும் அல்லது தன் சபையில் ‘ஏராளமான’ ஜனங்கள் இருக்கவேண்டும் போன்ற ‘இச்சை’ இயேசுவிடம் காணப்படவேயில்லை! அவரோ, பிதா எனக்குத் தந்த "கொஞ்சம் பேர்களில்" பூரண திருப்தியுள்ளவராய் இருந்தார். நாம் எல்லோருமேகூட இவ்விதம் "பிதா நமக்குத் தந்தவர்களில்" திருப்தி காண்பவர்களாகவே இருந்திட வேண்டும்!!
இயேசு, ஜனங்களை ஈர்த்துக் (Draw) கொண்டார்! ஆனால், அவரோ ஜனங்களைப் பற்றி இழுத்துக் கொள்ளவோ அல்லது தானே வாரிக்கொள்ளவோ ஒருபோதும் முயற்சிக்கவில்லை! "நான் உயர்த்தப்படும் போது, எல்லோரையும் என்னிடம் இழுத்துக் (ஈர்த்து) கொள்ளுவேன்" என்றே கூறினார் (யோவான் 12:32). நாமும் இவ்வாறு சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்துவை உயர்த்தி ஜனங்களை அவரண்டையில் "ஈர்த்துக்கொள்ளவே" அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், சிலுவையில் அறையப்பட்ட ஓர் மனுஷன் மாத்திரமே, சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்துவை மெய்யாய் உயர்த்திட முடியும். சிலுவையில் தன் கரங்களில் ஆணி அடிக்கப்பட்ட ஒரு மனுஷன், யாரையும் பற்றி இழுக்கவோ அல்லது வாரிக்கொள்ளவோ முடியாதே! ஆம், அவன் ஜனங்களை ‘ஈர்த்துக்கொள்ள’ மாத்திரமே முடியும்! இன்றைய கிறிஸ்தவ உலகில் காணப்படும் துயரம் யாதெனில், "சிலுவையிலறையப்படாத ஜனங்கள், சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்துவை" உயர்த்திட முயற்சிப்பதேயாகும்!!
நம் முகத்தைப் புழுதியில் வைத்து வாழ்வதற்கும், ‘அவருடைய வழிகளைக்’ கற்றுக்கொள்வதற்கும், ஆண்டவர் நம் யாவருக்கும் அனுக்கிரகம் செய்வாராக!!
கேட்பதற்கு காதுள்ளவன், கேட்கக்கடவன்"