40- ஆண்டுகளுக்கு மேலாய் ஓர் கிறிஸ்தவனாய் வாழ்ந்து வரும் சகரியா பூணனாகிய நான், சில முக்கியமான சத்தியங்களைக் கற்றுக்கொண்டேன். அவைகள் என்னை உற்சாகப்படுத்தியது மாத்திரமல்லாமல், என் வாழ்விற்கு திசை காட்டுவதாகவும் "வாழ்வின் நோக்கத்தை" புலப்படுத்துவதாகவும் அமைந்தது. என்னைப்போலவே நீங்களும் இந்த பலனை கண்டுகொள்ளவேண்டும் என்பதற்காகவே இவைகளை உங்களோடு பகிர்ந்துக்கொள்ளுகிறேன்.
1. இயேசுவை நேசித்ததைப்போலவே தேவன் நம்மையும் நேசிக்கிறார்:
"பிதாவே, நீர் என்னில் அன்பாயிருக்கிறது போல அவர்களில் அன்பாயிருக்கிறீர்" (யோவா 17:23) என இயேசு கூறினார்.
நான் வேதாகமத்தில் கண்டு பிடித்த சத்தியங்களில் இந்த சத்தியமே அதிக மேன்மையானது என நான் கூற முடியும். ஓர் 'பாதுகாப்பற்ற' ,'மனமடிந்த' விசுவாசியாயிருந்த என்னை இந்த சத்தியம், தேவனிடத்தில் முழுபாதுகாப்பைக் கண்டடையும்படி என்னை மாற்றிவிட்டது.
வேதாகமத்தில், "தேவன் நம்மை நேசிக்கிறார்" என எடுத்துக்கூற அநேக வசனங்கள் உள்ளன. ஆனாலும், அந்த அன்பின் உச்சக்கட்டத்தை "இயேசுவை நேசித்ததைப்போலவே நம்மையும் நேசிக்கிறார்" என எடுத்துரைப்பது இந்த ஒரே ஒரு வசனம் மாத்திரமே!
நம் பரலோகப் பிதா தன்னுடைய குமாரர்களை நேசிப்பதில் யாதொருவனுக்கும் பாரபட்சம் காட்டுவதே இல்லை. ஆகவே, தன் முதற்பேரான குமாரன் இயேசுவிற்கு செய்தது போலவே நம்மையும் பராமரித்து பாதுகாப்பார்! இயேசுவின் ஜீவியத்தில் ஒவ்வொரு நாளும் நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகளை திட்டம் தீட்டுவதற்கு பிதா ஆர்வம் கொண்டதைப்போலவே, நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு சம்பவங்களையும் அவர் ஏற்கனவே நமக்காக திட்டம் தீட்டி வைத்துள்ளார். ஆதலால், 'திடீரென்று' யாதொரு சம்பவமும் நமக்கு நடை பெறுவதில்லை.
ஆகவே, இனியும் நாம் பாதுகாப்பற்றவர்களாய் வாழ்ந்திட அவசியம் இல்லை. ஓர் திட்டமான நோக்கத்தோடு இயேசுவை தேவன் அனுப்பியதைப்போலவே, நம்மையும் ஒரு நோக்கத்தோடுதான் இப்பூமிக்கு அனுப்பியிருக்கிறார்.
இந்த சத்தியங்கள் யாவும் உங்களுக்கு நிஜமானதுதான்! ஆனால், நீங்கள் விசுவாசித்தால் மாத்திரமே அப்படியாகும்!
ஒருவன் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்காவிட்டால், அவனிடத்தில் தேவன் எந்த கிரியையும் நடப்பிக்கவே மாட்டார்.
2. நேர்மையான ஜனங்களிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்:
"அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால், ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்" (1 யோவா 1:7).
ஒளியில் நடப்பதற்கு முதலாவது தகுதியாய் இருக்கவேண்டியது, நாம் ஒன்றையும் தேவனிடத்தில் மறைக்காமல் இருக்கவேன்டும்! அதாவது, அவரிடத்தில் உள்ளதை உள்ளபடியே எல்லாவற்றையும் சொல்வதாகும்! தேவனை நோக்கிச் செல்வதற்குரிய முதல்படி நேர்மைதான் என்பதை நான் ஆணித்தரமாய் கண்டிருக்கிறேன். புரட்டிப்பேசும் உண்மையற்றவர்களை தேவன் அருவருக்கிறார். வேறு எவரையும் கடிந்து கொள்ளாத அளவிற்கு மாய்மாலக்காரர்களையே இயேசு அதிகமாய்க் கடிந்துக் கொண்டார் என்பதை நாம் அறிய வேண்டும்.
நாம் பரிசுத்தமாகவோ அல்லது பூரணமாகவோ இருக்கும்படி முதலாவதாக தேவன் கேட்கவேயில்லை. ஆனால், முதலாவதாக நேர்மையாய் இருக்கும்படியே நம்மிடம் கேட்கிறார்! இதுவே, உண்மையான பரிசுத்தத்தின் ஆரம்பமாகும். இந்த ஊற்றுக் கண்ணிலிருந்துதான் மற்ற அனைத்தும் புரண்டுவர முடியும். நாமனைவருமே மிக எளிதாய் செய்யக்கூடிய ஒன்று இருக்குமென்றால், அது நேர்மையாக இருப்பதுதான்!
ஆகவே, எந்தப் பாவத்தையும் உடனடியாக தேவனிடம் அறிக்கை செய்துவிடுங்கள். பாவமான சிந்தைகளுக்கு மழுப்பலான நாகரீகமான வார்த்தைகளைச் சூட்டாதீர்கள். நீங்கள் உண்மையில் உங்கள் கண்களினால், விபச்சார மயக்க இச்சை கொண்டுவிட்டு, "நான் தேவனுடைய சிருஷ்டிப்பின் அழகை மாத்திரமே ரசித்தேன்" என்று கூறாதிருங்கள். அதேபோல், கோபத்தை "நியாயமான கோபம்" என்றும் அழைக்காதிருங்கள்!
இவ்வாறு நேர்மையற்றவர்களாயிருந்தால், நீங்கள் ஒருக்காலும் பாவத்திலிருந்து ஜெயம் பெறவே மாட்டீர்கள்.
ஆகவே, ஒருபோதும் பாவத்தை "தவறு" என்று அழைக்காதிருங்கள். ஏனென்றால், இயேசுவின் இரத்தம் உங்களுடைய எல்லா பாவங்களை மாத்திரமே கழுவமுடியுமே அல்லாமல், உங்கள் தவறுகளை அவருடைய இரத்தம் கழுவாது. ஆம், நேர்மையற்ற ஜனங்களை அவர் ஒருக்காலும் கழுவி சுத்திகரிப்பதேயில்லை.
"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்" (நீதி 28:13). ஆகவே, நேர்மையுள்ள ஜனங்களுக்கு மாத்திரமே சுவிசேஷத்தில் நம்பிக்கை இருக்கிறது.
மார்க்கத்தலைவர்களான பரிசேயர்களைக்காட்டிலும் வேசிகளும், கள்வர்களும் தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் முதலாவது பிரவேசிப்பார்கள் என இயேசு "அவர்கள் மீது" அதிக நம்பிக்கையுடன் கூறினார் (மத் 21:31). ஏனென்றால், வேசிகளும், கள்வர்களும் தாங்கள் பரிசுத்தர்போல ஒருக்காலும் பாவனை செய்யவே மாட்டார்கள் என்பதுதான்!
இன்று அநேக வாலிபர்கள் ஏன் சபையைவிட்டு நழுவிச் செல்கிறார்கள்? ஏனென்றால், சபையிலுள்ள மற்றவர்கள், தங்களுக்கு பாவத்தைக் குறித்த போராட்டமே இல்லாதது போல அந்த வாலிபர்களுக்குக் காட்டியதாகும். ஆகவே, அந்த வாலிபர்களுக்கு "இந்த பரிசுத்த தூயவான்கள் , தங்களுடைய பிரச்சனைகளை ஒருநாளும் புரிந்துக் கொள்ள மாட்டார்கள்" என்ற விரக்தி ஏற்ப்பட்டுவிட்டது. நம்முடைய நிலை இப்படி இருக்குமென்றால், தன்னிடத்தில் பாவிகளை ஈர்த்துக்கொண்ட கிறிஸ்துவைப்போல் நாம் இல்லை என்பதே உண்மையாகும்.
3. மிகுந்த மகிழ்ச்சியுடன் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்:
"உற்சாகமாய் (மிகுந்த மகிழ்ச்சியுடன்) கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" (2 கொரி 9:7).
இதனிமித்தமே, தேவன் மனிதனுக்கு அவனுடைய மனந்திரும்புதலுக்கு முன்பாகவும், மனம் திரும்பிய பிறகும், ஏன் பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்ற பின்பும் கூட அவனுக்கு முழு சுயாதீனம் அளித்திருக்கிறார்.
இவ்வாறு தேவனைப்போலவே, நாமும் மற்றவர்களை ஆளுகை செய்வதற்கு முயற்சிக்காமல் நம்மைவிட அவர்கள் வித்தியாசமாயிருப்பதற்கும், நம்மைவிட வித்தியாசமான கருத்துக்கள் கொள்வதற்கும், அவரவர் ஓட்டத்தின் விகிதப்படி ஆவிக்குரிய வளர்ச்சியடைவதற்கும் சுயாதீனம் கொடுத்திட வேண்டும்.
எந்த கட்டாயத்திணிப்பும் பிசாசிற்குரியதேயாகும்.
பரிசுத்த ஆவியானவர் ஜனங்களை "நிரப்புகிறார்". ஆனால், பிசாசுகளோ ஜனங்களைப் "பிடித்துகொள்கிறது". இங்கே வித்தியாசம் என்னவென்றால், பரிசுத்த ஆவியானவர் ஒருவனை நிரப்பும் போது, அவன் இன்னமும் தான் விரும்பியதைச் செய்வதற்கு முழுசுதந்திரத்தையும் தந்து விடுகிறார். ஆனால், பிசாசுகளோ ஜனங்களைப் பிடித்துக் கொண்டால், அவைகள் அவர்களுடைய சுதந்திரத்தை முழுமையாய்ப் பறித்துக்கொண்டு அவர்களை ஆளுகையும் செய்கின்றன.
நாம் தேவனுக்குச் செய்திடும் எந்த ஊழியமாயிருந்தாலும் அவைகள் உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும், சுயாதீனமாய் தானாகவே மனமுவந்து செய்யப்படாவிட்டால், அவையாவும் செத்தக்கிரியைகள் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதே போல், ஏதோ ஒரு பிரதிபலனைக் கருதி அல்லது சம்பளத்தின் அடிப்படையிலோ செய்யப்படும் எவ்வித தேவனுடைய ஊழியமும் செத்தக் கிரியைகளேயாகும்! மற்றவர்களின் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி தேவனுக்கு கொடுக்கும் எந்தப் பணத்திற்கும், தேவனைப் பொருத்தமட்டில் அவைகளுக்கு எந்த மதிப்பும் இல்லவே இல்லை.
கட்டாயத்தின் பேரிலோ அல்லது மனசாட்சியின் உறுத்துதலிலிருந்து தப்பிப்பதற்காகவோ செய்யப்படும் ஏராளமான கிரியைகளைக் காட்டிலும், மிகுந்த மகிழ்ச்சியுடன் அவருக்குச் செய்திடும் ஒரு செயல் அற்பமானதாயிருந்தாலும், அதற்கே தேவன் அதிக மதிப்பு தருகிறார்.
4. இயேசுவை நோக்கிப் பார்ப்பதின் மூலமே பரிசுத்தம் கிட்டுகிறது:
"இயேசுவை நோக்கிப்பார்த்து (Looking unto Jesus) நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் ஓடக்கடவோம்" (எபிரேயர் 12:1)..
தேவபக்தியின் இரகசியம் மாம்சத்தில் வெளிப்பட்ட கிறிஸ்து என்ற அந்த நபரில்தான் இருக்கிறதேயல்லாமல், கிறிஸ்து நம்முடைய மாம்சத்தில் வெளிப்பட்டார்" என்ற உபதேசத்தில் இல்லவே இல்லை. இதை 1தீமோத் 3:16 தெளிவாய் சுட்டிக்காட்டுகிறது. எனவே, "அவர்" என்ற தனி நபரின் மூலமேயல்லாமல், அவருடைய மாம்சத்தை ஆராய்ந்து கண்டறியும் உபதேசத்தினால், நாம் பரிசுத்தமாவதில்லை.
நாமாக எடுத்துகொள்ளும் எந்த முயற்சியும் (Self effort) நம்முடைய பாவ இருதயத்தை ஒருக்காலும் பரிசுத்தமாக்கிட முடியாது. அந்த அற்புத மாற்றம் நிகழ்வதற்கு தேவன் தான் நமக்குள் கிரியை நடப்பிக்க வேண்டும்.
பரிசுத்தம் (நித்திய ஜீவன்) தேவனால் உண்டாகும் ஈவு, அதை கிரியையினால், ஒருக்காலும் அடைந்திட முடியாது (ரோமர் 6:12). தேவன் மாத்திரமே நம்மை முற்றிலும் பரிசுத்தமாக்க முடியுமென 1தெசலோனி 5:12 மிக தெளிவாக கூறுகின்றது. இந்த வசனங்களை நம்மில் ஒருவரும் தவறு என்று சொல்லிவிட முடியாதே! இருப்பினும் இன்று எண்ணற்ற விசுவாசிகள் தாங்கள் பரிசுத்தமாகும் பொருட்டு தங்களைத் தாங்களே வெறுப்பதற்குப் போராடிக் கொண்டிருப்பதைதான் நாம் பார்க்கிறோம். அந்தோ, இவர்கள் பரிசுத்தத்தை அடைவதற்குப் பதிலாய் "பரிசேயர்களாகவே" மாறிவிடுகிறார்கள்.
எபேசியர் 4:24 குறிப்பிடும் மெய்யானபரிசுத்தம் இயேசு மீது கொண்ட விசுவாசத்தினால், அதாவது; "இயேசுவை நோக்கிப் பார்ப்பதினால் " மாத்திரமே அடைந்திட முடியும்!
ஆம், நாம் உபதேசத்தை மாத்திரமே நோக்குபவர்களாயிருந்தால் முடிவில் பரிசேயர்களாகவே முற்றுப் பெறுவோம். இந்நிலையில நீங்கள் எவ்வளவு தெள்ளத் தெளிவாய் உபதேசங்களைக் கற்றுக்கொண்டீர்களோ அந்தளவிற்கு மிகப் பெரிய பரிசேயர்களாகவே மாறிவிடுவீர்கள்!
இந்த உலகில் நான் சந்தித்த பரிசேயர்களில் மிகப்பெரிய பரிசேயர்கள் யாரென்றால், "தங்கள் சுய முயற்சி மூலமாக, மகா உன்னத பரிசுத்த தரத்தைப் பிரசங்கித்தவர்களே". இவ்வித கதியை நாமும் அடைந்துவிடாதபடி கவனமாயிருக்ககடவோம்.
இயேசுவை நோக்கிப்பார்ப்பதின் பொருள் என்ன என்பதை எபிரேயர் 12:2 மிகத் தெளிவாக, நமக்கு எடுத்துரைக்கிறது. முதலாவதாக, நாம் அவரை நோக்கிப்பார்த்து "இந்த பூமியில் ஒவ்வொரு நாளும் சிலுவையை சகித்து வாழ்ந்தவராகவும் நம்மைப் போல எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராகவும்" காண்பதுதான் (எபி 4:15). இவ்வாறு அவர் நமக்கு முன்னோடியானவரானபடியால், (எபிரே 6:20), இப்போது அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி நாமும் தொடர்ந்து ஓட வேண்டும். இரண்டாவதாக, "பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறவராகவும்" நாம் அவரைக் காண வேண்டும். இவ்வாறு பிதாவின் அருகிலிருந்து நமக்காக வேண்டுதல் செய்யவும், நம்முடைய சோதனைகளிலும் உபத்திரவங்களிலும் நமக்கு உதவி செய்யும்படியும் அவர் ஆயத்ததுடன் இருக்கிறார்.
5. நாம் பரிசுத்த ஆவியினால் இடைவிடாது நிரப்பப்பட்டிருக்க வேண்டும்:
"ஆவியினால், தொடர்ச்சியாய் நிரப்பபட்டு நிறைந்திருங்கள்" என்பதே எபேசியர் 5:18- -ன் சரியான மொழி பெயர்ப்பாகும்.
தேவன் விரும்பும்படியான கிறிஸ்துவ ஜீவியம் செய்வதற்கு நாம் தொடர்ச்சியாய் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டாலொழிய சாத்தியமாகாது! அதே போல, நாம் தேவனுக்கு ஊழியம் செய்யவேண்டிய பிரகாரமாய் ஊழியம் செய்திட ஆவியின் அபிஷேகம் இல்லாமலும், ஆவியின் வரங்களைப் பெறாமலும் சாத்தியமாகாது! இயேசுவே கூட ஆவியின் அபிஷேகத்தைப் பெறவேண்டியது அவசியமாயிருந்தது!
இதை 2 கொரிந்தியர் 3:18 குறிப்பிடும்போது, பரிசுத்த ஆவியானவர், நம்முடைய ஜீவியத்திலும் நம்முடைய ஊழியத்திலும் அவருடைய சாயலுக்கொப்பாய் நம்மை மறுரூபப்படுத்தும்படிக்கே வந்தார் எனக் கூறுவதைப் பார்க்கிறோம்.
இவ்வாறு தேவன் நம்மை ஆவியினால் நிறைத்து , கிறிஸ்துவின் சாயலான அவருடைய சுபாவத்தில் நம்மை மறுரூபப்படுத்தவும், இயேசுவைப்போலவே ஊழியம் செய்வதற்கு நம்மை மறுரூபப்படுத்தவும் செய்கிறார்.
இயேசு பெற்ற அதே ஊழியம் நமக்கு இல்லை! ஆகவே, அவர் தன்னுடய ஊழியத்தில் செய்தவைகளை நாமும் செய்திட முடியாது. ஆனால், நாம் இயேசுவைப் போலவே அபிஷேகத்தில் நிறைந்து முழு ஆயத்தத்துடன் "நாம் பெற்ற ஊழியத்தை" நிறைவேற்றிட முடியும்.
இங்கு நம் பட்சத்தில் தேவையாயிருப்பதெல்லாம் தேவன் எதிர்பார்க்கும் போதுமான தாகமும், விசுவாசமும் இருக்கவேண்டும்! அப்போது நம்மூலமாய் ஜீவ தண்ணீர் கொண்ட நதிகள் நிச்சயமாய் புரண்டோடிவிடும் (யோவான் 7:37-39).
பரிசுத்த ஆவியின் வரங்களில்லாத ஒரு சபை, உயிருள்ள ஒரு மனிதன் செவிடும், குருடும், ஊமையும், நொண்டியுமாய் இருப்பதைப்போல் உபயோகமற்றதாகவே இருக்கும்!
6. சிலுவையின் வழியே ஜீவனைக் கண்டடையும் வழி:
"நாம் அவரோடே கூட மரித்தோமானால் அவரோடே கூட பிழைத்திருப்போம்" (2 தீமோ 2:11).
நம்முடைய சரீரத்தில் இயேசுவின் வாழ்க்கை (ஜீவன்) வெளிப்பட வேண்டுமென்றால், தேவன் ஏற்படுத்தும் எல்லா வாழ்வின் சூழ்நிலைகளிலும் நம் சொந்த ஜீவனில் (சுய-வாழ்க்கையில்) மரணத்தை ஏற்றுக்கொண்டால் மாத்திரம் சாத்தியமாகும் (2 கொரிந்தியர் 4:10,11). நாம் ஜீவனைப்பெற இதைத்தவிர வேறு வழி இல்லவேயில்லை!
ஆகவே, நாம் பாவத்தை ஜெயித்து வாழ வேண்டுமென்றால், எல்லா சூழ்நிலைகளிலும் "நம்மைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவே" கருத வேண்டும் (ரோமர் 6:11). நாம் பரத்தின் ஜீவனைக்கொண்டு வாழ்ந்திருப்பதற்கு "நாம் ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்திட வேண்டும்" (ரோ 8:13). இதனிமித்தமே நம்முடைய ஒவ்வொருநாள் ஜீவியத்திலும் பரிசுத்த ஆவியானவர் நம்மை எப்போதும் சிலுவையண்டை நடத்திச் செல்கிறார்.
இவ்வாறு எல்லா சூழ்நிலைகளுக்குள்ளும் நாம் தேவனால் அனுப்பப்பட்டு அங்கே நாம் "எந்நேரமும் (ஒவ்வொரு நாளும்) கொல்லப்படுகிறோம்" (ரோமர் 8:36). அதாவது "இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்" (2 கொரி 4:11). இது போன்று ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் நாம் "இயேசுவின் மரணத்தை" (2 கொரி 4:10) மனப்பூர்வமாய் சுமந்து இயேசுவின் ஜீவனை நம்முடைய சரீரத்தில் விளங்கப்பண்ணவேண்டும்!
7. மனுஷருடைய அபிப்பிராயங்களுக்கு தகுதியான இடம் குப்பைத்தொட்டியே!
"நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள்; (உயர்வாய்) எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்?" (ஏசாயா 2:22).
மனுஷனுடைய சுவாசம் அவனுடைய நாசியிலிருந்து எடுபட்டு போனால், நாம் கால் மிதித்து நடக்கும் தூசியைவிட அவன் மேலானவன் அல்ல! ஆகவே, மனுஷருடைய அபிப்பிராயங்களுக்கு நாம் ஏன் மதிப்பு தரவேண்டும்?
உங்களை சுற்றியுள்ள எல்லா மனுஷருடைய அபிப்பிராயங்களையும் ஒன்று திரட்டினாலும் அவைகள் குப்பைத்தொட்டியில் எறியப்படுவதற்கே பாத்திரமானது என்ற சத்தியத்தில் நாம் வேர் கொண்டு நிலை நிற்கவில்லையென்றால், நாம் ஆண்டவருக்கு ஒருக்காலும் வலிமையான ஊழியம் செய்திடவே முடியாது. நாம் "ஒரே ஒரு மனுஷனைக்கூட" பிரியப்படுத்துகிறவர்களாய் இருந்தாலும், நாம் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாய் ஒருக்காலும் இருந்திடவே முடியாது (கலாத் 1:10).
தேவனுடைய அபிப்பிராயங்களோடு ஒப்பிடும்போது எந்த மனுஷனுடைய அபிப்பிராயங்களும் ஒன்றுமில்லாத குப்பையேயாகும்! இந்த உண்மையை தன் இருதயத்தில் ஆழமாய் பதித்துக்கொண்டவன் தன் ஜீவியத்திலும், ஊழியத்திலும் தேவனுடைய அங்கீகாரம் ஒன்றைமாத்திரமே எப்போதும் தேடுவான்! அவன் யாரையும் கவர்ச்சிக்க ஒருபோதும் நாடமாட்டான்! அல்லது ஜனங்களுக்கு முன்பாய் தன்னை நியாயப்படுத்துவதையும் ஒருபோதும் நாடவே மாட்டான்.
8. இந்த உலகம் மேன்மையாக கருதும் அனைத்தையும் தேவன் அருவருக்கிறார்.
"மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாக இருக்கிறது" (லூக்கா 16:15).
இந்த உலகத்தில் மகா மேன்மையாக எண்ணப்படுபவைகளுக்கு தேவனுடைய பார்வையில் எந்த மதிப்பும் இல்லையென்பது மாத்திரமல்ல.... அவைகளை அவர் அருவருக்கவும் செய்கிறார்.
இவ்வாறு உலகத்திலுள்ள எல்லாமதிப்பும் புகழும் தேவனுக்கு அருவருப்பாயிருக்கிறபடியால், அவைகள் நமக்கும் அருவருப்பாகவே இருக்க வேண்டும்.
இப்பூமியிலுள்ள ஒவ்வொருவரும் பணத்தை அதிக மதிப்புடையதாய் கருதுகிறார்கள். ஆனால், பணத்தை நேசித்து ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் வெகு சீக்கிரத்திலோ அல்லது சற்றுத் தாமதமாகவோ கீழ்காணும் எட்டு விளைவுகளினால், வேதனையடைவார்கள் என தேவன் கூறினார் (1தீமோ 6:9,10).
1.அவர்கள் சோதனையில் விழுவார்கள்,
2.அவர்கள் கண்ணியில் சிக்குவார்கள்,
3.அவர்கள் மதிகேடான இச்சையில் விழுவார்கள்,
4.அவர்கள் சேதம் விளைவிக்கும் இச்சையிலே விழுவார்கள்,
5.அவர்கள் கேடானவைகளில் அமிழ்ந்து போவார்கள்,
6.அவர்கள் அழிவில் அமிழ்ந்து போவார்கள்,
7.அவர்கள் விசுவாசத்தைவிட்டு வழுவிப்போவார்கள்.
8.அவர்கள் அனேக வேதனைகளினால், தங்களை உருவ குத்திக் கொள்வார்கள்.
மேற்கண்ட இந்த எட்டு அவலங்களும் நான் சென்ற ஒவ்வொரு இடங்களிலும் ஏராளமான விசுவாசிகளுக்குத் திரும்பத்திரும்ப சம்பவித்ததை என் கண்களால் கண்டிருக்கிறேன்.
இன்று நம் தேசத்தில் கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்டுவரும் தீர்க்கதரிசன வார்த்தைகளுக்குப் பஞ்சம் உண்டாயிருப்பதற்கான ஓர் முக்கிய காரணம், ஏராளமான பிரசங்கிகள் பண ஆசை கொண்டவர்களாய் மாறியது தான். பணவிஷயத்தில் உண்மையில்லாதவர்களிடத்தில் தேவன் மெய்யான ஐசுவரியத்தைத் (தீர்க்கதரிசன வார்த்தையைப் பெறுவது இந்த ஐசுவரியங்களில் ஒன்று) தரவேமாட்டார். என இயேசு கூறினார் (லூக்கா:16:11). இதனிமித்தமே இன்று சபை கூட்டங்களில் ஏராளமான போரடிக்கும் பிரசங்கங்களும், ஏராளமான போரடிக்கும் சாட்சிகளையும் நாம் கேட்கிறோம்.
9. நமக்கு நாமே தவிர வேறு ஒருவரும் தீங்கு செய்திட முடியாது:
"நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்கு தீமை செய்கிறவன் யார்? (1 பேதுரு 3:13).
தேவனிடத்தில் அன்பு கூர்ந்து அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு (அதாவது, தங்கள் ஜீவியத்தில் தேவனுடைய சித்தத்திற்குப் புறம்பாக இப்பூமியில் எந்த இலட்சியமும் இல்லாதவர்களுக்கு) சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கும்படி கிரியை செய்திட, தேவன் சொல்லி முடியாத வல்லமை பெற்றிருக்கிறார் (ரோ 8:28). இந்த அற்புதமான வாக்குதத்தத்தை, தங்களுக்கென சுயநல நோக்கம் கொண்டவர்கள் ஒருக்காலும் உரிமைப் பாராட்டவே முடியாது. ஆனால், நம் ஜீவியத்தில் தேவனுடைய சித்தத்தை சம்பூரணமாய் ஏற்றுக்கொண்டவர்களாயிருந்தால், இப்பூமியில் நம் ஜீவியத்தின் ஒவ்வோரு நிமிஷமும் இந்த வாக்குத்தத்ததை உரிமை கொண்டாட முடியும்! ஆம், யாதொன்றும் நமக்குத் தீங்கிழைக்கவே முடியாது!
நமக்கு மற்றவர்கள் தாங்களாகவோ அல்லது வேண்டுமென்றோ செய்திடும் எந்த நன்மையானாலும் அல்லது தீமையானாலும் இந்த ரோமர் 8:28. - ஆம் வசன வடிக்கட்டி (Filter) வழியாக கடந்துவந்து நமக்கு மிகவும் அருமையாகவே முடிவில் வந்து சேரும்! இவ்வாறு தேவன் நமக்கென்று திட்டம் தீட்டியுள்ள அதிக நன்மையானவைகளில் ஒன்று என்னவென்றால், ஒவ்வொரு சமயமும் கிறிஸ்துவின் சாயலுக்கொப்பாய் நாம் மாறுவதுதான் (ரோமர் 8:29). இந்த அருமையான வசனத்தில் சொல்லப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றிடும் யாவருக்கும் "இந்த வடிகட்டி" (Filter) ஒவ்வொரு சமயமும் நன்மையான கிரியையை நடப்பித்துக் கொண்டேயிருக்கும்!
இதைக்காட்டிலும் சற்று மேலாக, 1 பேதுரு 3:13, "நாம் நன்மையை செய்கிறவர்களாய் இருந்தால்" ஒரு மனிதனும் நமக்கு தீங்கு செய்திட முடியாது என மிக நேர்த்தியாய் கூறுகிறது. துரதிருஷ்டவசமாய் இன்று ரோமர் 8:28 அறியப்பட்டிருப்பது போல், இந்த அருமையான வசனத்தை அநேகர் அறியாதிருக்கிறார்கள்.இனிவரும் நாட்களிலாவது இந்த வசனத்தின் மேன்மையை நம் ஜீவியத்தின் மூலமாய் உயர்த்திக் காட்டிடக்கடவோம்.
இருப்பினும் இந்த வாக்குத்தத்தமோ, தங்கள் இருதயங்களை எல்லா ஜனங்களிடத்திலும் நன்மை நிறைந்ததாய் காத்துகொண்டவர்களுக்கு மாத்திரமே சொந்தமானதாகும். இதுப்போன்ற ஒரு விசுவாசிக்கு எந்த பிசாசோ அல்லது எந்த மனுஷனோ தீமை செய்வதென்பது ஒருக்காலும் கூடாத காரியம்!
ஆகவே, "மற்றவர்கள் எனக்குத் தீங்கு செய்துவிட்டார்கள்" என எந்த ஒரு கிறிஸ்தவன் குறை கூறுகிறானோ, அப்போதெல்லாம் அவன் மறைமுகமாய் ஒத்துக்கொள்வது யாதெனில், "நான் தேவனிடத்தில் அன்பு கூறவில்லை. நான் தேவனுடைய தீர்மானத்தின்படி அழைக்கப்படவில்லை! நான் நன்மை செய்யத்தீவிரம் கொண்டவனுமல்ல!" என்ற அறிக்கையேயாகும். இப்படியில்லாதிருந்தால், அவனுக்கு மற்றவர்கள் எதைச்செய்தாலும் நன்மைக்காகவன்றோ கிரியை நடந்திருக்கும்! அவ்வாறு சகலமும் நன்மையாய் நடந்திருந்தால் அவனிடத்தில் யாதொரு குறை சொல்லும் உண்டாயிருக்காதல்லவா?
உண்மையில், உங்களுக்கு தீமை செய்யக்கூடிய ஒரே நபர் நீங்கள் மாத்திரமே! நீங்கள் மற்றவர்களிடத்தில் உண்மையற்றவர்களாய் நடந்து கொண்டதும், மற்றவர்கள் மீது தவறான மனப்பான்மை கொண்டதுமே உங்களுக்கு நீங்களே செய்து கொண்ட தீமையாகும்!
66 வயது நிரம்பிய நான் நேர்மையாய்ச் சொல்லும் சாட்சி என்னவெனில், "என் முழு ஜீவியத்திலும், ஒருவர் கூட எனக்குத்தீமை செய்வதில் ஜெயம் பெற முடியவில்லை". அநேகர் முயச்சித்தார்கள் என்பது உண்மைதான்... ஆனால், அவைகள் அனைத்தும் என்னுடைய நன்மைக்காகவும், என் ஊழிய நன்மைக்காகவும் மாத்திரமே கிரியை நடப்பித்தன! ஆகவே, அதுப்போன்ற ஜனங்களுக்காகவும் தேவனை ஸ்தோத்தரிக்க என்னால் முடிகிறது! எனக்கு எதிர்ப்பாய் தீமை செய்யும்படி முயச்சித்தவர்களில் பெரும்பாலானோர் தேவனுடைய வழிகளை அறியாத "விசுவாசிகள்" என பெயர் கொண்டவர்கள்தான்! இந்த என் சாட்சியை நான் சொல்வதற்குக் காரணம், உங்களை உற்சாகப்படுத்தி, நான் பெற்ற சாட்சி உங்களுடையதாகவும் எப்போதும் இருக்கமுடியும் என்பதை நீங்கள் விசுவாசிக்கும்படிக்கேயாகும்!
10. நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஓர் நிறைவான திட்டத்தை தேவன் வைத்திருக்கிறார்:
"நற்கிரியைகளைச் செய்வதற்கு நாம் கிறிஸ்துவுக்குள் (முன்கூட்டியே) சிருஷ்டிக்கப்பட்டு தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர்முன்னதாக அவைகளை ஆயத்தம் செய்து இருக்கிறார்" (எபேசியர் 2:10).
பல வருடங்களுக்கு முன்பாகவே, நம்மை கிறிஸ்துவுக்குள் தேவன் தெரிந்து கொண்டபோது, இப்பூமிக்குரிய வாழ்க்கையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை வரையறை செய்து வைத்துவிட்டார்! இப்போது நம்முடைய கடமை என்னவென்றால், தேவனுடைய திட்டத்தைக் காட்டிலும் மேலான திட்டத்தை நாம் நமக்கென ஒருக்காலும் வரையறுக்கவே முடியாது!
ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தேவன் வித்தியாசமான திட்டங்களை வைத்திருக்கிறபடியால், மற்றவர்கள் செய்வதைப்போலவே, நாமும் அப்படியே, செய்வதற்கு முயலவே கூடாது! உதாரணமாய், யோசேப்பைக்குறித்து தேவன் கொண்டிருந்த திட்டம் யாதெனில், "அவன் எகிப்தின் அரண்மனையில் தங்கியிருந்து தன்னுடைய ஜீவியத்தின் பின்பகுதியான எண்பது ஆண்டுகள் மிகுந்த வசதியுடன் வாழவேண்டுமென்பதாயிருந்தது" இப்படியிருக்க, யோசேப்பின் மாதிரியை மோசே பின்பற்றி வசதியையும், ஆடம்பரத்தையும் விரும்பியிருந்தால், அவனுடைய சொந்த வாழ்க்கைக்குரிய தேவனுடைய சித்தத்தை நிச்சியமாய் இழந்திருப்பான்!
இன்றும் அதைப்போலவே, ஒரு சகோதரன் தன் ஜீவியகாலமெல்லாம் அமெரிக்க தேசத்தில் வசதியுடன் வாழ தேவன் விரும்பியிருக்கக் கூடும்! ஆனால், இன்னொரு சகோதரனையோ தன் ஜீவிய காலமெல்லாம் வட இந்தியாவின் உஷ்ணத்திலும் தூசியிலும் உழன்று வாழும்படி அவர் வைத்திருக்கக் கூடும்! இந்த இருவருமே, தேவன் தங்கள் வாழ்வில் கொண்டிருக்கும் திட்டத்தை அறிந்தவர்களாய் திருப்தியுடன் இருக்கவேண்டுமேயல்லாமல், ஒருவரையொருவர் ஒப்பிட்டுப்பார்த்து பொறாமைப்படவோ அல்லது குறை கூறவோ கூடாது!
இந்திய தேசத்தில்தான் ஊழியம் செய்யும்படி தேவன் என்னை அழைத்திருக்கிறார் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால், என்னைப் போன்ற அழைப்பை மற்றவர்களும் பெற்றிருக்க வேண்டுமென நான் ஒருவரையும் வற்புறுத்தியதேயில்லை!
இருப்பினும், நாம் நம்முடைய சுய கனத்தைத் தேடினாலோ அல்லது பணத்தை நேசித்தாலோ அல்லது மனுஷர்களுடைய அங்கீகாரத்தை நாடினாலோ, நாம் ஒருக்காலும் தேவன் நமக்கென்று வைத்திருக்கும் அவரது திட்டத்தைக் கண்டு பிடிக்கவே முடியாது!
11. தேவனை மிகவும் நெருக்கமாய் அறிந்திருப்பதே வலிமையான ஜீவியத்தின் இரகசியமாகும்:
"தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டிருப்பார்கள்" (தானியேல் 11:32).
இரண்டாவதாக கைமாற்றுவதுப போல் (Second Hand) பிறர் மூலமாய் நாம் தேவனை அறிந்து கொள்வதை தேவன் விரும்புவதேயில்லை. ஒரு புதிதான இளைய விசுவாசி கூட தன்னைத் தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ளும்படியே தேவன் அவனை அழைக்கிறார் (எபி 8:11). தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் தனிப்பட்ட விதத்தில் ஒருவன் அறிந்து கொள்வதே நித்திய ஜீவன் என்று இயேசு விளக்கினார். இதுவே பவுலின் வாழ்க்கையில் தீராத ஏக்கமாயிருந்தது! அதுப போலவே, நமக்கும் தேவனை அறிகிற அறிவு தீராத ஏக்கமாய் நமக்குள் இருந்திட வேண்டும் (பிலி 3:10).
தேவனை தீர்க்கமாய் அறிந்திட வாஞ்சை கொண்டவன், எப்போதும் அவர் சொல்வதைக் கவனிக்க தீவிரம் கொண்டவனாயிருக்க வேண்டும். ஒரு மனிதன் தன்னை ஆவிக்குரிய ஜீவனோடு காத்துக்கொள்வதற்கு ஒரே வழி "தேவனுடைய வாயிலிருந்து புறப்படும்" ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்துக் கேட்பதுதான்! நம் கிறிஸ்துவ வாழ்க்கையில் அவருடைய பாதத்தில் அமர்ந்து அவர் கூறுவதை கவனித்துக் கேட்பது மிக முக்கியமானதென்று இயேசு லூக்கா 10:42-ல் கூறினார்.
இயேசு ஒவ்வொருநாள் காலையிலும் தன் பிதா சொல்வதைக் கவனித்துக் கேட்கும் பழக்கம் வைத்திருந்ததைப் போலவே, நாமும் அந்தப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும் (ஏசாயா 50:4). காலையில் மாத்திரம் அல்லாமல், அந்தப் பகல் முழுவதும்... நாம் தூங்கும் இரவு நேரங்களிலும் அவ்விதமே இருப்போமென்றால், இரவிலும் நம்மை அதே போல் 'கவனிக்கும்' மனதுடையவர்களாக செய்வார். நாம் எழும்பினாலும், கர்த்தாவே சொல்லும் உமதடியான் கேட்கிறேன்" என கூறிட முடியும் (1 சாமுவேல் 3:10).
நாம் தேவனை நெருக்கமாய் அறிந்திருப்பதுதான், நம்மை எல்லா சுழ்நிலைகளிலும் ஜெயம் பெற்றவர்களாய் மாற்றிவிடும்! ஏனென்றால், நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தேவனிடத்தில் விடை உண்டு! நாம் அவரைக் கவனித்துக் கேட்டால் அந்த விடையை அவர் நமக்கு நிச்சயமாய் சொல்லுவார்!
12. புதிய உடன்படிக்கை பழைய உடன்படிக்கையைவிட மகாமேன்மை நிறந்ததாகும்!
"இயேசுவோ விசேஷித்த உடன்படிக்கைக்கு மத்தியஸ்தராயிருக்கிறார்" (எபி 8:6).
இன்று அநேக கிறிஸ்தவர்கள் பழைய உடன்படிக்கைக்கும் புதிய உடன்படிக்கைக்கும் அடிப்படை பூர்வமாக வித்தியாசம் இருப்பதை இன்னமும் அறிந்து கொள்ளவில்லை (எபி 8:8-12). மோசேயைக்காட்டிலும் எவ்வாறு இயேசு மேலானவரோ, அதைப்போலவே பழைய உடன்படிக்கையை காட்டிலும் புதிய உடன்படிக்கை மேலானதாகும்! (2கொரிந் 3, எபிரே 3).
பழைய உடன்படிக்கையானது, தன்னுடைய நியாயத்தீர்ப்பின் பயத்தின் மூலமாக ஒருவனுடைய வெளியரங்க வாழ்க்கையை மாத்திரமே சுத்திகரிக்க முடிந்தது. ஆனால் புதிய உடன்படிக்கையோ நம்முடைய உள்ளான அந்தரங்க ஜீவியம் முழுவதையும் மாற்றுவதாய் இருக்கிறது. இந்த மாற்றம் அச்சுறுத்தல் மூலமோ அல்லது ஆசீர்வாத வாக்குத்தத்தங்கள் மூலமோ நடை பெறாமல், பரிசுத்த ஆவியின் மூலமாகவே நடை பெறுகிறது. இந்த மாற்றம், பூரண தூய்மையும் அன்பும் நிறைந்த கிறிஸ்துவின் சுபாவத்தையே நமக்குத் தருகிறது!
ஒரு பன்றியை சங்கிலியால் கட்டி (நியாயப்பிரமாணத்தின் தண்டனை என்ற பயத்தினால் கட்டி) அதைப்பிடித்து இழுத்து தூய்மையாய் காப்பதற்கும் ஒரு பூனை தன்னுடைய உள்ளான சுபாவத்தினிமித்தம் தன்னைத்தானே தூய்மையாய் காத்துக் கொள்வதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு! இந்த உதாரணத்தைப் போலவே, பழைய புதிய உடன்படிக்கையில் வித்தியாசம் இருக்கிறது!
13. நாம் மனிஷரால் புறக்கணிக்கப்பட்டு துன்புறுத்தப்படுவற்கே அழைக்கப்பட்டிருக்கிறோம்.
"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்" (2 தீமோ 3:12).
இயேசு தன்னுடைய சீஷர்களிடத்தில் கூறும்போது, இந்த உலகத்தில் அவர்கள் துன்பத்தை சந்திக்க வேண்டுமென்பதை திட்டமாய்க் கூறினார் (யோவான் 16:33). எனவேதான் அவர் பிதாவினிடத்தில் தன் சீஷர்களுக்காக ஜெபிக்கும்போது, "நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக் கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளவில்லை" என்றே ஜெபித்தார் (யோவான் 17:15). மேலும் அப்போஸ்தலர்கள் தங்களுடைய விசுவாசிகளுக்குப் போதிக்கும்போது, "அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தான் அவர்கள் தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க முடியும்" என போதித்தார்கள் (அப்போ 14:22).
மேலும், இயேசு கூறும்போது, "வீட்டு எஜமானையே 'பெயல்செபூல்' எனக் கூறியிருந்தால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?" எனக் கூறினார் (மத் 10:25).
பார்த்தீர்களா, இந்த அடையாளங்களை (நிந்தைகளை) வைத்துதான் நாம் அவருடைய உண்மையுள்ள வீட்டாராய் இருக்கிறோமா அல்லது இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும்! என்னுடைய ஜீவிய காலத்தில் எத்தனையோ விசுவாசிகள் என்னை "பிசாசு", "பிசாசின்மகன்", "அசுத்தாவி பிடித்தவன்" ,"கொலை பாதகன்", "தியோத்திரேப்பு" என்றெல்லாம் கூறி அழைத்திருக்கிறார்கள்! இவ்வாறு நாம் இயேசுவின் வீட்டாராய் இனம் கண்டு சுட்டிக்காட்டப்படுவது நமக்குக் கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாகும். இன்று யாரெல்லாம் ஆண்டவருக்கு உத்தமமாய் ஊழியம் செய்கிறார்களோ, அவர்கள் யாவருக்குமே இந்த நிந்தை அனுபவம் நிச்சயம் கிட்டியிருக்கும்!
ஒரு மெய்யான தீர்க்கதரிசி தன் "சொந்த இனத்தாரால்" ஒருபோதும் கனம் அடையமாட்டான் என்று இயேசு கூறினார் (மாற் 6:4). எந்த ஒரு மெய்யான தீர்க்கதரிசியும் அவனுடைய சொந்த இனத்தாரால், புறக்கணிக்கப்பட்டு கனவீனமும் அடைவான்! இதைப்போலவே மெய்யான அப்போஸ்தலர்களும் "தூஷிக்கப்பட்டு... உலகத்தின் குப்பையைப்போலவும் எல்லோரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப் போலவும் .... கருதப்படுவார்கள்" என பவுல் கூறினார் (1கொரிந் 4:13). துன்புறுத்தப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும், எத்தனையோ வல்லமையான தேவனுடைய ஊழியர்களுக்கு தேவன் நியமித்த பங்காகவே இருக்கிறது!
இன்று, "சபையானது மகா உபத்திரவ காலத்திற்கு முன்பாகவே எடுத்துக்கொள்ளப்படும்" என்ற போதனை மிக பிரபல்யமாய் காணப்படுகிறது. இவ்வித போதனை ஏராளமான விசுவாசிகளின் மாம்சத்திற்கு ஆறுதலாய் இருக்கிறபடியால், இப்போதனையை மனமுவந்து ஏற்றுக்கொள்ளுகிறார்கள்! ஆனால், இயேசுவோ மிகத்தெளிவாக மத் 24-29-31 வசனங்களில், மகா உபத்திரவம் முடிந்த பின்புதான் தன்னால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை எடுத்துக்கொள்ளும்படி இயேசு திரும்ப வருவார் எனக்கூறினார். இந்த இயேசுவின் வசனங்களை ஒரு சிறு பிள்ளைக்கூட நன்றாய் விளங்கிக் கொள்ளமுடியுமே!
புதிய ஏற்பாட்டின் முழுபகுதியிலும், ஒரு வசனம் கூட சபையானது "மகா உபத்திரவத்திற்குத் தப்பித்து எடுத்துக்கொள்ளப்படும்" என போதிக்கவே இல்லை! ஆனால், வேத வசனத்திற்கு வேற்றுமையான இந்தப் போதகம், சுமார் 1800- ஆம் ஆண்டில் இங்கிலாந்து தேசத்தில் சில மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டதேயாகும்.
நாமோ, நம் தேசத்திலுள்ள சபையை வரப்போகும் உபத்திரவத்திற்கு இப்போதே ஆயத்தம் செய்கிறவர்களாகவே இருக்கவேண்டும்!
14. தேவன் ஏற்றுக்கொண்ட யாவரையும் நாமும் மனமுவந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்:
"தேவன் தமது சித்தத்தின்படி அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.... சரீரத்திலே பிரிவினை உண்டாயிராதபடிக்கு இவ்வாறு அமைத்திருக்கிறார் (1 கொரிந் 12:18,25).
வெவ்வேறான நாடுகளில் வெவ்வேறான காலத்தில் "தனக்கென தூய்மையுள்ள சாட்சியை எழுப்பும்படி" தேவன் மனுஷர்களைத் தெரிந்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்த தேவ மனிதர்கள் மரித்த பின்போ அவர்களைப் பின்பற்றி வந்தவர்கள் தங்கள் குழுவை மார்க்க கண்மூடித்தனம் (CULTISITIC) கொண்டதும், விசேஷித்த தனிக்குழுவாயும் மாற்றிவிட்டார்கள்!
ஆனால், கிறிஸ்துவின் சரீரமோ எந்தவொரு குழுவைக்காட்டிலும் விசாலம் கொண்டதாகும்! இதை நாம் ஒருபோதும் மறக்கவே கூடாது! ஆகவே, 'கிறிஸ்துவின் மணவாட்டி' இன்று நாம் காணும் எத்தனையோ பல குழுக்களிலும் படர்ந்து காணப்படமுடியும்!
எனவேதான், ஆண்டவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் என நாம் அறியும் யாவரிடமும் நாம் ஐக்கியம் கொள்ள நாட வேண்டும். இவர்களில் அனேகர் சில வேத வசனங்களுக்கு மாறுபாடான வியாக்கியானம் கொண்டிருக்கிறபடியால், அவர்களோடு சேர்ந்து நாம் ஊழியம் செய்திட முடியாதவர்களாய் இருக்கக்கூடும். இருப்பினும், ஆண்டவர் அவர்களை ஏற்றுக்கொண்டிருப்பதை நாம் அறிந்ததினிமித்தமாய் அவர்களோடு ஐக்கியம் கொள்ள நாட வேண்டும்!
15. எந்த மனிதனையும் கனத்தோடு நடத்த வேண்டும்:
"நம் நாவினாலே தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷனை சபிக்கிறோம்... என் சகோதரரே இப்படி இருக்கலாகாது" (யாக்கோபு 3:9,10).
ஒரு மனிதனிடத்தில் நாம் பேசும் வார்த்தையோ அல்லது செயலோ அவனுடைய மதிப்பைக் குறைப்பதாயிருந்தால், அந்த வார்த்தையும், செய்கையும் தேவனிடத்திலிருந்து உண்டானதல்ல. பிறரை அற்பமாய் எண்ணி தரம் குறையச் செய்வதை எப்போதும் சாத்தானே நாடுகிறான்!
ஆனால் நாமோ "யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும்" பேசும்படியே கட்டளையிடப்பட்டிருக்கிறோம். (1 பேதுரு 3:15). அவர்கள் நம்முடைய மனைவியாகவோ அல்லது நம்முடைய பிள்ளைகளாகவோ அல்லது வயது குறைந்தவர்களாகவோ அல்லது பிச்சைக்காரர்களாகவோ அல்லது சத்துருக்களாகவோ... ஆகிய யாவரிடத்திலும் நாம் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பேசக்கற்றுக் கொள்ள வேண்டும்!
இவ்வாறாக, எல்லா மனுஷரையும் நாம் மிகுந்த கனத்துடன் நடத்தவேண்டும். உதாரணமாக, ஒரு ஏழை சகோதரனுக்கு ஏதாகிலும் அன்பளிப்புக் கொடுத்தால் அதைக் கொடுக்கும் போது, ஒரு மனிதனாயிருக்கும் அவனுடைய கனத்தைப் பறித்துக் கொள்ளாமல் கொடுத்திட வேண்டும். அந்த சகோதரனுக்கு நாம் கொடுப்பது ஒரு 'தர்மபிரபு' கொடுப்பதைப்போல் கொடுக்காமல் அவனுடைய சகோதரனாய் நம்மை பாவித்தே கொடுத்திட வேண்டும்!
16. நம்முடைய பொருளாதார தேவைகளை தேவனிடம் மாத்திரம் தெரியப்படுத்த வேண்டும்:
"தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி நம் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவிற்குள் மகிமையிலே நிறைவாக்குவார்' (பிலிப்பியர் 4:19).
முழுநேர கிறிஸ்தவ ஊழியர்கள் தங்கள் எல்லாப் பொருளாதார தேவைகளுக்கும் தேவனையே நம்பியிருக்க வேண்டும். மேலும் அவ்வித தேவைகளை தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கு மாத்திரமே தெரியப்படுத்த வேண்டும்! காரியம் இவ்வாறு செம்மையாய் நடந்துவிட்டால் அவர்களுடைய தேவையை சந்திக்குபடி தேவன் தன்னுடைய பிள்ளைகளை அவரே ஏவிவிடுவார். இதற்கு மாறாக, முழுநேர ஊழியர்கள் "தேவனிடத்தில் விசுவாசமாயிருந்து கொண்டே மற்ற விசுவாசிகளிடத்திலும் அறிக்கை சமர்ப்பித்து" ஒருக்காலும் பிழைத்திடக் கூடாது!
"சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்கு சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்". (1 கொரிந் 9:14).
ஆகவே, ஆண்டவருக்கு முழுநேர ஊழியம் செய்பவர்கள் மற்ற விசுவாசிகளிடமிருந்து அன்பளிப்புகள் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், முழுநேர கிறிஸ்துவ ஊழியர்கள் ஒருபோதும் சம்பளம் வாங்கவே கூடாது! அன்பளிப்பிற்கும் சம்பளத்திற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. அன்பளிப்புகளை உரிமையோடு எதிர்பார்த்திட முடியாது... ஆனால், சம்பளத்தை உரிமையோடு எதிர்பார்த்திட முடியும். இன்று ஏராளமான கிறிஸ்துவ ஸ்தாபனங்கள் அதன் கலாச்சாலைகளும் பின்மாற்ற நிலைக்குள் இருப்பதற்கு "இந்த சம்பள அடிப்படையே" காரணமாகும்.
முழுநேர ஊழியர்கள் அன்பளிப்புகள் வாங்கலாம் என்று இருந்தாலும், அவர்கள் தங்களைக்காட்டிலும் ஏழ்மையான ஜனங்களிடமிருந்து ஒருக்காலும் அன்பளிப்புகள் பெறக்கூடாது. அப்படியே அவர்கள் நமக்குக் கொடுத்துவிட்டாலும், அவர்களைக்காட்டிலும் ஏழையான ஜனங்களுக்குக் கொடுத்து விடவோ அல்லது ஆண்டவருடைய ஊழியத்திற்கென அந்தப் பணத்தை காணிக்கையாகப் பெட்டியில் போட்டுவிடவோ வேண்டும்!
பணவிஷயத்தைக் குறித்த கீழ்காணும் "பத்து கட்டளைகளை" எல்லா முழுநேர கிறிஸ்துவ ஊழியர்களும் கவனத்துடன் பின்பற்றிவிட்டால் ஆண்டவருடைய நாமம் எப்போதும் அவர்கள் மூலமாய் மகிமைப்படுவதாயிருக்கும்:
1. ஒருபோதும், உங்கள் பொருளாதார தேவைகளை தேவன் ஒருவருக்கு மாத்திரமே அல்லாமல், எந்த மனிதனுக்கும் தெரியப்படுத்தாதீர்கள்! (பிலிப்பியர் 4:19).
2. ஒருபோதும், அவிசுவாசிகளின் பணத்தை ஏற்றுக்கொள்ளாதீர்கள். ( 3 யோவான் 7).
3. ஒருபோதும், எவ்வித அன்பளிப்பையும், எந்த மனிதனிடத்திலும் எதிர்பார்க்காதிருங்கள் (சங்கீதம் 62:5).
4. ஒருபோதும், ஒருவருடைய பணம் உங்களை கட்டுப்படுத்தி அல்லது உங்கள் ஊழியத்தை பாதிக்கும்படி அனுமதிக்காதீர்கள்.
5. ஒருபோதும், உங்கள் ஊழியத்தை அங்கீகரிக்காதவர்களின் பணத்தை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
6. ஒருபோதும், உங்களைவிட ஏழ்மையானவர்களிடமிருந்து உங்கள் சொந்த அல்லது குடும்ப தேவைகளுக்காக பணத்தை ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
7. ஒருபோதும் உங்கள் பொருளாதார தேவைகளுக்காய் எந்த மனிதனையும் 'சார்ந்து' கொள்ளாதிருங்கள்.
8. ஒருபோதும், நீங்கள் தேவனுடைய பணத்தைக் கையாளும் விதம் பிறர் உங்களை சந்தேகப்பட்டு குற்றப்படுத்துவதற்கு ஏதுவுண்டாக இடம் தராதீர்கள். (1 கொரிந் 8:20,21).
9. ஒருபோதும், நீங்கள் அன்பளிப்பாய் பணம் பெற்ற உடன் பரவசமடையாதிருங்கள்.
10. ஒருபோதும், நீங்கள் பணத்தை இழக்கும் நேரத்தில் சோர்வு அடையாதிருங்கள்.
நான், மேற்கூறிய சத்தியங்கள் உங்களை உற்சகப்படுத்துவது மாத்திரமல்லாமல் ஒரு மாபெரும் விடுதலையை உங்களுக்கு தந்திருக்கும் என்றே நான் நம்புகிறேன். நீங்கள் ஆண்டவரோடு நடப்பதிலும் உங்கள் ஊழியத்திலும் "சீரியஸாய்" இருப்பவராயிருந்தால், தயவு செய்து இந்த சத்தியங்கள் யாவையும் உங்கள் அனுதின வாழ்க்கையில் மிகவும் கவனமாய் கைக்கொண்டு வாழ்ந்துவிடுங்கள்! ஆண்டவரின் நாமத்தை மகிமைப்படுத்துங்கள்!