நாம் தேவ மனிதர்களைப் பின்பற்றுவதா அல்லது இயேசுவை மட்டுந்தான் பின்பற்ற வேண்டுமா?

Article Body: 

பழைய உடன்படிக்கையில், தேவனிடமிருந்து மோசே மற்றும் தீர்க்கதரிசிகள் மூலமாகப் பெற்றுக் கொண்ட எழுதப்பட்ட வார்த்தைகளை மட்டுமே இஸ்ரவேலர்களால் பின்பற்ற முடிந்தது. அக்காலத்தில் வாழ்ந்தவர்களில் ஒருவராலும் "என்னைப் பின்பற்றுங்கள்" என்று சொல்ல முடியவில்லை. மிகப் பெரும் தேவ மனிதர்களாய்த் திகழ்ந்த மோசே, எலியா மற்றும் யோவான்ஸ்நானன் ஆகியோராலும்கூட அதைச் சொல்ல இயலவில்லை. தேவனுடைய வார்த்தை மட்டுமே அவர்களுடைய பாதைக்கு வெளிச்சமாயிருந்தது (சங் 119:105).

ஆனால் இயேசு வந்து புதிய உடன்படிக்கையைத் திறந்து வைத்தார். அவர் நமக்கு தேவனுடைய வார்த்தையை மாத்திரம் கொடுக்காமல், தம்முடைய சொந்த வாழ்க்கையின் மூலமாக நாம் பின்பற்றக்கூடிய ஒரு முன் மாதிரியையும் நமக்குக் கொடுத்தார். வேதத்தில் "என்னைப் பின்பற்றுங்கள்" (மத் 4:19; யோவான் 21:19; லூக் 9:23) என்று சொன்ன முதல் நபர் அவர்தான். ஆதலால் புதிய உடன்படிக்கையில், நமக்கு எழுதப்பட்ட வார்த்தை மற்றும் இயேசுவில் மாம்சமாகிய வார்த்தை ஆகிய இரண்டுமே உண்டு. இதை வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்த எழுதப்பட்ட வார்த்தையானது, நாம் கண்களால் கண்டு, பின்பற்றும்படிக்கு ஒரு மனுஷ வாழ்க்கையின் மூலமாக வெளிப்பட்டது.

பரிசேயர் வெறுமனே வேத வார்த்தைகளை மட்டும் படித்துவிட்டு, தம்மிடத்தில் வராமல் இருந்தபடியால், இயேசு அவர்களைப் பார்த்து,
"வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை" (யோவான் 5:39,40) என்று கடிந்துகொண்டார்.

இயேசுவின் வாழ்க்கைதான் இன்று நம்முடைய பாதைக்கு வெளிச்சமாயிருக்கிறது (யோவான் 1:4). எழுதப்பட்ட வார்த்தையல்ல. ஏதாவது சில குறிப்பிட்ட காரியங்களுக்கு தேவனுடைய வார்த்தையிலிருந்து வழிகாட்டுதலை நம்மால் பெறமுடியாமல் போகலாம். அச்சமயங்களில், பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் வாழ்க்கையை நம்முடைய இருதயங்களில் வெளிப்படுத்துவார். அதை நாம் உற்று நோக்கினால், நமக்கு ஒரு பதில் கிடைத்துவிடும்.

மேலும், புதிய உடன்படிக்கையிலே, பரிசுத்த ஆவியானவர், பவுலைப் போன்ற ஒரு பக்திமானைக் கொண்டு,"நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதைப் போல, என்னைப் பின்பற்றுங்கள்" என்று சொல்லும்படி ஏவினார். இந்த வார்த்தைகளை மூன்றுதரம் சொல்லும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் அவரை ஏவினார். கிறிஸ்துவின் அடிச்சுவடுகளிலே நடக்கிற மெய்யான தேவபக்தியுள்ள மனிதர்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவே பரிசுத்த ஆவியானவர் அப்படிச் செய்தார் (1கொரி 4:16; 1கொரி 11:1; பிலி 3:17).

ஒரு மெய்யான புதிய உடன்படிக்கை ஊழியனாய் இருப்பவன், எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தைகளைக் கொண்டு மட்டுமே தேவனுடைய தரத்தை அறிவிக்காமல், பவுலைப் போலவே, "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதைப் போல, என்னைப் பின்பற்றுங்கள்" என்று சொல்லியும் அறிவிப்பான்.

"நாம் எந்த மனிதனையும் பின்பற்றக்கூடாது. இயேசுவை மட்டுமே பின்பற்ற வேண்டும்" என்று சிலர் கூறுகின்றனர். இது ஒரு பரிசுத்தமான பதம் போலத்தான் நம்முடைய காதுகளில் தொனிக்கிறது. ஆனால் இது தேவனுடைய வார்த்தைக்கு முற்றிலும் முரணானது. ஏனெனில் நாம் இப்போது கண்டது போல, பவுல் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு தன்னைப் பின்பற்றும்படியாகச் சொல்லியிருக்கிறாரே.

கொரிந்தியர்களின் ஆவிக்குரிய தகப்பனாக பவுல் இருந்தபடியால், அவர் தன்னைப் பின்பற்றும்படி அவர்களைப் பார்த்துச் சொன்னார். "கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் உங்களுக்கு அநேகர் இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினாலே நான் உங்களைப் பெற்றேன். ஆகையால் என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள் என்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்" (1கொரி 4:15,16). ஒரு வேத போதகனை ஒருவனால் பின்பற்ற முடியாது. ஏனென்றால், அந்த வேத போதகன் வசனத்தை எவ்வளவுதான் துல்லியமாய்ப் போதிக்கிறவனாய் இருந்தாலும், அவனால் தன்னுடைய வாழ்க்கையின் மூலமாய் ஒரு நல்ல முன்மாதிரியை காண்பிக்க முடியாமல் போகலாம். அப்படியானால் இந்த வசனத்தின்படி, ஓர் ஆவிக்குரிய தகப்பன், பத்தாயிரம் வேத போதகர்களைவிட மேலானவன் என்பது புலனாகிறது. எனவே எல்லாக் கிறிஸ்தவர்களுமே, தாங்கள் பின்பற்றும்படிக்கு, பவுலைப் போல ஓர் ஆவிக்குரிய தகப்பனைப் பெற்றிருப்பது சாலச் சிறந்ததாகும். இப்படிப்பட்ட ஆவிக்குரிய தகப்பனைப் பின்பற்றினால், நாம் பாவத்தில் விழுவதிலிருந்தும், கள்ளப் போதகத்திலிருந்தும் பாதுகாக்கப்படுவோம்.

தன்னைப் போலவே "கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிற" வேறுசில தேவபக்தியுள்ள மனிதர்களையும் பின்பற்றும்படி பவுல் கிறிஸ்தவர்களை ஏவினார். "நீங்கள் உங்களுடைய ஜீவியங்களை என்னுடைய முன்மாதிரியைப் போலவே மாற்றி, எங்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுகிறவர்களிடத்திலிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள்" (பிலி 3:17 NLT) என்று அவர் சொன்னார்.

நம்மை நடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றும்படிக்கு வேதம் நமக்குக் கட்டளையிடுகின்றது.

"உங்களை நடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்" (எபி 13:17).

"தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து, உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நீங்கள் நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்"
(எபி 13:7).

நாம் மற்றவர் பெற்றுள்ள ஊழியத்தைப் பின்பற்றும்படி அழைக்கப்படவில்லை. ஏனென்றால் தேவன் தம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும், பிறர் செய்யமுடியாத, அவர்கள் மட்டுமே செய்யத்தக்க பிரத்யேகமான ஊழியத்தைத் தந்திருக்கிறார். நமது உடம்பிலுள்ள பல்வேறு உறுப்புகளும் பலவிதமான பணிகளை நிறைவேற்றுவதைப் போலவே, கிறிஸ்துவின் சரீரத்திலும் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு பணியை நிறைவேற்றுகின்றது. இயேசு ஜனங்களைத் தம்மைப் பின்பற்றுபடி அழைத்த போது, அவர்கள் அவரைப் போல அற்புதங்களை நிகழ்த்த வேண்டுமென்று எதிர்பார்த்தோ அல்லது அவரைப் போல பிரசங்கித்திட வேண்டுமென எதிர்பார்த்தோ அவர்களை அழைக்கவில்லை. அது அவர் பெற்ற ஊழியம். அவரது வாழ்க்கையில் காணப்பட்ட முன்மாதிரியைப் பின்பற்றும்படிக்கே அவர் அவர்களை அழைத்தார். அதாவது அவருடைய வாழ்க்கைக் கோட்பாடுகளின்படியே அவர்களும் வாழ வேண்டுமென அவர் எதிர்பார்த்தார். அதுபோலவே, பவுலும் தான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதைப் போலவே தன்னைப் பின்பற்றும்படி விசுவாசிகளை அழைத்த போது, அவர்கள் எல்லாரும் அவரைப் போலவே அப்போஸ்தலனாக வேண்டும் என்றோ அல்லது வியாதியஸ்தரைக் குணமாக்க வேண்டும் என்றோ எதிர்பார்க்கவில்லை. அவர் எவ்வண்ணம் கிறிஸ்துவின் கோட்பாடுகளின் அடிப்படையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டாரோ, அது போலவே அவர்களுடைய வாழ்க்கையும் இருக்க வேண்டும் என்றுதான் விரும்பினார்.

மேலே கண்ட வசனங்களெல்லாம், தேவ மனிதர்களின் வாழ்க்கையை நாம் பின்பற்றவேண்டும் என்பதற்காகவே ஆவியானவர் நமக்குக் கட்டளையிட்டவையாகும். பொதுவாக, தேவபக்தியுள்ள மனிதர்களின் முன்மாதிரியைப் பின்பற்ற முடியாத அளவிற்கு பெருமையாய் இருப்பவர்களெல்லாம் முடிவிலே மனுஷீகமானவர்களாய் உருவெடுக்கிறார்கள்; அல்லது தங்களுடைய சுய-ஜீவியத்தினால் வழிநடத்தப்படுகிற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் யாவும் பேராபத்தைக் கொண்டுவருவனவாக இருக்க முடியும்.

தன்னுடைய முன்மாதிரியையும், தேவபக்தி நிறைந்த பிறருடைய முன்மாதிரியையும் பின்பற்ற வேண்டும் (பிலி 3:17) என்று பிலிப்பிய கிறிஸ்தவர்களுக்குச் சொன்ன பவுல், சிலரது முன்மாதிரிகளைப் பின்பற்றக் கூடாது என்றும் உடனடியாக அவர்களை எச்சரித்தார். "ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய மகிமை இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்" (பிலி 3:18,19).

அவர்கள் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றி நடந்திருந்தால், அந்த தேவபக்தியற்ற மனிதரின் வஞ்சனைகளிலிருந்து பாதுக்காக்கப்பட்டிருந்திருப்பார்கள்.

ஒரு மனிதன் தேவபக்தியுள்ளவனும், நாம் பின்பற்றக்கூடிய தகுதியுடையவனுமாய் இருக்கிறான் என்று அடையாளம் காண்பதற்கான ஏழு காரியங்களைக் கீழே வாசியுங்கள்:

1. அந்த மனிதன் எளிதிலே நெருங்கிப் பேசக்கூடிய அளவிற்குத் தாழ்மையானவனா? இயேசு நம்மை அவரிடமிருந்து தாழ்மையைக் கற்றுக் கொள்ளுமாறு கூறினார் (மத் 11:29). ஒரு தேவபக்தியுள்ள மனிதன், இயேசுவிடமிருந்து தாழ்மையைக் கற்றுக் கொண்டவனாயிருப்பான்.

2. அவன் பண ஆசையிலிருந்து விடுபட்டவனும், நீங்கள் அறிந்த வரைக்கும் அவன் யாரிடத்திலும் பணத்தைக் கேட்காதவனுமாய் இருக்கிறானா? தேவபக்தியுள்ள மனிதன், இயேசுவைப் பின்பற்றுகிறவனாயிருந்து, தம்முடைய ஊழியத்திற்காகக்கூட யாரிடத்திலும் கையேந்தாத இயேசுவைப் போலவே இருப்பான். தேவனை நேசிக்கிறவன் பணத்தை நேசிக்க மாட்டானென்றும், தேவனைப் பற்றிக்கொண்டவன் பணத்தை அசட்டை செய்வானென்றும் இயேசு சொன்னார் (லூக் 16:13).

3. உங்களுக்குத் தெரிந்த வரைக்கும் அவன் சுத்தமுள்ளவனாய் இருக்கிறானா? விசேஷமாய் பெண்களின் விஷயத்திலே சுத்தவான்தானா? ஒரு தேவபக்தியுள்ள மனுஷன் பாலிய இச்சைகள் சம்பந்தப்பட்ட சோதனையைத் தவிர்க்கிறவனாக மாத்திரம் இருக்க மாட்டான்; மாறாக அதிலிருந்து விலகி ஓடுகிறவனாய் இருப்பான் (2தீமோ 2:20-22).

4. அவன் திருமணமாகி, பிள்ளைகளை உடையவனாயிருந்தால், பிள்ளைகளை தேவபக்தியில் வளர்த்திருக்கிறானா? திருமணமான தேவபக்தியுள்ள மனிதன் தன்னுடைய பிள்ளைகளை தேவபக்தியிலும், ஒழுக்கத்திலும் வளர்த்திருந்திருப்பான் (1தீமோ 3:4,5; தீத்து 1:6).

5. அவனுடைய உடன் ஊழியர்கள் அவனோடு நெருங்கிப் பழகியதின் விளைவாக, தேவபக்தி அடைந்திருக்கிறார்களா? தேவபக்தியுள்ளவர்களாய் இருப்பவர்கள், வேறு தேவபக்தியுள்ளவர்களை உற்பத்தி செய்வார்கள். தன்னுடைய ஆவிக்குரிய தகப்பனாகிய பவுலுடன் இருந்த தீமோத்தேயு, பவுலைப் போலவே தேவபக்தியுள்ளவனாய் மாறினான் (பிலி 2:19-22).

6. தானே புதிய உடன்படிக்கை சபையைக் கட்டினவனாகவோ அல்லது அப்படிப்பட்ட சபைகளைக் கட்டுகிறவர்களோடு சேர்ந்து மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுகிறவனாகவோ இருக்கிறானா? இயேசு அவரது சபையைக் கட்டுவதற்காகவே இப்பூமிக்கு வந்தார் (மத்16:18). சபையைக் கட்டுவதற்காகவே, அவர் தம்மை மரணத்திற்கும் ஒப்புக்கொடுத்தார் (எபே 5:25). தேவபக்தி உடையவன் ஜனங்களைத் தேவனிடத்திற்குக் கொண்டுவருவதோடு நிறுத்திவிடாமல், அவர்களை ஒரு ஸ்தல சபையாகக் கட்டுகிறவனாகவும் இருப்பான்.

7. அவன் உங்களை தன்பக்கமாக இழுத்துக் கொள்ளாமல், கிறிஸ்துவோடு இணைக்கிறானா? ஒரு தேவபக்தியுள்ள மனிதன், உங்களை கிறிஸ்துவோடு இணைப்பான். அதன்மூலமாக, நீங்களும் தேவபக்தியுள்ளவர்களாகி, மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வீர்கள் (எபே 4:15; 2கொரி 4:5)

நம்மால் பெரும்பான்மையான கிறிஸ்தவ தலைவர்களைப் பின்பற்ற முடியாது; ஏனெனில் அவர்கள் மேற்கண்ட ஏதாவது ஒரு விஷயத்திலோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட விஷயங்களிலோ
தவறினவர்களாகவே உள்ளனர்.

ஒருவேளை நீங்கள் மேலுள்ள அனைத்துக் குணாதிசயங்களும் உடைய ஒரு தலைவரைக் காண்பீர்களானால், அவரை உங்கள் ஆவிக்குரிய தகப்பனாக ஏற்றுக் கொண்டு, அவரைப் பின்பற்றுவது
உங்களுக்கு நலமாக இருக்கும். ஏனெனில் கர்த்தரோடு நெருங்கி வாழ அவர் உதவி செய்வதினால், நாம் பாவத்திலிருந்தும் கள்ளப் போதகத்திலிருந்தும் இவ்விதமாய் தப்புவிக்கப்படுவோம்.

காதுள்ளவன் எவனோ அவன் கேட்கக்கடவன்.