பாவத்தின்மேல் பரிபூரண வெற்றி

எழுதியவர் :   சகரியா பூணன்
Article Body: 

பாவத்தின் வலிமையினால் தோற்கடிக்கப்பட்டு "இவ்வளவுதான் கிறிஸ்தவ ஜீவியமா?" என ஜெய வாழ்விற்காக ஏங்கி நிற்கும் கிறிஸ்தவர்களுக்கென்றே இச்செய்தியை வழங்குகிறோம்! இயேசு என்ற நாமத்தில் "தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" என்ற சுவிஷேசத்தின் சுகந்தவாசனையை எண்ணற்ற கிறிஸ்தவர்கள் இன்னமும் முகரவேயில்லை! தன் தூய மணவாளிக்காக இயேசு வரப்போகும் இக் கடைசி நாட்களில் இச்சுவிசேஷத்தின் சுகந்த வாசனை உலகெங்கும் மணம் வீசத் துவங்கிவிட்டது! நீங்களும் அவர்களில் ஒருவராக மாறிட கிடைத்த சந்தர்ப்பமே இப்பிரதி உங்கள் கையில் கிடைத்திருப்பதின் பொன்னான வாய்ப்பாகும்!!

பாவத்தின்மேல் பரிபூரண வெற்றி

௧0௩-வது சங்கீதத்தின் முதல் 2 வசனங்களை விசேஶமாக தமிழ்நாட்டில் அநேகசபைகளில் கூட்டத்தின் முடிவில் சொல்லுவது வழக்கமாகிவிட்டது! "என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி; என் முழுஉள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே". எதற்காக முழு உள்ளத்தோடும் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறோம்? 3-ம் வசனம் சொல்லுவதை கவனியுங்கள், "அவர் என் நோய்களையெல்லாம் மன்னித்து குணமாக்கினார்". ஆகவே கர்த்தரை ஸ்தோத்தரித்தோம். இந்த சங்கீதம் இயேசு வருவதற்கு ௧000 வருடத்திற்க்கு முன்பே எழுதப்பட்டது. இந்த வசனங்களை சொல்வது தவறு என்று கூறவில்லை. ஆனால் இந்த வசனத்தை பழைய உடன்படிக்கையில் மக்களும் கூறினார்கள் என்றே குறிப்பிடுகின்றோம். என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி "ஏனெனில்" அவர் என் அக்கிரமங்களை எல்லாம் மன்னித்தார். நோய்களையெல்லாம் குணமாக்கினார். எனவே நாம் பழைய உடன்படிக்கையில் ஜீவிப்பவர்களாய் (பாவம் மன்னிக்கப்பட்டதும், நோய்கள் குணமானதும்) மாத்திரம் இருப்போமென்றால், இந்த வசனங்களை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால் புதிய உடன்படிக்கையிலோ மேன்மையான வெற்றியின் சுதந்திரத்தை ரோமர்:6:௧௪-ம் வசனத்தில்,"நாம் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவம் நம்மை மேற்கொள்ள மாட்டாது" என வாசிக்கிறோம். இப்படி ஒரு வாசகம் பழைய ஏற்பாட்டில் இல்லவே இல்லை! பாருங்கள், இப்போது புதிய ஏற்பாட்டில் உள்ள நான் சங்கீதம்.௧0௩:1,௨வசனத்தை இவ்வாறு கூறிட முடியும், "என் ஆத்துமாவே, பாவத்தின் மேல் எனக்கு வெற்றியைத்தரும் கர்த்தரை ஸ்த்தோத்தரி" ஆ! என்ன விந்தையான புதிய உடன்படிக்கையின் சுதந்திரம்!!.

புதிய உடன்படிக்கை அளிக்கும் இரட்சிப்பானது "இருதயத்தில் இச்சிக்கும் இச்சையிலிருந்து" விடுதலையாகும் மேன்மையான இரட்சிப்பே. இதை எப்படி தேவன் அருளுகின்றார்? ரோமர்௮-ம் அதிகாரத்தின் முதல் ௧௪ வசனங்கள் அதற்கு விடை அளிக்கிறது. ஏனெனில் இங்குதான் பழைய உடன்படிக்கை செய்யக்கூடாததையும், புதிய உடன்படிக்கை என்ன செய்யமுடியும் என்பதைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் பழைய உடன்படிக்கை என்னதான் செய்யமுடிந்தது? நியாயப்பிரமாணம் ஜனங்களை விபச்சாரம், கொலை,திருடு ஆகியவற்றிலிருந்து தடுத்து நிறுத்தமுடிந்தது. எனவேதான் யுதர்களின் வாழ்கைதரமானது உலகத்தில் எல்லோரைக் காட்டிலும் உயர்ந்ததாய் இருந்தது. ஆனால் நியாயப்பிரமாணம் ஒரு மனிதனைத் தன் இருதயத்திலிருந்து இச்சிக்கும் பலவிதமான இச்சையிலிருந்து விடுதலையாக்க முடியவில்லை என ரோமர்௭:8-ம் வசனம் தெளிவுபடுத்துகிறது. திருடியோ, கொன்றோ அல்லது விபச்சாரம் செய்தோ உங்கள் சரீரத்திலிருந்து "வெளியாகும்" இப்படிப்பட்ட பாவங்களையே நியாயப்பிரமாணம் நியாயந்தீர்க்க முடிந்தது.

ஆனால் நீங்கள் உங்களுக்குள் தோன்றும் இச்சைகளை உங்கள் இருதயத்திற்குள்ளேயே அடக்கி வைத்துக்கொண்டால் நியாயப்பிரமாணம் உங்களை ஒன்றும் செய்யமுடியாது. ஒரு மனிதன் தன் இருதயத்திற்குள்ளேயே இரவும் பகலும் ஸ்திரீகளை இச்சித்து கொண்டிருந்தாலும் நியாயப்பிரமாணம் அம் மனிதனை ஒன்றும் செய்யாது. ஒருவருக்கு விரோதமான கசப்பைப் பல வருடங்கள் ஒருவன் தன் மனதில் வைத்திருந்தாலும் நியாயப்பிரமாணம் அம் மனிதனை ஒன்றும் செய்யமுடியாது. அப்படியிருந்தால், நீங்கள் ஒரு சிறந்த நியாயப்பிராமாணத்திற்கு கீழ்ப்பட்ட ஒரு பிரஜையாய் இருப்பீர்கள். நியாயப்பிரமாணத்தை பொறுத்தவரையில் நீங்கள் ஒரு நீதிமான்! இவ்வாறு நியாயபிரமாணம் வெளியரங்கமான நல்ல கிரியைகளை செய்தாலும், ஒரு மனிதனை அது "தேவனுடைய நீதியின் தரத்திற்குக் கொண்டுவரமுடியவில்லை. ஏனெனில்ரோமர் .8:3-ம்வசனத்தின்படி நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஓர் "பெலவீன்மான் மாம்சமே" அதற்கு காரணம் ஆகும். இந்த மாம்சம் தேவனுடைய சித்தம் செய்வதற்கு மிக மிக பெலவீனமானது. ஆனால் பாவம் செய்வதற்கோ அதிக வலிமை நிறைந்தது. ஆனால் தேவன் இப்போது "மாம்சத்தினாலே பெலவீனமாயிருந்த நியாயபிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்குத் தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்"(ரோமர்௮:3). என்ன விந்தையான நற்செய்தி! அற்புதம்! 'நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவன் தன் குமாரன் இயேசுவின் மூலமாக செய்துமுடித்து, நாமும் அவ்வாறே வாழும்படியான ஒரு வழியை உண்டுபண்ணி வைத்துவிட்டார்!.

இது ஒரு விந்தையான நற்செய்தியில்லையா? யாருக்கு இது நற்செய்தி? தங்கள் இருதயத்தில் பரிசுத்தமாய் இருக்க வாஞ்சையாய் காத்துத் துயருற்றுத்...தவித்திருப்பவர்களுக்கே இது நற்செய்தி! இதுதான் சுவிஷேசம்! தேவன் தன் ஒரே பேறான குமாரனை "நம்மைப்போல்" பாவ மாம்சத்தின் சாயலில் அனுப்பி பாவத்தை மாம்சத்திலேயே ஆக்கினைகுள்ளாகத் தீர்த்துவிட்டார். இன்று அநேகர் அறிந்ததெல்லாம் தேவன் பாவத்தைக் கல்வாரி சிலுவையில் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார் என்ற செய்திதான். ஆனால், அதனினும் மேலான ஒன்றை நாம் இப்போது அறிகிறோம், "பாவத்தை மாம்சத்திலேயே ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." இதன் பொருள் என்ன? இதை நாம் நன்கு புரிந்துகொள்வது மிக அவசியம். கவனியுங்கள்! நாம் எவ்வாறு பாவத்தினிமித்தம் சோதிக்கப்படுகிறோம்? யாக்கோபு.1:௧௪,௧௫ இதற்கு விடையளிக்கிறது. "அவனவன் (எல்லோரும்) தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தை பிறப்பிக்கும்." இதை நீங்கள் புரிந்து கொள்ள முடிகிறதா? சோதனையானது, 'இச்சை" கர்ப்பந்தரிக்க சந்தர்ப்பம் கிடைக்கும்வரை பாவமாகாது. நம்முடைய மாம்சத்தில் பல தரப்பட்ட இச்சைகள் நம்மை இழுக்க முயற்சிக்கிறது. எவ்வாறு ஒரு துன்மார்க்கமான மனிதன் ஓர் கற்புள்ள கன்னியை கெடுத்துவிட முயற்சிக்கிறானோ, அதைப் போல! "ஆனால்" அந்தப் பெண் தன்னை அந்த மனிதனுக்கு ஒப்புக்கொடுக்காத பட்சத்தில் கர்ப்பந்தரிக்கவே முடியாது!

சோதனையானது இந்த துன்மார்க்கமான மனிதனைப் போலவே, கிறிஸ்துவின் கற்புள்ள கன்னிகையாகிய நம்மைத் தன் பக்கத்தில் அழைக்கிறான். அவனுடைய அழைப்பு எவ்வளவுதான் கொடூரமாய் இருந்தாலும் அதற்கு நம்மை ஒப்புகொடாதபட்சத்தில் நம் வாழ்க்கையில் பாவம் கர்ப்பம் கொள்ளவேமுடியாது. ஆம், ஒரு பாவமும் நமக்குள் வர முடியவே முடியாது! பொறாமை எப்படி வருகிறது? நீங்கள் உங்களை மாம்சத்திற்கு ஒப்புகொடுத்து, சம்பந்தம் கலந்து பிறக்கும் பிள்ளைக்குப் பெயர்தான் பொறாமை! அது தேவனுடைய பிள்ளையல்ல, மாம்சத்தின் பிள்ளை. ஒருவருக்கொருவர் இடும் சண்டை?இதுவும் மாம்சத்திற்குப் பிறக்கும் பிள்ளையே. கணவனும் மனைவியும் சண்டையிட்டுக்கொண்டால்... ஒருவருக்கு விரோதமான "கசப்பை" உங்கள் இருதயத்தில் பிறக்கிறது? மாம்சத்தினுடையது! ஒரு வேளை நீங்கள் உங்களை கிறிஸ்துவின் மணவாட்டி என்று சொல்லிக்கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமைகளில், "என் நேசமணவாளன் அதோ வருகிறார்!" என்று அழகாய் பாடலாம்! ஆனால் ஒவ்வொரு நாளும் உங்களை நீங்கள் மாம்சத்திற்கு ஒப்புக்கொடுத்து உங்கள் இருதயத்தில் பிறந்த எண்ணற்ற பிள்ளைகள் அதற்கு ஆதாரமாயிருக்கும்போது, உங்களின் 'ஆத்துமமணாளன்' வர்ணிப்புப்பாடல்கள் அனைத்தும் குப்பைகள்!!

இவ்வாறு ஆவிக்குரிய விபச்சாரம் செய்துக்கொண்டு வாழும் உண்மையற்ற விசுவாசிகளை இன்று நாம் கண்கூடாக காண்கிறோம் அல்லவா? யோவான் 8;௪௪-ல்,'"பிசாசு பொய்யனும் பொய்களுக்குப் பிதாவுமாயிருக்கிறான்" என இயேசு அறிவித்தார். பொய்யர்களுக்குப்பிதா என்று அல்ல,"எல்லா பொய்களுக்கும்" பிதா அவன்தான். ஒரு தேவனுடைய பிள்ளை பொய் சொன்னாலும், அந்தப் பொய்க்குப்பிதாவும் சாத்தான்தான்! அனனியா, சப்பிராள் சபைக்கு வரும்போது பரிசுத்த பாவனையோடு தாங்கள் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டது போல் பாசாங்கு செய்தார்கள். வாய்திறந்து ஏதும் பொய் சொன்னார்களா? ஒன்றும் சொல்லவில்லை, தங்களின் பொருட்களை 1 லட்சத்திற்கு விற்றிருந்தபோதும், ரூபாய் ௩0,000- த்தை மாத்திரம் பரிசுத்த பாவனையோடு பவ்வியமாகக் கொடுத்தார்கள். ஆம், வாயைத் திறக்காமலேயே பொய் சொன்னார்கள்! நீங்கள் இருதயத்தில் "இச்சையோடு" இருந்துவிட்டு, சபை மக்கள் உங்களை ஆவிகுரியவர்களாய் எண்ணும் பொருட்டு 'நீங்கள் காட்டும் பாவனை' அப்பட்டப்பொய்! இவ்வாறு இருக்கும் போது, "ஆ! என் நேச மணாளா, உமக்காக நான் காத்துத்தவிக்கிறேன்! " என்று பாடுவதில் என்ன பிரயோஜனம்? சரியான ஏமாற்று வேலை. இது, ஒரு பெண் தூரத்தில் இருக்கும் தன் மணவாளனுக்கு அற்புதமான காதல் கடிதமெழுதிவிட்டு வேறொரு மனிதனிடம் எப்போதும் தகாதமுறையில் நடப்பதற்கு ஒப்பாய் இருக்கிறது. ஆம்! இப்பாடல்களை நீங்கள் பாடிக்கொண்டும் அதே சமயம் உங்களை இருதயத்தை மாம்சத்திற்கு ஒப்புகொடுத்துக்கொண்டும் உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கலாம்! இப்படி வாழும் இவர்களுக்குப் பெயர் "விசுவாசிகளாம்"!? இவர்களுக்கெல்லாம் சரியான பெயர் விபசாரர்கள்! வேசிகள்!! ஆம், ஆவிக்குரிய விபசாரம்!! இவ்வாறு கிறிஸ்துவுக்கு என்னை நிச்சயித்துவிட்டு, "மாம்சம்" என்ற இன்னொரு மனிதன் பின்னால் நான் சென்றுகொண்டிருப்பேனென்றால், என்னுடைய பெயர் என்ன? "விபசாரி" இவ்வாறுதான் யாக்கோபு தன் நிருபத்தில் 4-அதிகாரம் 4-ம் வசனத்தில் குறிப்பிடுகிறார் "விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்று அறியீர்களா?" இதை சடங்காச்சார கிறிஸ்தவர்களுக்கா எழுதுகிறார்? இல்லை, விசுவாசிகளுக்கு எழுதுகிறார். தன் நிருபத்தில் அநேகம் தடவை "என் சகோதரரே" என்றுதான் குறிப்பிடுகிறார்.என் சகோதரரே, நீங்கள் விபசாரக்காரர்கள்!

யாக்கோபு சிறிதும் முகத்தாட்சண்யம் பாராமல் நேருக்குநேராய் முகத்தைப் பார்த்து பேசுபவர். ஒருவரும் மனம் புண்பட்டுவிடாதபடி மிகவும் பாலிஷாகப் பேசும் இன்றைய "டிப்ளோமேடிக்" பிரசங்கி அல்ல. மிகநேரடியாகவே சொன்னார். அவர்களை அவர் வெறுத்ததால் அல்ல. அவர்களை அவர்களின் ஆவிக்குரிய தூக்கத்திலிருந்து விழிக்கப்பண்ணவே அவ்வாறு இடித்துரைத்தார்! நாம் நம் இருதயத்தை தூய்மையாய் வைத்துக்கொள்வதற்கு தேவனே ஒரு வழியை உண்டுபண்ணினார். அதைதான் நாம் ரோமர். 8:3-ல் வாசிக்கிறோம். "தேவன் தம்முடைய குமாரனைப் பாவ மாம்சத்தின் சாயலாக அனுப்பினார்!" ஆ, இது ஒரு மேன்மையான சத்தியம் !! மேலும் எபிரேயர்.4:௧௫-ல் "எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும்" என வாசிக்கிறோம். நாம் எவ்வாறு சோதிக்கப்படுகிறோம் என்பதை யாக்கோபு. 1:௧௪,௧௫ வசனங்களில் விளக்கம் ஏற்கனவே பார்த்தோம். இயேசுவும் "நம்மைப்போலவே " சோதிக்கப்பட்டார். எப்படி? மாம்சத்தில் உள்ள இச்சையின் மூலமாக! இயேசுவுக்கும் அவருடைய மாம்சத்தில் இச்சை இருந்ததா? ஆம்! அப்படி இல்லையென்றால் அவர் நம்மைப்போல சோதிக்கப்பட்டிருக்க முடியாதே! நம்மைப்போலவே சோதிக்கப் பட்டிருக்கமாட்டார் என நீங்கள் கூறுவீர்களென்றால், அது "வேறொரு இயேசுவாகத்தான்" இருக்கமுடியும். வேதாகமத்தில் சொல்லப்பட்ட இயேசுவோ நம்மைப்போலவே சோதிக்கப்பட்டு, ஒரு பாவமும் செய்யாமல் தன் இருதயத்தைப் பிதாவின் சமூகத்தில் ௩௩ 1/2 ஆண்டுகள் தூய்மையாக காத்துக்கொண்டார். "ஆவியின் பெலத்தினாலே" தன் மாம்சத்தில் உள்ள இச்சையோடு கடுமையாய்ப் போராடி, பாவத்தின் மேல் பரிபூரண வெற்றியடைந்தார். இப்போது நம்மைப் பார்த்து "என்னைப் பின்பற்றுங்கள்" என அழைக்கிறார். இவ்வாறு நம்மைப் போன்ற மாம்சத்திலேயே கிறிஸ்து வெளிப்பட்டு, நாம் யாவரும் பின்பற்றும் வழியை நமக்காக உண்டு பண்ணினார்.

இந்த அற்புத சுவிஷேச சத்தியத்தை இன்னமும் உங்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லையா? சற்று கவனித்துக்கேளுங்கள், உங்களுக்கு நீச்சல் தெரியவில்லை என்றால், ஒரு தேவதூதன் நீந்தக் கற்றுத்தரமுடியுமா? அப்படியே ஒரு தேவதூதன் இறங்கி வந்து ஆற்றின் இரு புறமும் மேலும் கீழும் பறந்து சென்று "என்னைப் பின்பற்று!" என்று சொல்கிறான் என்று வைத்துக்கொள்வோம். நான் கண்டு அதிசயித்து, தேவதூதன் தண்ணீரில் முழ்கவில்லையே! என்று எண்ணி அவனைப் பின்பற்ற தண்ணீரில் இறங்கிய மறுநிமிடம் உடனே மூழ்க ஆரம்பிக்கிறேன். ஆ! தேவ தூதா! உன்னை நான் புகழமுடியுமே ஒழிய, பின்பற்ற முடியாது என்று கூறிமுடிக்கிறேன். ஏனெனில் தேவதூதர்களுக்குப் புவிஈர்ப்பின் இழுக்கும் சக்தியில்லை! அதே போல, இயேசுவும் ஒரு தேவதூதனைப்போல வந்து என்னைப் பின்பற்று என்று சொன்னாரானால் நான் சொல்லுவேன் "நீர் மாம்ச இச்சையின் ஈர்ப்பினால் இழுக்கப்படாமல் பாவத்தை மேற்கொள்ளலாம். ஏனெனில் நீர் தேவ தூதன்! அதில் ஒன்றும் அதிசயம் இல்லை. நாங்களோ மாம்சத்தின் ஈர்வைக்கும் இழுவைக்கும் ஆளாகிறோமே, எங்களால் உம்மைப் பின்பற்ற முடியாது" என சிறிதும் தயங்காமல் பதில் சொல்லிவிடுவேன்.

ஆனால், இப்போது இதே தேவ தூதன் என்னைப் போல், புவிஈர்ப்பின் தன்மை கொண்ட சரீரத்தில் வந்து, தண்ணீரில் நீந்திச் சென்று முன்செல்வானென்றால், நானும் இப்போது அதைப் போல கற்றுக் கொள்ளமுடியும். எனவேதான் வேதம் இயேசு "நம்மை போன்ற" சரீரத்தில் வநதார் என்று அழுத்தமாய்க் கூறுகிறது. நம்மைப்போல எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டு, பாவத்தை மேற்க்கொண்டார். எனவே தான் இந்த நல்ல இயேசு "என்னைப் பின்பற்று" என நம் யாவரையும் இப்போது அழைக்கிறார்! மேலும், "நீ நீரில் மூழ்கிப்போகாமல் இருக்க புவிஈர்ப்பு சக்தியின் மேல் உனக்கு வல்லமை தருகிறேன்" என்கிறார்.

மத்தேயு ௧௪- ம் அதிகாரத்தில், இயேசு கடலில் நடந்த அற்புதம் நமக்குத் தெரியும். இதைக்காட்டிலும் மேலான அற்புதம்! பேதுரு கடலில் நடந்தான்!! என்பதுதான்.

"ஆ, பேதுருவே, இயேசுவாகிய நான் புவிஈர்ப்பின் சக்தியை மேற்க்கொண்டு நடந்ததுபோலவே, நீயும் என்னை நம்புவாய் என்றால் உன்னாலும் நிச்சயமாய் நடக்கமுடியும்" என இயேசு நம்மை கூவி அழைக்கிறார்.இது தான் பாவத்தின் மேல் அடையும் பரிபூரன வெற்றியின் செய்தி. நம்மைப்போன்ற மாம்சத்தில் இயேசு வந்தால் ஒழிய, நம்மைப்போல சோதிக்கப்பட்டு, நமக்கு வெற்றி வாழ்வின் வழியை உண்டுப்பண்ணியிருக்க ஒருக்காலும் முடியாது! ஆம், இயேசு ஒவ்வொரு சோதனையிலும், இச்சையை இருதயத்திற்குள் பிரவேசிக்கவிடாமல், அப்பாவ இச்சைகளை மாம்சத்திலேயே சங்கரித்தார் (ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்). இதை மாபெறும் இரகசியமாகவே வேதம் விளம்புகிறது, "தேவ பக்திக்குறிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறப்படியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார்"(1 தீமோ. 3:௧௬)

என்ன விந்தை! நம்மைப்போல மாம்சத்தில் இயேசு வெளிப்பட்டாலும், ஆவியில் நீதியுள்ளவரென்று, பரிசுத்தம் உள்ளவரென்று விளங்கப்பட்டார். இதுதான் இயேசு நமக்கு உண்டாக்கின மேலானவழி! ரோமர் 8:3-ன் படி, அவர் பாவத்தை மாம்சத்திலேயே சங்கரித்தார். ஏனெனில் "நமக்குள்ளே"(இன்சிதெ ஒ உச்) நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார் (ரோமர் 8:4) இப்போது ரோமர் 8:௧௨ன் படி, "மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளில்லை." இனியும் என்னை மாம்சத்திற்கு ஒப்புக்கொடுத்து, வேசிதனத்தின் மூலமாய் பாவமாகிய பிள்ளைகளைப் பெற வேண்டியது அவசியமேயில்லை! அதற்கு மாறாக, ஆவியின் பிள்ளைகளாகிய(கனியாகிய)அன்பு, சந்தோஶம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம், போன்றவைகள் இனிமேல் என்னில் பிறக்கமுடியும்!

இன்று நீங்களும் நானும் விபசாரத்தில் பிடிப்பட்ட ஸ்திரீயைப்போலவே இருக்கிறோம். ஆம்! அநேகம் தடவை மாம்சத்தோடு விபசாரம் செய்து பிடிப்பட்டவர்கள். இயேசு நம்மைப் பார்த்துக் கேட்கிறார், "உன் விபசாரத்திற்க்காக உண்மையாய் மனம் வருந்துகிறாயா? அப்படியென்றால் நான் உன்னைக் குற்றம் சாட்டப்போவதில்லை. உன் கடந்தகால விபசார ஜீவியம் முழுவதையும் மன்னித்து, மறுபடியும் என் மணவாட்டியாய் மாற அழைக்கிறேன்" என்கிறார். 'ஆனால்' இயேசு அந்த ஸ்திரீயின் பாவத்தை மன்னித்தபிறகு என்ன சொன்னார்? "நீ போ, இனி பாவஞ்செய்யாதே" அல்லது "நீ போ, இனி உன் மாம்சத்தோடு விபச்சாரம் செய்யாதே" என்றார். ஆம், நீங்கள் பாவத்தின் மேல் பரிபூரண வெற்றி வாழ்க்கை வாழ்வதற்கென்றே இந்த நல்ல இயேசு நமக்கு பாவமன்னிப்பின் புண்ணியத்தை வழங்கியுள்ளார். இதற்கு மாறாக, பாவமன்னிப்பை நீங்கள் மிக எளிதாய் எடுப்பீர்களென்றால், வேசிகளுக்குத் தாயாகிய "பாபிலோனின்" கதியைத்தான் நிச்சயம் அடைவீர்கள். மாறாக, உள்ளத்தின் ஆழத்திலிருந்து கடுமையாய் துயருற்று மனந்திரும்புவீர்களென்றால், அவர் உங்களை மன்னித்து கிறிஸ்துவின் தூயமணவாட்டியாய் மாறும் சந்தர்ப்பத்தை மீண்டுமாய் அளிப்பார். மணவாளன் இன்னமும் வரவில்லை! என்ன அரிய சந்தர்ப்பம்!! இந்த எஞ்சியுள்ள சொற்ப நாட்களில், உங்களை மணவாளனுக்கு உண்மையுள்ள மணவாட்டியாய் நிரூபிக்க முடியும்! ஆம், பாவம் இருதயத்திற்குள் பிரவேசிக்கும் முன்பாகவே மாம்சத்தில் ஒவ்வொரு இச்சைகளையும் சங்கரிப்பேன், என்ற உறுதியான தீர்மானம் எடுங்கள்!

மாம்சம் எழுந்து வரும்போது, அதை வாசலண்டையிலேயே விரட்டியடிப்பேன்! இவ்வாறு தீர்மானம் செய்வோமென்றால், பரிசுத்தாவியானவர் நமக்கு உதவி செய்வார். நம்முடைய மாம்சத்தை விரட்டியடிக்க நம்மில் போதுமான பெலன் இல்லை. நல்ல செய்தி என்னவென்றால், நம்மை பெலப்படுத்தும்படி பரிசுத்தாவியானவர் வந்திருக்கிறார்! எனவே ஆவியில் எப்போதும் நிறைந்திருங்கள், அன்னிய பாஷைகளை மாத்திரம் பேசிவிட்டுப் போக அல்ல, மாம்சத்தை வாசலிலேயே விரட்டியடிக்க! கிறிஸ்துவுக்கென்று பரிசுத்தாவியின் ஒத்தாசையோடு கற்புள்ள மணவாட்டியாய் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

அன்பானவர்களே, இச்செய்தியின் கடைத்தொகையான எங்கள் மனபாரம் யாதெனில்: இயேசுகிறிஸ்துவின் நித்தியானந்த இச்சுவிசேஷத்தை... பாலும் தேனும் ஓடுகிற இவ் இன்பகானானின் சுவிசேஷத்தைக் "காதுள்ளோர் யாவரும்" கேட்கவேண்டும் என்பதே ஆகும்! ஆகிலும், மகிழ்வான உள்ளத்தோடு இச்சுவிசேஷத்தின்படி வாழ நீங்கள் விசுவாச அடியெடுத்துவைக்கும் இவ் வேளையில், ஆகாயத்துப் பறவையான சாத்தான் நீங்கள் பெற்ற 'விசுவாச விதையைப்' பட்சித்திட உங்களிடம் பறந்து வருவான்; "பாவத்தின் மீது வெற்றியா? அப்படியொரு வாழ்க்கையை நிச்சயம் ஒருவனாலும் வாழமுடியாது! உன்னாலும் முடியாது!!" என்பான். இவ்விதம் உங்கள் காதுகளில் தொனிக்கும் "அவிசுவாசத்தின்" குரல் சாத்தானின் குரலேயாகும். இக்குரலுக்கு நீங்கள் செவி கொடுத்துவிட்டால், அந்தோ! உங்கள் "விசுவாசவிதையை" அவன் பட்சித்துச் சென்றுவிடுவான்!! நீங்கள் இந்நாளில் பெற்ற விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!! விசுவாச வீறுகொண்டு சாத்தானைத் திரும்பிப்பார்த்து, "சாத்தானே! தேவன் என்னைப் பாவத்தின் மேல் பூரண வெற்றியான வாழ்விற்குள் நடத்தப்போகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன்!" என கூறுங்கள். இவ்வித விசுவாச அறிக்கையின் வார்த்தைகளால் அவனை விரட்டியடித்து ஜெயிக்கமுடியும் என வெளி. ௧௨:௧௧-ம் வசனம் நம்மை ஊக்குவிக்கிறது. வெற்றி உங்கள் வாழ்வில் நிஜமாய் வந்துவிடும்வரை, நீங்கள் வீழ்ச்சியடையும் நேரமெல்லாம் இந்த அறிக்கையை செய்து கொண்டேயிருங்கள். தேவன் உங்கள் வாயின் அறிக்கையை நிச்சயம் கனப்படுத்துவார்!!

ஜெயம்பெற்ற இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!
நாங்கள் ஜெயித்து வாழ்கிறோம்!
நீங்களும் ஜெயிப்பீர்கள்!!
இயேசுவின் புகழ் ஓங்குக!!