மார்க்க பக்திக்கும் ஆவிக்குரிய வாழ்விற்கும் வித்தியாசம் அறிந்திருக்க வேண்டும்!

Article Body: 

மார்க்க பக்திக்கும் ஆவிக்குரிய வாழ்விற்கும் வித்தியாசம் அறிந்திருக்க வேண்டும் !

பரிசுத்த வாழ்க்கையை நாடிப் பின்தொடரும் ஓர் கிறிஸ்தவனை சந்திக்கும் மிகப்பெரியதோர் அபாயம் யாதெனில், இவர்கள் நாளா வட்டத்தில் ஆவிக்குரியவர்களாய் (SPIRITUAL) வளர்ச்சியடைவதற்குப் பதிலாய் வெறும் மார்க்கபக்தியில் (RELIGIOUS) முடிவடைவதேயாகும். பகுத்து வேறுபிரிக்கத் தெரியாத அநேக விசுவாசிகள் மார்க்க பக்தியை ஆவிக்குரியதரமென்று தவறாய் எடுத்துக் கொள்கிறார்கள்! ஆனால் இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசமோ விண்ணிற்கும் மண்ணிற்கும் உள்ள வித்தியாசத்தைப்போலாகும். மார்க்கபக்தி மனுஷீகம்! ஆவிக்குரிய தன்மையோ தெய்வீகம்!! நியாயப்பிரமாணம் ஜனங்களை மார்க்க பக்தியுள்ளவர்களாய் மாற்ற முடிந்ததே அல்லாமல் அவர்களை ஆவிக்குரியவர்களாய் மாற்ற முடியவில்லை. மார்க்க பக்தி எல்லோரும் காணும்படியான வெளியரங்கமானவைகள்! ஆவிக்குரிய தன்மையோ பிரதானமாய் அந்தரங்கமான இருதயத்தைச் சார்ந்ததாகும்!!

கடைசி நாட்களில் அநேகர் தேவபக்தியின் வேஷத்தை அல்லது தோற்றத்தைத்தரித்து மெய்யான அதன் பெலனை மறுதலிப்பவர்களாய் இருப்பார்களென தேவனுடைய வார்த்தை நம்மை எச்சரிக்கிறது

(2 தீமோத்தேயு 3;5). அதாவது, இவர்கள் ஆவிக்குரியவர்களாய் இல்லாமல் மார்க்கபக்தி கொண்டிருப்பார்கள், இவர்கள் கூட்டங்களுக்கு ஒழுங்காகச் செல்வார்கள், அனுதினமும் வேதம் வாசித்து ஜெபிப்பார்கள், முழு இரவு உபவாச ஜெபத்தில்கூட பங்கு பெறுவார்கள், தங்கள் சம்பாத்தியத்தில் ஒழுங்காய் தசமபாகம் செலுத்துவார்கள். ஆனால் இவை அனைத்திலும் மனுஷரின் புகழ்ச்சியையே இன்னமும் தேடுவார்கள்; தங்களுக்காகவே ஜீவிப்பார்கள்; பணத்தை நேசிப்பார்கள்; பிறருடைய காரியங்களை தர்க்கித்து தீது பேச இன்னமும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். யார் இவர்கள்? மார்க்க பக்தியுள்ளவர்கள். ஆவிக்குரியவர்கள் அல்லவே அல்ல!! இவர்கள் இப்படியெல்லாம் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதற்குரிய பெலன் (ஜீவியம்) இல்லாமல் இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக கீழே தரப்பட்டுள்ள சில உதாரணங்களைப் பாருங்கள்:

1) நீங்கள் மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறையும் (கலாத்தியர் 5:24) ஆர்வத்தைக் காட்டிலும், கூட்டங்களுக்குச் செல்வதில் அதிக ஆர்வம் காட்டினால் - நீங்கள் ஓர் மார்க்கபக்தன்! ஆவிக்குரியவனல்ல.

2) நீங்கள் நாள் முழுவதும் உங்கள் நாவை அடக்கி வாழ்வதற்குரிய ஆர்வத்தைக்காட்டிலும், ஒங்வொரு நாள் காலையிலும் வேதபுத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு அடக்கமான தியான நேரத்தில் அதிக ஆர்வம் காட்டினால் - நீங்கள் ஓர் மார்க்கபக்தன்! ஆவிக்குரியவனல்ல.

3) நீங்கள்பணஆசையிலிருந்து விடுதலை பெறவேண்டுமே என்ற ஆர்வத்தைக்காட்டிலும், உபவாசித்து ஜெபிப்பதில் அதிக ஆர்வம் காட்டினால் - நீங்கள் ஓர் மார்க்கபக்தன்! ஆவிக்குரியவனல்ல.

4) நீங்கள் உங்கள் தனிப்பட்ட ஜீவியத்தில் பரிசுத்தமாகுதலின் ஆர்வத்தைக்காட்டிலும், சுவிசேஷ ஊழியத்தில் அதிக ஆர்வம் காட்டினால் - நீங்கள் ஓர் மார்க்கபக்தன்! ஆவிக்குரியவனல்ல.

மார்க்க பக்தர்களின் இதுபோன்ற எல்லாக் கிரியைகளும் நல்லவைகள்தான். ஆனால், எதற்கு முதல் முக்கியத்துவம் என்பதே இப்போது கேள்விக்குறியாக உள்ளது. சரியான முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டவனே ஆவிக்குரிய மனுஷனாய் ஓங்கி வளருவான்!

மார்க்க பக்தர்கள் எழுத்தின்படியான தேவவார்த்தைகளில் மாத்திரமே ஆர்வம் கொள்கிறபடியால் முடிவில் நியாயப்பிரமாணத்தின் நீதியை மட்டுமே தழுவிக்கொள்கிறார்கள். ஆவிக்குரியவர்களோ "மாம்சமாக மாறிய வார்த்தையில்" (நம்மைப் போன்ற இச்சைகளும் ஆசைகளும் கொண்ட மாம்சத்தில் வெளிப்பட்ட கிறிஸ்துவில்!) பிரதான ஆர்வம் கொண்டவர்ளாய் இருப்பதால், முடிவில் தேவனுடைய நீதியாகிய, திவ்விய சுபாவத்தைக் கண்டடைகிறார்கள்!!

மார்க்கபக்தர்கள் தங்களின் ஒவ்வொரு செயலுக்கும் யாராகிலும் சில உயர்ந்த தேவமனிதர்களின் வார்த்தைகளை "இன்னார் இவைகளை இப்படிச் சொல்லி இருக்கிறார்" எனக் குறிப்பிட்டு தங்கள்

செயலை நியாயப்படுத்த முயற்சிப்பார்கள். ஆவிக்குரியவர்களோ மனுஷர்களுக்கு முன்பாக தங்களை ஒருபோதும் நியாயப்படுத்த முயற்சிக்க மாட்டார்கள்!

மார்க்கபக்தர்கள் தேவனுடைய அபிப்பிராயத்தைவிட மனுஷர்களின் அபிப்பிராயத்தில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆவிக்குரியவர்களோ தேவனுடைய அபிப்பிராயத்தில் மாத்திரமே கவனம் கொண்டிருப்பார்கள். மார்க்கபக்தர்கள் யாரோ சில மூத்த சகோதரர்கள் அவர்களைப் புகழ்ந்து கூறிய வார்த்தைகளை பல ஆண்டுகள்கூட தங்கள் மனதில் வைத்து மகிழுவார்கள். ஆவிக்குரியவர்களோ இயேசுவைப்போலவே மனுஷருடைய சாட்சிகளை ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுவார்கள் (யோவான் 5:34).ஏனெனில், ஆவிக்குரியவர்கள் தங்களுக்குள் தாங்கள் காணும் அசுசிகளை மற்றவர்கள் காணவில்லை என்ற உண்மையை அறிந்திருக்கிறபடியால், மனுஷருடைய புகழ்ச்சி எல்லாம் ஒன்றிற்கும் உதவாது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார்கள்!

மார்க்கபக்தர்கள் ஓர் சட்டதிட்டத்தை உடையவர்களாய் நியாயப்பிரமாணத்திற்கு கட்டுப்பட்டு இருப்பார்கள். இவர்கள், தேவனைப் பிரியப்படுத்த குறைத்தபட்ச தேவை என்ன என்பதிலேயே சிந்தை கொண்டிருப்பார்கள். இதினிமித்தமே இவர்கள் தங்கள் சம்பாத்தியத்தில் சரியாய் 10% (தசமபாகம்) கணக்கிட்டு, அதை ரொம்பவும் அலட்சியமாய் தேவனுக்கு செலுத்துவார்கள். பழைய ஏற்பாட்டில் இவ்வித மனப்பாங்கைக் கொண்டிருந்த இஸ்ரவேலர்கள், முடிவில், தங்கள் காணிக்கைகளைக் கண் ஊனமானதும், கால் ஊனமானதும், நோய் பிடித்ததுமான காளைகளைக் கர்த்தருக்குக் கொடுத்து பலி செலுத்தும் நிலைக்கு வந்துவிட்டார்கள்!! (மல்கியா 1:8). இன்றும், இதே மனப்பாங்கை புதிய ஏற்பாட்டின் கற்பனைகளிலும் ஒருவன் கொண்டிருக்க முடியும். புதிய ஏற்பாட்டுக் கட்டளை, மனைவிகள் தங்கள் புருஷருக்கு அடங்கியிருக்க வேண்டுமென கூறுகிறபடியால், ஒரு சகோதரி எழுதப்பட்ட வார்த்தைக்கு "குறைந்த பட்சம்" எவ்வளவு கீழ்ப்படியலாம் என எண்ணிட முடியும். இப்படிப்பட்டவள் 'வார்த்தைக்குக்' கீழ்ப்படிய வேண்டுமே என்பதற்காகத் தன் தலைமுடியின் வசீகரம் முழுவதுமாய் மூடப்படாமல் "குறைந்தபட்சம்" எவ்வளவு மூடலாம் என்றே சிந்தித்துக் கொண்டிருப்பாள்! புருஷர்களும், ஸ்திரீகளும் தங்களுக்குரிய எல்லாவற்றையும் வெறுத்து விடாமலே, ஆவிக்குரியவர்களாய் மாறுவதற்கு, "குறைந்த பட்சம்" தேவை என்னவென்றும் சிந்திக்கக்கூடும்!

"இப்படி புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்டிருக்கிறதா? சரி, இருக்கட்டும் இப்போது இவ்வுலகத்திற்குரியவைகளில் குறைந்த பட்சம் எவைகளை நான் வெறுத்துவிடலாம்?" என்பதே இதுபோன்ற லட்சணத்தில் வாழும் ஜனங்களின் தொடர்ச்சியான கேள்வியாய் இருக்கிறது. இவர்களெல்லாம் ஒருக்காலும் ஆவிக்குரியவர்களாய் மாறிடவே முடியாது! இவர்களுக்கு எஞ்சி நிற்கும் பட்டம் "மார்க்க பக்தன்!" என்பதேயாகும்.

ஆனால்,இயேசு கிறிஸ்துவின் சிந்தையோ முற்றிலும் வேறுபட்டதாய் இருந்தது! தன் பிதாவைப் பிரியப்படுத்துவற்கு குறைந்த பட்சம் எது தேவை என்பதை கண்டுபிடிப்பதில் அவர் அக்கறை காட்டவேயில்லை. மாறாக, தன் பிதாவுக்குத் தன் எல்லாவற்றையும் அற்பணிக்கும்படியாக "எது அதிக பட்சம்?" என்பதைக் கண்டு பிடிப்பதிலேயே அதிக அக்கறையும் ஆர்வமும் காட்டினார். இதனிமித்தமே, அவர் சிறுவனாய் இருந்து நியாயப்பிரமாணத்தைக் கற்றபோதெல்லாம் அப்பிரமாணங்களுக்குப் பின்பாக மறைந்திருந்த ஆவியை அல்லது உள்ளான நோக்கத்தைக் கண்டுபிடிக்க தீவிரம் கொண்டிருந்தார்...அதைக் கண்டுபிடித்தும் விட்டார்! உதாரணமாக, நியாயப்பிரமாணத்தின் குறைந்தபட்ச தேவையான "சரீரத்தில் விபசாரம்" செய்யாதிருந்தால் மாத்திரம் போதாது என்பதைக் கண்டார். இந்த நியாயப்பிரமாணத்தைத் தன் பிதாவுக்கு முன்பாக வைத்து ஆழ்ந்து தியானித்தார். இவ்வாறு ஏசாயா 53:11 கூறுகிறபடி, அவர் தன் ஆத்துமாவில் மிகுந்த பிரயாசம் கொண்டு தேவனைத் தேடியபடியால் முடிவில் பரத்தின் வெளிச்சத்தைக் (பலனை) கண்டார் (NASB - ஆங்கில வேதாகமம்). ஆம், அந்த நியாயப்பிரமாணத்திற்குப் பின்பாக மறைந்திருந்த ஆவி அல்லது நோக்கமெல்லாம் ஒருவன் தன் இருதயத்தில் கூட இச்சிக்கவும் கூடாது என்ற வெளிச்சத்தை அல்லது சத்தியத்தை முடிவில் கண்டுபிடித்துவிட்டார்!! இவ்வாறாகவே நியாயப்பிரமாணத்தின் ஒவ்வொரு கற்பனைகளுக்குப் பின்பாகவும் மறைந்திருந்த ஆவியை அவர் கண்டுபிடித்தார்!! ஆம், இவ்விதமாகவே அவர் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தி, "மாம்சத்தின் வழியாய்ப் பிரவேசிக்கும் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை" நமக்கென திறந்து வைத்தார்!!

தன் மணவாளனை மிகவும் பிரியமாய் நேசிக்கும் ஓர் மணவாட்டி, தன் மணவாளனை மகிழச்செய்வதற்கு குறைந்தபட்சம் தான் என்னசெய்யமுடியும் என ஒருபோதும் சிந்திக்கமாட்டாள். அதற்குமாறாக, தன் மணவாளனை மகிழச்செய்ய தன்னால் அதிகபட்சம் என்ன செய்ய முடியுமென்றே சிந்திப்பாள்!! கிறிஸ்துவின் மணவாட்டியின் மனோபாவமும் இதேபோல்தான் இருக்கும். இங்குதான் ஒரு வேலைக்காரனுக்கும், ஒரு மணவாட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் காண்கிறோம். சம்பளத்திற்காக வேலை செய்யும் வேலைக்காரன் தன் உழைப்பைக் கவனமாய் தன் கடிகாரத்தைப் பார்த்து கணக்கிடுவான். அதிக நேரம் வேலை செய்துவிட்டால், 'ஓவர்டைம்' கணக்குப் பார்த்து கூடுதலான சம்பளத்தை எதிர்பார்ப்பான். இதற்கு மாறாக ஓர் மகன் அல்லது ஓர் மனைவி எத்தனை மணி நேரமானாலும் வேலை செய்வார்கள். சம்பளத்தை எதிர்பார்த்து அல்ல, மிகுந்த அன்பினாலேயே அப்படிச்செய்வார்கள். மார்க்க பக்தனுக்கும் ஆவிக்குரியவனுக்கும் இடையில் காணும் வித்தியாசம் இதுவே ஆகும்!

"நான் கர்த்தரிடத்திலிருந்து எதைப் பெற்றுக்கொள்ளலாம்?" என சிந்திக்கும் மனோபாவம் ஒருவனை மார்க்க பக்திக்கே நடத்த முடியும். இதற்கு மாறாக, "நான் பெற்றிருக்கும் இந்த ஒரே ஒரு பூமிக்குரிய வாழ்க்கையில் கர்த்தர் என்னிடமிருந்து எவைகளை எல்லாம் பெற்றுக்கொள்ள முடியும்?" என சிந்திக்கும் மனோபாவமே ஒருவனை உண்மையான ஆவிக்குரிய தன்மைக்கு நடத்திச் செல்ல முடியும் !

இவ்வித ஆவிக்குரிய நிலையில் வாழ்பவன் மாத்திரமே, குறைந்த பட்சம் தேவையான ஒரு மைல் போவதைவிட "தானாகவே மனமுவந்து" இரண்டு மைல் செல்வான்!

தேவன் முதலாவது நியாயப்பிரமாணத்தைக் கொடுத்ததின் நோக்கம் என்னவென்றால், மனுஷர் புகழ்ச்சியை சம்பாதித்து தரும் நியாயப்பிரமாணத்தின் வெளியரங்கமான நீதியில் ஒருவன் திருப்தி கொண்டிருக்கிறானா அல்லது இன்னும் அதிகமாய் தேவனைத் தேடுகிறானா எனக் காணும்பொருட்டே ஆகும்! ஆனால், இன்று எண்ணற்ற விசுவாசிகள், "வெளியரங்கமான நீதியாகிய" தங்களை மூடியிருக்கும் அத்தி இலைகளில் திருப்தியாய் இருக்கிறார்கள். இவர்கள் யாவரும் மார்க்க பக்தர்கள்! வெறும் மார்க்க பக்தியை வெறுத்த இயேசுவோ, ஒரு சமயம் தன்னை அத்தி இலைகளால் நிறைத்திருந்த அத்தி மரத்தை சபித்தார் என மாற்கு 11:13,14,21 வசனங்களில் வாசிக்கிறோம். சுவிசேஷமோ, நாம் இரட்சிக்கப்படும்படி தேவ பெலனாய் இருக்கிறது. இந்த நற்சுவிசேஷமே, வெற்று இலைகளை சபித்து அவைகளை உதிரப் பண்ணி, தேவன் மனுஷனுக்கு கொடுக்க விரும்பும் உண்மையான பரிசுத்தமாகுதலின் ஜீவியத்தை நமக்கு வழங்குகிறது!!

ஆனால், இந்த சுவிசேஷம் மெய்யாகவே நமக்குப் பலன்தரவேண்டுமென்றால், நாம் முதலாவது ஆணித்தரமாய் மனந்திரும்ப வேண்டியதே அவசியமாயிருக்கிறது. 'ஆணித்தரம்' (RADICAL) என்ற வார்த்தை, மரத்தின்ஆணிவேரிலிருந்து (RADICAL ROOT) தோன்றிய வார்த்தையாகும். இவ்விதமே, நம்முடைய மனந்திரும்புதல் நம் இருதயமாகிய ஆணிவேரின் ஆழத்திலிருந்து தோன்றுவதாய் இருக்க வேண்டும். ஆழமாய் மனந்திரும்புதலின் பொருள் இதுவே ஆகும். இயேசுகிறிஸ்துவுக்கு முன்னோடியாக மனந்திரும்புதலின் செய்தியைக் கொண்டுவந்த யோவான்ஸ்நானகன் கூறும்போது "இயேசு கோடாரியை மரத்தின் வேர் அருகில் வைத்திருக்கிறார்" என்றே கூறினார். ஆம், ஒவ்வொரு பாவமும் இருதயமாகிய வேரிலிருந்தே தோன்றுகிறது. 'மரத்தின்மேல் வெளியரங்கமாகும் கனியாகிய பாவத்திற்காக மாத்திரம் மனந்திரும்புவோம் என்றால் நாம் இன்னமும் ஆணித்தரமாய் மனந்திரும்பக் கற்றுக் கொள்ளவில்லை! உதாரணமாய், புறங்கூறுதல் என்ற பாவம், ஒரு சகோதரர் மீது உருவாகும் தவறான அபிப்பிராயம் என்ற வேரிலிருந்து தோன்றியதே ஆகும். ஆணித்தரமான மனந்திரும்புதல் இந்த தவறான அபிப்பிராயத்தின்மீது ஆழமாய்க் கிரியை செய்வதாய் இருக்குமே அல்லாமல் புறங்கூறுதல் என்ற கனியாகிய செயலின்மீது மாத்திரம் கிரியை செய்வதாய் இருக்காது! நாம் வெளியே உள்ள செய்கைகளை மாத்திரம் மாற்றுபவர்களாய் இருந்தால், அது மரத்தின் மேலே தோன்றிய பழங்களை கத்தரிக்கோலினால் வெட்டியதற்கு ஒப்பாகவே இருக்கும். ஆனால், இயேசுவோ 'கத்தரிக்கோலோடு' வராமல் வேரை வெட்டும்படி 'கோடாரியோடு' வந்தார் என்றே சுவிசேஷம் நமக்கு அறிவிக்கின்றது.

எனவே, உண்மையான ஆவிக்குரிய மனுஷன் ஜனங்களின் நல் அபிப்பிரயாயத்திற்காக மேலே தோன்றும் கெட்டப்பழங்களை பிடுங்குவதில் திருப்திகொள்ளாமல், தேவனுடைய வெளிச்சத்தில் தனக்குள்ளிருக்கும் பாவத்தின் வேரை ஆணித்தரமாய் நியாயந்தீர்க்கக்கூடியவனாய் இருப்பான்!

மார்க்க பக்தியின் ஜனங்கள் மிக எளிதில் வஞ்சிக்கப்படுவார்கள். ஒரு கணவன் தன் மனைவியின்மீது தீமையான மனோபாவத்தை உடையவனாய் சுமார் 6 மாதங்கள் கூட இருக்கமுடியும்! இந்த 6 மாத காலமும் தன்னை அடக்கிக்கொண்டு மனைவியை பாதிக்கும்படியான ஒரு வார்த்தை கூட பேசாமலே இருக்கமுடியும்!! ஆனால், நீண்டகால இவனுடைய 'சுய கட்டுப்பாடு' ஒருநாளில் பயங்கர கோபமாய்

கொப்பளித்து வெடித்துவிடும்! இவ்வளவு பரிதாபமான தன்னுடைய நிலையில், தான் 6 மாதங்கள் ஜெயவாழ்க்கை வாழ்ந்ததாகவும், கோபமடைந்த இக்குறிப்பிட்ட தருணத்தில் மட்டுமே தான் பாவத்தில் விழுந்ததாகவும் தன்னைக்குறித்து எண்ணிக்கொள்வான் என்றால், துளியும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இவன் தன்னைத்தானே வஞ்சித்துக்கொண்டவனாய் இருப்பான்! உண்மையில் இவன் செய்ததெல்லாம் பயங்கர வெடிகுண்டுகளான 'டைனமைட் குச்சிகளை' 6 மாத காலமாக ஒவ்வொன்றாய் சேர்த்து குவித்துக் கொண்டிருந்தான்! இவ்வாறு சேர்த்து முடித்த கடைசி நேரத்தில் ஒரு சிறிய தீக்குச்சி அவ்விடத்தில் கொளுத்தப்பட்டதும், குவிக்கப்பட்டிருந்த அத்தனை டைனமைட் குச்சிகளும் பயங்கரமாய் வெடித்துவிட்டது!! காலமெல்லாம் இவர் பாவத்தில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால், அவைகளோ நீண்டகாலமாக வெளியே தோன்றவில்லை, அவ்வளவுதான்! எனவே இப்போது பயங்கரவெடி விபத்திற்குக் காரணம் தீக்குச்சி அல்ல, மாறாக, இவர் 6 மாதங்களாய் சேர்த்துக் குவித்த டைனமைட் - குச்சிகளேயாகும்!!

காரியம் இல்வாறு இருப்பதால் நாம் பிறர்மீது கொண்டுள்ள மனோபாவத்தில் நம்மை "தேவனுடைய அன்பிலே" காத்துக்கொள்வதற்குரிய யுத்தத்தை நாம் செய்யாவிட்டால் (யூதா 21), நாம் என்னதான் ஓர் மார்க்கபக்தனாய் இருந்து ஓர் வெளியரங்கமான நல்ல சாட்சியைப்பெற்றிருந்தாலும், இன்னமும் பாவம் செய்கிறவர்களாய்த்தான் இருப்போம்! இன்று அநேக விசுவாசிகளிடம், ஆவிக்குரிய நிலையைப் பகுத்தறியும் திறன் காணப்படாதபடியால், 6 மாதம் சுயக்கட்டுப்பாடோடு டைனமைட்-குச்சிகளை சேர்த்துக் குவித்தவனை, ஆவிக்குரியவன் என தவறாக எண்ணிக்கொள்கிறார்கள்.

நாம் பாவத்தை "பாவமாக" கருதாவிட்டால் ஆணித்தரமான மனந்திரும்புதல் நம்மில் ஒருக்காலும் ஏற்படாது. மார்க்க பக்தியிலிருந்தும் விடுதலையாக முடியாது! இயேசு கற்பித்தபடி கோபத்தை அதற்குரிய உண்மையான பெயராகிய "கொலை" என்றே நாம் அழைக்க வேண்டும் (மத்தேயு 5:21;22). இவ்விதமே ஒவ்வொரு பாவத்தையும் புதிய உடன்படிக்கையின் வெளிச்சத்தில் காணத் தவறுவீர்களென்றால், நீங்கள் உங்கள் வாழ்நாளெல்லாம் மார்க்க பக்தியின் போர்வைக்குள் தான் சிக்கியிருப்பீர்கள்! ஆம், நீங்கள் ஒருக்காலும் உண்மையான ஆவிக்குரிய நிலையை அடைய மாட்டீர்கள்!! ஓர் மார்க்க பக்தன் வெளியரங்கமான தன் நீதியில் மிகமிக துல்லியமாக நடந்து கொள்ள முடியும். பரிசேயர்கள் சீரகத்திலும், ஒருத்தலாமிலும், வெந்தயத்திலும் கூட சரியாகத் தசமபாகம் (10%) செலுத்தினார்கள். இவ்வாறாக, வெளியரங்கமான நீதியில் இவர்கள் 1 மில்லி மீட்டர்கூட விலகாதிருந்தார்கள்! இருப்பினும், இவர்களோ அன்பிலிருந்தும், இரக்கத்திலிருந்தும், நற்குணத்திலிருந்தும் பல மைல்கள் தூர விலகிச் சென்றுவிட்டார்கள்!! இந்த அபாயம் நீதியின் வாழ்க்கையை வாஞ்சித்துப் பின் தொடரும் நம் யாவருக்குமே உள்ளது. 100% வெளியரங்கமான நீதியில் வாழ்ந்துவிட்டு, அன்பின் பாதையிலிருந்து 100% விலகிச் செல்லும்

அபாயம்! புதிய உடன்படிக்கையின் நீதியின் பாதை, அன்பின் பாதையே ஆகும். நாமோ, இந்த அன்பின் பாதையைவிட்டு 1 மில்லி மீட்டர்கூட விலகிவிடாமல் இருப்பதற்கே மிகுந்த கவனம் கொண்டிருக்க வேண்டும். ஆம், இதுவே உண்மையான ஆவிக்குரிய நிலைக்கு வழியாகும்!

பாவ உலக வாழ்வினிமித்தம் நரகத்திற்குச் செல்பவர்களைக் காட்டிலும், மாயமான மார்க்க பக்தியின் நிமித்தம் (பரிசேயர்களைப் போல) நரகத்திற்குச் செல்லும் ஜனங்களே அதிகமாய் இருக்கிறார்கள்.

இதனிமித்தமே மார்க்க பக்திக்கும் ஆவிக்குரிய நிலைக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்பதற்கு நாம் மிகவும் ஜாக்கிரதை கொண்டிருக்க வேண்டும்! நம்முடைய வெளியரங்கமான கிரியைகள் நல்லதாக இருந்தாலும், அவைகள் கர்த்தரைப்பற்றிய ஊக்கமான அன்பினால் தூண்டப்பட்டதாய் இராவிட்டால், அக்கிரியைகள் யாவும் வெளிவேஷமேயுகும்! இக்கிரியைகளே "செத்த கிரியைகள்" என்றும், இவ்வித செத்தகிரியைகளை விட்டு நாம் மனந்திரும்ப வேண்டுமென்றும் தேவனுடைய வார்த்தை நமக்குப் போதிக்கின்றது (எபிரெயர் 6:1)

யூதா தன் நிருபத்தில், ஆவிக்குரியவர்களாய் இல்லாமல் மார்க்க பக்தி கொண்டவர்களாய் இருந்த மூவரை குறிப்பிட்டு எழுதுகிறார்: காயீன், பிலேயாம், கோரா ஆகிய இந்த மூன்று பேரையும் வேதத்தின் வெளிச்சத்தில் காண்பது நமக்கு மிகவும் அவசியமாகும் (யூதா 11)

1) காயீன் : இவன் ஓர் தேவனற்ற மனிதன் எனக் கூறிவிட முடியாது. இவன் ஆழமாய் மார்க்க பக்தி கொண்டவனும், தேவனுக்கு பலியை காணிக்கையாகச் செலுத்துவதில் நம்பிக்கை கொண்டவனும் ஆவான் (ஆதியாகமம் 4:3). ஆபேலும் தேவனுக்குப் பலி செலுத்தினான். ஆனால், இந்த இருவருடைய பலிகளுக்கிடையில் காணும் வித்தியாசம் வானத்திற்கும்பூமிக்கும் உள்ள வித்தியாசமாகவும், மார்க்க பக்திக்கும், ஆவிக்குரிய தன்மைக்கும் உள்ள வித்தியாசமாகவும் காணப்படுகின்றது!தேவனுக்கென்று வெளியரங்கமான பலியாக தங்கள் நேரத்தையும், பணத்தையும், சேவையையும் தரும் ஜனங்களுக்கு ஒப்பாகவே இந்த காயீன் காணப்படுகின்றான். ஆனால் ஆபேலோ ஒரு ஆட்டுக்

குட்டியை கொன்று பலிபீடத்தில் வைத்த செயல், அவன் தன்னையே முழுவதுமாய் தேவனுக்குத் தந்துவிட்டதை நமக்கு உணர்த்துவதாய் இருக்கிறது. மார்க்க பக்திகொண்ட ஜனங்களும், இதேபோலவே காணிக்கை கொடுக்கிறார்கள், ஜெபிக்கிறார்கள் இன்னும் பல நற்கிரியைகளை செய்கிறார்கள்! ஆனால், இவர்கள் தங்களையே முழுவதுமாய் தேவனுக்கு அர்ப்பணிக்கும் செயலை இன்னதென்று அறியமுடியாதவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் தசமபாகங்களை ஒழுங்காக கொடுக்கிறார்கள். ஆனால், சோதனையின் வேளையிலோ இவர்கள் தங்கள் சுயத்தை மரணத்திற்கு ஒப்புக் கொடுப்பதில்லை! இதுவே பழைய - புதிய உடன்படிக்கைகளின் இடையே காணும் முக்கிய வித்தியாசமாயிருக்கிறது! உங்கள் சுயத்திற்கு நீங்கள் மரிக்காமலே பழைய உடன் படிக்கைக்குள் பிரவேசித்து விடலாம். ஆனால் உங்கள் சுயத்திற்கு நீங்கள் மரிக்காமலே புதிய உடன்படிக்கைக்குள் பிரவேசிப்பது ஒருக்காலும் சாத்தியமாகாது!! இயேசு தனக்குண்டானவைகளில் தசமபாகங்களைச் செலுத்துவதற்காக வராமல், தேவனுக்கு உகந்ததும் பிரியமுமான பலியாய் இருக்கும் பொருட்டு தன்னைத்தானே முழுவதும் தந்துவிடுவதற்கே வந்தார்!

காயீன் சென்ற வழி ஓர் விசாலமான மார்க்கபக்தியின் வழியாகும். ஆபேல் சென்ற வழியோ தேவனை கண்டடைவதற்கு வழிநடத்தும் 'குறுகலான' உண்மையான ஆவிக்குரிய வழியாகும். சுயத்திற்கு மரிக்காமல் நீங்கள் ஓர் வேலைக்காரனாக இருக்கலாம். ஆனால், நீங்கள் சுயத்திற்கு மரிக்காமல் ஓர் குமாரனாய் இருக்கலாம் என்பது ஒருக்காலும் முடியாது!

ஆபேலின் பலிக்குப் பதிலளிக்கும் விதமாய் தேவன் வானத்திலிருந்து அக்கினியை அனுப்பினார் ஆனால், காயீன் காணிக்கையின் மீதோ பரத்திலிருந்து அக்கினி வந்திறங்கவில்லை! ஒரு மனிதன் நாள் தோறும் தன்னுடைய சுயத்திற்கு தொடர்ச்சியாய் மரிப்பானென்றால், பரத்திலிருந்து, அவனுடைய ஜீவியத்தின் மீதும் அவனுடைய ஊழியத்தின்மீதும் அக்கினி இறங்கிய வண்ணமாய் இருந்து கொண்டேயிருக்கும்!!

2) பிலேயாம் : இவனும் மார்க்க பக்தி கொண்டவனே ஆவான். இந்த பிலேயாம் தேவனுக்கு ஊழியம் செய்ய விரும்பிய ஓர் பிரசங்கியாய் இருந்தான். அதேசமயம் இவ்வுலகத்தில் அந்தஸ்து உள்ளவர்களை சந்திப்பதற்கும் பணத்தை சேர்ப்பதற்கும் பேராவல் கொண்டிருந்தான்! (எண்ணாகமம் 22) இவ்வாறு கர்த்தருடைய நாமத்தைக்கொண்டே தனக்கென்று புகழையும், பொருளாதார ஆதாயத்தையும் தேடினான்! இன்றும் இந்த "பிலேயாமிற்கு ஒப்பாக" ஏராளம் ஏராளமாய் கள்ளத் தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். இருப்பினும், இவர்கள் பிரசங்கித்திடும் உபதேசமோ எழுத்துப்பூர்வமாய் மிகவும் சரியாகவே இருக்கின்றது! எனவே தான், பகுத்து-வேறு பிரிக்கத் தெரியாத விசுவாசிகள் இவர்களின் உபதேசங்களுக்குப் பின்னால் மறைந்துள்ள "பணத்தையும் புகழையும் நேசிக்கும் பிலேயாமின் ஆவியைக்" கண்டுபிடிக்கத் தவறிவிடுகிறார்கள். இப்பிலேயாமின் ஆவியைக் கொண்டவர்களே "தனக்கானதைத் தேடுகிறவர்கள்!" என பவுல் பிலிப்பியர் 2:21-ம் வசனத்தில் திட்டமாய் கூறினார்.

3) கோரா : மார்க்க பக்தியாளனாகிய இந்த கோரா, ஆசாரிய குடும்பத்தைச் தார்ந்த லேவி கோத்திரத்தானாவான் (எண்ணாகமம் 16). ஆனால் இவனோ கர்த்தர் தனக்கென்று தந்திருந்த ஊழியத்தில் திருப்தியற்றவனாய் இருந்தான். இவன் மோசேயைப்போலவே தானும் பிரபல்யமாய் இருக்கவேண்டும் என விரும்பினான். மார்க்க பக்தியின் போர்வையோடு வந்த 'இந்த பொருளாசையே' (தேவனைப் பொறுத்த மட்டில் புகழ் தேடுவதும், பணம் தேடுவதும் ஒன்றுதான்!) முடிவில் அவனுக்கு அழிவைக் கொண்டு வந்தது. தன் ஜனத்திற்கு மேலாக தேவனே நியமித்த ஆளுகைக்கு விரோதமான முரட்டாட்டத்தின் பாவத்தில் ஈடுபட்டவர்களின் மீது தேவன் கடுமையாக நடவடிக்கை எடுத்தார்! ஆம்,"உயிரோடு இருக்கும்போதே நரகத்திற்குச் சென்றார்கள்!" என்ற குறிப்பு இவர்களைக் குறித்து எழுதப்பட்ட இந்த ஒரு இடத்திலேயே வேதாகமம் சுட்டிக்காட்டுகிறது. கோராவும் அவனோடு சேர்ந்து கிளர்ச்சி செய்த தாத்தான், அபிராம் ஆகிய மூவரும் இவர்களின் குடும்பங்களும் உயிரோடு நரகத்திற்குச் சென்றார்கள்!!

இன்று ஏராளமான பேர்கள் மூப்பர்கள், பிரசங்கிகள், 'பாஸ்டர்கள்' ஊழியத்திற்கென்று தாங்களாகவே தங்களை 'சுய-நியமனம்' செய்துகொண்டவர்களாய் இருக்கிறார்கள். இதுபோன்றவர்களுக்கு எதிராய் கிளர்ச்சி செய்வதொன்றும் அபாயமில்லை! சிலசமயங்களில் அது தேவையாகவும் இருக்கிறது! ஆனால் தேவனால் நியமிக்கப்பட்ட ஒருவருக்கு எதிராய் கிளர்ச்சியுற்று முரட்டாட்டம் செய்பவர்களின்மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பு மிகவும் கடுமையாகவே வரும்! ஒரு ஆவிக்குரிய மனிதன் இதுபோன்ற செயலை (ஆளுகைக்கு முரட்டாட்டம் செய்திடும் செயலை) தன் கனவில்கூட ஒருபோதும் எண்ணமாட்டான்!! ஆனால், இக்கொடிய செயலை மார்க்க பக்தர்கள் செய்வார்கள்! ஆம், மார்க்க பக்தி தன்னகத்தே இவ்வளவாய் ஆவிக்குரிய மதியீனம் கொண்டதாய் இருக்கிறது!!

இன்று சபையில் ஒருவருக்கொருவர் அவலட்சணமாகப் போட்டியிட்டுக் கொள்பவர்கள், இந்த கோராவையே சித்தரிக்கிறார்கள்! தெய்வபயம் நிறைந்த ஓர் சகோதரனை மெச்சிக்கொள்வதற்கு உங்களுக்கு கஷ்டமாயிருந்தால், அதுவே உங்களிடம் கோராவின் ஆவிக்குரிய தீமை 'ஏதோ கொஞ்சம் இருக்கிறது' என்பதற்குரிய அடையாளமாகும். நாளாவட்டத்தில், நீங்கள் அச்சகோதரனை "குறைகூறத்" துவங்கிவிட்டால், உங்களிடம் கோராவின் ஆவி முழுவதுமாய் வந்துவிட்டது என்பதில் சந்தேகமே இல்லை! அல்லது அச்சகோதரனைப்பற்றிய குறைகூறுதலை மனம்விரும்பி காது கொடுத்து கேட்டுக் கொண்டிருப்பவர்களாய் இருந்தாலும் கோராவோடு சேர்ந்து முரட்டாட்டம் செய்வதற்காக கூடியிருந்த 250 பேர்களில் ஒருவராகவே நீங்களும் கருதப்படுவீர்கள்! ஆம், இவர்களும் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு தப்பமுடியவில்லையே!!

மார்க்கபக்திக்கும், ஆவிக்குரிய ஜீவியத்திற்கும் இடையில்காணும் வித்தியாசத்தை நீங்கள் பகுத்தறியாவிட்டால், நீங்கள் ஒருக்காலும் ஆவிக்குரியவர்களாய் வளர்ந்திடவே முடியாது. குறிப்பாக கடைசி நாட்களைக் குறிப்பிட்டே, "அநேகர் தேவபக்தியின் வேஷத்தை தரித்து அதன் பெலனை மறுதலிப்பார்கள்" என எழுதப்பட்டுள்ளது. ஆம், சிலுவையின் வழியே அல்லது சிலுவையின் உபதேசமே அந்த தேவ பெலனாய் இருக்கிறது. அது மாத்திரம் அல்லாமல், ஆவியானவர் நமக்கு வெளிப்படையாய் சொல்லி எச்சரிப்பது யாதெனில், அநேகர் தேவபக்தியின் இரகசியமான, "கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டு ஆவியில் நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார்" என்ற சத்தியத்திலிருந்து விலகி, மார்க்க பக்திக்குரிய விவாகம் பண்ணாதிருப்பது, சில போஜனப் பதார்த்தங்களை விலக்குவது போன்றவைகளின் மூலமாய் தேவபக்தியை வெளியரங்கமான கிரியையில் தேடுவார்கள் என்ற எச்சரிப்பேயாகும். இவ்வாறு வசனத்தில் சொல்லப்பட்டவைகளைக் காட்டிலும் இன்னமும் அதிகமாய் மார்க்க பக்திக்குரிய காரியங்களை இன்றைய கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்! பொது இடங்களில் பாவத்தை அறிக்கை செய்வது (தாழ்மையாய் இருப்பதற்கு!), நோயுற்றிருந்தால் மருந்து எடுக்காமல் இருப்பது (விசுவாசத்தில் வளர்வதற்கு!), போன்ற அநேக உபாயங்களைப் போதிக்கிறார்கள்! இவை யாவும் நம்மை மெய்யான தேவபக்தியிலிருந்து வழிதவறச் செய்யும் பிசாசுகளின் உபதேசங்களே ஆகும்!! (1 தீமோத்தேயு 3:16; 4:5)

உண்மையான ஆவிக்குரிய ஜீவியத்திற்கு ஒரே வழி, நாம் இயேசு செய்ததுபோலவே அனுதினமும் நம்மை நாமே மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பதே ஆகும் (ரோமர் 8:36; 2 கொரிந்தியர் 4:10-12). இதைத் தவிர வேறெந்த வழியும் போலியானதே ஆகும்!

கேட்பதற்குக் காதுள்ளவன் எவனோ அவன் கேட்கக்கடவன்!!