ஆதியாகமம் 4 -ஆம் அதிகாரம் ஆதாமின் பிள்ளைகளாகிய காயீன், சேத் ஆகிய இருவருக்கும் ஏவாள் பெயரிட்டதை முக்கியப்படுத்தி கூறுகிறது. தனக்கு முதற்பேறாய் பிறந்த மகனுக்கு காயீன் என்று பெயரிட்டாள். காயீன் என்பதற்கு "நான்தான் உருவாக்கினேன்" என்றே அர்த்தமாகும்.
இவ்வாறு, தான் ஒரு மகனைப் பெற்றெடுத்ததை ஏதோ மாபெரும் சாதனை புரிந்ததாகவே ஏவாள் எண்ணிக்கொண்டாள். இந்த மகனை நான் உருவாக்கிட "கர்த்தரும் எனக்கு உதவி செய்தார்" என கர்த்தருக்கும் ஓரளவு பங்கு இருந்ததென்பதை அவள் கூறத்தான் செய்தாள். ஏவாள் கர்ப்பத்தில் ஓர் பிள்ளையை உருவாக்கிய நிகழ்ச்சி அந்நாட்களில் ஓர் அபூர்வ செயலேயாகும். ஏனெனில், அன்றுவரை தேவனால், சிருஷ்டிக்கப்பட்ட ஒரே ஆண்மகன் ஆதாம் மாத்திரமேயாகும். ஆனால், இப்போதோ மற்றொரு மனுஷனை ஏவாள் உருவாக்கிவிட்டாள்! இவ்வையகத்தில் பிறந்த முதல் குழந்தையாய் காயீன் இருந்ததினிமித்தம், தேவனைப்போலவே தானும் ஒரு மனுஷனை சிருஷ்டித்ததாக ஏவாள் கருதிவிட்டாள்!!
தன்னிடம் கொண்டிருந்த இந்த பெருமையின் ஆவியைத்தான் ஏவாள் தன் முதற்பேறான குமாரனாகிய காயீனுக்கும் கொடுத்துவிட்டாள்! ஏவாளைப்போலவே, நம்முடைய ஆவியையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும், குறிப்பாக நம் சொந்தக் குடும்பத்தாருக்கும் நாம் பரவச்செய்கிறோம் என்ற உண்மையை நம்மில் அனேகர் இன்னமும் அறியாதிருக்கிறார்கள்! தன் தாயின் இவ்வித அகங்கார ஆவியில் வளர்ந்த காயீன், முடிவில் தன் சொந்த தம்பியையே கொலை செய்கிறவனாய் உருவெடுத்துவிட்டான்!
இவ்வாறு காயீன் செய்த கொடுஞ்செயலை ஏவாள் கண்ட பிறகுதான், தன் மதியீனத்தை அவள் உணர்ந்திருக்கக்கூடும்! எனவேதான், மற்றொரு மகனை அவள் பெற்றெடுத்தபோது, அவனுக்கு ‘சேத்’ எனப் பெயரிட்டாள். சேத் என்பதற்கு "அருளப்பட்டது" என்றே அர்த்தமாகும் (ஆதி 4:25). அதாவது முன்பு நடந்துவிட்ட நிகழ்ச்சி போல் இப்போது அவள் அவனை உருவாக்கவில்லை. ‘இப்போது’ தேவன்தான் தனக்கு ஒரு மகனைத் தந்தருளினார் என்ற உண்மையைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டாள்! இதனிமித்தமே காயீனைப்போல் அல்லாமல், சேத் தெய்வபக்தியுள்ள மகனாய் ஓங்கி வளர்ந்தான்!
இன்றும் ஏவாளின் பிள்ளைகளாகிய காயீன், சேத் ஆகிய இருவரின் பெயருக்கேற்ற குணாதிசயத்தில் இருவேறு வழிகளில் வாழும் மானிட சந்ததியைத்தான் இவ்வுலகில் நாம் காண்கிறோம். "நான் உருவாக்கினேன்.. நான் சாதித்தேன்" என்ற காயீனின் ஆவியையே இன்றைய மனுவர்க்கத்தில் நாம் பெரும்பாலும் காண்கிறோம். தாங்கள் வாழும் செல்வசெருக்கு, தாங்கள் பெற்ற பவுசுகள் எவ்வளவோ அந்த அளவிற்கு பெருமையும் கொண்டிருக்கிறார்கள்! துரதிருஷ்டவசமாய் இதே ஆவி இன்றைய கிறிஸ்தவ உலகத்திலும் ஆட்டிப்படைப்பதைக் காண்கிறோம். இருப்பினும், இந்த கேடான திரள் கூட்டத்திற்கு நேர்மாறாக "தாங்கள் பெற்ற அல்லது செயலாற்றிய அனைத்தும் தேவன் அவர்களுக்கு அருளிச் செய்த கிருபையினால் மாத்திரமே உண்டானது" என சகல மகிமையையும் தேவனுக்கே செலுத்தும் ‘மீதியானவர்கள்’ இருக்கத்தான் செய்கிறார்கள். இதுப்போன்றவர்களுக்காக நாம் தேவனைத் துதிப்போமாக. இவ்வேளையில் நம்மை நாமே சோதித்துப்பார்த்தால், "நான் உருவாக்கினேன்" "தேவனால் எனக்கு அருளப்பட்டது" ஆகிய இந்த இரண்டு மனப்பான்மையில் நாம் எந்த மனப்பான்மையை கொண்டவர்களாய் இருக்கிறோம் என்பதைக் கண்டுக்கொள்ள முடியும்!
"முற்றிலும் நானே சாதித்தேன்" என நம்மில் ஒருவர்கூட சொல்லமாட்டோம் என்றே நான் நம்புகிறேன். அதற்குப் பதிலாக, ஏவாள் கூறியதைப்போல் "நான் புரிந்த சாதனைகளுக்கு கர்த்தரும் எனக்கு உதவி செய்தார்" என ‘ஓரளவு பங்கை’ தேவனுக்கு தருகிறவர்களாகவே திரளானோரின் நிலமை இருக்கிறது. இன்னும் சிலர் தான் சாதித்த ஆவி உடையவர்களாய் "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு" (பிலி 4:13) என பவுல் கூறிய வார்த்தைகளை மாயமான தாழ்மையோடு தாங்களும் கூறிக்கொள்ளுகிறார்கள்! பவுலின் ஆவியோ ஏவாளின் ஆவிக்கு முற்றிலும் மாறானதாகும்! ஏவாள் இந்த வார்த்தைகளை பெருமையின் அகங்காரத்தில் பேசினாள்! ஆனால், பவுலோ நொறுங்கிய ஆழமான தாழ்மையில் பேசினார்! ஆகவே, நாம் வெறும் வார்த்தைகளில் அல்ல, "நம் ஆவியில்தான்" இந்த அகங்கார மனப்பான்மை குடி கொண்டிருப்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
காயீனை தேவன் தண்டித்து, தம்முடைய பிரசன்னத்தை விட்டு விலகிச்செல்ல அவனை அனுப்பிவிட்டார் (ஆதி 4:16). அதுப்போலவே, "நான் சாதித்ததைப் பார்த்தீர்களா?" அல்லது "நான் எத்தனை மாற்றம் அடைந்துவிட்டேன் பார்த்தீர்களா?" என்ற மனப்பான்மையை கொண்ட ஒவ்வொருவரையும் தம் சமூகத்தை விட்டு தேவன் கண்டிப்பாய் துரத்துவார்!
"தாங்கள் ஆவிக்குரியவர்களாய் இருப்பதைப்பைக் கண்டு "அல்லது" தான் செய்வதைப்போல மற்றவர்கள் ஒன்றை நேர்த்தியாய் செய்ய முடியாதிருப்பதைப் கண்டு" அவர்களை நாம் அலட்சியப்படுத்தும் விதத்திலிருந்து "இந்த அகங்கார ஆவி" நமக்குள் குடிகொண்டிருப்பதை நாம் கண்டுகொள்ள முடியும். நம்மைச் சுற்றியுள்ளவர்கள் திறம்பட செய்ய முடியாதவைகளை நாம் செய்துவிட்டால், எவ்வளவு எளிதில் நாம் பெருமை அடைகிறோம் என்பதை நாமே அறிந்துக்கொள்ள முடியும்!
ஒருவன் தான் வசீகர முகத்தைக் கண்டோ அல்லது தன் புத்திக் கூர்மையைக் கண்டோ பெருமை அடைந்திருந்தால், அவன் பறைசாற்றுவது என்னவெனில், "என் வசீகரத்தை நான்தான் சிருஷ்டித்தேன்! என் புத்திக்கூர்மையை சிருஷ்டித்தது கூட நான்தான் என்ற அகங்கார வாசகங்களேயாகும். ஆகவேதான், இதுப்போன்ற மனிதர்கள் ‘கிருபையில் வளருவது’ கூடாததாயிருக்கிறது. மெய் விசுவாசிகள் மத்தியில் புத்திசாலிகள் வெகு குறைவானவர்களே இருக்கிறார்கள் என வேதம் குறிப்பிட காரணம் என்ன? (1கொரி 1:26). சௌந்தரியம் உள்ள மக்களுக்கும் அல்லது புத்திகூர்மை உள்ள மக்களுக்கும் தேவன் விரோதியா? இல்லவே இல்லை! ஏனெனில், சௌந்தரியத்தையும், புத்திகூர்மையையும் அவரேதான் சிருஷ்டித்தார்! ஆனால், தேவன் தந்த கிருபையை தன் சுயத்திற்கு ஆதாயமாக்கிக்கொண்டு தன்னைச் சூழ இருப்பவர்களை அலட்சியமாய் கருதும் இவர்களின் பெருமைக்கு விரோதமாகவே தேவன் எதிர்த்து நிற்கிறார்!!
நீங்கள் ஒரு சிறந்த வேதபோதகனாகவோ அல்லது மற்றவர்களைக் காட்டிலும் ஊழியத்தில் அதிகம் சாதித்தவராகவோ இருப்பதினிமித்தம் நீங்கள் பெருமை கொண்டிட முடியும். உங்கள் நிலைமையும் அப்படியானால், இந்த ‘காயீனின் மாதிரியை’ உங்களுக்கு எச்சரிக்கையாய் எடுத்துக்கொள்ளுங்கள்! ஆம், பெருமை கொண்ட யாராயிருந்தாலும் காயீனைப் போலவே ஒருநாளில், "கர்த்தருடைய பிரசன்னத்தை விட்டு துரத்தப்படுவார்கள்" என்ற உண்மையை உணர்ந்திருப்போமாக.
ஆனால், இதற்கெல்லாம் மாறாக சேத் விளங்கினான். நீங்கள் காயீனிடத்திற்கு சென்று "உன் பெயர் என்ன?" என்று கேட்டால், அவன் "என் தாயினால் நான் சிருஷ்டிக்கப்பட்டேன்" என்றே பதில் கூறுவான். சேத் பதில் கூறும்போது "அருளப்பட்டவன் - அதாவது, தேவனால் என் தாய்க்கு அருளப்பட்டேன்" என்றே பதில் கூறுவான்.
சேத் வளர்ந்து திருமணமாகி ஒரு குமாரனைப் பெற்று அவனுக்கு "ஏனோஸ்" என்று பெயரிட்டான். அப்பொழுதிலிருந்துதான் மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுக்கொள்ள ஆரம்பித்தார்கள் என ஆதியாகமம் 4:26 நேர்த்தியாகக் கூறுகிறது. அந்நாள்வரை ஜனங்கள் காயீனைப்போலவே கர்த்தருடைய பிரசன்னத்தை விட்டு விலகிச் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால், சேத்தின் மகன் பிறந்த பிறகு, ஜனங்கள் கர்த்தரண்டையில் நெருங்கி வரத் தொடங்கினார்கள்! ஆதாமும், ஏவாளும் நிறைவேற்றத் தவறியதை அவர்களின் மகன் சேத் தாழ்மை கொண்ட ஆவியினால் நிறைவேற்றி முடித்தான்.
தன்னில் அடைந்திருந்ததும், தான் பெற்றிருந்ததுமாகிய அனைத்தும் கர்த்தரிடமிருந்து வந்த கிருபையே என பணிவுடன் சேத் ஏற்றுக்கொண்டதே அவனுடைய தாழ்மையின் ஆவிக்கு அடையாளமாயிருந்தது!
ஆனால், காயீனுடைய சந்ததிக்கு சம்பவித்ததைப் பாருங்கள். ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்திற்கு தன் குமாரனாகிய ஏனோக்கின் பெயரை காயீன் இட்டான் (ஆதி 4:17). இந்த பட்டணத்தை "நான்தான் உருவாக்கினேன்" என்பதை ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள காயீன் விரும்பினான். அதனிமித்தமே அந்தப் பட்டணத்திற்கு தன் மகனின் பெயரைச் சூட்டினான்!!
சேத் ஒரு மகனைப் பெற்றபோது, ஜனங்கள் கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள். ஆனால், காயீன் ஒரு மகனைப் பெற்ற போதோ தன் மகனையே அவன் கனப்படுத்தினான்! இவ்வாறாக, நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்யும்போதும், ஒன்று ஜனங்கள் கர்த்தரை மகிமைப்படுத்தும்படி வைத்திட முடியும் அல்லது நம்மை மகிமைப்படுத்தும்படி வைத்திடவும் முடியும்!
கீழ்க்காணும் இரண்டு கேள்விக்குரிய பரீட்சையில், உங்கள் சொந்த பெயருக்கு நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்களா? அல்லது தேவனுடைய நாமத்திற்கு அக்கறை கொண்டிருக்கிறீர்களா? என்பதை நீங்கள் கண்டுகொள்ள முடியும்!.
1. உங்களைக் குறித்தோ அல்லது உங்கள் பிள்ளைகளைக் குறித்தோ அவதூறான செய்தியை யாரோ பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என நீங்கள் கேள்விப்படும் நேரத்தில் உங்களுக்குள் தோன்றும் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது?
2. யாரோ சில கிறிஸ்தவ தலைவர்கள் பாவத்தில் வீழ்ந்து விட்டதாலும் அல்லது பணத்தை அநீதியாய் கையாடியதாலும் கர்த்தருடைய நாமத்திற்கு அவகீர்த்தி ஏற்பட்டுவிட்டது என நீங்கள் கேள்விப்பட்ட போது, உங்களுக்குள் தோன்றிய பிரதிபலிப்பு யாது?
இந்த இரண்டு கேள்விகளுக்கு நீங்கள் நேர்மையாகக் கூறும் பதில் மூலம், உங்கள் சொந்த பெயருக்கு எவ்வளவாய் நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்பதையும், கர்த்தருடைய பெயருக்கு எவ்வளவு சொற்பமாய் நீங்கள் அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பதையும் நீங்கள் கண்டுகொள்ள முடியும்.
இன்றும் எண்ணற்ற பிரசங்கிகள் கர்த்தருடைய பணத்தை தவறாகப் பயன்படுத்துவதினித்தம், கர்த்தருடைய நாமம் நமது இந்திய தேசத்தில் தூஷிக்கப்படுகிறதே! நம் இந்தியாவில் உள்ள பிரசங்கிகளில் அநேகர் "இயேசுவின் நாமத்தில்" தங்களுக்கென பணம் சேர்த்திட முனைந்திருக்கிறார்களே! கர்த்தருடைய ஊழியம் என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொய் அறிக்கைகள் ஏராளமாய் இருக்கிறதே! ஆம், இன்றும் காசுக்காரர்கள் ஆலயத்திற்கு திரும்பவும் வந்துவிட்டார்கள்.. ஆனால், அவர்களை விரட்டுவதற்கோ ஆள் இல்லை! இவை அனைத்தும் நம் தேசத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் மத்தியில் இயேசுவின் நாமத்திற்கு மாபெரும் கனவீனத்தை கொண்டு வந்திருக்கிறதே! ஆகிலும் இவை அனைத்தும் உங்கள் இருதயத்திற்கு எத்தனை முறை கரிசனையும், கவலையும் கொண்டு வந்திருக்கிறது? "ஆண்டவரே, எங்கள் தேசத்தில் உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்துவீராக" என கூக்குரலிட்டு ஜெபிப்பவர்கள் எத்தனைப்பேர்?
உங்கள் குடும்பத்தைப்பற்றிய அவதூறான கதைகளை யாரோ பரப்பிவிட்டதை நீங்கள் கேட்டதினிமித்தம் நீங்கள் எவ்வளவு ஆத்திரம் அடைந்தீர்கள்! அந்த ஆத்திரத்தின் பிரதிபலிப்பில் 10% -வது கர்த்தருடைய நாமத்திற்கு ஏற்பட்ட தீமைக்கு நீங்கள் காட்டியதுண்டா? இங்குதான் நீங்கள் எவ்வளவாய் உங்களையே நேசிக்கிறீர்கள் என்பதையும், உங்கள் சொந்த பெயரில் எவ்வளவாய் அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பதையும் கண்டுகொள்ள முடியும். கர்த்தருக்கென்று நாம் பாடிடும் ஆராதனைப் பாடல்களின் பரவசத்தின் மத்தியில், நாம் இன்னமும் நம்மையும் நம் குடும்பத்தையும் மாத்திரமே நேசிக்கிறவர்களாயிருக்கிறோம்!
காயீனின் ஆவியும், சேத்தின் ஆவியும் ஆகிய இந்த இரண்டு ஆவிகளும் மனுவர்க்கம் தோன்றிய நாட்கொண்டு இரண்டு நதிகளாய் பாய்ந்து.... இன்று கிறிஸ்தவத்திற்குள்ளும் பாய்ந்து ஓடிக்கொண்டுதான் இருக்கிறது! தங்களுக்கென கிறிஸ்தவ தலைவர்கள் இப்போது தங்கள் தலைமைத்துவத்தை தங்கள் சொந்த மகன்களுக்கு கொடுப்பதை நாம் காண்கிறோமே! பண்டைய இராஜாக்கள்தான் தங்கள் இராஜ்ஜியங்களை தங்கள் புத்திரர்களுக்கு அவ்வாறு கொடுத்திருக்கிறார்கள். சவுல் இராஜாகூட தன் இராஜ்ஜியத்தை தன் மகனாகிய யோனத்தானுக்கு கொடுப்பதற்கே விரும்பினான். ஆனால், இவை அனைத்தும் தேவனுடைய சித்தம் அல்லவேயல்ல!!
நம் இந்திய தேசத்தில் தேவனுக்கு இன்று அதிக பயனுடையவர்களாய் இருப்பவர்கள் சபைக்கு கிரமமாய் போகிறவர்கள் அல்ல! அல்லது அங்கு சென்று பிரசங்கிப்பவர்களும் அல்ல! மாறாக, தங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து "பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் எங்கள் இந்தியாவில் மகிமைப்படுவதாக" என்ற பெருமூச்சோடு உண்மையாய் ஜெபிக்கிறவர்களே தேவனுக்கு அதிக பயனுள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஆகவே, நாம் உண்மையிலேயே ஆவிக்குரியவர்களாக இல்லாத நிலையில் நம்மை ஆவிக்குரியவர்களைப் போல் எண்ணிக்கொண்ட வஞ்சகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போமாக!
இப்போதும், ஒரு கிளியைப்போல அல்லது ஒரு டேப்ரிக்கார்டரைப் போல "பரம பிதாவே, உமது நாமம் மகிமைப்படுவதாக" என்ற ஜெபத்தை அர்த்தமின்றி சொல்லவோ அல்லது பாடவோ முடியும். ஆனால், யாரெல்லாம் மிகுந்த மனத்தாழ்மையோடு "தாங்கள் பெற்ற அனைத்தும் தேவனால் அருளப்பட்டது" என அறிக்கை செய்கிறார்களோ அப்படிப்பட்டவர்களுடைய இருதயத்திலிருந்து பொங்கி வரும் ஜெபத்தை மாத்திரமே தேவன் கேட்கிறார்!!
"நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்து உண்டாகி, ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது" என்றே யாக்கோபு 1:13 கூறுகிறது. "நாம் தேவனிடத்திலிருந்து பெற வேண்டியதில்லை" எனக் கூறிக்கொள்வதற்கு ஒரு நன்மைகூட நம்மிடத்தில் இல்லை! ஆம், வீதியில் விழுந்து கிடக்கும் குடிகாரர்களையும், பைத்தியமாய் அலையும் ஜனங்களையும், பிச்சை எடுத்து திரிபவர்களையும் விட நாம் நலமாய் வாழ்வதன் காரணம் தேவனுடைய கிருபை மாத்திரமே ஆகும்!! நமக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையினால் மாத்திரமே நம்முடைய பிள்ளைகள் இரட்சிக்கப்பட்டிருக்கிறபடியால், வழிதவறிச் சென்ற பிள்ளைகளின் பெற்றோரை நாம் ஒருபோதும் அற்பமாய் எண்ணிவிடவும் கூடாது!!
இந்த சத்தியங்களை எல்லாம் நாம் மனப்பூர்வமாய் உண்ர்ந்திருந்தால், மாத்திரமே மற்ற விசுவாசிகளோடு நாம் கொண்டிருக்கும் ஐக்கியம் வளர்ச்சி பெற்று கிறிஸ்துவின் சரீரம் கட்டப்பட முடியும். ஆகவே, "யாதொன்றையாகிலும் நான் சாதித்தேன்" என எண்ணுகிறவர்கள் நூறு ஆண்டுகளானாலும் ஒருவருக்கு ஒருவர் ஐக்கியத்தை கட்டவே முடியாது!
சபையில் உள்ள மற்றவர்களிடம் நாம் எவ்வளவு ஐக்கியத்தை கட்டியிருக்கிறோம்? இரண்டுபேர் தங்களுக்குத் தாங்களே வலியவர்களாக இருந்தால், அவர்களால் ஒருபோதும் ஐக்கியத்தை கட்டவே முடியாது. ஆனால், அவர்களின் மன எண்ணங்களில் "என்னால் யாதும் செய்திட முடியாது! சகலத்தையும் தேவனிடத்திலிருந்தே நான் பெற்றிருக்கிறபடியால் எதைக் குறித்தும் மேன்மை பாராட்டவும் என்னால் முடியாது" எனக் கூறக்கூடியவர்கள் மாத்திரமே ஐக்கியத்தை எளிதில் கட்ட முடியும்.
இவ்வேளையில் நான் கூற விரும்பும் என்னுடைய சொந்த சாட்சியும் உண்டு. நாங்கள் சபையாய் கூடிவந்த ஆரம்ப நாட்களில், கூட்டங்களுக்கு காலம் தாழ்த்தி வருபவர்களினிமித்தம் நான் மனக்கிலேசம் அடைவதுண்டு. இவ்வித "காலம் தாழ்த்தாமை" (Punctuality) என்ற ஒழுக்கத்தை நான் தேவகிருபையால் "பெற்றுக் கொண்டேனேயல்லாமல்" நானாக அதை சாதித்து உருவாக்கவில்லை என்ற உண்மையை உணர்வதற்கு எனக்கு சில வருடங்களானது! நான் இராணுவத்தில் இருந்த வருடங்களில் இந்த காலம் தாழ்த்தாமைக்காக எனக்கு கடுமையாக பயிற்சியளிக்கப்பட்டது. ஆகவே, மற்ற விசுவாசிகளைவிட நான் உயந்தவனாக இருப்பதால், இந்த காலந்தாழ்த்தாமையின் ஒழுக்கத்தை நான் பெற்றிருக்கிறேன் என நான் எப்படி கூறமுடியும்? இந்த உணர்வை நான் பெற்ற பின்பு தான் இளைப்பாறுதலாய் இருக்க முடிந்தது. இந்த உணர்வுதான், ‘ஜனங்களிருக்கும் வண்ணமாகவே அவர்களை ஏற்றுக்கொள்வதற்கு’ என்னை இலகுவாக்கியது. இப்போது அவர்களுடன் ஐக்கியம் கொள்ளவும், கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டவும் எனக்கு சாத்தியமாகவே இருக்கிறது.
சுய நம்பிக்கை கொண்ட இருவர் ஒருபோதும் ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொள்ளவே மாட்டார்கள். ஆனால், தன் தேவையின் தாழ்ச்சியைக் கண்ட இருவர் ஒருவருக்கொருவர் மகிமையான ஐக்கியத்தைக் கொண்டிருப்பார்கள். ஏனெனில், ‘தங்களால் எதுவும் செய்ய முடியாது’ என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். தேவன் தருவது எதுவோ அதைப் பெற்றுக்கொள்ள மாத்திரமே அவர்களால் முடியும்.
இந்தக் காயீனின் ஆவி முழு பூமியையும் எவ்வாறு ஆட்கொண்டது என்பதை ஆதியாகமம் 11 -ஆம் அதிகாரம் கூறுகிறது. அந்நாட்களில் ஒரே பாஷையை எல்லோரும் பேசினார்கள் என வாசிக்கிறோம். எழுத்தின்பிரகாரம் அவ்வாறு சம்பவித்தது உண்மைதான். ஆனால், ஆவிக்குரிய ரீதியில் அவர்கள் அனைவரும் சேர்ந்து பேசிய பாஷையின் குரல் "நான் சிருஷ்டித்தேன்" என்பதுதான். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, "நமக்கு ஒரு நகரத்தையும் ஒரு கோபுரத்தையும் கட்டி நமக்கு பெயர் உண்டாகப்பண்ணுவோம், வாருங்கள்" (ஆதி 11:4) என்றார்கள். தன் மகனின் பெயரில் காயீன் ஒரு பட்டணத்தை கட்டியதைப்போல, இப்போது தங்கள் பெயருக்கு ஒரு நகரத்தைக் கட்ட ஜனங்கள் விரும்பினார்கள். இந்த ஜனங்களில் ஒருவராகிலும் காயீனின் சந்ததியார் அல்ல! ஏனெனில், அவர்கள் ஏற்கனவே ஜலப்பிரளயத்தில் அழிந்துப்போனார்கள். ஆம், இந்த ஜனங்கள் சேத் மற்றும் நோவா ஆகிய தேவ மனிதர்களின் சந்ததியில் பிறந்தவர்கள்தான். இருப்பினும், அவர்களுக்குள்ளும் காயீனின் ஆவி ஊடுருவிவிட்டது. ஆகவேதான், தேவன் அவர்களுடைய பாஷையை தாறுமாறாக்கி அவர்களை பூமி எங்கும் சிதறிப்போகப் பண்ணினார்.
ஆதியாகமம் 11 -ம் அதிகாரத்தின் கடைசியில் இந்த தாறுமாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாய், ஆபிராம் என்ற மனிதனை வைத்து ஓர் புதிய துவக்கத்தை தேவன் துவங்கினார். இந்த ஆபிராமை ஊர் என்ற பட்டணத்திலிருந்து தேவன் தமக்கென பிரித்தெடுத்தார்!
இவ்வாறெல்லாம் தேவன் பிராயாசப்பட்டும் "தனக்குப் பெயர் உண்டாகச் செய்யும்" கொடிய குணம் திரும்பத் திரும்ப தோன்றி இன்றைய கிறிஸ்தவம் வரை அது நிலவி வருகிறது. பல்வேறு காலங்களில் தேவபக்தியுள்ள தீர்க்கதரிசிகளை தேவன் எழுப்பி, அவர்கள் மூலமாய் அந்தந்த சந்ததியில் கர்த்தருடைய நாமத்திற்கு தூய சாட்சியாய் விளங்கும் ஜனங்களை தேவன் கூட்டிச் சேர்த்தார். ஆனால், இந்த தேவ மனிதர்கள் மரித்தவுடன், அவரைப் பின்பற்றிய அடுத்த சந்ததியார் மீண்டுமாய் காயீனின் ஆவிக்குப் பலியாகி பெருமையும், அகந்தையும் கொண்டு தங்கள் சந்ததியை தோற்றுவித்தவரின் நல்ல ஆவியை இழந்து போனார்கள்! பின்பு மீண்டுமாய் வேறோரு மனிதனை தேவன் எழுப்பி மீண்டும் ஒரு துவக்கத்தை ஆரம்பிப்பார்..!
இவ்வாறு தொன்றுதொட்டு... ஒரு இடத்திலும் ‘ஆவிக்குரிய சபை’ இல்லாமலே போய் கொண்டிருக்கிறது! இருப்பினும், "ஆவிக்குரிய ஜனங்களோ" இருக்கத்தான் செய்கிறார்கள்! சிறிதேனும் ஆவிக்குரிய தன்மையற்ற ஓர் சபையில் ஓர் சிறந்த ஆவிகுரிய மனிதன் இருப்பதையும் இந்நாட்களில் காண்கிறோம்.
இவ்வாறு, ஆவிக்குரிய தன்மை ஒரு தனி நபருக்குரியதாயிருக்கிறது! எனவே, ஒரு நல்ல சபையில் நீங்கள் அங்கம் வகிப்பதால் மாத்திரமே, நீங்கள் ஆவிக்குரியவராய் மாறிவிட முடியாது!
ஒர் நல்ல சபையில் அங்கம் வகித்துவிட்டால், ‘கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை தேட வேண்டும்’ என்ற பாரம் ஒருவனுக்கு தானாகவே ஏற்பட்டுவிடாது! உண்மையில், ஒர் நல்ல சபையில் அங்கம் வகிப்பவர்களுக்கு அபாயமே பெரியதாயிருக்கிறது! ஆம், தங்கள் சபையின் நன்மதிப்பை சார்ந்து வாழ்ந்துக்கொண்டு, இவர்களோ முழுக்க முழுக்க மாம்சீகமாய் வாழ்ந்திடும் அபாயம்!
"இந்த பூமி எங்கும் சுற்றி வந்ததாக" கர்த்தரைப் பார்த்து சாத்தான் கூறியபோது, "என் தாசனாகிய யோபுவை கவனித்தாயோ?"என அவனிடம் கேட்டார். யோபுவை நீண்ட ஆண்டுகளாய் கர்த்தர் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். சாத்தானும் நீண்ட ஆண்டுகளாய் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்! முழு இருதயம் கொண்ட விசுவாசிகளைக் காணும்படி, உலகம் எங்கும் தேவனுடைய கண்கள் இன்றும் கவனித்துத் தேடிக்கொண்டிருக்கின்றன. எல்லா விஷயங்களிலும் தன்னுடைய மகிமை ஒன்றே தேடும் "தம்மைத் தொழுது கொள்ளும் இப்படிப்பட்டவர்களை" (யோ 4:23) தேவன் தேடிக்கொண்டேதான் இருக்கிறார். ஆனால், இன்றும் யோபுவைப் போன்ற வெகு சிலரைதான் தேவனால் கண்டுபிடிக்க முடிகிறது!
புத்திசாலி ஜனங்களைக் காணும்படி தேவனுடைய கண்கள் நோக்கிக் கொண்டிருக்கவில்லை. மாறாக, "தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடு (தங்கள் முழுமையும் தேவனுக்குத் தந்து) இருப்பவர்களைக் காணும்படிக்கே கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது" என்றே 2நாளாகமம் 16:9 கூறுகிறது. ஆம், தங்கள் முழு இருதயமாய் தேவனை நேசித்து, தங்கள் முழு இருதயதயமாய் தேவனை நேசித்து தங்கள் முழு நேசத்திற்குரிய தேவனை நோக்கி, "ஆண்டவரே, என்னுடையவைகளெல்லாம் உம்முடையவைகள்! உம்மையன்றி இந்த பூமியில் எனக்கு யாதொரு விருப்பமும் இல்லை. நான் அலுவல் செய்வதும் என் பிழைப்பிற்குரிய தேவையை பூர்த்தி செய்திட மாத்திரமேதான்! என் குடும்பம் தங்கி வாழும் அத்தியாவசத்திற்காகவே ஒரு வீட்டையும் கட்டியிருக்கிறேன். என் குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்திடவே யாதொன்றும் வாங்குகிறேன்! ஆனால், என் இருதயமோ யாதொன்றின் மீதும் இல்லவேயில்லை! ஓ என் தேவனாகிய கர்த்தாவே, என் இருதயத்தின் முழுமையும் உமக்கே, அது உமக்கு மாத்திரமே சொந்தம்" என்ற மனம் நெகிழும் ஜெபத்தையே தங்கள் இருதயத்தில் எப்போதும் கொண்டிருப்பார்கள்!
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் மக்களுக்கு உங்களைக் குறித்து என்ன தாக்கத்தை (அபிப்பிராயத்தை) தர விரும்புகிறீர்கள்? உங்களுக்கு ஒரு ‘மாபெரும் தேவன்’ உண்டென்ற தாக்கத்தையா? "தங்களைக் குறித்த தாக்கத்தை" உருவாக்கி மற்றவர்களைத் தங்கள் அண்டையில் ஈர்க்க விரும்பும் எந்த விசுவாசியும் தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் பிரவேசித்திட முடியாது! ஆம், ஒரு சிறு பிள்ளையைப்போல் தங்களைத் தாழ்த்துகிறவர்கள் மாத்திரமே அந்த இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிப்பார்கள், ஒருசிறு பிள்ளையைப்போல் நம்மைத் தாழ்த்துவதன் அர்த்தம் என்ன? ஓர் தொட்டிலில் கிடக்கும் சிறு குழந்தை என்னத்தை சாதித்தது? ஒன்றும் இல்லை! உண்மைதான், "நான் எதையும் சாதித்துவிடவில்லை!" என்ற தாழ்மையுள்ள உணர்வே சிறுகுழந்தையைப் போல் மாறிவிடும் பாக்கியமாகும்! அது மாத்திரம் அல்ல, "சகலமும் தேவனுடைய கிருபையினாலே மாத்திரமே உண்டானது" என்ற முழக்கமும் அந்த சிறு குழந்தையின் உணர்வில் உள்ளடங்கும்!!