காலா காலங்களாய் வாழ்ந்த அனேக கிறிஸ்தவர்கள், தங்கள் சிலுவையை சுமந்து சுயத்தை வெறுத்தே பரிசுத்தத்தையும் பாவத்தின் மேல் ஜெயத்தையும் தேடினார்கள்! ஆனால், இவர்களில் பெரும்பாலானவர்கள், வேதம் கூறுகிறபடியான ‘மகிமையான வாழ்க்கைக்குப்’ பதிலாய் ‘ஓர் கடினமான’ வாழ்க்கையையே கண்டார்கள் அவர்களின் தோல்விக்குக் காரணமாய் இருந்தது யாதெனில், புதிய உடன்படிக்கையின் கீழ் உள்ள ‘விசுவாச ஜீவியத்தை’ அவர்கள் அறியாமல் இருந்ததேயாகும். ஆம், அவர்கள் பரிசுத்தத்தை ‘பழைய உடன்படிக்கையின்’ முறைமையின்படி தேடினபடியால், தேவன் அவர்களுக்கென்று வைத்திருந்த மேன்மைகளைக் காண தவறிவிட்டார்கள்!
2கொரி 3:6 கூறுகிறபடி, புதிய உடன்படிக்கையோ, ஆவியின் ஊழியமாகவும் அதுவே ஜீவனைக் கொண்டு வருவதாகவும் இருக்கிறது! ஆனால், பழைய உடன்படிக்கையோ எழுத்தின் பிரகாரமான ஊழியத்தின் மூலமாய் மரணத்தையே கொண்டுவருவதாய் இருக்கிறது! ஆகவே, நாம் தேவனுடைய கற்பனைகளை எழுத்தின் பிரகாரமாக கைக்கொண்டு நடந்தால்... இந்தப் புதிய உடன்படிக்கையில் கூட, அது மரணத்தைதான் கொண்டுவரும்!! எனவே, நாம் விசுவாசத்தினால் வாழ்ந்து பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுவதற்கு நம்மை ஒப்புக்கொடுத்தால் மாத்திரமே ‘கிறிஸ்துவின் ஜீவனுக்குள்’ நாம் பிரவேசிக்க முடியும்.
இயேசு பரத்திற்கு ஏறி, பரிசுத்த ஆவியை இந்த பூமிக்கு அனுப்பிவிட்டபடியால், நம் ஜீவியமானது எந்த பழைய ஏற்பாட்டு பரிசுத்தவானைக் காட்டிலும் அதிக மகிமை நிறைந்ததாய் இருந்திட வேண்டும். ஆகவே, நாம் இன்னமும் ஆக்கினை உணர்வுள்ளவர்களாயும், சோர்வுற்று ஜீவிப்பவர்களாயும் இருந்தால், அதற்கு ஒரே காரணம், நாம் பழைய உடன்படிக்கையின்படியே இன்னமும் தொடர்ந்து ஜீவிக்கிறவர்களாய் இருக்கிறோம் என்பதுதான் (2கொரி 3:9).
இயேசு தன்னுடைய ஊழியத்தில் இரண்டு முக்கியமான காரியங்களை அடிக்கடி வலியுறுத்திக் கூறினார். அது, 1. தேவனிடத்தில் விசுவாசமாய் இருப்பதும் 2. பரிசுத்த ஆவியின் வல்லமையுமேயாகும்.
ஆதாம் ஜீவவிருட்சத்திற்குப் பதிலாய் நன்மை தீமை அறியதக்க விருட்சத்தைத் தெரிந்துக்கொண்டபடியால், பரிசுத்த ஆவியின் வல்லமையில் வாழ்ந்திடும் விசுவாச ஜீவியத்தை இழந்துவிட்டான் (ஆதி 2:9). அதாவது, தான் ஜீவிப்பதற்கு தேவனையே சார்ந்து கொள்வதற்குப் பதிலாய் நன்மை தீமை அறிந்து வாழும் அறிவையே தனக்கென தெரிந்துகொண்டான்!
"ஜீவவிருட்சம்" புதிய உடன்படிக்கையின் கீழான விசுவாச வாழ்க்கையையும், "நன்மை தீமை அறியத்தக்க விருட்சமோ" பழைய உடன்படிக்கையின் கீழான சுய-முயற்சியின் வாழ்க்கையை குறிப்பதாய் இருக்கிறது
ஆதாம் மாத்திரம் ஜீவவிருட்சத்தைத் தெரிந்துக் கொண்டிருப்பான் என்றால், தேவனையே தொடர்ச்சியாய் சார்ந்து வாழும் ‘விசுவாச ஜீவியத்தைப்’ பெற்று வாழ்ந்திருப்பான். அதன்பின்பு, பரிசுத்த ஆவியானவர் அவனுக்கு திவ்விய ஜீவனையும் தந்திருப்பார். ஆனால், அவனோ தேவனை சார்ந்து வாழும் வாழ்க்கைக்குப் பதிலாய், தன்னையே சார்ந்து வாழும் வாழ்க்கையைத் தெரிந்து கொண்டான். இதனிமித்தமே அவன் மரித்துப் போனான். இந்த உலகில் உள்ள எல்லா அவிசுவாசிகளும் தேவனையே தொடர்ச்சியாக சார்ந்து வாழும் வாழ்க்கை ‘அற்றவர்களாகவே’ வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். துரதிருஷ்டவசமாய் அநேக விசுவாசிகள்கூட இந்த வழியில்தான் இன்னமும் சென்று கொண்டு இருக்கிறார்கள்.
சகலமார்க்கத்தாருமே, தங்களைப் பின்பற்றுவோரிடம் ‘நன்மை செய்யவும் தீமைக்கு விலகி நிற்கவுமே’ போதித்து வருகிறார்கள். பரிசுத்தத்தை நாடும் அனேக கிறிஸ்தவர்களும்கூட, இவர்களைப்போலவே நன்மை செய்து தீமைக்கு விலகி வாழ்கிறார்கள்! இவ்வாறு பரிசுத்தத்தை அடையும் இவர்களின் ஓட்டத்தின் முடிவில், நன்மைக்கும் தீமைக்கும் உள்ள ‘பின்ன-அளவு’ வித்தியாசங்களைப் பல்வேறு சட்டதிட்ட அப்பியாசங்களின் மூலமாய் கண்டுபிடித்து வாழ்கிறார்கள்! இவ்வாறெல்லாம் முயற்சித்தும் இவர்களில் பெரும்பாலோர் ‘மெய்யான பரிசுத்த ஜீவியத்தைக்’ கண்டடையவேயில்லை! அது ஏன்? ஏனென்றால், பரிசுத்த ஜீவியத்தைத் தங்கள் கிரியைகளினால் தேடிட இவர்கள் முயற்சித்தார்களேயல்லாமல் ‘விசுவாசத்தினால்’ அல்லவே அல்ல!
சுமார் 1500 ஆண்டு காலமாய் எவையெல்லாம் நன்மைகள்? எவையெல்லாம் தீமைகள்? என்பதை நியாயப்பிரமாணத்தின் மூலம் இஸ்ரவேலர்களுக்கு தேவனே போதித்து வந்தார். ஆனால், இவ்வாறு கீழ்ப்படிந்ததினிமித்தம், ஒரு இஸ்ரவேலர்கூட நித்தியஜீவனைப் பங்கு பெறும் வாழ்க்கைக்குள் நடத்தப்படவேயில்லை! இவ்வாறு, எவ்வளவுதான் உயர்ந்த தரத்திற்குரிய சட்டதிட்டங்களை கைக்கொண்டு ஜீவித்தாலும், ‘இன்றுகூட’ அவைகள் ஒருவனைகூட மெய்யான தேவ பக்திக்குள் ஒருபோதும் நடத்திச் செல்லமுடியாது!
மெய்யான பரிசுத்தம், மனுஷனுடைய ஆத்துமாவில் தங்கும் தேவனுடைய ஜீவனேயாகும்! அந்த ஜீவனை ஓர் வரமாக அல்லது ஓர் பரிசாகத் தேவனே தந்தருள வேண்டும். நாமாக அதை ஒருபோதும் அடைந்திட முடியாது! ‘விசுவாசத்தினாலேயே’ நாம் அதைப் பெற்றிட வேண்டும்!
பிரமாணங்கள் தந்த கட்டளைகளை அறியாதிருந்த நாட்களில் பவுல் தான் ஜீவனோடு இருந்ததாகவே எண்ணினார்! ஆனால், தேவனுடைய பிரமாணங்களில் கட்டளைகளை அவர் அறிந்த மாத்திரத்தில், தன் ஜீவியத்திலிருந்த தவறுகளை இப்போது கண்டு.... தன்னை மரித்தவனாய்ப் பவுல் கண்டார் (ரோமர் 7:9). இந்த அனுபவமே, மறுபடியும் பிறந்த அநேகருடைய அனுபவமாய் இருக்கிறது. இவர்கள் ‘தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டதைக்’ குறித்த செய்திகளை மாத்திரம் கேட்கும்வரை மகிழ்ச்சியோடும், ஜீவனோடும் இருப்பதாகவே காணப்படுகிறார்கள். ஆனால், பாவத்தை ஜெயித்து வாழ்வதையும் தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்படிவதையும் குறித்த செய்திகளை இவர்கள் கேட்ட மாத்திரத்தில்தானே தங்களைப் பரிதவிக்கும் ஆக்கினைக்குள்ளானவர்களாயும், மரித்தவர்களாகவும் எண்ணுகிறார்கள். ஆனால், பவுலோ இந்தப் பழைய உடன்படிக்கையின் பிரமாணங்களோடு நின்று விடாதிருந்ததைப்போலவே நாமும் அவ்வாறே நின்றுவிடாதிருக்க கவனமாய் இருந்திட வேண்டும். ஆம், தேவன் பவுலுக்கு ‘கிறிஸ்து இயேசுவுக்குள் உண்டான "ஜீவனுள்ள ஆவியின் பிரமாணத்தைக்" காட்டினார். இந்தப் பிரமாணமே, முடிவாகப் பவுலை பாவத்திலிருந்து விடுதலை செய்தது! (ரோமர் 8:2).
ஏதாவது, நன்மை செய்து பரிசுத்தமாய் மாறவே அநேகர் நாடுகிறார்கள். ஏவாளும்கூட விலக்கப்பட்ட கனியை "நல்லது" என கண்டதினாலேயே புசித்தாள். அவள், அங்கு "தீமை" செய்ய நாடவில்லை! மேலும், தானும் பிசாசாக வேண்டுமென விரும்பி அந்தக் கனியை புசியாமல், தேவனைப்போல் மாறவேண்டும் என்ற விருப்பத்தினாலேயே புசித்தாள். அவ்வாறாகவேதான் பிசாசானவனும் அவளிடம் உறுதியாக கூறியிருந்தான் (ஆதி 3:5). இன்று பிரமாணங்களின்படி வாழுகிற ஜனங்களும், வெளிப்புறமான நல்ல கிரியைகளின் மூலமாய் தேவனைப் போல் மாறிவிடலாம் என்ற அதே தவறை இன்றும் செய்கிறார்கள்!
இன்று அனேக கிறிஸ்தவர்களிடம் காணப்படும் நல்ல குணங்கள், மெய்யான பரிசுத்தத்திலிருந்து தோன்றாமல், அவர்கள் நல்ல சூழ்நிலையில் வளர்ந்த வளர்ப்பினால், மாத்திரமே உண்டாயிருக்கிறது. இப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் யாவரும் நேர்மையாய் இருக்கக்கூடும். ஆனால், அவர்களுக்கோ தேவனைப் பற்றியதான தீராத பசி இருப்பதில்லை! ஆம், தேவனைக் குறித்த எந்தவித வெளிப்பாடும் இல்லாமலே, வேத அறிவை சேர்த்து குவித்திட தங்கள் வாழ்நாளை இவர்கள் செலவிடுகிறார்கள். இதன் விளைவாய், அவர்களின் ஜீவியம், அவர்களைச் சூழ்ந்திருக்கும் நல்ல அவிசுவாசிகளை காட்டிலும்’ மேலான வித்தியாசம் ஏதும் இல்லாதிருப்பதையே காண்கிறோம். இதுப்போன்ற எல்லா விசுவாசிகளும், அவர்கள் பெறவேண்டும் என தேவன் விரும்பிய மிக முக்கியமான ‘திவ்விய சுபாவத்தைப்’ பெற்றுக்கொள்ள தவறுகிறார்கள்.
தேவனோ, நாம் நல்லது செய்யவேண்டும் என முதலாவதாக நம்மிடம் முயற்சிப்பதில்லை! மாறாக, நாம் அவரை நம்பியிருக்கும்படி நடத்தி, அதன்மூலமாய் தன் சுபாவத்தை நமக்குத் தரவே அவர் விரும்புகிறார்!
அவருடைய பார்வையில் "நன்மை செய்பவர்கள் நீதிமான்களாய் காணப்படாமல், "விசுவாசத்தினால்" பிழைத்து ஜீவிக்கிறவர்களே நீதிமான்களாய் காணப்படுகிறார்கள் (ரோமர் 4:5; ஆபகூக் 2:4).
ஆபகூக் 2:4- வசனத்தில் இருவகையான ஜனங்களைத் தேவன் வரையறுக்கிறார்: 1. தேவனிடத்தில் விசுவாசமாய் இருப்பவர்கள் 2. பெருமையான அகங்காரம் கொண்டவர்கள். ஆம், பெருமை கொண்டவர்கள் ஒருக்காலும் விசுவாசத்தினால் பிழைத்து ஜீவித்திடவே முடியாது! ஓர் எளிமையான விசுவாசத்தில் தேவனுடைய ஈவுகளை இலவசமாய் பெற்றுக்கொள்ள அநேகரால் முடியாததற்கு காரணம், எதையும் இலவசமாய் பெற்றுக்கொள்ள கூடாமல் அவர்களுடைய பெருமை அவ்வளவாய் ஓங்கியிருந்ததே காரணமாகும்! அதற்கு பதிலாய், தங்கள் மன்னிப்பையும், பரிசுத்தத்தையும் தாங்களாகவே முயற்சித்து சம்பாதித்துக்கொள்ளவே இவர்கள் விரும்புகிறார்கள்!
அன்று ஏவாளிடத்தில் கூறியதைப்போலவே, இன்று கிறிஸ்தவர்களிடம் சாத்தான் கூறுவதெல்லாம் "நன்மை தீமைக்குரிய வித்தியாசத்தை அறிந்துக்கொள்ள நீங்கள் தேவனை சார்ந்துக்கொள்ள தேவையில்லை!" என்ற குரலேயாகும்! இந்த வித்தியாசத்தை அறிவதற்கு, ஒன்று தங்கள் மனசாட்சியின் மூலமாகவோ அல்லது வேதத்தை வாசிப்பது மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும் என்றே சாத்தான் அவர்களிடம் கூறுகிறான். இன்றோ, அநேக அவிசுவாசிகள்கூட தங்கள் மனசாட்சியின்படி ஒழுக்கமான வாழ்க்கை வாழுகிறார்கள். அதைப்போலவே, ஒரு கிறிஸ்தவனும் வாழமுடியும்... ஆனால், அவனோ, ‘தேவனுடைய பார்வையில்’ ஒருக்காலும் நீதிமானாய் விளங்கமுடியாது!
அநேகம் விசுவாசிகள் தங்கள் கிறிஸ்தவ ஜீவியத்தின் ஆரம்பத்தைச் சரியாகத்தான் ஆரம்பிக்கிறார்கள். ஆம், தாங்களை கிறிஸ்துவின் இரத்தத்தினால் நீதிமானாக்குபவர் "தேவன் மாத்திரமே என்று விசுவாசித்து" ஆரம்பித்தார்கள்! ஆனால், இனி வளர்ந்து கிறிஸ்துவின் பூரணத்தை அடைவதற்கோ புத்தியில்லாத கலாத்திய கிறிஸ்தவர்களைபோல "தங்கள் சொந்த முயற்சியில்" இறங்கி விடுகிறார்கள் (கலா 3:3). இதினிமித்தமாய், தேவனுக்காக தாங்கள் செய்த கிரியைகளையோ அல்லது தங்கள் ஊழியத்தில் பெற்ற நல்ல பிரதிபலன்களையோ கொண்டு தங்கள் "ஆவிக்குரிய வளர்ச்சியை’ கணக்கிட ஆரம்பிக்கிறார்கள். இந்த கணக்கு அவர்களுக்குள் ஓர் திருப்தியையும் தந்துவிடுகிறது! ஆனால், ஜனங்கள் இயேசுவிடம் வந்து, "தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என கேட்டபோது, எந்தெந்த நல்ல கிரியைகளை செய்யவேண்டுமென இயேசு அவர்களுக்கு ஒருபோதும் கூறவில்லை. மாறாக, ‘தன்னை விசுவாசிக்கும்படியே’ அவர்களுக்குக் கூறினார் (யோவான் 6:28,29). ஏனெனில், விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாய் இருப்பது முற்றிலும் கூடாத காரியமாகும்.
நம் கிறிஸ்தவ ஜீவியத்தில் அநேக "முரண்பாட்டு சத்தியங்கள்" (Paradoxes) உண்டு. அவைகளில், நாம் இரட்சிக்கப்பட்டவுடன் முதலாவதாய் சந்திக்கும் சத்தியம் இதுதான்: அதாவது, இயேசு நம்மை முழுவதும் நீதிமானாக்கிவிட்டபடியால், நாம் இப்போது, தேவனுக்கு முன்பாக ஒருபோதும் பாவம் செய்யாதவர்களாகவே நிற்கிறோம். ஏனெனில், "உங்கள் பாவங்களை இனி நினையாமல் இருப்பேன்" என்ற வாக்குதத்தத்தை கர்த்தரே நமக்குத் தந்திருக்கிறார் (எபி 8:12). அதேசமயம், நாம் கண் சொருகிப்போன குருடர்களாய் மாறிவிடாதபடி "நாம் முன் செய்த பாவங்களை மறந்து விடக்கூடாது" (2பேதுரு 1:9) எனவும் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்!
ஆகவே, தேவன் நம்முடைய முந்தைய பாவங்களை நினைவு கூருவதில்லை என்ற சத்தியத்தை ஒருபக்கமும், அதற்கு முரணாக, நாம் முன் செய்த பாவங்களை மறந்துவிடக்கூடாது என்ற சத்தியத்தை மறுபக்கமும் நாம் காண்கிறோம்! இவ்வித வெளிப்படையான முரண்பாட்டு சத்தியத்தை நாம் எவ்வாறு கைக்கொள்ள முடியும்?
ஆம், நம் கடந்தகால பாவங்களை நினைவுக்கூரும் உணர்வைக் காட்டிலும், "அந்தப் பாவங்களையெல்லாம் இயேசுவின் இரத்தம் முற்றிலுமாய் கழுவிவிட்டது" என்ற உணர்வை மேலோங்கியதாய் கொண்டிருப்பதன் மூலமாகவே நாம் இந்த சத்தியங்களைக் கைக்கொண்டவர்களாய் வாழமுடியும்!
மேற்கண்ட இந்த வாக்கியத்தை மீண்டும் கவனமுடன் வாசியுங்கள்.... ஏனென்றால், நம் கிறிஸ்தவ ஜீவியத்தின் அடிப்படைக்கு முக்கியமானவைகளில் இதுவும் ஒன்றாகும். இதை நீங்கள் விசுவாசித்துவிட்டால், இந்த சத்தியம் உங்களை சம்பூரண விடுதலையாக்குவதை நீங்கள் காணமுடியும்!
நம் கடந்தகால பாவங்களைக் குறித்து குற்ற உணர்வு கொண்டிருப்பதால், நாம் தாழ்மையாய் இருக்கிறோம் என்பதல்ல. உண்மையில் அது அவிசுவாசமேயல்லாமல் தாழ்மை அல்லவே அல்ல! மேலும், அது கிறிஸ்துவின் இரத்தத்திற்கு ஏற்ப்பட்ட அவமதிப்பாகும்! இவ்வித அவிசுவாசம்,, எவ்விதத்திலும் தேவனை மகிமைபடுத்துவதே இல்லை!
தன் கிறிஸ்தவ ஜீவியத்தின் முப்பது ஆண்டுகால அனுபவத்திற்குப் பிறகுகூட, பவுல் தன்னை "பாவிகளுக்கெல்லாம் பிரதான பாவி நான்" (1தீமோ 1:15) எனக் கூறினார். ஆனால், அதேசமயம், "என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்" (1கொரி 4:4) என்றும் கூறினார். அவர் கூறிய முரண்பாடான இந்த இரண்டுமே சத்தியங்கள்தான்!!
இவ்வித உறுதியான நிச்சயமே தேவனுக்கு முன்பாக நமக்கு நம்பிக்கையையும், பயத்தையும் உண்டாக்கும்படி சாத்தான் கொண்டுவரும் சகல குற்றசாட்டுகளுக்கு முன்பாக நமக்குத் தைரியத்தைத் தருகிறது!.
இன்று கிறிஸ்தவ புத்தக சாலைகளில், "விசுவாசத்தையும், பரிசுத்த ஆவியையும் பற்றிய புத்தகங்களே" அதிக அளவில் பிரபல்யமாய் இருக்கிறது. ஆனால், இப்புத்தகங்களில் பெரும்பாலானவைகள் "போலியான விசுவாசத்துக்கும்" "போலியான அனுபவங்களுக்குமே" கிறிஸ்தவர்களை நடத்துகின்றது.
இந்தப் புத்தகங்கள் போதிக்கும் விசுவாசமானது, பரிசுத்தம் அடைவதற்கும் ஆவிக்குரியவர்களாய் மாறுவதற்கும் ஏதுவாய் இல்லாமல், ஐசுவரியம் அடைவதற்கும், ஆரோக்கியமாய் வாழ்வதற்குமே ஏதுவாய் இருக்கிறது!
ஒருவனுக்குப் போதுமான அளவு விசுவாசம் இருந்துவிட்டால், அவன் விரும்பும் எதை வேண்டுமானாலும் தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றே இப்புத்தகங்கள் கிறிஸ்தவர்களுக்குப் போதிக்கிறது! இதுப்போன்ற போதகங்கள், ஆதி அப்போஸ்தலர்களுடைய போதகங்களுக்கும், அவர்கள் வாழ்ந்த நடைமுறைகளுக்கும் அடிப்படை ரீதியாகவே விரோதமாய் இருக்கிறது! அது மாத்திரமல்லாமல், தேவனுடைய இராஜ்ஜியத்தின் பணிகளில் தங்கள் உயிரையே தியாகமாய் தந்த 19, 20- ம் நூற்றாண்டு பக்தியுள்ள மிஷினரிகளின் வாழ்க்கைக்கும் விரோதமாகவே இருக்கிறது!!
மெய்யான விசுவாசமானது, "உலகத்தை ஜெயிப்பதற்கே" நம்மை பெலப்படுத்துகிறது (1யோவான் 5:4). அந்த உலகம் "மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாய் இருக்கிறது" (1யோவான் 2:16) என காண்கிறோம். இந்த உலகத்தை இயேசு ஜெயித்தது போலவே நாமும் ஜெயித்திட முடியும் (யோவான் 16:33; வெளி 3:21). நாம் உலகத்தை மேற்கொள்ளும்போது, தேவனோடு கொண்ட ஐக்கியத்தில் வரும் இன்பத்தைக் காட்டிலும், ஆரோக்கியத்திலும் ஐசுவரியத்திலும் வரும் இன்பமே மிகவும் மேலானது என சாத்தான் கூறும் பொய்யிலிருந்து நாம் நிச்சயமாக ஏமாறாமல் இருந்திட முடியும்.
நாம் தேவனோடு கொண்ட ஐக்கியத்தில் "பேரின்பம் கொள்ளவே" தேவன் விரும்புகிறார். இந்தப் பேரின்பமே, மற்ற யாதொரு இன்பத்தையும் விரட்டியடித்திட முடியும் (சங் 16:11). ஆனால், இன்று அநேகரோ, பாவ இன்பத்தை மேற்கொள்ள மனுஷீகமான யுக்திகளையே நாடுகிறார்கள்.
ஆம், நம் தேவனோடு கொண்ட ஐக்கியத்தை ருசித்திடும்போதுதான் உலகத்தின் போலி இன்பங்களிலிருந்து மெய்யான விடுதலை அடைந்திடமுடியும்!
நம்மைக் கட்டியிருக்கும் கட்டுகள் எதுவாயிருந்தாலும், தேவன் மீது கொண்ட விசுவாசத்தாலும், பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும் நாம் பூரண விடுதலையைப் பெற்றுவிட முடியும்!
உங்களைக் கவர்ந்திடும் ஏதோ சில உலக இன்பங்களை நீங்கள் விட்டுவிடுவதற்கு விருப்பமற்று இருக்கிறீர்களா? அப்படியானால், பேதுரு கடலில் முழ்கிக் கொண்டிருந்த போது, "ஆண்டவரே, என்னை இரட்சியும்!" என ஆண்டவரை நோக்கி கூக்குரலிட்டதுப்போல கூப்பிடுங்கள். அப்போது, நீங்கள் ‘பாவத்திலிருந்து விடுதலையாவதற்குரிய விருப்பத்தை’ மாத்திரமல்லாமல், அதைக்குறித்த ‘வெறுப்பையும்’ தேவன் உங்களுக்குத் தருவதைக் காண்பீர்கள். ஏனெனில், புதிய உடன்படிக்கையில் "தம்முடைய சித்தத்தைச் செய்ய விருப்பத்தையும், செய்கையையும் நம்மில் ‘தேவனே உண்டாக்குகிறவராயிருக்கிறார்’ (பிலி 2:13). இவ்வாறு, புதிய உடன்படிக்கை வழங்கும் சுவிசேஷம் ஆச்சரியமும் அற்புதமுமாய் இருக்கிறதே!
இயேசுவின் வாழ்க்கையை நாம் அப்படியே பாவனை செய்துவிட முடியாது. மாறாக, பரிசுத்த ஆவியின் மூலமாய் நாம் அந்த வாழ்க்கையில் பங்குபெறவே வேண்டும். அநேகம் கிறிஸ்தவர்கள் இந்த அற்புத ஜீவனை அனுபவிக்கவில்லை. ஏனெனில், இவர்கள் தங்கள் ஆவியில் தரித்திரம் கொண்டிருக்கவில்லை. ஆம், தேவன் தங்களுக்குத் தொடர்ச்சியாய் தேவை என்ற விழிப்பில்லாமலே இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு பதிலாய், இவர்கள் தனித்து நிற்பவர்களும் சுய நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்!!
‘தாகம் கொண்டவர்களை’ மாத்திரமே தம்மிடம் வந்து பானம் பண்ணும்படி இயேசு அழைத்தார். நாம் விசுவாசத்தில் நடந்து வரவேண்டும்மென்றால், இந்த ஆவிக்குரிய தரித்திரத்தின் தாகம் நம்மில் தொடர்ச்சியாக இருக்கவேண்டும்! பரிசுத்த ஆவி வல்லமையின் தேவையையும் தொடர்ச்சியாக உணர்ந்தவர்களாய் இருக்கவேண்டும்!! நம் வார்த்தையினால் சொல்லப்படாவிட்டாலும், நாம் பரிசுத்த ஆவியினால் நிறையவும், அவருடைய வல்லமையை அனுபவிப்பதற்கும் ‘தொடர்ச்சியான கூக்குரல்’ நம் இருதயங்களில் எப்போதும் இருந்திட வேண்டும். இவ்வித தாகத்தோடு இயேசுவிடம் வந்து பானம் செய்கிறவர்கள், வற்றாத ஜீவநதி அவர்கள் இருதயத்திலிருந்து பாய்ந்தோடுவதைக் கண்டடைவார்கள்! ஆம், அதுவே பரிசுத்த ஆவியினால் நிறைந்த ஜீவியமாகும்!! (யோவான் 7:37,38).
இவ்வாறாகவே, ஓர் பெலவீனமான விசுவாசிகூட புதிய உடன்படிக்கை வழங்கும் விசுவாச ஜீவியத்தின் மகிமையை அனுபவித்து, அவன் அதிக வலிமை கொண்டவனாக மாறிவிடமுடியும்!!
கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்!