தெய்வபக்தி நிறைந்த வாழ்வின் இரகசியம் எங்குள்ளது என்பதை அறிவீர்களா? நம்மைப்போன்ற அதே மாம்சத்தில் இயேசு இப்பூமியில் வாழ்ந்தார் என்ற வெளிப்பாட்டிலேயே இந்த இரகசியம் அடங்கியுள்ளது! ஆம், அந்த மாம்சத்திலிருந்த ‘ஒவ்வொரு’ இச்சையினாலும் அவர் சோதிக்கப்பட்டார்!! ஆகிலும், அவரோ தன் சிந்தையினாலோ; வார்த்தையினாலோ; செயலினாலோ; நோக்கத்தினாலோ (Motive) அல்லது வேறு எந்தவகையினாலோ ஒருதடவைக்கூடப் பாவம் செய்யாதவராய் இருந்தார் (1தீமோ 3:16, எபி 4:15).
இவ்வெளிப்பாட்டின் மூலம், தெய்வபக்தி நிறைந்த வாழ்வை அடைந்தவர்கள் மாத்திரமே, கொஞ்சம்கூட சண்டையும் வாக்குவாதமும் இல்லாத கிறிஸ்துவின் ஒரே சரீரமாகக் கூடி வாழ்ந்திட முடியும். ஆகவே, இந்த வெளிப்பாட்டைப் பெற்றிருந்தால் மாத்திரமே ஓர் ஸ்தல சபையானது, கிறிஸ்துவின் சரீரமாகத் திகழ்ந்திட முடியும் என்பதை ஆணித்தர உறுதியாய்க் கூறமுடியும். இந்த சத்தியத்திற்கே சபையானது தூணும் ஆதாரமுமாயிருக்க வேண்டும் (1தீமோ 3:15,16).
சோதனையானது, பாவத்திற்குச் சமமானது அல்ல! அவனவன் தன்தன் மாம்சத்தில் குடிக்கொண்டுள்ள இச்சைகளின் மூலமாகவே சோதிக்கப்படுகிறான் என யாக்கோபு 1:14,15 தெளிவுப்படுத்துகிறது. இயேசுவும், ‘இவ்விதமே’ சோதிக்கப்பட்டார் (எபி 4:15). ஆகிலும், பாவம் பிறப்பதற்கு முன்பாக, முதலாவது இச்சையானது கர்ப்பந்தரிக்க வேண்டும் எனவும், சோதனையின்பால் ஈர்க்கப்பட்டு அதற்கு நம் மனம் (mind) சம்மதிக்கும்போதுதான் இந்தக் ‘கர்ப்பந்தரித்தல்’ ஏற்படும் என்று தேவ வார்த்தை கூறுகிறது. ஆனால், இயேசுவின் மனமோ ஒரு தடவை கூட சோதனைக்குத் தன்னைச் சம்மதிக்கவே இல்லை. இதன் விளைவாய், ‘அவர் மாம்சத்தில்’ இருந்த இச்சைகள் பாவமாக அவர் ‘இருதயத்திற்குள்’ கர்ப்பந்தரிக்கும் சந்தர்ப்பம் ஒருபோதும் ஏற்படவேயில்லை. அவர் இருதயம் சுத்தமாயிருந்தது! இப்படிதான், அவர் தன் மாம்சத்தின் ஊடாய் ஓர் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை (A new and living way) உண்டுப்பண்ணினார் (எபி 10:20). இம்மார்க்கத்தின் வழியாகவே இன்று நாமும் நடந்திட முடியும்! ஏனென்றால், அவருடைய மாம்சம் இருந்தது போலதான் நம் மாம்சமும் இருக்கின்றது!
இதைதான், பவுல் ரோமர் 1:1-4 - ஆம் வசனங்களில் "தேவனுடைய சுவிசேஷம்" எனக் குறிப்பிடுகின்றார். இந்த சுவிசேஷம் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்ததாயும், அவர் மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவர் (ரோமர் 1:4,5) என்பதாயும் கொண்டுள்ளது. தாவீதின் ‘சந்ததி’ என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையில் `sperma' என பொருள் படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ‘தாவீதின் விந்தில்’ மாம்சத்தின்படி பிறந்தவர் என்பதே இதன் சரியான பொருளாகும். தாவீதின் வித்து அவன் குமாரன் நாத்தான் மூலமாய் சுதந்தரிக்கப்பட்டு நாத்தானின் வம்சவழியாய் அதை முடிவில் மரியாளின் தகப்பன் ஏலி சுதந்தரித்தான். (லூக் 3:23-31- ல் யோசேப்பு ஏலியின் மருமகன் என்பதாகக் கூறப்பட்டுள்ளார்). தன் தகப்பன் ஏலியிடமிருந்து மரியாள் தாவீதின் வித்தை சுதந்தரித்தாள்.
இருப்பினும், இயேசு இப்பூமியின் தகப்பன் மூலமாய் பிறவாமல், அவர் பரிசுத்தாவியினாலேயே பிறந்தார். எனவேதான், நாம் மறுபடியும் பிறப்பதற்கு முன் நமக்குள் இருந்த ‘பழைய மனிதன்’ (Old Man) அவருக்குள் இல்லை. நம் பழையமனிதனோ, கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டுவிட்டான். அப்பழைய மனிதன் அடக்கம் செய்யப்படுவதையே நாம் ஞானஸ்நானத்தின் மூலமாகச் சாட்சியிடுகிறோம். ‘மாம்சத்தைப் பற்றிக்கொண்ட சிந்தையே’ (ரோமர் 8:6) இந்த பழையமனிதன் என்பவன். இயேசுவை மெய்யாகவே பின்பற்றும் யாவருக்குள்ளும் இந்தப் பழைய மனிதன் மரித்துவிட்டான்.
இயேசு, மாம்சத்திலிருந்த நாட்களில், தனக்கு நேரிட்ட சோதனைகளின் மூலமாகத் தன் கல்வியைக் கற்றார் என வேதாகமம் விளம்புகிறது. இவ்விதமாய், ஒவ்வொரு சோதனையிலும் தன் மாம்சத்தில் பட்டப் பாடுகளினால் கீழ்படிதலைக் கற்றுக்கொண்டு பூரணரானார் அல்லது நிறைவுற்றார் (எபி 5:7-9). இவ்விதமாகவே, அவர் நாம் பின்பற்றக்கூடிய ‘முன்னோடினவரானார்’ (எபி 6:20).
இயேசு பரிசுத்தத்தை ஏதோ மொத்த ரூபமாகக் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக, தன் தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமாகவே, அப்பரிசுத்தத்தை அவர் அடைந்தார். அந்தபோராட்டம் ஓர் முடிவேயில்லாத போராட்டம் என எண்ணிவிடாதீர்கள். மாம்சத்தில் இருந்த ஒவ்வொரு இச்சையையும், ஒன்றன்பின் ஒன்றாக ஜெயம் ஜெயிக்கப்பட்டது! இவ்விதமாய், மானிடனின் மாம்சத்தில் குடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு இச்சையும் அவரின் வாழ்க்கை காலத்திற்குள்ளாய் சம்பூர்ணமாய் ஜெயம் எடுக்கப்பட்டது!
நம்முடைய மாம்சம், கொடிய விஷப்பாம்புகளால் நிறைந்த ஓர் பெட்டியைபோல் உள்ளது. அவ்விஷப்பாம்புகள், அசுத்தம்; கோபம்; துர்க்குணம்; சண்டை; கசப்பு; பண ஆசை; சுய நலம்; பெருமை.... போன்றவைகளாகும். இந்தப் பெட்டியில் ஓர் துவாரம் உண்டு! நாம் சோதிக்கப்படும்பொழுதெல்லாம், இத்துவாரத்தின் மூலமாய் இப்பாம்புகள் சீறிக்கொண்டு தங்கள் தலையை உயர்த்துகின்றன. நம்மைப்பொருத்தமட்டில், நாம் மனந்திரும்பாத நாட்களில் இப்பாம்புகளுக்கு தீனிபோட்டு வளர்த்துவிட்டபடியால், அவைகள் கொழுத்து மிக வலுவாக நம்மில் உள்ளன. சில குறிப்பிட்ட பாம்புகளுக்கு நாம் அதிகத் தீனியிட்டதால், அவ்வித இச்சைகள் மற்றவைகளைக் காட்டிலும் நம்மை அதிகமாய் இறுகப் பற்றிக்கொண்டிருக்கின்றன.
ஆனால், இப்பொழுதோ நாம் பாவத்திற்காக கிறிஸ்துவோடு மரித்துவிட்டோம். அதாவது, இப்பாம்புகளின்பால் கொண்டிருந்த நம் மனப்பான்மை இப்போது திசை மாறிவிட்டது. ‘கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்’ (கலா 5:24). எனவே, ஓர் சோதனை நேரத்தில் எப்பொழுதெல்லாம் ஒரு பாம்பு தன் தலையை இத்துவாரத்தின் மூலம் சீறி நீட்டுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அதன் தலையில் ஓர் தடிகொண்டு ஓங்கி அடித்துவிடுகின்றோம். அடிவாங்கிய பாம்பு சடாரென்று அப்பெட்டிக்குள் தன்னை இழுத்துக்கொள்கிறது. ஆகிலும், அது இன்னமும் இறந்துவிடவில்லை. மீண்டும் இதே சோதனை நிகழும்போது, இந்தப் பாம்பு மறுபடியும் தன் தலையை சீறி உயர்த்துகின்றது. மறுபடியும் அடிவாங்குகிறது. இந்நிகழ்ச்சி தொடர்வதால், அப்பாம்பு தன் வலிமையை இழந்து பெலவீனமாகிறது. முடிவில், மரணமும் சம்பவிக்கிறது! இதுவே, ‘மாம்சத்தில் பாடுபடுகிறவன்... பாவங்களை விட்டோய்ந்திருப்பான் (1பேதுரு 4:3) என்ற வசனத்தின் பொருளாகும். பொறுங்கள்... இப்போது ஒரு பாம்புதானே (ஒரு இச்சை) மரணம் அடைந்துள்ளது. இதைப்போலவே, மற்ற பாம்புகளுக்கும் சம்பவிக்கவேண்டுமே. ஆம், நாம் ஒவ்வொரு சோதனையிலும் (குறிப்பாக சிந்தைவாழ்வில்) உண்மையுள்ளவர்களாயிருந்து, பாம்புக்குத் தீனிபோடாமல், அதன் தலையை அடித்துக்கொண்டேயிருப்போமென்றால், ஒன்றன்பின் ஒன்றாக, நம் இச்சைகள் மரணம் அடைந்தேதீரும்! இமைப்பொழுதில் சுட்டுத் தள்ளுவதுப்போல், மாம்சத்தை சுடவோ அல்லது தூக்கிலிடவோ முடியாது. மாம்சத்தை சிலுவையில் அறையப்பட மாத்திரமே முடியும்! சிலுவையில் அறையப்படுவதால், மரணம் கொஞ்சம் கொஞ்சமாகவே நேரிட்டாலும், மரணமோ உறுதியாக சம்பவிக்கும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவேதான், நாம் சோதிக்கப்படும்போதெல்லாம், அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணும்படி புத்தி சொல்லப்பட்டிருக்கிறோம் (யாக் 1:2,3). ஏனெனில், சோதனையே நாம் ஒவ்வொரு பாம்பையும் அடித்துக் கொல்லுவதற்கான பொன்னான சந்தர்ப்பமாகும்.
உதாரணமாக, அசுத்தமானசிந்தையை எடுத்துக்கொள்ளுங்கள். இப்பகுதியில் நாம் உண்மையுள்ளவர்களாயிருந்தால், கொஞ்சக்காலத்திற்குள் அதற்கு மரணம் சம்பவிப்பதைக் கண்டிடமுடியும். நாம் மனந்திரும்பாத நாட்களில் அனேக ஆண்டுகளாய் இந்தப்பாம்பிற்குத் தீனி போட்டிருந்ததால், இப்பாம்பிற்கு மரணம் சம்பவிப்பதற்கு சில வருடங்கள் ஆகக்கூடும். ஆயினும், நாம் மாத்திரம் உண்மையுள்ளவர்களாய் இருந்தால் மரணம் நிச்சயம் சம்பவிக்கும் என்பதையும் அறிந்துக்கொள்ளுங்கள். நம் கனவுகள் (dream) தூய்மையாய் இருப்பதை வைத்தே இதை அறிந்து கொள்ளலாம். அசுத்தமான கனவுகள் அறிந்து செய்யும் பாவங்கள் (Conscious Sin) அல்ல. அவை அறியாத பாவங்கள்தான் (Unconscious). அதாவது, மாம்சமே பாவப் பிரமாணத்திற்கு ஊழியம் செய்கிறது. ஆகையால், நாம் அவ்வித கனவுகள் குறித்து குற்ற உணர்வுக்கொள்ளத் தேவையில்லை (ரோமர் 7:25, 8:1). நாம் இவைகளை அறிக்கை செய்யாமலே, இயேசுவின் இரத்தம் நம்மைக் கழுவி சுத்திகரித்துவிடும். அறிந்த பாவங்களை மாத்திரமே அறிக்கை செய்யப்பட முடியும். (1யோவான் 1:7- ம் வசனம் அறியாத பாவங்களையே குறிப்பிடுகின்றது. நாம் ஒளியில் நடந்தால், நம் எல்லா அறியாத பாவங்களையும் இயேசுவின் இரத்தம் ‘தானாகவே’, நம்மைச் சுத்திகரித்துவிடும். ஆனால், 9 -ம் வசனமோ நாம் அறிந்த பாவங்களை அறிக்கை செய்து பெறும் மன்னிப்பைக் குறிப்பிடுகிறது.) ஆகிலும், நம் கனவுகள் படிபடியாகத் தூய்மையாகிக்கொண்டே வருவதுதான், நம் சிந்தை வாழ்வில் நாம் உண்மையுள்ளவர்களாய் இருக்கிறோமா? இல்லையா? என்பதை அறிவதற்குரிய சிறந்த சாட்சியமாகும். நாளாவட்டத்தில் அசுத்த கனவுகள் தோன்றுவது அரிதாகிவிடும். இறுதியாக, அவைகள் நம்மைவிட்டு ஒழிந்தேப் போகும். ஆம், அதற்கு மரணம் பூரணமாய் சம்பவித்துவிட்டது. அவைகள் மறுபடியும் தோன்றினால்? சரிதான், நம் சிந்தை வாழ்வில் மறுபடியும் பின்மாற்றமடைந்து வீழ்ச்சியுற்றதே இந்த அறிகுறி! இவ்விதம் நம் சிந்தை வாழ்வில் நாம் கொண்டிருக்கும் உண்மையைக் கணக்கிடுவதற்கு இந்த பரீட்சை நமக்கு மிகவும் உதவுகின்றது. 100% உண்மையின் ஜீவியம் சம்பூரண வெற்றியை நமக்குக் கையளித்துவிடும். பாலிய இச்சையில் நாம் 100% உண்மையாய் இருப்பதென்பது, ஒரு ஸ்திரீயின் அல்லது ஓர் ஆடவனின் சௌந்தர்யமான முகத்தை ரசிக்காமல், இவ்வித ரசனைக்கு முன்னோடியாய் அதைத் தழுவி நிற்கும் எவ்வித காம சிந்தையும் கொள்ளாமல் இருப்பதுதான்! இவ்வித உண்மையே, நாம் கைக்கொள்ளும்படி நீதிமொழிகள் 6:25- ல் "உன் இருதயத்தில் அவள் அழகை இச்சியாதே" என கூறப்பட்ட வசனமாகும். இவ்விஷயத்தில் உண்மையாய் இருப்பவர்கள் மிகவும் கொஞ்சமேயாதலால், தங்கள் கனவுகளில் தூய்மை பெற்றவர்களும் மிகவும் கொஞ்சமேயுள்ளார்கள்.
நிறைவான பரிசுத்தத்தை நீங்கள் தேடாதவர்களாக இருந்தால், இங்கே கூறப்படும் செய்திகள் உங்களுக்குக் கொஞ்சம்கூட புரியவே புரியாது. ‘கனவா? அவைகள் அறியாமல் செய்கின்ற பாவங்கள்தானே!" என எண்ணுபவர்கள், இக்கனவுகள் தங்களின் அன்றாட ‘அறிந்து நடக்கும்’ வாழ்வில் உண்மையில்லாததால் தோன்றியவைகளே என்பதை உணராதவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இங்கு கூறப்பட்ட போதனைகள் ஏதோ அளவுக்கு மிஞ்சியதைப் போலவும் நடைமுறைக்கு ஒவ்வாதது போலவும் தோன்றும். சுயசித்தம் கொண்டவர்களுக்கு "ஆவிக்குரிய" விஷயங்கள் புத்தியீனமாகவே தோன்றும். இவர்களை விட்டுத்தள்ளுங்கள்! புதுப்புனலாகப் பொங்கிவரும் நற்சுவிஷேத்தை இங்கே கேளுங்கள்! ‘உங்கள் சிந்தைவாழ்வு எவ்வளவு அசிங்கமாக இருந்திருந்தாலும், நீங்கள் மாத்திரம் இப்புதிதும் ஜீவனுமான மார்க்கத்தில் உண்மையுள்ளவர்களாய் நடந்து வருவீர்களென்றால், உங்கள் சிந்தை முற்றிலுமாய் தூய்மை பெற்று மிளிர்ந்துவிடும்!’ இதன் நற்பலனாக, உங்கள் கனவுகளும் தூய்மையடைந்ததைக் காண்பீர்கள்!
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் என இயேசு அழைக்கிறார். பூரண வெற்றியடையும்படி தவிக்கும் தாகம் கொண்டவர்கள் மாத்திரமே இந்த அழைப்பிற்கு தகுதியுள்ளவர்கள். அவர்களே ஜெயம் பெறும்படி இயேசுவண்டை வந்து நிற்பார்கள் (மத் 11:28, யோ 7:37). யார் இவர்கள்? ‘எப்பொழுதெல்லாம் தங்கள் சிந்தை வாழ்வில் தடுமாறுகிறார்களோ, அப்பொழுதெல்லாம் தங்கள் இரகசியப் பாவத்திற்காகத் துக்கம் பீறிட கண்ணீர் சிந்துபவர்கள்’! இவர்களே தேவனுடைய சத்தியங்களை விரைவாய்ப் புரிந்து கற்றுக்கொள்பவர்கள்! மற்றவர்களுக்கோ, இச்சத்தியங்கள் ஏதோ ‘துர் உபதேசம்’ (Heresy) என்று கூட எண்ணக்கூடும். தேவனே, வெளிப்படுத்தினால், ஒழிய, ஆவிக்குரிய சத்தியங்கள் சுபாவமான அறிவினால், அறிந்துக்கொள்ள ஒருக்காலும் முடியாது. தேவனோ தன் உயர்ந்த வெளிப்பாடுகளைத் தங்கள் மறைவான பாவங்களுக்காகத் துயருற்று துக்கிக்கும் அவரின் தாசர்களுக்கே அருளுகின்றார். ‘இளைப்பறுதல் தருவேன்’ என இயேசு வாக்குரைத்ததை என்னவென்று எண்ணுகிறீர்கள்? தங்களின் தோற்கடிக்கப்பட்ட வாழ்விற்காய் துயருற்றோருக்குப் பாவத்திலிருந்து பூரண வெற்றி தருவதே இந்த இளைப்பாறுதல்!
கானான் தேசத்தைச் ‘சுதந்தரிப்பதை’ இளைப்பறுதலுக்குள் ‘பிரவேசிப்பதற்கு’ ஒப்பாக எபி 4 -ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. கானான் தேசத்தில் இருந்த அரக்கர்கள் ஒருவர்பின் ஒருவராகக் கொல்லப்பட்டனர் என்றும், அதற்கு நீண்டகாலம் ஆனது என்றும் தேவவசனம் கூறுகிறது. இவ்விதம் கர்த்தருக்கென்று அவர்கள் சுதந்தரித்த பூமியை, இளைப்பாறுதலும், சமாதானமும் ஆண்டுக்கொண்டது! கானானின் அரக்கர்கள், நம் மாம்சத்தில் குடிகொண்டிருக்கும் இச்சைகளுக்கு ஒப்பாகவே கூறப்பட்டுள்ளனர். மேலும், இந்த அரக்கர்கள் நம் ‘அறிந்த பாவங்களைக்’ குறிப்பிடுவதாய் உள்ளனர். கானான் தேசத்துக் குகைகளில் ஒளிந்திருந்த அரக்கர்கள் நம் ‘அறியாத பாவங்களுக்கு’ மாதிரியாகக் கூறப்பட்டுள்ளனர். அதே நான்காம் அதிகாரத்தில் தேவன் தன் ஜனத்திற்கு ‘இளைப்பாறுதலின் காலத்தை’ (Sabbath Rest) ஆயத்தம் செய்துள்ளார் என வாசிக்கிறோம். நாம் இந்த இளைப்பாறுதலுக்குள் எந்தநாளும் நிலையாகத் தங்கிட முடியும். ஆம், நம் வாழ்நாளெல்லாம் ஏதோ ஒரு அரக்கனோடு போராடி யுத்தம் செய்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது தேவசித்தம் இல்லை. அந்த அரக்கன் கொல்லப்பட வேண்டும். இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க வேண்டும். பின் அடுத்த அரக்கன் கொல்லப்பட வேண்டும்.... இளைப்பறுதலுக்குள் பிரவேசிக்க வேண்டும். நாம் நம் உண்மையிலிருந்து பின்வாங்கும்போது இளைப்பறுதலை இழந்து மீண்டும் போராட்டமே துவங்கும் என்பதையும் எச்சரிக்கையாக மனதிற்கொள்ளுங்கள்!
ரோமர் 6 -ம் அதிகாரம் வெற்றி வாழ்க்கைக்குள் நடத்திச் செல்லும் அடுத்தடுத்த படிகளைக் கூறுகின்றது. 1. கிறிஸ்துவுடனே கூட நாம் மரித்தோமென்பதை அறிந்திருத்தல் (வசனம் 6:8 இதை தெளிவாகப் புரிந்துக்கொள்ளாவிட்டாலும், இதை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்). 2. தொடர்சியான நம் ஜீவியத்தில் நம்மைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவே வைத்திருத்தல் (வசனம் 11). 3. தேவனுக்கு மாத்திரமே நம் அவயவங்களை நீதிகுரிய ஆயுதங்களாக ஒப்புக்கொடுத்தல் (வசனம் 13-18). 4. இப்படிகளை கடந்து வரும்போது, நம் வாழ்வில் பரிசுத்தமாகுதல் படிப்படியாய் வளர்ந்து பலன் தருவது நிச்சயம். முடிவில் நித்திய ஜீவன் அல்லது திவ்விய சுபாவத்தில் நாம் பங்குப்பெறுவோம் (வசனம் 22). ஆம், நம் எல்லையின் இலக்கானது திவ்விய சுபாவத்தில் பங்குபெறுவதேயாகும்!
இயேசுவின் வாழ்வில் சம்பவித்தது யாது? அவரும் நம்மைப் போலவே எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டார். ஆகிலும், அவர் சோதனையோடு போராடிக் கொண்டேயிருக்கவில்லை. ஏனெனில், அவர் தன் மாம்சத்திலிருந்த பாம்புகளுக்கு ஒரு தடவை கூடத் தீனிப்போடவேயில்லை. மேலும், அவர் சோதிக்கப்பட்ட ஒவ்வொரு தடவையும் பாம்புகளின் தலையை தொடர்ச்சியாக அடித்துக்கொண்டேயிருந்தார். எனவே, வெகுவிரைவாய் மரணம் பிரவேசித்து , அப்பாம்புகள் ஒன்றன்பின் ஒன்றாய் செத்து மடிந்தன. இயேசு தன் வாலிபப் பருவத்தில் நம்மைப் போலவே, காம இச்சையினால் சோதிக்கப்பட்டார். ஆனால், அவைகளுக்கு அவர் மிகமிகத் துரிதமாய் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். எப்படியென்றால், அவர் அவ்வளவாய் 100% உண்மையுள்ளவராய் இருந்ததால் அப்படி செய்யமுடிந்தது. இதன் விளைவாக, அவர் தன் ஊழியத்திற்குள் பிரவேசித்தபோது, இக்காம இச்சையினால் சோதிக்கப்படவே இல்லை! இக்காம இச்சையினால் தங்களுக்கு வரும் சோதனையின் போராட்டத்தில் உண்மையில்லாதிருப்பவர்கள் இவைகளைப் புரிந்துக் கொள்ளவே முடியாது. தேவதூஷணப் புத்தகமாகிய "கிறிஸ்துவின் கடைசி சோதனை" என்ற புத்தகம் இப்போது திரைப்படமாகவும் வந்துள்ளது. இதெல்லாம் என்ன? இயேசுவின் சோதனையைக்குறித்த அறியாமையின் உச்சக்கட்டமான மதியீனம்!! சகலமும் அறிந்த அறிஞர்களுக்கு தேவன் இச்சத்தியங்களை மறைத்துவிட்டார். ஆகிலும், அவர் இன்றும் தன் இரகசியங்களைத் தனக்குப் பயப்படுகிறவர்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்!
தன் நர்ஸரி வகுப்பின் சோதனைப் பாடத்திலேயே (பாலிய இச்சை, கோபம், பொய் சொல்லுதல்....) உண்மையில்லாதிருக்கும் ஒருவர் இயேசு தன் Ph.d கல்வியில் கற்ற சோதனையை அறிந்து கொள்ள முயற்சிப்பது ஆணவம் நிறைந்த மதியீனமேயாகும்! நீங்கள் சோதிக்கப்படும்போது, நீங்கள் உண்மையில்லாமல் இருந்துக்கொண்டு, எத்தனை புத்தகங்கள் படித்தாலும் அல்லது கேஸட்டுகள் கேட்டாலும் தேவ இரகசியங்களை ஒரு இம்மிக்கூட புரிந்துக்கொள்ளவே முடியாது!
இயேசுவிடம் அறியாத பாவங்கள் (Unconscious Sin) இருந்ததா? நிச்சயமாய் இல்லை. இல்லாவிட்டால், அவர் தன் மாம்சத்தின் நாட்களில் பிதாவோடு ஐக்கியம் வைத்திருக்க முடியாதே! ஏனெனில், தேவன் அவ்வளவு பரிசுத்தமானவர். அவரால், பாவத்தைப் (அவை அறியாமல் செய்யப்பட்டாலும்) பார்க்கக் கூட முடியாது. பழைய உடன்படிக்கையில், அறியாமல் செய்யும் பாவங்களுக்கும் ஓர் பலி செலுத்தப்பட வேண்டும் (லேவி 4:2,13,27,28). புதிய உடன்படிக்கையிலோ, நாம் நம் அறியாத பாவங்கள் செய்யப்படும் அதே தருணத்திலேயே இயேசுவின் இரத்தம் நம்மைக் கழுவி சுத்திகரித்துவிடும். இவ்விதமே, நாம் பிதாவோடு கொண்டுள்ள ஐக்கியம் காக்கப்படுகின்றது.
நம் அறிந்த ஜீவியத்தில் நாம் பெருமையினாலும், சுய நலத்தினாலும் வாழ்ந்த வாழ்க்கையின் மொத்த ரூபமே அறியாத பாவங்கள். ஆனால், இயேசுவோ ஒரு போதும் இவ்வித வாழ்க்கை வாழாதிருந்தபடியால் அவரில் அறியாத பாவங்கள் இருந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவரின் அறிந்த சிந்தைகள் முழுவதும் தூய்மையாக இருந்தபடியால், ஒருபோதும் அவருக்கு அசுத்த கனவு தோன்றவில்லை. சரீரத்தின் செய்கைகள் வெளியரங்கமாவதற்கு முன்பே, அவைகள் ஆவியின் பெலத்தினால் மாம்சத்திலேயே மரணத்திற்குள் கொண்டு வரப்பட்டது (ரோமர் 8:13). ஆனால், நமக்கோ அறியாத பாவங்கள் நம் ஜீவியத்தில் உள்ளன. ஏனெனில், நம் கடந்த வாழ்க்கையின் பழக்கங்கள், கிரியைகள், நோக்கங்கள் யாவும் நம் ஆன்மாவை சுயநலத்தினாலும் பெருமையினாலும் கூன வைத்துவிட்டது. ஆனால், இப்பொழுதோ, நம்முடைய கூன்விழுந்த ஆன்மாவை நிமிர்த்தச் செய்யும்படிக்கே ஆவியானவர் வந்துள்ளார்!
இயேசுவின் மாம்சத்தில் பாவம் இருந்தது என நாம் கூறுவது சரியாகுமா? நாம் எப்போதும், வேத வசனங்களை மாத்திரமே உபயோகிக்க ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். இவ்விதம் குறிப்பிட்டுக் கூறும் வார்த்தைகளிலும் நாம் பூரணத்தை நோக்கிக் கடந்து செல்வோமாக! ஆம், இயேசுவின் மாம்சத்தில் பாவம் இருந்தது என ஒரு வேதவாக்கியத்திலும் சொல்லப்படவில்லை. ஆனால், அவரின் மாம்சத்தில் இச்சைகள் இருந்தன. எபிரேயர் 4:15 -ம் வசனத்தை யாக்கோபு 1:14,15- ம் வசனங்களோடு ஒப்பிட்டால் இந்த உண்மையைக் காணமுடியும். ஆகிலும், அந்த இச்சைகள் அவருக்குள் ஒருபோதும் கர்ப்பந்தரிக்கவேயில்லை! எனவே, பாவமும் அங்கு பிறக்கவேயில்லை! ஆதலால், இயேசு பாவ மாம்சத்தின் சாயலாக வந்தபோதும், ‘அவர் மாம்சத்திற்குள் பாவம் இல்லை’. நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய் (சரியாய்) பகுத்து போதிக்கிறவனாயும்......ஜாக்கிரதையாயிரு என தீமோத்தேயுவுக்கு புத்தி சொல்லப்பட்டது (2தீமோ 2:15). தீமோத்தேயுவுக்கே இந்த புத்திமதி வேண்டுமென்றால், நமக்கு எவ்வளவு அதிகம் வேண்டும்!
நாம் ‘இப்போது’ இயேசுவைப்போல் இருக்க (Be) தேவன் கட்டளையிடவில்லை. அவ்விதம் நாம் இருக்கமுடியாது என்பதை அவர் அறிவார். ஏனெனில், இருப்பதென்பது (Being) நம் ஆள் முழுமையும் குறிக்கும். அவர் ‘வரும்போது’ நாம் அவரைப்போல் ‘இருப்போம்’. இன்று தேவன், நாம் இயேசுவோடு ‘நடக்கவே’ (Walk) அழைக்கிறார் (1யோ 2:6 - ம் வசனத்தையும் 1யோ 3:2 ம் வசனத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்). ‘நடப்பதென்பது’ ஓர் அறிந்து செய்யும் செயலாகும். அறிந்து வாழும் நம் வாழ்க்கையில் மாத்திரமே, நாம் இயேசுவைப் பின்பற்றிட முடியும்.
அன்புடையீர், நித்தியானந்த மகிமையான சுவிசேஷம் கேளீர்! இயேசு, நம்மைப் போன்ற மாம்சத்தில் வந்து, நம்மைப்போலவே, எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டு ஜெயம் பெற்றபடியால், இப்போது நாமும் அவரைப்போல் ஜெயம்பெற முடியும் (வெளி 3:21)!! இனியும் நாம், நம் அறிந்த வாழ்க்கையில் (Conscious Life) பாவம் செய்துக்கொண்டிருக்கத் தேவையேயில்லை. மேலும், நாம் உண்மையுள்ளவர்களாய் இருப்பதினிமித்தம், நம் ஜீவியத்தின் எல்லை முழுவதும் ஒன்றன்பின் ஒன்றாக பூரணமாக பாவத்தைவிட்டோய்ந்து அவைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும் முடியும்!! அவ்விதமாய் பாவத்தை விட்டோயும் எல்லைப் பரப்பை திவ்விய சுபாவம் ஆண்டுக்கொள்ளும்! நாம் இயேசுவின் மரணத்தை நம் சரீரத்தில் எப்போதும் சுமந்திட உண்மையுள்ளவர்களாயிருந்தால், இயேசுவினுடைய ஜீவன் நம் சரீரத்தில் விளங்கும் (2 கொரி 4:10) என தேவன் பொன்னான வாக்குறுதி அளித்திருக்கிறார்!!!
ஆ, என்னே இம்மகிமையான சுவிசேஷம்! அல்லேலூயா!!
கேட்பதற்கு காதுள்ளவன் எவனோ அவன் கேட்கக்கடவன்!!