கிறிஸ்துதான் சபையைக் கட்டுகிறவர்

எழுதியவர் :   ஜோஜி சாமுவேல் வகைகள் :   திருச்சபை
Article Body: 

“நான் என் சபையைக் கட்டுவேன்” (மத் 16:18) என்று இயேசு சொன்னார்.

புதிய ஏற்பாட்டில் ‘சபை’ என்னும் வார்த்தையானது முதன்முதலில் இந்த வசனத்தில் தான் காணப்படுகின்றது. அவர்தான் (அவர் மட்டுந்தான்) சபையைக் கட்டப் போவதாக இயேசு சொல்லியிருக்கும் வார்த்தைகள் எவ்வளவு பெரிய ஆறுதலைத் தர வல்லவைகளாக உள்ளன!

சபையைக் கட்டுவதிலே இயேசுவின் ராஜரீகத்தையும், அதிகாரத்தையும் முதலாவதாக நாம் பார்க்க வேண்டும்.

பெந்தெகோஸ்தே என்னும் நாளிலே சபை ஸ்தாபிக்கப்படுதலைப் பற்றி அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரம் விவரித்துச் சொல்லுகையிலே, “இரட்சிக்கப்படுகிறவர்களை அநுதினமும் சபையிலே கர்த்தர் சேர்த்துக்கொண்டு வந்தார்” (அப் 2:47) என்னும் வசனமானது கர்த்தரின் ராஜரீகத்தை அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது.

சபையைக் குறித்து இயேசு கூறிய கூற்றானது உலகளாவிய சபையைக் (universal Church) குறிக்கிறது. ஆனால் அவர் தொடர்ந்து இரண்டாம் தடவை சபையைப் பற்றிக் குறிப்பிட்டது ஸ்தல சபையைப் (Local Church) பற்றியதாகும் (மத் 18:17). இங்கு (மத் 18:15-17) குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளெல்லாம் ஒரு ஸ்தல சபையிலேதான் நடைமுறைப்படுத்தப்பட முடியும். இந்த இடத்திலேயும், இரண்டு மூன்று பேர் ஒருமனப்பட்டுக் கூடிவந்தால், அவர்கள் மத்தியிலே நான் இருப்பேன் என்று சொல்லுவதன் மூலமாக, மீண்டுமாய்ச் சபையைக் குறித்த விஷயத்தில் தம்முடைய ராஜரீகத்தைத் தெரியப்படுத்துகிறார் (அடுத்துவரும் 18:18-20 ஆகிய வசனங்களில் நாம் இவற்றைக் காணலாம்). ஒரு ஸ்தல சபையானது கிறிஸ்துவின் சரீரமாகத் தன்னை வெளிப்படுத்த வேண்டுமானால், அதன் நடுவில் கிறிஸ்து தலையாக இருக்க அனுமதிக்கப்படும்போதுதான் அது சாத்தியமாகும்.

சாது சுந்தர் சிங், உலகளாவிய சபைக்கும், ஸ்தல சபைக்கும் உள்ள உறவைக் குறித்து விவரித்துச் சொல்வதை இதோ பாருங்கள்: மனுஷன் உயிர் வாழத் தேவையான நீரானது, ஆறுகள், ஏரிகள், கிணறுகள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கின்றது. ஆனால் அவன் தனது தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக, இதிலிருந்து தண்ணீரை மொண்டு கொள்வதற்கு ஒரு குவளை (cup) தேவைப்படுகிறது. அக் குவளைதான் (cup) ஸ்தல சபையாகும்.

உலகளாவிய சபையானது (universal Church) பல காலமாக, பல நாடுகளில், பெந்தெகோஸ்தே நாள் தொடங்கி, கர்த்தர் வருமளவும் பரவிக் காணப்படுகிற ஒன்றாகும். யாரெல்லாம் இயேசுவை இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக் கொண்டார்களோ, அவர்களெல்லாம் இதில் அடங்குவர். ஆனால் ஒவ்வொரு விசுவாசியும் ஸ்தல சபையிலே தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டு, கிறிஸ்துவின் சரீரத்திலே தனது பங்கை நிறைவேற்ற வேண்டுமென தேவன் விரும்புகிறார்.

உலகளாவிய சபை, ஸ்தல சபை ஆகிய இரண்டிற்குமே கர்த்தரே தலையாய் இருக்கிறார். அதைக் கட்டுவதும், பராமரிப்பதும் அவருடைய பொறுப்புத்தான் (எபே 1:23; 4:13-15; கொலோ 1:18). இப்படியாய், ஆதித் திருச்சபையிலிருந்த சத்தியங்களெல்லாம், அதைத் தொடர்ந்து வந்தவர்களின் கவலையீனத்தினால் இழக்கப்பட்டு, அவற்றையெல்லாம் கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக, கர்த்தர் தமது உண்மையுள்ள பலதரப்பட்ட ஊழியர்களைக் கொண்டு மீண்டுமாய் மீட்டெடுத்து வருகிறார்.

சபைச் சரித்திரத்தை நாம் வாசித்தால், அதில் கர்த்தர் 16-ஆம் நூற்றாண்டிலிருந்து, விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுதல், விசுவாசியின் ஞானஸ்நானம், பரிசுத்தம், உலகத்திலிருந்து பிரிந்திருப்பது, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் வரங்கள் ஆகிய சத்தியங்களையெல்லாம் சபைக்கு மீட்டுத்தருவதை நாம் காணலாம். 20-ஆம் நூற்றாண்டிலே தேவன் பெந்தெகோஸ்தே இயக்கத்தை எழுப்பி, அதன் மூலமாக பரிசுத்த ஆவியின் ஊழியத்தையும், அருடைய வரங்களையும் வலியுறுத்தப் பண்ணினார்.

இதுபோன்ற மகிமையான சத்தியங்களெல்லாம் மீட்டெடுக்கப்பட்டுவிட்ட படியால், தேவனுடைய எல்லா சத்தியங்களையும் மீட்டெடுக்கப்படும் பணியானது நிறைவடைந்துவிட்டது எனச் சொல்ல முடியுமா? அநேகக் கிறிஸ்தவர்கள் “ஆம்” என பதிலளிப்பார்கள்.

“ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக” என்று எபிரேயர் 6:1,2-ல் சொல்லப்படுவதைக் கவனமாய்ப் பாருங்கள்.

இந்த வசனங்களில் கூறப்படும் மனந்திரும்புதல், விசுவாசம், தண்ணீர் ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் ('ஸ்நானங்கள்' என்று சொல்லப்படுவது), சுகமாக்குதல் (கைகளை வைக்குதல்), நம்முடைய கர்த்தரின் வருகை, கடைசி நியாயத்தீர்ப்பு, பலனளிப்பது போன்ற சத்தியங்களெல்லாம் மீட்கப்பட்டு, அவையாவும் சுவிசேஷ மற்றும் பெந்தெகோஸ்தே சபைகளில் காணக் கிடைக்கின்றன. இவை யாவும் வெறும் அஸ்திபாரம்தான் என்று எபிரேயர் 6:1,2-ல் உள்ள வசனங்கள் சொல்லுகின்றன. அப்படியானால் கட்டிடத்தைக் குறித்து என்ன சொல்வது? கட்டிடத்தின் மேற்கட்டுமானம் கட்டப்படுவதைக் குறித்துச் சொல்லும் சத்தியங்கள் யாவை?

நாம் பழைய ஏற்பாட்டு உதாரணம் ஒன்றைப் பார்க்கலாம். இஸ்ரவேலர்கள் பாபிலோன் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவுடன், புதிய ஆலயத்தின் அஸ்திபாரத்தை மாத்திரமே ஆரம்பத்தில் போட்டனர். அதைத் தொடர்ந்து 16 ஆண்டுகளாக வேறெதுவும் செய்யவில்லை. ஆலயத்தின் கட்டிடத்தையே அவர்கள் ஒதுக்கிவிட்டனர். அச்சமயத்தில், இதைக் குறித்துப் பேச, ஆகாய், சகரியா என்னும் இரு தீர்க்கதரிசிகளைத் தேவன் எழுப்பினார். ஆகாய் மூத்தவராகவும், சகரியா இளையவராகவும் இருந்தார்கள். இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்ல, அவர்கள் இருவரும் ஒரே செய்தியைத்தான் பெற்றிருந்தனர். “ஆலயம் கட்டப்படுவதைக் குறித்து இன்னும் எவ்வளவு காலம் அசட்டையாய் இருப்பீர்கள்?” என்பதே அவர்கள் இருவரும் பெற்றிருந்த செய்தியாகும். இறுதியில் ஜனங்கள் அவர்கள் இருவரது தீர்க்கதரிசனச் செய்திகளின் சவால்களையும் ஏற்றுக் கொண்டு, கட்டிடத்தைக் கட்டி முடித்துவிட்டார்கள்.

சுவிசேஷ, பெந்தெகோஸ்தே சபைகள் தங்களுடைய “விசுவாச அறிக்கைகளில்” மேன்மை பாராட்டும் போது, அவர்கள் வெறும் அஸ்திபாரத்தை மட்டுமே போட்டிருப்பதை அடையாளம் காண வேண்டும். அவர்கள், அஸ்திபாரத்தை மட்டும் போட்டுவிட்டு, ஆலயத்தைக் கட்டிமுடிக்காத இஸ்ரவேல் மக்களுக்கு ஒப்பாய் இருக்கிறார்கள்.

கட்டிடத்தின் மேற்கட்டுமானம் என்பது யாது? எபிரேயர் 6:2-ல், முதிர்ச்சியை - maturity (பூரணத்தை - perfection) நோக்கி ஓடக்கடவோம்” எனச் சொல்லப்படுகிறது.

கிறிஸ்துவுக்குள் முதிர்ச்சியை (மற்றும் பூரணத்தை) நோக்கி ஓடுவதுதான், சபையின் மேற்கட்டுமானமாகும்.

எந்த ஒரு கட்டிடத்தின் அஸ்திபாரத்தையும் எவராலும் காண முடியாது. மேற்கட்டுமான வேலைப்பாடுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது.

உலக மக்கள், கிறிஸ்தவர்களாகிய நம்மிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்கள்? அவர்கள் நம்முடைய அஸ்திபார உபதேசங்களில் விருப்பம் கொள்வதில்லை. நாம் குழந்தை ஞானஸ்நானம் எடுத்தோமா, வளர்ந்தவர்களாகி ஞானஸ்நானம் எடுத்தோமா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை; பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை மறுபடியும் பிறக்கும் போது பெறுவதாக விசுவாசிக்கிறோமோ அல்லது இரண்டாம் அனுபவமாய் இருப்பதாக விசுவாசிக்கிறோமா என்பதைப் பற்றியும் அவர்கள் கவலைப்படுவது கிடையாது. இந்த உலகமானது நம்முடைய அன்றாட வாழ்க்கையைத்தான் உற்று நோக்குகின்றது.

ஒருமுறை மகாத்மா காந்தியிடம், அவர் ஏன் கிறிஸ்தவத்தைப் புறக்கணித்துவிட்டார் எனக் கேட்கப்பட்டபோது, அவர், “நான் கிறிஸ்துவைப் புறக்கணிப்பதில்லை. உங்களில் அநேகர் உங்களுடைய கிறிஸ்துவைப் போலில்லாமல் இருப்பதையே புறக்கணிக்கிறேன்” எனப் பதிலளித்தாராம்.

இவ்வுலகமானது கிறிஸ்துவைப் போலுள்ள கிறிஸ்தவர்களைக் காணவே விரும்புகின்றது. அதுதான் ஆலயத்தின் மேற்கட்டுமானமாகும்.

இரட்சிப்பு, தண்ணீர் ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் நாம் கொடுக்கும் விலாவாரியான விளக்கங்களுக்கெல்லாம் செவிமடுப்பதில் இவ்வுலத்திற்கு சற்றும் விருப்பமில்லை. அஸ்திபாரத்தை அவர்களால் காண முடியாதபடியால், அதைக் குறித்து அவர்கள் அக்கறை கொள்வதில்லை. ஆனால் நம்முடைய வாழ்க்கையானது “கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாய்” மாறும் போது, இந்த உலகமானது விழித்துக் கொண்டு, கவனிக்கத் தொடங்குகிறது. நாம் கிறிஸ்துவைப் போல மாறுவதே, நம்மைப் பற்றிய தேவனுடைய குறிக்கோளாகும்., இதற்காகவே அவர் நம்மை முன் குறித்தார் (ரோமர் 8:29).

அப்போஸ்தலனாகிய பவுலும், இந்த அஸ்திபாரத்தைப் போட்ட பின்பு, மேற்கட்டமைப்பைக் கட்டுவதில் ஆர்வம் காட்டினார். “கிறிஸ்துவை அறியவும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகவும், கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின்பந்தயப் பொருளுக்காக (கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாறுவது) இலக்கை நோக்கித் தொடருவதும்,” (பிலி 3:10-14) அவர் தன் வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்த வாஞ்சையாகும். இந்த ஒன்றை மாத்திரமே பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய்த் தொடருவதாக பவுல் கூறுகிறார்.

ஆனால் இன்றைய விசுவாசிகளில் பெருவாரியானவர்களிடத்தில், பவுலிடம் இருந்தது போலவே, இயேசுவைப் போல மாறுவதற்காகச் சிலுவையை எடுத்துக் கொண்டு, அவரைப் பின்பற்ற வேண்டும் என்று அந்தத் தீராத வேட்கை இல்லாமற் போய்விட்டது. “சீஷன் தன் குருவைப் போலாக வேண்டும்” (மத் 10:25) என்பதை அவர்கள் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை. கிறிஸ்துவுக்கொப்பாய் மாற வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் அக்கறைப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் உபதேச விஷயங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாது, அஸ்திபாரத்தைக் குறித்தே வாராவாரம் பேசிப் பொழுதைக் கழிக்கின்றனர். அவர்கள் மேல்கட்டுமானத்தை ஆரம்பிப்பது எப்போது? இத்தகைய நம்பிக்கையற்ற சூழ்நிலையில் நமக்குத் தேவைப்படுவதெல்லாம், ஆகாய், சகரியா ஆகியோரின் தீர்க்கதரிசன ஊழியம்தான்.

ஆனால் இதுபோன்ற தீர்க்கதரிசன ஊழியத்தை நிறைவேற்றி முடிப்பதற்கு யார் இருக்கிறார்கள்? இதைச் செய்வதற்குக் கடுமையான விலைக்கிரயம் செலுத்தியாக வேண்டும். தேவனுக்காக நிற்க விரும்பிய சகரியா தீர்க்கன் அனுபவித்த உபத்திரவங்களைக் கவனித்துப் பாருங்கள். அவன் தன்னுடைய ஆற்றல்மிகு தீர்க்கதரிசன ஊழியத்தின் மூலமாக, ஆலயத்தின் மேற்கட்டுமானப் பணி விரைந்து முடிக்கப்பட வேண்டியதின் அவசியத்தை ஜனங்கள் உணரத்தக்கதாக, அவர்களது கண்கள் பிரகாசமடைய வைக்க நாடினான்; அவன் எந்த மனிதனிடமிருந்தும் கனத்தையோ, அங்கீகாரத்தையோ எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவனுடைய முடிவோ மிக சோகமாக அமைந்துவிட்டது. ஜனங்கள் அவன் மீது மூர்க்கங்கொண்டு, அவனைக் கொன்றுவிட்டனர் (மத் 23:45). இன்று, விசுவாசிகள், நாட்டின் சட்டத்திற்குப் பயந்து, சகரியா போன்ற தீர்க்கதரிகளைக் கொல்லாமல் விட்டு வைத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள், “நாவினாலே வெட்டிப் போடுகிறார்கள்” (எரே 18:18).

நாம் இன்று எந்தவிதமான தப்பெண்ணமும் இல்லாமல், ஒரு திறந்த மனதுடன், கிறிஸ்தவ உலகைச் சுற்றிலும் பார்க்கும்போது, தேவன் இந்த மணி நேரத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, “சகரியாவின்” தீர்க்கதரிசன ஊழியத்தை எழும்பப்பண்ணியிருப்பதை நம்மால் காண முடியும். இத்தகைய ஊழியமானது, “பூரணத்தை நோக்கி ஓடி, இயேசுவின் சாயலுக்கொப்பாக மறுரூபப்படும்படி” தொடர்ச்சியாய் சவாலிட்டு அழைக்கின்றது.

ஜனங்கள் மீண்டும் மீண்டுமாய் அஸ்திபாரத்தைப் போடுவதைத் தவிர்த்து, இந்தத் தீர்க்கதரிசனச் செய்திகளுக்குச் செவி சாய்த்து, மேற்கட்டுமானப் பணியை விரைந்து முடிக்குமாறு தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். இன்று கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட வேண்டுமென உறுதிபூண்டவர்களெல்லாம், சத்துருவின் மூர்க்கவெறித் தாக்குதலை எதிர்கொள்ளுவார்கள். ஆனால், “வெள்ளம்போல சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வார்” (ஏசா 59:19 – Literal Translation).

சகரியாவின் தீர்க்கதரிசன ஊழியத்தைக் குறித்து எஸ்ரா, நெகேமியா ஆகிய புத்தகங்களில் சரித்திர ஆதாரத்துடன் அறிந்து கொள்ள முடிகிறது. ஆலயத்தையும் எருசலேமின் அலங்கத்தையும் கட்டவிடாமல், சத்துருக்கள் எவ்வளவாய்த் தடுக்க முயன்றார்கள் என்பதை இப்புத்தகங்கள் விரிவாக விளக்குகின்றன.

எதிரிகள் ஏழு வழிகளில் தடுத்ததாக நெகேமியா குறிப்பிடுகின்றார்.

1. அவர்களுக்கு மிகவும் விசனமாயிருந்தது (நெகே 2:10).

2. அவர்கள் வேலையாட்களைப் பரியாசம் பண்ணி, நிந்தித்தார்கள் (நெகே 2:14; 4:3).

3. அவர்கள் கோபித்து, எரிச்சலடைந்தார்கள் (நெகே 4:1).

4. அவர்கள் சண்டையிடவும், வேலையைத் தடுக்கவும் சதி செய்தார்கள் (நெகே 4:8).

5.அவர்கள் ஒருவரோடொருவர் கண்டு பேசலாம் எனக் கூப்பிட்டு, அவனுக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்தார்கள் (நெகே 6:2).

6. அவர்கள் அவனை அச்சுறுத்தினார்கள் (நெகே 6:7, 17, 18).

7. அவர்கள் தங்களது ஏஜென்டுகளைப் பாளையத்திற்குள்ளாகவே வைத்து, அவனைப் பயமுறுத்த முயன்றார்கள் (நெகே 6:10-18).

ஆனால் தேவனுடைய பணியோ தொடர்ந்து நடந்து, நிறைவடைந்தது. முடிவிலே அவனுடைய சத்துருக்களும், “இந்தக் காரியம் தேவனாலே கைகூடி வந்தது” (நெகே 6:16) என்று அறிந்து கொண்டார்கள்.

இதைப் போலவே அப்போஸ்தலருடைய நாட்களிலும், எதிராளியானவன், தேவனுடைய பணிக்கு எதிர்த்து நின்றான். ஆனால் தேவனுடைய பணி “தடையில்லாமல்” (அப் 28:31) நடந்தது.

இன்று சபையிலும் தேவனுடைய பணியானது, இது மாதிரியாகவே எதிர்க்கப்பட்டு கொண்டிருக்கிறது. இருப்பினும் அது இன்னும் தடையில்லாமல் தொடருகின்றது. ஏனெனில், கர்த்தர்தாமே, “நான் என் சபையைக் கட்டுவேன்” எனச் சொல்லியிருக்கிறார். அவர் அதைச் செய்வதை ஒருவனாலும் தடுக்க முடியாது.