தெய்வீக உதவிக்கு தாழ்மையே திறவுக்கோல்!

Article Body: 

ஓர் அதிபதி இயேசுவிடம் வந்து, "நல்ல போதகரே, நித்தியஜீவனை சுதந்தரித்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். அதற்கு இயேசு, "நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன், தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே" எனக் கூறினார் (லூக் 18:18,19). நாம் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டுமானால், "அவருடைய உள்ளான ஜீவியத்தை அறிந்தவர்களாய்" இருக்க வேண்டும். ஒரு முறைக்கூட பாவம் செய்யாத இயேசு, இந்த அதிபதியிடம் "என்னை நல்லவன் என்று சொல்வானேன்?" எனக் கூறியதற்கு காரணம் என்ன? ‘இயேசுவில் இருந்த தாழ்மையே’ காரணமாகும். இந்த பூமியில் மனுஷகுமாரனாய் இயேசு ஜீவித்தபடியால் பாடுகளிலும், சோதனைகளிலும் கஷ்டமான சூழ்நிலைகளிலும் ஜீவித்த மற்றவர்களோடு தன்னையும் சமமாக்கிகொண்டார். நம் யாவரையும் பார்த்து இயேசு சொல்லவிரும்பிய செய்தி யாதெனில்: நானும் உங்களைப் போலவே, வாழ்வின் கஷ்டங்களையும், வலிகளையும் உணர்ந்திடும் மனிதன். இந்த உலகில் உங்களோடு சேர்ந்து வாழ்ந்தபடியால், உங்களைப் புரிந்துக்கொள்ள என்னால் முடியும்! இந்த உலகம் பொல்லாங்கனின் ஆளுகைக்குள் இருப்பதைப்போலவே, இந்த மாம்சத்திலும் ஒரு நன்மையும் வாசமாயில்லை! நீங்கள் சோதிக்கப்படுவது போலவே நானும் சோதிக்கப்படுகிறேன்! உங்களைப்போலவே துன்பங்களுக்குள் கடந்து செல்கிறேன். எனக்கும் ஒரு குடும்பம் உண்டு. என் குடும்பத்தில் உள்ளவர்களை போஷிப்பதற்கு நானும் வேலை செய்வது அவசியமாயிருக்கிறது. பல்வேறு விதத்தில் நான் ஒவ்வொருநாளும் சோதிக்கப்படுகிறேன்! ஒருவேளை நீங்கள் தோற்கடிக்கப்பட்டு நான் ஜெயித்திருக்கலாம்!! தேவன் ஒருவர் மாத்திரமே பொல்லாங்கினால் சோதிக்கப்படுவதில்லை. ஆகிலும், நானோ சோதிக்கப்படுகிறேன். ஆகவேதான், நான் சோதிக்கப்படும் காலம்மட்டும் என்னை நல்லவன் என்று கூறிட இயலாது. ஏனெனில், நாம் எல்லோருமே உபத்திரவங்களுக்கு ஊடாய் செல்கிறோம்" என்றே கூறுகிறார். ‘இவ்வாறாகவே’ இயேசுவைப்பற்றிய வெளிப்பாட்டை பரிசுத்தாவியானவர் பவுலுக்குத் தந்தார்.

ஒரு மனிதனாய் இந்த பூமிக்கு வந்த இயேசு தன்னைத்தானே தாழ்த்தினார். மனிதர்களாய் இருக்கும் நாம் யாவரும் செய்திட வேண்டிய சரியான செயல் "நம்மை நாமே தாழ்த்துவதுதான்" என்பது 2+2=4 என தெளிவாய் அறிவதற்கு ஒப்பாகும்.

இந்த பூமிக்கு இயேசு மனிதனாய் வந்தபடியால், எந்த மனிதனும் செய்திட வேண்டிய "தன்னைதானே தாழ்த்தும்" செயலையே அவரும் செய்தார்! எனவேதான், எந்த சூழ்நிலையிலும் ஒருமுறை கூட அவர் பாவம் செய்யாவிட்டாலும், தன்னை "நல்ல போதகன்" என அழைக்கபடுவதற்கு மறுத்தார்! நமக்கு உதவி செய்ய வந்தவர் என எபிரேயர் 2:18 கூறுகிறபடி எவ்விதமான உதவியை செய்ய வந்தார்? சோதனையில் வீழ்ச்சியடையும் நான் எவ்வாறு இயேசுவிடம் இருந்து உதவி பெறமுடியும்? நாம் எல்லோருமே சோதிக்கப்படுகிறோம். இயேசுவும் கூட சோதிக்கப்பட்டார்! ஆனால், இயேசுவிடமிருந்து யார் உதவிப் பெற முடியும்? ஆம், அவரைப்போலவே தாழ்மை உள்ளவர்களுக்கு அவர் உதவி செய்கிறார். வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கின்ற யாவரையும் தன்னிடம் வரும்படியே இயேசு அழைத்தார் (மத் 11:28). பல்வேறு சூழ்நிலைகளில், நாம் யாவருமே கஷ்டத்தின் பாதைக்குள் செல்லுகிறோம். சிலருக்கு மனைவிமார்களால் துயரம். சிலருக்கு பிள்ளைகளால் துயரம். சபையில் இருக்கும் சிலருக்கு "நான் நல்லவனாயிருந்தும் என்னை தவறாய் புரிந்து கொள்கிறார்கள்" என்ற துயரம்! இவ்வாறு நாம் யாவருமே பாரமான பிரச்சனைகளுக்குள் கடந்து செல்லுகிறோம். இப்படிப்பட்ட நம் ஒவ்வொருவரையும் ஆண்டவர் பார்த்து தன்னிடம் வரும்படி அழைப்பது, ‘அவருடைய நுகத்தை எடுப்பதற்குத்தான்’ நம்மைப்போலவே இயேசுவும் இந்த பூமியில் 100% மனிதனாய் வாழ்ந்தபடியால், அவருக்கும் ஒரு நுகம் இருந்தது. ஆகிலும் "என் நுகம் எளிது! உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டுமா? என்னிடம் வந்து கற்றுக்கொள்ளுங்கள்" என்றே அழைக்கிறார். நீங்கள் அவரிடமிருந்து எவ்வளவு கற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்க்கிறீர்கள்? சபையில் பத்து வருடம் இருந்தால், பத்து காரியங்களும் 20 வருடம் இருந்தால், 20 காரியங்களும் ஒரு மூப்பராய் இருந்தால் 30 காரியங்களும் கற்றுக்கொள்வதா? அப்படி இல்லவேயில்லை!

ஒரு பக்தன் ஒரு சமயம் "கிறிஸ்தவ ஜீவியத்திற்கான இரகசியம் மூன்று உண்டு!" அது, 1. தாழ்மை 2. தாழ்மை 3. தாழ்மை எனக் கூறினார். ஆகவே, 30 வருடங்கள் நீங்கள் கிறிஸ்தவராயிருந்தாலும், இயேசுவிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியதெல்லாம் தாழ்மைதான்!

எவ்வித பிரச்சனையானாலும் நான் அவரிடம் செல்லும்போது "என்னிடம் இருந்து தாழ்மையை கற்றுக்கொள்" என்ற ஒரு சொல்லை மாத்திரமே கூறுகிறார். அப்போது, உங்களை அவர் விடுவிப்பார்! உபாகமம் 8:2 -ல் "உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நடத்தி, உன்னை சிறுமைப்படுத்தி உன்னை சோதிக்கிறார்" என வாசிக்கிறோம். இஸ்ரவேலரின் வனாந்திர பயணத்தில்தான் கர்த்தர் இவ்வாறு உரைத்தார். இப்பூமியின் வாழ்க்கையும் ஓர் வனாந்திர பயணமேயாகும். இதை உபாகமம் 8:3 ஐ -விவரிக்கையில் "உன்னை சிறுமைப்படுத்தி உன்னை பசியினால் வருத்தினார்" என வாசிக்கிறோம். ஆம், சாப்பிட போதுமான உணவு இல்லாதிருக்கும் போதோ, நீங்கள் வியாதிபட்டிருக்கும் போதோ, அவ்வித சூழ்நிலைகளில் தேவன் உங்களைத் தாழ்த்த விரும்புகிறார் என்பதை அறிந்திருக்கிறீர்களா? இதற்கு நேர்மாறாக நீங்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாய், உங்கள் பிள்ளைகள் வெளிநாட்டில், இந்தியாவைக் காட்டிலும் பத்து மடங்கு சம்பாதிக்கிறவர்களாய் இருக்கக்கூடும்! அது நல்லதுதான்! ஆனால், பொருளாதார பெருக்கமும் ஒருவித கஷ்டம் என்பதை இதே உபாகமம் 8:13-17 வசனங்கள் கூறுகிறது. "வெள்ளியும் பொன்னும் பெருகினதால் உங்கள் இருதயம் பெருமையடைந்து, என் சாமர்த்தியமும் என் கைபெலனும் இந்த ஐஸ்வர்யத்தை எனக்கு சம்பாதித்தது" என தங்கள் இருதயத்தில் சொல்லிக்கொள்ளும் துன்பம்! இங்குதான், தேவன் நம்மை தாழ்த்தும்படி கூறுகிறார். திரட்சியான வேளைகளிலும் நாம் தாழ்மையாய் இருக்கவே தேவன் விரும்புகிறார்.

"அவர் தன்னைதானே தாழ்த்தினார்" என்ற ஒரு வார்த்தையில் இயேசுவின் முழு ஜீவியமும் தொகையிடப்பட்டிருக்கிறது. மாம்சத்திலிருந்த ஓர் மனுஷனாய் இருந்த காலம் மட்டும் தன்னை அவர் தாழ்த்தியே ஆக வேண்டும். இவ்வாறாகவே, நாம் செய்தால், இயேசுவைப் போலவே நாமும் எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்கலாம்! நம் துயரங்களும் நம்மைவிட்டு கடந்துப்போம். இந்த பூமிக்குரிய ஜீவியத்தில் "தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துப்போவான். இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ... பிதாவே, உம் நாமத்தை மகிமைப்படுத்தும்" என்றே ஜெபிக்கிறவர்களாய் இருக்கவேண்டும்! (யோ 12:26,27). இதுவே நமது அனுதின சிலுவையாய் இருந்திட முடியும். நாம் ஜெபிக்க வேண்டியதெல்லாம் "இந்த நோக்கத்திற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். ஆண்டவரே, நீர் என்னை தாழ்த்துகிறீர்! நீரே இந்த சூழ்நிலையை அனுமதித்தீர்! உமது நாமத்தை மகிமைப்படுத்துவதே என்னுடைய விருப்பம்" என்பதாய் இருக்க வேண்டும். இவ்வாறு நாம் தாழ்த்தும் போது, நாம் தேவனிடமிருந்து உதவியை பெற்றுக்கொள்வோம். ஆகவேதான், அவரிடமிருந்து தாழ்மையைக் கற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறார். அவர்தாமே, தன்னைத்தானே தாழ்த்தினார்! அவர்தாமே, தன் சுயசித்தத்தை வெறுத்தார்! இவ்வாறு "தன்னைத்தான் தாழ்த்துவது ஒன்றே மானிட வர்க்கத்திற்கு தேவையானது" என்பதை நிரூபித்து காண்பித்தார்.

யோவான் 12 -ல் தன் பிதாவோடு கொண்ட உறவில், இயேசுவின் தாழ்மையை காண்கிறோம். யோவான் 13- ல் தன் சக மனிதர்களோடு கொண்ட உறவில் அவரது தாழ்மையை காண்கிறோம். தன் சீஷர்களுடைய பாதங்களை அவர் கழுவினபோது எதை அவர் வெளிப்படுத்தினார்?" தன் சீஷர்களை முடிவுபரியந்தமும் அன்பு கூர்ந்தார்" (வசனம் 1) என்பதே ஆகும். இதை இயேசு குறிப்பிட்டு "நான் உங்களுக்குச் செய்ததுப்போல நீங்களும் செய்யும்படி மாதிரியை காண்பித்தேன். ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவன் அல்ல" (வசனம் 15,16) என்றார். ஆம், அங்கு யூதாஸின் கால்களையும் இயேசு கழுவினார். அதன்பின்பு 21 -ம் வசனத்தில், இயேசு தன் ஆவியில் கலங்கி "உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்" என்றார். அவர் ஏன் தன் ஆவியில் கலங்கினார்? எது அவருக்கு கஷ்டமாய் இருந்தது? அவர் நம்மைப்போலவே சோதிக்கப்பட்டு... யூதாஸை முடிவு பரியந்தமும் அன்பு கூர்ந்தார்!. தனக்கு நெருக்கமாய் இருந்த யோவானின் கால்களைக் கழுவினது போலவே, யூதாஸின் கால்களையும் கழுவினார். முடிவில், துணிக்கைகளை தோய்த்து அவனுக்கு கொடுத்த பின்பே அவனை அனுப்பி வைத்தார். அதன் பின்புதான் "இப்பொழுது மனுஷக்குமாரன் மகிமைப்படுகிறார். தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்" (வசனம் 31) என்றார்.

சபையில், சில சமயங்களில் உங்களோடு ஒத்துப்போகாதவர்களை அன்புகூர்ந்திட நீங்கள் கஷ்டப்படுகிறீர்களா? ஆனால், இயேசுவோ தன்னைக் காட்டி கொடுக்கப்போகும் யூதாஸை கூட முடிவு பரியந்தமும் அன்பு கூர்ந்தாரே! அந்த சோதனையை ஜெயித்து "இப்போது தேவன் மகிமைப்படுகிறார்" என்றும் உரைத்தார். இதற்கு முன்பு தன்னை விசுவாசிக்காத யூதர்களை பார்த்து, "நான் போகும் இடத்திற்கு வர உங்களால் முடியாது" என கூறியிருந்தார். ஆனால், இப்போதோ, தன் சீஷர்களிடம் தான் போகுமிடத்திற்கு அவர்களும் வரவேண்டுமென்ற விருப்பத்தை தெரிவித்தார். யூதாஸின் கால்களைக் கழுவியும், அவன் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்பதையும் அறிந்தும் அதை வெளியரங்கப்படுத்தாமல் அனுப்பி வைத்ததையும் சீஷர்கள் கண்டிருந்தார்கள். இப்போது, "நான் உங்களில் அன்பாயிருந்ததுப் போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்" என்னும் புதிதான கட்டளையை அவர்களுக்கு கொடுத்தார் (வசனம் 34).

சபையில் பல வருடங்களாய் இருப்பவர்கள் தொடர்ச்சியான தாழ்மையில் இல்லாதிருப்பது துயரமேயாகும். நாம் தேவனை தொடர்ந்து பிரியப்படுத்தி வாழ வேண்டுமென்றால், இயேசுவைப் பின்பற்ற வேண்டும். அவ்வளவுதான். எந்தக் கடின சூழ்நிலையிலும் நம் சொந்த ஜீவனை வெறுத்து தாழ்மையில் இருக்க வேண்டும். "நான் சரியாகத்தான் இருக்கிறேன், பிறர்தான் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை" என சிந்திப்பதை தவிர்த்துவிட்டு "சொந்தஜீவனை" மரணத்திற்குள் கொண்டு வந்துவிடுங்கள். பிலிப்பியர் 3:13,14 வசனங்கள் மூலம் பவுலிடமிருந்து நாம் தாழ்மையை கற்றுக்கொள்ள வேண்டும். "ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி, பந்தய பொருளுக்காக இலக்கை நோக்கி ஓடுகிறேன்" என்றார் பவுல். கடந்த கால ஜெயங்கள் நம்மை பெருமையடையச் செய்துவிடும்! பல வருடங்களாக நீங்கள் வாழ்ந்த உத்தம வாழ்க்கைதான், இன்றைக்கு நீங்கள் வாழும் ஆவிக்குரிய ஐஸ்வர்யத்தை கொண்டு வந்ததாக எண்ணுவதும் பெருமையேயாகும்!

சகலமும் தேவ கிருபையினால் மாத்திரமே, "இன்று" நம் இருக்கிறோம் என்பதை மனதில் கொண்டவர்களாய் கடந்த கால ஜெயத்தை மறந்திட வேண்டும்.

இன்று அநேகர் ஆவிக்குரிய வளர்ச்சி குன்றியும், ஒருவருக்கொருவர் கொண்ட அன்பில் தாழ்ச்சியும், மற்றவர்களோடு ஐக்கியம் கொள்ளாதிருப்பதற்கும் ஓர் முக்கிய காரணம் என்னவெனில், அவரவர் தாங்கள் செய்வதே சரி என்றும், தாங்கள் மாத்திரமே பிறரை நேசிக்கிறார்கள் என்றும் எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால், "ஒருவருக்கொருவர் அன்பில் தொடர்ச்சியாய் கடன்பட்டிருங்கள்" என்றே பவுல் புத்தி சொல்கிறார் (ரோ 13:8). நாம் இன்னமும் போதிய அளவு நம் வாழ்க்கைத் துணையை அல்லது சகோதர சகோதரிகளை அன்புகூரவில்லை என்பதை அறிந்திருக்கிறோமா? ஆம், எல்லோருக்கும் நாம் அன்பின் கடன்பட்டிருக்கிறோம்.

தங்கள் பிள்ளைகளுக்காக பாடுபட்டு பிராயாசப்பட்டதை அநேகர் தங்கள் பிள்ளைகளிடம் கூறுவது உண்டு. இவ்வாறு அவர்களிடமிருந்து அன்பையும் நன்றியையும் எதிர்பார்ப்பது சரிதானா? அவர்கள் நம்மை எவ்வளவு குறைவாக அன்புக்கூருகிறார்கள் என எண்ணுவதை தவிர்த்துவிட்டு, அவர்களல்ல நாமே கடனாளிகள் என எண்ணுவதே சரியான செயலாகும். மெய்யான தாழ்மை என்பது பவுல் 2கொரி 12:15- ஆம் வசனத்தில் கூறுகிறது போல "நான் உங்களில் எவ்வளவு அதிகமாக அன்பு கூருகிறேனோ, அவ்வளவு குறைவாக அன்புக்கூரப்பட்டிருந்தாலும் மிகவும் சந்தோஷமாக உங்களுக்காக என்னையே செலவு செய்ய ஆயத்தமாயிருக்கிறேன்" என எண்ணுவதே ஆகும். அதற்கு மாறாக, யாரைக் குறித்தும் குறை சொல்பவர்களாய் நாம் இருந்தால், மற்றவர்களுக்காக நாம் செய்த தியாகங்களை சிந்தித்துக் கொண்டு "கடந்த காலத்தில் வாழ்பவர்களாய்" மாத்திரம் இருந்திட முடியும்.

ஒருமுறை ஒரு தேவஊழியர் "நான் இருக்கும்வரை எவ்வித அநீதியும் சபையில் நடந்திட அனுமதிக்க மாட்டேன்" என தன் சபையில் பிரசங்கித்தார். வீட்டிற்கு திரும்பிய அவரிடம் "சபையில் நீ இருக்கிறபடியால், நீயே எல்லாம் கவனித்துக் கொள்வாய்! இனி நான் உனக்குத் தேவையில்லை" என தேவன் பேசினார். தன்னுடைய பாவத்தை உணர்ந்த அவர், அடுத்த கூட்டத்தில் ஜனங்களுக்கு முன்பாக அறிக்கை செய்தார். நமக்கு நாமே எவ்வளவு பெலவான்களாய் இருக்கிறோம் என்பதை பாருங்கள். ஆனால், பவுலோ "எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது" எனக்கூறினார் (2கொரி 3:5). ஆம், நாம் உடைப்பட்ட மனிதர்களாய் இருக்கவேண்டும்.

இந்த ஞாயிற்றுக்கிழமை பிரசங்கபீடத்தில் நிற்கும் ஓர் ஊழியன் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதிகம் உடைப்பட்டிருக்க வேண்டும்.

ஊழியம் செய்யும் தன் சபையில் இனி முதற்கொண்டு ஊழியம் இல்லை என்ற நிலை வந்தாலும், மகிழ்ச்சியுடன் கடைசி வரிசையில் அமர்ந்து, வேறு ஒரு நல்ல ஊழியரை என்னுடைய ஸ்தானத்தில் வைத்திட ஆண்டவரிடத்தில் ஜெபிக்கிறவனாய் இருக்கவேண்டும். இவ்வாறு மெய்யாகவே இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாய் இருந்தால், நம் பிதா எப்போதும் நம்மோடு கூட இருப்பார். ஊழியம் என்னைவிட்டு போவதோ, அல்லது வியாதிப்பட்டு படுக்கையில் இருப்பதோ நமக்கு ஒரு பொருட்டாய் இருப்பதில்லை. பெலவீனமாய் கையில் "ஊன்று கோலோடு" நடக்க நேர்ந்தாலும் "ஆண்டவரே, இந்த வியாதி சுகமாகாவிட்டாலும் உமது கிருபை எனக்கு போதும்! உமது சமூகமும் உமது ஆளுகையும் என் ஜீவியத்தின் எல்லாச் சூழ்நிலைகளிலும் இருந்தால் அதுவே எனக்குப்போதும்" என்று பவுல் கூறியதுப்போல நாமும் கூற வேண்டும். "கர்த்தருடைய இரகசியம் அவருக்கு பயந்திருக்கிறவர்களிடத்தில் இருக்கிறது" என்ற சங்கீதம் 25:14- ன் பின்குறிப்பு விளக்கம் யாதெனில், "தாழ்மையுள்ளவர்களிடத்தில் கர்த்தருடைய நெருங்கிய உறவு உண்டு" என்பதே ஆகும். இவ்வாறு தேவனோடு கொண்ட நம்முடைய நெருங்கிய உறவு, கணவன் மனைவியின் உறவைப்போல நீங்காததாக இருக்க வேண்டும். இவ்வாறு இயேசுவையும் பிதாவையும் அறிவதே நித்தியஜீவன்! இயேசு என்னோடிருந்தால், யாதொன்றும் எனக்கு தேவையில்லை! இது போன்ற ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கைக்குள் பிரவேசிக்க ஆண்டவர் நமக்கு உதவி செய்வாராக!