குற்ற உணர்வுக்குள் நடத்தும் பிரசங்கங்கள்

Article Body: 


"உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்"
(யோ 3:17).

நாம் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கும் போது, அதைக் கேட்கிற ஜனங்கள் தங்களைக் குற்றவாளிகளைப் போல நினைக்கவோ அல்லது தாங்கள் ஆக்கினைக்குட்பட்டதைப் போல உணரும்படியாகவோ பிரசங்கிக்கக் கூடாது.

நாம் தேவ ஜனங்களைப் பாவத்தின் "வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்குக்" காப்பாற்ற வேண்டுமானால், ஒருவரையொருவர் "தினந்தோறும் உற்சாகப்படுத்த வேண்டும்" என்று வேதம் நமக்குச் சொல்லுகிறது (எபி 3:13). அப்படியென்றால், நாம் "ஒவ்வொரு நாளும்"
பிரசங்கிக்கிற "ஒவ்வொரு செய்தியும்" கேட்கிற விசுவாசிகளை "உற்சாகப்படுத்தும்படிக்கே" இருக்க வேண்டும் என்பதே அதன் பொருளாகும். இப்படித்தான் நாம் அவர்களைப் பாவத்திலிருந்து இரட்சிக்க முடியும். ஆனால் சாத்தானோ நம்முடையப் பிரசங்கத்தின் மூலமாக நாம் விசுவாசிகள் மத்தியில் குற்ற உணர்வை ஏற்படுத்துவதன் மூலம், அவர்களைப் பரிசுத்தத்திலும், தேவ பக்தியிலும் வளரச் செய்துவிடலாம் என்று நினைக்கச் செய்கிறான். இப்படியாய் அவன் நம்மை வஞ்சிக்கப் பார்க்கிறான். அது ஒரு பொய்.

தேவ வசனத்தைப் பிரசங்கிப்பதின் மூலமாக பரிசுத்த ஆவியானவர் தேவப் பிள்ளைகளைக் கண்டித்து உணர்த்துவது உண்மைதான். ஆனால் அதே சமயத்தில் அவர் அவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் தவறுவதில்லை. நாம் மேலே வாசித்தபடி, உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவ்வண்ணமே விசுவாசிகளை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய ஆவியை அனுப்பாமல், அவர்களை உற்சாகப்படுத்தும்படிக்கே அனுப்பினார். தேவன் ஆறுதலின் தேவனாவார். அவர் எப்போதுமே நம்முடைய ஆவியைத் தூக்கிவிட்டு, நமக்கு நம்பிக்கையைத் தருகிறவராகவே இருக்கிறார் (ரோமர் 15:5; 2கொரி 1:3,4 பார்க்க). ஆக்கினைக்குட்படுத்தும் ஊழியமானது, பழைய உடன்படிக்கை ஊழியமாகும். அது ஜனங்களை ஆவிக்குரிய மரணத்துக்கு நேராய் நடத்தும் (2கொரி 3:7-9). ஆனால் புதிய உடன்படிக்கை ஊழியமோ, அவர்களைத் தேவபக்திக்கு நேராய் ஜீவனுக்குள் நடத்துகிறதான வாழ்க்கையை அருளும் ஊழியமாகும்.

ஜனங்களை ஆக்கினைக்குட்படுத்தி, அவர்களுக்குள் குற்ற உணர்வை ஏற்படுத்தி, அவர்களுடைய பாவங்களை வெளியரங்கப்படுத்தும் பிரசங்கங்கள் என்னும் கண்ணியிலே நாம் விழுவது மிகவும் சுலபமான விஷயமாகும். அப்படிச் செய்வோமானால், நாம் விசுவாசிகளைக் "குற்ற உணர்வு" பெறச் செய்ததனிமித்தம் நம்முடைய ஊழியத்தில் தோல்வி அடைந்து விட்டதாகத்தான் அர்த்தம். இப்படிப்பட்ட மனிதனின் தூண்டுதலால் ஏற்படுத்தப்படும் குற்ற உணர்வானது ஜனங்களைச் சிறையில் அடைத்துவிடும். அவ்வாறு சிறைப்படுத்தப்பட்டவர்கள் அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவது அரிதான செயலாகி விடுகிறது.

வாலிபராய் இருக்கும் போது, அனுபவமும், பாதுகாப்பும் இல்லாமல், தங்களைக் குறித்துத் தாழ்வு மனப்பான்மை கொண்ட பிரசங்கிகள், ஜனங்களைக் கவர வேண்டும் என்பதற்காக ஓர் உயர்ந்ததும், உண்மையற்றதுமான பரிசுத்தத் தரத்தைப் பிரசங்கிக்கிறார்கள். அப்படிச் செய்யும் போது, அவர்களைத் தவிர, அதைக் கேட்கிற அனைவரும் குற்ற உணர்வு அடையும்படி செய்துவிடுகிறார்கள். இது அவர்கள் தங்களுடைய பிரசங்கத்தில் பயன்படுத்தும் ஒரு பொதுவான யுக்தியாகும். அவர்கள் பிரசங்கிக்கும் தரத்தை எட்டிப் பிடிப்பதென்பது எவராலும் இயலாத காரியமாகும். இயேசுவோ, அவரது அப்போஸ்தலரோ பிரசங்கிக்காததும், நம்மை ஜீவிக்கும்படி சொல்லாததுமான தரத்தையே அவர்கள் சொல்லுகிறார்கள். இப்படிப் பிரசங்கிக்கும் பிரசங்கிமார்கள்தாமே தங்களுடைய சொந்த வாழ்க்கையில் தாங்கள் பிரசங்கிக்கும் வண்ணம் நடப்பதில்லை. ஆனால் பெலவீனமான மனதுடைய விசுவாசிகள் இதையெல்லாம் கேட்டு, ஆக்கினைக்கும், குற்ற உணர்விற்கும் உட்படுத்தப்பட்டு துவண்டு விடுகிறார்கள்.

"முழு நேர" கிறிஸ்தவ ஊழியத்திலோ அல்லது மிஷனரி ஊழியத்திலோ பங்குபெறும்படி விசுவாசிகளுக்கு விடுக்கப்படும் சவால்களில் பெருவாரியானவை, இந்தக் "குற்ற உணர்வுக்குள் நடத்தும்" முறையிலேதான் உள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தேவைகளைக் குறித்துப் பிரசங்கிமார்கள் மிகவும் அழுத்தமாகக் கூறுவதால், அதைக் கேட்கிறவர்கள் குற்ற உணர்வு அடைகிறார்கள். பின்பு அதைக் கேட்கிறவர்களில் சிலர் தங்களுடைய வேலைகளைத் துறந்து, மிஷனரிப் பணிக்காகச் செல்லும்படியான முடிவை எடுக்கிறார்கள். இயேசுவும், அப்போஸ்தலரும் இந்த மாதிரியான யுக்திகளையெல்லாம் பயன்படுத்தி உலகின் அறுவடைக்காக மனிதரை அனுப்பவில்லை. இயேசு தம்முடைய சீஷர்களை உலகின் ஒவ்வொரு நாட்டிற்கும் போய், ஜனங்களை சீஷராக்கும்படி சொன்னார். ஆனால் அவர்கள் இஸ்ரவேலிலே சொகுசாக வாழ்ந்த வாழ்க்கையையும், உலகின் பிறபகுதிகளில் வறுமையில் வாழ்ந்த ஜனங்களின் வாழ்க்கையும் ஒப்பிட்டுப் பார்க்கச் செய்து, அதினிமித்தம் அவர்களுக்குள் குற்ற உணர்வை உண்டாக்கி, பின்பு அவர்களை அனுப்பவில்லை. பிரசங்கிகளால் கையாளப்படும் இது போன்ற "குற்ற உணர்வை உண்டாக்கும்" முறைகளால்தான் கிறிஸ்தவ ஊழியர்கள் மத்தியிலே பெயரளவுக்கு வாழும் மனோபாங்கு ஏற்பட்டுள்ளது. மிஷனரிப் பணியைச் செய்யும்படி விடுக்கப்படும் அழைப்பானது, மக்களின் செவியில் பட்டவுடனேயே, அவர்கள் உலகப் பணியிலே நிலைத்திருப்பதைக் குறித்த குற்ற உணர்வை அவர்களுக்குள் உண்டாக்குகிறது. அதினிமித்தமாக அவர்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்யப் போகிறார்கள். தேவனோ அவர்களைத் தம்முடைய ஊழியத்தைச் செய்ய அழைக்கவே இல்லை. ஆனால் அவர்களோ குற்ற உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டு ஊழியத்திற்குச் செல்லுகிறார்கள். முழுநேர கிறிஸ்தவ வேலை என்பது ஒரு புனிதமான வேலையாகும். தேவனால் அழைக்கப்படாமல், அதைச் செய்யத் துணியக்கூடாது.

கிறிஸ்தவ வட்டாரத்தில் காணப்படும் தசம பாகம் மற்றும் காணிக்கை முதலியவற்றைப் பற்றிய சத்தியமானது இந்த "குற்ற உணர்வை உண்டாக்கும்" முறையின் கீழ்தான் வருகின்றது. "தேவனுடைய வேலைக்காக" பணம் கொடுக்கவில்லை என்னும் குற்றச்சாட்டு விசுவாசிகளை வாட்டி வதைக்கிறதாக உள்ளது. இதன் விளைவாக அவர்கள் பாடுபட்டுச் சம்பாதித்துச் சேமித்த ஆயிரக்கணக்கான ரூபாய் இச்சைமிகு பிரசங்கிகளின் "ஊழியத்திற்குப்" போய் சேருகின்றது. ஏழைகளுக்கு எதிராக இன்றைய பிரசங்கிமார்களால் செய்யப்படும் மிகத் தீமையான செயல்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. "கிறிஸ்துவின் நாமத்தில்தான்" இவை அனைத்தும் அரங்கேற்றப்படுகின்றன. இதைப் போன்ற உயர் அழுத்தம் தரக்கூடிய வழிமுறைகளையெல்லாம் இயேசு ஒருபோதும் பயன்படுத்தியது கிடையாது. "நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால், என்னுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்" (யோவான்14:15) என்பதே இயேசுவின் வார்த்தைகளாக இருந்தன. இயேசு பேதுருவிடத்திலே,"இவை எல்லாவற்றையும்விட நீ என்னை அதிகமாக நேசித்தால், என் ஆடுகளை மேய்ப்பாயாக" என்று சொன்னார் (யோவான் 21:15-17). தேவன் தமக்கு உற்சாகமாய்க் கீழ்ப்படிகிறவர்களைத்தான் நேசிக்கிறார் (2கொரி 9:7).

எந்தப் பிரசங்கியின் ஆத்தும வல்லமையும் திணிக்கப்படாமல், நாமாகவே, மனமுவந்து, மகிழ்ச்சியுடன் செய்யும் ஊழியந்தான் புதிய உடன்படிக்கையின்கீழ் தேவன் நமக்கு வகுத்துள்ள வழிமுறையாகும். புத்தி சாதுர்யமுள்ள பிரசங்கிகள் நம்மீது செலுத்தும் ஆத்தும அழுத்தத்திற்கும், பரிசுத்த ஆவியின் மென்மையான வழிநடத்துதலுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும். பிசாசுகள் ஜனங்களைப் பிடித்துக் கொள்ளும்போது, அவர்களுடைய தெரிந்தெடுக்கும் சுதந்தரத்தை அவர்களிடமிருந்து பறித்துக் கொள்ளுவதுடன், அவர்களைத் தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ளுகின்றன. ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஜனங்களைப் பிடித்து வைத்துக் கொள்ளாமல், அவர்களை நிரப்புகிறார். அவர் அவ்வண்ணம் நிரப்பின பிறகும், அவர்களிடத்திலிருந்து தெரிந்தெடுக்கும் சுயாதீனத்தைப் பறித்துக் கொள்ளாமல், அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறார். நமக்கிருக்கும் சுயாதீன சித்தத்தை ஆவியானவர் ஒரு போதும் நம்மிடத்திலிருந்து பிடுங்கி விடுவதுமில்லை; நம்மீது அழுத்தத்தை வைப்பதுமில்லை. ஆனால் சாத்தானும் அவனது பிரசங்கிகளும் அப்படிச் செய்கிறார்கள்.

நாம் பரிசுத்த ஆவியின் சுயாதீனத்தில் நடக்க விரும்பினால், "குற்ற உணர்வுக்குள் நடத்தும்" பிரசங்கங்களை உடனடியாகப் பகுத்தறிந்து, நம்முடைய மனங்களிலே அவற்றை ஏற்றுக் கொள்ளாமல், நிராகரித்துவிட வேண்டும்.

நானும்கூட எனது வாலிப நாட்களிலே, புதிய உடன்படிக்கை ஊழியன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சரியாக விளங்கிக் கொள்ளாமல் இருந்தபடியால், இது போன்ற பிரமாணத்துவமிக்க "குற்ற உணர்வுக்குள் நடத்தும்" ஏராளமான பிரசங்கங்களைச் செய்திருக்கிறேன். ஆனால் நான் நீண்ட காலத்திற்கு முன்னரே இதிலிருந்து மனந்திரும்பி, அதை விட்டுவிட்டேன். "நான் குழந்தையாய் இருந்த போது குழந்தையைப் போல பேசினேன், குழந்தையைப் போல சிந்தித்தேன், குழந்தையைப் போல யோசித்தேன்; நான் புருஷனான போதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்" (1கொரி 13:11). "குற்ற உணர்வுக்குள் நடத்தும்" முறையில் செய்யப்படும் பிரசங்கங்கள் யாவும் ஜனங்களைக் கட்டுக்குள்ளாகத் தான் நடத்தும். ஆனால் இயேசுவும், ஆவியானவரும் ஜனங்களை விடுதலையாக்கவே வந்தனர்.

பிரசங்கத்தில் "குற்ற உணர்வுக்குள் நடத்தும்" முறையைப் பின்பற்றுகிற ஒவ்வொரு பிரசங்கியும் ஒரு பிரமாணத்துவ மனிதனாகவே இருக்கிறான். ஆனால் அவனோ தான் அப்படி இருப்பதைப் பற்றி அறியாதவனாகவே இருக்கிறான். புதிய ஏற்பாட்டு வசனங்களைப் பழைய ஏற்பாட்டின் ஆவியில் பேசுகிற பிரசங்கியாய் இருக்கிறவன்தான் பிரமாணத்துவ மனிதர்களிலெல்லாம் மிக மோசமானவன் என்று சொல்லலாம். அவர்களோ புதிய உடன்படிக்கையைப் பிரசங்கிப்பதாகக் கற்பனை செய்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு, புதிய உடன்படிக்கையின் ஆவிக்குள் பிரவேசிக்காமல் அதன் எழுத்துக்களை மட்டுமே பிரசங்கிக்கிறார்கள். புதிய உடன்படிக்கை என்பது எழுத்தின்படியான சுவிசேஷம் அல்ல; அது ஆவியின்படியான சுவிசேஷமாகும். இயேசு பேசின வார்த்தைகளெல்லாம் "ஆவியாயும் ஜீவனாயும்" இருந்தன (யோவான் 6:63). ஆவியானவரின் ஊழியம் என்பது ஒரு போதும் கட்டாயப்படுத்துவதாகவோ, ஆக்கினைக்குட்படுத்துவதாகவோ இராமல், ஆறுதலையும், நம்பிக்கையையும் தருவதாகவே உள்ளது. தேவன் "நம்முடைய தலைகளை உயர்த்துகிறவராகவே" இருக்கிறார் (சங் 3:3). அவர் "நம்முடைய தலைகளைத் தாழ்த்துகிறவராக" இருப்பதில்லை. நாம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்பதற்காக, அவர் நம்மை வெட்கப்படுத்த முயற்சிப்பதில்லை. பள்ளி ஆசிரியர்கள் வேண்டுமானால் மாணவர்களை வெட்கப்படுத்திக் கீழ்ப்படியச் செய்யலாம். ஆனால் அன்பான தகப்பன்மார்கள் அங்ஙனம் செய்ய மாட்டார்கள். அவர்கள் தங்களது பிள்ளைகள் மனமுவந்து கீழ்ப்படியும்படிக்கு அவர்களை ஊக்கப்படுத்துகிறார்கள் (1கொரி 4:14,15). இந்த விஷயத்தில் மந்தைக்கு முன்பாக நம்முடைய மனோபாவம் எப்படி உள்ளதோ அதை வைத்துத்தான், நாம் போதகர்களா அல்லது தகப்பன்மார்களா என்பதைத் தீர்மானிக்க முடியும். நம்முடைய சபைகளில் போதகர்களுக்குப் பஞ்சமில்லை; தகப்பன்மார்கள்தான் இன்றைய தேவையாய் இருக்கின்றது.

பரிசுத்த ஆவியானவரின் உணர்த்துதலுக்கும், நியாயப்பிரமாணத்தின் ஆக்கினைத் தீர்ப்பிற்குமுள்ள வித்தியாசத்தை நாம் நன்றாக அறிந்திருக்க வேண்டும். குற்ற உணர்வை உண்டாக்கும் பிரசங்கமானது மக்களைச் சோர்வடையச் செய்து, அவர்களை ஆக்கினைக்குட்படுத்துகிறது. அதனால் அவர்கள் ஆவிக்குள்ளாக ஒரு விடுதலையான வாழ்க்கையை அனுபவிக்க முடியாமலும், ஜெயாளிகளாக மாற முடியாமலும் ஆகி விடுகின்றது.

ஒரு பிரசங்கி, குற்ற உணர்வை உண்டாக்கும் முறையைக் கையாண்டு பிரசங்கித்தால், அவர் கர்த்தரையோ அல்லது ஆவியானவரின் வழிகளையோ மெய்யாகவே அறியவில்லை என்பதையே அது சுட்டிக் காட்டுகிறது. அவர் வேத அறிவிலே பின்தங்கி உள்ளதை அது நிரூபிக்கிறது. அத்துடன் அவர் நேர்மையற்றவராகவும் இருப்பார். ஏனெனில் அவர் பிரசங்கிக்கிறத் தரத்தின்படி அவராலேயே வாழ முடியாதவாறு இருக்கக்கூடும். இயேசு முதலாவது செய்தார்; பின்பு போதித்தார் (அப் 1:1). ஆனால் இந்த பிரசங்கியார்களோ பழங்காலப் பரிசேயரைப் போலவே, "அவர்கள் கடைப்பிடிக்காததையும், சாத்தியமில்லாத எதிர்பார்ப்புகளையும் உங்கள்மீது சுமத்துகிறார்கள்" (மத். 23:3,4 - Living).

குற்ற உணர்வை உண்டாக்கும் ஒரு பிரசங்கி ஆவியில் எளிமையில்லாதவனாய் இருப்பதால், அவனோடு மெய்யான ஐக்கியம் கொள்ளுவதென்பது கூடாத காரியமாகும். Amplified Bible -ன் வரையறைப்படி, "ஆவியில் எளிமை" என்றால், "தங்களை முக்கியமற்றவர்கள் என தங்களுக்குள் எடைப் போட்டு வைத்திருப்பவர்கள்" (மத் 5:1) என்று பொருளாகும். தங்களை முக்கியமற்றவர்களாகக் கருதும் வெகு சில பிரசங்கிமார்களைத்தான் நான் என் வாழ்நாளிலே சந்தித்திருக்கிறேன். அநேக பிரசங்கியார்களின் தொனியே, தங்களை சபையிலுள்ள பிற விசுவாசிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, "தாங்கள்தான் மிக, மிக முக்கியமானவர்கள்" எனக் கருதுகிறவர்கள் என்பதை பறைசாற்றுகிறது. நான் அப்படிப்பட்ட மனிதர் பேசுவதைக் கேட்க நேரும்போது, உடனடியாக உள்ளுக்குள்ளே ஸ்விட்ச் ஆஃப் செய்து விடுவேன். ஏனெனில் பெருமையில் மிதக்கும் அவரிடமிருந்து நித்திய மதிப்புள்ள எதையும் என்னால் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை நான் அறிவேன். அப்படிப்பட்ட பிரசங்கிகள் குற்றஞ்சாட்டுகிறவனுடைய ஆவியின் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள். அதனால்தான் அவர்களுடைய பிரசங்கங்களெல்லாம் மற்றவர்கள் இன்னும் தேவனுடைய தரத்தை எட்டிப் பிடித்து வாழவில்லை என்னும் பிரதானக் குற்றச்சாட்டுடன் கூடியதாக உள்ளது. ஆகவே அந்த பிரசங்கங்கள் யாவும் கேட்கிறவர்களைக் குற்ற உணர்வுக்குள் நடத்தும் பிரசங்கங்களாகவே உள்ளன. அவர்கள் தங்களைத் "தீர்க்கதரிசிகள்" எனக் கற்பனை செய்து கொண்டு, மெய்யான தீர்க்கதரிசிகளுக்குரிய மனதுருக்கம் அற்றவர்களாய் உள்ளனர். இப்படிப்பட்ட அகந்தையுள்ள பிரசங்கிகள் தேவனுடைய ராஜ்ஜியத்தைச் சுதந்தரிக்க முடியாது (மத் 5:3). ஆகவே அவர்களால் பரலோகத்தின் குணாதிசயமான ஆவியின் விடுதலைக்குள் பிறரை நடத்தவே முடியாது. அப்படிப்பட்டப் பிரசங்கிகளுக்குச் சகோதரத்துவத்தைக் கட்டுவதோ, தங்களுடைய இடத்திலே கிறிஸ்துவின் சரீரத்தைப் பிரதிபலிக்கும் ஸ்தல சபையைக் கட்டுவதோ இயலாத காரியமாகும். தங்களைப் பாராட்டும் "ஆர்வலர்களையெல்லாம்" ஒன்று திரட்டி ஒரு கூட்டமாக மாற்றுவதைத்தான் அவர்களால் செய்ய முடியும். தேவன்தாமே நம் ஒவ்வொருவரையும் இப்படிப்பட்ட பேரிடரிலிருந்து காப்பாராக.

வழக்கமாய் வாலிபர்கள்தான், இவ்வித "குற்ற உணர்வுக்குள் நடத்தும் பிரசங்கிகளாக" இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். ஆனால் அந்த வாலிபர்கள் தங்களை நியாயந்தீர்த்துக் கொண்டு, கிருபையிலே வளராமல் இருந்தால், பின்னாளில் அவர்கள் முதியவராகவும், சபைகளிலே மூப்பராகவும் மாறினாலும், அவர்களால் தங்களை மாற்றிக் கொள்ள முடியாததையும் நான் கண்டிருக்கிறேன்.

ஆதலால் தேவனுக்குக் கீழ்ப்படியத் தவறியவர்களை இந்த "குற்ற உணர்வுக்குள் நடத்தும்" முறையில் பிரசங்கம் செய்து மாற்ற முயற்சிப்பதை கைவிட்டுவிட்டதை நாம் உறுதி செய்து கொள்ளுவோமாக. எந்த ஒரு பிரசங்கியும் தனது பிரசங்கத்தின் மூலமாக நாம் குற்ற உணர்வைப் பெற அனுமதிக்காதபடிக்கு பார்த்துக் கொள்ளுவோமாக. பிரமாணத்துவ போதகர்களாக இருப்பதை மறுத்துவிட்டு, தகப்பன்மார்களாய் இருக்க நாடுவோமாக. நம்முடைய ஆண்டவரின் பூலோக வாழ்க்கையில் கிருபை மற்றும் சத்தியம் ஆகியவற்றின் நிறைவிலே அவருடைய மகிமை காணப்பட்டது. அந்த மகிமையானது அவருடைய வாழ்க்கையிலும் வார்த்தையிலும் வெளிப்பட்டது (யோவான் 1:14). அந்த மகிமையானது நம் மூலமாகவும் வெளிப்படுவதாக. ஆமென்! ஆமென்!!