தோல்வியடைந்தோரும் தேவனுடைய சம்பூரண திட்டத்தை நிறைவேற்றிட முடியும்!

எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   தேடுபவர்
Article Body: 

பாவம் செய்துவிட்டேனே! தேவனை துக்கப்படுத்திவிட்டேனே! என்றெல்லாம் தங்கள் கடந்தகால வாழ்க்கையின் சில சம்பவங்களை அநேக சகோதர சகோதரிகள் எண்ணி எண்ணி, இனியும் தேவன் தங்கள் வாழ்விற்காக வரைந்திருக்கும் திட்டத்தை நிறைவேற்றிட முடியாது என முடிவு செய்கிறார்கள்.

இதுபோன்ற நிலையில் நாம் நம் சுயபுத்தியையோ அல்லது 'காரியம் இப்படித்தான்' என சாதிக்கும் நம் உணர்வுகளையோ சார்ந்து கொள்ள வேண்டாம். மாறாக, பொய்யுரையா வேதவாக்கியங்கள் என்ன கூறுகிறது என்பதையே காண்போமாக!

முதலாவதாக சத்திய வேதம் எவ்வாறு துவங்குகிறது என்பதை சற்றே கவனித்துப் பாருங்கள்.

"ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்" (ஆதி 1:1). இவ்வாறு ஆதியில் தேவன் சிருஷ்டித்த வானமும் பூமியும் பழுதற்ற பூரணமுள்ளதாகத்தான் இருந்திருக்கவேண்டும். ஏனெனில் தேவனுடைய கரத்திலிருந்து பூரணமில்லாத அல்லது அரை குறையான எந்தக் கிரியையும் தோன்றுவதே இல்லை.

இருப்பினும் ஏசாயா 14:11-15, எசேக்கியேல் 28:13-18 ஆகிய வசனங்கள் நமக்கு அறிவிக்கிறபடி, தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு பங்கு தூதர்கள் வீழ்ச்சியுற்றார்கள் எனக் காண்கிறோம். இதன் விளைவாகத்தான் "பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையும். . . ஆழத்தின் மேல் இருளுமாய்" மாறிவிட்டது (ஆதி.1:2).

இவ்வித குழப்பமான நிலையிலும் வல்லதேவன் ஒழுங்கற்றிருந்த வெறுமையும் இருளுமான பூமியின் மீது கிரியை நடப்பித்து அதை அற்புதமாய் அழகாக்கி விட்டார். இவ்வாறு, அழகாய் சீரமைக்கப்பட்ட உலகைக் கண்ட தேவன் "மிகவும் நன்றாய் இருக்கிறது!" என முடிவில் கூறினார் (ஆதி.1:31). இந்த அற்புத மாறுதலுக்குக் காரணம் : 1) தேவ ஆவியானவர் பூமியின்மீது அசைவாடினதும் 2) தேவனுடைய வாயிலிருந்து வார்த்தை உண்டானதுமே காரணமாகும்.

இதிலிருந்து நாம் பெற்றுக் கொள்ளும் செய்தி யாது?

நாம் எவ்வளவுதான் நம் ஜீவியத்தில் தோல்வியடைந்து அல்லது எவ்வளவுதான் 'தாறுமாறு' நடந்ததுபோல் காணப்டட்டாலும் 'இன்னமும்' தேவன் நம் ஜீவியத்தை மகிமையுள்ளதாக்க முடியும் என்பதே, இன்று தேவன் நம்மோடு பேசும் நம்பிக்கையின் செய்தியாகும்!

ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த போது ஓர் பூரண திட்டத்தை வைத்திருந்தார். ஆனால் லூசிபரின் வீழ்ச்சியினிமித்தம் தேவன் தன் திட்டத்தை தள்ளிவைக்க வேண்டியதாயிற்று. இருப்பினும் சீர்குலைந்திருந்த வானத்தையும் பூமியையும் தேவன் சீர்ப்படுத்தி அவைகளை "மிகவும் நன்றாய் இருக்கும்படி" செய்துவிட்டார்!

ஆதியில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சிக்குப் பின்பு நடந்த சம்பவத்தையும் கவனித்துப் பாருங்கள்.

மீண்டும் ஓர் நல்ல துவக்கத்திற்காக தேவன் ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்தார். அவர்களுக்காகவும் தேவன் ஓர் பூரண திட்டத்தை வகுத்திருந்தார். அப்பூரண திட்டத்தில் விலக்கப்பட்ட கனியை அவர்கள் புசிப்பது அடங்கியிருக்கவில்லை என்பது வெளிப்படையாகவே புலனாகிறது. ஆனால் அவர்களோ தேவன் கட்டளையிட்டு விலக்கி வைத்திருந்த நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்து, அவர்களுக்காக தேவன் உருவாக்கி வைத்திருந்த 'ஏதோ ஒரு அற்புதமான திட்டத்தை' சீர்குலைத்துப் போட்டார்கள்.

இவ்வாறு தர்க்கரீதியாகப் புரிந்துகொண்ட நாம், "இனிமேல் ஆதாம் - ஏவாள் தேவனுடைய பூரணதிட்டத்தை நிறைவேற்றிட முடியாது!" என்றே நினைக்கிறோம். இவ்வாறு நம் தர்க்கரீதியாகவே காரியம் நடந்திருக்குமென்றால், ஆதாமையும் ஏவாளையும் சந்திக்கும்படி தேவன் ஏதேன் தோட்டத்திற்கு வந்தபோது, "இனிமேல் நீங்கள் என் முதல்தரமான திட்டத்தின்படி அல்லாமல் இரண்டாம் தரமான திட்டத்தின்படிதான் வாழவேண்டும்!!" எனக் கூறியிருக்க வேண்டும்! ஆனால் அவரோ அப்படிக் கூறவேயில்லை!! மாறாக, "ஸ்திரீயின் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்குவார்!" (ஆதி.3: 15) என்ற அற்புத வாக்குத்தத்தத்தையே அவர்களுக்கு உடனடியாக தயக்கமின்றி உரைத்தார். உலகத்தின் பாவங்களுக்காக கிறிஸ்து மரிப்பதும்; கல்வாரி சிலுவையில் கிறிஸ்து சாத்தானை மேற்கொண்டு ஜெயிப்பதுமாகிய இந்த வாக்குத்தத்தம் ஏற்கனவே தேவன் வைத்திருந்த சம்பூர்ண திட்டத்தின் ஒரு பகுதியே ஆகும்!!

இதுவரை சொல்லப்பட்ட சத்தியத்தின் சாரத்தை உங்கள் காரணயுக்தியின்படி சிந்தித்துப் பாருங்கள்.

நித்திய நித்திய காலமாய் இருந்து வரும் தேவனுடைய சம்பூர்ண திட்டத்திற்குள் "கிறிஸ்துவின் மரணம்'' இடம் பெற்றிருந்ததை நாம் யாவருமே அறிந்திருக்கிறோம். இதைத் தெளிவுபடுத்தும்படி வெளி. 13:8, "உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி'' எனக் கூறுகிறது. இவ்வாறிருந்தும், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து தங்கள் தேவனுக்கு முன்பாய் வீழ்ச்சியடைந்ததினிமித்தமே கிறிஸ்து மரித்தார் என்பதையும் அறிந்திருக்கிறோம். ஆகவே, நம் தர்க்கரீதிப்படி, கிறிஸ்து அனுப்பப்பட்டு, உலகத்தின் பாவங்களுக்கு மரிக்கவேண்டும் என்ற தேவனுடைய சம்பூர்ண திட்டம் "ஆதாம் வீழ்ச்சியுற்றதாலேயே" நிறைவேறியது என நினைக்கிறோம்! மேலும், "ஆதாமின் பாவத்திற்காகத்தான் இயேசு மரித்தார்" என்றில்லாவிட்டால் கல்வாரியில் வெளிப்பட்ட தேவ அன்பை நாம் ருசித்திருக்க முடியாது எனவும் தர்க்கரீதியாக நினைக்கிறோம். ஆனால், "தேவனுடைய சம்பூர்ண திட்டம்" என்ற இந்த அற்புத சத்தியம் தர்க்கரீதியானதல்ல!

எனவேதான் நம் பொன்னான வேதவாக்கியம் "உன் சுயபுத்தியின் மேல் சாயாமல்" (நீதி. 3:5) என அருமையாய் போதிக்கிறது.

தேவன் கணிதப்புள்ளி விபரத்தோடு தர்க்கரீதியாய் செயல்பட்டிருந்தால், கிறிஸ்து இப்பூமிக்கு வந்தது தேவனுடைய இரண்டாம் தரமான திட்டமாகவே கருதப்பட வேண்டும். ஆனால் நாம் அப்படியெல்லாம் கருதினால் அது தேவ தூஷணமாய் இருக்கும். கிறிஸ்து இப்பூமிக்கு வந்தது, தேவன் மனுஷனுக்காக வரைந்திருந்த சம்பூர்ணத்திட்டத்தின் ஒரு பகுதியேயாகும். தேவன் ஒருக்காலும் பிழை செய்வதே கிடையாது! தேவன் சர்வவல்லமை உள்ளவராகவும்; ஆளுகை செய்பவராகவும்; ஆதியிலிருந்து அந்தம் வரை தெரிந்தவராயும்; தன் அன்பின் மிகுதியால் நமக்காக எப்போதும் மவுனமாய் திட்டம் தீட்டுகிறவராயும் இருப்பதால்… அவர் நம்மோடு இடைபடும் காரியங்களை விளக்குவது மனுஷீக காரணயுக்திக்கு அப்பாற்பட்டதாகவே உள்ளது.

தேவனுடைய வழிகள் நம்முடைய வழிகள் அல்ல. அவருடைய சிந்தைகள் நம்முடைய சிந்தைகளும் அல்ல. இந்த வித்தியாசம் வானத்திற்கும் பூமிக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவாய் பெரியதாகும்! (ஏசா. 55:8, 9). ஆகவே நாம் தேவனுடைய வழிகளை ஆராய வேண்டுமென்றால் நம்முடைய புத்திசாலித்தனமான காரணயுக்திகளை தள்ளிவைத்துவிடுவதே நல்லது!

இவ்வாறாக, வேதாகமத்தின் முதல் பக்கத்திலிருந்தே நம்மோடு பேசும் "தேவசெய்தியை'' விளங்கிக் கொண்டீர்களா? ஆம், ஓர் தோல்வியுற்ற மனிதனை தூக்கியெடுத்து அவன் மூலமாய் மகிமையான மகத்துவத்தை தேவன் செய்திட முடியும்! மேலும், அவனுடைய வாழ்விற்காக தேவன் தீட்டியிருந்த சம்பூர்ணத்திட்டத்தை அவன் நிறைவேற்றும்படி செய்யவும் தேவனால் முடியும்!!

இதுவே வேதாகமத்தின் முதல் பக்கத்தின் மூலம் மனுஷனுக்கு தேவன் வழங்கும் முதல் செய்தியாகும்!! இதை நாம் யாவரும் ஒருபோதும் மறவாதிருப்போமாக.

தன் வாழ்வில் திரும்பத் திரும்ப தோல்வியுறும் ஒரு மனிதனைக்கூட தேவன் தூக்கியெடுத்து தன்னுடைய சம்பூர்ணதிட்டத்தை அவன் நிறைவேற்றும்படி செய்திட தேவனால் கூடும். அவ்வாறு அந்த மனிதன் நிறைவேற்றப்போவது தேவனுடைய இரண்டாம் தரமான திட்டமல்ல… தேவனுடைய முதல் தரமான திட்டத்தையே நிறைவேற்றிவிடுவான்!

இப்படியெல்லாம் தேவன் செய்திட முடிவதற்கு காரணம்,தேவனுடைய பரிபூரண திட்டத்தில் அம்மனிதனுடைய தோல்வியும் அடங்கியிருக்கக் கூடும். அத்தோல்வி மூலம் அவர் அம்மனிதனுக்கு சில மறக்கமுடியாத பாடங்களைக் கற்றுத் தந்திருப்பார்!! இவைகள் எல்லாம் மனுஷீக தர்க்கரீதியாய் விளங்கிக்கொள்ள முயல்வது நம்மால் ஒருக்காலும் முடியாது! ஏனெனில் நாம் தேவனை அறிந்திருப்பதெல்லாம் மிகமிக கொஞ்சம்தான்!

நொறுங்குண்ட புருஷர்களையும், ஸ்திரீகளையும் மாத்திரமே தேவனால் உபயோகித்திட முடியும்.

திரும்பத் திரும்ப ஏற்படும் தோல்வியின் மூலமாக தேவன் நம்மை நொறுக்குவது அவருடைய ஆச்சரிய வழிகளில் ஒன்றாகும்.

முன்னின்று நடத்துபவர்களுக்காக (Leadership) அளிக்கப்படும் பயிற்சியில் தோல்வியென்ற பயிற்சியும் ஒன்றாகும்!

இன்று தேவ ஆசீர்வாதம்கூட ஒரு மனிதனை பெருமையடையச் செய்துவிடுகிறது! நாம் பெருமையினால் உப்பி விடாதபடி நம்மை தேவன் ஆசீர்வதிப்பது அவருக்கு ஓர் கடினப் பணியாகவே உள்ளது. ஒருவன் கோபத்திலிருந்து ஜெயம் பெற்று அதனிமித்தம் பெருமை கொண்டால், அவன் ஏற்கனவே இருந்த குழியைக்காட்டிலும் ஆழமான படுகுழிக்குள் வீழ்ச்சியுறுவான்!! எனவே நம்முடைய ஜெயத்திலும் தேவன் நம்மை தாழ்மையில் காத்துக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது!

பாவத்தின்மீது பெற்ற ஓர் உண்மையான வெற்றி எப்போதும் ஆழமான தாழ்மையை தன்னோடு கைகோர்த்துக் கொள்ளும். இது எப்படியெனில், திரும்பத்திரும்ப ஏற்பட்ட தோல்வியினால் அவனுடைய சுயநம்பிக்கை யாவும் அழிந்து, ஜெயம்பெற வேண்டுமென்றால் தேவனுடைய கிருபை இல்லாவிட்டால் ஒன்றும் முடியாது என்ற சரியான இடத்திற்கு இவன் வந்துவிட்டான்! இப்போது இந்த மனிதன் ஜெயம் பெற்றாலும் அந்த ஜெயத்தைக்குறித்து ஒருக்காலும்…ஒருக்காலும் பெருமையினால் மார்தட்டிக் கொள்ளவே மாட்டான்.

மேலும் இவனே திரும்பத்திரும்ப தோல்வியுற்றபடியால், தோல்வியுறும் இன்னொரு சகோதரனைப் பார்த்து ஒருக்காலும் அற்பமாய் எண்ணி விடவும் மாட்டான். மாறாக, தோல்வியடைந்த சகோதரனுக்காக மனம் பரிதவிப்பான்! ஏனென்றால் எண்ணற்ற பல தோல்விகள் மூலமாக தன்னுடைய மாம்சத்தின் பலவீனம் எவ்வளவாய் இருக்கிறது என்பதை இந்த மனிதன் நன்கு அறிந்து உணர்ந்துவிட்டான். "தானும் பலவீனமுள்ளவனான படியினாலே, அறியாதவர்களுக்கும் நெறிதப்பிப் போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாயிருக்கிறான்" என எபிரேயர் 5:3 ரொம்பவும் சரியாக கூறுகிறது.

கொஞ்சம் பொறுங்கள்! இப்படியொரு செய்தியைக் கேட்டவுடன் தர்க்கரீதியாக சாதிக்கும் மனிதர்கள் என்ன சொல்வார்கள் என்புதை சொல்லி விடுகிறேன்!! "ஆகா… காரியம் இப்படியா! எனக்கு நலமானதையே தேவன் தரும்போது, இனி என்ன…நான் தொடர்ந்து பாவம் செய்வது படுஜோர்தான்!!" என குஷாலாகக் கூறுவார்கள்.

இவ்வாறு குஷாலாகக் கூறிக்கொள்ளும் மனுஷனுக்கு ரோமர் 3:7,8 கல்தெறித்தது போல் பதில் கூறுகிறது. அந்தப் பதிலையும் கேளுங்கள், "என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமை உண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவி என்று தீர்க்கப்படுவானேன்? நன்மை வரும்படிக்கு தீமை செய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? எனக் கூறிக்கொள்ளும் மனுஷனே, அவ்வாறு கூறுகிற உன் மீது (அல்லது போதிக்கிறவர்கள் மீது) வரும் ஆக்கினை நீதியாய் இருக்கும்" என மிகுந்த எச்சரிப்பாய் பதில் கூறுகிறது.

ஆம், நலமானது கிட்டுவதற்காக நாம் பாவம் செய்யலாம் என நாம் ஒருபோதும் பிரசங்கிப்பதில்லை. அல்லது தேவனுடைய கிருபையை சாதகமாகிக் கொண்டு அவருக்குக் கீழ்ப்படியாமல் இருக்கலாம் எனவும்… கீழ்ப்படியாமையில் விதைத்த அறுவடைக்கு நம்மை தவிர்த்துக் கொள்ளலாம் எனவும் நாம் இங்கு கூறவில்லை! நிச்சயமாய் அப்படியில்லை!!

ஆனால் இங்கே நாம் கூறியதெல்லாம், "தோல்வியுற்ற ஓர் மனுஷனுக்கு தேவன் காட்டும் அளவற்ற கிருபையை மனுஷீக தர்க்கரீதியில் ஒருவன் அறிந்துகொள்ள முடியாது" என்பதையே வலியுறுத்திக் கூறுகிறோம். ஓர் மனிதன் படுமோசமாய் வீழ்ச்சியுற்று 'திரும்பத்திரும்ப' தோல்வியடைந்தவனாய் இருந்தாலும் அவ்வித மனுஷனைக்கூட தன்னுடைய பரிபூரண சித்தத்திற்கு கொண்டு வந்துவிட தேவனால் முடியும் - இந்த தேவனால் கூடாத காரியம் ஒன்றுமே இல்லை! அவர் நடப்பிக்கும் இந்த அற்புத செயலுக்கு ஒரே ஒரு தடைதான் உண்டு. . . அது, அந்த மனுஷடைய அவிசுவாசமே !!

ஒருவேளை நீங்கள், "நான் ஒரு தடவையா இரண்டு தடவையா... எத்தனையோ தடவை தோல்வியுற்றவன். இவ்வித பரிதாபநிலை கொண்ட என்னை தேவன் தன்னுடைய பரிபூரணத் திட்டத்திற்குள் மீண்டும் கொண்டுவருவது ஒருக்காலும் முடியாது!" எனக் கூறலாம். அப்படியானால் உங்கள் கூற்றின்படியே தேவனால் ஒன்றும் செய்யக்கூடாததாகவே மாறிவிடும்! ஏனென்றால் தேவன் உங்கள் வாழ்வில் உங்களுக்காக செய்ய முடிபவைகளை உங்களால் விசுவாசிக்க முடியவில்லையே! ஆனால் இயேசுவோ, தேவன் நமக்கு என்ன செய்யமுடியும் எனக் கூறும்போது, "நீங்கள் மாத்திரம் விசுவாசித்து விட்டால்... தேவனால் கூடாத காரியம் ஒன்றுமேயில்லை!" என்றல்லவா கூறினார்.

ஆம், வாழ்வின் எல்லா காரியங்களுக்கும், "உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது" (மத். 9:29) என்பதே தேவனுடைய மாறாத சட்டமாய் இருக்கிறது. நாம் எதை விசுவாசிக்கிறோமோ அதை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும். ஏதோ ஒரு காரியத்தை தேவனால் செய்திட முடியாது என நீங்கள் விசுவாசித்தால் அது அப்படியே உங்களுக்கு செய்யப்படாமல் இருந்துவிடும்!

ஆனால் இதற்கு நேர்மாறான காரியத்தை நீங்கள் கிறிஸ்துவின் நியாயாஸ்தனத்திற்கு முன்பாக காண்பீர்கள். அங்கே உங்களைக் காட்டிலும் தன் வாழ்வில் பயங்கர தோல்வியுற்ற இன்னொரு விசுவாசி, தேவன் அம்மனுஷனுடைய வாழ்விற்காக வரைந்திருந்த பரிபூரண திட்டத்தை நிறைவேற்றி முடித்திருப்பதை அன்று காண்பீர்கள்! இந்த வினோத அற்புதம் எவ்வாறு நிகழ்ந்தது? "சுக்கு-நூறாக உடைந்துபோன தன் ஜீவியத்தின் உடைந்த சிதறல்களைத் தேவன் பொறுக்கி எடுத்து அவைகளை மீண்டும் சேர்த்து வைத்து மிகவும் நன்றாய் இருக்கும்படி தேவனால் செய்திட முடியும்'' என்பதை அந்த விசுவாசி விசுவாசித்தான்.... அவ்வளவுதான்! தேவன் உங்கள் வாழ்விற்காக வைத்திருந்த திட்டத்தை சீர்குலைத்ததெல்லாம் "திரும்பத்திரும்ப ஏற்பட்ட உங்கள் தோல்விகள் அல்ல... மாறாக, உங்கள் அவிசுவாசமே அதற்குக் காரணம்!" என்ற உண்மையை நீங்கள் அந்நாளில் கண்டு கொள்ளும்போது அது எவ்வளவு பெரிய துயரமாயிருக்கும்!!

இந்த சத்தியத்தை கெட்டகுமாரனின் உவமையும் வலியுறுத்திக் கூறுகிறது. தன் ஊதாரித்தனத்தினால் பல ஆண்டுகளை வீணாக்கிப்போட்ட கெட்டகுமாரனுக்கு தேவன் (தகப்பன்) தன்னுடைய "மிக அருமையானதைக்" (His Best) கொடுத்தார். இதுவே சுவிசேஷத்தின் மகிமையான செய்தியாகும். இந்த நல்ல தேவன் ஒருவரையாகிலும் "மீட்புக்குரியவர்கள் அல்ல" என தள்ளிவைப்பதே இல்லை!

தன் திராட்சைத் தோட்டத்திற்கு வீட்டெஜெமான் வேலையாட்களை அமர்த்திய உவமையும் இந்த அருமையான சத்தியத்தையே எடுத்துக் கூறுகிறது (மத், 20:1-16). இந்த உவமையில், பிந்திப் பதினோறாம் மணி வேளையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட வேலையாட்களுக்கே முதலாவதாக கூலி கிடைத்தது, பார்த்தீர்களா விந்தையை! இவர்கள் 12ல் 11 மணி நேரத்தை அதாவது 90 சதவீத தங்கள் வாழ்வை வீணாக்கிப் போட்டவர்கள்! ஆகிலும் எஞ்சியிருந்த தங்கள் வாழ்வு 10 சதவீதமேயானாலும் அந்த குறைந்த அளவில் தேவனுக்கென மகிமையான காரியத்தை அவர்களால் செய்துவிட முடிந்தது. தோல்வியினால் மனம் மடிந்திருக்கிற சகோதரனே! சகோதரியே! இந்த சத்தியம் உங்களுக்கு புதிய தெம்பூட்டி ஊக்குவிக்கவில்லையா?!

"பிசாசின் கிரியைகளினால் ஏற்பட்டுவிட்ட எல்லா சிக்கல்களையும் தீர்ப்பதற்காகவே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்" என 1யோவான் 3:8-ம் வசனத்தை விரிவாக்க வேதாகமம் அழகுபடக் கூறுகிறது.

ஆம், நம் வாழ்வில் ஏற்பட்டுவிட்ட எல்லா முடிச்சுகளையும் அவிழ்ப்பதற்காகவே இயேசு வெளிப்பட்டார்! அது எப்படியெனில், நாம் எல்லோருமே பாலகப்பருவத்தில், நம் ஜீவியத்தை சீராக சுற்றப்பட்ட ஓர் அருமையான "நூல்பந்தைக்" கொண்டு ஆரம்பித்தோம். ஆனால் அநேக ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்த நூல்பந்தில் ஆயிரக்கணக்கான "முடிச்சுகள்" விழுந்துவிட்டன. இவ்வாறு ஏற்பட்டு விட்ட ஆயிரக்கணக்கான முடிச்சுகளை அவிழ்ப்பது எவ்வாறு சாத்தியமாகும்? என முழு நம்பிக்கையையும் இழந்துவிட்ட நிலையில் நீங்கள் காணப்படுகிறீர்கள். உங்கள் ஜீவியத்தை உற்று நோக்கும் பொழுதெல்லாம் மிகுந்த மனமடிவும் அதைரியமுமே உங்கள் உள்ளத்தைக் கவ்விக்கொள்கிறது. இப்போது சுவிசேஷத்தின் நற்செய்தியைக் கேளுங்கள்! 'ஒன்றுகூட பாக்கி இல்லாமல்' ஒவ்வொரு முடிச்சுகளையும் அவிழ்ப்பதற்காகவே இயேசு உங்களிடம் வந்துவிட்டார்!!

"அதெல்லாம் முடியாது…" என்றா கூறுகிறீர்கள்? உங்கள் விசுவாசத்தின்படியே உங்களுக்கு ஆகக்கடவது! 'உங்களைப் பொருத்த வரையில்' அவைகள் முடியததாகவே போய்விடும். ஆனால் ஆ, அதோ... உங்கள் வாழ்வைக் காட்டிலும் படுதோல்வியுற்ற ஓர் சகோதரன், "ஆம், தேவன் தன் மகத்துவமான செயலை என் வாழ்வில் நிறைவேற்றிட முடியும் என நான் விசுவாசிக்கிறேன்" எனக் கூறுவது சங்கோசைபோல் காதில் தொனிக்கிறதே! அவனுக்கும் அவன் விசுவாசத்தின்படியே ஆகக்கடவது! ஆம், அவனுடைய வாழ்வில் தேவனுடைய சம்பூர்ணத் திட்டங்கள் யாவும் நிச்சயமாய் நிறைவேறிவிடும்!! அல்லேலூயா.

நடைமுறையான ஒரு நிகழ்ச்சியின் மூலம் கர்த்தர் தன்னுடைய வார்த்தையை எரேமியாவுக்கு உரைத்தார் ( எரேமியா 18:1-6 ) எரேமியாவை ஓர் குயவன் வீட்டுக்குப் போகும்படி தேவன் கட்டளையிட்டார். அங்கு சென்ற எரேமியா அந்தக் குயவன் ஒரு மண்பாண்டத்தை செய்வதற்கு முயற்சித்து அதை வனைந்து கொண்டிருந்ததைக் கண்டான். ஆனால் அந்த மண்பாண்டமோ "அவன் கையிலே கெட்டுப்போயிற்று." அதோடு முற்றுப்புள்ளி இல்லை! அந்தக் குயவன் "தன் பார்வைக்குச் சரியாய் கண்ட படி அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான்!"

இப்பொழுது தேவன் நேரடியாகத் திரும்பி உங்களைப் பார்த்துக் கேட்கிறார், "ஓ, ................! இந்தக் குயவன் செய்ததுபோல நான் உனக்கு செய்யக் கூடாதோ?" (வசனம் 6) . இந்த வசனத்தில் புள்ளிகள் வைக்கப்பட்ட இடத்தில் உங்கள் பெயரை எழுதிக்கொள்ளுங்கள். ஏனெனில், இந்தக் கேள்வியை மிகுந்த மனபரிதவிப்போடு தேவன் உங்களைப் பார்த்துதான் கேட்கிறார்.

நீங்கள் மாத்திரம் உங்கள் எல்லாத் தோல்விகளுக்காகவும் தேவனுக்கேற்ற ஆழ்ந்த துக்கம் கொண்டுவிடுங்கள்! நீங்கள் அப்படிச் செய்துவிட்டால், உங்கள் பாவங்கள் சிவேரென்று இரத்தாம்பர சிவப்பாய் இருந்தாலும், பழைய உடன்படிக்கையின் வாக்குப்படி அது உறைந்த மழையைப்போல் வெண்மையாகும் (ஏசாயா 1:18)... புதிய உடன்படிக்கையின் விந்தையான வாக்குப்படியோ தேவன் "உங்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி மீண்டும் நினைக்கக்கூட மாட்டார்!" (எபிரேயர் 8:12).

உங்களுடைய தவறுகளும் தோல்விகளும் எதுவாயிருந்தால் என்ன? நீங்கள் இன்னமும் தேவனுக்குள் ஓர் புதிய ஆரம்பத்தைத் துவங்க முடியும். "ஐயோ! இதுபோல் 1000-புதிய ஆரம்பங்கள் துவக்கி அவையத்தனையிலும் தோல்வி கண்டுவிட்டேன்!" என்றா கூறுகிறீர்கள்?" உங்களை அண்டிவரும் செய்தியைக் கேளுங்கள், "இன்றைக்கு நீங்கள் இன்னமும் 1001-வது புதிய ஆரம்பத்தைத் துவங்க முடியும்!" உங்கள் பழுதடைந்த வாழ்வைக்கொண்டு மகிமையான காரியத்தைச் செய்திட தேவனால் கூடும்!! உங்கள் உயிர் உள்ளவரை… நம்பிக்கையும் உண்டு!!

ஆகவே தேவனை நம்பி சார்ந்து கொள்வதற்கு ஒருபோதும் தவறிவிடாதிருங்கள். அவர் தம்முடைய எண்ணற்ற பிள்ளைகளுக்கு அநேக அற்புதக் கிரியைகளைச் செய்ய முடியவில்லை. அதற்கெல்லாம் காரணம் கடந்த காலத்தின் அவர்களுடைய தோல்விகள் அல்ல... மாறாக, இன்று அவர்கள் அவரை நம்பிச் சார்ந்து கொள்ளவில்லை என்பதே பரிதாபமான காரணமாகும்!

ஆகவே நாம் யாவரும் "விசுவாசத்தில் வலிமைகொண்டு தேவனை மகிமை படுத்துவோமாக" (ரோமர் 4:20). இனிவரும் காலங்களில் எவைகளையெல்லாம் "கூடாதது" என்று கண்டோமோ அவைகளினிமித்தம் தேவனை முற்றிலும் நம்புவோமாக!

சிறியோரே! பெரியோரே!! சகல ஜனங்களே!! நீங்கள் மாத்திரம் உங்கள் தோல்விகளை ஒத்துக்கொண்டு உள்ளம் உடைய உங்களைத் தாழ்த்தி தேவனை நம்பிவிடுங்கள்… அதுபோதும்! நீங்கள் கடந்த காலங்களில் எவ்வளவு தோல்வி அடைந்திருந்தாலும் உங்களுக்கு நம்பிக்கை உண்டு.

இவ்வாறு நாம் யாவரும் தோல்வியின் மூலமாய் சிறந்த பாடங்களைக் கற்றுக்கொண்டு தேவன் நம்முடைய ஜீவியத்தில் கொண்ட சம்பூர்ணத் திட்டத்தை நிறைவேற்றிவிட தீவிரம் கொள்வோமாக!!

இவ்வாறு காரியம் உங்களில் இனிதே நடந்தேறிவிட்டால், "படுதோல்வி அடைந்த ஓர் மனுஷனுடைய வாழ்க்கையில் தேவன் என்ன செய்திடமுடியும்!" என்பதற்கு நீங்களே சிறந்த மாதிரியாக மாறிவிடுவீர்கள்! வரும் காலங்களில் உள்ளவர்களுக்கு தேவன் மகிழ்ச்சியோடு உங்களை "ஓர் மாதிரியாக" சுட்டிக்காட்டுவார்!!

"கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வரும் காலங்களில்'' தேவன் உங்கள் மூலமாக விளங்கச்செய்வார்! (எபேசியர் 2:6).

-சகரியா பூணன்.