தேவ ஆசீர்வாதமா? தேவ அங்கீகாரமா?

Article Body: 

இன்றைய உலகில் இரண்டு ரகமான கிறிஸ்துவ விசுவாசிகள் இருக்கிறார்கள். 1. தேவ ஆசிர்வாதத்தை மாத்திரமே குறிக்கோளாய் கொண்டு அதை வாஞ்சிப்பவர்கள். 2. தேவ அங்கீகாரத்தை வாஞ்சித்துத் தேடுபவர்கள் இவ்விரு சாரருக்கும் இடையில்தான் எத்தனை பெருத்த வித்தியாசம்! வெளி 7:9-14 வசனங்களில் திரள்கூட்டமான விசுவாசிகளைப்பற்றி வாசிக்கிறோம். ஆம்! ‘எண்ணிக்கைக்கு அடங்காத’ மிகப்பெரிய கூட்டம். இவர்கள் கூறிய சாட்சியைக் கவனித்தீர்களா? ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தங்கள் அங்கிகளை வெளுத்துத் தோய்த்ததினிமித்தம் பெற்ற ‘இரட்சிப்பிற்காக’ இவர்கள் தேவனுக்கு மகிமையை செலுத்தினார்கள் (வசனம் 10,14). இவர்களின் சாட்சியை சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால், "தேவன் இவர்களை ஆசீர்வதித்திருந்தார்" என்பதுதான். இது நல்லதுதான், அதில் சந்தேகமேதுமில்லை. ஆனால், வெளி 14:1-5 வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விசுவாசிகளின் குழு வழங்கும் சாட்சியோ, இந்த முதல் சாட்சிக்கும் முற்றிலும் மாறுப்பட்ட சாட்சியாயிருக்கிறது!!

ஆம், இந்த இரண்டாவது குழுவினரோ ‘எண்ணிக்கைக்கு அடங்கும்’ மிகச் சிறியதோர் குழுவினர்! அவர்கள் வெறும் 1,44,000 பேர் மாத்திரமே! இப்பூமியின் கடைகோடியெங்கும் வாழ்ந்து தீர்த்த கோடானு கோடி மக்களில் தெரிந்துக்கொள்ளப்பட்ட இந்தத் தொகை மிக மிகச் சிறிய எண்ணிக்கை உடையதேயாகும்! இப்போது இவர்களின் சாட்சியையும் கேளுங்கள், "தங்கள் பூலோக வாழ்க்கையில் கிறிஸ்துவை நூற்றுக்கு நூறு பின்பற்றியவர்கள்; இவர்கள் வாயிலே கபடம் காணப்படவில்லை. ஸ்திரீகளால் (வெளி 17-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட பாபிலோனும் அவள் குமாரத்திகளால் அல்லது ‘உலகத்தால்’) தங்கள் கறைப்பட்டுவிடாதபடி தங்களைக் காத்துக் கொண்டவர்கள்" இவர்களின் சாட்சியை சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால், "இவர்கள் தேவனைப் பிரியப்படுத்தினார்கள்" என்பதுதான்.

கண்டீர்களா வித்தியாசத்தை? முதல் கூட்டத்தினர் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றார்கள்! இரண்டாவது குழுவினரோ தேவனின் அங்கீகாரத்தைப் பெற்றார்கள்! பின் என்ன... நாம் தேடுவதைத்தானே கண்டுக்கொள்ள முடியும். நாம் தேவ ஆசீர்வாதத்தில் திருப்தி கொண்டுவிட்டால், அதை மாத்திரம்தான் நாம் பெற்றுக்கொள்ள முடியும். அதிலும், தேவன் தரும் ‘உலகப் பொருட்களின்’ ஆசீர்வாதத்தில் மாத்திரமே திருப்தி கொண்டுவிட்டால், நாம் அவரின் ‘ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள ஒருபடி கூட நகர முடியாது!

ஏராளமான இன்றைய விசுவாசிகள், தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதில் அதிலும் பிரதானமாய் உலகப் பொருட்களினால் ஆசீர்வதிக்கப்படுவதில் மாத்திரமே திருப்தி கொண்டுவிட்டார்கள். எனவேதான், இன்றைய கிறிஸ்தவப் புத்தகக் கடைகளில், "ஒருவர் எப்படி தன் சரீர வியாதியிலிருந்து சுகமடைய முடியும் என்பது பற்றியும், தசமாகம் செலுத்தி எவ்வாறு ஐஸ்வர்யவானாக முடியும்" என்பது பற்றியுமான புத்தகங்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. இவை வலியுறுத்துவது எல்லாம், சரீர-பொருளாதார சுகவாழ்வு, நல்ல சௌகரியம், செல்வ செழிப்பேயாகும். இவை என்ன? இவையெல்லாம், ‘சுயத்தை மையமாகக் கொண்டு’ வாழும் வாழ்க்கைக்குரிய அடையாளங்களே ஆகும். ஆனால், தேவனுடைய வார்த்தையோ, நமக்காகவே நாம் ஜீவிக்காமல் ‘அவருக்காக ஜீவிக்க வேண்டும்’ என்பதற்காகவே இயேசு மரித்தார் என்றல்லவா கூறுகின்றது (2கொரி 5:15). அதாவது, நம்மை நாமே பிரியப்படுத்தி ஜீவிக்காமல், அவரை மாத்திரமே பிரியப்படுத்தி ஜீவிக்கும் ஓர் ஜீவியம்! இதை வேறுவிதமாய் சொல்லுவோமென்றால், இப்பாழும் சுயத்தை மையமாகக் கொண்ட வாழ்விலிருந்து நம்மை விடுதலையாக்கி ‘தேவனை மையமாகக் கொண்ட’ வாழ்விற்கு கொண்டு வரும்படிக்கே இயேசு நமக்காக மரித்தார்!

இந்நாட்களில் நம்மை புரியாத புதிருக்குள் ஆழ்த்தும் காரியங்களில் ஒன்று என்னவெனில், தங்களின் குணாதிசயத்தில் கூட முழுவதும் ஒத்துப்போகும் ஏராளமான கிறிஸ்துவ ஊழியங்களையும் தேவன் ஆசீர்வதிக்கும் விதமேயாகும், அதின் அர்த்தம் தேவன் ஒத்துப்போகிற காரியத்திலும், தன்னுடைய வார்த்தையிலிருந்தும் சற்றே விலகி நடப்பவர்களையும் கண்டும் கூட அவர் சலனமடையாதிருக்கிறாரே என்பதல்ல. நிச்சயமாக அதின் அர்த்தம் அதுவல்ல. கிறிஸ்தவ ஊழியங்களில் இன்று காணும் ஆசீர்வாதத்தை சற்று எண்ணிப்பாருங்கள். ஆம்! தேவன், தான் பூரணமாய் அங்கீகரிக்க முடியாத எண்ணற்ற ஊழியங்களையும் ஆசீர்வதிக்கத்தான் செய்கிறார்! தேவன் சொன்னப்படி செய்யாமல் மோசே கன்மலையை அடித்தான்! அந்த கீழ்படியாத ஊழியத்தையும் தேவன் ஆசீர்வதிக்கத்தான் செய்தார். இருப்பினும், அதற்குப் பின்பாக... சற்று கவனியுங்கள், தன் கீழ்படியாத ஊழியனின் மீது தேவன் கடுமையான நடவடிக்கை எடுத்தார் (எண்ணாகமம் 20:8-13). பார்த்தீர்களா? கீழ்படியாத ஊழியனின் ஊழியத்தைத் தேவன் அங்கிகரித்ததால் அல்ல, தேவையோடு நின்ற இருபது லட்சம் ஜனங்களை நேசித்த அந்த நேசத்தினாலேயே அவர் அந்த ஊழியத்தை ஆசீர்வதித்தார்! இன்றும், தங்கள் இரட்சிப்பிற்காகவும், சரீர சுகத்திற்காகவும் ஏங்கி நிற்கும் ஜனங்களை தேவன் நேசிக்கிறார் என்ற ஒரே காரணத்தினால்தான் அவ்வூழியங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படுகின்றன. ஆனால், இவ்விதம் இயேசுவின் நாமத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் அநேக ஊழியங்களை அவர் திட்டவட்டமாக ‘அங்கீகரிக்கவே இல்லை’. ஒத்துப்போகும் பிரசங்கிமார்களையும் தேவன் தகுந்த காலத்தில் நிச்சயமாகவே தண்டிப்பார்.

தேவன் மூலமாய் உலகப் பொருட்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நிறைவேற்ற வேண்டிய ஒரே நிபந்தனை என்னவென்றால், ஒருவர் நல்லவராகவோ அல்லது தீயவராகவோ இருக்கவேண்டும், அவ்வளவுதான்! ஏனென்றால், தேவன் நீதியுள்ளோர் மீதும் அநீதியுள்ளோர் மீதும் ‘ஒரே சமமாகவே’ தன் சூரியனை உதிக்கப்பண்ணூகிறார் (மத் 5:45) என்றே இயேசு தெரிவித்தார். எனவே, பொருளாதார ஆசீர்வாதங்கள், ஒரு மனிதனின் வாழ்க்கையை தேவன் அங்கீகரித்ததற்கான அடையாளம் கிடையாது! அன்று, வனாந்திரத்தில் இருபது லட்சம் (2 மில்லியன்) இஸ்ரவேலர்கள் நாற்பது வருடங்களாக தேவனுக்கு கீழ்படியாமல் வாழ்ந்தனர். அவர்கள் மீது தேவன் கடுமையாக கோபம் கொண்டிருந்தார் (எபி 3:17). இருப்பினும், இந்த எல்லா வருட காலமும் தேவன் அவர்களுக்கு உணவையும், நல்ல சுகத்தையும் கொடுத்தார். ஆம், அதையும் ‘அற்புதமாகக்’ கொடுத்தார் (உபா 8:2).

"எனவே, சரீர- பொருளாதாரத் தேவைகளுக்கான ஜெபத்திற்குத் கிடைக்கும் "அற்புதமான பதில்கள்" ஒரு மனிதனின் வாழ்க்கையைக் குறித்து தேவன் மகிழ்ந்திருக்கிறார் என்பதற்கு அடையாளமே இல்லை!"

இதற்கெல்லாம் மாறாக, நம்மைப்போலவே இப்பூமியில் வாழ்ந்த இயேசு முப்பது வயது நிறைவு பெற்றதும் ‘தேவ அங்கீகாரம்’ அவருக்குக்கிட்டியது! அதற்கு ஒரே காரணம் என்னவெனில், இந்த எல்லா வருடங்களிலும் இயேசு உண்மையுள்ளவராய் ஜீவித்து சோதனைகளை மேற்கொண்டு ஜெயித்தார்! அவர் தன்னையல்ல, பிதாவை மையமாகக் கொண்டதோர் வாழ்கையை மாத்திரமே வாழ்ந்தார். ஆம், அவர் தன்னைதானே பிரியப்படுத்திக் கொள்ள ஒன்றையும் ஒருபோதும் செய்யவே இல்லை (ரோமர் 15:3). அவருடைய ஞானஸ்நானத்தில், "இவர் என் நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன்" என்றே பிதா நற்சாட்சி வழங்கினார். ஆம், "என் ஆசீர்வாதத்தைப் பெற்ற என் நேசகுமாரன்" என்று பிதா கூறவேயில்லை. அவ்வாறு பிதா கூறியிருந்தால், அந்த இரண்டாவது சாட்சியில் எந்த மதிப்பும் இருந்திருக்காது. இயேசுவுக்குத் தேவையாய் இருந்ததெல்லாம், ‘தேவ அங்கீகாரத்தை’ விளங்கப்பண்ணும் அந்த முதலாவது சாட்சியே ஆகும்! இப்போது, இதே சாட்சியை நாமும் பெறும்படிக்கே இன்று இயேசுவைப் பின்பற்றுகிறோம்!!

பிறவியிலிருந்தே ஆதாமின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும் சுயத்தை மையமாக கொண்டு வாழும் இழிப்பிறவிகள். எல்லாம் நம்மைச் சுற்றியே வந்து நம்மை சேவிக்க வேண்டும் என்றே எதிர்பார்த்து வாழ்ந்து வளர்ந்து வருகிறோம். நாம் மனந்திரும்பிய பின்போ, "தேவனும்" நம்மை சேவித்து நம்மைப் பலதரப்பட்ட வழிகளில் ஆசீர்வதித்திட வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம்! இதன் ஆரம்பப்படியாகவே நாம் பாவமன்னிப்பின் ஆசீவாதத்தைப் பெற்றுக்கொள்ளும்படி அவரிடம் வருகின்றோம்! இதையடுத்து, இடைவிடாத சங்கிலித் தொடராக சரீர சுகம்; செல்வ செழிப்பு; உத்தியோகம்; வீடு; வாழ்க்கைத்துணை.... என ஏக்கம் கொண்டு அவைகளை அவரிடமிருந்து வாரிக்கொள்ள வாஞ்சிக்கிறோம். இவ்வாறு நம்முடைய கண்களுக்கும், ஜனங்களின் கண்களுக்கும் ஆழ்ந்த பக்தியுடையவர்களாய் நாம் காணப்பட்டாலும் கூட, இன்னமும் நம் வாழ்க்கை "சுயத்தை மையமாக கொண்டே" இருந்திட முடியும். ஆம், நம் சுயம் என்ற ஆசை வலைக்குள் தேவனையும் ஒருவராக இழுத்து அவர் மூலம் என்னவெல்லாம் பெறலாமோ அதையெல்லாம் பெறும்படி வாஞ்சிக்கிறோம்! கெட்டகுமாரன், தன் தகப்பனிடம் ‘சாப்பாடு கிடைக்கும்’ என்றெண்ணி திரும்பி வந்தபோதும் கூட, அவன் தகப்பன் அவனை மனபூர்வமாக ஏற்றுக்கொண்டான் என்பது உண்மைதான்! இவ்விதமாகவே, நாம் எவ்வளவுதான் முழுக்க முழுக்க சுயநலமாய் இருந்தாலும் தேவனும் நம்மை ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார். ஆம், நம்மை அவர் அதிகமாய் நேசிப்பதின் நிமித்தமே நம்மை அரவணைத்து ஏற்றுக்கொள்கிறார். இருப்பினும் அவரின் திவ்விய சுபாவமாகிய "வாங்குவதைப்பார்க்கிலும் கொடுக்கின்ற" அவருடைய சுபாவத்தில் பங்குபெருவதே உண்மையான ஆவிக்குரிய வளர்ச்சி என்பதை நாம் சீக்கிரத்தில் உணர்ந்துக்கொள்வோம் என்றே தேவன் நம்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்! ஆனால், இந்த அவரின் நம்பிக்கையானது தன் திரளான பிள்ளைகளிடம் நிறைவேறாதிருக்கும் பரிதாபத்தையே அவர் இன்றுவரை காண்கின்றார்! இவர்கள் எக்காலமும் ‘நான்’ ‘எனக்கு’ ‘என்னுடையவைகள்’ என்றும், சரீர பொருளாதார ஆசீர்வாதங்கள் என்றும் சுயவாழ்வின் மையத்திலேயே ஜீவித்து செத்துப்போகிறார்கள். ஆ, இது வேதனையன்றோ!

நாமோ, நம் மனம் புதிதாகிறதினிமித்தம், இப்போது தேவனிடமிருந்து நாம் எதை பெற்றுக்கொள்ள முடியும் என்பதிலிருந்து விடுதலை அடைகிறோம். ஆம், இந்த ஒரே ஒரு பூலோகப் வாழ்க்கையில் நம்மிடமிருந்து தேவன் எதைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற மையத்தை அடைவதே முதிர்ச்சி பெற்ற அனுபவமாகும். இந்த வளர்ச்சியின் அனுபவமே 1,44,000- பேரை (வெளி 14) கிறிஸ்துவின் மணவாட்டியாய் தகுதிப்படுத்தியது!

உண்மையான ஆவிக்குரிய தன்மையானது, கோபம், எரிச்சல், இச்சை நிறந்த சிந்தைகள், பண ஆசை போன்ற பல காரியங்களில் நாம் ஜெயம் பெறுவது மாத்திரம் அல்ல! நாம் நமக்காக ஜீவிப்பதிலிருந்து ஓய்ந்திருக்கிறோமே, அதுதான் காரியம்! அதாவது, "என் சொந்த ஆதாயம்; என் சொந்த சௌகரியம்; என் சுய சித்தம்; என் சுய உரிமைகள்; எனக்கான புகழ்ச்சி.... இன்னும் என்ன, என் சுய ஆவிக்குரிய நலம்..." ஆகிய இவைகளைத் தேடுவதிலிருந்து ஓய்ந்திருப்பதேயாகும். தாங்கள் ஜெபிப்பதற்குக் கற்றுத்தரும்படி இயேசுவிடம் சீஷர்கள் கேட்டபோது, ‘நான்’ ‘எனக்கு’ ‘என்னுடைய’ என்ற ஒரு வார்த்தைக்கூட இல்லாத ஓர் ஜெபத்தையே அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார் (லூக்கா 11-1-4). அந்த ஜெபத்தில் பிதாவின் நாமம், அவரின் இராஜ்ஜியம், அவரின் சித்தம் ஆகியவைகளையே பிரதான பாரமாய் கொள்ளும்படி கற்றுக்கொடுத்தார். அதற்குப் பின்பு, நாம் நமக்காக எவ்வளவு அக்கறை கொள்கிறோமோ அதே அளவு நம் சகவிசுவாசிகளின் பொருளாதார மற்றும் ஆவிக்குரிய நலன்களிலும் அக்கறை கொண்டு ஜெபிக்கவும் கற்றுக்கொடுத்தார்! அதாவது, நான், எனக்கு, என்னுடைய என்று அல்லாமல், நாங்கள், எங்கள், எங்களுடைய என்று ஜெபிக்கும் ஜெபம்! இந்த ஜெபத்தை மனப்பாடமாய் ஒவ்வொரு வரியையும் கிளிப்பிள்ளைப் போல் சொல்லுவது எளிது. ஆனால், இச்ஜெபத்தின் பாடங்களை ‘நம் இருதயத்தில்’ கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நாம் உண்மையாகவே எல்லாவற்றையும் வெறுத்து விட்டுவிட்டு ‘தேவனை மட்டுமே’ நம் இருதயத்தின் மையத்தில் வைத்திட வேண்டும்! இவ்வாறாக, நாம் முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையே தேடவேண்டுமென இயேசு திட்டவட்டமாக போதித்தார்.

"அதாவது, நம் வாழ்வின் சிங்காசனப் பீடத்திலிருந்து சுயத்தைக் கவிழ்த்துப்போட்டு, தேவனையும் ஆவிக்குரியவைகளையுமே நம் வாழ்வின் மையமாகிய சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்ய வேண்டும்!!"

நாம் கோபத்திலிருந்தும், அசுத்தமான சிந்தைகளிலிருந்தும் என்னதான் ஜெயம் பெற்றிருந்தாலும்,, இன்னமும் நமது சுய சௌகரியத்தையும், சுகபோகத்தையுமே தேடுபவர்களாய் இருப்போமென்றால், நாம் அடைந்த பரிசுத்தம் ‘போலிப்’ பரிசுத்தமேயாகும். இந்த உண்மையை இன்று அநேகர் இன்னமும் உணராமலே இருக்கிறார்கள். எனவே, இவர்களை சாத்தானும் எளிதில் வஞ்சித்துவிடுகிறான். இன்று எத்தனையோ கிறிஸ்தவர்கள் சௌகரியத்தையும், சுகபோகத்தையும், ஐஸ்வரியத்தையும் தங்களுக்குத் தேடும்பொருட்டு "பண வேட்டைக்கு" அயல்நாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு தேவ ஆசீர்வாதம் கிடைக்கத்தான் செய்யும்! ஆனால், தேவ அங்கீகாரமோ... நிச்சயம் கிடைக்காது!! ஏனென்றால், தேவனும்; உலகப் பொருட்களும் (ஐஸ்வரியம், சுகபோகம், ஆடம்பர வசதி போன்றவை) ஆகிய ‘இரண்டிற்கும்’ சேவகம் செய்திட ஒரு மனிதனாலும் கூடாது. பொருளாதார ரீதியில் தேவ ஆசீர்வாதம் நம் மீதும் நம் பிள்ளைகள் மீதும் தங்கியிருப்பதை, தேவன் நம்மீது மகிழ்ச்சியாய் இருக்கிறார் என்பதற்கு ஓர் அடையாளமாக நாம் இன்னமும் எண்ணிக் கொண்டிருப்போமென்றால், சாத்தான் நம்மை நன்றாய் வஞ்சித்து விட்டான் என்பதற்குச் சந்தேகமேயில்லை. தேவ ஆசீர்வாதம், தேவ அங்கீகாரம் ஆகிய இவ்விரண்டும் முழுக்க முழுக்க வித்தியாசமான எதிர்முனைகள்! நாம் இப்பூலோக ஜீவியத்தை ஓடி முடிக்கையில் பெற வேண்டிய சாட்சி எதுவென்றால், ‘ஏனோக்கு’ இப்பூமியை விட்டுச் செல்லுகையில் பெற்ற, "அவன் தேவனுக்குப் பிரியமானவன்" (எபி 11:5) என்ற தேவனுடைய அங்கீகாரத்தை பெற்ற சாட்சியேயாகும்! மூன்று வார்த்தைகள் மட்டுமே!! ஆனால், இந்த சாட்சியைவிட வலிமையான சாட்சியை ஒருமனிதனும் தன் பூலோக வாழ்வில் ‘வேறு எதிலும்’ பெற்றிடவே முடியாது! இதே சாட்சியைத்தான் இயேசுவும் பவுலும் பெற்றார்கள். வெறும் "தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவன்" என்ற சாட்சியில் எந்த மதிப்பும் இல்லவே இல்லை. ஏன் தெரியுமா? ஏனென்றால், இவ்வுலகில் வாழும் கோடானுகோடி அவிசுவாசிகள் கூட இதே சாட்சியைப் பெற்றுக்கொள்ள முடியுமே!!

இன்று தேவன் தன் ஆசீர்வாதத்தை மட்டுமல்லாமல் தன் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு வாஞ்சிப்பவர்களைக் காண்பதற்கே தவியாய்த்தவித்து நோக்கிக் கொண்டிருக்கிறார்!

கேட்பதற்கு காதுள்ளவன் எவனோ அவன் கேட்கக்கடவன்!!