சாத்தானை "இந்த உலகத்தின் அதிபதி" (யோ 14:30) என இயேசு குறிப்பட்டது உண்மைதான்! ஆனால், இந்த சாத்தானை "தேவனுக்கு எஜமான்" என இயேசு ஒருபோதும் குறிப்பிட்டதேயில்லை என காண்பது நமக்கு மிகுந்த பரவசத்தைத் தருகிறது! ஜனங்கள்தான், சாத்தானை தாங்கள் சேவிக்கும் எஜமானாய் தெரிந்துக்கொள்கிறார்கள். இவ்வாறு மனிதன், தான் சேவிக்கும்படி தெரிந்துக்கொள்ளும் இரண்டு எஜமான்களைப் பற்றி இயேசு குறிப்பிட்டு கூறுகையில்: 1. தேவன். 2. உலகப்பொருள் என்றே கூறினார் (லூக்கா 16:13). ஆனால், இன்றைய கிறிஸ்தவ உலகிலோ, 1. தேவன். 2. சாத்தான் ஆகிய இருவரில் ஒருவரை தெரிந்துக்கொள்ளும்படியே இன்றைய பிரசங்கிகள் ஜனங்களை அழைக்கிறார்கள். இதற்கு முற்றிலும் மாறாக, "தேவனா? உலகப்பொருளா? ஆகிய இருவரில் ஒருவரைத்தான் நீங்கள் தெரிந்துக்கொள்ள முடியும்" என இயேசு ஜனங்களிடம் அறைகூவினார்.
திட்டம் தீட்டுவதில் சாத்தான் ஓர் தலைசிறந்த தந்திரவான்! தேவனா? சாத்தானா? ஆகிய இருவரில் ஒருவரைத் தெரிந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தால், ஒருவர்கூட சாத்தானைத் தெரிந்துக் கொள்ளமாட்டார்கள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், தேவனா? உலகப்பொருளா? என்ற தெரிந்துகொள்ளுதலை முன் வைக்கும்போது, விசுவாசிகள் கூட ஓர் உறுதியான தீர்மானத்தைத் தீர்மானிப்பதற்குத் திகைப்பார்கள் என்பதை சாத்தான் நன்கு அறிந்திருந்தான்.
இன்று அநேக கிறிஸ்தவர்கள் தங்கள் வேலையையோ அல்லது தாங்கள் வாழும் இருப்பிடத்தையோ தெரிந்துக்கொள்வதை "பணம், சொத்துக்கள்" போன்ற உலகப்பொருட்களின் மீது கொண்ட இச்சையின் அடிப்படையில் தெரிந்து கொள்ளுகிறார்களேயல்லாமல், தேவராஜ்ஜிய வளர்ச்சியில் கொண்ட ஆர்வத்தின் அடிப்படையில் அல்ல என்பதையும் சாத்தான் நன்கு அறிந்து வைத்திருக்கிறான்! இதுப்போன்ற விசுவாசிகள் அனைவரும், என்னதான் மார்க்க கிரியைகளில் ஈடுபட்டாலும்.... இவர்களோ தேவனுடைய நோக்கம் நிறைவேறுவதற்குப் பிரயோஜனம் அற்றவர்கள் என்பதையும் சாத்தான் அறிந்திருக்கிறான்!
அதுமாத்திரம் அல்ல, இன்றைய அதிகபட்சமான கிறிஸ்தவ ஊழியங்கள்
‘பரிசுத்த ஆவியின் வல்லமையை சார்ந்திருப்பதைவிட’ இந்தப் பணத்தையும் சம்பத்துக்களையுமே அதிகமாக சார்ந்திருக்கிறார்கள் என்ற உண்மையையும் சாத்தான் அறிந்து வைத்திருக்கிறான். இதுப்போன்ற கிறிஸ்தவ ஊழியங்கள் அனைத்திற்கும் எந்தவித நித்தியமதிப்பும் இல்லை என்பதும் சாத்தானுக்கு நன்றாகத் தெரியும்! இவர்கள் தங்கள் ஊழிய அறிக்கைகளைப் பல வண்ணங்கொண்ட தங்கள் கிறிஸ்தவ பத்திரிக்கைகளில் எத்தனை கவர்ச்சியாய் பிரசுரித்தாலும், அவை அனைத்தும் நித்தியத்தில் ஒரு துளியும் பயனற்றது என்பதும் இந்த சாத்தானுக்குத் தெரியும்!
ஆகவே, நாம் ஒருபோதும் சாத்தானுடைய தந்திரங்களை அறியாதவர்களாய் இருந்துவிடவே கூடாது. சாத்தானுடைய இந்த தந்திரங்களை நாம் உறுதியாய் எதிர்த்து நிற்கவேண்டுமே அல்லாமல், "அவனுடைய கோபத்தை" எதிர்த்து நிற்க ஒருபோதும் அழைக்கப்படவேயில்லை (எபே 6:11). சாத்தானுடைய கோபம் எந்தக் காலத்திலும் தேவனுடைய பணிக்கு இடையூறாய் வந்ததேயில்லை. இதற்கு நேர்மாறாக "உபத்திரவங்கள்" இயேசுகிறிஸ்துவின் சபையை உலகமெங்கிலும் பலுகிப்பெருக மாத்திரமே இன்றுவரை வகை செய்திருக்கிறது. ஆகவேதான், தன்னுடைய கோபத்தினால் சாதிக்கத் தவறிய இடங்களிளெல்லாம் இந்த சாத்தான் தன் தந்திரங்களினால் சாதித்து வருவதை நாம் காண்கிறோம்! (வெளி 12:11,12).
இவ்வாறு தன்னை மறைவாய் ஒளித்துக்கொண்டு கிரியை செய்வதில் அவன் அளவில்லா மகிழ்ச்சியடைகிறான்! இவ்விதமாகவேதான் அனேகரைத் தான் வஞ்சிக்க முடியும் என்பதை அவன் அறிந்திருக்கிறான். மேலும், ஒரு விசுவாசி, தான் எடுக்கும் ஒரு தீர்மானத்தில் உலகப்பொருளின் மீது கொண்ட சிநேகம் அவனைப் பாதித்திருந்தால், அவன் என்னதான் தேவனுக்கு ஊழியம் செய்வதாக தன்னை எண்ணிக்கொண்டாலும், அவனோ உண்மையில் உலகத்தின் அதிபதியைத்தான் இன்னமும் சேவிக்கிறான் என்பதும் சாத்தானுக்கு நன்றாய் தெரியும்.
இவ்வாறு ஒரு விசுவாசி, உலகபொருளின்மீது கொண்ட தன் மனப்பான்மையில் தவறாய் இருக்கும் பட்சத்தில், மற்ற எல்லா பகுதிகளிலும் தவறாகவேதான் இருப்பான்!
ஏனெனில், எந்த உலக - ஆதார அமைப்பை (World System) அழிப்பதற்கு ஆண்டவர் வந்தாரோ அந்த உலக அமைப்பில் அல்லவோ இவனும் இப்போது ஒரு பங்காகிவிட்டான்! இதுப்போன்ற ஓர் மனிதன், இப்பூமியில் ஆண்டவருடைய நோக்கத்திற்கு விரோதமான துரோகியாகவே (Traitor) மாறிவிடுகிறான். இதை இவன் அறியாது இருந்தபோதிலும், மெய்யாகவே இவன் சாத்தானோடுதான் சேர்ந்து செயல்படுகிறான்! இந்த அவல நிலைதான் இன்றைய அனேக விசுவாசிகளிடம் காணப்படும் அடிப்படையான பிரச்சனையாக இருக்கிறது. ஆம், இவர்கள் சாத்தானுடைய தந்திரங்களை இன்னமும் அறிந்துக்கொள்ளவில்லை!
இயேசு சிலுவைக்குச் செல்வதற்கு முன்பாக "இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை" (யோ 14:30) என்றே தன் சீஷர்களிடம் கூறினார். ஆம், இயேசுவின் மீது உலகப்பொருளுக்கு எந்த வல்லமையும் இல்லாது இருந்தது! ஆகவேதான், அவரிடத்தில் சாத்தான் ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை. ஆனால், இன்றோ அனேக விசுவாசிகளின் ஜீவியத்தில் உலகப்பொருளின் ஆதிக்கம் வந்துவிட்டபடியால் சாத்தான் தாராளமாய் அவர்களின் ஜீவியத்தில் புகுந்து விளையாடுகிறான். இதன் விளைவாய் அவர்களுடைய ஜீவியத்தில் தேவனுடைய சம்பூர்ண திட்டம் நிறைவேறாதபடி அவர்களைத் திசைதிருப்பி விடுகிறான்!
கடந்த 20 -நூற்றாண்டுகளில், கர்த்தருடைய ஊழியர்களுக்கு ஏற்பட்ட பெரும் தீங்கான எதிர்ப்புகள் யாவும் தங்களை ‘விசுவாசிகள்’ என அழைத்துக்கொள்ளும் கிறிஸ்தவர்கள் மூலமாகவே வந்திருக்கின்றன. யார் இவர்கள்? தங்கள் உபதேசங்கள் யாவையும் வேத வாக்கியத்தின்படி சரியாகப் பற்றிக்கொண்டு ‘பணஆசை’ என்ற உபதேசத்தை மாத்திரம் நழுவ விட்டுவிட்டவர்கள்! இவ்வாறு உலகப் பொருட்களை சேவிக்கும் விசுவாசிகள், உத்தமமான தேவனுடைய தீர்க்கதரிசிகளை எதிர்த்து நிற்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இதுப்போன்ற எதிர்ப்புகளைத் தங்கள் உபதேசங்களில் சரியாய் இருந்துகொண்டு (மத் 23:3) உலகப்பொருட்களையும் நேசித்து அதற்கு ஊழியம் செய்த பரிசேயர்களிடமிருந்து இயேசுவும் சந்தித்திருக்கிறார் (லூக் 16:14).
உலகப்பொருட்களை நாடித் தொடரும் கிறிஸ்தவர்கள் திரளான பணமுடையவர்களாய் இருப்பதினிமித்தம் அவர்கள் எப்போது விரும்பினாலும், எந்த இடம் செல்ல விரும்பினாலும் உடனே பயணம் சென்றுவிடுவார்கள்! அதேப்போல, அவர்கள் எதை விரும்பினாலும் அதை எப்போதும் வாங்குவதற்குரிய செல்வமுடையவர்களாயும் இருப்பார்கள்! "உலகப்பொருள் - சிநேகம்" கொண்டவர்கள் மாத்திரமே இதுப்போன்ற செலவு செய்யும் பழக்கத்தை உடையவர்களாய் இருந்திட முடியும்.
ஆனால், இவ்வாறெல்லாம் ஆடம்பர ஜீவியம் கொண்டவர்கள், துன்பம் நிறைந்த இந்த உலகில் ஆண்டவருக்கென நல்ல சாட்சியாய் ஒருக்காலும் இருந்திடவே முடியாது!
நம் தேவைக்கு அதிகமான பணமுடையவர்களாய் இருப்பது எப்போதுமே அபாயம் நிறைந்ததேயாகும். யோனாவுக்கு ஏராளமாய் பணம் இருந்ததினிமித்தமே, தேவனுடைய கற்பனைக்கு கீழ்படியாத நேரம் வந்தபோது உடனே தர்ஷீசுக்கு கப்பல் டிக்கட் எடுத்துக்கொண்டு பயணம் மேற்கொண்டான். அச்சமயத்தில் தேவைக்கு மிஞ்சிய பணம் அவனுக்கு இல்லாதிருந்தால் இதுப்போன்ற சோதனையிலிருந்து யோனா காக்கப்பட்டிருப்பானே!
இதுப்போன்ற கொடிய சோதனைகளிலிருந்து தன் அப்போஸ்தலர்களைக் காக்கும்படியே அவர்களை இவ்வுலகில் ஏழைகளாய் தேவன் வைத்திருந்தார். யோபு, ஆபிரகாம், தாவீது போன்றவர்களை ஐஸ்வர்யவான்களாய் ஆக்கியிருந்த ஆண்டவர் மிக எளிதில் தன் அப்போஸ்தலர்களையும் ஐஸ்வர்யவான்களாய் ஆக்கியிருக்க முடியும்! ஆனால், அவரோ அவ்விதம் செய்யவில்லை. ஏன்? ஏனெனில், பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களைப்போல அல்லாமல், புதிய உடன்படிக்கை அப்போஸ்தலர்கள் சாத்தானுக்கு எதிராய் யுத்தம் செய்யவேண்டியதாய் இருந்ததே காரணமாகும்! சாத்தான் அவர்களுக்கு எதிராய் வந்தபோது, "அவர்களிடம் உலகபொருளின் சிநேகம் ஒன்றும் இல்லை" என்பதைக் காணவேண்டியது மிகவும் அவசியமாகிவிட்டது! அவ்வாறு இல்லையென்றால், தேவனுடைய நோக்கம் அவர்கள் மூலமாய் ஒருபோதும் நிறைவேறவே முடியாது!
இப்போது, உங்களைக் குறித்து என்ன? சாத்தான் உங்களுக்கு எதிராய் வரும்போது, உங்களிடம் உலகப்பொருளின் சிநேகத்தை அவன் காண்பதால், உங்கள்மீது அவன் ஆதிக்கம் செலுத்தும் வல்லமையைப் பெற்றுவிடுவானா?
சாத்தானுக்கு எதிரான யுத்தம், இந்த பூமியிலல்ல, "வானமண்டலங்களிலேயே" நடக்கிறது (எபே 6:12). அங்குதான் சாத்தானின் துரைத்தனங்களும் அதிகாரங்களும் நம்மால் கட்டப்பட வேண்டும் (மத்தேயு 18:18). ஆனால், "பரலோக சிந்தை கொண்டவர்கள் மாத்திரமே" இந்த யுத்தத்தை செய்திட முடியும். உலகப்பொருட்களை நேசிப்பவர்கள் "பூமிக்குரிய சிந்தை கொண்டவர்களாய்" இருப்பதால், இந்த யுத்தத்திற்கு அவர்கள் சற்றேனும்கூட பிரயோஜனமற்றவர்கள்! இந்த உண்மையை விசுவாசிகள் அறியாதுபோனாலும், சாத்தான் மிக நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறான்!!
பரலோகத்தில், பரிசுத்தவான்கள் பொன்வீதியில் நடப்பார்கள்! இந்த பூமியில் பொன்னைத் தங்கள் காலின் கீழாகப் போட கற்றுக் கொண்டவர்களுக்காகவே, பரலோகம் சிருஷ்டிக்கபட்டிருக்கிறது! நாம் இன்னமும் உலகப்பொருட்களை நேசித்து பூமிக்குரிய சிந்தை கொண்டவர்களாயிருந்து கொண்டு, உபவாசித்து ஜெபித்தால், அது ஒன்றும் தேவனுடைய தீர்மானத்தை நிறைவேற்றப் போதுமானது அல்ல! எலியாவைப் போல யார் உலகப்பொருட்களின் பிடியிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார்களோ, அத்தகைய "நீதிமானின் ஜெபமே" தேவனுக்கு முன்பாக மிகுந்த பெலனுள்ளது (யாக் 5:16,17). இவ்வாறு நம்மை உலகப்பொருட்களின் சிநேகத்திலிருந்து விடுதலையாக்கி அவருக்கென்று வல்லமையாய் மாற்றும்படியே, சில சமயங்களில் "ஏராளமான பணத்தை" நாம் இழப்பதற்கும் தேவன் அனுமதிக்கிறார்!!
சாத்தானின் ஆளுகைக்குள் இருக்கும் இந்த உலகில், நேர்மையும், முழு இருதயமுமான ஓர் இயேசுவின் சீஷன், தன் வியாபாரத்தின் மூலமாய் ஐசுவரியவானாய் மாறுவது வெகு கடினமானதேயாகும். இதுப்போன்ற உலகில் ஒருவன் பணக்காரனாய் மாற வேண்டுமென்றால், ஏதாகிலும் சில பகுதிகளில் அவன் சாத்தானின் நியதிகளைப் பின்பற்றி, தேவனுடைய வார்த்தை கூறும் நியதிகளுக்கோ கீழ்ப்படியாமல் போகும் நிலைக்கு வந்ததேயாக வேண்டும்! ஆகவேதான், வேதாகமம் மிகத் தெளிவாக, "ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும், கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் ‘அமிழ்த்துகிற’ மதிக்கேடும், சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்" (1தீமோ 6:17) எனக் கூறுகிறது. "தேவனிடத்தில் ஐசுவரியமுள்ளவர்களாய்" மாறிட நாடும் ஒருவன், ஒருக்காலும் "இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்களாய்" மாறிடவே முடியாது (லூக் 12:21), (1தீமோ 6:17).
மேற்கண்ட சத்தியம் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதாலும், கிறிஸ்தவப் புத்தகங்களையும், ஒலிநாடாக்களையும் விற்பனை செய்வதாலும் ஐசுவரியவான்களாகும் பிரசங்கிகளுக்கும் பொருந்தும்! இந்நாட்களில் நாம் காணும் மற்றுமொரு வஞ்சகம் இஸ்ரேல் நாட்டிற்குச் செல்லும் "பரிசுத்த நகர பயணமாகும்"! ஒரு பிரசங்கி இவ்வாறு இஸ்ரேல் நாட்டுப் பயணத்திற்கு பத்து பேரை சேர்த்துவிட்டால், பயண - ஏஜண்ட அவருக்கு ஒரு டிக்கட்டை இலவாசமாகத் தருவான்" இதுப்போன்ற பிரசங்கிகள் யாவரும் "பொன் கன்றுக்குட்டியை" ஆராதித்து உலகப்பொருட்களை சேவிக்கிறார்களேயல்லாமல், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் அல்லவே அல்ல!! யாரோ ஒருவர் என்னைப் பார்த்து , "நீங்கள் எப்போதாவது பரிசுத்த நகரம் சென்றதுண்டா"? எனக் கேட்டார். அதற்கு நான், "அந்த நகரத்தில் நான் ஒவ்வொருநாளும் நடந்து செல்கிறேன்" என்றே பதில் கூறினேன்!!
20- ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில்தான் "செழிப்பான சுவிசேஷம்" உலகப் பொருட்களின்மீது சினேகம் கொண்ட பிரசங்கிகளால் கண்டுபிடிக்கப்பட்டது!
இவர்கள் வாழும் ஆடம்பர வாழ்க்கையையும், தங்கள் "பக்தர்கள்" வழங்கிய தசமபாகம் காணிக்கை மூலம் சேகரித்த திரளான ஆஸ்திகளையும் நியாயப்படுத்த இவர்கள் எதாவது "வேதபூர்வமான" ஆதாரங்களைத் தேட வேண்டியதாய் இருந்தது. முடிவில் , தேவன் இஸ்ரவேலுக்குத் தந்த பழைய ஏற்பாட்டு வாக்குதத்தங்களை இவர்கள் கண்டுபிடித்து, ‘இன்றும்’ தேவனுடைய ஆசீர்வதத்திற்கு இந்த வாக்குத்தத்தங்களே தரப்பட்டிருப்பதாகத் துணிந்து பிரசங்கிக்கத் தொடங்கிவிட்டார்கள்! ஏற்கனவே பண ஆசையில் இருந்த எண்ணற்ற விசுவாசிகள் இந்தப் "புதிய சுவிசேஷத்தை" வாரி அணைத்துக் கொண்டார்கள்!!
U.S.A நாட்டிலுள்ள ஒரு பிரபல்ய பத்திரிக்கை நிருபர், இந்த "செழிப்பின் சுவிசேஷம்" பிரசங்கிக்கப்படும் ஒரு சபையைக் குறித்து கேள்விப்பட்டார். இந்த போதனையானது, மெய்யாகவே கிரியை நடப்பிக்கிறதா என்பதைக் கண்டறியவும் விரும்பினார். ஆகவே, ஒருநாள் அவர் அந்த சபைக்குச் சென்று, கார்களின் மாடல்களைச் சோதித்து உற்றுப்பார்த்தார். அப்போது "பாஸ்டர் மற்றும் உதவி பாஸ்டர்கள்" நிறுத்தும் இடத்திலுள்ள கார்கள் மாத்திரமே விலை உயர்ந்த மாடல்களைக் கொண்டதாய் இருப்பதைக் கண்டறிந்தார். அவைகள் தவிர மற்ற கார்கள் அனைத்தும் குறைந்த விலை மாடல்களாகவே இருந்ததையும் பார்த்தார். இப்போது அந்த நிருபர் ஓர் முடிவுக்கு வந்தார். ஆம், இந்த "செழிப்பின் சுவிசேஷம்" மெய்யாகவே கிரியை செய்கிறது! அதாவது, சபையாரின் தசமபாகம், காணிக்கைகளைக் கொண்டு வாழ்பவர்களுக்கு மாத்திரமே இந்த "செழிப்பு" கிரியை செய்கிறது! மீதமுள்ள சபையார் அனைவரும் தாங்கள் எப்போதும் இருந்த நிலையிலேதான் இன்னமும் இருக்கிறார்கள்! என்ற உண்மையை அந்த நிருபர் கண்டறிந்தார்!
இந்தியாவை போன்ற ஏழை நாடுகளிலும்கூட, இந்தப் ‘போலியான சுவிசேஷத்தின்’ மூலமாய், ஏழை ஜனங்களிடமிருந்து, ஏராளமான தசமபாகத்தையும் காணிக்கைகளையும் பெற்று, பிரசங்கிகள் ஐஸ்வர்யவான்களாய் மாறுகிறார்களே!?
இதுபோன்று உலகப்பொருட்களுக்குப் பின்சென்று, பாவத்தை சகித்துக்கொண்டு, சாத்தானை எதிர்க்கும் யுத்தத்தில் தங்களைப் பெலனற்றவர்களாய் மாற்றிக்கொண்ட இன்றைய கிறிஸ்தவ சபைகளைக் குறித்தும், அதன் தலைவர்களைக் குறித்தும் ஆண்டவர் என்ன எண்ணுவார்? ஆம், இதுப்போன்ற "சபையை" பாதாளத்தின் வாசல்கள் மேற்கொண்டுவிட்டன! இந்த சபையை ஆண்டவர் கட்டிக்கொண்டிருக்கவில்லை, என்பதற்கு இதுவே தெளிவான நிருபணமாகும். ஏனென்றால், மெய்யான ஆண்டருடைய சபையை இருளின் அதிகாரங்கள் ஒருக்காலும் மேற்கொள்ளவே முடியாது (மத் 16:18).
எங்கேயாவது, ஒரு இடத்தில் மெய்யான ‘பரிசுத்தாவியின் எழுப்புதல்" வருமென்றால், அந்த எழுப்புதல் விசுவாசிகளை "உலகப் பொருட்களின் சினேகத்திலிருந்து" விடுதலை செய்வதாய் இருக்கும்! அதுப்போன்ற எழுப்புதல் மாத்திரமே சபையிலிருந்து "உலகத்தின் அதிபதியை" விரட்டித் துரத்திட முடியும்!!
இதைதவிர, "எழுப்புதல்" என கூறிக்கொள்ளும் அனைத்தும் போலியானதேயாகும்!!
கேட்பதற்கு காதுள்ளவன் கேட்ககடவன்!!