நான்குவித பின்மாற்றக்காரர்கள்!

Article Body: 

கடைசி நாட்களுக்குரிய அடையாளமாய் "விசுவாச துரோகத்தை" வேதாகமம் சுட்டிக்காட்டுவதை கவனியுங்கள் (2 தெச 2:3). இன்றைய எல்லா சபைகளிலும் "பின்மாற்றம்" ஓர் சாதரண மலிந்த செயலாய் மாறிவிட்டதே!

லூக்கா 15 - ம் அதிகாரத்தில் உள்ள மூன்று உவமைகளில் நான்குவிதமான பின்மாற்றக்காரர்களை இயேசு குறிப்பிட்டார் : 1. காணாமல்போன ஆடு, 2. காணமல்போன வெள்ளிக்காசு, 3. காணாமல் போன இளையகுமாரன், 4. காணாமல்போன மூத்தக்குமாரன்!!

காணாமல்போன ஆடும் ஐக்கியக் குறைவும்:

மறுபடியும் பிறந்த ஓர் விசுவாசி பின்மாற்றம் அடைவதையே இந்தக் ‘காணாமல்போன ஆடு’ குறிப்பிடுகிறது. ஐக்கியம் இல்லாத குறையே இவனுடைய பின்மாற்றத்திற்கு காரணமாய் இருந்திருக்ககூடும். ஆண்டவரோடு இவனுக்கு ஓர் நெருக்கமான உறவு இல்லாததினிமித்தமும், சூழ்நிலைகளினால் இவன் இழுக்கப்பட்டுப் போனதினாலோ அல்லது ஒருவேளை, மற்ற விசுவாசிகளோடு கொள்ளும் ஐக்கியத்தை இவன் மதிக்காததினிமித்தம் வழி தப்பிச் சென்றிருக்கக்கூடும். இவன் மாத்திரம் சபைக்குள் இருந்திருந்தால், பத்திரமாய் இருந்திருப்பான்! ஆனால், இவனோ தனக்குத்தானே கொண்ட ‘சுய-நம்பிக்கையினிமித்தம்’ வீழ்ச்சியடைந்துப் போனான்!

இவனுடைய பின்மாற்றத்திற்கு வேறுபல காரணங்களும் இருந்திருக்கக்கூடும். உலகத்தின் கவர்ச்சி அவனை இழுத்திருக்கலாம். அல்லது வாழ்வின் பிரச்சனைகளின் அழுத்தம் அவனை சோர்வடையச் செய்திருக்கலாம். மனுஷருடைய அல்லது பிசாசினுடைய தந்திரங்களால் வஞ்சிக்கப்பட்டிருக்கக்கூடும். அல்லது கர்த்தரோடு இசைந்து நடக்கும் வாழ்க்கையில் கொண்ட கவனக்குறைவினால் படிப்படியாக வீழ்ச்சிக்குள் சென்றிருக்கலாம்!!

இந்த உவமையில், தன்னுடைய சொந்த மந்தையைக் குறித்து ஆண்டவர் கூறும்போதோ "மனந்திரும்ப அவசியமில்லாத நீதிமான்கள்" (லூக் 15:7) என்றே அவர்களைக் குறிப்பிட்டார். தேவனுக்கு முன்பாகவும், மனுஷர்களுக்கு முன்பாகவும் இடறலற்ற மனசாட்சியோடு வாழும்படி தங்களைத் தாங்களே எல்லா நேரங்களிலும் நியாயம் தீர்த்து வாழ்ந்த அவர்களின் பிரயாசத்தினிமித்தமே ஆண்டவர் அவ்வாறு கூறினார். இவர்கள் தேவனிடத்தில் கொண்ட மனப்பான்மையில் சற்றேனும் பாவ சிந்தை ஏற்ப்பட்டாலும் அதைத் துரிதமாய் அவரிடம் அறிக்கை செய்து சரிசெய்து கொண்டார்கள். அதேப்போல, மனுஷரிடத்தில் பேசிவிட்ட சிறிதளவு பாவ வார்த்தைகளைக்குறித்தும், செய்கைகளைக் குறித்தும், துரிதமாய் உணர்வடைந்து சரிசெய்துக் கொண்டார்கள்! இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஜீவித்து தொடர்ச்சியாய் மனந்திரும்பியதினிமித்தமே அவர்களை "மனந்திரும்ப அவசியமில்லாதவர்கள்" என ஆண்டவர் குறிப்பிட்டார். காணாமல்போன ஆடோ, இதுப்போன்ற மனப்பான்மையில் வாழாதபடியால் பின்மாற்றம் அடைந்துவிட்டது!

காணாமற்போன வெள்ளிக்காசும் அக்கறையில்லாத சபையும்:

சில நூதனமான காரணங்களினிமித்தமே இந்த வெள்ளிக்காசு காணாமல் போனது. ஆம், அந்த ஸ்திரீயின் கவனக்குறைவே இந்த வெள்ளிக்காசு தொலைந்துப் போனதற்கு காரணமாகும். இங்கு குறிப்பிடப்பட்ட ஸ்திரீயானவள், "ஓர் சபைக்கு" ஒப்பனையாக கூறப்பட்டிருக்கிறாள். தன்னுடைய வெள்ளிக்காசுகளைப் பத்திரமாய் வைப்பதில் இவள் கவனக்குறைவாய் இருந்துவிட்டாள்!

இது ஒரு வெள்ளிக்காசு! பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலின் முதற்பேறான பிள்ளைகளை மீட்டுக்கொள்ள "வெள்ளியைப்" பயன்படுத்தினார்கள் (எண் 18:16). ஆகவே, இந்த வெள்ளிக்காசு ஓர் சமயம் மீட்கப்பட்டு (இரட்சிக்கப்பட்டு) தேவனுடைய பிள்ளையாய் மாறியபின்.... இப்போதோ, தொலைந்துவிட்டது!! இருப்பினும் இந்த விசுவாசி பின்மாற்றம் அடைந்ததற்குப் பிரதான காரணம், அவனுடைய சபையின் கவனக்குறைவேயாகும்! ஒருவேளை, அவன் இருந்த சபையில் தேவனுடைய வார்த்தையின் உயர்ந்ததரம் பிரசங்கிக்கப்படாததினிமித்தம் அது ஓர் செத்த சபையாய் இருந்திருக்கக்கூடும்! ஆகவே, அவனுடைய நித்தியமான ஆத்துமத்தைக்குறித்து அந்த சபை அக்கறை காட்டாமல் விட்டுவிட்டது!!

ஆண்டவரைப் பார்த்து, "நான் என்ன என் சகோதரனுக்கு காவலாளியா?" என காயீன் கேட்டான். உண்மையில் அவன்தான் அவன் சகோதரனுக்கு காவலாளி! ஆம், சபையில் நம்முடைய சகோதர சகோதரிகள் வீழ்ச்சியடையாமல், காக்கவேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ஆகவே, இந்த உவமையானது, அந்தப் பின்மாற்றக்காரனைக் குறித்து அவ்வளவாய் குறிப்பிடாமல், அந்த வெள்ளிக்காசை காணாமல் போக விட்டுவிட்ட... அக்கறை இல்லாதிருந்த ஸ்திரீயைக் (சபையை) கண்டித்து புத்தி சொல்வதாகவே இருக்கிறது!!

காணாமல்போன இளையகுமாரனும், அவனிடமிருந்த தன்னிச்சையான ஆவியும், முரட்டாட்டமும்:

இந்த இளையகுமாரன், பின்மாற்றத்தின் மற்றொருரகமாயிருக்கிறான். அவன் தேவனுடைய நேரத்திற்கு காத்திருக்க பொறுமையற்றவனாய் தன் சொந்த திட்டங்களை தானே செயல்படுத்த தீவிரப்பட்டான். இவ்வாறு தனக்கானதைத் தேடி, பணத்தை நேசித்து, தன் தகப்பனிடம் முரட்டாட்டம் செய்து... கடைசியில், இவன் தன்னுடைய வீட்டை விட்டே வெளியே போய்விட்டான்.

இதுப்போன்ற ஒரு விசுவாசி, தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவாய் தேவனிடமிருந்தும் தன் மூத்த சகோதரர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ள விரும்புகிறவனாயிருக்கிறான். அவ்விதமாய் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்ட பின்போ... அவர்களை விட்டுவிட்டு வெளியேறிவிடுகிறான்! இவ்விதமே இன்றைய அநேகப் பிரசங்கிகள்கூட தங்கள் ஆவிக்குரிய தகப்பன்மார்களிடத்தில் கொண்டிருக்கும் தொடர்பைப் பயன்படுத்தி ஓர் ஊழியத்தையும், தங்களுக்கென ஓர் பெயரையும் பெற்றுக்கொள்ளுகிறார்கள். அவ்வாறு பெற்றுக்கொண்ட பின்போ, தன்னிச்சையாய் செயல்பட நாடுகிறார்கள்!!

இந்த இளையகுமாரன், தேவன் நியமித்த அதிகாரத்திற்கு (அவன் தகப்பனுக்கு) அடங்கியிருக்கும் ஒழுங்கை விரும்பாத ஓர் விசுவாசிக்கு ஒப்பாயிருக்கிறான்.

"தேவன் எடுக்கும் எல்லா ஒழுங்கு நடவடிக்கைகளின் நோக்கமும், தன் பிள்ளைகளை நொறுங்குவதற்கு நடத்தி.... ஒருநாளில், அவர்களுக்கு ஆவிக்குரிய அதிகாரத்தை வழங்க வேண்டும் என்பதேயாகும்!"

ஆனால், ஏராளமான சகோதரர்களோ, இந்த இளையசகோதரனைப்போல மாறி, தேவன் அவர்களுக்கென்று வைத்திருந்த திட்டங்களை சீர்குலைத்து...முடிவில், "பன்றிகளோடு" சேர்ந்துவிடுகிறார்கள்! இந்நிலைக்கு வந்தவர்களில் ‘ஒரு சிலர் மாத்திரமே’ புத்தி தெளிந்து மீண்டும் தன் தகப்பன் வீட்டிற்கு நொறுங்குண்ட இருதயத்தோடு மனந்திரும்பி வருகிறார்கள்!!

காணாமல்போன மூத்தக்குமாரனும், அவனிடமிருந்த ஒப்பிட்டுப்பார்க்கும் ஆவியும், பெருமையும்:

இந்த மூத்தகுமாரன், பின்மாற்றம் அடைந்ததைப்போல தோன்றாத ஓர் விசுவாசிக்கு ஒப்பாயிருக்கிறான்! ஆகிலும் இவனோ, பெருமை கொண்டவனும், சுயநீதியை கொண்டவனுமாயிருந்து, தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு "அவர்களைவிட தானே சிறந்த வாழ்க்கை வாழ்வதாகவும், அவர்களைவிட தன்னுடைய ஊழியத்தில்தான் அதிக பலன் இருப்பதாகவும் எண்ணிக்கொள்கிறான்!!

இத்தனை ஆசீர்வாதங்களும், "தகுதியற்ற தனக்குக் கிடைத்த தேவனுடைய இரக்கம்" என தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதற்கு பதிலாய் "தான் சாதித்தது" என அவன் சிந்தித்ததினிமித்தம் பெருமை கொண்டவனாய் மாறினான்! இதனிமித்தம் தேவன் அவனுக்கு எதிர்த்து நின்றபடியால், சாத்தான் அவனை இலகுவில் வெகுசீக்கிரத்தில் வீழ்ச்சியடையச் செய்துவிட்டான்.

இந்த உவமையில் கூறப்பட்ட முதல் மூன்று பின்மாற்றக்காரர்கள், கடைசியில் வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டார்கள்! ஆனால், இந்த மூத்தகுமாரனோ வீட்டிற்கு வெளியிலேயே நின்றுவிட்டான் என காண்கிறோம். ஆம், எல்லோரையும் காட்டிலும் இவன்தான் மிகமோசமான நிலையிலிருக்கும் பின்மாற்றக்காரன் என ஆண்டவர் நமக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறார் என்பதை இதிலிருந்து அறிகிறோம்.

1. காணாமல்போன ஆட்டின்மீது நாம் கொண்டிருக்க வேண்டிய சரியான மனப்பான்மை:

நல்ல மேய்ப்பன் காணாமல்போன தன்னுடைய ஆட்டை கண்டுபிடிக்கும்வரை அதைத் தேடினான். இதுப்போன்ற மேய்ப்பர்களுக்கு கீழாய் இருக்கும் நாம் அனைவருமே இதே மனப்பான்மைதான் கொண்டிருக்கவேண்டும். கவனமின்மையினாலும், சாத்தானின் வஞ்சகத்தினாலும், இச்சைகளின் ஈர்ப்பினாலும் சபையிலிருந்து பின்மாற்றமடைந்தவர்களை மீண்டும் கொண்டுவரும்படி ‘நாம் யாவருமே’ பிரயாசப்பட வேண்டும். இந்த வாஞ்சையானது நம் எல்லோருக்கும் காணப்பட்டு, "தேவனுடைய இருதயத்திற்கேற்ற மேய்ப்பர்களாய்" நாம் மாறிட வேண்டும் (எரே 3:15). இன்று, நம்மைச் சூழ இருக்கும் இதுப்போன்ற ஏராளமான காணாமற்போன ஆடுகளை நாம் தேடுகிறவர்களாய் இருப்போமாக! இதற்கு பதிலாக இன்று அநேகர் காணாமற்போன ஆட்டைக் குறைகூறுகிறவர்களாய் "ஏன் இவர்கள் தன்னிச்சையாய் அலைந்தார்கள்? "கள்ளத்தீர்க்கதரிசிகளின் அழைப்பிற்கு இவர்கள் செவிக்கொடுக்கலாமா?" என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால், தேவனோ, தன் இருதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்கள், காணாமல்போன ஆட்டிற்கு பின்சென்று அவர்களை மீண்டும் மந்தையில் சேர்க்கவேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்!!

2. காணாமல்போன வெள்ளிக்காசின்மீது நாம் கொண்டிருக்க வேண்டிய சரியான மனப்பான்மை:

தன்னுடைய வெள்ளிக்காசை தொலைத்துவிட்ட அந்த ஸ்திரீ, அதை மீண்டும் கண்டுபிடிப்பதற்கு வெகுவாய் முயற்சித்தாள். ஆகவே, இரண்டு காரியங்களை அவள் செய்தாள்: 1. விளக்கை கொளுத்தினாள். 2. வெள்ளிக்காசு கிடைக்கும்வரை தன் வீட்டை கருத்தாய் பெருக்கினாள். ஒவ்வொரு சபையும் இந்த இரண்டு செயல்களையும் செய்திட வேண்டும் இது சபையின்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. முதலாவது, அவள் தன் விளக்கைக் கொளுத்த வேண்டும்! இயேசுவின் ஜீவியம் மாத்திரமே மெய்யான ஒளியாயிருக்கிறது (யோ 1:4). சபையானது, எக்காலத்திலுமும் உயர்த்தி வலியுறுத்த வேண்டியதெல்லாம் "இயேசுவின் ஜீவியமேயாகும்". இரண்டாவதாக, சபையில் உள்ள பாவம்; மனுஷீக பாரம்பரியங்கள் போன்ற ஏராளமான குப்பைகளை முற்றிலும் துடைத்துப் பெருக்க வேண்டும். அப்போது மாத்திரமே காணாமல்போன எத்தனையோ வெள்ளிக்காசுகள் மீண்டும் கிடைத்திட முடியும்!

3. காணாமல்போன இளையகுமாரன்மீது நாம் கொண்டிருக்க வேண்டிய சரியான மனப்பான்மை:

இந்தக்கெட்டக்குமாரன் தொலைந்தவுடன், அவனைத்தேடி தகப்பன் செல்லவில்லை என்பதைக் கவனியுங்கள்! அவனுடைய முரட்டாட்டத்தின் விளைவுகளை அவன் அறுவடை செய்திட தகப்பன் விட்டுவிட்டார்! இந்த மகன் ‘தானே’ ஓர் முடிவின் எல்லைக்குள் வந்து, தானாகவே வீட்டிற்குத் திரும்பினான். காணாமல்போன ஆட்டைப்போல், யாருடைய தோளின்மீதும் சுமந்து வீட்டிற்கு இவன் கொண்டுவரப்படவில்லை. மிகுந்த வியாதியும், சலிப்புமடைந்த பின்பே அவன் வீட்டிற்குத் திரும்பினான். இதுப்போன்ற பின்மாற்றக்காரர்களுக்குப் பின்பாக தேவன் செல்லாதிருந்தும், அவர்கள் விதைத்ததை அறுப்பதற்கு அவர் அனுமதித்ததும் தேவன்பின் வெளிப்பாடாகவே இருக்கிறது!

இந்த தேவஞானம் இன்று அநேக விசுவாசிகளிடம் இல்லாததினால், இந்த முரட்டாட்டகாரர்களைத் தங்கள் தோளின்மீது சுமந்து சபைக்குக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்!

இவ்விதமாய் இவர்களே அவர்களைப் பாழாக்கிவிடுகிறார்கள். இதற்கு நேர்மாறாக, காணாமற்போன ஆட்டிற்காகவோ இத்தகைய விசுவாசிகள் எந்தப் பிரயாசமும் எடுக்காதிருக்கிறார்கள். இவ்வித பகுத்தறியும் ஞானம் இல்லாததினால், கடிந்துக்கொள்ள வேண்டியவர்களை ஆறுதல் செய்து, ஆறுதல் செய்யவேண்டியவர்களையோ கடிந்து கொள்கிறார்கள்!

முரட்டாட்டமுள்ள தேவனுடைய குமாரர்களை போஷிப்பதால், அவர்கள் தேவனிடம் ஒருபோதும் திரும்பாத நிலைக்கு சென்றுவிடுவார்கள். இதுப்போன்ற செயல்கள் மனதுருக்கத்தின் செயலாக இல்லாமல் மதியீன செயலாகவே இருக்கிறது! புத்தியில்லாத இவ்வித செய்கைகள், தொலைந்த குமாரர்களை இன்னும் அதிக தொலைவிற்கு நடத்துவதாகவும்.... சில சமயங்களில் அத்தூரதேசத்திலேயே அவர்களை நிரந்தரமாய் இருக்கும்படியும் செய்துவிடுகிறது! கெட்டகுமாரன் மனந்திரும்பி வந்தவுடன், அவனுடைய தகப்பன் அவனைத் தனது வலப்பக்கத்தில் அமரும்படி செய்துவிட்டார். ஆம், அவனை சோதித்துப்பார்த்து சேர்த்துக்கொள்ளலாம் என்றோ அல்லது வேலைக்காரர்களின் குடியிருப்புகளில் இருக்கும்படியோ தகப்பன் செய்யவில்லை. ஏனென்றால், இந்தக் குமாரன் ‘தானாகவே’ யாருடைய உந்துதலும் இல்லாமல் வெகுவாய் நொருங்குண்டு மனந்திரும்பி வந்துவிட்டான்... இந்த அற்புத மாற்றம் ஒன்றே தகப்பனுக்குப் போதுமானதாகும்!

இவ்வாறு முரட்டாட்டமான குமாரர்கள் மெய்யான நொறுங்குதலோடு மனந்திரும்பி சபைக்குத் திரும்பும்போது அவர்களை வரவேற்பதற்கு நம்முடைய இருதயமும் விசாலமாய் இருக்கவேண்டும்! இங்குதான் யார் தேவனைப் போன்ற மனப்பான்மை கொண்டிருக்கிறார்கள்? யார் பரிசேயருடைய மனப்பான்மை கொண்டிருக்கிறார்கள்? என்ற வித்தியாசத்தை நாம் காணமுடிகிறது. ஒரு சமயத்தில் முரட்டாட்டம் செய்து, பின்பு திரும்பிவந்த இதுப்போன்ற கெட்டகுமாரர்கள்மீது மீண்டும் நம்பிக்கை ஏற்படுவதற்கு, நிச்சயமாய் அதிககாலம் பிடிக்கும் என்பது உண்மைதான். ஆனால், அவன் மனந்திரும்பிவிட்டால்... சபையில் பல வருடங்கள் அவனுக்கு ஊழியம் தரமுடியாவிட்டாலும் கூட, நாமோ அவனை முழு இருதயத்தோடும், மிகுந்த அன்போடும் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்!

4. காணாமல்போன மூத்தக்குமாரன்மீது நாம் கொண்டிருக்க வேண்டிய சரியான மனப்பான்மை:

காணாமல்போன மூத்தக்குமாரனைப் பொறுத்தவரையில், வீட்டிற்கு வெளியே தகப்பன் சென்று திரும்பத்திரும்ப கெஞ்சி அழைத்தார்! ஆனால், அந்த மூத்தக்குமாரனோ அழைப்பிற்கு இணங்கவில்லை! இவனுக்கு முடிவில் என்ன நேர்ந்திருக்கக்கூடும்? என்பதை நாமே யூகித்துக் கொள்ளும்படி இயேசு அந்த உவமையின் முடிவை நமக்குக் கூறாமல் விட்டுவிட்டார்!!

இவ்வேளையில், இரண்டு சம்பவங்களுக்கு சாத்தியக்கூறுகள் இருப்பதை நாம் காண்கிறோம். ஒன்று, தன் தகப்பனின் கெஞ்சுதலுக்கு இணங்கி நிமிர்ந்த தலையோடு தன் வீட்டிற்குள் மூத்தகுமாரன் திரும்பி வந்திருப்பான். அல்லது, தகப்பனின் கெஞ்சுதலை உதறிவிட்டு அந்தகாரத்திற்குள் மூழ்கியிருப்பான்! இவன் அப்படியே திரும்பி வந்திருந்தாலும், தன் வீட்டில் தனக்கிருந்த கனத்தை இழந்துவிட்டான்.... ஏனெனில், அந்த ஸ்தானம் இப்போது இளைய சகோதரனுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது! தன்னுடைய மோதிரத்தையும், தன்னுடைய வலதுபக்க ஸ்தானத்தையும்கூட இளைய குமாரனுக்குத் தகப்பன் ஏற்கனவே கொடுத்துவிட்டார்!!

கெட்ட குமாரர்களுக்கும் இந்த மூத்தகுமாரர்களுக்கும் இடையில் ஏராளமான வித்தியாசம் இருக்கிறது. கெட்ட குமாரர்கள், தங்கள் பாவங்களைக் குறித்து தாங்களாகவே உணர்த்தப்பட்டு ஆழமாய் மனந்திரும்பி.... சபையில் யாதொரு கனத்தையும் தேடாமல் வந்தார்கள்! தங்கள் ஜீவகாலமெல்லாம் தகப்பன் வீட்டில் ‘வேலைக்காரர்களாய்’ இருந்துவிடவே விரும்பினார்கள்! ஆம், இவர்கள் உண்மையிலேயே நொறுங்கிவிட்டார்கள்! ஆனால், மூத்தகுமாரர்களை உணர்த்துவதற்கோ திரும்பத்திரும்ப அவர்களிடம் பேச வேண்டியதாயிருந்தது. ஒருவழியாய் அவர்கள் உணர்த்தப்பட்டாலும், சபையில் தாங்கள் முன்பு பெற்றிருந்த கனத்திற்குரிய ஸ்தானத்திற்கு இராஜாக்களைப்போல் மீண்டும் வர விரும்புகிறார்களேயல்லாமல், ‘வேலைக்காரர்களாய்’ இருக்கும்படி அல்ல!!

தான் பாவம் செய்துவிட்டதை சவுல் இராஜா அறிந்திருந்தான். இருப்பினும், தன் பாவத்தை சாமுவேலிடம் தனியே ‘அந்தரங்கத்தில்’ அறிக்கை செய்யவே விரும்பினான். அதை அவன் குறிப்பிடும்போது, "நான் பாவம் செய்தேன், இப்போது என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும், இஸ்ரவேலருக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனம் பண்ணும்" என சாமுவேலிடம் கூறினான் (1சாமு 15:30). தாவீது இராஜாவும் பாவம் செய்தான், அவனுடைய பாவம் சவுலின் பாவத்தைவிட எத்தனையோ மடங்கு கொடியதாயிருந்தது. ஆனால், அவனோ அவைகளை ஒரு சங்கீதத்தில் எழுதி சகல ஜனங்களுக்கு முன்பாகவும் தன் பாவத்தை ஒத்துக்கொண்டான் (சங் 51).

பரிசேயர்களிடம் இருந்த மிகப்பெரிய பாவம் "மனுஷர் முன்பாகத் தங்களை நீதிமான்களாய் காட்ட விரும்பியதுதான்" என இயேசு கூறினார் (லூக்கா 16:15). இந்தப் பாவத்தையே, வேறு எந்தப் பாவத்தைக்காட்டிலும் தேவன் அதிகமாய் அருவருக்கிறார். இவ்விதம் மனுஷருக்கு முன்பாகத் தங்களை நீதிமான்களாய் காட்ட விரும்பும் ஒரு பின்மாற்றக்காரனுக்கு, நம்பிக்கையின் சாத்தியம் மிக அரிதாகவே இருக்கிறது!

பாவிகளாகிய நம் யாவருக்கும் தேவனுடைய மாறாத வார்த்தை: "உன் பாவங்களை ஒத்துக்கொள்" (எரே 3:13) என்பதேயாகும்!

கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்!