விசுவாசிகளுக்கான நிதிசார் ஒழுக்கம்

எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   Struggling சீஷர்கள்
Article Body: 

பணத்தை கையாள்வதில் உண்மையுள்ளவர்கள் மட்டுமே ஆவிக்குரிய செல்வத்தைப் பெறுவார்கள் என்று இயேசு தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் (லூக்கா 16:11). அநேக சகோதர சகோதரிகள், பணத்தை பயன் படுத்துவதில் உண்மையற்றவர்களாக இருப்பதினாலேயே, ஆவிக்குரிய வறுமையில் இருக்கிறார்கள். இன்றைய நாட்களில், பலரால் பிரசங்கிக்கப்படும் செய்திகளில், அபிஷேகம் இல்லாததற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

அனைத்து விசுவாசிகளும் முதலாவது ரோமர் 13:8 -ல் உள்ள தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியக் கற்றுக்கொள்ள வேண்டும். அதென்னவென்றால் "ஒருவனுக்கும் கடன் படாதிருங்கள்" என்பதே.

"கடன் வாங்கக்கூடாது" என்று வேதாகமம் சொல்லவில்லை. அவசர தேவைக்காக கடன் வாங்குவது ஒரு பாவம் அல்ல. ஆனால், அந்தக் கடனை சீக்கிரத்தில் திருப்பிச் செலுத்திவிட வேண்டும் - ஏனெனில் கடனில் இருந்துக்கொண்டிருப்பது பாவம். "கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை" (நீதி 22:7). தேவனுடைய பிள்ளைகள் எந்த மனிதருக்கும் அடிமைகளாக இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறதில்லை. எனவே, அனைவரும் தங்கள் கடன்களை விரைவில் சிறிது சிறிதாகவாவது திருப்பிச் செலுத்திவிட வேண்டும். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு, தவணை தொகையாக மிகமிக சிறிய தொகை இருந்தாலும் கூட, தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்வதற்கேற்ற மன விருப்பம் உங்களிடம் இருக்கிறதா என்பதை அவர் காண்கிறார் (2கொரி 8:12).

நீங்கள் ஆறு மாதங்களுக்கும் மேல் கடன் கொண்டிருந்தால், வருடாந்திர வங்கி வட்டி விகிதத்திற்கு சமமான வட்டியுடன் சேர்த்து கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் (சகேயுவைப் போல - லூக்கா 19:8). இதுவே நீதியுள்ள செயலாகும்.

எல்லா மூப்பர்களும், சபை உறுப்பினர்களை கடனற்ற வாழ்க்கை வாழும்படி போதிக்க தேவனுக்கு முன்பாக கடமைப்பட்டவர்களாவர். விபச்சார பாவச் செயல்களில் வாழ்வதற்கு விசுவாசிகளை அனுமதிக்கக்கூடாது என்பதற்கும் மேலாக, கடன்படுதல் என்ற பாவமற்ற வாழ்க்கை வாழ விசுவாசிகளை நடத்த வேண்டும்.

(குறிப்பு: வீட்டுக்கடன் (அடைமானம்) அல்லது கார் கடன் (அல்லது ஸ்கூட்டர் கடன்) - இவற்றை கடன்களாக கருத முடியாது. ஏனென்றால், வீடு (அல்லது வாகனம்) அந்த கடனுக்கு சமமான உத்திரவாதமாக இருக்கிறது. வணிக கடன் கூட லாபம் சம்பாதிக்கும் வியாபாரமாக இருந்தால், சில சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்படலாம். ஆனால், வியாபார திறமையே இல்லாத பல விசுவாசிகள் பலர், பல ஆண்டுகளாக கடனாளிகளாக இருக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் வியாபார திறமை மற்றும் சந்தை நிலமையை அறியும் திறமை இல்லாமலேயே சொந்த தொழிலை ஆரம்பித்து இருக்கிறார்கள். எல்லா விசுவாசிகளும் ஒரு பெரிய வியாபாரக் கடனை பெற திட்டமிடும் முன், சில தேவபக்தியுள்ள மூப்பர்களின் ஆலோசனையை நாடவேண்டும்).

கிரடிட்- கார்ட் (கடன் ஆட்டை) கடன் மிகவும் மோசமானதாகும். ஏனெனில், அது மிக விரைவாக கடன் சுமையை அதிகரிக்கும். விசுவாசிகள் கிரடிட் கார்டுக்குப் பதில், டெபிட் கார்டுக்கு (பற்று-அட்டைக்கு) முன்னுரிமை கொடுத்து டெபிட்-கார்டை பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். கிரடிட்-கார்டை பயன்படுத்தினால், தங்கள் கிரடிட்-கார்டின் கடனை ஒவ்வொரு மாதமும் தவறாமல் செலுத்த வேண்டும். கடனை திருப்பிச் செலுத்துவதை ஒரு மாதம்கூட தவற விட்டுவிட்டால், அந்த கடன் முழுமையாக திருப்பிச் செலுத்தப்படும் வரை தங்கள் கிரடிட்- கார்டை பயன்படுத்தாமல் இருக்க தங்களை ஒழுக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுப்போன்ற கடன்களை தீவிரமாக திருப்பி செலுத்துபவர்களை தேவன் கனம் பண்ணுகிறார். எந்த விலை உயர்ந்த பொருளையும் கடனில் வாங்கக்கூடாது. தேவையான பணத்தை முதலில் சேர்த்தப் பின்னரே, அதை வாங்க வேண்டும். இப்படியே இயேசுவும் செய்திருந்திருப்பார்.

பெரும்பாலான கடன்கள் பேராசை மற்றும் ஒழுக்கம் இல்லாத வாழ்க்கைமுறை மற்றும் செலவுகளின் விளைவுகளால் வருகிறது.

எல்லா விசுவாசிகளும் ஒரு சிறிய தொகையை ஒவ்வொரு மாதமும் சேமிக்க வேண்டும். இதை செய்ய, மாதச் செலவைக் குறைக்க வேண்டும். மேலும், அதிக அந்தஸ்தில் வாழ்பவர்களைப் பார்த்து வரவுக்கு மேலான வாழ்க்கை வாழ முயற்சிக்கக் கூடாது. தேவையற்ற பொருட்களை வாங்கியோ அல்லது ஆடம்பரமான விருந்திலோ நண்பர்களுடன் பணத்தை வீணடிக்கக்கூடாது. பல விருந்துக்கள் நண்பர்களின் மதிப்பை பெற மட்டுமே செய்யப்படுகின்றன. (இது ஒரு உருவ வழிப்பாடின் வடிவமே). விருந்தோம்பல் உங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு உட்பட்டே இருக்க வேண்டும்.

விருந்தோம்பலுக்காக சபையில் புகழை பெறுவதை விட உங்கள் குடும்பத்தின் எதிர்கால தேவைகளுக்குப் பணத்தை சேமிப்பதே மிகவும் முக்கியமானது. பெற்றார்கள் பிள்ளைகளுக்காக பணத்தை சேர்த்து வைக்கவேண்டும் என்று வேதம் கூறுகின்றது (2கொரி 12:14 பின்பகுதி). உங்கள் தேவைகளுக்காக கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பது என்பது நம் குடும்பத்திற்காக பணசேமிப்பு கூடாது என்று பொருள் அல்ல. பூமியில் உள்ள ஒரு சிறிய உயிரினம் (எறும்பு) ஒன்றில் இருந்து, ஞானத்தைக் கற்றுக்கொள்ள வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது. எறும்பானது குளிர்காலத்தில் கஷ்டமான காலங்கள் வரும் என்று அறிந்து, அறுப்புக்காலத்தில் உணவை சேமித்து வைக்கும் (நீதி 6:6-11). எதிர்பாராத எதிர்கால செலவுகளுக்காக சேமித்து வைக்க, எறும்பிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பாலான மனிதர்களின் பெரிய மூளையை விட ஒரு எறும்பின் சிறிய மூளை அதிக ஞானத்தைக் கொண்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது!!

குழந்தைகளின் கல்விச் செலவுகளும், குடும்பத்தின் மருத்துவ செலவுகளும் இக்காலங்களில் மிகவும் அதிகம். ஆகையால், அதற்காக பணத்தை சேமிக்க வேண்டும். நீங்கள் இப்போது அதை செய்யாவிட்டால், மற்ற விசுவாசிகளின் உதவியை கெஞ்சி கேட்கிற நிலமை வரலாம். ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றக் கூடாமல் போனால், அவன் அவிசுவாசியிலும் கெட்டவனாயிருப்பான் என பரிசுத்த ஆவியானவர் கூறுகிறார் (1தீமோ 5:8). பல சந்தர்ப்பங்களில் மனைவி (ஊதியம் பெறுபவர் அல்ல என்பதால்) பணத்தை ஆடம்பரமாக செலவழிக்கக் கூடும். ஏனென்றால், குடும்பத்தின் பொருளாதார நிலைமை மனைவிக்கு தெரிவதில்லை. கணவர்கள் குடும்பத்தின் பொருளாதார நிலைமையை மனைவிக்கு விளக்க வேண்டும். மேலும், பொருளாதார நிலைமைக்கு அதிகமான செலவுகளுக்கு "மறுப்பு" தெரிவிப்பதின் மூலம் குடும்பத்தின் எதிர்கால செலவுகளுக்காக சேமிக்க முடியும். இத்தகைய பொருளாதார ஒழுக்கத்தை கடைப்பிடித்தும் மாதச் செலவை குறைத்தும் சேமிப்பை ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயம் நடைமுறைப்படுத்தலாம்.

இந்தக் கடைசிக் காலங்களில், பணத்தை செலவழிப்பதில் அதிக கவனமாக இருக்க வேண்டும். நமது நம்பிக்கை "நிச்சயமற்ற செல்வத்தில்" இல்லை. பரம தகப்பன் மேல் மட்டுமே நமது நம்பிக்கை இருக்கிறது (1தீமோ 6:17). நாம் கர்த்தருடைய வார்த்தையை கடைப்பிடித்தும், எறும்பினிடத்தில் இருந்து (மேலே கூறியபடி) கற்றுக்கொண்டும், தேவனுடைய இராஜ்யத்தைக் கருத்தாய் தேடியும் (மத் 6:33) வாழ்ந்தால் மட்டுமே, "கர்த்தர் உங்கள் தேவைகளையெல்லாம் சந்திப்பார்" (பிலி 4:19) என்ற வாக்குதத்தம் நமக்கு நிறைவேறும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நான் கடந்த 59 ஆண்டுகளாக விசுவாசியாகவும், 50 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் எதை கடைப்பிடிக்கிறேனோ, அதையே பிரசங்கிக்கிறேன். நாங்கள் ஒருபோதும் பணத்தைக் கடனாக வாங்கியதேயில்லை. அல்லது ஒருநாள் கூட எவருக்கும் கடன்பட்டதில்லை. எங்களுடைய ஆரம்ப திருமண நாட்களில், நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த போதிலும் கூட ரோமர் 13:8 -ன் கட்டளைக்கு தீவிரமாக கீழ்ப்படிந்து, கடனில் இருந்ததேயில்லை. மத்தேயு 6:33 -ன் படி எப்போதும் தேவனுடைய இராஜ்யத்தையே முதலில் தேடி வாழ்ந்தோம். பரம தகப்பன் எங்களின் பூமிக்குரிய தேவைகளை எப்போதும் பூர்த்தி செய்திருக்கிறார். அதற்கும் மேலாக, எனக்கு ஆச்சரியமான ஆவிக்குரிய செல்வத்தையும் கொடுத்திருக்கிறார். ஆகையால், நான் இன்று ஒவ்வொரு விசுவாசிக்கும் இதை தைரியமாகச் சொல்லமுடியும். "தேவனுடைய வார்த்தையில் கட்டளையிட்டப்படி, தனி ஒருவர் வருமானத்தில் கடனே இல்லாமல் வாழ்வதில் - என்னை பின்பற்றுங்கள்".

சில விசுவாசிகள் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு போதுமான பணம் இருந்தும் கூட தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தமாட்டார்கள். அத்தகைய விசுவாசிகள் முற்றிலும் பொறுப்பற்றவர்களாக இருந்து அவிசுவாசிகளைப்போல் நடந்து கொள்ளுகிறார்கள். இவர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் அதை மறந்துவிடுவார்கள் என்ற நினைவிலும் இவ்விசுவாசிகள் சில நேரங்களில் இருக்கலாம்! இத்தகைய விசுவாசிகள் முற்றிலும் தேவபக்தி அற்றவர்களாகவும், கெட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

"உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு.... திருப்பிக் கொடுப்பார்கள் என்று எதிர்பாராதே" (லூக்கா 6:30-34). இயேசுவின் இந்தக் கட்டளைக்கு நாம் என்ன செய்யவேண்டும்?

நாம் ஒரே ஒரு வேத வசனத்தை மட்டும் ஒருபோதும் எடுத்துக்கொள்ளக்கூடாது. சாத்தான் ஒரு வேத வசனத்தை இயேசுவுக்குக் காட்டி,".....என்பதாய் எழுதியிருக்கிறது" என்று கூறியப்போது, இயேசு வேறொரு வசனத்தைச் சுட்டிக்காட்டி "..... என்றும் எழுதியிருக்கிறதே" என பதிலளித்தார் (மத் 4:6,7). எனவே, தேவனுடைய வார்த்தையின் முழு சத்தியம், "என்பதாய் எழுதியிருக்கிறது" என்பதில் மட்டும் இல்லை. முழு சத்தியம் "என்பதாய் எழுதியிருக்கிறது" மற்றும் "என்றும் எழுதியிருக்கிறதே" என்பதிலேயே உள்ளது.

ஆகையால், "உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு.... திரும்ப கொடுப்பார்கள் என்று எதிர்பாராதே" என்று நாம் வாசிக்கும்போது, "பூமியில் உள்ள அனைத்தும் கர்த்தருடையது" (1கொரி 10:26) என்றும் எழுதியிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அதாவது நீங்கள் சம்பாதிக்கும் அனைத்துப் பணமும், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள அனைத்துப் பணமும் உங்கள் சொத்துக்கள் அனைத்தும் கர்த்தருடையது. உங்களுடையது அல்ல. ஆகையால், ஒருவருக்கு நீங்கள் பணம் அல்லது கடன் கொடுக்க நினைக்கிறீர்கள் என்றால், முதலில் அந்தப் பணத்தின் உண்மையான உரிமையாளரிடம் (கர்த்தராகிய இயேசுவிடம்) நீங்கள் செல்லவேண்டும். அந்த நபருக்கு பணம் அல்லது கடன் கொடுப்பதற்கு கர்த்தராகிய இயேசுவிடமிருந்து தெளிவான உத்தரவைப் பெற்றப்பிறகு மட்டுமே, அந்த நபருக்கு பணம் கொடுக்க வேண்டும். மாறாக, உங்களிடம் உள்ள பணத்தை தனக்கு சொந்தமானதைப்போல எடுத்துக்கொண்டு, மனம் போன போக்கில் செலவு செய்ய முடிவு செய்தால், நீங்கள் பல நிதிப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பூமியிலுள்ள எல்லாப் பணமும் கர்த்தருடைய பணமே. எதுவும் நம்முடையது இல்லை. எனவே, நீங்கள் யாருக்கும் பணம் அல்லது கடன் கொடுப்பதற்கு முன்பதாக, கர்த்தரிடத்தில் இருந்து ஒரு தெளிவான உத்தரவைப் பெற எல்லா முறையும் ஜெபிக்கவேண்டும்.

நீங்கள் தேவனை இதுப்போன்று தீவிரமாக நாடும்போது, சிலருக்கு அவர் பணம் கொடுக்க உத்தரவு கொடுக்கலாம்: மற்ற சில நேரங்களில் - பணத்தைக் கேட்கும் நபரின் இருதயத்தில் தேவன் எதைக் காண்கிறார் என்பதைப் பொறுத்து - பணம் கொடுக்கக் கூடாதென்றும் தேவன் சொல்லக்கூடும். ஏமாற்றுக்காரர்களிடமிருந்து இதன்மூலம் நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.

குறிப்பாக, இந்த நிதிசார் ஒழுக்கத்தில் கர்த்தராகிய இயேசுவின் அடிச்சுவடுகளில் நடக்க கர்த்தர்தாமே நமக்கு உதவிசெய்வாராக!.

குறிப்பு: "பணத்தில் நேர்மையாக இருப்பது" பற்றிய என்னுடைய செய்தி ஆங்கிலத்தில் கேட்க - கிளிக் செய்க