ஆண்டவர் இயேசு, "மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" எனக் கூறிய வார்த்தை மிக முக்கியமானதாகும் (மத்தேயு.4:4). ஆகவே, ஒரு வசனத்தை வைத்துக் கொண்டு, அதை மற்றொரு வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்காது இருந்தால், நாம் தவறான முடிவுக்கு வந்து பொய்யான உபதேசத்தை நம்பிவிடும், கதிக்கு ஆளாவோம்! இவ்வறாகவே, ஏராளமான பிரசங்கிகள் ஏதாகிலும் ஒரு வசனத்தைப் பிடித்துக்கொண்டு மற்றொரு வசனத்தை அலட்சியமாய் விட்டுவிடுகிறபடியால்.... ஜனங்களை வஞ்சித்து, "பொய்யான நம்பிக்கைகளை" வாரி வழங்குகிறார்கள்.
இவ்வாறு ஒரு வேத வாக்கியத்தை மற்றொரு வாக்கியத்தோடு ஒப்பிடாததின் விளைவாக, "இன்று ஏராளமான தவறான உபதேசங்கள்" வேதாகமத்தின் உத்தம உபதேசத்திற்கு மாறாக தோன்றியிருக்கின்றன. பிசாசானவன் "இப்படி எழுதியிருக்கிறதே!" என இயேசுவிடம் ஒரு வேத வாக்கியத்தை கோடிட்டபோது... இயேசுவோ, "இப்படியும் எழுதியிருக்கிறதே!" என பதில் உரைத்து, அந்த வாக்கியத்தை சமப்படுத்தினார்! (மத்தேயு 4:6,7) இரண்டு சிறகுகளை சிருஷ்டித்தே, தேவன் பறவைகளை நேராக பறக்கும்படி செய்தார். அதுபோலவே, வேதாகம சத்தியங்களும் சமநிலைப்படுத்தப் பட்டிருக்கிறது!
"இரட்சிப்பின் நித்திய பாதுகாப்பு" என்ற உபதேசத்தை கண்ணோக்கும் போது 1) தேவனுடைய சர்வ ஆளுகை 2) மனுஷனுக்குரிய சுயாதீன சித்தம் ஆகிய இந்த இரண்டு மகத்தான சத்தியங்களை சமநிலைப்படுத்திக் காண நாம் அறிந்திருக்க வேண்டும்!
தேவன், மனிதனுக்கு சுயாதீனமான சித்தத்தை வழங்கியிருக்கிறார். தன்னைத் தெரிந்து கொள்ளும்படி எந்த மனுஷனையும் அவர் கட்டாயப்படுத்துவதே இல்லை. இருப்பினும், இந்த உலகத்தோற்றத்திற்கு முன்பே, யார் தன்னைத் தெரிந்து கொள்வார்கள்? யார் தன்னைத் தெரிந்து கொள்ள மாட்டார்கள்? என்பதை நித்திய காலமாய் தேவன் அறிந்திருக்கிறார். ஆகவே, சில ஜனங்களைத் தன் சொந்த பிள்ளைகளாய் தேவன் தெரிந்து கொள்வது "பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே" ஆகும்! (1 பேதுரு. 1:2) ஆம், "தன் இஷ்டப்படி" தேவன் ஒருபோதும் தெரிந்து கொள்வதில்லை!
ஆகிலும், கிரகங்களை சிருஷ்டித்தபோதோ "அவைகளுக்கு எவ்வித சுயாதீன சுதந்திரமும் தரமாலேதான்" சிருஷ்டித்தார். இந்த கிரகங்கள் தேவனுடைய பிரமாணங்களுக்கு அப்பழுக்கு இல்லாமல் பல ஆயிரம் ஆண்டுகள் கீழ்ப்படிந்திருந்த போதும், அவைகள் 'பரிசுத்தமானவைகள்' என கூறிட இயலாது! 'பாவம் செய்தவைகள்' என கூறிடவும் இயலாது! அல்லது அவைகள் 'தேவனுடைய பிள்ளைகள்' எனவும் கூறிட இயலாது! இருப்பினும், மிருகங்களுக்கு 'சுயாதீன சுதந்திரம்' அளித்தே அவைகளை தேவன் சிருஷ்டித்தார். ஆகிலும் அவைகளுக்கு மனசாட்சிஇல்லாதபடியால், மிருகங்களும் கூட 'பரிசுத்தமாய் இருந்திடவோ' அல்லது 'பாவம் செய்தவைகளாய்' இருந்திடவோ முடியாது. மேலும் அவைகள் தேவனுடைய பிள்ளையாய் மாறும்படி அந்த ஸ்தானத்தை 'தெரிந்து கொள்ளவும்' முடியாது!
ஆனால் மனுஷனை தேவன் சிருஷ்டித்தபோதோ, அவனுக்கு ஓர் சுயாதீன சித்தத்தையும், ஓர் மனசாட்சியையும்! கொடுத்திருந்தார். ஆகவேதான், மனுஷன் பாவம் செய்கிறவனாய் இருக்க முடியும்,
பரிசுத்தமாயும் இருக்க முடியும்..... அல்லது, தேவனுடைய பிள்ளையாகும்படி அந்த ஸ்தானத்தை 'தெரிந்து கொள்ளுவும் முடியும்!
ஒருவேளை, தேவன் நம்மிடமிருந்து மனசாட்சியை எடுத்துக் கொண்டாரென்றால், நாம் மிருகங்களைப் போல் மாறிவிடுவோம்! அதாவது, தெய்வப்பண்புகளைத் 'தெரிந்து கொள்ளத்' திராணி அற்றவர்களாய்ப் போனபடியால் பரிசுத்தமாய் இருப்பதற்கும் நமக்குத் திராணி இருக்காது! பாவம் செய்தவர்களாய் நின்றிடவும் திராணி இருக்காது!
அதேபோல, நம்மிடமுள்ள "சுயாதீன சித்தத்தை" தேவன் எடுத்துக்கொள்வரென்றால், நாம் 'ரோபோட் ' என அழைக்கப்படும் எந்திர மனிதர்களைப் போல் மாறிவிடுவோம். அதாவது, நாமும் பரிசுத்தமாய் இருப்பதற்கு திரணியற்றவர்களாயும், நாமாக பாவம் செய்வதற்குக் கூட திராணி அற்றவர்களாய் மாறிவிட முடியும்! ஆகவேதான், நாம் நல்ல விசுவாசிகளாய் மாறிய பிறகுகூட தேவன் நம்முடைய சுயாதீன சித்தத்தை நம்மிடமிருந்து எடுத்துக் கொள்வவில்லை.
ஆகவே, மேற்கண்ட சத்தியத்தையும் நன்கு விளங்கி கொண்ட பிறகுதான், "நித்திய பாதுகாப்பின் உபதேசத்தை" சரியான விதத்தில் அறிந்து கொள்ள முடியும். "விசுவாசிகள், தேவனிடமிருந்து வீழ்ச்சி அடைவது சாத்தியமல்ல!" என்ற போதகம், விசுவாசிகளை இயந்திர மனிதர்களாய் (Robots) சீர்குலைத்து, அவர்களுக்கு யாதொரு தெரிந்து கொள்ளும் சுதந்திரம் இல்லாதவர்களைப் போல் ஆக்கிவிடும்.
"உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" என்ற வசனம் கீழ்ப்படிதல் தொடங்கி எல்லா விஷயத்திற்கும் பொருந்தும் (2 கொரி 9:7). எந்த கீழ்ப்படிதலையும் கட்டாயத்தின் பேரில் செய்திட தேவன் ஒருபோதும் விரும்புவதில்லை. எனவேதான் நம்மிடமுள்ள தெரிந்து கொள்ளும் சுயாதீனத்தை அவர் ஒருக்காலும் பறித்து கொள்ளவில்லை. நீங்கள் இயேசுவைப் பின்பற்றவும் தெரிந்து கொள்ளலாம்! அவரைப் புறக்கணிக்கவும் தெரிந்து கொள்ளலாம்!... அது நம் விருப்பத்தைப் பொறுத்தது!!
நம் பாவங்களிலிருந்து பெறும் மன்னிப்பு மிகுந்த ஆச்சரியமான தேவனுடைய இலவசமான பரிசாகும்! ஆகிலும் அந்த பாவ மன்னிப்பை ஒருவன் பெற்றுக் கொள்வதற்கு, அதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும். யார் மீதும் "பாவ மன்னிப்பின் புண்ணியத்தை" தேவன் திணிப்பதில்லை. அப்படி அவர் செய்தால், உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் "மன்னிப்பையும், இரட்சிப்பையும்" பெற்றிருப்பார்கள். இதே போல்தான் பரிசுத்தாவியின் அபிஷேகமும் இருக்கிறது. பரிசுத்தாவியினால் நிறைவதற்கு எந்த விசுவாசியையும் தேவன் கட்டாயப்படுத்துவதில்லை. பரிசுத்தாவியைக் 'கேட்டு பெற்றுக் கொள்வதை' அவர்கள் தான் தெரிந்து கொள்ள வேண்டும் (யோவான் 7:37-39).
தேவனுடைய வாக்குத்தத்தங்கள் ஒருபோதும் தானாய் நிறைவேறுவதில்லை தேவனுடைய வாக்குத்தத்தங்கள் அனைத்தும் கிறிஸ்துவுக்குள் "ஆம்" என்றே இருக்கிறது! ஆனால், நம்முடைய சுயாதீன சித்தத்தைக் கொண்டு "ஆமென்" என நாம்தான் இசைவுடன் கூற வேண்டும்! அப்போது மாத்திரமே, நாம் தேவனிடமிருந்து பெற்று அதை அனுபவமாக்கிட முடியும் (2 கொரி 1:20).
இதை நிரூபித்திட கீழ்காணும் உதாரணங்களைப் பாருங்கள். எகிப்திலிருந்து இஸ்ரவேலின் மூப்பர்களுக்கு தேவன் இரண்டு காரியங்களை வாக்குதத்தமாய் அருளியிருந்தார்:
1) எகிப்து தேசத்திலிருந்து உங்களை வரவழைப்பேன்
2) உங்களைக் கானான் தேசத்திற்குள் நடத்துவேன் (யாத்திராகமம் 3:77).
ஆனால், அந்த மூப்பர்களின் ஜீவியத்தில் இந்த இரண்டு வாக்குத்தத்தங்களில் ஒரே ஒரு வாக்குத்தத்தம் மாத்திரமே நிறைவேறியது: ஏனெனில் அந்த இரண்டு வாக்குத்தத்தங்களில் முதல் வாக்குத்தத்ததை விசுவாசித்துவிட்டு, அடுத்த வாக்குத்தத்தையோ அவர்கள் விசுவாசிக்க வில்லை (எண்ணாகமம் 14:22,23).
ஆகவே, தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நம்முடைய ஜீவியத்தில் ஒருபோதும் தானாய் நிறைவேறுவதே இல்லை. நாம் அவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அவைகளை விசுவாசித்திட வேண்டும். யாக்கோபு கூறுகின்றபடி, "கேட்கிறவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்கக்கடவன். சந்தேகப்படுகிறவன், காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்! அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாம் என்று நினையாதிருப்பானாக" என்ற இந்த வசனத்தைக் கவனித்துப் பாருங்கள் (யாக்கோபு 1:6,7)
அதேபோல "அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேற பிராயசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும், செய்கையையும் " என பிலிப்பியர் 2:2,13 வசனங்கள் நமக்குத் தரும் கட்டளையையும் பாருங்கள்.
ஆம், இங்கு தேவனே நமக்கு விருப்பத்தையும் அதை நிறைவேற்றுவதற்குரிய செய்கையையும் தந்தருளி 'முதலாவதாய்' கிரியை செய்கிறார். இது சத்தியத்தின் ஒரு பகுதியே ஆகும். ஆனால் இதை நடைமுறையில் நாம் அனுபவிக்க வேண்டுமென்றால், 'நாம்தான்' அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் நம் இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படவேண்டும். இதுவே சத்தியத்தின் அடுத்த பகுதி ஆகும். சில கிறிஸ்தவர்களோ இந்த சத்தியத்தின் ஒரு இறக்கையை வலியுறுத்துகிறார்கள். இன்னும் சிலர் அடுத்த இறக்கையை வலியிறுத்துகிறார்கள்! சத்தியத்தின் முழுமையும் வேண்டுமென்றால், இரண்டு இறக்கைகளும் நமக்கு வேண்டும். ஒரே ஒரு இறக்கையை மாத்திரம் ஏற்றுக் கொள்பவர்களாய் இருந்தால், அதைக் கொண்டு 'படபடத்து' ஒரே வட்டத்தில் சுற்றிச் சுற்றி வருபவர்களாய் இருப்போம்!
இதற்குரிய நிரூபணத்தை அடுத்த வசனத்தில் நாம் காண்கிறோம். அந்த வசனத்தில், எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள் என்றே நாம் கூறப்பட்டிருக்கிறோம் (பிலிப்பியர் 2:10) இன்று எத்தனை விசுவாசிகள் "எல்லா" முறுமுறுப்பிலிருந்தும் தர்க்கிப்பிலிருந்தும் தாங்கள் இரட்சிக்கப்பட்டதாக சாட்சி பகரமுடியும்? உங்களால் அவ்வாறு சாட்சி கொடுத்திட முடியுமா?அவ்வாறு முடியவில்லையென்றால், அதற்குக் காரணம், அந்தப் பாவங்களிலிருந்து உங்களை இரட்சிக்கும்படி தேவன் உங்களுக்குள் கிரியை செய்யவில்லையென பொருள் ஆகாது. மாறாக, அந்தப் பாவங்களிலிருந்து உங்களின் இரட்சிப்பு நிறைவேறும் பொருட்டு செய்திடும் பரிசுத்தாவியின் கிரியைக்கு நீங்கள் ஒத்துழைக்கவில்லை என்பதே பொருளாகும்! இவ்வாறு "எல்லா முறுமுறுப்பிலிருந்தும் எல்லா தர்க்கிப்பிலிருந்தும் நாம் விடுதலையாகி இரட்சிக்கப்பட்டால் மாத்திரமே", "கோணலும் மாறுபாடுமான இந்த உலகத்திற்கு, நம்மை தேவனுடய மாசற்ற பிள்ளைகள்" என நிரூபித்திட முடியும் (பிலிப்பியர் 2:15) இந்த தரத்தின் அடிப்படையில், உங்களைச் சுற்றியுள்ள உலகத்திற்கு "நான் தேவனுடைய மாசற்ற பிள்ளை!" என உங்களால் நிரூபிக்க முடிகிறதா?
இன்னொரு பகுதியையும் பாருங்கள். ஆம், மனந்திரும்புவதற்குரிய திறனை தேவனே நமக்கு அருளிச் செய்திருக்கிறார் (அப் 11:18). ஆகிலும் ஒவ்வொருவரும் தனித்தனியாக மனந்திரும்ப வேண்டுமென்றே தேவன் விரும்புகிறார் என 2பேதுரு 3:9 கூறுகிறது. இன்று, விசுவாசிகள் உட்பட எண்ணற்ற ஜனங்கள் பரிசுத்தாவி உணர்த்தி அருளிச்செய்த மனந்திரும்புதலுக்கு மனப்பூர்வமாய் இணங்குவதில்லை! தேவன் எவைகளை நிறைவேற்ற கிரியை (Working in) செய்கிறாரோ, அவைகனை திறைவேற்றிட அவர்கள் கிரியை (Working out) செய்யவில்லை.
இன்னொரு பகுதியையும் பாருங்கள்: ஆம், ஒருவனை தேவன் மாத்திரமே இரட்சித்திட முடியும். ஆனால் "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட தேவன் விருப்பமுள்ளவராய் இருக்கிறார்" (1தீமோ2:4). அகவே, ஜனங்கள் இரட்சிக்கப்படவில்லையென்றால், அதற்கு ஒரே காரணம் தேவன் அவர்கள் ஜீவியத்தில் கிரியை செய்திடும் இரட்சிப்பிற்கு அவர்கள் இணங்கவில்லை என்பதேயாகும். இவ்வாறு தேவனுடைய கிருபையை எதிர்த்து நிற்கிறார்கள். தேவன் அவர்களுக்குள் கிரியை செய்து நிறைவேற்ற (working in) விரும்புவதை, அவர்கள் கிரியை செய்து நிறைவேற்றிட (Working out) இணங்கவில்லை.
'நித்திய பாதுகாப்பை' ஜனங்கள் தவறாய் புரிந்து கொள்வதற்குக் காரணம், இவர்கள் சிந்தையில் உள்ள "நித்தியஜீவன்" என்பதை என்றென்றும் நித்தியமாய் வாழ்வது என பொருள்படுத்திய அவர்களின் தவறான சிந்தையே காரணமாகும். ஆனால் "நித்திய ஜீவன்" என்பது முடிவில்லாத ஓர் வாழ்க்கை என்பதைக் குறிப்பிட்டு கூறவே இல்லை. ஏனெனில், நரகத்திற்கு செல்லும் ஜனங்கள்கூட அங்கு நித்திய காலமாய் வாழப் போகிறவர்களே ஆவர். இருப்பினும், அவர்களிடத்தில் நித்திய ஜீவன் இல்லை! இயேசுவோ "தேவனையும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்!" என தெளிவு படுத்தினார் (யோவான்17:3), நித்திய ஜீவன் என்பது, அதற்கு ஆரம்பமும் இல்லை.... ஆகவே முடிவும் இல்லை! இதுபோன்ற ஜீவன் "தேவனை மாத்திரமே" குறிக்கிறது. தேவனுடைய திவ்விய சுபாவத்தில் இன்று நாம் கிறிஸ்துவுக்குள் பங்குபெற முடியும் (2பேதுரு 1:4).
இந்த நித்திய ஜீவனோ,தேவனால் உண்டான தாராள பரிசு அல்லது அவரது கிருபையின் வரமாகவே இருக்கிறது (ரோமர் 6:23). இருப்பினும், யாரெல்லாம் பாவத்திலிருந்து விடுதலையாகி,அதனிமித்தம் "தேவனுக்கு அடிமைகளாக" மாற விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மாத்திரமே தேவன் இந்த நித்திய ஜீவனை அருளுகின்றார் என முந்தைய வசனம் ரோமர் 6:22-ல் கூறுகிறது. எனவே, என்னதான் நித்திய ஜீவன் தேவனுடைய தயவான பரிசாய் இருந்தாலும், அதைப் பெற்றுக்கொள்வதற்கும் நிபந்தனைகள் உண்டு!
"நித்திய பாதுகாப்பு" என்ற உபதேசத்தின் தொடர்பில் 7- வேத வாக்கியங்களை நாம் உற்றுநோக்குவது நல்லது! அவ்வாறு நாம் இவ்வசனங்களைக் கண்ணோக்கும் வேளையில், "இந்த வசனங்களின் பொருள் இதுதான்" என நாம் எண்ணி வைத்திருக்கும் எண்ணத்தை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு காணவேண்டியது மிகவும் அவசியமாயிருக்கிறது. ஆகவே, முற்றிலும் பரந்த மனதோடு இந்த வசனங்களை வாசியுங்கள். ஏனெனில், இவைகள் "தேவனுடைய வார்த்தைகள்". ஆகவே, நீங்கள் கண்டிப்பாய் சத்தியத்தை அறிந்து கொள்வீர்கள்!
1) யோவான் 10:27-29: "என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்கிறது. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளவதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக் கொள்ள ஒருவனாலும் கூடாது "
இந்த அற்புதமான வாக்குத்தத்தைக் கண்டு அதை நாம் சொந்தமாக்கிக் கொள்வதற்கு முன்பு, சில நிபந்தனைகளும் இவ்வசனங்களில் இருப்பதை நாம் அலட்சியமாய் விட்டுவிடக்கூடாது! இன்றைய திரளான கிறிஸ்தவர்களோ, இந்த நிபந்தனைகளைக் கண்டுகொள்வதே இல்லை!! இதன் விளைவாகவே, இவர்கள் கள்ள உபதேசங்களை நம்பிவிடும் கதிக்கு ஆளாகிறார்கள். இவ்வசனங்கள் அளித்திடும் "நித்திய பாதுகாப்பு" , இயேசுவை முடிவுபரியந்தம் பின்பற்றி வருபவர்களுக்கு மாத்திரமே தரப்பட்டதாகும்! உங்கள் பெயரில் வராத காசோலைக்கு நீங்கள் பணம் பெற முடியுமோ? அதுபோலவே, இந்த நிபந்தனைகளை நிறைவேற்றாதவர்கள் இந்த வாக்குத்தத்தை சுதந்தரிக்கவும் இயலாது!! நீங்கள் இயேசுவைத் தொடர்ந்து பின்பற்றுகிறவராய் இருந்தால், நிச்சயமாய் உங்களுக்கு இந்த வசனங்கள் அருளும் "நித்திய பாதுகாப்பு" உண்டு!மாறாக, இயேசுவைத் தொடர்ந்து பின்பற்றாதவர்களாயிருந்தால் "நானும் தேவனுடைய நித்திய பாதுகாப்பிற்கு உரியவன்" என நீங்களாக விசுவாசித்துக் கொண்டால், உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொள்வகொள்வதே ஆகும்! நீங்கள் இயேசுவைப் பின்பற்றுகிறவராய் இருந்தால் "ஒருவனும்" உங்களை இயேசுவின் கரத்திலிருந்து பறித்துக் கொள்ளவே முடியாது! ஆம், உங்களுக்கு அருளப்பட்ட "சுயாதீன சித்தத்தை" தேவன் ஒருபோதும் எடுத்துக் கொள்ளாதபடியால், அவருடைய கரத்திலிருந்து வெளியே குதித்து விழுவதை நீங்கள் எந்த நேரத்திலும் தெரிந்து கொள்ள முடியும்!
2) மத்தேயு 24:11-13: "அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரச்சிக்கப்படுவான்."
ஒருவன் இரட்சிக்கப்பட வேண்டுமென்றால், அவன் முடிவுவரை நிலைத்திருக்க வேண்டும் என இயேசுவே கூறினார். நாம் மெய்யாகவே சத்தியத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்றால், இயேசுவின் இந்த வார்த்தைகளை "அவர் சொன்னபடியே" துல்லியமாய் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
3) மத்தேயு 6:14-15: "மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கு மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பரமபிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்."
இயேசு எப்போதுமே தன் வார்த்தையில் மிகத் 'துல்லியமாய்' இருந்தார். இந்த வசனத்தில் "உங்கள் பரமபிதா" என இயேசு கூறியது, "தேவனுடைய பிள்ளைகளுக்கே" கூறினார். அல்லாமல், அவிசுவாசிகளுக்கு அல்ல! இந்த வசனங்கள் மாத்திரமல்ல, இந்த மலைப் பிரசங்கத்தின் முழுப்பகுதியும் தேவனுடைய பிள்ளைகளுக்கே அருளப்பட்டதாகும். ஆகவே, தேவனுடைய பிள்ளைகளைப் பார்த்தே "நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்" என இயேசு கூறினார். "தேவன் தன்னை மன்னியாதிருக்கும் இவ்வித தருணத்தில்":... அவன் மரிப்பானென்றால் "இரட்சிக்கப்பட்ட" இந்த மனுஷனுக்கு என்ன சம்பவிக்கும்? பாவங்கள் மன்னிக்கப்படமால் ஒருவன் தேவனுடைய சமூகத்திற்குள் பிரவேசித்திட முடியுமா? அல்லது அவன் மரித்த பிறகு பாவமன்னிப்பை பெற்றிட இயலுமா? ஆம், கல்லறைக்குப் பிறகு "பாவமன்னிப்பு என" ஏதும் இல்லவேஇல்லை! ஆகவே அவனுடைய இழப்பு நித்தியமானதாகும் அவன் முன்பு "இரட்சிக்கப்பட்டவனாய்" இருந்தபோதும், இப்போது அவனுடைய இரட்சிப்பை அவன் இழந்து விட்டான். இந்த உண்மையைமத்தேயு 18-23-35 வசனங்களில் காணும் உவமையில் இயேசு தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார். தனக்கு மன்னிக்கப்பட்டது போலவே, தன் உடன் ஊழியக்காரனை மன்னியாத அந்த ஊழியக்காரனின் தலையில், ராஜா அவனுக்கு மன்னித்துவிட்ட முழு கடன் தொகையையும் மீண்டுமாய் சுமத்திவிட்டார்..... அவனை சிறையிலும் அடைத்து விட்டார். இந்த உவமையை இயேசு முடிவாக கூறுகையில் "நீங்கள் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியமாற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்"என்றார் (வசனம்35). ஆகவே, ஒரு மனிதனையாகிலும் நாம் மன்னிக்கவில்லையென்றாலும் "நம் பரமபிதா" நமக்கு மன்னித்த "எல்லா பாவங்களும்" நம்மீது மீண்டுமாய் வைக்கப்பட்டுவிடும்! இந்நிலையில் நாம் மரிப்போம் என்றால், மன்னிக்கப்படாதவர்களாகவே நித்திய இழப்பிற்கு ஆளாவோம்.
4) ரோமர் 8:12-13: "ஆகையால் சகோதரரே மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்!" என்ற எச்சரிப்பானது "சகோதரர்கள் என அழைக்கப்படும்" விசுவாசிகளுக்கே உரியதாகும்.பரிசுத்த ஆவியானவர் அனைத்து விசுவாசிகளுக்கும் இங்கு உரைப்பது யாதெனில் "அவர்கள் மாம்சத்தின்படி பிழைத்தால் அல்லது ஜீவித்தால், அதனிமித்தம், ஏற்கனவே அவர்கள் பிழைத்திருந்தவர்களாய் இருந்தாலும்கூட, ஆவிக்குரியரீதியாக நிச்சயமாகவே சாவார்கள்!" என்பதேயாகும். இவ்வளவு தெளிவாக கூறிய பின்பும், இன்று எண்ணற்ற பிரசங்கிகள் விசுவாசிகளுக்குக் கூறுவது என்னவென்றால், "ஆவிக்குரிய ஜீவியத்தில் இனி நீங்கள் ஒருபோதும் சாகமாட்டீர்கள்" என்பதேயாகும்.
ஆதியாகமம் 2:17-ல், தேவன் ஆதாமை எச்சரித்து, அவன் தேவனுக்குக் கீழ்ப்படியாது போவான் என்றால், "அந்த நாளிலே, அவன் சாகவே சாவான்!" என ரோமர் 8:13-ல் கூறப்பட்டது போலவே எச்சரித்தார். ஆனால் சாத்தானோ, இன்றைய திராளான பிரசங்கிகள் விசுவாசிகளுக்குக் கூறுவதைப் போலவே "நீங்களோ சாகவே சாவதில்லை!" (ஆதி 3:4) என கூறினான்!
அன்று ஏதேன் தோட்டத்தில் யார் சரி? தேவனா அல்லது சாத்தானா?
இன்று நம் மத்தியில் யார் சரி? தேவனா அல்லது கள்ளப்போதகர்களா?
5) எபிரெயர் 3:12-14: "சகோதரரே (வசனம் 1-ல் கூறப்பட்டபடி இவர்கள் பரம அழைப்பிற்கு பங்கு பெற அழைக்கப்பட்ட பரிசுத்த சகோதரர்கள்!) ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.... நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவு பரியந்தம் உறுதியாய் பற்றிக் கொண்டிருப்போமாகில் கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாய் இருப்போம்!"
இங்கு நாம் வாசிக்கிறபடி "பரிசுத்த சகோதரராய்" இருக்கும் இந்த விசுவாசிகள், ஓர் பொல்லாத அவிசுவாச இருதயம் கொண்டவர்களாய் "அதனிமித்தம்" ஜீவனுள்ள தேவனை விட்டே விலகி வீழ்ச்சியடைய முடியும்! மேலும் "நம் விசுவாசத்தை முடிவுபரியந்தம் உறுதியாய் பற்றிக்கொண்டிருந்தால் மாத்திரமே "கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாய்" இருக்கமுடியும். யாருடைய மனங்களில் முன்கூட்டியே அனுமானித்த எண்ணங்கள் இல்லையோ, அவர்களுக்கெல்லாம் இந்த வார்த்தைகள் தெள்ளத் தெளிவாய் விளங்கிடும்!
6) எபிரெயர் 6:4-6: "ஏனெனில் ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியை பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புவதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்!"இந்த வசனங்கள் "பரம ஈவாகிய பரிசுத்த ஆவியை ருசித்த" விசுவாசிகளுக்கே எழுதப்பட்டதாகும் ஆகிலும் "இதுபோன்ற விசுவாசிகளும்" வீழ்ச்சியடைய முடியும் என்றே நாம் அறிவுறுத்தப்படுகிறோம். மேலும் இவர்கள் "மனந்திரும்புவதற்கு ஏதுவாய் மறுபடியும் திரும்புவது கூடாதகாரியம்" எனவும் கூறப் பட்டிருக்கிறோம்! எதுவரை? அவர்கள் தங்கள் பாவத்தில் தொடர்ந்து ஜீவித்து, தேவனுடைய குமாரனை மறுபடியும் சிலுவையில் அறைந்திருந்து வாழும் வரை! ஆம், யாரெல்லம் பாவத்தை லேசாய் எடுத்துக் கொள்கிறார்களோ, அவர்கள் 'கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை' அலட்சியமாய் எடுத்துக் கொள்கிறார்கள். அல்லது இந்த வசனம் குறிப்பிடுகிறபடி கிறிஸ்துவை மீண்டும் மீண்டும் சிலுவையில் அறைகிறார்கள்! பாவத்தைக் குறித்து இதுபோன்ற மனநிலை கொண்டிருக்கும் ஒருவனை, மீண்டும் மனந்திரும்புதலுக்குள் கொண்டு வருவது கூடாத காரியம்! அவன், இதே நிலையில் தங்கி விட்டால், நித்திய இழப்பை அடைந்து விடுவான். ஆனால், அவன் பாவத்தை மிகக் கொடியதாய் எண்ணுவதற்கு தீர்மானித்து விட்டால், மீண்டும் கிறிஸ்துவை சிலுவையில் அறைவதை அவன் நிறுத்தி விட்டபடியால், அவனுக்கும் கூட நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது!
7) வெளி 3:5: "ஜெயம் கொள்கிறவனெவனோ அவனுக்கு வெண் வஸ்திரம் தரிப்பிக்கப்படும். ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப் போடுவதில்லை."
இந்த வார்த்தைகளை, சபையின் தூதுவனாகிய ஓர் மூப்பருக்கும் அந்த சபையின் எல்லா விசுவாசிகளுக்கும் இயேசு கூறியதாகும். இயேசு ஒருபோதும் வீணாய் பயமுறுத்தல்களை செய்ததில்லை! கிறிஸ்துவின் இந்த எச்சரிக்கைகளை பரந்த மனதுடனே வாசித்த உங்களையே கேட்டுப்பாருங்கள்: "ஒருவனுடைய பெயர் ஜீவப் புத்தகத்திலிருந்து கிறுக்கப்பட்டு அழிக்கப்பட முடியுமா? இவ்வாறு ஆண்டவர் கூறுவது அனைத்துமே சாத்தியமானதுதானா?" நம் யாரைக் காட்டிலும் "ஜீவப்புஸ்தகத்தை" இயேசுவே அதிகம் அறிந்திருக்கிறார். நம்முடைய கேள்வி ஞானத்தை இங்கு பயன்படுத்தாமல், இயேசுவின் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஒருவனின் துவக்கம் முதல் முடிவுவரை தேவன் மெய்யாகவே அறிந்து வைத்திருக்கிறார். யார் ஜெயம் பெறுவார்கள்? யார் ஜெயம் பெறமாட்டார்கள்? என்பதை தேவன் அறிந்திருக்கிறார். இருப்பினும், மனுஷருக்குப் புரிகிற விதமாய் அவர் பேசி, ஜீவபுஸ்கத்திலிருந்து நம்முடைய பெயர் கிறுக்கப்படும் அபாயபத்தைக் குறித்து நம்மை எச்சரிக்கை அடையச் செய்கிறார். கடைசி நியாயத்தீர்ப்பைக் குறித்து "ஜீவப்புத்தகத்தில் எழுதப்பட்டவனாக காணப்படாதவன் எவனோ, அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்படுவான் என எழுதப்பட்டிருக்கிறது (வெளி 20:15). இந்த சத்தியங்களையெல்லாம் தங்கள் அறிவுபூர்வ கேள்வி ஞானத்தை பயன்படுத்தும் புத்திசாலிகளுக்கு மறைத்து, இவைகளை "குழந்தையின் இருதயத்தோடு".... எழுதப்பட்ட அவருடைய வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சிறு பிள்ளைகளுக்கே தேவன் வெளிப்படுத்தி இருககிறார்! (மத்தேயு11:25)
வேதப்புத்தகம் "பிழை ஏதும் இல்லாத தேவனுடைய வார்த்தை" என கிட்டத்தட்ட எல்லோருமே கூறுகின்றனர். ஆனால், இவர்களில் பெரும்பாலோர் "தாங்கள் விரும்புவதை"விசுவாசித்துவிட்டு, தாங்கள் விரும்பாததை புறக்கணிக்கிறார்கள். தங்களின் "பிழையான மனது கூறுவதை" சார்ந்து கொண்டு, தேவனுடைய வார்த்தை தெளிவாகப் போதிக்கும் போதனையை சார்ந்துகொள்ள மறுக்கிறார்கள்! இதன் மூலமாய், தங்களின் "இறுமாப்பையும்" "பெருமையையும்" பகீரங்கப்படுத்துகிறார்கள்!!
இந்த சத்தியங்கள் அனைத்தும் அதி முக்கியத்துவம் நிறைந்தவைகள்! ஏனென்றால் "நமது நித்திய நிர்ணயத்தையே" இவைகள் பாதித்திடக் கூடியவைகள்! ஆகவே, மனுஷர்களின் போதனைகளை கண் மூடித்தனமாய் விசுவாசித்துக் கொண்டு, நாம் வஞ்சிக்கப்பட்டுவிடக் கூடாது! நாமோ, தேவனுடைய வார்த்தையை மாத்திரம் விசுவாசித்திட வேண்டும். அதுவே இந்த இருளான உலகத்தில் நமக்கிருக்கும் ஒரே வெளிச்சம்!
மேற்கண்ட தெளிவான சத்தியங்களை எடுத்துரைக்கும் வசனங்களையெல்லாம், நீங்கள் புதிய ஏற்பாட்டிலிருந்து தர முற்படும் யாதொரு வியாக்கியானங்களைக் கொண்டு அழித்திட ஒருக்காலும் முடியாது!
வேதாகம நிருபங்களில் வழங்கப்பட்ட கடைசி வாக்குதத்தங்களில் ஒன்றுதான் "வழுவாதபடி உங்களைக் காக்க வல்லவராகிய கர்த்தர்!" (யூதா:24) என்ற வசனமாகும். ஆம், உண்மைதான். நம்மை வழுவாதபடி காக்க, அவர் மெய்யாகவே வல்லவர்தான்! ஆனால் நம்மை முற்றிலுமாய் அவருக்கு நம்மை ஒப்புக்கொடாத பட்சத்தில், நம்மை வழுவாதபடி காத்திட அவரால் இயலாது! ஏனெனில், "அவர் தமது விருப்பத்தை எந்த மனிதனிடமும் கட்டாயமாய் திணிப்பதில்லை!"
கிறிஸ்துவோடு, விசுவாசிகளாகிய நமக்கிருக்கும் உறவை, திருமணத்திற்காகக் காத்திருக்கும் பரிசுத்த கன்னியாகவே ஒப்பிடப்பட்டிருக்கிறோம் (2கொரி. 11:2, வெளி. 19:7). ஆகிலும், அன்று ஏவாளை சாத்தான் வஞ்சித்ததுபோலவே, இன்று நம்மையும் வஞ்சித்து, "கிறிஸ்துவைப் பற்றியிருக்கும் நமது தியானத்தைப் பறித்துக் கொள்வானோ?'' என பவுல், தான் பயந்திருப்பதாகக் கூறினார். அன்று பரதேசத்திலிருந்த ஏவாள், சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு, பரதேசத்திலிருந்தே தேவனால் துரத்தப்பட்டாள்! இன்றோ, கிறிஸ்துவுக்கென "திருமண நிச்சயம் செய்யப்பட்ட" நாமே பரதேசத்திற்கு செல்ல இருக்கிறோம். இந்நிலையில், சாத்தான் "நம்மையும்" வஞ்சித்து விட்டால், நாம் ஒருபோதும் பரதேசம் சென்றடைய முடியாது!
தூய மணவாட்டியாக இருக்க வேண்டியவளே, உலகத்தோடும் பாவத்தோடும் வேசித்தனம் புரிந்தால், அவளுக்கு நியமனம் செய்யப்பட்ட மணவாளன் அவளைத் திருமணம் செய்யக் கண்டிப்பாய் மறுத்து விடுவான். இதுபோன்ற வேசித்தனமான சபையே வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தில் பாபிலோனுக்கு ஒப்பிடப் பட்டிருக்கிறது! முடிவில், அந்த சபையை ஆண்டவர் புறக்கணித்துவிட்டார்.
நீங்கள் மெய்யாகவே ஆண்டவரை நேசிப்பவராய் இருந்தால், உங்களைச் சுற்றியுள்ள மற்ற விசுவாசிகள் உலகத்தோடும் பாவத்தோடும் வேசித்தனத்தில் களித்துக் கொண்டிருந்தாலும், நீங்களோ கர்த்தருக்கென உங்களை சுத்தம் உள்ளவர்களாய் காத்துக் கொண்டு வாழ்வீர்கள்!
கடைசி நாட்களில் "அநேகருடைய அன்பு தணிந்துபோகும்" என கூறப்பட்ட வசனம் விசுவாசிகளைக் குறிப்பிட்டே ஆகும். ஏனெனில், அவர்கள் மாத்திரமே ஆண்டவரை அன்பு கூர்ந்தவர்கள்! இருப்பினும், இந்த வசனம் "முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்" (மத்தேயு 24:12-13) என கூறி நிற்கிறது! இன்று சாத்தான், நம்மெல்லோரையுமே வஞ்சிக்க வகை தேடுகிறான்! ஆனால் வேதாகமம் எச்சரிப்பது யாதெனில் "நாம் வஞ்சிக்கப்படுவதற்கு தேவனும் அனுமதி தருகிறார்!" என்பதுதான். ஆம், "நாமும் இரட்சிக்கப்படத்தக்கதாய் சத்தியத்தின்மேல் உள்ள அன்பை விட்டு விட்டால், பொய்யை விசுவாசிக்கிறவர்களாய்" மாறும் கதியை அடைவோம் (2தெசலோனிக்கேயர் 2:10-12). ஆம், இங்கு நாம் கோடிட்டு எழுதும் "நித்திய பாதுகாப்பு" என்ற உபதேசத்தில் மாத்திரம் அல்ல, மற்ற அநேகம் பகுதிகளிலும் வஞ்சிக்கப்பட விட்டுவிடுவார்!!
இப்போது காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக:
"அவர் நம்மை அன்புகூர்ந்து நம் அனைத்து பாவங்களையும் மன்னித்த படியால், நாமும் அவரை அன்புகூருகிறோம்! ஆகவே அவருடைய கிருபையைக் கொண்டு நம் மனசாட்சியை எப்பொழுதும் சுத்தமுள்ளதாய் காத்துக்கொள்கிறோம்! நாம் அவரை அன்பு கூர்ந்து முடிவு பரியந்தம் அவரைப் பின்பற்றுவோம்! ஆம், இவ்வாறாகவே நித்திய பாதுகாப்பிற்கு நாம் பங்கு உள்ளவர்களாய் இருக்கிறோம்!!"
உண்மைதான், இயேசுவைப் பின்பற்றிவரும் ஒவ்வொரு சீஷனும் நித்திய நித்தியத்திற்கும் பாதுகாப்பைக் கண்டடைவான்!
ஆனால், தான் நிற்கிறேன் என எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கக்கடவன்! (1கொரி 10:12).
கேட்பதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
- சகரியா பூணன்