புதிய ஏற்பாடு "மாம்சத்தின் கிரியைகளைப்" பற்றி மாத்திரமல்லாமல் (கலா 5:19), "செத்தக்கிரியைகளைப்" (எபி 6:1) பற்றியும் பேசுகிறது! விபச்சாரம், வேசித்தனம், பகைகள், விரோதங்கள், கோபங்கள், பொறாமைகள் போன்ற மாம்சத்தின் கிரியைகளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள், தேவனுடைய இராஜ்ஜியத்தை நிச்சயம் சுதந்தரிப்பதில்லை. இவையாவும் வெளிப்படையான பாவத்தின் கிரியைகள்! இதுப்போன்றவைகளை ஒரு விசுவாசி தன் ‘மனசாட்சியில் வாதிக்கப்படாமல்’ எளிதில் பாவம் செய்துவிட முடியாது!!
ஆனால், செத்தக்கிரியைகளோ மிகவும் ‘தந்திரமாய்’ ஒருவனை வஞ்சிக்கக்கூடியதாகும்! அவை வெளிப்பிரகாரமாக நல்ல கிரியைகள். ஆனால், அக்கிரியைகளின் ‘ஊற்றின்’ பிறப்பிடமோ கறைபட்டது என வேதம் வலியுறுத்திக் கூறுகிறது (ரோமர் 7:18). எனவே, நம் சொந்த கிரியைகள் எவ்வளவுதான் நல்லதாய் இருந்தாலும், அவைகள் தேவனுடைய பார்வைக்கு முன்பாக அழுக்கடைந்த கந்தைகளே (ஏசா 64:6). எனவேதான், நாம் பாவத்திலிருந்து மாத்திரமல்ல, செத்தக்கிரியைகளிலிருந்தும் மனந்திரும்பவேண்டும்! இப்படிப்பட்ட சரியான அஸ்திவாரத்தை நாம் போட்ட பின்புதான், நாம் தேவபக்தியின் பூரணத்தை நோக்கி கடந்து சென்றிட முடியும் (எபி 6:1).
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நம் சகலபாவத்தையும் நீக்கி சுத்திகரிக்கும் என்று விசுவாசிகள் நன்கு அறிவார்கள். அவர்கள் அறியாததெல்லாம், "நாம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு முன்பாக நம் மனசாட்சி "செத்தகிரியைகளற கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட வேண்டும்" என்பதேயாகும் (எபி 9:14). ஆகவேதான், எவைகளெல்லாம் செத்தக்கிரியைகள் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டியது மிகவும் முக்கியமாகும்!
1. சந்தோஷமில்லாமல் (Without Joy) செய்யும் எல்லாக் கிரியைகளும் செத்தக்கிரியைகளே:
உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாய் இருக்கிறார் (2கொரி 9:7) என்றே வேதம் கூறுகிறது. மகிழ்ச்சியுடன் அவருடைய சித்தம் செய்கிறவர்களையே தேவன் நேசிக்கிறார் என்றும், மகிழ்ச்சியுடன் தேவநீதி செய்கிறவர்களையே அவர் சந்தித்திடவும் விரும்புகிறார் (ஏசாயா 64:5) எனவும் இந்த வசனம் கூறுவதைப் பாருங்கள். இஸ்ரவேலர்கள் "மனமகிழ்ச்சியோடும், களிப்போடும்" தேவனை சேவியாததினிமித்தம், அவர்கள் தங்கள் சத்துருக்களைச் சேவிக்கும்படியாக தண்டிக்கப்பட்டார்கள் எனவும் வாசிக்கிறோம் (உபா 28:47). தேவனுடைய இராஜ்ஜியத்தின் நீதி, பரிசுத்தாவியினால் உண்டாகும் சந்தோஷத்தினாலேயே எப்போதும் நிறைந்திருக்கிறது! ஆம், தேவனுடைய சித்தத்தை "பிரியமாய்" (Dlight) செய்பவர்களே, ஆண்டவருடைய இருதயத்தை மகிழப்பண்ண முடியும்!!
உதாரணமாக, ‘தசமபாகம்’ செலுத்துவதை எடுத்துக்கொள்வோம். இது பழைய ஏற்பாட்டில் ஒரு சட்டமாகவே (LAW) இருக்கிறது. ஆனால், புதிய உடன்படிக்கையின் கீழ் உள்ளவர்களுக்கு, இயேசுவோ அல்லது, அப்போஸ்தலர்களோ இதைப்பற்றி எதுவும் ‘ஓர் சட்டமாக’ கட்டளையிடவே இல்லை! ஆனால், இன்று பொருளாசை கொண்ட ஏராளமான பாஸ்டர்கள் தங்கள் சபையினரை பரலோகப் பிரதிபலனின் வாக்குதத்தங்களை வைத்து ஆசைக்காட்டியோ அல்லது தேவனின் நியாயத்தீர்ப்பைக் கூறி பயமுறுத்தியோ தசமபாகத்தை செலுத்தும்படி கட்டாயப்படுத்துகிறார்கள்! ஜனங்களும் கொடுக்கிறார்கள். ஆனால், சந்தோஷமோ இல்லை! இது மனப்பூர்வமாய் அல்ல, வேண்டா வெறுப்போடு கொடுப்பது ஆகும். ‘எப்படியோ’ தங்களுடைய காணிக்கைப்பெட்டி நிறைந்ததினிமித்தம் பாஸ்டர்கள் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால், உற்சாகத்தோடு கொடுப்பவர்களை மாத்திரமே நேசிக்கும் தேவனோ ஒருபோதும் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை! புதிய உடன்படிக்கையின் போதனையோ, "மனப்பூர்வமாய் உன்னால் எவ்வளவு கொடுக்கமுடியுமோ அதை மாத்திரமே தேவனுக்கு கொடு போதும்! அதற்கு மேல் தேவன் எதையும் விரும்பவேயில்லை" என்பதுதான் நீங்கள் கொடுக்கும் அளவின்படியே பெற்றுக்கொள்ளுவீர்கள் (2கொரி 9:6, லூக்கா 6:38) என்பது உண்மை. ஆனால், விருப்பம் இல்லாமல் செய்யும் எந்த ஒரு ஊழியத்தையும், காணிக்கைகளையும் தேவன் ஒருக்காலும் விரும்புவதே இல்லை! ஆம், நாம் மகிழ்ச்சியுடன் செய்யாத எந்தக்கிரியையும் "செத்தக்கிரியைகளே" ஆகும்!
2. அன்பில்லாமல் (Without Love) செய்யும் எல்லாக் கிரியைகளும் செத்தக்கிரியைகளே:
தேவனை நேசிப்பதும், மனிதனை நேசிப்பதுமாகிய இவ்விரண்டு கற்பனைகளிலேயே மற்ற எல்லா கற்பனைகளும் அடங்கியிருக்கிறது (மத் 22:40). இவ்விரு கற்பனைகளை எடுத்துவிட்டால், மற்றவைகளெல்லாம் நிலைகுலைந்து சிதறிவிடும்! இந்த அடிப்படையில்தான் எபேசு சபையின் மூப்பர்கள் கடிந்துக்கொள்ளப்பட்டார்கள். அவர்களின் கிரியைகள் தேவன்பினாலோ அல்லது சகோதர அன்பினாலோ நெருக்கி ஏவப்படவேயில்லை (வெளி 2:2,4). நாம் தேவனுடைய பிரமாணங்களுக்கு அதற்குரிய ஆவியின் பற்றுதலோடு கீழ்படியவில்லை என்றால், நம் கிரியைகள் யாவும் செத்த கிரியைகளேயாகும். நாம் தேவனால், அவருடைய மந்தைக்கு மேய்ப்பர்களாய் நியமனம் செய்யப்படவேண்டுமென்றால், நாம் அவரை ‘அதிகமாக’ நேசிக்கிறோமா ((supremely love Him) என்பதை அவர் பேதுருவைச் சோதித்ததுப்போலவே, நம்மையும் சோதித்து அறிவார்!! (யோவான் 21:15-17). இவ்வாறு பொங்கும் நேசத்தில் நாம் அவரை சேவிக்காவிட்டால், நம்முடைய ஊழியம் பயனற்றது!! அதேப்போல, நம்மைச் சபிப்பவர்களை "ஆசீர்வதிப்பது" மாத்திரமல்ல, அவர்களை நம் இருதயப்பூர்வமாக "நேசிக்கவும்" வேண்டும்! இல்லாவிட்டால், நாம் கர்த்தருடைய "வார்த்தையின்படி" செய்கிறவர்களாயும் அவை போதிக்கும் "ஆவியின் போதனையைப்" புறக்கணிக்கிறவர்களாயும் இருப்போம். இதைப் போலவே, நம் சபையில் உள்ள சகோதர, சகோதரிகளையும் நேசித்து சேவிக்க வேண்டும். நம் அன்பின் சேவையைப் பெற்றுக் கொண்டவர்கள் நமக்கு நன்றி உள்ளவர்களாய் இல்லாதிருப்பதைக் கண்டால், அதனிமித்தம் அவர்களைக் குறைக்கூறவோ, புறங்கூறவோ கூடாது! அன்பின் சேவையில் சலிப்பும், குறைசொல்லும் வந்துவிட்டால், நம் சேவைகள் முழுவதும் செத்தகிரியைகளின் குப்பைக் குவியலாகிவிடும்! ஆம், தேவனுடைய பணிகளுக்கென்று உண்மையான அன்போடு செய்யாத எந்தத் தியாகமும்கூட செத்தக்கிரியைகளே!!
3. வைராக்கியம் இல்லாமல் (Without Zeal) செய்திடும் எல்லா கிரியைகளும் செத்தகிரியைகளே:
"உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல... எனவே, அனல் உள்ளவனாய் வைரக்கியமாய் இரு" (வெளி 3:15-19) என்ற இந்த வேதவாக்கியங்களை வாசித்துப்பாருங்கள்! பாதி மனதோடு ஏனோ தானோ என செய்யப்படும் கிரியைகள், செத்தகிரியைகள்! நம்முடைய தேவனாகிய கர்த்தரை "முழு" இருதயத்தோடும், "முழு" ஆத்துமாவோடும், "முழு" மனதோடும், "முழு" பெலத்தோடுமே அன்புகூருதல் வேண்டும் (மாற் 12:30). நம்முடைய துதியும், ஆராதனைகளும் செத்தநிலைகொண்டு ஜீவனற்றதாயிராமல், அவைகள் முழு இருதயத்தோடு ஏறெடுக்கப்பட வேண்டும். நம்முடைய ‘ஜெபம்’ உண்மையான பாரத்தோடும், ‘தீர்க்கதரிசனம்’ அனல்கொண்ட வைராக்கியத்தோடும் இருக்கவேண்டும்!! ஆம், நாம் எப்பொழுதும் "ஆவியில் அனல் உள்ளவர்களாய்" (ரோமர் 12:1) கொழுந்துவிட்டு எரியவேண்டும்! இந்த அக்கினி, பலிபீடத்தின் மேல் ‘எப்போதும்’ எரிந்து கொண்டே இருக்கவேண்டும் (லேவி 6:13). நாம் இந்த அக்கினியோடு, தேவன் நமக்கு அருளிய ஆவிக்குரிய வரங்களையும் சேர்த்து அனல்மூட்ட வேண்டும் (2தீமோ 16). தேவவரங்களை குறித்து அனேகர் அவதூறு பேசுவதினிமித்தம், அதைக்குறித்து நாமோ ஒருபோதும் அசட்டையாயிருக்கக்கூடாது. ஆனால், இன்றோ அனேக சபையில் ஆவியின் இந்தப் பற்றிஎரியும் அக்கினி இல்லாமல் ஜீவனற்ற நிலையிலல்லவா இருக்கிறது? இந்த வைராக்கியமான அக்கினி இல்லாததால் இச்சபைகள் தேவனால் வாந்திப்பண்ணப்பட்டு புறக்கணிக்கப்படவே ஆயத்தமாயிருக்கிறது! (வெளி 3:16). நம் எல்லோருடைய ஜீவியத்திலும் உள்ள இப்படிப்பட்ட செத்த கிரியைகளுக்காக மனந்திரும்புவோமாக!!
4. விசுவாசம் இல்ல்லாமல் (Without Faith) செய்யப்படும் எல்லா கிரியைகளும் செத்தக்கிரியைகளே:
கிரியை இல்லாத விசுவாசம் செத்ததுப்போலவே (யாக் 2:26), விசுவாசம் இல்லாத கிரியைகளும் செத்தக்கிரியைகளேயாகும். இந்த விசுவாசம் இல்லாததாலேயே, இன்று அனேக ஜெபக்கூட்டங்கள் செத்ததாகவே இருக்கிறது. கஷ்டத்தோடு செய்து முடிக்கப்படும் "ஓர் சகித்துக்கொள்ளும் பணியாக" நடைப்பெறும் ஒரு முழுஇரவு ஜெபத்தைவிட, தேவனுடைய திட்டத்தை நிறைவேற்ற "ஐந்து நிமிடம்" மாத்திரமே விசுவாசத்தில் நிறைந்து ஜெபித்திடும் ஜெபமோ ஜீவனும் வல்லமையுமையும் உள்ளதாய் இருந்திட முடியும். இயேசு இரவு முழுவதும் ஜெபித்ததுப் போலவே, நாமும் ஜெபிப்பது நல்லதுதான். ஆனால், அதற்காக தேவை இருந்தால் மாத்திரமே ஜெபிக்க வேண்டுமேயல்லாமல், ஓரு சகிப்புப்பணியாக" நடைபெறும் செத்தகிரியையாக அல்ல!! ஒருவன் தனக்குள் பெற்றுக்கொண்ட நிச்சயமான உணர்த்துதலும் (Personal conviction) விசுவாசமேயாகும் (ரோமர் 4:22). இவ்வித நிச்சயமான உணர்த்துதலைப் பெறாமல் நாம் செய்திடும் கிரியைகளும் செத்தகிரியைகளேயாகும்! பிரபல்யமான யாரோ சில தேவமனிதர்கள் விசுவாசிக்கும் ஒன்றை அல்லது அவர்கள் பிரசங்கித்திடும் சில உபதேசங்களை நாமும் அப்படியே "காப்பியடித்துக் கொள்ள (Imitate) ஒருபோதும் முயற்சிக்கக்கூடாது! ஆனாலும், இன்றைய கிறிஸ்துவ உலகமோ, இவ்விதமாய் தனக்கென நிச்சயமான உணர்த்துதல் இல்லாமலே சில பிரபல்ய தேவமனிதர்களை அப்படியே "காப்பியடித்துப்" பின்பற்றும் விசுவாசிகளால் நிறைந்திருக்கிறது. இன்னொருவரை "காப்பி அடிப்பது" அல்லது அவரைப்போல "பாவனைப் பண்ணுவது" ஆவிக்குரிய மரணத்தையே கொண்டுவரும் என்ற உண்மையை அறியுங்கள். இஸ்ரவேலர்கள் செங்கடலை விசுவாசத்தில் கடந்து வந்தார்கள்! ஆனால், எகிப்தியர்களோ தாங்களும் இஸ்ரவேலர்களைப் போலவே செய்யும்படி காப்பியடிக்க முயற்சித்து சமுத்திரத்தில் மூழ்கிப்போனார்கள் (எபி 11:29). இவையாவும் நமக்காகவே எச்சரிக்கையாக எழுதப்பட்டுள்ளது!! மற்றவர்களுடைய பாவனையையோ, அவர்களின் ஊழியத்தையோ காப்பியடிக்க நாம் ஒருபோதும் முயற்சிக்கக்கூடாது! இன்னொருவர் தன் ஊழியத்தில் செய்யும் சில "வலியுறுத்தும்படியான செய்கைகளைக்கூட" (Emphasis) காப்பி அடிக்க வேண்டாம்! அதுவும்கூட செத்தகிரியைகளே!! நாம் தீர்க்கதரிசனம் சொல்லுவதும்கூட, "அவனவனுக்கு அருளப்பட்ட விசுவாசத்தின்" அளவின்படி சொல்லுதல் வேண்டும் (ரோமர் 12:6). ஆம், "நாம் நாமாகவே" இருந்திட தேவன் விரும்புகிறார்! நம்முடைய சொந்த ஆள்த்துவத்தைக் (Our Own Personality) கொண்டே, கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள மேன்மையான கிரியைகளில் நாம் பணியாற்றிட தேவன் விரும்புகிறார்!!
5. சுய லாபத்திற்காகவும், சுய கனத்திற்காகவும் செய்யப்படும் எல்லா கிரியைகளும் செத்தக்கிரியைகளே:
"உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று ‘பெயர்’ கொண்டிருந்தும், செத்தவனாயிருக்கிறாய்" (வெளி 3:2) என வேதம் கூறுகிறது. இந்த சபையின் மூப்பன் ஆவியின்படியோ செத்தவன்! ஆனால், உயிரோடிருக்கிறேன் என்ற "பெயரினிமித்தம்" திருப்தி அடைந்திருந்தான். ஆம், இவன் தேவனுடைய புகழ்ச்சியை காட்டிலும் மனுஷருடைய புகழ்ச்சியையே அதிகம் விரும்பினான் (யோ 5:44, 12:43). அதன் முடிவு, அவன் செய்த எல்லா கிரியைகளும் செத்த கிரியைகளாய்ப் போனது! மனுஷர் கண்டு, தங்களைக் கனம் செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்யும் எல்லா கிரியைகளும் செத்த கிரியைகளே (மத் 6:1-18). மனுஷருடைய கண்களுக்கு ‘கூடுமானவரை’ மறைத்துத் தேவனுடைய பார்வையில் மாத்திரம் செய்யப்படும் கிரியைகளே, "ஜீவனுள்ள கிரியைகள்" நாம் தேவனுக்காய்ச் செய்த கிரியைகளில் நம் சொந்த மகிமையைத் தேடுவோமென்றால், அவைகள் "தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்து ஆராதித்தது" போன்ற செத்தகிரியைகளாய் மாறிவிடும்!! தானியேல் 4:30 தெளிவாய் சொல்லுகிறபடி, "பாபிலோனும்" இப்படித்தான் சுய-மகிமைக்காய் கட்டப்பட்டது. நம்மைப்பற்றியும், நம்முடைய கிரியைகளைப்பற்றியும் மற்றவர்கள் எப்படியெல்லாம் நினைத்துப் புகழுவார்கள் என்ற எண்ணம் நம்மை சோதிக்கும்படி "வெளியே வரும்போது" உடனே நாம் "பிளஷ் அவுட்" கொக்கியை இழுத்து, அந்த எண்ணங்களையும், நம்மைப்பற்றிய மற்றவர்களின் அபிப்பிராயங்களையும் (அவை நல்லதோ, கெட்டதோ எதுவாயிருந்தாலும் சரி) அதற்கே சொந்தமானப் பாதாளச் சாக்கடைக்குள் தள்ளி அப்புறப்படுத்த வேண்டும்! மதிப்புள்ள தேவமனிதர்கள்கூட நம்மைப்பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்ற எண்ணத்தை நம் மனதைவிட்டுப் பாதாளச் சாக்கடைக்குள் சுத்தமாகப் "பிளஷ் அவுட்" பண்ணிவிட வேண்டும்! ஆம், "மனுஷர் கண்களுக்கு முன்பாக உள்ள நமது நீதி, தேவனுக்கு முன்பாக அருவருப்பாக (பாதாளச் சாக்கடைக்குச் சொந்தமாய்) இருக்கிறது" (லூக்கா 16:15). இவ்வாறு வேதம் கற்றுத்தரும் கண்டிப்போடு தன்னைப் பலவந்தம் செய்கிறவர்கள் மாத்திரமே செத்தகிரியைகளுக்கு நீங்கலாகி விடுதலை பெற்றிருக்க முடியும்!! இதேப்போல, தேவனுக்கு சம்பளத்திற்காக (Salary) செய்யப்படும் எந்தக் கிரியைகளும் செத்தகிரியைகளேயாகும்!! சம்பளத்திற்காய் செய்யப்படும் எந்தக் கிரியையும் கிறிஸ்தவ ஊழியம் அல்லவே அல்ல!! அவ்வித ஊழியம் கிறிஸ்தவத்தின் பெயரை உடையதாக இருந்தாலும், அவை உலகப் பிரகாரமான உத்தியோகமேயாகும்! அப்படியெல்லாம் நாம் தேவனுக்கும் பணத்திற்கும் சேர்த்து ஊழியம் செய்திட ஒருக்காலும் முடியவே முடியாது!!
6. மனசாட்சியின் உறுத்துதலிலிருந்து விடுபடுவதற்காக செய்திடும் எல்லா கிரியைகளும் செத்தகிரியைகளே:
மனசாட்சி (Conscience) தங்களைக் குற்றப்படுத்துவதினிமித்தம், புறஜாதிகள் கூட ஜெபிக்கவும், உபவாசிக்கவும், தானதர்மங்கள் செய்யவும் உந்தப்படுகிறார்கள் (ரோமர் 2:15). இதைப்போல கிறிஸ்தவர்களும்கூட தங்கள் மனசாட்சியின் பிடியிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே, இதே போன்ற கிரியைகளைச் செய்வது சாத்தியமே!! இன்று அனேகர் தினசரி வேதம் வாசிப்பதும், ஜெபிப்பதும்கூட தங்கள் மனசாட்சியின் குற்றத்திலிருந்து (Accusations) விடுபடவே, அவ்வாறு செய்கிறார்கள்! கூட்டங்களுக்கு செல்வதும், தசமபாகம் செலுத்துவதும், ஏழைகளுக்குத் தானதர்மங்கள் செய்வதும் மனசாட்சியை சமாதானப்படுத்துவதற்காகவே செய்யப்பட்டால், அவை அனைத்தும் செத்தகிரியைகளேயாகும்! சில பிரசங்கிமார்கள் விசுவாசிகளிடத்தில் உள்ள இந்த "மனசாட்சியின் பலவீனத்தைத்" தங்களின் முதலீடாகக் கொண்டு, "கிறிஸ்து இல்லாமல் அழியும்" ஏராளமான மக்களுக்கு ஏதாவது செய்யுமாறு தூண்டிவிடுகிறார்கள்! "கொடுங்கள் அல்லது போங்கள்" (Either Give or Go) என்பதே இவர்களின் முழக்கம்! இதன் பலனாகச் சிலர் பணம் தருகிறார்கள். சிலர் தங்கள் வேலைகளையும் விட்டுவிட்டு கிறிஸ்தவ ஊழியத்திற்குப் போகிறார்கள்!! ஆனால், தேவனுடைய திட்டமான நடத்துதல் இல்லாமல் தங்களின் உணர்ச்சிக்கு வசமாகி (Emotion) தங்களின் குற்றமுள்ள மனசாட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் செய்யப்படும் இவ்விரண்டு கிரியைகளுமே இன்றுவரை கிறிஸ்தவர்கள் மத்தியில் தொன்றுதொட்டு நடந்துவரும் செத்தகிரியைகளாகும்!!
7. நித்திய நியாயத்தீர்ப்புக்கு அஞ்சி செய்யப்படும் எல்லா கிரியைகளும் செத்தகிரியைகளே:
தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குப் பயந்து பாவத்தை விட்டு நீங்கியிருப்பது நல்லதுதான்! ஆனால், இப்பூமியில் இயேசு பாவத்தைவிட்டு நீங்கியிருந்ததற்கு நியாயதீர்ப்பின் பயம் காரணமாய் இல்லை என்பதை நாம் அறிய வேண்டும். ஆம், இயேசு ‘பிதாவைப் பிரியப்படுத்த’ விரும்பியதினிமித்தமே பாவத்தை வெறுத்திருந்தார். இதுவே, நம்முடைய நோக்கமாகவும் இருக்கவேண்டும். ஒரு பெண்ணை இச்சித்தாலும் பொய்கள் சொன்னாலும் ஒருவருக்கொருவர் கசப்பை வைத்திருந்தாலும் நமக்குத் தண்டனை ஒன்றும் இல்லை என்று வைத்துக்கொண்டால், நாம் அப்பாவங்களில் ஈடுபடுவோமா? அல்லது ‘தேவனைப் பிரியப்படுத்துவதே’ நம் முழு விருப்பமாயிருந்து இப்பாவங்களைத் தொடர்ச்சியாய் வெறுத்துத் தள்ளுவோமா? இந்தக் கேள்விக்கு நாம் ஒவ்வொருவரும் நமக்குதானே பதில்கூறி, நம் இரட்சிப்பு நிறைவேற மெய்யாய் பிரயாசபடுவோமாக! நாம் மற்றவர்களை மன்னிக்கும் நோக்கம், தேவன் நம் பாவங்களை மன்னிக்க வேண்டும் என்பதற்காகவும்... மனிக்காவிட்டால், தேவனுடைய நியாயதீர்ப்பின்படி நமக்கு வாதைகள் வருமே என்பதற்காகவும் இருக்குமென்றால், அது செத்த கிரியையே! இவையாவும், நியாயத்தீர்ப்புக்கு அஞ்சும் சுய-நல நோக்கம் என்பதை இன்று எத்தனை பேர் விளங்கி கொண்டுள்ளார்கள்? தனக்கு இன்று சாலையில் விபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, அஞ்சி தினமும் காலையில் வேதம் வாசித்துச் ஜெபிப்பவர்களைப்பற்றி நாம் என்ன சொல்லக்கூடும்? இவர்கள் புற ஜாதியினரைப் போன்ற மூட நம்பிக்கை கொண்டவகுப்பினர்கள் அவ்வளவுதான்!
8. பிரதிபலனைப் பெறுவதற்காக செய்யப்படும் எல்லா கிரியைகளும் செத்தகிரியைகளே:
உத்தமமானவர்களுக்கு இயேசு பிரதிபலன் அளிப்பது (வெளி 22:12) உண்மைதான். ஆனாலும் அவரிடமிருந்து ஒருநாள், "நல்லது, உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே" என்னும் வார்த்தைகளைக் கேட்பதற்காய் "அவரைப் பிரியபடுத்தி" (2கொரி 5:9) ஜீவிக்கும் ஜீவியமே நமது இறுதி நோக்கமாயிருத்தல் வேண்டும்! சுயத்தை மையமாகக் கொண்டு, பரலோக பிரதிபலனைப் பெறுவதற்காக செய்யப்படும் தியாகத்தையும், ஊழியத்தையும் இயேசுவே எச்சரித்தார்! ஆஸ்திகள்மீது தன் மனதை வைத்து, அதை விட்டுவிட முடியாமல் துக்கத்தோடு திரும்பிச்சென்ற பணக்கார வாலிபனோடு தன்னை ‘உயர்வாய்’ ஒப்பிட்டு, பேதுரு இயேசுவிடம், "நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்று கேள்வி கேட்டான் (மத் 19:27). அதற்கு இயேசு வேலையாட்களைப் பற்றிய உவமானத்தோடு பேதுருவுக்குப் பதில் கூறினார் (மத் 20:1-16). அதில் நாம் பார்க்கிறோம்: கூலியை (Reward) எதிர்நோக்கி வேலை செய்தவர்கள் (முந்தினவர்கள் வேலைசெய்த அளவைவிட குறைவாய் வேலை செய்திருந்தாலும்கூட) முதன்மையாக வந்தார்கள்!! அளவிற்கும் (Quantity), தரத்திற்கும் (Quality) உள்ள வித்தியாசம் போலவே, செத்தகிரியைகளுக்கும், ஜீவனுள்ள கிரியைகளுக்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! மற்ற விசுவாசிகளைவிட உயர்வான பலனைப்பெற நம்பி கிரியைசெய்து, கிறிஸ்துவின் மணவாட்டி ஸ்தானத்தைத் தேடுகிறவர்களின் கிரியைகள் கடைசி நாளில் செத்தகிரியைகளாகவே வெளிப்படும்!!
நம் சிந்தை வாழ்வைத் தூய்மைப்படுத்தி, மற்றவர்களுக்கு நன்மை செய்து, மனைவியை நேசித்து அல்லது புருஷர்களுக்கு கீழ்படிந்து இப்படியாக எல்லா கிரியைகளையும், ‘பின் ஒருநாள் உயர்த்தப்படுவோம்’ என்ற எண்ணத்தோடு செய்வோமென்றால், இன்னமும் நம் ஜீவியத்தின் நடுவில் "சுயம்" ஆளுகை செய்வதை அறிவோமாக! இவ்வாறு சுயத்தை மையமாகக் கொண்டு செய்யப்படும் எல்லா "நல்ல கிரியைகளும்" செத்த கிரியைகளே!! கடைசிநாளில், மகிமையின் கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள், தேவனுடைய பாதத்தில் வணக்கமாய் விழுந்து, "கர்த்தாவே, நீர் ஒருவரே மகிமை, கனம் வல்லமைக்குப் பாத்திரர்" (வெளி 4:10) என சொல்லக்கூடியவர்களாய் இருப்பார்கள். தேவனைப் பிரியப்படுத்தி அவருக்கே மகிமை செலுத்துகிற நோக்கமே அல்லாமல், வேறு நோக்கங்களிலிருந்து (Motives) நம்மை நாமே சுத்திகரித்துக்கொண்டால் ஒழிய, ஒருக்காலும் செத்த கிரியைகளுக்கு நாம் நீங்கலாகி இருக்கமுடியாது. நாம் செய்த எல்லா நற்கிரியைகளையும் நம்முடைய ஞாபகத்திரையில் எழுதி வைத்திருப்போமென்றால், அவையாவும் கொஞ்சம் ..... கொஞ்சமாய் செத்த கிரியைகளாய் மாறிவிடும் என்பது நிச்சயம்!!
கடைசிநாளில், நியாயத்தீர்ப்பைப் பற்றிய இரண்டு காட்சிகளை இயேசு வெளிப்படுத்தினார். ஒன்று, பூலோகத்தில் தாங்கள் செய்த எல்லா நல்ல கிரியைகளையும் பட்டியல் செய்து, "கர்த்தாவே உம்முடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோமே... உம்முடைய நாமத்தினாலே அற்புதங்கள் செய்தோமே ....என்று கூறியவர்கள் (மத்தேயு 7:22,23). இவர்களை தேவன் "ஒருக்காலும் உங்களை அறியேன்" என்றே புறக்கணித்தார்! இன்னொரு காட்சி, பூலோகத்தில் இவர்கள் செய்த நற்கிரியைகள் தேவனால் அவர்களுக்கு நினைவுபடுத்தப்பட்டு, இவர்களோ ஆச்சரியத்தில் ஆழ்ந்துப்போய், "தேவனே, எப்பொழுது இவைகளையெல்லாம் செய்தோம்?" என்று வினாவிய நீதிமான்களின் கூட்டம் (மத்தேயு 25:34-40). பிரதிபலனை எதிர்நோக்கி இவர்கள் கிரியை செய்யாததால், தாங்கள் செய்த கிரியைகளை அப்படியே மறந்துவிட்டார்கள்! இங்குதான் நாம் செத்தகிரியைக்ளுக்கும், ஜீவனுள்ள கிரியைகளுக்கும் உள்ள பெரும் வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறது! இந்த இரு கூட்டத்தாரில் இப்பொழுது "நான் எந்தப் பிரிவைச் சேர்ந்தவனென்று?" உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள்!!
9. இயேசுவின் மரணத்தை சுமக்காமல் செய்யப்படும் எல்லா கிரியைகளும் செத்த கிரியைகளே:
நாம் பெற்றுக்கொண்ட "இயேசுவின் ஜீவனிலிருந்து" பாய்ந்து வரும் கிரியைகளே ஜீவனுள்ள கிரியைகள்! நம்முடைய அனுதின சிலுவையாகிய, ‘இயேசுவின் மரணத்தை’ சுமக்காமல் இயேசுவின் ஜீவனைப் பெற்றுக்கொள்வது ஒருக்காலும் சாத்தியமில்லை! (2கொரி 4:10). நாம் கோபவார்த்தைகளைப் பேசிவிடாமல் வெறுமனே நமது நாவைக் கட்டுபடுத்தியோ, கோபாவேச முகத்தைக் காட்டாமல் இருந்துக்கொண்டு உள்ளத்திற்குள் கோபமும், எரிச்சலும் கொதித்துக்கொண்டிருந்தாலோ, நாம் சுய-கட்டுப்பாடு கொண்ட சிறந்த புத்தர்கள் (Buddhists) மாத்திரமே! இவையாவும் "யோகாவின் (Yoga) போதனையே அல்லாமல் கிறிஸ்துவினுடைய போதனை அல்லவே அல்ல!!
இயேசுவோ, நம்முடைய சிலுவையையே நாம் அனுதினமும் எடுக்க வேண்டும் என்றார். ஆம், மாம்சத்தை சிலுவையில் அறையும், "கிறிஸ்துவின் மரணம்" (Dying of Jesus) (கலா 5:24)!! சுட்டுக் கொல்வதோ அல்லது தூக்கிலிடுவது போன்ற "உடனடி மரணம்" அல்லாமல் சிலுவையில் அறைந்து மரிப்பது, ஓரு நீண்ட தொடர்ச்சியான கிரியையாகும்! ஆம், இந்த மாம்சம் ஒரே நாளில் தூக்கிலிடப்படவோ, சுடப்படவோ முடியாது. அது சிலுவையில் அறையப்பட மாத்திரமே முடியும்! ஆனால், நாம் தொடர்ந்து இந்தப் பாவ மாம்சத்தை சிலுவையில் வைத்திருக்க உண்மையுள்ளவர்களாய் இருப்போமென்றால், நாளாவட்டத்தில் நம் மாம்சத்திற்கு மரணம் சம்பவித்து, நம் இருதயத்திலேயே பாவங்களிலிருந்து விட்டோய்ந்திருக்க முடியும் (1பேதுரு 4:2). அப்போது மாத்திரமே பரிசுத்தாவியின் ஜீவனுள்ள கிரியைகள், ஜீவநதியாக நம் உள்ளத்திலிருந்து பாய்ந்தோடும்! (யோ 7:38). அப்போது மாத்திரமே, நம்முடைய வெளிப்படையான தோற்றங்களும் கிரியைகளும் உள்ளத்தின் நோக்கத்திற்கு ஒத்து இருக்கும். ஆம், இப்போது, நாம் செயற்கையான சிரிப்பையோ, வெளிவேஷமான பக்தியின் தோற்றத்தையோ காண்பிக்கவேண்டிய அவசியமே இல்லை!!
10. மனுஷீக அறிவுக்குரிய காரணங்களின் (Human Reason) அடிப்படையில் செய்யப்படும் எல்லா கிரியைகளும் செத்தகிரியைகளே:
ஆண்டவருக்கும், அவருடைய ஜனத்திற்கும் மார்த்தாள் செய்த சுயநலமற்ற தியாகமான ஊழியங்கள், ‘நல்ல கிரியைகளான’ செத்த கிரியைகள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் (லூக் 10:38-42). நல்லகிரியைகள் என்று ‘அவள் உணர்ந்தபடியால்’ மாத்திரமே அவைகளை அவள் செய்தாள். ஆனால், "ஒரு உண்மையுள்ள ஊழியக்காரன் தன் ‘எஜமானன் என்ன சொன்னாரோ’ அவைகளை மாத்திரமே செய்வானே அல்லாமல், தனக்கு நல்லது என்று கண்டதைத் தன் இஷ்டப்படி செய்திட மாட்டான்" (1கொரி 4:2 - Living Bible). எனவே, முதலாவதாக, "நான் என்ன செய்ய ஆண்டவர் விரும்புகிறார்?" என்று கேட்டறிய இயேசுவின் பாதத்தில் அமர்ந்த மரியாளே ஞானமுள்ளவள்!! எபிரேயர் 4:10,12 வசனங்கள் கூறுகிறபடி, தேவனுடைய வார்த்தை நம் ஆவியையும் ஆத்துமாவையும் பிரித்து, நம்மைப் பாவத்தைவிட்டு ஓய்ந்திருக்கச் செய்வது போலவே, நம்முடைய சொந்த கிரியைகளிலிருந்தும் (Our Own Works) நாம் ஓய்ந்திருக்க அவருடைய வார்த்தைகள் நம்மில் கிரியை செய்ய வேண்டும்!! மனுஷீக கிரியைகள் (Soulish Works) யாவுமே, செத்த கிரியைகள்! இயேசுவோ, சுயமாய் ஒன்றும் செய்யவில்லை (யோ 5:30). இன்றும், "எப்படி அவருடைய பணிகளைச் செய்யலாம்?" என்ற பிரமாதமான திட்டங்கள் உடையவர்களைத் தேவன் நோக்கிக் கொண்டிருக்கவில்லை! இப்படிப்பட்டவர்கள் "இஸ்மவேலர்களையே" உற்பத்தி செய்வார்கள்!! மாறாக, தங்களின் குறைவான ஞானத்தையும் குறைவான பெலத்தையும் ஒத்துக்கொண்டு, தேவனுடைய உபயோகத்திற்காகத் தங்களை ஒப்புக்கொடுக்கிற தாழ்மையுள்ளவர்களையே தேவன் நோக்கித் தேடிகொண்டிருக்கிறார்!! இப்படிபட்டவர்களே அவரைப் பிரியப்படுத்தவும் முடியும். ஆம், மனுஷீகத் திறமையையல்ல, அவருடைய உபயோகத்திற்குத் தன்னையே தரும் "ஒப்புக் கொடுத்தலையே" தேவன் இன்று நோக்குகிறார்!!
செத்த கிரியைகளைப் பற்றி தன் அறிவில் நன்கு அறிந்த சிலர், "செத்தகிரியைகள் என்ற குன்றின்" உச்சியிலிருந்து பின்வாங்கி, "ஒன்றும் செய்யாமை என்ற அடுத்த குன்றின்" (Clift of Doing Nothing) பாதாள குழிக்குள் விழும் அபாயமும் உள்ளது! இதுவும் மிகமிக பரிதாபமான செயலேயாகும். பரிசுத்தாவியின் ஜீவனுள்ள கிரியைகள், நாம் ஆவியானவரோடு ஒத்துழைத்து ஜீவிக்கும் ஒழுங்கு செய்யப்பட்ட ஜீவியத்தின் மூலமாகவே வெளிப்பட முடியும். கவனியுங்கள்: இங்கு ‘இன்னொரு’ நியாயப்பிரமாணச் சட்டம் அல்ல, தேவனைப் பிரியப்படுத்தும் கிரியைகள் எது என்பதை அறிந்து முனைந்திடும் ஓர் சீர்திருத்தமே நமக்கு அவசியம்!
நம்முடைய நீதியின் கிரியைகள், ஆட்டுக்குட்டியானவரின் கலியாண நாளில் உடுத்தப்படும் கலியாண வஸ்திரமாக மாறும்படி (வெளி 19:8) நாம் நம்முடைய மாம்சத்தின் அசுசியை மாத்திரமல்ல, ‘ஆவியின் அசுசியிலிருந்தும் நம்மை நாமே சுத்திகரித்துக் கொள்வோமாக (2கொரி 7:1). நம் ஆவியைக் கறைப்படுத்தும் "செத்தகிரியைகள்" நம்மைவிட்டு ஒழிவதாக!!