கடைசி நாட்கள் வஞ்சகத்தினாலும், எண்ணற்ற கள்ளத்தீர்க்கதரிசிகளாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் என இயேசுவும், அப்போஸ்தலர்களும் திரும்பத் திரும்ப எச்சரித்துக் கூறினார்கள் (மத்தேயு 24:3-5, 11, 24; 1 தீமோ.4:1). கடந்த 10 அல்லது 20 வருடங்களில் இந்த வஞ்சகம் பலுகிப் பெருகி வருவதை நாம் கண்கூடாய் காண்கிறோம்.
இந்த கள்ளத்தீர்க்கதரிசிகளாலும், அவர்களின் போலியான எழுப்புதலாலும் இலட்சோப இலட்சம் கிறிஸ்தவர்கள் வஞ்சிக்கப் படுகிறார்களே. . . அது ஏன்? மேலும், ஏராளமான பிரசங்கிகள் கற்பு ஒழுக்கக்கேட்டிற்கும், பொருளாசைக்கும் பலியாகிறார்களே. . . அது ஏன்?
இதற்கு பிரதானமாய் 10 முக்கிய காரணங்களை நான் அறிந்திருக்கிறேன் :
1. இன்றைய திரளான கிறிஸ்தவர்கள், புதிய ஏற்பாடு என்ன போதிக்கிறது? என்பதைக்கூட அறியாதிருக்கிறார்கள்! அது ஏனென்றால், புதிய ஏற்பாட்டை இவர்கள் கவனமாய் படிக்கவில்லை. ஆகவேதான் புதிய ஏற்பாடு போதிப்பதை பின்பற்றுவதற்கு பதிலாய் தங்கள் தலைவர்களின் போதகங்களை கண்மூடியாய் பின்பற்றுகிறார்கள்!
2. தங்களின் குணாதிசயத்தைவிட (இயற்கைக்கு உட்பட்ட ஜீவியம்), இவர்களுக்கு `அற்புதங்கள்' (இயற்கைக்கு அப்பாற்பட்டவரங்கள்) அதிக முக்கியமாய் மாறிவிட்டது!
3. ஆவிக்குரிய சம்பத்தைக் காட்டிலும் பொருளாதார சம்பத்துக்களே இவர்களுக்கு அதிக முக்கியமாய் மாறிவிட்டது!
4. பரிசுத்த ஆவியின் உண்மையான அசைவாடுதலுக்கும், உணர்ச்சி வயப்படுத்தும் ஆத்தும பரவசம் அல்லது மனோதத்துவ செயலாற்றத்திற்கும் இடையிலான வேறுபாட்டை இவர்களால் புரியது கொள்ள முடியவில்லை! இதற்கும் இவர்களின் "புதிய ஏற்பாட்டின் சத்தியத்தின் அறியாமையே" காரணம் எனக் கூறலாம்.
5. மனதை ஸ்திரப்படுத்தி, அதன் மூலமாய் "மனசாஸ்திர அடிப்படையில்" நிகழச் செய்யும் சுகத்திற்கும், இயேசுவின் நாமத்தில் நிகழும் அற்புத சுகத்திற்கும் இடையிலான வித்தியாசத்தையும் இவர்கள் அறியாதிருக்கிறார்கள்!
6. உள்ளிந்திரியப் பூர்வமாய் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதைக் காட்டிலும் உணர்ச்சி பரவசமும், நூதனமான சரீர வெளி தோற்றங்களும் அதிக முக்கியத்துவம் நிறைந்ததாய் மாறிவிட்டது!
7. தலைவர்களாய் இருப்பவர்களுக்கு, அந்தரங்கத்தில் தேவனோடு இசைந்து நடப்பதைக் காட்டிலும், ஜனங்களுக்குச் செய்திடும் ஊழியமே அதிக முக்கியமாய் மாறிவிட்டது!
8. இந்தத் தலைவர்களுக்கு "தேவனுடைய அங்கீகாரத்தைக் காட்டிலும்" மனுஷர்களுடைய அங்கீகாரமே அதிக முக்கியமாய் மாறிவிட்டது!
9. இந்தத் தலைவர்களுக்கு, தங்களுடைய ஜனங்கள் கிறிஸ்துவுக்கு முழுமையாய் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்களா? என்பதைக் காட்டிலும், கூட்டங்களில் பங்குபெறும் ஜனத்தினுடைய எண்ணிக்கையே அதிக முக்கியமாய் மாறிவிட்டது!
10. இந்தத் தலைவர்களுக்கு, ஒரு ஸ்தல சபையைக் கட்டி, அந்த ஸ்தல சபையில் தங்களையும் ஒரு பணிவிடைக்காரராய் (எரேமியா 6:13) வைத்துக் கொள்வதைக் காட்டிலும், தங்களின் சமஸ்தான தனி சாம்ராஜ்யமும் தங்களின் பொருளாதார உயர்வின் சிம்மாசனமுமே அதிக முக்கியமாய் இவர்களுக்கு மாறிவிட்டது!
மேல் குறிப்பிட்ட 10 - அம்சங்களும் "இயேசு போதித்த" சத்தியங்களுக்கு முற்றிலும் முரண்பாடானவைகள் ஆகும்! இவ்வாறு கிறிஸ்துவுக்கு நேர் எதிரிடையாய் இருப்பதையே, புதிய ஏற்பாடு "அந்திக்கிறிஸ்து" என அழைக்கிறது. `இதை' கிறிஸ்தவர்கள் `இன்று' தெளிவாய் உணர்ந்திடத் தவறிவிட்டார்கள். `அன்று' உலக அரங்கில் அந்திக்கிறிஸ்து தன்னுடைய மாயமான அடையாளங்களோடும் அற்புதங்களோடும் வந்து அமரும் வேளையில். . . . இந்த கிறிஸ்தவர்கள் "அவனை " குருட்டுத்தனமாய் ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை! மேற்கண்ட 10 -- அம்சங்களுக்குரிய வஞ்சக ஆவிக்கு, நேர்-எதிரிடையான ஆவி உடையவர்களாய் இருப்பதே "கிறிஸ்துவின் ஆவியினால்" நடத்தப்படும் பாக்கியமாகும்!
மத்தேயு 5 முதல் 7- அதிகாரங்களின் சுருக்கமான செய்தியை, மத்தேயு 7:13-27 வசனங்களில் இயேசு விளக்கிய சாராம்சங்களில் வாசித்துப் பாருங்கள் :
"இதுவரை நான் உங்களுக்குப் போதித்த (மத்தேயு 5 முதல் 7 அதிகாரங்கள்) சத்தியங்களில் "நித்திய ஜீவனுக்குள்" உங்களை நடத்தும் வாசலும், வழியும் குறுகலானதேயாகும்! ஆனால் கள்ளத்தீர்க்கதரிசிகள் உங்களிடத்தில் வந்து "வாசலும் வழியும், அப்படியொன்றும் குறுகலானவைகள் அல்ல!" . . . மாறாக, அவைகள் மிக எளிதும் விசாலமுமானதே! என உங்களுக்கு கூறுவார்கள்!! இவர்களின் குணாதிசயங்களை வைத்து "மிக எளிதில்" இவர்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளலாம்: கோபத்திலிருந்து விடுதலையான ஜீவியத்தில் இவர்கள் வாழ்கிறார்களா? ஸ்திரீகளை இச்சிப்பதிலிருந்து இவர்கள் விடுதலை பெற்றிருக்கிறார்களா? பண ஆசையிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார்களா? உலக ஜனங்கள் நாடித் தேடுவதைப் போலவே, உலக சம்பத்துக்களை நாடித்தேடும் பேரார்வத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார்களா? உங்களுக்கு நான் மத்தேயு 5:21-32 மற்றும் மத்தேயு 6:24-34 - வசனங்களில் "எதிர்த்து நின்று" பிரசங்கித்தவைகளை, இவர்களும் பிரசங்கிக்கிறார்களா? இந்த கள்ளத்தீர்க்கதரிசிகள் என் நாமத்தை உபயோகித்து அற்புதங்களும், சுகமாக்குதலுமாகிய இயற்கைக்கு அப்பாற்பட்ட வரங்களை நடப்பிக்கவும் செய்வார்கள்! ஆனால், இவர்கள் என்னைப் "பரிசுத்தராய்" அறியாதபடியாலும், தங்கள் அந்தரங்க ஜீவியத்திலுள்ள பாவங்களை விட்டு விலகாததினாலும் (மத்தேயு 7:21-23) நான் அவர்கள் அனைவரையும் கடைசிநாளில் நரகத்திற்கே அனுப்புவேன்!! ஆகவே, காலப்போக்கில் நித்தியமும் அசைந்திடாத அல்லது வீழ்ந்திடாத ஒரு சபையை நீ கற்பாறையின் மேல் கட்ட விரும்பினால், நான் உனக்கு மத்தேயு 5 முதல் 7- அதிகாரங்களில் போதித்த அனைத்தையும் கைக்கொள்வதற்கு மிகுந்த கவனம் கொள்வாயாக! நான் உனக்குக் கட்டளையிட்ட இவைகள் அனைத்தையும் உன்னுடைய ஜனங்களும் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு நீ போதிப்பாயாக!! அப்படி நீ செய்தால், நான் உன்னோடு சதாகாலமும் இருப்பேன். . . என்னுடைய அதிகாரம் உன்னை எப்போதும் தாங்கி நடத்தும்! (மத்தேயு 28:20, 18). ஆனால் நீயோ, நான் கூறியவைகளை கேட்க மாத்திரமே செய்து, அதன்படி செய்யாதிருந்தால், நீ கட்டியவைகள் மனுஷர்களைக் கவர்ச்சிக்கக்கூடிய மிகப் பெரிய சபையாய் காணப்பட்டாலும், அவை ஒருநாளில் "மட . . . மட" என சரிந்து வீழ்ச்சியடையும் என்பது உறுதி!" (மத்தேயு 7:25) என இயேசு கூறினார்.
அப்படியானால், இந்த கடைசி நாட்களில், "அசைவில்லாத ஓர் சபையை" நாம் கட்டுவது எப்படி?
1. மத்தேயு 5 முதல் 7- அதிகாரங்களின் "மலைப்பிரசங்க சத்தியங்களை" நாம் வாழ்ந்து, அதை இடைவிடாது பிரசங்கித்துக் கொண்டே இருத்தல் வேண்டும்!
2. பழைய உடன்படிக்கையின்படி வாழாமல், புதிய உடன்படிக்கையின்படி நாம் ஜீவித்திட வேண்டும்! அதற்கு,
இந்த இரண்டு உடன்படிக்கைக்குரிய வித்தியாசங்களை நாம் தெளிவாக அறியதிருக்க வேண்டும்! (2 கொரிந்தியர் 3:6). புதிய உடன்படிக்கையின் தரத்தை நாம் பிரசங்கித்திடவும் வேண்டும்!!
இன்று, பிரசங்கிகள் அருவருப்பான பாவங்களில் வீழ்ச்சியடையும் போது "பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் பாவத்தில் வீழ்ந்தார்கள்" என அவர்களின் மாதிரியை காண்பித்து தங்களை நியாயப்படுத்தவும், ஆறுதலான சுகம் காணவும் முயற்சிக்கிறார்கள்! "கொஞ்சகால மௌனத்திற்குப் பிறகு" மீண்டும் தங்கள் ஊழியத்தை இவர்கள் துவக்கிவிடுகிறார்கள்! "தாவீது விபச்சாரம் செய்யவில்லையா?" "எலியா மனசோர்வு அடையவில்லையா?" என கோடிட்டு கூறி தேவன் தொடர்ந்து அவர்களை உபயோகித்தாரே!" எனவும் எகத்தாளம் செய்கிறார்கள்! ஆனால், தன் ஜீவகாலமெல்லாம் பரிசுத்தத்திலும், ஜெயத்திலும் ஜீவித்து "மரணபரியயதமும்" உண்மையாய் இருந்த பவுலை இவர்கள் கோடிட்டுக் காட்டுவதே இல்லை!!
இந்தப் பிரசங்கிகளும், இன்னும் ஏராளமான கிறிஸ்தவர்களும் காணத் தவறியது என்ன தெரியுமா? "பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் இன்று நமக்கு மாதிரிகள் அல்ல!" என்பதையே காணத் தவறிவிட்டார்கள்! இந்த கிருபையின் நாட்களில், நமக்கு அதிகமாய் ஒப்புவிக்கப் பட்டிருக்கிறதே! "எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கப்பட்டதோ, அவனிடத்தில் அதிகமாய் கேட்கப்படும்" அல்லவோ! (லூக்கா 12:48). இயேசுவே, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தர்! அவரே நமது மாதிரி! நமது விசுவாசத்தைத் துவக்குகிறவரும், முடிக்கிறவரும் அவரே! மாறாக, தாவீதோ. . . அல்லது, எலியாவோ நமது மாதிரிகள் அல்லவே அல்ல!! எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கும், இயேசுவுக்கும் உள்ள வித்தியாசம் எபிரெயர் 12:1-4 வசனங்களில் மிகத் தெளிவாய் நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது! இருப்பினும், "வெகு சிலரே" இந்த அற்புத வாழ்க்கையை நடைமுறையில் வாழ்கிறார்கள்! ஆம், எபிரெயர் 11:40 கூறுகிறபடி, புதிய உடன்படிக்கையில் "தேவன் நமக்கென்று வைத்திருக்கும் விசேஷித்த நன்மையை" வெகு சிலரே கண்டிருக்கிறார்கள்!!
சாத்தான் மிகவும் தந்திரசாலியானபடியால், நாம் மிகுந்த கவனமும், விழிப்பும் இல்லாமலிருயதால், அநேக பிரசங்கிகள் வீழ்ச்சியடைந்த அதே பாதையில், நம்மில் யாராயிருந்தாலும் வீழ்ச்சியடைந்திட முடியும்! இந்நிலையில் நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி? ஆம், புதிய ஏற்பாட்டின் போதகங்களுக்கு அடிப்பிறளாமல் நாம் கீழ்ப்படிவதிலும், தேவபக்தி நிறைந்த தலைமைக்கு அடங்கி யிருப்பதிலுமே நமது பாதுகாப்பு இருக்கிறது!! ("தேவபக்தி நிறைந்த தலைமை" யாராயிருக்கக் கூடும்? ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டுள்ள 10- வீழ்ச்சியின் அம்சங்களில் "ஒன்று கூட" இல்லாதவர்களே அந்த தலைமைக்கு உரியவர்களாய் இருந்திட முடியும்!). நம்மைச் சூழ, பிறருடைய தவறுகளை நாம் காண்கிறோமே, அவைகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்பவர்களாய் இருந்தால், அந்த தவறுகளை நாமும் செய்திடாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்!
ஆகவே, ஆண்டவருக்கு முன்பாக நமது முகங்களைப் புழுதியில் எப்போதும் வீழ்த்தியிருக்கக்கடவோமாக! ஆந்த பாதபடியில்தான், யோவான் அப்போஸ்தலர் வெளிப்பாடு பெற்றார்! நாமும் திவ்விய வெளிப்பாடு அந்தப் பாதபடியில்தான் பெற்றிட முடியும்! (வெளி.1:17). மெய்யாகவே, நம்மை நாமே இவ்வாறு தாழ்த்திவிட்டால், நாம் ஜெயங்கொண்டு வாழ்ந்திட கிருபையைப் பெற்றிட முடியும் (1 பேதுரு 5:5). ஆம், தேவனுடைய வார்த்தையில் பரிசுத்த ஆவியானவர் நமக்கு சத்தியத்தை காண்பிக்கும் போதும்! பரிசுத்த ஆவியானவர் பேசிடும் நம்மைப் பற்றிய சத்தியத்தை (உண்மையை) கேட்கும்போதும்! "நாம் இரட்சிக்கப்படும்படி, சத்தியத்தில் அன்புகூர்யந்து முற்றிலும் நேர்மையாய் இருந்திடக்கடவோம்! அப்போது மாத்திரமே, நம்மைச் சூழ நெருங்கிவரும் கொடிய வஞ்சகத்திலிருந்து தேவனே நம்மை விடுவித்துக் காப்பார்!!" (2 தெச. 2:10,11). ஆமென்.