வேதாகமத்தில், மனிதர்கள் "ஆடுகளுக்கு" ஒப்பிடப்பட்டுள்ளனர்! ஆடுகள், ஒரு கூட்டத்தை எக்கேள்வியும் கேட்காமல் குருட்டுத்தனமாய் பின்பற்றும் தன்மையுடையது! ஆனால் இயேசுவோ, ஒவ்வொரு காரியத்தையும் தேவவசனத்தோடு ஒப்பிட்டு சோதித்துப்பார்க்கும்படி நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். மனுஷீகப் பாரம்பரியங்களையே எப்போதும் கனப்படுத்தி உயர்த்திப்போற்றியவர்கள் பரிசேயர்கள்! தேவ வசனத்தை எப்போதும் கனப்படுத்தி உயர்த்தியவர் நம் இயேசு! ஆம், மனுஷன் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் (மத் 4:4). தேவ வசனமா? அல்லது மனுஷீகப் பாரம்பரியமா? என்பதே இயேசு பரிசேயர்களோடு தொடர்ச்சியாய்ப் போராடி, அது இப்பவும் தொடர்ந்து வரும் யுத்தமாகும்.
இன்று, இதே யுத்தத்தையே சபையில் நாம் மேற்கொண்டுள்ளோம். நாம் இப்பூமியில் பெற்றிருக்கும் "ஒரே வெளிச்சம்" தேவ வசனம் மாத்திரமே. ஆதியில் தேவன் வெளிச்சத்தை சிருஷ்டித்த போது, அதை உடனடியாக இருளிலிருந்து பிரித்து எடுத்தார். ‘பாவமும்’ ‘மனுஷீக மூடப்பாரம்பரியங்களுமே’ அந்த இருள்! சபையில் எந்த ‘கலப்பும்’ ஏற்ப்பட்டுவிடாதபடி, இந்த இரண்டையும் களங்கமற்ற தேவ வசனத்திலிருந்து பிரித்து எறிவதற்காகவும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
கிறிஸ்துமஸ்:
முதலாவது, கிறிஸ்துமஸைப்பற்றிப் பார்ப்போம். இன்று அனேகரால், ‘கிறிஸ்துமஸ்’ இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது! எல்லா மதத்தை சேர்ந்த வியாபாரிகளும் ‘கிறிஸ்துமஸை’ ஆவலுடன் எதிர் நோக்குகிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்கள் கொள்ளை லாபம் அடிக்கும் சீஸன்! இது ஓர் வியாபாரப் பண்டிகைதானே! நிச்சயமாக ஆவிக்குரியது அல்லவே! பாருங்கள், கிறிஸ்துமஸ் கார்டுகளுக்காவும், கிறிஸ்துமஸ் அன்பளிப்பிற்காகவும் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடப்படுகின்றதே. அந்நாட்களில், மதுபான சாராயக்கடைகளின் வியாபாரமும் உச்சகட்டத்தை எட்டுகின்றது. எனவே, மற்ற நாட்களை விட, கிறிஸ்துமஸ் சீஸனில்தான் சாலை விபத்துகள் ஏராளம். ஆதலால், போக்குவரத்து போலீசார்களும் இந்த சீசனில்தான் அதிகமாய் உஷார் செய்யப்படுகிறார்கள். ஓர் வருடத்தில், கிறிஸ்துமஸ் சீசனில்தான் அனேகம் பேர் சாலை விபத்துகளின் மூலம் ‘நரகம்’ செல்கின்றனர்!
இந்த கிறிஸ்துமஸ், உண்மையாக தேவகுமாரனுடைய பிறந்த நாள்தானா? அல்லது ‘வேறொரு இயேசுவின்’ பிறந்த நாளா?!
1. தேவ வசன ஆதாரத்தின்படி, இயேசுவின் பிறந்தநாள் தேதியை தேவனே மறைத்துவைத்துவிட்டார். ஏனென்றால், இப்பிறந்தநாளைத் தன்சபை கொண்டாடுவதை தேவன் விரும்பவேயில்லை என்ற உண்மை புலானாகிறது!
முதலாவது, நாம் தேவ வசனத்தையே உற்று நோக்குவோம். பெத்லகேமில் இயேசு பிறந்த அந்த இராத்திரியில், யூதேயாவின் வயல்வெளிகளில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தையைக் காத்து கொண்டிருந்தார்கள் என வேதம் கூறுகிறது. பாலஸ்தீனாவில் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு பெப்ரவரி மாதம்வரை கடும்குளிரும், மழையும் நிறைந்த காலமாகும். எனவே, பாலஸ்தீனாவின் மேய்ப்பர்கள் இக்காலங்களில் தங்கள் மத்தையை திறந்த வயல்வெளிகளில் தங்க வைக்கவே மாட்டார்கள். இக் குறிப்பின்படி, உண்மை இயேசு மார்ச் மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையில்தான் நிச்சயமாகப் பிறந்திருக்க கூடும். அப்படியானால் டிசம்பர் 25? ஆம், அது நிச்சயமாய் வேறொரு இயேசுவின் பிறந்தநாள்தான்! எவ்வளவு தந்திரமாய், சாத்தான் இந்த ‘ஆராய்ந்து பாரா’ கிறிஸ்துவ உலகத்தை வஞ்சித்திருக்கிறான் பார்த்தீர்களா?
மேலும், அப்படியே நாம் இயேசுவின் சரியான பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என தேவன் விரும்புகிறாரா என்பது ஓர் கேள்விக்குறியே! இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு, இயேசுவின் பிறந்தநாள் தேதி நிச்சயமாகத் தெரிந்திருக்கும். இந்த மரியாள், பெந்தேகொஸ்தே நாளுக்குப் பிறகு அப்போஸ்தலர்களோடு அனேக ஆண்டுகள் உடன் இருந்தார்கள். அப்படியிருந்தும், ஒரு சுவிஷேத்தில் கூட இயேசுவின் பிறந்தநாள் தேதி குறிக்கப்படவே இல்லை. இது எதைக் காட்டுகிறது? கவனியுங்கள்... இயேசுவின் பிறந்தநாள் தேதியை தேவனே பகிரங்கமாய் மறைத்து வைத்துவிட்டார். ஏனென்றால், இப் பிறந்தநாளைத் தன்சபைக் கொண்டாடுவதை தேவன் விரும்பவேயில்லை.
இம் மண்ணுக்குரிய இராஜாக்களாகிய துன்மார்க்கம் நிறைந்த பார்வோனும், ஏரோதுமே தங்கள் பிறந்தநாளை கொண்டாடினார்கள் (ஆதி 40:20), மாற்கு 6:21) என வேதாகமம் கூறுகிறது. இவர்களின் வரிசையில் இயேசுவையும் வைக்கத் தேவன் விரும்பவேயில்லை!
விசேஷித்த பரிசுத்த நாட்களைத் தன் பிள்ளைகள் கொண்டாடுவதை இப்போது தேவன் ஏன் விரும்பவில்லை? என்ற கேள்விக்குப் பதிலை நாம் பழைய-புதிய உடன்படிக்கைகளுக்கு இடையில் காணும் வித்தியாசத்தை சரியாகப் புரிந்து கொள்வதின் மூலம் தெளிவாய் அறிந்து கொள்ளலாம். பழைய உடன்படிக்கையில், குறிப்பிட்ட சில நாட்களை பரிசுத்த நாளாக ஆசரிக்கும்படி இஸ்ரவேலர்கள் கட்டளையிடப்பட்டிருந்தனர். ஆனால், அவைகள் வெறும் நிழல் மாத்திரமே இப்போதோ, நாம் கிறிஸ்துவுக்குள் உண்மைப் பொருளைப் பெற்றிருக்கிறோம். இப்போது- நம் ஜீவியத்தின் ஒவ்வொரு நாளும் பரிசுத்தமாய் இருக்கவேண்டும் என்பதே தேவசித்தம் என்பதை கிறிஸ்துவுக்குள் அறிகிறோம். இப் புதிய உடன்படிக்கையின் கீழ், வாரத்தின் பரிசுத்த ஓய்வு நாள் கூட (Sabbath) ஒழிந்துப்போய்விட்டது. எனவேதான், புதிய உடன்படிக்கையில், இயேசுவோ அல்லது அப்போஸ்தலர்களாலோ ‘பரிசுத்த நாள்’ என ஒன்றைகூட குறிப்பிடப்படவே இல்லை.
பின் எப்படி இந்த கிறிஸ்துமசும், ஈஸ்டரும் கிறிஸ்துவத்திற்குள் நுழைந்தது? குழந்தை ஞானஸ்நானமும்; குருவானவரை அல்லது பாஸ்டரை உற்பத்தி செய்யும் வஞ்சகமும் மற்றும் திரளான மனுஷீக மூடப்பாரம்பரியகளும் சாத்தானின் தந்திரத்தால் எவ்வழியாய் நுழைந்ததோ- அதே வழியில்தான் இக் கிறிஸ்துமசும், ஈஸ்டரும் நுழைந்துவிட்டது!!
2. சரித்திர குறிப்பின்படி, டிசம்பர் 25-ம் தேதி சூரிய பகவானின் பிறந்தநாள்! இதை உற்று நோக்கும் போது, இத்தேதி, பாபிலோனின் "செராமிஸ்" கற்பு ஒழுக்கக்கேட்டில் பெற்ற நிம்ரோத்தின் (இறந்த தன் கணவனின்) பிறந்தநாள். அன்று தொடங்கிய "அன்னை-சுதன்" ஆராதனை இன்று கிறிஸ்துமஸ் பெயரால் தொடர்கிறது!
நான்காம் நூற்றாண்டில், கான்ஸ்டன்டைன் பேரரசன் கிறிஸ்தவத்தை ரோமாபுரியின் மதமாக அறிவித்தான். அப்போது, திரளான ஜனங்கள் தங்கள் இருதயத்தில் எந்த மாறுதலும் இல்லாமல், "பெயர் அளவில்" கிறிஸ்தவர்களாக மாறினார்கள். அப்படியே மாறினாலும், அவர்கள் வணங்கி வந்த சூரிய பகவானின் இரு பெரும் பண்டிகைகளை விட்டுவிடுவதற்கு சிறிதும் ஆயத்தமாயில்லை.
இந்த இரு பண்டிகைகள் ஆவன: 1. சூரிய பகவான் பிறந்தநாளான டிசம்பர் 25-ம் தேதி. இந்நாளில்தான் தென் கோளத்தில் வீழ்ந்த சூரியன் மீண்டும் தன் பயணத்தை முந்தைய தன் இடத்திற்கு திருப்பும் நாள். 2. மார்ச்-ஏப்ரலில் கொண்டாடும் வசந்த கால பண்டிகை. அதாவது, குளிர்காலம் மரித்து, தங்கள் சூரிய பகவானால் கதகதப்பான கோடை காலம் தோன்றும் நாள். இவர்கள் தங்கள் சூரிய பகவானிற்கு ‘இயேசு’ என்று மாற்றுப் பெயர் சூட்டி, தங்களின் இருபெரும் பண்டிகைகளில் ஒன்றை கிறிஸ்துமஸாகவும்; இன்னொன்றை ஈஸ்டராகவும் மாற்றி அவைகளைக் கிறிஸ்தவப் பண்டிகைகளாகத் தொடர்ந்து கொண்டாடிவிட்டனர்!
அதிகாரபூர்வமான சரித்திர குறிப்பேடான ‘என்சைக்ளோப் பீடியா பிரிட்டானிகா’, கிறிஸ்துமஸின் தோற்றத்தை கீழ்காணும் விதமாய் குறிப்பிடுகின்றது: டிசம்பர் 25- ம் தேதியானது, ‘பிலோகாலசின்’ தோல்வியுறா சூரியனின் ‘புராண விருந்தின்’ (Mithraica Feast) நாளாகும். கிறிஸ்துமஸ் கால பழக்கங்களின் தோற்றமானது, கிறிஸ்துவ காலங்களுக்கு முன்பே இருந்த புராணங்களாலும், சடங்காச்சாரத்தாலும் ஜோடிக்கப்பட்டு சீஸன், புறஜாதியாரின் மார்க்கம் மற்றும் தேசிய பழக்கங்களிலிருந்து தொன்று தொட்டு வழிவந்ததாகும். கிறிஸ்து பிறந்த சரியான வருடமும்; தேதியும் திருப்திகரமான முறையில் ஒருபோதும் ஒழுங்கு செய்யப்படவே முடியவில்லை. ஆனால், கி.பி 440-ம் ஆண்டிலிருந்த சர்ச் பாதிரியார்கள், கிறிஸ்து பிறந்த நிகழ்ச்சியை கொண்டாடும் பொருட்டு ஓர் தேதியை நிர்ணயம் செய்தார்கள். எப்படி? அவர்கள் ‘மகா புத்தி கூர்மையாய்’ மக்கள் தொன்றுதொட்டு கொண்டாடி அவர்கள் மனதில் நிலைத்துவிட்ட நாளான "சூரிய பகவான் பிறந்தநாளை கிறிஸ்து பிறந்த நாளாக முன்குறித்தனர். உலகெங்கும் உள்ள புறஜாதியினர் தேசத்தில் கிறிஸ்தவம் பரவ ஆரம்பித்த பின்பு, இந்த ‘சூரிய பகவான் பிறந்தநாள் கொண்டாட்ட வழக்கங்கள்’ கிறிஸ்தவத்தோடு கைகோர்த்து இணைந்துவிட்டது (1953-ம் வருட பதிப்பு. பாகம் - 5. பக்கம் 642A - 643).
இந்த அஞ்ஞானத்தின் பழக்கங்கள், நிம்ரோத்தினால் தொடங்கப்பட்ட பாபிலோன் மார்க்கத்திலிருந்து உருவானது ஆகும் (ஆதி 10:8-10). அவன் இறந்த பின்பு, அவன் மனைவி செமிராமிஸ் தன் கற்பு ஒழுக்கக்கேட்டின் விளைவாய் ஒரு பிள்ளையைப் பெற்றாள். அப்பிள்ளையை, நிம்ரோத் மறுபடியும் உயிர்பெற்று பிறந்திருக்கிறான் என அறிவித்தாள்! இவ்வாறுதான், அன்னை - சுதன் (MOTHER AND CHILD) என்ற ஆராதனைவணக்கம் பாபிலோனில் ஆரம்பித்தது! அதே ஆராதனையைதான், 2000 - வருடங்களுக்குப் பின்பு ரோமன் கத்தோலிக்கர்கள் "மரியாள் - இயேசு" என மாற்றி வைத்துக் கொண்டார்கள். புராட்டஸ்டண்டுகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல! அவர்கள் கிறிஸ்துமஸ் காலங்களில் பாடும், "ஸைலண்ட் நைட்! ஹோலி நைட்! (Silent Night Song) போன்ற பாடல்களில் இதே ‘அன்னை - சுதன்’ வணக்கத்தையேப் பாடுகிறார்கள்! இப்பாபிலோனின் மார்க்கம் இவ்வையகத்தில் எவ்வளவாய்ப் பற்றிப் படர்ந்து விட்டது பாருங்கள்! இந்த ‘பாலகன் - கடவுளின்’ பிறந்தநாளும், ஆதி பாபிலோனியர்களால் டிசம்பர் - 25- ம் தேதிதான் கொண்டாடப்பட்டது!
3. "கிறிஸ்துமஸ் மரம்" ஓர் ஒழுக்க சீர்கேட்டின் அஞ்ஞானம்!
இந்த ‘செராமிஸ்’ தான் வானக தேவதையாக (வானராக்கினி எரேமி 44:19) மாறி பல நூற்றாண்டுகளுக்கு பின்பு எபேசியர்களால், ‘தியானாள்’ அல்லது ‘அர்டமிஸ்’ஸாக (அப் 19:28) ஆராதிக்கப்பட்டாள். இந்த செராமிஸ், "நிம்ரோத் மறுபடியும் உயிபெற்று மனுகுலத்திற்கு வானகப் பரிசுகளைக் கொண்டு வந்திருக்கிறான்" எனபதைச் சுட்டிகாட்டுவதற்கு அடையாளமாக, "மரித்து விழுந்த ஓர் மரத்தின் அடிப்பாகத்திலிருந்து ஒரே இரவில் எக்காலமும் ப்சுமையாய் இருக்கும் ஓர் முழுமரம் வளர்ந்துவிட்டது" என அறிவித்தாள். அப்போதிருந்துதான், ஓர் ஊசி இலை மரத்தை வெட்டி, அதில் பரிசுப்பொருட்களை தொங்கவிடும் பழக்கம் ஆரம்பித்தது. ஆம், அதுதான் இன்று கிறிஸ்துமஸ் மரம்!
கர்த்தர் சொல்லுகிறார், "புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுகொள்ளாதிருங்கள்...... ஜனங்களின் வழிபாடுகள் வீணாய் இருக்கிறது. காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்.... வெள்ளியினாலும், பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு ஆணிகளாலும், சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள்!! (எரே 10:2-4)".
ஈஸ்டர்!
‘ஈஸ்டர்’ என்ற வார்த்தையானது, வானக தேவதையின் பட்டங்களில் ஒன்றான, ‘இஸ்தர்’ ‘அஸ்தரோத்’ என்ற பெயரிலிருந்து உருவானதொன்றாகும். 1 இராஜாக்கள் 11:5- ம் வசனத்தின்படி, இது சாலமோன் ஆராதித்து வந்த ஓர் விக்கிரகமாகும். இந்தப் பெயரானது, பலதரப்பட்ட தேசங்களில் கொஞ்சம், கொஞ்சமாக மாற்றியமைத்துக் கூறப்படுகிறது.
1.சரித்திர குறிப்பின்படி, ‘ஈஸ்டர்’ - ‘யூஸ்தர்’ என்ற வசந்தத்தின் தேவதை! குளிர்காலம் மரித்து சூரியமுகம் தோன்றும் பெருமகிழ்ச்சிப் பண்டிகை! இதுவே, இன்று கிறிஸ்தவர்களுக்கு ‘மரித்து உயிர்த்த கிறிஸ்துவின்’ பண்டிகை!!!
‘என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிகா’ (Encyclopedia Britannica) இவ்வாறு கூறுகின்றது: ‘ஈஸ்டர்’ என்ற ஆங்கில வார்த்தையானது, ‘ஜெர்மானிய ஆஸ்டர்’ -ஐ வைத்து வந்ததொன்றாகும். இதன் பொருட்டு, மத்திய ஐரோப்பாவின் டியூடானிக் ஜாதியாருக்கு, கிறிஸ்தவ மார்க்கமானது அதிகமாய் கடமைப்பட்டுள்ளது (!!). கிறிஸ்தவ மார்க்கமானது, டியூட்டானுக்குச் சென்றபோது, அவர்கள் கொண்டாடிய ‘வசந்தகால பண்டிகையின்’ புறஜாதி சாஸ்திரங்களும்; பழக்கங்களும் இந்த ஈஸ்டர் என்ற மகா கொண்டாட்டமான கிறிஸ்தவப் பண்டிகையோடு கைகோர்த்து இணைந்துவிட்டது, ‘உயித்தெழுதலின்’ பண்டிகை இவ்வசந்த காலத்தில்தான் நிர்ணயிக்கப்பட்டது. எப்படியெனில், குளிர்காலம் மரித்து - சூரியமுகம் தோன்றி புதியவருடம் ஆரம்பிப்பதை கனப்படுத்தும் பொருட்டு டியூட்டானில் கொண்டாடப்படும் பெருமகிழ்ச்சி பண்டிகையோடு, மரணத்தை வென்று ஜெயித்தெழுந்த வாழ்க்கையைக் கொண்டாடும் பண்டிகையை நிர்ணயம் செய்வது ‘தேவாலயத்தாருக்கு’ மிக எளிதாகிவிட்டது. ‘யூஸ்தர்’ அல்லது ‘அஸ்தரா’ என்ற வசந்தத்தின் தேவதைதான், கிறிஸ்தவர்களின் பரிசுத்தநாளுக்குப் பெயர்தானம் செய்துள்ளது. முட்டையை, ஓர் செழிப்பின் அடையாளமாகவும், மலர்ச்சியடையும் வாழ்வுக்கு அடையாளமாகவும் கொள்ளும் பழக்கம் பண்டைய எகிப்திய மற்றும் பெர்சியர்களின் வழிவந்ததாகும். இவர்களும், தங்கள் வசந்தகாலப் பண்டிகையின்போது, முட்டைகளுக்கு வர்ணம் தீட்டி அதைத் தின்னும் சடங்காச்சாரத்தை வைத்திருந்தார்கள். இவ்வாறு, முட்டையை ஓர் உயிர் வாழ்வுக்கு அடையாளமாகவும் கொள்ளும் இப்பழக்கம் பண்டைகால ‘ஐடியா’ தயக்கம் ஏதுமில்லாமல் இதே முட்டையானது உயிர்த்தெழுதலின் ஆதிகால மூட நம்பிக்கையின் வழியாகத்தான், ஈஸ்டரின் காலை நேரத்தில் சூரியன் பரலோகத்தில் நடனம் செய்வதாக வைத்துக் கொண்டனர். இந்த நம்பிக்கையை கைகொண்டுதான், புறஜாதியாரின் வசந்தகாலப் பண்டிகையின்போது, சூரியனுக்கு வணக்கம் செய்வதற்காக கூடியிருப்போரும் சேர்ந்து நடனம் ஆடுவார்கள்.... இந்த அடிச்சுவட்டைப் பின்பற்றியே புராட்டஸ்டண்டு சபையார்கள், ஈஸ்டர் காலையன்று ‘சூரியோதய ஆராதனைகள்’ (Sun Rise Services) நடத்தும் பழக்கத்தைக் கைகொண்டார்கள் (1959- ம் ஆண்டு பதிப்பு, பாகம் - 7, பக்கங்கள் - 859,860).
2. ஈஸ்டர் முட்டையின் அஞ்ஞானம் பாரீர்:
ஓர் பெரிய முட்டை, பரலோகத்திலிருந்து யூப்ரடீஸின் நதியில் விழுந்து அதிலிருந்துதான் தங்களின் ‘அஸ்தார்த்’ வெளிவந்தாள் என பாபிலோனியர்கள் விசுவாசித்தார்கள். இவ்வாறாகத்தான், வசந்தகாலப் பண்டிகையில் சூரிய வணக்கத்தை செய்யும் பொருளாக, முட்டைகளைப் பரிமாறி கொள்ளுவது ஆரம்பமானது. 4 - ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், இப் பழக்கத்தையும் வாரி கட்டிக்கொண்டார்கள். அதன்படி, ஈஸ்டர் கொண்டாடும் பொழுது, ‘ஈஸ்டர் முட்டைகளை’ வைத்துக்கொள்ளும் பழக்கம் இன்றுவரை தொடர்ந்து வந்துள்ளது. ஆம்! கிறிஸ்து, ‘முட்டையிலிருந்து கோழிகுஞ்சு வெளிவருவது போல’ கல்லறையிலிருந்து வெளிவந்தார் என அறிவிக்கும் ஈஸ்டர் முட்டை! சரியான பைத்தியக்காரத்தனம்!
3. புனிதவெள்ளியின் "ஹாட் கிராஸ்-பன்" அஞ்ஞானம் கேளீர்:
கிறிஸ்துவுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, ‘பவுன்ஸ்’ என அழைக்கப்படும் புண்ணிய அப்ப கேக்குகள் வானக தேவதைக்கு காணிக்கையாகப் புறஜாதியாரால் படைக்கப்பட்டது (எரே 7:18). இந்த கிறிஸ்தவம் இதையும் விட்டாவைத்தது? இந்த அஞ்ஞானிகளின் ‘பவுன்ஸ்’ அப்பம், புனிதவெள்ளியின் ‘ஹாட்-கிராஸ் பன்னாக’ (HOT-CROSS BUNS) உருப்பெற்றுவிட்டது!
கிறிஸ்துவின் மரணமும், அவர் உயிர்த்தெழுதலும்தான் சுவிசேஷத்தின் மையமான செய்தி. இதை நாம் நினைவுக் கூறுவதற்காகவே இயேசு சபையாக கூடிவரும்போது, சீஷர்கள் மாத்திரமே பங்கு பெரும்படியான, ‘அப்பம் பிட்குதலை’ வழிவகுத்துத் தந்தார். இது நிச்சயமாக, ஏதோ வருஷத்திற்கு ஒருமுறையாக புனித வெள்ளியன்றோ அல்லது ஈஸ்டரன்றோ கைக்கொள்வது அல்ல! நிச்சயமாய், முட்டைகளாலோ, பன்களாலோ அனுசரிப்பது அல்ல!
நாம் அப்பம் பிட்கும்போது, கிறிஸ்துவின் மரணத்தை மாத்திரமல்ல, நாம் அவரோடு மரித்ததையும்; அவரோடு சிலுவையில் அறையப்பட்டதையும் சாட்சி பகருகின்றோம். இவ்வாறு இயேசுவைப் பின்பற்றுவதற்கு உள்ள இந்த பிரதான அவசியத்தை மனிதர்கள் காணவேண்டிய கவனத்தை, புனித வெள்ளியின் உணர்ச்சிப் பெருக்கமும்- ஈஸ்டரின் மூட உணர்வுகளும் திசை திருப்பி, வீணான சடங்காசாரத்திற்குள் நடத்திவிட்டது!
தேவனுடைய வார்த்தையா? அல்லது மனுஷீக மூடப்பாரம்பரியமா?
இந்தக் கிறிஸ்துமஸ்-ஈஸ்டர் கொண்டாட்டங்களின் திரைக்குப்பின்னால், தேவவசனத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும், மனுஷீக மூடப்பாரம்பரியங்களை கண்மூடியாய் பின்பற்றும் ‘மரணத்துக்கேதுவான’ கொடுமையின் சித்தாந்தம் அடங்கியுள்ளது. இப் பாரம்பரியங்களின் வலிமை எப்படிப்பட்டது தெரியுமா? வசனத்தை மற்ற பகுதிகளில் பின்பற்றும் விசுவாசிகள் கூட, இந்த கிறிஸ்துமஸ்-ஈஸ்டர் கொண்டாட்டங்களை இன்னமும் விட்டுவிடுவதற்கு முடியாமல் தவிக்கச செய்யும் வலிமை கொண்டது!
கிறிஸ்துமஸ், ஈஸ்டரும் அடிப்படை பூர்வமாக அஞ்ஞானிகளின் பண்டிகைகளே என ‘என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிகா’ போன்ற சரித்திர ஆசிரியர்கள் கூட தெளிவாய்ப் புரிந்து கொண்டதை, அனேக விசுவாசிகள் ஏற்றுக்கொள்ளுவதற்கு ஆயத்தமாயில்லை என்பது ஓர் வியக்கத்தகு விந்தையேயாகும்! ஓர் கழுதையை நீங்கள் சிங்கம் என அழைத்தாலும், கழுதை கழுதைதான்! அதுப்போலவே, பண்டிகையின் பெயரை மாற்றிவிட்டதால் அப்பண்டிகைகள் கிறிஸ்தவமாக மாறிவிட முடியவேமுடியாது! கிறிஸ்துமஸ்-ஈஸ்டருக்கும், வினாயக சதுர்த்திக்கும், ஆயுத பூஜாவுக்கும், தீபாவளிக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை!
நாம் கண்ட சத்தியத்தின்படி, கிறிஸ்துமஸ் நாளில் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் பிறந்தநாள் வேறொரு இயேசுவாகிய - பாபிலோனின் நிம்ரோத்தின் பிறந்தநாள்தான் என்பது மிகத்தெளிவு! அதுப்போலவே, ஈஸ்டர் அன்று கொண்டாடும் ‘உயித்தெழுதல்’ வேறொரு இயேசுவாகிய - வடகோளத்தில் உஷ்ணகாலத்தை உதிக்கச்செய்த சூரியபகவானின் ‘உயிர்தெழுதலே’ ஆகும்! இந்த நிம்ரோத்திற்கும் - சூரியபகவானுக்கும் பின்னால் உண்மையாய் ‘சாத்தானே’ நின்று உங்கள் ஆராதனை வழிப்பட்டை ஏற்றுகொள்கிறான்! ஆம்!
இஸ்ரவேலர்கள் தங்களின் பொன் கன்றுக்குட்டியை ‘யெகோவா’ என்றே அழைத்தனர். ஆனால், உண்மையாய் அவர்களின் ஆராதனையை ஏற்றுக்கொண்டவன் சாத்தானே! (யாத் 32:4,5). கிறிஸ்துமஸ், ஈஸ்டர் கொண்டாடுபவர்கள் இதையே நினைவிற்கொள்ளட்டும், எச்சரிக்கை!!
கிறிஸ்தவ உலகில், சாத்தான் புகுத்திவிட்ட முட்டாள்தனமான பாபிலோனிய கொண்டாட்டங்களை உரித்து வெளிஅரங்கமாக்குவதும், தேவ வசனத்தின் ஆதாரமில்லாத (அவை தீங்கில்லாதது போல காட்சியளித்தாலும்) யாதொன்றையும் மறுத்துத்தள்ளுவதும், இன்றைய சபையின் அழைப்பாகும்!
சிலர், "நாட்களை விசேஷித்துக் கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான்" என ரோமர் 14:5,6 - ம் வசனத்தைக் குறிப்பிடுவதுண்டு. இங்கு, பழைய ஏற்பாட்டின் ‘ஓய்வு நாளே’ சொல்லப்பட்டிருக்கிறது என மிகத் தெளிவாக இருக்கிறதே! அந்நாட்களில் மனம் திரும்பிய யூதர்களில் சிலர், இந்த ஓய்வு நாளை (Sabbath) விட்டுவிடும்படியான வெளிச்சம் பெறாதிருந்தார்கள். அப்போது பவுல், இந்த பெலஹீனமான யூதசகோதரர்களைத் தாங்கி கொள்ளும்படி, புதிய உடன்படிக்கையின் வெளிச்சத்தைப் பெற்றவர்களுக்குப் புத்தி சொன்னான். காரியம் இப்படியாயிருக்க, வினாயக சதுர்த்தியோ; அல்லது ஈஸ்டரோ; அல்லது தீபாவளியோ கொண்டாடும் இன்றைய கிறிஸ்தவர்களுக்காக இவ்வசனம் கூறப்படுவது ஒருக்காலும் முடியவே முடியாது!
இன்னும் சிலர், பயபக்தியான குறிப்பிட்ட சிலர் கிறிஸ்துமசும்; ஈஸ்டரும் கொண்டாடுகிறார்களே அது எப்படி? என கேட்கலாம்.
நமக்கு தேவவசனம் ஒன்றே நம்மை நடத்தும் ‘கைடு’ அல்லாமல், வேதவசனத்தை சில இடங்களில் பின்பற்றாத பக்தியுள்ள மனிதர்களேயானாலும் அவர்களின் முன்மாதிரி நம்மை நடத்தும் ‘கைடு’ அல்லது வழிகாட்டி ஆகிவிட முடியாது!
"தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக" (ரோமர் 3:4). அவர்கள் தேவார்த்தைகளை, தேவவார்த்தையான சாட்சி ஆகமத்தோடு ஒப்பிட்டு கவனிக்க வேண்டும். அவர்களின் செய்திகள் (போதகங்கள்) என்னுடைய வார்த்தைக்கு முரணானதாய் இருந்தால், அவர்களுக்கு வெளிச்சமில்லை என்பதே காரணம்" (ஏசா 8:20 Living Bible). பெரோய பட்டணத்தார், பவுலின் போதகங்களைக் கூட, அதன் காரியங்கள் இப்படியிருக்கிறதா? என்று வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தார்கள்; இதற்காக பரிசுத்தாவியானவர் அவர்களை மெச்சிக் கொண்டார்! (அப் 17:11). இது நாம் அனைவருமே பின்பற்றக்கூடிய ஓர் நல்ல மாதிரியல்லவா?
தாவீது, தேவனுடைய இருதயத்திற்குப் பிரியமான தாசனாயிருந்தான். இருப்பினும், மோசேயின் வெண்கல சர்ப்பத்தை வணங்குவது தேவனுக்கு அருவருப்பானது என அவன் அறியாமல், இஸ்ர்வேலர்கள் அதை வணங்கும்படி 40 வருடங்கள் அனுமதித்திருந்தான். இவ்வளவு வெளிப்படையான ‘விக்கிரகாராதனை’ குறித்துகூட அவனுக்கு வெளிச்சம் இல்லாதிருந்தது. இதை வெளியரங்கமாக்கி, இந்த விக்கிரகாராதனைப் பழக்கத்தை உடைத்து அழிப்பதற்கு, ஓர் மிகவும் இளம் இராஜாவாகிய எசேக்கியாவுக்கே வெளிச்சம் தரப்பட்டது! (2இராஜக்கள் 18:1-4). நாமும்கூட, தாவீது மற்றும் பக்தியுள்ள மனிதர்களிடம் காணும் பரிசுத்த ஜீவியத்தைப் பின்பற்றலாம். ஆனால், அவர்கள் வெளிச்சம் பெறாதிருக்கும், மனுஷீக மூடப் பாரம்பரியங்களை பின்பற்ற முடியவே முடியாது!
தேவ வசனத்தோடு ஒன்றையும் கூட்டாமல் அல்லது குறைக்காமல் அதன் போதகத்தை நாம் ‘அப்படியே’ பின்பற்றுவதில்தான் நம் பாதுகாப்பு அடங்கியுள்ளாது. இதற்குமேல் மற்ற மனிதர்கள் என்ன செய்கிறார்கள் என்பது நமக்கு ஒரு பொருட்டல்ல!
‘ஜீவியத்தின் எல்லா பகுதியிலும்’ இயேசுவை பின்பற்றுவதுதான் உண்மையான ஆவிக்குரிய தன்மையாகும். இதில் பிரதானமாய் 1. அனுதின ஜீவியத்தில் சிலுவையை எடுத்து பரிசுத்த ஆவியின் பெலத்தினால் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிவதும், 2. புதிய ஏற்பாட்டில் இல்லாத, எல்லா மனுஷீக மூடப் பாரம்பரியங்களையும் வெறுத்து உதறித் தள்ளுவதும் உள்ளடங்கும்.
இவ்வையகத்தின் திசையெங்கும், அப்பழுக்கற்ற தூயசாட்சிகளுக்காக தேவன் ஏங்குகிறார்! ஆம், எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை பெற்றது மாத்திரமல்லாமல் எல்லா பாபிலோனிய மூடப் பாரம்பரியங்களிலிருந்தும் விடுதலை பெற்று மிளிர்ந்திடும் ஓர் சபை! அதுவே, அவரது வாஞ்சை!
கேட்பதற்கு காதுள்ளவன் எவனோ, அவன் கேட்கக்கடவன்!