சீஷர்களா? வெறும் விசுவாசிகளா?

Article Body: 

மிகப்பெரிய ராஜ கட்டளைக்கு கீழ்ப்படிதல் என்பது எவற்றை உள்ளடக்கியுள்ளது: இன்றைய கிறிஸ்தவ விசுவாசிகள்‌, ஒரு பொருளைப்‌ (Subject) பற்றிய “ஒரு வசனத்தை” எடுத்துக்கொண்டு, அதே பொருள்‌ பற்றிய “இன்னொரு வசனத்தையோ” உதாசினம்‌ செய்வது, மிகச்‌ சாதாரண தவறாகிவிட்டது!

“இப்படி எழுதியிருக்கிறதே!” (it is written) என்ற தேவ வசனத்தைக்‌ கொண்டுதான்‌ சாத்தான்‌ நம்‌ ஆண்டவர்‌ இயேசுவை சோதித்தான்‌ (மத்தேயு 4:6). ஆனால்‌ நம்‌ ஆண்டவரோ “இப்படியும்‌ எழுதியிருக்கிறதே!” (it is ALSO written மத்தேயு 4:7) என்று கூறியே அந்தச்‌ சோதனையை புறம்பே தள்ளி ஜெயித்தார்‌!!

நாம்‌ நிறைவேற்றும்படி நமக்கு ஓப்புவிக்கப்பட்ட சுவிசேஷ “ராஜ கட்டளையை” சற்று எண்ணிப்பாருங்கள்‌. “நீங்கள்‌ உலகமெங்கும்‌ போய்‌, சர்வசிருஷ்டிக்கும்‌ சுவிசேஷத்தைப்‌ பிரசங்கியுங்கள்‌” (மாற்கு 16:15) என்றே இயேசு தன்‌ சீஷர்களுக்கு கட்டளை கொடுத்தார்‌. அதேசமயம்‌, “நீங்கள்‌ போய்‌ சகல ஜாதிகளையும்‌ சீஷராக்குங்கள்‌” (மத்தேயு 28:19) எனவும்‌ கட்டளை கொடுத்திருக்கிறார்‌!! எனவே, இந்த இரண்டு கட்டளைகளுமே அந்த “ஒரே ராஜ கட்டளையின்‌” இரண்டு பகுதிகளேயாகும்‌. இந்த இரண்டு பகுதிகளான கட்டளைகளையும்‌ நாம்‌ ஜாக்கிரதையாய்‌ கவனித்து கீழ்ப்படியும்போது மாத்திரமே, நம்‌ நாட்களில்‌ தேவனுடைய சித்தத்தை பூரணமாய்‌ நிறைவேற்றுவதற்குரிய வழியை நாம்‌ அறிந்து கொள்ள முடியும்‌!

சுவிசேஷ ஊழியம்‌:

சுவிசேஷ ஊழியத்திற்கு மாற்கு 16:15-ல்‌ இயேசு தன்‌ சீஷர்களுக்கு கட்டளையிட்டபடி “உலகமெங்கும்‌ போய்‌ சகல மனுஷர்களுக்கும்‌ சுவிசேஷத்தைப்‌ பிரசங்கிப்பதே” தெளிவான முதல்‌ படியாகும்‌! ஆகவே, இந்தக்‌ கட்டளை ஒரு தனிப்பட்ட விசுவாசிக்குக்‌ கொடுக்கப்பட்ட கட்டளையாயிராமல்‌, கிறிஸ்துவின்‌ முழு சரீரமான சபைக்கும்‌ உரியதேயாகும்‌!! உலகில்‌ உள்ள ஒவ்வொரு மனுஷருக்கும்‌ சென்று பிரசங்கிப்பதை, ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது ஒரு ஸ்தல சபையோ, தாங்களாகவே செய்து முடிப்பது இயலாத காரியம்‌! இந்தப்‌ பணியில்‌ ஒவ்வொருவருக்கும்‌, அவர்களால்‌ முடிந்த அளவிற்கு ஒரு சிறு பங்கு உண்டு!! அந்தப்‌ பங்கு சிறியதேயாகிலும்‌, அதை நிறைவேற்றிட நாம்‌ யாவரும்‌ கவனம்‌ கொண்டிருக்க வேண்டும்‌.

நமக்குள்ள இந்தப்‌ பொறுப்பை அறிந்துகொள்ள அப்‌போஸ்தலர்‌ 1:8-ம்‌ வசனத்தை கவனியுங்கள்‌. நாம்‌ யாவருமே கிறிஸ்துவிற்கு வல்லமையான சாட்சிகளாய்‌ இருக்க வேண்டுமென்றால்‌, ஒவ்வொரு விசுவாசியும்‌ “உன்னதத்தின்‌ பெலனால்‌” தரிப்பிக்கப்பட வேண்டும்‌ என்றே இந்த வசனம்‌ வலியுறுத்துகிறது. இங்கு நாம்‌ உற்று கவனிக்க வேண்டியது என்னவெனில்‌, நாம்‌ அனைவருமே சுவிசேஷகர்‌களாய்‌ அழைக்கப்படவில்லை என்பதுதான்‌... ஏனெனில்‌, “சிலரை மாத்திரமே” சுவிசேஷகர்களாய்‌ கிறிஸ்து சபைக்கு தந்தருளியிருக்கிறார்‌ என எபேசியர்‌ 4.11 தெளிவாகக்‌ கூறுகிறது. ஆனால்‌ நாம்‌ யாவருமே “அவருடைய சாட்சிகளாய்‌ இருப்பதற்கு” அழைக்கப்பட்டிருக்கிறோம்‌!!

ஒரு சாட்சியாய்‌ இருப்பதைக்‌ காட்டிலும்‌, ஒரு சுவிசேஷகனின்‌ எல்கை விஸ்தாரமானதாகும்‌. ஒரு சாட்சியோ தான்‌ வாழும்‌ பகுதியில்‌ கிறிஸ்துவைப்‌ பிரகடனம்‌ செய்கிறான்‌. அதாவது தன்‌ உறவினர்கள்‌, அண்டை வீட்டார்கள்‌, வேலை ஸ்தலத்தில்‌ தன்னோடு சேர்ந்து வேலை செய்பவர்கள்‌... இன்னும்‌ இதுபோன்று தினசரி தன்‌ பிரயாணத்தின்‌ மூலமோ அல்லது வேறு வகையிலோ சந்திக்க நேரும்‌ யாவருக்கும்‌ நாம்‌ அனைவருமே சாட்சிகளாய்‌ விளங்கிட முடியும்! நாம்‌ யாராயிருந்தாலும்‌, என்ன வேலை செய்கிறவர்களாய்‌ இருந்தாலும்‌ இவ்விதமாய்‌ கிறிஸ்துவுக்கு சாட்சிகளாய்‌ நாம்‌ விளங்கிட முடியும்‌!!

ஆனால்‌, சபைக்கு கிறிஸ்து தந்திருக்கும்‌ சுவிசேஷகர்களுக்கோ “இழந்துபோனவர்களைத்‌ தேடும்‌ பணி” ஓர்‌ பரந்த பணியாகும்‌. இருப்பினும்‌, இன்று நாம்‌ பொதுவாய்‌ அறிந்திருப்பதுபோல், ஆத்துமாக்களை ஆதாயம்‌ செய்வது அல்லது கிறிஸ்துவண்டையில்‌ ஜனங்களை கொண்டுவருவது மாத்திரமே சுவிசேஷகனின்‌ பணி இல்லை! எனவும்‌, அவர்களைக்கொண்டு “கிறிஸ்துவின்‌ சரீரம்‌ கட்டப்பட வேண்டும்‌” என்றுமே எபேசியர்‌ 4:11,12 மிகத்‌ தெளிவாக நமக்குக்‌ கூறுகிறது.

இங்குதான்‌ இன்றைய சுவிசேஷ ஊழியங்கள்‌ பெரும்‌ தோல்வியைத்‌ தழுவியிருக்கிறது! ஆம்‌, இன்றைய சுவிசேஷ ஊழியங்கள்‌ “கிறிஸ்துவின்‌ சரீரம்‌ கட்டப்படுவதற்காக” ஊழியம்‌ செய்யாமல்‌, தனித்தனியே ஆத்துமாக்களை இரட்சிக்கும்‌ ஊழியமே செய்து வருகிறது! இந்த ஊழியத்தில்‌ நாம்‌ ௮திக பட்சமாய்‌ காண்பது யாதெனில்‌, இவ்வாறு இரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்கள்‌, அவர்கள்‌ ஏற்கனவே இருந்த “மரித்த நிலை கொண்ட” சபைகளுக்கே திரும்பவும்‌ அனுப்பப்பட்டு, அவர்களை மீண்டும்‌ இழந்துபோகச்‌ செய்கிறார்கள்‌! அல்லது அவர்களை “வெதுவெதுப்பாய்‌” மாறும்‌ நிலைக்கு கொண்டு சென்று... ஒருநாளில்‌, ஆண்டவருடைய வாயிலிருந்து வாந்தி பண்ணப்படும்‌ பரிதாப நிலைக்கு ஆளாகிவிடுகிறார்கள்‌!! (வெளி. 3:16).

மேற்கண்ட விதத்தில்‌ எவ்வழியானாலும்‌, இவர்கள்‌ கிறிஸ்துவின்‌ சரீரமாய்‌ கட்டப்படாமலே மாய்ந்து போகிறார்கள்‌! இவையாவும்‌ “அவர்களை இரட்டிப்பாய்‌ நரகத்தின்‌ மகனாக்கும்‌” சாத்தானுடைய நோக்கம்‌ நிறைவேறவே கைகொடுப்பதாய்‌ இருக்கிறது! (மத்தேயு 23:15). ஆம்‌, இவர்களுடைய ஆரம்ப “இழந்துபோன நிலை” நரகத்தின்‌ மகனாய்‌ இருக்கும்‌ முதல்‌ பகுதியாகவும்‌... சில சுவிசேஷகர்களால்‌, இவர்கள்‌ தங்களை “இரட்சிக்கப்பட்டவர்களாக” எண்ணும்படிச்‌ செய்யும்‌ வஞ்சகத்தில்‌ விழச்செய்து, மீண்டும்‌ இரண்டாவதாக நரகத்தின்‌ மகனாகவே தங்கியிருக்கவும்‌ செய்கிறார்கள்‌!!

இவ்விதமான சுவிசேஷ ஊழியங்களால்‌ கட்டப்பட்டதோ “அந்த சுவிசேஷகனின்‌ சொந்த ராஜ்ஜியம்‌ மாத்திரமே ஆகும்‌!?”

இவ்வித கேடான சுவிசேஷ ஊழியங்களுக்கு முக்கிய காரணம்‌ யாதெனில்‌, அந்த சுவிசேஷகனின்‌ பண ஆசையோ அல்லது புகழ்‌ ஆசையோ அல்லது இந்த இரண்டுமே சேர்ந்த ஆசையோதான்‌ காரணமாய்‌ இருக்கிறது!!

இயேசுவோ சுவிசேஷகர்களை மீனவர்களைப்போலவே “மனுஷர்களைப்‌ பிடிக்கிறவர்கள்‌” என்று அழைத்தார்‌. ஆனால்‌, குணப்‌படாத கிறிஸ்தவத்‌ தலைவர்களோடும்‌, குழுக்களோடும்‌ அல்லது ஓட்டு வாங்கும்‌ நோக்கம்‌ கொண்ட அரசியல்‌ தலைவர்களின்‌ ஒத்துழைப்பின்‌ பின்னணியோடும்‌ கைகோர்த்து செய்திடும்‌ இன்றைய சுவிசேஷ ஊழியம்‌ “ஏராளமான பொத்தல்கள்‌ நிறைந்த கிழிந்த வலை கொண்டு” மீன்பிடிப்பதற்கே ஒப்பாயிருக்கிறது! ஆனால்‌ இயேசுவைப்‌ பாருங்கள்‌! தன்‌ சுவிசேஷ கூட்டங்களை துவக்கி வைப்பதற்கென அன்னாவோடோ, காய்பாவோடோ அல்லது ஏரோதோடோ அல்லது பிலாத்தோடோ சேர்ந்து கூட்ட மேடையில்‌ உட்கார்ந்திருப்பதுபோல்‌ நீங்கள்‌ “கற்பனைக்‌ கூட” செய்து பார்க்க முடியாதே!! ஆனால்‌ இன்றைய சுவிசேஷகர்களோ இதைச்‌ செய்வது மாத்திரமல்லாமல், இந்த “குணப்படாத” தலைவர்‌களை தங்கள்‌ மேடையில்‌ வைத்துப்‌ புகழவும்‌ செய்கிறார்கள்‌!

இனி அடுத்து என்ன? இந்தப்‌ பொத்தல்‌ கொண்ட வலைகளில்‌ பிடிக்கப்படும்‌ மீன்களை “மரித்த நிலையிலிருக்கும்‌ சபைகளான” அந்த கடலுக்குள்ளேயே மீண்டும்‌ போய்விடுவதற்கே விட்டுவிடுகிறார்கள்‌! எதற்கு? அடுத்த சுவிசேஷக்‌ கூட்டங்களில்‌ அவர்களை மீண்டும்‌ பிடிப்பதற்குத்தான்‌!?... பிடித்து? மீண்டும்‌ கடலுக்குள்‌ விடுவதற்குத்‌ தான்‌!! இவ்வாறாகத்தான்‌ இன்றைய நாட்களில்‌ ஏராளமான “சபை பாகுபாடற்ற கூட்டங்கள்‌” இந்த சுவிசேஷகர்களால்‌ திரும்பத்‌ திரும்ப நடத்தப்பட்டு... அந்தந்த சுவிசேஷகர்கள்‌ தங்கள்‌ கூட்டங்களில்‌ கை உயர்த்துவோரின்‌ கைகளையும்‌, தீர்மான அட்டைகளையும்‌ அகமகிழ எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்‌! இந்த லட்சணம்‌ கொண்ட சுவிசேஷ ஊழியங்கள்‌ பரலோகத்தின்‌ தூதர்களுக்கல்ல... சாத்தானின்‌-சேனைகளுக்கே மிகுந்த மகிழ்ச்சியைக்‌ கொண்டு வருவதாய்‌ இருக்கிறது! பின்‌ என்ன? “இரட்டிப்பான நரகத்தின்‌ மகன்களாய்‌” மாற்றப்படும்‌ இவர்களுக்காக பரிசுத்த தூதர்கள்‌ எங்ஙனம்‌ களிகூர்ந்திட முடியும்‌? ஆகவே இன்றைய சுவிசேஷ கூட்டங்களில்‌ எடுக்கப்படும்‌ புள்ளி விபரங்கள்‌ முற்றிலுமாய்‌ வஞ்சகம்‌ நிறைந்த ஏமாற்று வேலையாகவே காணப்படுகிறது.

“இயேசு பாவங்களை மன்னிக்கிறார்‌! நோய்களை சுகமாக்குகிறார்‌!” என்ற சுவிசேஷ செய்தியோடு அற்புதங்களும்‌, அடையாளங்களும்‌ நிகழ்ந்தாலுமேகூட... இவர்களில்‌, எத்தனை பேர்‌ சீஷர்களாய்‌ மாறினார்கள்‌? எத்தனைபேர்‌ கிறிஸ்துவின்‌ சரீரமாய்‌ கட்டப்பட்டார்‌கள்‌? என்பது இன்னமும்‌ கேள்விக்குறியாகவே இருக்கிறது!! கேளுங்கள்‌… நம்‌ ஆண்டவரின்‌ அப்போஸ்தலர்கள்‌ ‘இதுபோன்ற’ சுவிசேஷ ஊழியங்களை ஒருபோதும்‌ செய்ததே இல்லை. இவர்களோ, தங்கள்‌ கூட்டங்களில்‌ மனந்திரும்பியவர்களை ஸ்தல சபைகளுக்குகொண்டு வந்து! அவர்களை சீஷர்களாய்‌ மாறும்படி செய்து! ஆவிக்குரிய வாழ்க்கையில்‌ ஊன்ற கட்டப்படும்படியே நடத்தினார்கள்‌!!

எபேசியர்‌ 4:13-ல்‌ குறிப்பிடப்பட்டிருக்கும்‌ ஐந்துவித ஊழியங்கள்‌ (அப்போஸ்தலர்கள்‌, தீர்க்கதரிசிகள்‌, சுவிசேஷகர்கள்‌, மேய்ப்பர்கள்‌, போதகர்கள்‌) 1 கொரிந்தியர்‌ 12:28 வசனங்களில்‌ வரிசைப்படுத்தப்‌ பட்டிருப்பதை நாம்‌ காண்கிறோம்‌: “தேவனானவர்‌ சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும்‌, இரண்டாவது தீர்க்கதரிசிகளையும்‌, மூன்றாவது போதகர்களையும்‌, பின்பு குணமாக்கும்‌ வரங்களையும்‌ (அதாவது, சுவிசேஷகர்கள்‌. ஏனெனில்‌ புதிய ஏற்பாட்டில்‌ எல்லா சுவிசேஷகர்களும்‌ குணமாக்கும்‌ வரத்தை உடையவர்களாகவே இருந்தனர்‌), பின்பு ஆளுகைகளையும்‌ (அதாவது, படகின்‌ திசையை கண்காணிப்பவர்கள்‌ என்பதே இதன்‌ பொருள்‌. அதன்படி மேய்ப்பர்களாகிய பாஸ்டர்களையே இது குறிக்கிறது) ஏற்படுத்தினார்‌” என காண்கிறோம்‌.

இந்த வரிசைப்படி, தேவனுடைய பார்வையில்‌ அப்போஸ்‌தலர்கள்‌, போதகர்களின்‌ ஊழியங்களே சுவிசேஷகனின்‌ ஊழியங்களை பார்க்கிலும்‌ “கிறிஸ்துவின்‌ சரீரம்‌ கட்டப்படும்‌ பணிக்கு” அதிக முக்கியம்‌ நிறைந்த ஊழியங்களாய்‌ இருக்கிறது! ஆகவே, ஒரு சுவிசேஷகன்‌ தன்‌ ஊழியத்திற்குரிய தகுதியான ஸ்தானத்தை அப்போஸ்தலர்‌; தீர்க்கதரிசி; போதகர்‌ ஆகிய இவர்களுக்கு கீழாக அடங்கியிருப்பதால்‌ மாத்திரமே அந்த தகுதியான ஸ்தானத்தைப்‌ பெற முடியும்‌. அப்போது மாத்திரமே, அந்த சுவிசேஷகனின்‌ ஊழியம்‌ “கிறிஸ்துவின்‌ சரீரம்‌ கட்டப்படுவதற்கு” பயனுள்ளதாய்‌ இருந்திட முடியும்‌! இங்குதான்‌, இன்றைய 20-ம்‌ நூற்றாண்டு சுவிசேஷ ஊழியங்கள்‌ தேவனுடைய வார்த்தையிலிருந்து வழி தவறி சென்று கொண்டிருக்கிறது!!

சீஷர்களை உருவாக்குதல்:

சுவிசேஷ ஊழியத்தின்‌ நோக்கத்தை, மகத்துவம்‌ நிறைந்த இரண்டாவது கட்டளையாகிய “உலகத்திலுள்ள ஒவ்வொரு தேசத்தாரையும்‌ சீஷராக்குங்கள்‌!” என்ற வெளிச்சத்தில்‌ கண்டால்‌ மாத்திரமே நாம்‌ முழுமையாக விளங்கிக்கொள்ள முடியும்‌ (மத்தேயு 28:19). இங்குதான்‌ மனந்திரும்பாத பாவிகளுக்காக தேவன்‌ கொண்டிருக்கும்‌ திட்டம்‌ பூரணமாய்‌ நிறைவேறிட முடியும்‌! ஆம்‌, ஒருவன்‌ குணப்பட்டவுடன்‌... அவன்‌, சீஷனாக்கப்பட வேண்டும்‌!

துரதிருஷ்டவசமாக இன்று தங்களை மனந்திரும்பியவர்களாகக்‌ கூறிக்கொள்பவர்களில்கூட பெரும்பாலோனோர்‌ மெய்யான மனந்திரும்பியவர்களாய்‌ இல்லை! வாழ்வின்‌ பல்வேறு பகுதிகளில்‌ இவர்கள்‌ மனந்திரும்ப வேண்டிய விதத்தில்‌ சரியானபடி மனந்‌திரும்பாமலே தேங்கியிருக்கிறார்கள்‌! ஒருவேளை, இவர்கள்‌ சென்ற சுவிசேஷ கூட்டத்தில்‌ “மனந்திரும்ப வேண்டும்‌! பிறர்‌ பொருட்களை திரும்ப செலுத்த வேண்டும்‌!! போன்ற முக்கியமான பகுதிகள்‌ ஒரு வார்த்தைகூட பிரசங்கிக்கப்படாமலே.. நீங்கள்‌ இயேசுவை விசுவாசித்தால்‌ அதுவே போதும்‌!” என பிரசங்கிக்க கேள்விப்பட்டிருப்பார்கள்‌. இதுபோன்ற நிலையில்‌ மனந்திரும்பியவர்கள்‌ இயேசுவிடம்‌ கிட்டிச்‌ சேர்ந்து, தங்கள்‌ பாவங்களை விட்டுவிடுவதற்கல்லாமல்‌ ‘ஆசீர்வதிக்கப்பட்டு சுகம்‌ பெறவே’ வந்தார்கள்! இவ்வாறு இரட்சிக்கப்படுகிறவர்கள்‌, பிறப்பதற்கு இன்னமும்‌ தயாராயில்லாத குறைமாத வளர்ச்சியிலுள்ள குழந்தைகளைப்போலவே இருக்கிறார்கள்‌... ஆம்‌, தங்கள்‌ கணக்கு விபரத்தை உயர்த்த விரும்பும்‌ இச்சையினிமித்தம்‌, பொறுமையின்றி கருப்பையிலிருந்து பிடுங்கிப்‌ பிறக்கவைக்கும்‌ மருத்துவச்சிகளைப்‌ போலவே இன்றைய சுவிசேஷகர்களும்‌ இருக்கிறார்கள்‌! இவ்வாறு முதிர்ச்சியுறாமல்‌ அரைகுறையாகப்‌ பிறந்த குழந்தைகள்‌ அநேகமாய்‌ வெகுசீக்கிரத்தில்‌ செத்துப்போகிறார்கள்‌! அல்லது தங்கள்‌ ஜீவகாலமெல்லாம்‌ பிரச்சனைக்குரியவர்களாய்‌ வாழ்ந்து அவர்கள்‌ செல்லும்‌ சபையில்‌ உள்ள நல்ல மூப்பர்களுக்கு அல்லது உத்தம மேய்ப்பர்களுக்கு ஏராளமான தொல்லை தருகிறவர்களாய்‌ மாறிவிடுகிறார்கள்‌! இக்கேடான நிலையிலிருக்கும்‌ ஜனங்கள்‌ “பின்மாற்றக்காரர்கள்‌” என அழைப்பதற்குகூட தகுதியற்றவர்கள்‌... பின்‌ என்ன, இவர்கள்‌ என்றைக்காவது தங்கள்‌ வாழ்க்கையில் முதல்‌ அடி எடுத்து வைத்து ஒரு அடியாவது “முன்னேறிச்‌ சென்றிருந்தால்‌ தானே” பின்மாற்றம்‌ என்றால்‌ என்னவென்று இவர்களால்‌ அறிந்துகொள்ள முடியும்‌!? “மனந்திரும்புகிற பாவிகள்‌” நிமித்தமே பரலோகத்தில்‌ மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்‌ என இயேசு கூறினாரேயல்லாமல்‌... வெறுமனே விசுவாசித்துவிட்டு மனந்திரும்பாதவர்களுக்‌காக அல்ல!! ( லூக்கா 15:7,10).

தன்‌ கடந்த கால வாழ்க்கையில்‌ பண விஷயத்தில்‌ செய்த எல்லா பாவங்களிலேயும்‌ “நான்‌ திரும்ப செலுத்திவிடுகிறேன்‌!” என சகேயு உறுதியான தீர்மானம்‌ எடுத்த பின்பே அவனுடைய வீட்டிற்கு இரட்சிப்பு வந்ததாக இயேசு கூறினாரேயல்லாமல்‌. .. அதற்கு முன்பாக அல்லவே அல்ல! (லூக்கா 19:9). ஆனால்‌ இன்றைய சுவிசேஷகர்களோ “பிறர்‌ பொருளை திரும்ப செலுத்த வேண்டும்‌!” என ஒரு வார்த்தைகூட பிரசங்கிக்காமலே “இரட்சிப்பு வந்துவிட்டது!” என ஜனங்களுக்கு அறிவித்துவிடுகிறார்களே... ஆ, இது துரதிருஷ்டம்‌!

பூரணமான மனந்திரும்புதல்‌ ஏற்பட்டு ஒரு நபர்‌ மெய்யாகவே இரட்சிக்கப்பட்டிருந்தாலுமேகூட, அவர்‌ தன்‌ வாழ்க்கையில்‌ தேவனுடைய சித்தம்‌ முற்றிலும்‌ நிறைவேற வேண்டுமென்றால்‌... அவன்‌, சீஷத்‌துவத்திற்கு நடத்தப்பட வேண்டும்‌! எனவே,தொடர்ச்சியாய்‌ சீஷத்துவத்திற்கு நடத்தாத எந்த சுவிசேஷ ஊழியமும்‌ அரை-குறையான ஊழியமேயாகும்‌.

தன்‌ மூலமாய்‌ மனந்திரும்பியவர்களைச்‌ சீஷர்களாக்கும்‌ பணி செய்பவர்களோடு இணைந்து செயலாற்ற முடியாதபடி அந்த சுவிசேஷகனுக்கு அப்படி என்ன தடை உண்டாயிருக்கிறது? ஆம்‌, அவர்‌ தன்‌ “சொந்த ராஜ்ஜியத்தைக்‌” கட்ட விரும்பிய அந்த விருப்பமே சீஷராக்கும்‌ பணிக்கு ஏற்பட்ட தடையாய்‌ இருக்கிறது! இதுபோன்ற சுவிசேஷகர்களை நாம்‌ ஒன்றும்‌ நியாயந்தீர்த்திடத்‌ தேவையில்லை. ஏனென்றால்‌, “பிறரை நியாயம்‌ தீர்க்க வேண்டாம்‌!” என்றே ஆண்டவர்‌ நமக்கு கூறியிருக்கிறார்‌. ஆனால்‌, மனந்திரும்பிய ஒருவனை சீஷனாகிடவிடாமல்‌ தடையாய்‌ நின்ற அந்த சுவிசேஷகர்கள்‌ ‘அன்று’ கடைசி நாளில்‌ ஆண்டவருக்கு நிச்சயம்‌ பதில்‌ சொல்லியே ஆகவேண்டும்‌!!

முதல்‌ படியாய்‌, ஒருவன்‌ மனந்திரும்பி விசுவாசமுள்ளவனாகியவுடன்‌ இனி அடுத்து தண்ணீர்‌ ஞானஸ்நானம்‌ எடுக்க வேண்டும்‌. இதை மாற்கு 16:16-ல்‌ இயேசுவும்‌, பெந்தெகொஸ்தே நாளில்‌ பேதுருவும்‌ (அப்போஸ்தலர்‌ 2:38) பிரசங்கித்து தெளிவு படுத்தியிருக்கிறார்கள்‌. மத்தேயு 28:19-ம்‌ வசனமும்‌ ஞானஸ்நானத்தின்‌ அவசியத்தை வலியுறுத்‌துகிறது. ஆகவே, மறுபடியும்‌ பிறந்த யாவருக்கும்‌ “தண்ணீர்‌ ஞானஸ்‌நானமே” அடுத்தபடியாய்‌ இருப்பதை தெளிவாய்‌ காண்கிறோம்‌!

இவ்வாறு, ஞானஸ்நானம்‌ எடுத்த பிறகு தான்‌, அவன்‌ ஆண்டவரின்‌ சீஷனாய்‌ மாறி தன்‌ அனுதின ஜீவியத்தில்‌ தொடர்ச்சியாய்‌ இயேசுவைப்‌ பின்பற்ற வேண்டும்‌!

சீஷத்துவத்தின்‌ நிபந்தனைகள்‌:

லூக்கா 14:25-35 வசனங்களில்‌, சீஷத்துவத்தின்‌ நிபந்தனைகளை இயேசு தெளிவாக எடுத்துரைத்தார்‌. இங்கே இயேசு ஒரு மனிதனைக்‌ குறிப்பிட்டு, அவன்‌ தான்‌ கட்ட விரும்பிய கோபுரத்திற்கு அஸ்திபாரம்‌ போட்டதாகக்‌ கூறினார்‌. ஆனால்‌ அவனோ, அதை கட்டி முடிக்கத்‌ திராணியில்லாதவனாய்‌ போனான்‌... ஏனெனில்‌, கட்டுவதற்குரிய செல்லும்‌ செலவை அவனால்‌ கொடுத்திட முடியவில்லை!! (வசனம்‌ 28-30). ஆம்‌, ஒருவன்‌ சீஷனாய்‌ மாறுவதற்கு விலைக்கிரயம்‌ இருக்கிறது என்பதையே இயேசு இங்கு அறிவித்தார்‌. ஆகவேதான்‌, ஒருவன்‌ கோபுரத்தைக்‌ கட்டுவதற்கு முன்பாகவே முதலில்‌ உட்கார்ந்து அதற்குரிய “செல்லுஞ்செலவை” கணக்குப்‌ பார்க்கக்கடவன்‌ என இயேசு கட்டளையிட்டார்‌!!

நம்முடைய பாவங்கள்‌ மன்னிக்கப்பட்ட பிறகு “சீஷத்துவத்திற்‌குரிய விலைக்கிரயம்‌ எவைகள்‌?” என்பதை அறிந்துகொள்ள பல வருடங்கள்‌ நாம்‌ காத்திருப்பதற்குத்‌ தேவன்‌ விரும்பவேயில்லை. தன்னிடம்‌ ஜனங்கள்‌ வந்தவுடனேயே அவர்களுக்கு “சீஷத்துவத்தின்‌ விலைக்கிரயத்தை” இயேசு கூறிவிட்டார்‌. அது மாத்திரமல்லாமல்‌, சீஷனாய்‌ மாறுவதற்கு விருப்பம்‌ இல்லாத ஒரு விசுவாசி, தன்‌ சாரத்தை இழந்துபோன உப்பைப்‌ போலவே தானும்‌ தேவனுக்கு யாதொரு பயனும்‌ அற்றவனாய்‌ மாறிவிடுவான்‌ என்ற உண்மையையும்‌ இயேசு தெரிவித்தார்‌ (லூக்கா 14:35).

முதல்‌ நிபந்தனையாக, சீஷனாக மாறிட விரும்பும்‌ ஒரு விசுவாசி, தன்‌ ஆண்டவரைத்‌ தொடர்ச்சியாய்‌ பின்பற்றுவதற்குத்‌ தடையாக நின்றிடும்‌ தன்‌ உறவினர்களின்‌ யாதொரு பிடிப்பிலிருந்தும்‌ விடுதலை பெற்றிருக்க வேண்டும்‌ (லூக்கா 14:26). இரண்டாவது நிபந்தனையாக, அந்த விசுவாசி தன்னைத்தானே வெறுத்திடவும்‌, தன்‌ சுய-ஜீவியத்தை ஓவ்வொரு நாளும்‌ மரணத்திற்குக்‌ கொண்டுவரவும்‌ விருப்பம்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌! (லூக்கா 14:27). மூன்றாவது நிபந்தனையாக, தன்‌ சொந்த உடமைகளின்மீது கொண்ட நேசத்தையும்‌ விட்டுவிட வேண்டும்‌!! (லூக்கா 14:33). ஒரு சீஷனாக விரும்பும்‌ யாவருக்கும்‌, இந்த மூன்று நிபந்தனைகளும்‌ குறைந்த பட்ச அவசியமாயிருக்கிறது!!

முதல்‌ நிபந்தனை கூறுகிறபடி, நம்‌ உறவினர்‌ - பந்துக்களிடம்‌ நாம்‌ கொண்டுள்ள இயற்கையானதும்‌, விசேஷித்த விதத்திலும்‌ கொண்டிருக்கும்‌ நேசத்தை நாம்‌ துண்டித்திடவேண்டும்‌. இதை இயேசு கூறும்போது, “யாதொருவன்‌ என்னிடத்தில்‌ வந்து, தன்‌ தகப்பனையும்‌ தாயையும்‌ மனைவியையும்‌ பிள்ளைகளையும்‌ சகோதரரையும்‌ சகோதரிகளையும்‌ வெறுக்காவிட்டால்‌ எனக்கு சீஷனாயிருக்க மாட்டான்‌” என கூறினார்‌ (லூக்கா 14:26). இயேசு கூறிய இந்த வார்த்தைகள்‌ உண்மையில்‌ மிகவும்‌ ஆணித்தரமானதாகும்‌. “வெறுக்க வேண்டும்‌!” என்ற வாக்கியத்தின்‌ பொருள்‌ என்ன? “கொல்ல வேண்டும்‌!” என்பதே வேதவாக்கியத்தின்படியான பொருளாகும்‌! (1யோவான்‌ 3:15). இங்கு நாம்‌ எதை மரணத்திற்குள்ளாய்‌ கொண்டு வரவேண்டும்‌? நம்‌ சொந்த உறவினர்கள்மீது நாம்‌ வைத்திருக்கும்‌ இயற்கையான பாசப்‌ -பிணைப்பையே நாம்‌ மரணத்திற்கு கொண்டு வரவேண்டும்‌!

அப்படியானால்‌, நாம்‌ அவர்களை அன்புகூர்ந்திடக்கூடாதா? அப்படி இல்லை... நாம்‌ யாவரையும்‌ அன்புகூர்ந்திடவே வேண்டும்‌. உண்மையில்‌ சம்பவிப்பது யாதெனில்‌, நாம்‌ அவர்கள்மீது கொண்ட மனுஷீக - அன்பை விட்டுவிடும்போது, தேவன்‌ அதைத்‌ தன்‌ தெய்வீக அன்பினால்‌ நிறைத்துவிடுவார்‌! இதன்‌ மூலமாய்‌ நம்முடைய உறவினர்களிடம்‌ நாம்‌ வைத்திருக்கும்‌ அன்பு “தூய்மை” கொண்டதாய்‌ மாறிவிடுகிறது. ஆம்‌, தேவனே நம்‌ நேசத்திற்கு முதலிடம்‌ கொண்டவராகிவிடுகிறார்‌... நம்‌ உறவினர்கள்‌ அல்ல!!

இன்று அநேகர்‌ தேவனுக்கு கீழ்ப்படிவதேயில்லை! அதனிமித்தமே இவர்கள்‌, தங்கள்‌ தகப்பன்‌, தாய்‌ மற்றும்‌ மனைவி போன்றவர்களுக்கு மனத்தாங்கல்‌ ஏற்படுமேயென்று அஞ்சுகிறார்கள்‌. ஆனால்‌ ஆண்டவரோ நம்‌ ஜீவியத்தில்‌ முதலிடமே கேட்கிறார்‌! அவ்வாறு அவருக்கு நாம்‌ முதலிடம்‌ தராவிட்டால்‌, நாம்‌ அவருடைய சீஷர்களாய்‌ இருந்திட முடியாது!! நம்‌ முழு ஜீவியத்திற்கும்‌ இயேசுவே ஆண்டவராய்‌ இருந்திட வேண்டும்‌. அப்படியில்லையென்றால்‌, அவர்‌ நமக்கு ஆண்டவராய்‌ இருந்திடவே மாட்டார்‌!

இயேசு இந்த பூமியிலிருந்தபோது வாழ்ந்த அவரது சொந்த மாதிரியை சற்று கவனித்துப்‌ பாருங்கள்‌! தன்‌ விதவையான தாயை அவர்‌ அன்புகூர்ந்தபோதிலும்‌, தான்‌ பிதாவின்‌ பூரண சித்தத்தை செய்வதிலிருந்து விலகிச்‌ செல்லும்படி தன்னைப்‌ பாதித்திட தன்‌ தாயை அவர்‌ அனுமதித்ததே இல்லை! ஏன்‌, ஒரு சிறு விஷயத்தில்கூட அவர்‌ அனுமதித்ததில்லை!! இதைக்‌ குறித்த மாதிரியை “கானாவூர்‌ கல்யாணத்தில்‌” நாம்‌ காண்கிறோம்‌. கானாவூரில்‌, தாய்‌ கூறியதின்படி செயல்பட இயேசு மறுத்துவிட்டார்‌!! (யோவான்‌ 2:4).

அது மாத்திரமல்லாமல்‌, நம்‌ சகோதரர்களை நாம்‌ எவ்வாறு நடைமுறையில்‌ “வெறுத்திட” வேண்டும்‌ என்றுகூட இயேசு கற்றுக்‌ கொடுத்திருக்கிறார்‌. இயேசுவை சிலுவைக்குச்‌ செல்லவிடாமல்‌ அவரை திசை திருப்பிட பேதுரு முயன்றபோது, இயேசு அவனிடம்‌ திரும்பி எந்த ஒரு மானிடனிடத்திலும்‌ அவர்‌ இதுவரை பேசியிராத கடுமையான வார்த்தைகளைக்கூறி கடிந்து கொண்டார்‌! “எனக்குப்‌ பின்னாகப்போ சாத்தானே! நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்‌!!” என்றே பேதுருவைப்‌ பார்த்து கூறினார்‌ (மத்தேயு 16:23). உண்மையில்‌, மிகுதியான மனுஷீக அன்பினால்‌ நிறைந்தே பேதுரு தன்‌ ஆலோசனையைக்‌ கூறினான்‌. ஆனால்‌ இயேசுவோ அவனைக்‌ கடிந்துகொண்டார்‌... ஏனெனில்‌, பேதுரு கூறிய ஆலோசனை பிதாவின்‌ சித்தத்திற்கு முற்றிலும்‌ விரோதமானதாய்‌ இருந்தது!

இயேசுவின்‌ சிநேகத்தில்‌ “பிதாவே” எப்போதும்‌ உயர்ந்த ஸ்தானத்தில்‌ இருந்தார்‌! நாமும்கூட, இயேசுவைப்போலவே பிதாவிடம்‌ “அதே மனப்பான்மையோடு” நேசம்‌ கொண்டிட இயேசு எதிர்‌ பார்க்கிறார்‌. இயேசு உயிர்த்தெழுந்தவுடன்‌, பேதுருவை சபையின்‌ மேய்ப்பனாய்‌ நியமனம்‌ செய்வதற்கு முன்பாக, அவன்‌ இந்த பூமியிலுள்ள எதைக்‌ காட்டிலும்‌ தன்னை அதிகமாய்‌ நேசிக்கிறானா? என்பதைக்‌ கேட்டறிந்தார்‌ (யோவான்‌ 21:15-17). ஆம்‌, தன்‌ ஆண்டவரை முதன்மையான ஸ்தானத்தில்‌ வைத்து நேசிப்பவர்களுக்கு மாத்திரமே அவருடைய சபையில்‌ பொறுப்புகள்‌ வழங்கப்படுகிறது!

எபேசு சபையின்‌ மூப்பன்‌ புறக்கணிக்கப்படும்‌ அபாயத்தில்‌ இருந்தான்‌! ஏனென்றால்‌, அவன்‌ தன்‌ ஆண்டவர்மீது கொண்டிருந்த ஆரம்ப அன்பின்‌ தியானத்தை இழந்த காரணமேயாகும்‌!! (வெளி. 2:1-5). நாம்‌ மெய்யாகவே சங்கீதக்காரன்‌ கூறியதைப்போல்‌ “பரலோகத்தில்‌ உம்மையல்லாமல்‌ எனக்கு யார்‌ உண்டு? பூலோகத்தில்‌ உம்மைத்‌ தவிர எனக்கு வேறே விருப்பமில்லை” (சங்கதம்‌ 73:25) என நாமும்‌ கூற முடியுமென்றால்‌, இப்போது மெய்யாகவே நாம்‌ சீஷத்துவத்தின்‌ முதல்‌ நிபந்தனையை நிறைவேற்றியவர்களாய்‌ இருப்போம்‌.

இயேசு நம்மிடம்‌ எதிர்பார்க்கும்‌ ௮ன்பு உணர்ச்சிவசமான, மனம்‌ நெகிழ்ந்து “பரவசப்‌ பாடலை” அவருக்குப்‌ பாடிடும்‌ ஓர்‌ அன்பு அல்ல! அவர்‌ நிச்சயம்‌ இவ்வித நுரைபொங்கும்‌ மேலோட்டமான அன்பை நம்மிடம்‌ எதிர்பார்க்கவில்லை!! மாறாக, நாம்‌ அவரை மெய்யாகவே அன்புகூர்ந்தால்‌, அவருக்கு கீழ்ப்படிகிறவர்களாய்‌ இருந்திடவே நம்மில்‌ எதிர்பார்க்கிறார்‌ (யோவான்‌ 14:27).

சீஷத்துவத்தின்‌ இரண்டாவது நிபந்தனை யாதெனில்‌: “நம்‌ சொந்த சுய-வாழ்க்கையை” நாம்‌ வெறுத்திட வேண்டும்‌! இதை இயேசு குறிப்பிடுகையில்‌, “யாதொருவன்‌ என்னிடத்தில்‌ வந்து, தன்‌ ஜீவனையும்‌ வெறுக்காவிட்டால்‌ எனக்குச்‌ சீஷனாயிருக்க மாட்டான்‌” (லூக்கா 14:26) என கூறினார்‌. இந்த நிபந்தனையைச்‌ சற்று விரிவாக இயேசு கூறுகையில்‌, “தன்‌ சிலுவையை சுமந்துகொண்டு எனக்குப்‌ பின்‌ செல்லாதவன்‌ எனக்குச்‌ சீஷனாயிருக்க மாட்டான்‌” (லூக்கா 14:27) என கூறினார்‌. இயேசுவின்‌ உபதேசங்களில்‌ “இந்த அற்புத போதனையை” புரிந்து கொண்டவர்கள்‌ வெகு சொற்பமாகவே இருக்கிறார்கள்‌!

ஆம்‌, ஒரு மெய்‌ சீஷன்‌ “தன்னைத்தான்‌ வெறுத்து, தன்‌ சிலுவையை அனுதினமும்‌ எடுத்து வரவேண்டும்‌!” (லூக்கா 9:23) என்பதை இயேசு ஆணித்தரமாக வலியுறுத்திக்‌ கூறியுள்ளார்‌.

அதாவது, ஒருவன்‌ தினசரி வேதம்‌ வாசிப்பதைவிட, தினசரி ஜெபிப்பதை விட... தினசரி தன்னை வெறுத்து தன்‌ சிலுவையை எடுக்க வேண்டியதே மிக முக்கியமானதாகும்‌.

“தன்னை வெறுப்பதென்பது” ஒருவன்‌ தான்‌ தொன்றுதொட்டு ஆதாமிலிருந்து பெற்று ஜீவிக்கும்‌ “சொந்த ஜீவியத்தை” வெறுப்பதேயாகும்‌. இந்த சுய-ஜீவியத்தை மரணத்திற்குள்‌ கொண்டு வருவதே சிலுவையை எடுப்பதின்‌ பொருளாகும்‌. நம்‌ சுய-ஜீவியத்தை நாம்‌ முதலாவதாக வெறுத்துவிட்டால்‌, பின்பு அதை நாம்‌ எளிதில்‌ அழித்து விட முடியும்‌!

ஆம்‌, கிறிஸ்துவின்‌ ஜீவனுக்கு நம்‌ சுய-வாழ்க்கையே பிரதான எதிரியாய்‌ இருக்கிறது. இந்த சுய-வாழ்க்கையைத்தான்‌ “மாம்சம்‌” என வேதாகமம்‌ அழைக்கிறது. நம்மிலுள்ள எல்லாவிதமான தீய-இச்சைகளுக்கும்‌ இந்த மாம்சமே ஓர்‌ பண்டகசாலையாய்‌ இருக்கிறது! நமக்கானதைத்‌ தேடுவதோ... நம்‌ சுய கனத்தை நாடுவதோ.... நம்‌ சொந்த மகிழ்ச்சியை விரும்புவதோ... நம்‌ சுய வழிக்குச்‌ செல்வதோ... போன்ற நம்‌ சுய-சித்தங்களை நிறைவேற்றும்படி ஏற்படும்‌ சோதனைகளின்‌ தூண்டுதல்கள்‌ யாவும்‌ இப்பண்டகசாலையிலிருந்தே புறப்பட்டு வருகிறது!!

நாம்‌ நேர்மையுள்ளவர்களாய்‌ இருப்போமென்றால்‌, நாம் செயலாற்றும்‌ நல்ல கிரியைகள்கூட தீமையான நோக்கங்களால்‌ கறைப்‌படுவதை நாம்‌ காண முடியும்‌. எல்லாம்‌, இந்த மாசுபடிந்த இச்சைகளிலிருந்து தோன்றுவதேயாகும்‌. ஆகவே, நாம்‌ இந்த “மாம்சத்தை” வெறுக்காவிட்டால்‌, நம்‌ ஆண்டவரை நம்மால்‌ ஒரு போதும்‌ பின்பற்றவே முடியாது! இதனிமித்தமே, “நம்‌ சொந்த ஜீவனை” வெறுப்பது அல்லது இழப்பது குறித்து இயேசு அதிகமாய்‌ பேசியிருக்கிறார்‌. இந்த வாக்கியம்‌, சுவிசேஷங்களில்‌ 6-முறை திரும்பத்‌ திரும்ப கூறப்பட்‌டுள்ளது (மத்தேயு 10:39; 16:25; மாற்கு 8:35; லூக்கா 9:24; 14:26; யோ.12:25). இவ்வாறு இந்த வாக்கியம்‌ சுவிசேஷங்களில்‌ அடிக்கடி கூறப்பட்டிருந்த போதும்‌, இன்றோ இந்த வாக்கியத்தின்‌ செய்திதான்‌ ‘மிகக்‌ குறைவாய்‌’ ‘புரிந்துகொள்ளப்பட்டு' மிகக்‌ குறைவாய்‌ பிரசங்கிக்கப்படுகிறது!!

நம்‌ சொந்த உரிமைகளையும்‌, நம்‌ சொந்த லாபங்களையும்‌, தேடுவதை விட்டுவிடுவதும்‌, நம்‌ சொந்த கனத்தைத்‌ தேடுவதை நிறுத்துவதும்‌, சுய-இலட்சியங்களையும்‌ சுய-ஆர்வங்களையும்‌ வெறுத்து விடுவதும்‌. . . இன்னும்‌ இதுபோன்ற சுய-வழிகளைத்‌ தேடுவதை நிறுத்தி விடுவதுமே “நம்‌ சொந்த ஜீவனை” வெறுப்பதின்‌ பொருளாகும்‌. ஆம்‌, இந்த மார்க்கமாய்‌ அல்லது இந்த வழியாய்‌ நாம்‌ செல்வதற்கு விருப்பம்‌ கொண்டிருந்தால்‌ மாத்திரமே நாம்‌ இயேசுவின்‌ சீஷர்களாய்‌ இருந்திட முடியும்‌!

சீஷத்துவத்தின்‌ மூன்றாவது நிபந்தனை யாதெனில்‌: “நமக்குண்டான யாவற்றையும்‌ வெறுத்துவிடுவதே” ஆகும்‌. இதை இயேசு குறிப்பிடுகையில்‌, “உங்களில்‌ எவனாகிலும்‌ தனக்கு உண்டானவைகளையெல்லாம்‌ வெறுத்துவிடாவிட்டால்‌, அவன்‌ எனக்குச்‌ சீஷனாயிருக்க மாட்டான்‌” என கூறினார்‌ (லூக்கா 14:33). நமக்குச்‌ சொந்தமாய்‌ வைத்திருக்கும்‌ அனைத்தும்‌ “நமக்குண்டானவைகள்‌” ஆகும்‌! இனியும்‌ அவைகளை “நமக்குச்‌ சொந்தமானதாய்‌” கருதாமல்‌ இருப்பதே அவைகளையெல்லாம்‌ வெறுத்துவிடுவதாகும்‌!

இதன்‌ விளக்கத்தை ஆபிரகாமின்‌ ஜீவியத்திலிருந்து நாம்‌ விளங்கிக்கொள்ள முடியும்‌. ஈசாக்கு இந்த ஆபிரகாமின்‌ சொந்த மகன்‌, அவனது உடைமை! ஒருநாளில்‌, இந்த ஈசாக்கை பலியாய்‌ கொடுத்து விடும்படி ஆபிரகாமிற்குத்‌ தேவன்‌ கூறினார்‌. அந்தப்படியே, ஈசாக்கை பலிபீடத்தில்‌ கிடத்தி அவனை வெட்டுவதற்கு ஆபிரகாம்‌ தயாராய்‌ எத்தனித்துவிட்டான்‌! ஆனால்‌, தேவனோ, குறுக்கிட்டு, இந்த ஆபிரகாம்‌ கீழ்ப்படிவதற்கு ஆர்வமாய்‌ இருப்பதை நிரூபித்தபடியால்‌ இனி ஈசாக்கின்‌ பலி அவசியமில்லை என கூறிவிட்டார்‌ (ஆதியாகமம்‌ 22).

இந்நிகழ்ச்சிக்குப்‌ பிறகு, ஈசாக்கை இன்னமும்‌ ஆபிரகாம்‌ தன்‌ வீட்டில்‌ கொண்டிருந்தாலும்‌... அவனோ, ஈசாக்கைத்‌ தன்‌ சொந்த உடைமையாய்‌ கொண்டிருக்கவில்லை! ஆம்‌, ஈசாக்கு இப்போது தேவனுக்கே சொந்தமானவன்‌!!

இதுவே, நமக்கு உண்டான யாவற்றையும்‌ வெறுத்து விடுவதின் பொருளாகும்‌. ஆம்‌, நமக்குச்‌ சொந்தமான அனைத்தும்‌ பலிபீடத்தில்‌ வைக்கப்பட்டு அவைகளை தேவனுக்கே கொடுத்துவிட வேண்டும்‌!!

அவருக்கே கொடுத்துவிட்டவைகளில்‌ சிலவற்றை நாம்‌ மீண்டும்‌ உபயோகித்திட தேவன்‌ நம்மை அனுமதித்திடக்கூடும்‌. இருப்பினும்‌, அவைகளை இனியும்‌ “நமக்குச்‌ சொந்தமானதாய்‌” நாம்‌ நினைத்திட முடியாதே!! நம்‌ சொந்த வீட்டிலேயே நாம்‌ குடியிருந்தாலும்‌, இனி அந்த வீடு “தேவனுடைய வீடே” ஆகும்‌. ஆம்‌, அவருடைய வீட்டில்‌ நாம்‌ வாடகை இல்லாமல்‌ குடியிருக்க நம்மை அனுமதித்திருக்கிறார்‌, அவ்வளவுதான்‌!! இதுவே மெய்யான சீஷத்துவம்‌.

மேற்கண்டவாறு நம்‌ உடைமைகள்‌ யாவற்றிற்கும்‌ நாம்‌ செயல்‌ பட்டிருக்கிறோமோ? நம்முடைய உடைமைகள்‌ என்பதில்‌, நம்‌ வங்கி கணக்கு, சொத்துக்கள்‌, உத்தியோகம்‌, நம்‌ தகுதிகள்‌, வரங்கள்‌, தாலந்துகள்‌ மற்றும்‌ மனைவி பிள்ளைகள்‌... இன்னும்‌ இதுபோன்ற, நாம்‌ இந்த பூமியில்‌ முக்கியமானதென மதிப்பிடும்‌ அனைத்தும்‌ அடங்கும்‌! நாம்‌ அவருடைய மெய்யான சீஷர்களாய்‌ இருக்க விரும்பினால்‌ இவைகள்‌ யாவற்றையும்‌ “பலிபீடத்தில்‌” கொண்டுவந்து வைத்திட வேண்டும்‌! அப்போது மாத்திரமே, நம்‌ முழு இருதயத்தோடு தேவனை அன்புகூர்ந்திட முடியும்‌. இதுவே, இயேசு மத்தேயு 5:8-ம்‌ வசனத்தில்‌ கூறிய “சுத்த இருதயம்‌” ஆகும்‌! ஓர்‌ நல்ல மனசாட்சி மாத்திரமே கொண்டிருப்பது போதுமானதல்ல. நல்ல மனசாட்சி கொண்டிருப்பது, நாம்‌ அறிந்திருக்கும்‌ ஒவ்வொரு பாவங்களையும்‌ விட்டுவிடுவதேயாகும்‌. ஆனால்‌, ஓர்‌ சுத்த இருதயம்‌ கொண்டிருப்பதற்கோ நமக்குண்டான “எல்லாவற்றையும்‌” நாம்‌ அர்ப்பணித்திருக்க வேண்டும்‌!!

ஆகவே, மெய்யான சீஷத்துவம்‌: 1) நம்‌ உறவினர்கள்‌ மற்றும்‌ நம்‌ அன்பிற்குரியவர்கள்‌ 2) நம்‌ சொந்த சுய - வாழ்க்கை 3) நம்‌ அனைத்து உடைமைகள்‌ ஆகிய இந்த மூன்றிலும்‌ கொண்ட நம்‌ மனப்பான்மையில்‌ ஓர்‌ ஆழமான மாறுதல்‌ ஏற்படுவதை உள்ளடக்கியதாய்‌ இருப்பதையே நாம்‌ காண்கிறோம்‌. ஆகவே இந்த மூன்று பகுதிகளையும்‌ நாம்‌ தைரியத்துடனும்‌, நேர்மையுடனும்‌ செயலாற்றவில்லையென்றால்‌, நம்‌ ஜீவியத்திகென்று தேவன்‌ கொண்டிருக்கும்‌ முழு நோக்கத்தையும்‌ நிறைவேற்றிட ஒருக்காலும்‌ முடியாது! அதேபோல, இந்த சீஷத்துவத்தின்‌ செய்தியை பிரசங்கிப்பவர்கள்‌ “இந்த சாரத்தை” குறைத்துவிடாமல்‌ பிரகடனம்‌ செய்யத்‌ தவறிவிட்டாலும்‌, அவர்களால்‌ ஒருக்காலும்‌ “கிறிஸ்துவின்‌ சரீரத்தைக்‌” கட்டவே முடியாது!!!

சீஷத்துவம்‌ நடத்திடும்‌ பாதை:

நம்‌ ஆண்டவர்‌ தந்துள்ள ஒவ்வொரு கட்டளைகளுக்கும்‌ கீழ்ப்படிந்து அதை கைக்கொள்ளும்படி சீஷர்கள்‌ போதிக்கப்பட வேண்டும்‌ என மத்தேயு 28:20 தொடர்ந்து நமக்கு கூறுகிறது. இதுவே சீஷத்துவம்‌ நடத்திடும்‌ உன்னத பாதையாகும்‌. மத்தேயு 5,6,7 அதிகாரங்களை மட்டுமே வாசித்து அதில்‌ இயேசு தந்துள்ள சில கட்டளைகளை முதலாவதாகப்‌ பாருங்கள்‌... ஏனெனில்‌, இந்த மூன்று அதிகாரங்களுக்கு கீழ்ப்படிவதற்குகூட இன்றைய திரளான விசுவாசிகள்‌ அக்கறையற்று இருக்கிறார்கள்‌!

ஆம்‌, ஒரு சீஷன்‌ எப்போதும்‌ கற்றுக்கொள்பவன்‌! எப்போதும்‌ பின்பற்றுபவன்‌!!

இன்று நம்‌ தேசத்தின்‌ மிகப்பெரிய தேவை யாதெனில்‌, “தேவனுடைய முழு ஆலோசனைகளையும்‌” பிரகடனம்‌ செய்திட ஆழமான அழைப்பு பெற்ற ஜனங்களேயாகும்‌! இவர்கள்‌, இயேசு கட்டளையிட்ட எல்லா கட்டளைகளுக்கு தாங்களும்‌ கீழ்ப்படிந்து... அந்த அனைத்து இயேசுவின்‌ கட்டளைகளை மற்றவர்களுக்கும்‌ போதித்திட பேரார்வம்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌! ஆம்‌, அப்போது மாத்திரமே கிறிஸ்துவின்‌ சரீரம்‌ கட்டப்பட முடியும்‌!!

யார்‌ இயேசுவின்‌ சீஷர்கள்‌? என்ற கேள்விக்கு விடையாக “ஒருவரை ஒருவர்‌ அந்த சீஷர்கள்‌ அன்புகூருவார்கள்‌” என்ற அடையாளத்தையே இயேசு பதிலாகக்‌ கூறினார்‌ (யோவான்‌ 13:35). இயேசு கூறிய இந்த அடையாளமே மிகவும்‌ முக்கியமானது! ஆகவே, இயேசுகிறிஸ்துவின்‌ சீஷர்களை அவர்களுடைய பிரசங்கத்‌ திறமையை வைத்தோ, அவர்களின்‌ பாடும்‌ திறனை வைத்தோ, அல்லது அவர்கள்‌ “அன்னியபாஷை பேசுவதை” வைத்தோ அல்லது அவர்கள்‌ கூட்டங்‌களுக்கு கிரமமாய்‌ வேதாகமத்தைத்‌ தூக்கி செல்வதை வைத்தோ அல்லது கூட்டங்களில்‌ அவர்கள்‌ இடும்‌ ஆரவார சத்தத்தை வைத்தோ நாம்‌ அடையாளம்‌ கண்டு கொள்ள முடியாது!

ஆம்‌, அவர்கள்‌ ஒருவரை ஒருவர்‌ நேசிக்கும்‌ ஊக்கமான அன்பை வைத்தே இயேசுவின்‌ சீஷர்களை நாம்‌ இனம்‌ காணமுடியும்‌!

எனவே தான்‌, சுவிசேஷ கூட்டங்கள்‌ மூலமாய்‌ கிறிஸ்துவிடம்‌ கொண்டு வரப்பட்ட ஜனங்கள்‌ அந்த ஸ்தலத்தில்‌ ஓர்‌ சபையாகக்‌ கட்டப்படுவதற்கு நடத்தப்பட வேண்டும்‌. இவ்வாறு உண்மையுள்ள சீஷர்களாய்‌ கூடிவரும்‌ இவர்கள்‌ ஒருவரை ஒருவர்‌ அன்புகூர்ந்து வாழ்வதற்கே தொடர்ச்சியாய்‌ நடத்தப்பட வேண்டும்‌!

ஆகிலும்‌, இன்று அனேக இடங்களில்‌ காணப்படும்‌ துயரம்‌ யாதெனில்‌, இவர்கள்‌ வருடங்கள்தோறும்‌ சுவிசேஷ கூட்டங்களை நடத்திக்‌ கொண்டேயிருக்கிறார்கள்‌... ஆனால்‌, இவைகளில்‌ உள்ள ஒரு சபையாவது, அங்குள்ளவர்கள்‌ ஒருவருக்கொருவர்‌ சண்டையிடமாட்டார்கள்‌ அல்லது ஒருவரையொருவர்‌ புறங்கூற மாட்டார்கள்‌ “அதற்கு பதிலாய்” இவர்கள்‌ எப்போதும்‌ ஒருவரையொருவர்‌ அன்புகூர்ந்து வாழ்வார்கள்‌ என கூறும்படியாய்‌ இல்லை என்பதுதான்‌!

மேற்கூறியதற்கு ஒப்பான ஜெய வாழ்க்கையை புதிதாய்‌ மனந்திரும்பிய விசுவாசிகளால்‌ இன்னமும்‌ வாழ முடியவில்லை என்பதை நாம்‌ விளங்கிக்‌ கொள்ள முடிகிறது! ஆனால்‌, நம்‌ தேசத்திலுள்ள சபைகளில்‌ உள்ள மூப்பர்களிடத்திலும்‌, கிறிஸ்தவத் தலைவர்களிடத்திலும்கூட சண்டையும்‌, முதிர்ச்சியயில்லா ஜீவியமும்‌ காணப்பட்டால்‌ அதைக்‌ குறித்து நாம்‌ என்னவென்று சொல்வது? இந்த இழிவான நிலைமை, இயேசு நம்மிடம்‌ ஒப்படைத்த ராஜரீக சுவிசேஷ கட்டளையின்‌ மிகமுக்கியமான இரண்டாவது கட்டளையாகிய “சீஷராக்குங்கள்‌!... பின்பு, இயேசுவின்‌ போதனைகள்‌ அனைத்திற்கும்‌ பூரண கீழ்ப்படிதலுக்குள்‌ நடத்துங்கள்‌!!” (மத்தேயு 28:19,20) என்ற கட்டளை எவ்வளவாய்‌ உதாசீனம்‌ செய்யப்பட்டுள்ளது என்பதை காட்டும்‌ தெளிவான நிரூபணமாயிருக்கிறது!!

ராஜரீக சுவிசேஷ கட்டளையின்‌ முதல்‌ பகுதி (மாற்கு 16:15) மாத்திரமே வழக்கமாய்‌ எல்லா இடங்களிலும்‌ வலியுறுத்தப்படுகிறது. அதன்படி, சுவிசேஷ ஊழியமும்‌ அதை கர்த்தர்‌ அடையாள - அற்புதங்கள்‌ மூலமாய்‌ உறுதிபடுத்துவது மாத்திரமே இன்று முக்கிய இடத்தை வகிக்கிறது!

ஆனால்‌, மத்தேயு 28:19,20 வசனங்களின்‌ வலியுறுத்தலோ “சிஷத்துவத்தைப்‌” பற்றியதாய்‌ இருக்கிறது. அதாவது, இயேசுவின்‌ கட்டளைகள்‌ அனைத்திற்கும்‌ முழுமையாய்‌ கீழ்ப்படிந்து அதன்மூலம்‌ வெளிப்படுத்தும்‌ ஓர்‌ சீஷனின்‌ மகிமையான ஜீவியம்‌! இன்றைய திரளான கிறிஸ்தவர்களோ சுவிசேஷத்தின்‌ முதல்‌ பகுதியில்‌ ஆர்வம்‌ கொண்டிருக்கிறார்கள்‌... வெகு சிலரே, இரண்டாவது பகுதியாகிய “சீஷத்துவ வாழ்க்கையில்‌” ஆர்வம்‌ கொண்டிருக்கிறார்கள்! இருப்பினும்‌ இரண்டாம்‌ பகுதியில்லாமல்‌ முதல்‌ பகுதி மாத்திரமே பெற்றிருப்பவர்கள்‌ “அரைகுறையான... உபயோகமற்ற பாதி மானிட உடலுக்கே” ஒப்பாயிருக்கிறார்கள்‌. ஆனால்‌, இத்தனை கேடான தங்கள்‌ நிலையையாவது இன்று எத்தனை பேர்‌ தெளிவுற கண்டிருக்கிறார்கள்‌?!

இயேசு தன்‌ ஊழியத்தில்‌ சுவிசேஷ ஊழியத்தோடு சேர்த்து குணமாக்கும்‌ ஊழியமும்‌ செய்தபடியால்‌, அவரைத்‌ திரளான ஜனங்கள்‌ பின்பற்றினார்கள்‌. அதேசமயம்‌, அவர்களிடத்தில்‌ அவர்‌ திரும்பிப்‌ பார்த்து “சீஷத்துவத்தையும்‌” போதித்தார்‌ (லூக்கா 14:25,26). இவ்வாறு, இயேசுவைப்‌ போலவே இன்றைய சுவிசேஷகர்கள்‌ தாங்களே இப்பணியை செய்வார்களா? அல்லது இந்த சுவிசேஷகர்கள்‌ ஆரம்பித்த பணியை நிறைவு செய்வதற்கு அப்போஸ்தலர்கள்‌, தீர்க்கதரிசிகள்‌, போதகர்கள்‌, மேய்ப்பர்களின்‌ ஒத்தாசையையாவது நாடுவார்களா?

இன்றைய பெரும்பாலான பிரசங்கிகள்‌ “சீஷத்துவத்தின்‌ செய்தியைப்‌” பிரகடனம்‌ செய்திட தயங்குவது ஏன்‌? ஏனென்றால்‌, இச்செய்திகள்‌ அவர்களின்‌ சபையில்‌ உள்ள மக்களின்‌ எண்ணிக்கையை குறைத்துவிடும்‌, அவ்வளவுதான்!‌! “அதினாலென்ன, எங்கள்‌ சபைகளின்‌ ஆவிக்குரிய தரம்‌ இப்போது உயர்ந்திருக்கிறதே” என்ற தேவனுக்கேற்ற உணர்வை பிரதிபலிக்கும்‌ நல்ல பங்கை இவர்கள்‌ இழந்துவிட்டார்கள்‌!!

திரளான ஜனங்களுக்கு சீஷத்துவத்தை இயேசு பிரசங்கித்த போது, அந்த செய்திகள்‌ அத்திரள்கூட்டத்தை வெறும்‌ 11-சீஷர்களாகச்‌ சுருங்கச்‌ செய்துவிட்டது (யோவான்‌ 6:2-ம்‌ வசனத்தை 6:10-ம்‌ வசனத்தோடு ஒப்பிட்டுப்‌ பாருங்கள்‌). இன்னும்‌ பலர்‌, இச்செய்திகள்‌ மிகவும்‌ கடினமானது எனக்‌ கூறி விலகிச்‌ சென்றுவிட்டார்கள்‌! (யோவான்‌ 6:60,66).

இவ்வாறெல்லாம்‌ சம்பவித்தாலும்‌, இயேசுவோடு இணைந்திருந்த அந்த 11-சீஷர்களைக்‌ கொண்டுதான்‌ தேவன்‌ தன்‌ நோக்கத்தை இவ்வுலகில்‌ வல்லமையாய்‌ நிறைவேற்றி முடித்தார்‌!!

இன்று இந்த பூமியில்‌ “கிறிஸ்துவின்‌ சரீரமாய்‌” திகழ்ந்திடும்‌ நாம்‌, அன்று முதலாம்‌ நூற்றாண்டில்‌ அப்போஸ்தலர்கள்‌ செயலாற்றிய அதே ஊழியத்தையே நாமும்‌ இப்போது செய்திட வேண்டும்‌! ஆம்‌, ஜனங்கள்‌ கிறிஸ்துவண்டை நடத்தப்பட்ட பின்பு... அவர்கள்‌ சீஷத்துவத்திற்கும்‌, கீழ்ப்படிதலுக்கும்‌ தொடர்ந்து நடத்தப்படன் வேண்டும்‌!! அப்போது மாத்திரமே “கிறிஸ்துவின்‌ சரீரம்” கட்டப்பட முடியும்‌.

ஜீவனுக்குப்‌ போகிற வழி மிகவும்‌ குறுகலானது, அதைக்‌ கண்டுபிடிப்பவர்கள்‌ வெகு சிலரே! கேட்பதற்கு காதுள்ளவன்‌ கேட்கக்கடவன்‌!!