மகிழ்ச்சியான திருமண வாழ்விற்கு ஆலோசனைகள்

Article Body: 

மகிழ்ச்சியான திருமண வாழ்விற்கு சில ஆலோசனைகளை இங்கே காணலாம்:

முதலாவதாக: உங்களுடைய திருமண நாளை, திருமண வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, உங்களுடைய திருமண நாளன்று திட்டமிட்டபடி காரியங்கள் சரியாக நடக்கவில்லை என்றாலும், உங்களுடைய திருமண வாழக்கையில் கவனம் செலுத்துங்கள்.

உங்களுடைய திருமண வாழ்க்கை முழுவதிலும் கீழ்கண்டவைகளை நினைவில் கொள்ளுங்கள்:

இயேசு கிறிஸ்துவே எப்பொழுதும் முதலாவதாக இருக்க வேண்டும். மனைவியோ அல்லது கணவரோ இரண்டாவதாகவும், பிள்ளைகள் மூன்றாவதாகவும், பெற்றோர்கள் நான்காவதாகவும் இருக்க வேண்டும்.

கணவன்மார்களே! குடும்பத்திற்குத் தலையாக இருக்கும் நீங்கள், உங்களுடைய வீட்டின் தலைமைத்துவத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதீர்கள்.

மனைவிகளே! உங்களுடைய கணவரை எப்பொழுதும் மதிப்பிற்குரியவராகக் கருதி, அவரையே தலைவராக இருக்க அனுமதியுங்கள்.

நீங்கள் ஒருபோதும் சோர்வடையக்கூடாது – குறிப்பாக நீங்கள் பூரணமற்றவர் (not perfect) என்பதையும் உங்களுடைய வாழ்க்கைத் துணை பூரணமற்றவர் என்பதையும் நீங்கள் கண்டறியும்போது சோர்வடையக்கூடாது.

நீங்கள் தவறி விழும்போது (நீங்கள் இருவருமே அநேக முறை தவறி விழுவீர்கள்), சீக்கிரமாய் தேவனிடம் மன்னிப்பு கேளுங்கள், உடனடியாக ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேளுங்கள். உங்களை நீங்களே ஒருபோதும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக்கொள்ளாதீர்கள்.

மிகவும் துரிதமாய் ஒருவரையொருவர் மன்னித்து, நடந்த நிகழ்வை உங்களுக்குப் பின்பாக போட்டு விடுங்கள்.

ஒருபோதும் கடந்தகால தவறுகளை ஒருவருக்கொருவர் நினைவுபடுத்தாதீர்கள்.

கடந்தகால தயவுகளை (Kindnesses) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அவைகளை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

ஒருவரிடத்திலொருவர் காணும் நன்மையான காரியங்களுக்காகவும், உங்களுடைய வாழ்க்கைத் துணை உங்களுக்காகச் செய்யும் எல்லா காரியங்களுக்காகவும் தேவனுக்கு நன்றியுள்ளவராய் இருங்கள். மேலும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் உங்களுடைய நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.

ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு, கிறிஸ்துவுக்கொத்த அன்பினால் உங்களை நிறைத்திடும்படி பரிசுத்த ஆவியானவரைக் கேளுங்கள் (ரோமர் 5:5).

வீட்டில் எரிச்சலூட்டுகிற சூழ்நிலைகளில் சுயத்திற்கு மரித்து - கிறிஸ்து எப்படி நடந்து இருந்திருப்பாரோ அப்படியே நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டிலிருந்து முறுமுறுப்பையும், மனக்குறைவையும் முற்றிலுமாக அகற்ற நாடுங்கள் - இல்லையெனில், அது உங்களுடைய திருமண வாழ்க்கையைக் கொஞ்சம் கொஞ்சமாய் அழித்துவிடும்.

பணத்தையும், பொருட்களையும் பயன்படுத்துங்கள் - ஆனால், அவைகளை நேசிக்காதீர்கள், ஏனென்றால், அது உங்களை அழித்துவிடும்.

தேவன் உங்களுடைய குடும்பத்தை ஏதோவொரு வகையில் ஆசீர்வதிக்கும்போது, அதற்கான எல்லா மகிமையையும் அவருக்கு மாத்திரமே கொடுங்கள்.

உங்களுடைய உரையாடலில் ஒருவருக்கொருவர் சாந்தமாய் (Gentleness) பேசுகிற பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஜனங்களின் தோல்விகளைப் பற்றி உங்களுடைய வீட்டில் வீண்பேச்சு பேசாதீர்கள், ஆனால் அவர்களுடைய தோல்விகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டு, அவைகளை உங்களுக்கு எச்சரிக்கைகளாக எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு முற்றிலும் உண்மையுள்ளவராக இருங்கள். ஒருபோதும் உங்களுடைய வாழ்க்கைத் துணையை வேறு யாரோடும் ஒரு கணப்பொழுதும் கூட ஒப்பிடாதீர்கள். உங்களுடைய சிந்தனையிலும் கூட ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவராக இருங்கள்.

தேவன் உங்களுடைய சரீர தாம்பத்திய உறவை, ஒருவருக்கொருவர் தூய்மையும் உண்மையுமான அன்பின் வெளிப்பாடாக நியமித்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எப்போதும் அதை அப்படியே காத்துக்கொள்ளுங்கள்.

தேவன் ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் உங்களுக்கு உதவி செய்து அதனைக் கடக்கச் செய்வார் என்று நம்புங்கள்.

உங்களுடைய ஸ்தல சபையில் இருக்கும் தேவ மனிதர்களோடு கொண்டுள்ள ஐக்கியத்தை மேன்மையாக எண்ணுங்கள்.

ஒரு நல்ல திருமண வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ளுவதற்கு, செல்ல வேண்டிய தூரம் வெகு தூரம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் "ஆயிரம் மைல்களின் பிரயாணம் ஒவ்வொரு சமயத்திலும் ஒரு அடி எடுத்து வைத்தால் மாத்திரமே நிறைவுபெறும் (the journey of a thousand miles is made one step at a time)”. எனவே எப்போதும் முன்னோக்கிச் சென்று கொண்டேயிருங்கள்.

கர்த்தர் எப்போதும் உங்கள் பட்சத்தில் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள் - அவர் உங்களுக்கு உதவுவதற்கு எப்போதும் ஆயத்தமாகவே இருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. ஆனால் கிறிஸ்துவை மையமாகக் கொண்டுள்ள மகிமையான ஒரு திருமண வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ளுவதற்கு இது ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுக்க உதவும். கர்த்தர் பூரணத்தை நோக்கிச் செல்ல உங்களை உற்சாகப்படுத்துவாராக.