உப்பு நிறைந்ததோர் புதிய பாத்திரம்!

Article Body: 

தீர்க்கதரிசி எலியா உயிருடன் "பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட" நிகழ்ச்சியை 2 இராஜாக்கள் 2:1-22 வசனங்களில் நாம் வாசிக்கிறோம் அவன் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, அவனுடைய ஊழியத்தை எலிசா ஏற்றுக்கொள்வான் என தேவன் எலியாவிடம் முன்கூட்டியே கூறியிருந்தார். இதற்கு ஒப்பனையாகவே, ஆண்டவர் இயேசுகிறிஸ்து இந்த பூமியிலிருந்து "பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும்" தான் மேற்கொண்ட ஊழியப் பணியை தன் சீஷர்களிடத்தில் ஒப்படைத்துச் சென்றார்! எலிசா எவ்வாறு எலியாவின் ஆவியைப் பெற்றானோ, அதேபோல் சீஷர்களும் கிறிஸ்துவின் ஆவியை பெந்தெகொஸ்தே நாளில் பெற்றார்கள் என அப்போஸ்தலர் 1:1-9 வசனங்களில் நாம் காண்பது எத்தனை பரவசமாயிருக்கிறது!!

உன்னதங்களில் உயர்த்தப்பட்ட ஆண்டவர் இயேசுவின் ஆளுகை:

தீர்க்கதரிசியின் புத்திரர்கள் எலிசாவிடம் வந்து "கர்த்தர் இந்நாளில் உன் எஜமானாகிய எலியாவை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார்" என கூறினார்கள் (2 இராஜா2:3,5) ஆனால் எலியா எடுத்துக்கொள்ளப்பட்ட பின்போ, "அவர் மெய்யாகவே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்!" என்பதை அவர்கள் விசுவாசிக்கவில்லை! அதற்கு பதிலாக, இந்த பூமியிலேயே அங்கும் இங்கும் அவரைத் தேடினார்கள்! இதைப்போலவே, இன்றும் திரளான கிறிஸ்தவர்கள் "எங்கள் ஆண்டவர் பரலோகத்தில் இருக்கிறார்!" என்றே கூறுகிறர்கள். ஆனால், அண்டசராசர சர்வ சிருஷ்டிப்பிற்கும் மேலாக ஆண்டவர் இயேசு உயர்த்தப்பட்டு இருக்கிறார் என்ற உண்மையை இவர்களின் கண்கள் 'நிஜமாய்' காணவில்லை!! எலிசாவைப் பார்த்து "நான் உன்னைவிட்டு பரத்திற்கு மேலாக எடுத்துக்கொள்ளப்படுகையில், என்னை நீ கண்டால் மாத்திரமே என்னுடைய ஆவியின் இரட்டிப்பான வரம் உனக்குக் கிடைக்கும்!" என்று எலியா கூறியிருந்தார். ஆம், சர்வ சிருஷ்டிப்பிற்கும் மேலாக ஆண்டவர் இயேசு உயர்த்தப்பட்டு இருப்பதை நம் விசுவாசக் கண்களால் கண்டால் மாத்திரமே, நாமும் ஆவியின் நிறைவை பெற்றுக்கொள்ள முடியும்!

இவ்வாறாக, கிறிஸ்து வானங்களுக்கு மேலாய் உயர்த்தப்பட்டதை எபேசுவின் விசுவாசிகள் தங்கள் மனக்கண்களால் காண வேண்டுமென்றே பவுல் அவர்களுக்காக ஜெபித்தார் (எபேசி.1:18-23).

ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனத்தின் நடுவே வீற்றிருக்கும் காட்சியை வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் நாம் காண்கிறோம். ஆம் "சகலத்திற்கும்" மேலாக நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை

தேவன் உயர்த்தி இருக்கிறார்! வானத்திலும் பூமியிலும் உள்ள "சகல அதிகாரமும்" இப்போது அவர் கையிலேதான் இருக்கிறது! "இந்த ஆண்டவர்தான்" இன்று நம் மத்தியிலும் இருக்கிறார் ஆகவேதான், அமெரிக்க ஜனாதிபதியோ அல்லது நம் இந்திய பிரதம மந்திரியோ என்ன செய்கிறார்கள் அல்லது என்ன சொல்லுகிறார்கள் என்பதைக்குறித்து "ஒரு துளியேனும்" நாம் அஞ்சுவதே இல்லை.... ஏனெனில் "இன்றும்" "என்றென்றும்" சகல அதிகாரமும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கைகளில்தான் இருக்கிறது! 'இன்னமும்' இருக்கும்!! ஒரு தேவனுடைய பிள்ளையை, ஆண்டவரின் அனுமதியில்லாமல் இந்த பூமியில் ஒரு மனுஷன்கூட தொட்டுவிட முடியாது!! அனால், அந்தோ . . . தீர்க்கதரிசிகளின் புத்திரர்களோ இதை விசுவாசிக்காமல் போய் விட்டார்கள். இது போன்ற ஜனங்கள் யாராயிருநதாலும் அவர்களுக்கு தேவனுடைய வல்லமை ஒருக்காலும் கிட்டாது!

பாழாய்போன தேசத்திற்கு தேவன் தரும் க்ஷேமம்:

இந்த எலிசா எரிகோவிற்கு வந்தபோது அங்குள்ள மனுஷர்கள் "இதோ, இந்த பட்டணம் குடியிருப்புக்கு நல்லது..... ஆனால், தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ் நிலம்!" என்றார்கள் (2 இரா. 2:19-22) அருமையான பட்டணம் இருந்தும், ஜீவனுக்குத் தேவையான முக்கியமானதோ அந்தப் பட்டணத்தில் இல்லை! ஆம், தண்ணீர் கெட்டுப்போய் இருந்தது!!

எது இருந்து என்ன? பிழைத்து வாழ தண்ணீர் வேண்டுமே! நல்ல கட்டிடம் இல்லாமல், பல நாட்கள் உணவு கூட இல்லாமல் இருந்துவிடலாம்... ஆனால், தண்ணீர் இல்லாமல் ஜீவிப்பதோ கூடாத காரியம்!! இன்று ஜனங்களில் ஜீவியமும் இப்படித்தான் இருக்கிறது' தோற்றத்திற்கு அழகுள்ள நகரம் ஆனால் கெட்ட தண்ணீர், பாழ்நிலம்.... அங்கே யாதொரு கனியும் இல்லை!! வெளித்தோற்றத்தின்படி நன்றாய் வாழ்ந்து கொண்டு அவர்களின் இருதயமோ கெட்டுப்போய் இருக்கிறது! "அங்கே நித்திய ஜீவன் இல்லை!!" இதுதான் இந்த உலகத்தின் நிலை என்பது மாத்திரமல்லாமல், அநேக சபைகளின் நிலைமையும் இன்று இப்படித்தான் இருக்கிறது!!

இதே எரிகோ பட்டணத்தில், "தேவனுடைய வல்லமை யோசுவாவின் காலத்தில் எத்தனை அதிகமாய் காணப்பட்டது! ஆனால், 500 வருடங்களுக்குப் பிறகு, அதே பட்டணத்தில் இப்போது வல்லமை இல்லையே! அங்கே நிலம் பாழாகி கனியற்றுப்போனது!

அது போலவே, "2000 வருடங்களுக்கு முன்பு தேவனுடைய வல்லமை அவருடைய சபையில் எத்தனை அதிகமாய் வெளிப்பட்டது! ஆனால், தங்களைப் புதிய ஏற்பாட்டின் சபைகள் என கூறிக் கொள்பவர்களிடம் "இன்று" நாம் காணும் நிலை என்ன? அங்கே துதியும் ஆராதனையும் தோற்றத்திற்கு நன்றாக இருக்கிறது....ஆனால் ஜீவத்தண்ணீரோ கெட்டுப்போய் இருக்கிறது!!

இந்த கெட்டுப்போன தண்ணீருக்கும், பாழாய்போன நிலத்திற்கும் தேவன் எவ்வாறு க்ஷேமத்தைத் திரும்பத் தர முடியும்? வறண்டுபோன நம் ஜீவியத்திலிருந்து சுத்தாங்க ஜீவநதி புரண்டோட என்ன வழியிருக்கிறது? அதற்கு தேவன் தரும் விடைதான் இந்த 20-ம் வசனம்:"ஒரு புது தோண்டியை (பாத்திரத்தை) எடுத்து அதிலே உப்புப் போட்டு கொண்டுவாருங்கள்!"

அவ்வளவுதான் பாழாய்போன இந்த உ லகத்திற்கும், கனியற்றுப்போன சபைகளுக்கும் இன்று தேவன் தரும்

க்ஷேமம் "உப்பு நிறைந்த ஓர் புதிய பாத்திரமேயாகும்." அந்த உப்பானது கெட்டுப்போன தண்ணீரில் கொட்டப்பட்ட உடன் "இந்த தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்! இனி இதினால் சாவும் வராது, நிலமும்

பாழாய் போகாது" என கர்த்தர் கூறினார் (வசனம் 21).

ஆனால், அவ்வாறு கொட்டப்படும் உப்பு சாரம் உள்ளதாய் இருக்க வேண்டும்! அந்த உப்பு சாரம் இழந்து இருந்தால் கெட்டுப்போன நிலத்திற்கு ஒருக்காலும் ஆரோக்கியத்தைக் கொண்டுவர முடியாது!

க்ஷேமத்திற்கு தேவன் தரும் வாக்குத்தத்தம்:

உப்பு சாரத்தை இழந்திருந்தால், மீண்டும் சாரம் ஏற்றப்பட முடியுமா? ஆம், அதற்கும் தேவன் ஒரு வழியை வைத்திருக்கிறார்.

"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்திற்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்" என்றே தேவன் கூறுகிறார் (2 நாளாகமம் 7:14).

ஆம், நம்முடைய ஜீவியத்தில் சாரத்தை இழந்திருப்போமென்றால், இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்ட நான்கு நிபந்தனைகனை நாம் நிறைவேற்றும்போது, இழந்துபோன சாரத்தை நாம் மீண்டுமாய் பெற்றுவிட முடியும்!

1. நம்மை நாமே தாழ்த்துதல்:

நம்மை நாமே தாழ்த்துவதுதான் முதல் நிபந்தனையாய் இருக்கிறது.

இதை தேவனுடைய வார்த்தை குறிப்பிடும்போது "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது…. அவர் அடிமையின் ரூபமெடுத்து…. தம்மைத்தாமே தாழ்த்தினார்" என்றே கூறுகிறது (பிலிப்பியர் 2:5-8).

எத்தனையோ காரியங்கனைக் குறித்து நாம் பெருமை கொண்டவர்களாய் இருந்திட முடியும். நம்முடைய தகுதியும், நாம் பெற்ற பிரபல்யமும் நமக்கு பெருமையைத் தந்துவிட முடியும். இயேசு இப்பூமியில் "பிரபல்யம்" (POPULAR) கொண்டவராய் இருந்தாரா? "அவர் அசட்டைபண்ணப்பட்டவரும் மனுஷரால் புறக்கணிக்கப் பட்டவருமாயிருந்தார்.'" என்றல்லவா ஏசாயா 53:3 கூறுகிறது! ஆம், இப்பூமியில் நம் ஆண்டவர் இயேசு ஒருபோதும் 'பிரபல்யமான' மனிதனாய் காணப்படவேயில்லை. அதைக்குறித்து இயேசுவே குறிப்பிட்டு கூறும்போது, "எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய் பேசும்போது உங்களுக்கு ஐயோ!" என்றே கூறினார் (லூக்கா 6:26) நம் எஜமானனே அப்படியிருக்க, "சீஷன் எஜமானனைக் காட்டிலும் மேலானவன் இல்லையே!" ஆகவே, நாம் பிரபல்யமாய் இருப்பதை நாடுவதற்கு நமக்கு எந்த உரிமையும் கிடையாது!

இதைப்போலவே, நம்முடைய கல்வித் தகுதியை வைத்து நாம் பெருமை அடையலாம்! நம் அழகைக் குறித்து பெருமை அடையலாம்! நம் திறமையை எண்ணி பெருமை அடையலாம்! நம் மூதாதையாரைக் குறித்து பெருமை அடையலாம்! இவை ஒன்றில்கூட இயேசு பெருமை கொள்ளவில்லை என்பதை யோவான் 7:15, ஏசாயா 52:14, யோ 5:19,30, மத்தேயு 1-ம் அதிகாரம்….. ஆகிய வசனங்களில் வாசித்து அறியுங்கள்.

நாம் கட்டிய வீட்டைக்குறித்து கூட நாம் பெருமையாய் இருக்கலாம்! ஆனால், நம் எஜமானனோ "தலைசாய்க்க இடமில்லாதவராய்" இருந்தார் என்றல்லவா வேதம் கூறுகிறது. நம் ஆண்டவராகிய இயேசுவோ எல்லா மனுஷருக்கும் ஓர் அடிமையாய் அல்லவா இருந்தார்! மேஜையில் அமர்ந்திருப்பவர்களோ? பரிமாறுகிறவர்களோ? இவர்களில் யார் பெரியவன்? மேஜையில் அமர்ந்திருப்பவன் அல்லவா பெரியவன்! "அப்படியே நானும் உங்களிடம் பணிவிடை செய்கிறவனாகவே இருந்தேன்!" என்றே இயேசு கூறினார். இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த ராத்திரியில், மேல் அறையில், ஓர் சீலையை கட்டிக்கொண்டு தன் சீஷர்களின் கால்களைக் கழுவினாரே! இந்த இழிவான அடிமையின் வேலையை சீஷர்களில் ஒருவர் கூட செய்திடத் துணியவில்லையே!!

இயேசு சிலுவையில் அறையப்படுவதைத் குறித்த ஓர் தீர்க்கதரிசன சங்கீதமே சங்கீதம் 22-ம் அதிகாரமாகும். அவர் சிலுவையில் தொங்கியபோது அடைந்த அனுபவத்தையே 6-ம் வசனம் நமக்கு விளக்கிக் கூறுகிறது: "நானோ ஒரு புழு, மனுஷனல்ல!" என்பதே அவருடைய சிலுவை அனுபவமாயிருந்தது.

ஒரு புழு தரையில் ஊர்ந்து செல்லும் போது, அதை ஒரு பொருட்டாக எண்ணாமலே ஜனங்கள் அந்தப் புழுவை மிதித்துச் செல்லுவார்கள்! இந்த புழுவைப்போலவே நம் ஆண்டவரை ஜனங்கன் நடத்தினார்கள். அப்படியிருக்க, நீங்களோ அல்லது நானோ தேவனுக்கு முன்பாக "ஒரு புழுவைக் காட்டிலும் மேலாக" இருந்திட நமக்கு எந்த உரிமையும் இப்பூமியில் இல்லை!

ஒரு புழு "குறை கூறியதாக" நீங்கள் என்றாவது கண்டதுண்டா? அந்தப் புழுவை ஜனங்கள் உதைக்கலாம், காலால் நசுக்கலாம், கொல்லவும் செய்யலாம்! ஆனால் அந்தப் புழுவோ "குறை சொல்லும் படி" ஒருக்காலும் தன் வாயைத் திறக்காது!

ஆனால், ஒரு பாம்போ இந்த சுபாவத்திற்கு நேர் எதிரிடையானதாகும்! ஒரு பாம்பை உதைத்துப் பாருங்கள், அடுத்த கணமே அது உங்களைக் கொத்தும்! இன்று உலகத்திலுள்ள ஜனங்களும் இப்படியே பாம்பைப்போல் இருக்கிறார்கள் ஒரு சிறிய தீங்கு அப்பாம்பிற்கு ஏற்பட்டாலும், கோபத்தோடு சீறும்! இந்தப் பாம்பைப் போலவே விசுவாசிகளும் நடந்துகொண்டால் அப்படிப்பட்டவர்களே சாரம் இழந்த உப்பைப் போன்றவர்களாய் இருக்கிறார்கள். ஆகவேதான் அவர்களின் நிலம் பாழாகி, கனியற்றுப்போய் கிடக்கிறது! அநேக சமயங்களில், "அதித கனிதரும் எழுப்புதலுக்காக" நாம் ஜெபிக்கிறோமே! அடுத்தமுறை அவ்வாறு நாம் ஜெபிப்பதற்கு முன்பாக இந்த "முதல் நிபந்தனையை" நாம் நிறைவேற்றியிருக்கிறோமா? என்ற கேள்வியை நமக்குள் கேட்டுப் பார்ப்போமாக! ஆம், நம் ஆண்டவரைப் போலவே நம்மை நாம் தாழ்த்தியிருக்கிறோமா?

2. ஜெபம் செய்தல்:

"நாம் ஜெபித்திட வேண்டும்!" என்பதே அந்த வசனத்தில் (2 நாளா 7:14) ஆண்டவர் குறிப்பிட்ட இரண்டாவது நிபந்தனையாகும்

நாம் யாவருமே ஜெபத்தைப் பற்றி அதிகமாகவே பேசுகிறோம் ஆனால் 'மெய்யாய்' ஜெபிப்பதோ வெகு குறைவேயாகும்! நாம் ஏன் ஜெபிப்பதில்லை? நம் ஜெபத்திற்கு ஆண்டவர் பதில் தருவார் என்பதை

நாம் விசுவாசிக்கவில்லை! என்பதே அதற்கு காரணமாகும் "தேவன் ஜெபத்திற்குப் பதிலளிப்பவர்!" என்பதை நாம் மெய்யாய் விசுவாசித்திருப்போமென்றால், நம் ஜெப ஜீவியம் அளவில்லா புத்துயிர் பெற்றிருக்க முடியும்!! இதைக்குறித்து நம் ஆண்டவர் இயேசு கூறும்போது, "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" (லூக்கா 11:13) என்றே ஆணித்தரமாகக் கூறினார்.

அவருடைய பிள்ளைகள் ஜெபிக்கும்போது, தேவன் எப்படியெல்லாம் செயல்படுகிறார் என்பதற்கு ஏராளமான அனுபவ சாட்சிகளை என் சொந்த ஜீவியத்தில் நான் பெற்றிருக்கிறேன். 1962-ம் வருடம் நான் பரிசுத்தவான் பக்தசிங்குடன் கொண்டிருந்த ஐக்கியத்தில் ஹைதராபாத்தில் உள்ள "எபிரோனில்" கூடும் வருடாந்திர கன்வென்ஷனில் கலந்துகொண்டு சொல்லொண்ணா ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்தேன். ஆகவே 1963-ம் வருடம் நடைபெறவிருந்த கன்வென்ஷனிலும் கலந்துகொள்ள மிகுந்த வாஞ்சையோடு காத்திருந்தேன். அப்போது நான் கேரளாவில் கொச்சின் நகரத்திலுள்ள கப்பற்படை தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன் அந்த கன்வென்ஷன் நடைபெறும் மாதத்தின் முதல் தேதியில், ஹைதராபாத் செல்ல எனக்கு அனுமதி கிடைத்துவிட்டது! ஆனால் ஒரு வாரம் கழித்து, மைசூரில் நடைபெறும் அகில இந்திய கண்காட்சியில் எங்கள் கப்பற்படையும் பங்கேற்கவேண்டும் என முடிவு எடுக்கப்பட்டபடியால், என்னுடைய விடுமுறை அனுமதி ரத்து ஆகிவிட்டது!! ஆகவே, கன்வென்ஷன் போவதற்குரிய எல்லா நம்பிக்கையையும் அச்சமயத்தில் நான் இழந்துபோனேன்!

சிலநாட்கள் கழித்து, அதாவது அக்டோபர் 12-ம் தேதி நான் என்னுடைய வழக்கமான வேதபகுதியாக 2 சாமுவேல் 2-ம் அதிகாரத்தை தியானித்துக் கொண்டிருந்தேன். அந்த அதிகாரத்தின் முதல் வசனம் "தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா?" என்று விசாரித்தான். அதற்கு கர்த்தர் "போ என்றார்!" என நான் வாசித்தவுடன் "ஒருவேளை, ஆண்டவர் என்னை கன்வென்ஷன் கூட்டத்திற்குப் போகும்படி இவ்வசனத்தின் மூலம் பேசுகிறாரோ?" என உணர்த்தப்பட்டேன். உடனே நான் முழங்கால்படியிட்டு "ஆண்டவரே நான் கன்வென்ஷன் கூட்டத்திற்குச் செல்ல நீர் விரும்புகிறீரா?" என கேட்டு ஜெபித்தேன் ஜெபித்துவிட்டு தொடர்ந்து அந்த வசனத்தை வாசித்தேன் : "எவ்விடத்திற்குப் போகலாம்? என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எபிரோனுக்குப் போ! என்றார்" என வாசித்தவுடன், நான் கன்வென்ஷன் கூட்டத்திற்கு ஹைதராபாத்தில் உள்ள எபிரோனுக்குச் செல்லும்படி ஆண்டவர் என்னிடம் தெளிவாகப் பேசியதை உணர்ந்தேன்! உடனே நான் ஆண்டவரிடம் "ஆண்டவரே, என் விடுமுறை அனுமதி உம் சித்தத்தின்படி ரத்து ஆகியிருந்தால் அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால், அந்த "ரத்து" நான் எபிரோனுக்குச் செல்ல சாத்தான் கொண்டுவந்த தடையாய் இருக்குமென்றால், அந்த சாத்தானை உம்முடைய நாமத்தில் நான் இப்போது எதிர்த்து நிற்கிறேன்!" என ஜெபித்தேன். அப்போது ஆண்டவர் என்னைப் பார்த்து: "உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும்" (மத். 18:19) என்று கூறினார். ஆண்டவர் தந்த இந்த வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொண்டு, நான் உடனே சில சகோதரர்களோடு சேர்ந்து ஜெபித்தேன்.

அக்டோபர் 14-ம் தேதி, அதாவது, சரியாய் 2- நாட்கள் கழித்து "கண்காட்சியில் கப்பற்படை பங்கேற்க தேவையில்லை!" என புதுடெல்லியிலிருந்து ஆர்டர் வந்தது! இனி என்ன? நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் "எபிரோன்" சென்று கன்வென்ஷன் கூட்டங்களில் கலந்துகொண்டேன்!! பார்த்தீர்களா, தேவனுடைய பிள்ளைகளின் ஜெபம் "கண்காட்சி நடைபெற இருந்த கப்பற்படையின் பங்கை" ஆண்டவர் தள்ளுபடி செய்யும்படி நடத்திவிட்டதே! ஆம், நாம் மாத்திரம் அவரிடம் விசுவாசத்துடன் ஜெபிக்கிறவர்களாயிருந்தால்,

தேவன் நமக்காக வானத்தையும் பூமியையும்கூட அசைத்துவிடுவார்!!

3. தேவனுடைய முகத்தைத் தேடுதல்:

"தேவனுடைய முகத்தை நாம் தேட வேண்டும்" என்பதே 2 நாளா.7:14 நமக்கு கூறும் மூன்றாவது நிபந்தனையாகும்.

தாவீது தன்னுடைய சங்கீதம் 27:4-ம் வசனத்தில் "கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்! நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்!!" என கூறினார்.

தாவீது ஓர் பேரரசன்! எண்ணற்ற யுத்தங்கனை வென்றவன்!

ஆகிலும், "ஆண்டவரே, இவைகளில் நான் திருப்தி அடையவேயில்லை. உம்மிடத்தில் நான் விரும்பிக் கேட்பது ஒன்றே ஒன்றுதான்! அந்த விருப்பம், இந்த முழு உலகத்திற்கும் நான் ராஜனாய் வரவேண்டும்

என்றோ அல்லது நான் புகழ் ஏணி ஏறவேண்டும் என்றோ இல்லை! மாறாக, என் ஜீவிய காலமெல்லாம் நான் உம்முடைய மகிமையின் அழகை தரிசித்திருக்க வேண்டும்!!" என கெஞ்சி நின்றான். தாவீதின் இந்த "ஒரே விருப்பமே" நம் ஜீவியத்தின் விருப்பமாயும் இருக்கிறதா?

ஆண்டவரை அதிகமாய் நேசித்த ஒரு ஏழை விதவையைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சிறிய குடிசையில் தன் ஐந்து பிள்ளைகளுடன் அந்த ஏழை விதவை வசித்து வந்தாள். அந்த அம்மாளின்

வீட்டிற்கு வந்த ஒருவர் மிகுந்த ஆச்சரியத்துடன், "நீங்கள் நிறைந்த மகிழ்ச்சியோடும், சமாதானத்தோடும் எப்போதும் காணப்படுகிறீர்களே! அது எப்படி? உங்களுக்கு அதிக பணமும் இல்லை! ஏராளமான உபத்திரவங்கள்தான் உண்டு! உங்கள் பிள்ளைகள் அடிக்கடி நோய்வாய்படுகிறார்கள்! ஆகிலும், அவர்கள் எப்போதுமே சிரித்த முகமாய் இருக்கிறார்கள்! இந்த இனிமையான உங்கள் வாழ்க்கையின் ரகசியம் என்ன?" என்று கேட்டார் இந்த கேள்விக்கு அந்த ஏழை விதவை "ஐயா, இயேசுகிறிஸ்துவே எனக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமுமாயிருக்கிறார்! இந்த உலகத்தில் அவரைத்தவிர எனக்கு வேறு எதுவுமே தேவையில்லை!!" என்றே முகமலர்ச்சியுடன் பதில் கூறினார்கள்.

ஆண்டவர் இயேசுவே நமக்கும் 'எல்லாமுமாய்' மாறிவிட்டால், நாமும் அந்த விதவையின் மகிழ்ச்சியில் பிரவேசித்துவிடலாமே! அதற்குப் பதிலாக, ஒரு சிறு துன்பம் ஏற்பட்டவுடன் நாம் குறை சொல்லுவோமென்றால், ஆண்டவர் நமக்கு எல்லாமுமாய் இன்னமும் மாறவில்லை என்பதே உண்மையாகும். இன்றிலிருந்தாவது, ஆண்டவர்

இயேசு நமக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் மாறுவாராக! அப்போது மாத்திரமே நாமும் சங்கீதக்காரனைப்போல "ஆண்டவர் இயேசுவே, இந்த பூமியில் எனக்கு உம்மையன்றி வேறு விருப்பம்

ஏதுமில்லை! எனக் கூறிட முடியும் (சங்கீதம் 73:25).

4. நம் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புதல்:

"நம்முடைய பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புவதே" நாம் நிறைவேற்ற வேண்டிய நான்காவது நிபந்தனையாகும்.

நம் ஜீவியத்தில் எத்தனையோ பொல்லாத வழிகள் உண்டு.

1) தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தும்படி கொடுக்கப்பட்ட நாவைக் கொண்டு ஜனங்கனை குறைகூறி கொண்டிருத்தல். 2) சில சகோதர சகோதரிகளிடம் கொண்டுள்ள மனக்கசப்பு. 3) உள்ளத்தில் அனுமதித்த பொறாமை. 4) பொய்சொல்லுதல் அல்லது மாய்மாலம் செய்தல். 5) வீட்டில் நம் பொறுப்புகளை உதாசீனம் செய்தல். அதாவது, கணவன் மனைவியை நேசிக்காமலும், மனைவி கணவனுக்கு கீழ்ப்படியாமலும், தகப்பன் பிள்ளைகளை கர்த்தருத்குப் பயப்படும் பயத்தில் வளர்க்காமலும், பிள்ளைகள் பெற்றோருக்கு அடங்கியிராமலும்..... போன்ற எத்தனையோ பொல்லாத வழிகள் நம்மிடத்தில் உண்டே! ஆகையால்தான், நாம் சாரமற்ற உப்பைப் போலவும், கெட்ட தண்ணீர் போலவும், பாழான நிலத்தைப் போலவும் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் துரிதமாய் நம் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புவோமாக!

5. தேவன் வழங்கும் வாக்குத்தத்தம்:

மேற்கண்ட நான்கு நிபந்தனைகனை நாம் கருத்தாய் நிறைவேற்றி விட்டால், 1) பரலோகத்திலிருக்கிற நான் அவர்களின் ஜெபத்தைக் கேட்பேன்! 2) அவர்களின் பாவங்கனை மன்னிப்பேன்! 3) அவர்களின் தேசத்திற்கு க்ஷேமத்தை கொடுப்பேன்! என தேவன் நமக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறாரே!! (2 நாளா.7:14). ஆம், நம் ஜீவியத்தில் இழந்துபோன உப்பின் சாரத்தை நாம் மீண்டும் பெறுவோம்! நம் ஜீவியம் ஆரோக்கியமடைந்து க்ஷேமம் பெற்றுவிடும்!!

உப்பு நிறைந்ததோர் புதிய பாத்திரம்:

கடைசியாக, தேவன் இப்போது எதைத் தேடிக்கொண்டிருக்கிறார் என்பதை 2 இராஜாக்கள் 2:20-ல் காணுங்கள்! எலிசா "ஓர் புதிய தோண்டியை (பாத்திரத்தை) எடுத்தான்!."

ஆம், இன்று தேவன் தம்முடைய சுவிசேஷத்தை இப்பூமியில் மலர்ந்திடச் செய்ய ஒரு புதிய ஸ்தாபனத்தையோ அல்லது வேறு எந்த புதிய உத்திகளையோ தேடிக் கொண்டிருக்கவில்லை! மாறாக, தன் நோக்கத்தை நிறைவேற்றிட உப்பினால் நிறைந்ததோர் புதிய பாத்திரத்தையே தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்!! சாரமுள்ள உப்பை ஓர் மானிட பாத்திரத்திலேயே தேவன் நிரப்பிட விரும்புகிறார்.... பின்பு, அதை நம் தேசத்தில் கொட்டும்படி விரும்புகிறார்!!

இந்த உலகத்தின் மாயையான எல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டு, முழுமையும் கிறிஸ்துவினால் நிறைந்து, எஜமானின் உபயோகத்திற்கு ஏற்ற பாத்திரமாய் நாம் மாற விரும்புகிறோமா? என்பதையே தேவன் நம்மில் தேடுகிறார்.

இங்கு காணும் மிக முக்கியமான தேவனுடைய செயலைப் பாருங்கள் அந்தப் பாத்திரம் உப்பினால் நிறைந்தவுடன், அதை எலிசா கவிழ்த்து தண்ணீரில் கொட்டினான்! 'இன்றும்' தேவன் உங்கள் ஜீவியத்தையும், என் ஜீவியத்தையும் தம்முடைய பரிபூரண ஜீவனால் நிரப்புகிறார்! ஏன் தெரியுமா? நாம் மற்றவர்களுக்குப் பிரயோஜனமாய் ஊழியத்தில் ஊற்றப்படவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே அவ்வாறு நிரப்புகிறார்!! நாம் அநேக ஆண்டுகளாய், தேவன் நம்மை பரிசுத்த ஆவியால் நிரப்பி, தம்முடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நம்மில் பொழிந்தருள ஜெபிக்கிறவர்களாய் இருந்திருத்கலாம். ஆனால், தங்கள் சுயநலத்திற்காகவே ஜெபிக்கும் இவர்களைத் தேவன் தம்முடைய பரலோக உப்பினால் ஒருபோதும் நிரப்புவதேயில்லை!

நம் ஆண்டவர் இயேசுவோ மற்றவர்களுக்கே தன் ஜீவனை ஊற்றினார். அவரைப்போலவே, நாமும் பிறருக்காக செய்திடும் ஊழியத்தில் நம்மை ஊற்றுகிறவர்களாய் இருந்திட வேண்டும்! அப்படி இல்லையென்றால்,நம் தேசத்திற்கு ஒருபோதும் க்ஷேமம் ஏற்படாது! நம்மை "ஓர் தண்ணீர் தொட்டியாய்" மாற்றிட தேவன் விரும்பாமல், மற்றவர்களுக்காகப் பாய்ந்தோடும் ஜீவநதியின் வாய்க்கால்களாய் மாற்றிடவே விரும்புகிறார்! அதுபோன்ற பாத்திரங்களையே தேவன் இன்றும் தேடிக் கொண்டிருக்கிறார்!!

தேவனிடத்தில் எந்த பட்சபாதமும் இல்லை! நீங்கள் மேற்கூறிய நான்கு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து, பிறருக்காக ஊற்றப்பட வாஞ்சை கொண்டவராயிருந்தால் நீங்கள் யாராயிருந்தாலும், தேவன் உங்களைப் பயன்படுத்துவார்! ஆமென்.

-சகரியா பூணன்.