“இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” (மத்தேயு 7:13-14).
கேடு என்பது நித்திய நரகம். இயேசு மலைப்பிரசங்கத்தில் நரகத்தைப் பற்றி பேசினாரா? ஆம், அவர் மூன்று முறை அதைப் பற்றி பேசினார். கேட்டுக்குப் போகிற வழியைப்பற்றி பார்ப்போம். மத்தேயு 5:22-இல், "நீ உன் சகோதரனை கோபித்துக்கொண்டால் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பாய். அந்தக் கோபம் வார்த்தைகளாக வெளிப்பட்டால், நீ ஆலோசனைச் சங்கத்துக்கு ஏதுவாயிருப்பாய். அது இன்னும் கடுமையான கோபவார்த்தைகளுக்குச் சென்றால், நீ எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பாய்" என்று இயேசு கூறினார். மறுபடியும், மத்தேயு 5:28-இல் "ஒருவன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்த்தால், அவன் தன் வலது கண்ணைப் பிடுங்கிப்போடுவது நலம். இல்லாவிட்டால், அவன் எரிநரகத்தில் தள்ளப்படுவான். கையானது பாலியல் பாவத்திற்கு நடத்தினால், வலது கையை வெட்டிப்போடுவது நலம்" என்றார். இல்லாவிட்டால், மத்தேயு 5:30-இல் இயேசு சொல்கிறபடி, நீங்கள் நரகத்தில் தள்ளப்படுவீர்கள். அதுவே கேட்டின் வழி. அடக்கமுடியாத கோபத்தின் வழியும், கட்டுப்படுத்தமுடியாத பாலியல் இச்சையின் வழியும் விசாலமான வழி. அந்த வழியில் திரளான ஜனங்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள். உலகம் கோபமும், பாலியல் இச்சையும், கட்டுப்படுத்த முடியாத பாவகரமான பாலியல் மோகம் நிறைந்தவர்களாலும், ஏழை ஸ்திரீகளின் வாழ்க்கையை சீர்குலைப்பவர்களாலும் நிரம்பியிருக்கிறது. அதுவே கேட்டுக்குப் போகிற விசாலமான வழியாகும்.
ஒரு மனுஷன், தான் ‘மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன்’ என்று சொல்லிக்கொண்டு, இணையத்தில் பாலியல் ஆபாச காட்சிகளைப் பார்த்து, ஏழை ஸ்திரீகளின் வாழ்க்கை பாழாக்கப் படுவதைத் தன் இச்சைக்காக பயன்படுத்திக் கொள்பவனாய் இருப்பானோ? இந்தக் கிறிஸ்தவன் தன் கோபத்தை வெளிப்படுத்திகிறவனாய் இருப்பானோ? அப்படியானால் அவன் செல்லும் வழியே கேட்டின் (அழிவின்) வழி. அப்படிப்பட்டவன் தன்னைக் கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டாலும், கிறிஸ்தவன் அல்ல என்று சொல்லிக்கொண்டாலும், அதனால் வித்தியாசமோ ஒன்றுமில்லை. அவன் கேட்டின் வழியில் இருக்கிறான். அதுவே விசாலமான வழியாகும்.
சில பிரசங்கிகள் இந்த வழியை இன்னும் விசாலமாக்குகிறார்கள், ‘நாம் இவ்வளவு குறுகிய மனப்பான்மை உடையவர்களாக இருக்கத் தேவையில்லை’ என்றும், ‘இவைகளை ஜெயிக்கிறவர்கள் மட்டுமே நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பார்கள் என்று சொல்வது தவறு’ என்றும் சொல்கிறார்கள். இல்லை, அவர்கள் இயேசு போதித்ததைவிட வாசலை அதிக விசாலமாக்குகிறார்கள். ஜீவனுக்குப்போகிற வழி ஊசியின் காதைப் போல் இருக்கிறது என்று இயேசு சொன்னார். ஒட்டகம் ஊசியின் காதின் வழியாய்ப் போகுமோ? முடியாதே. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகம் ஊசியின் காதின் நுழைவது எளிதாயிருக்கும் என்றல்லவா இயேசு சொன்னார்?! நம்முடைய ஐசுவரியம் செல்வமாக மாத்திரமல்ல, அது அறிவாற்றலாகவும் இருக்கக்கூடும். வேதவாக்கியம் என்று வரும்போது நம்முடைய அறிவைச் சார்ந்து நாம் வாதிடலாம். அறிவார்ந்த வாதங்களால் தேவனுடைய வார்த்தைகளின் தீவிரத்தன்மையை நாம் குறைத்து விடுகிறோம். கேட்டுக்குப்போகிற விசாலமான வாயிலின் வழியாக நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கப் போவதில்லை. ஆனால் ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதுவே இயேசு மலைப்பிரசங்கத்தில் போதித்த வழியாகும். இயேசு கூறுவது என்னவென்றால், "நான் இதுவரை இங்கே போதித்ததெல்லாம் இடுக்கமான வாசலும், நெருக்கமான வழியாயும் இருக்கிறது. ஆனால் அதுவே ஜீவனுக்கு நடத்திச் செல்லும் வழியாகும். அதைக் கண்டடைகிறவர்கள் மிகச் சிலரே." மலைப்பிரசங்கத்தில் இயேசு விவரித்த வழியைத் திரளான ஜனங்கள் தெரிந்துகொள்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? ஒருபோதும் இல்லை.
மலைப்பிரசங்கம் கிறிஸ்தவரல்லாத ஜனங்களுக்கானது அல்ல. அது சீஷரல்லாத மனுஷர்களுக்கானதும் அல்ல. ஆனால், மனந்திரும்புதலிலும் கிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்திலும் தங்கள் வாழ்க்கையில் ஏற்கெனவே அஸ்திபாரம் போட்டவர்களுக்காகவும், மறுபடியும் பிறந்து தேவனுடைய பிள்ளைகளானவர்களுக்காகவும் அது கொடுக்கப்பட்டது. ஒரு மனிதன் அந்த முதல் அடியை எடுத்து வைக்காமல் மலைப்பிரசங்கத்தைப் பின்பற்ற முயற்சித்தால், அவன் அஸ்திபாரமில்லாமல் வீடு கட்டுகிறவனைப் போலவே இருக்கிறான். ஆனால் இங்கே, ஆண்டவரைப் பின்பற்ற முயற்சிக்கும் சீஷர்களைப் பற்றியே பேசப்படுகிறது. இவர்கள் இது மிகவும் இடுக்கமான வாசல் என்று கண்டுபிடிக்கிறார்கள், அப்படி கண்டடைகிறவர்கள் மிகச் சிலராகவே இருக்கிறார்கள். மத்தேயு 5-7-இல் எழுதப்பட்டவைகளுக்குக் கீழ்ப்படிய திரளான ஜனங்கள் விரைந்து வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறதில்லை.
ஆயிரக்கணக்கான ஜனங்கள் அமர்ந்திருக்கும் மெகா சபைகளைப் பார்க்கும்போது, ‘இவர்களா ஜீவனுக்குப் போகிற வழியைக் கண்டடைந்த “சிலர்”?’ என்று நீங்கள் வியக்கலாம். அல்லது ‘இவர்கள் கள்ளப்பிரசங்கிகளால் தவறாக நடத்தப்பட்டு, கேட்டுக்குப்போகிற விசாலமான வழியில் செல்கிறார்களோ?’ என்று சிந்திக்கலாம். நாம் அவர்களில் எவரையும் நியாயந்தீர்க்க விரும்பவில்லை. ஒரு சிறிய பகுதியில் முப்பதாயிரம் பேர் மலைப்பிரசங்கத்திற்குக் கீழ்ப்படிந்து இயேசுவைப் பின்பற்ற விரும்பினால், நான் மிகவும் சந்தோஷப்படுவேன். மூன்று லட்சம் பேர் கொண்ட ஒரு சபை கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பினால், நான் சந்தோஷப்படுவேன். ஆனால் பூமியில் கிறிஸ்துவைப் பின்பற்றாமல் பரலோகத்திற்குப் போக விரும்பும் 3,00,000 பேரைக்குறித்து நான் சந்தோஷப்படவே மாட்டேன். நான் கவனித்தவரையில், பெரும்பாலான சபைகளில் அமர்ந்திருக்கும் ஜனங்கள் பூமியில் கிறிஸ்துவைப் பின்பற்றாமலேயே பரலோகத்திற்கு மட்டும் போக விரும்புகிறார்கள். அது இயேசு கிறிஸ்துவின் உண்மையான சபை அல்ல. அது பாதாளத்தின் வாசல்கள் நிச்சயமாகவே மேற்கொள்ளும் சபை, அங்கே பிரசங்கிமார்கள் விலைக்கிரயம் செலுத்தாமலே திரளான ஜனங்கள் உள்ளே வரும்படி வாசலை விசாலமாக்கியிருக்கிறார்கள். பணத்தை நேசித்துக்கொண்டே தேவனையும் தாங்கள் நேசிக்கிறதாக நினைத்துக்கொள்ளும்படி வாசல் போதுமான அளவு விசாலமாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இவ்வாறு வாசலை விசாலமாக்கி, தாங்கள் அந்த சபையில் இயேசுவின் சீஷர்களை உருவாக்குகிறார்கள் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள்.
மலைப்பிரசங்கத்தின் முடிவிலேயே, இந்த வாசல் மிகவும் இடுக்கமானது என்றும், ஜீவனுக்குப்போகிற இந்த வழி மிகவும் நெருக்கமானது என்றும் இயேசு விளக்கினார் என்பதை நாம் மிகத் தெளிவாகக் காணவேண்டும். அதை உண்மையில் கண்டடைகிறவர்கள் மிகமிகச் சிலரே.
இதற்கு உடனே அடுத்தபடியாக இயேசுவானவர் சொல்வது, "கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்" (மத்தேயு 7:15) என்பதே. இந்தப் பின்னணியில் இந்தக் கள்ளத்தீர்க்கதரிசிகள் யார் என்பதை நாம் தெளிவாகக் காணவேண்டும். இந்தக் கள்ளத்தீர்க்கதரிசிகள் சபைக்கு வந்து வேறு மதத்தைப் பற்றிப் பேசி, அந்த மதத்தின் புனித புத்தகத்திலிருந்து போதிக்கிறவர்களா? இல்லை. கள்ளத்தீர்க்கதரிசிகள் “ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு” வருகிறவர்கள். ஆட்டுத்தோல் என்பது இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனாகவும், கிறிஸ்துவின் ஆடாகவும் தோன்றுவதைக் குறிக்கிறது. அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் ஆடுகளைப் போலத் தோன்றுகிறார்கள். அவர்கள் கையில் பரிசுத்த வேதாகமத்துடன் வருகிறார்கள், ஆனால் வழியை விசாலமாக்கியிருக்கிறார்கள். அவர்கள் வேதவாக்கியங்களைப் புரட்டி போதிக்கிறார்கள், “இந்தக் கட்டளை நமக்கு அவசியமானதில்லை,” அல்லது “இந்த வசனம் குறிப்பிடுவது இதுவல்ல…” என்று சொல்கிறார்கள். இவர்கள் வேதவாக்கியத்தில் இருக்கும் பல காரியங்களை இவ்வாறு புரட்டுகிறார்கள். உதாரணமாய் பிலிப்பியர் 4:4-இல் உள்ள “எப்பொழுதும் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள்” என்ற வசனத்தைக் குறித்து போதிக்கும்போது, “இதன் அர்த்தம் ‘இருபத்து நான்கு மணி நேரமும்’ (அதாவது 24/7) அல்லது ‘எப்போதும்’ என்பதல்ல. பொதுவாகச் சொல்லப்போனால், ‘பெரும்பாலான நேரத்தில்’ என்று பொருள்” என்று சொல்கிறார்கள். பிலிப்பியர் 4:6-இல் “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல்” என்று வேதவாக்கியத்தை விளக்கும்போது, “இதற்கு அர்த்தம் 'எதைக் குறித்தும் கவலைப்படாமல்' என்பதல்ல. பொதுவாகக் கவலையைத் தவிர்க்கவேண்டும் என்பதே அர்த்தம்” என்று சொல்கிறார்கள். 1தெசலோனிக்கேயர் 5:18-இல் “எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; இதுவே கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய சித்தமாயிருக்கிறது” என்பதை விளக்கும்போது, “இது உண்மையிலேயே ஒவ்வொரு காரியத்திற்காகவும் ஸ்தோத்திரம் செய்யவேண்டும் என்பதைக் குறிக்கவில்லை” என்று சொல்கிறார்கள்.
இறுதி நாளிலே நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக நிற்கும்போது, தேவன் சொன்ன ஒவ்வொன்றையும் மிகத்துல்லியமாக அப்படியேதான் அர்த்தப்படுத்தினார் என்பதைக் கண்டறிவீர்கள். கிறிஸ்துவானவர் எதைச் சொன்னாரோ அதை அப்படியே பொருள்படும்படி தான் கூறினார். வேதாகமத்தில் உள்ள இந்த வார்த்தைகளை நீங்கள் விசுவாசிக்கவில்லையென்றால், நீங்கள் நேர்மையாயிருந்து அவைகளை நீக்கிவிட வேண்டும், அல்லது உங்கள் வேதப்புத்தகத்தில் அந்தப் பக்கங்களைக் கிழித்துப்போட வேண்டும்.
நீங்கள் வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்று சொல்லிக்கொண்டு அதைப் பின்பற்றாவிட்டால், நீங்கள் நேர்மையற்றவர்களும் மாய்மாலக்காரருமாய் இருக்கிறீர்கள். தேவன் இந்த மாய்மாலத்தை நியாயந்தீர்க்கப் போகிறார். தேவன் நேர்மையுள்ள நபரை நேசிக்கிறார். மாய்மாலக் கிறிஸ்தவர்களைவிட அநேக நாத்திகர்களை தேவன் அதிகமாக நேசிக்கிறார் என்றே நான் நம்புகிறேன், ஏனெனில் அவர்கள் நேர்மையாயிருக்கிறார்கள். அவர்கள் தேவன் இருக்கிறார் என்று விசுவாசிக்கவில்லை. தேவன் இல்லை என்பது போலவே அவர்கள் நடந்துகொள்கிறார்கள். உலகத்திலிருக்கும் வியாபாரி, “தேவன் இல்லை, பணமே தேவன்” என்று சொல்கிறான். அவன் பணத்தை வணங்குகிறான், அவன் நேர்மையானவன். ஆனால் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் என்றும், வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்றும் சொல்லும் கிறிஸ்தவர்கள், அந்த உலக ஜனங்களைப் போல வாழ்ந்தால், அவர்களே மாயக்காரர். இயேசு பூமியில் இருந்தபோது, மற்ற எவரையும் விட மாயக்காரரையே அதிகமாய் கடிந்துகொண்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். விபசாரக்காரி இரட்சிக்கப்பட்டாள். சிலுவையிலிருந்த திருடன் இரட்சிக்கப்பட்டான். கொலைபாதகன் இரட்சிக்கப்பட்டான். ஆனால் மாயக்காரரோ நரகத்திற்கே போனார்கள்.