“நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்” எபேசியர் 6:11.
நம்மில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டிருக்கிறோம். “இரட்சிப்பின் தலைச்சீராவையும்,” “நீதியின் மார்க்கவசத்தையும்” பற்றி படித்திருக்கிறோம். ஆனால், இந்தக் கவசத்தை முதன் முதலாக அணிந்தவர் இயேசுவே என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.
“ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது. “அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதி சரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்” ஏசாயா 59:16-17.
இயேசுவைக் குறித்த இந்த பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தை அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் 6-இல் குறிப்பிடுகிறார்.
ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், இந்த வசனம் இயேசு நமக்காகப் பரிந்து பேசுவதற்கென்று தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை அணிந்துகொள்வதைக் காட்டுகிறது. இப்போதும் நாம் அவருடைய பரிந்து பேசும் மாதிரியைப் பின்பற்றும்படி நம்மை அழைக்கிறார்.
அனுதின ஜீவியத்தில் ஆயுததாரிகள்
பழைய ஏற்பாட்டிலும் முந்தைய காலங்களிலும் ஒவ்வொரு படைவீரனுக்கும் ஒரு ஆயுததாரி இருப்பார். அவர் அமைதியாக, பெயர் அறியப்படாத உதவியாளராய், ஆயுதங்களைச் சுமந்தும், ஆபத்து வேளையில் கூடவே இருந்தும் தன்னுடைய போர் வீரன் தேவைப்படும் நேரத்தில் ஆயுதத்துடன் தயாராய் இருப்பதை உறுதி செய்வார். இது, நமக்காகப் பரிந்துபேசும்படி எப்பொழுதும் உயிரோடிருக்கிற நம்முடைய ஆயுததாரியாயிருக்கும் இயேசுவின் பூரணமான மாதிரியைப் பின்பற்றி, நாமும் நம்முடைய வாழ்க்கைத் துணைக்காகவும், நம்முடைய பிள்ளைகளுக்காகவும் மற்றும் திருச்சபைக் குடும்பத்தினருக்காகவும் பரிந்து பேசுகிறவர்களாய் இருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கும் நமது அழைப்பை சித்தரிக்கிறது (எபிரெயர் 7:25).
இப்படிப்பட்ட யுத்தங்களை ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கையில் காண முடியும்:
அப்படிப்பட்டவர்களிடத்தில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? தூரத்தில் நின்று குற்றம் கண்டுபிடிக்கிற நபராய் இராமல், “உங்களுடைய போராட்டம் என்னுடைய போராட்டம், உங்களுடைய பெலவீனம் என்னுடைய பெலவீனம், இயேசு என்னுடன் நின்றது போல நானும் உங்களுடன் நிற்கிறேன்” என்று சொல்லும் ஆயுததாரியாக நாம் இருக்க வேண்டும்.
பரிந்து பேசுவதே அன்பிற்கான பிரதானமான அடையாளம்: நான் 100% உன்னுடன் இருப்பேன்
1சாமுவேல் 14-இல், யோனத்தான் பெலிஸ்தியரின் தாணையத்தைத் தாக்கும்படி தன்னுடைய ஆயுததாரியை மட்டும் தன்னுடன் கூட்டிக்கொண்டு செல்கிறான். இரண்டு செங்குத்தான பாறைகளுக்கு நடுவில் ஏறி, “ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும், இரட்சிக்க கர்த்தருக்குத் தடையில்லை” (1சாமுவேல் 14:6) என்று கூறி ஆபத்து நிறைந்த ஒரு விசுவாசக் கிரியையைச் செய்கிறான். அப்பொழுது அவனுடைய ஆயுததாரி அவனைப் பார்த்து ஆச்சரியமூட்டும் ஒரு பதிலைக் கூறுகிறான்: “உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போம்; இதோ, உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன்” என்றான்.
இயேசு குற்றம் சாட்டும் ஆவியைக் குறித்து எச்சரிக்கிறார்: நம் சகோதரனுடைய கண்ணில் இருக்கும் துரும்பை (குற்றத்தை) பார்க்கிறோம், ஆனால் நம் கண்ணில் ஒரு உத்திரமே உட்கார்ந்து கொண்டிருக்கிறது. குற்றச்சாட்டுக்கள் என்னும் உத்திரத்தை அகற்றுவதோடு இந்தக் காரியம் முடிந்துவிடுவதில்லை. நம்மில் இருக்கும் குற்றம் சாட்டும் ஆவியை எடுத்துப் போட்ட பின்பு, நம் சகோதரனுடைய கண்ணில் இருக்கும் துரும்பையும் எடுத்த பின்னரே காரியம் முடிவடைகிறது. நம்முடைய சகோதரனுடைய துரும்பை என்னுடைய சொந்த கண்ணில் இருக்கும் துரும்பைப் போல நாம் பாவித்தால் மட்டுமே இந்த இடத்திற்கருகில் வர முடியும். “நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாரமான யாவற்றையும் தள்ளிவிட்டு, இயேசுவை நோக்கி, .. ஓடக்கடவோம்;” (எபிரெயர் 12:1). இனி உங்கள் பாரம் உங்களுடையது அல்ல, அது இப்போது நம்முடைய பாரமாக மாறும்.
“தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்” என்று யாக்கோபு 5:20 கூறுகிறது. இவ்விதமாகவே அன்பு திரளான பாவங்களை மூடும் (1பேதுரு 4:8). அன்பு பாவத்தைக் கண்டுகொள்ளாமல் விடுவதில்லை; அது மனந்திரும்புதலுக்காகவும் சீர்திருத்தத்திற்காகவும் போராடுகிறது.
“சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து, மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்” என்று யூதா 1:22-23 கூறுகிறது. பரிந்து பேசுகிற அன்பு பாவத்தால் கறைபடுவதைக் குறித்து ஜாக்கிரதையாய் இருக்கிறது. இருப்பினும், இரக்கத்தினால் நிறைந்து நமக்குப் பிரியமானவர்களை ஆட்கொள்ளும் பாவத்திலிருந்து வெளியே இழுக்க தளராமல் முயற்சிக்கவும் செய்கிறது.
பரிந்து பேசுவது அன்பின் 2-வது அடையாளம்: நான் பேசுவது குறையும் ஜெபிப்பது அதிகமாகும்.
வேதம் பாராட்டுகிற “அமைதியான சுவிசேஷம்” என்ற ஒரு வகை உண்டு. 1பேதுரு 3:1-2, “அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்த புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுவார்கள்” என்று கூறுகிறது. ஒரு ஆத்துமாவை ஒரு வார்த்தையுமின்றி ஆதாயப்படுத்த முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா?
“அந்தப்படி” என்று கூறும் போது நாம் பின்பற்ற வேண்டிய மாதிரி அதற்கு முன்பாக உள்ள சில வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1பேதுரு 2:23 இயேசுவைப் பற்றி கூறும் போது “அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும் போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்” என்று கூறுகிறது.
அப்படியென்றால், இந்த மாதிரியானது மனைவிகளுக்கு மட்டுமல்லாமல் நம் எல்லோருக்கும் உரியதாயிருக்கிறது. ஏனென்றால் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் மாதிரி இயேசுவினுடையதாயிருக்கிறதே. பரிந்து பேசுகிற அன்பு என்றால் மனிதர்களிடம் சொற்பமான வார்த்தைகளும் தேவனிடம் அதிகமான வார்த்தைகளும் பேசுவதாகும்.
தேவனுடைய இந்த சர்வாயுதவர்க்கத்தை விவரித்த உடனேயே பவுல் எதைக் கூறுகிறார் என்பது கவனிக்கத்தக்கது. அது இந்த சர்வாயுதவர்க்கத்தின் பரந்த நோக்கத்தைப் பற்றிய ஒரு காரியத்தை நமக்கு உணர்த்துகிறது. பவுல் அங்கே “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள்” (எபேசியர் 6:18) என்று கூறுகிறார். தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை நான் தரித்துக்கொள்வது நான் எனக்காக மட்டுமல்லாமல், என்னுடைய வீட்டிலிருந்து தொடங்கி, சபைக்கும் சமுதாயத்திற்கும் என்று மற்றவர்களுக்காகப் போராடி ஜெபிப்பதற்காகவுமேயாகும். இது மெய்யாகவே ஒரு புரட்சிகரமான சிந்தனையாயிருக்கிறது.
அதே போல் ஏசாயா பரிந்து பேசுதலின் யுத்தத்தைக் குறித்த ஓர் அழகான சித்திரத்தை காட்டுகிறார்.
“சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப்போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன்” (ஏசாயா 62:1).
“சீயோன்” மற்றும் “எருசலேம்” என்ற இடத்தில் உங்கள் வாழ்க்கைத்துணையின் பெயரையோ, சகோதரனுடைய பெயரையோ, உங்கள் குழந்தையினுடைய பெயரையோ அந்த வசனத்தில் போட்டுக்கொள்ளுங்கள்: “என் மனைவியின் நிமித்தம், நான் மவுனமாயிராமலும்… என் குழந்தையின் நிமித்தம்… என் சகோதரியின் நிமித்தம்.”
இது தான் பரிந்து பேசும் ஊழியம்: இடைவிடாததும் பெரும்பாலும் அறியப்படாததும், ஆனால் தேவனுக்கு முன்பாக விலையேறப்பெற்றதுமாயிருக்கிறது. சாமுவேல் இதனை ஆழமாய் உணர்ந்திருந்தார். அவர் கூறும் போது, “நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்” (1சாமுவேல் 12:23). அவருடைய பார்வையில் பரிந்து பேசாமலிருப்பது தேவனுக்கு விரோதமான பாவமாகத் தோன்றியது.
சவுல் பின்மாற்றமடைந்து தன்னுடைய அபிஷேகத்தை இழந்த போதும், சாமுவேல் அப்புறம் அவனை மறுபடியும் காணாதபோதும் சவுலுக்காகத் துக்கித்துக் கொண்டிருந்தான் (1சாமுவேல் 15:35).
பரிந்து பேசுகிற அன்பு என்பது ஒரு உறவில் விரிசல் ஏற்பட்ட பிறகோ அல்லது அந்த உறவு அந்நியமான பிறகோ தொடர்ந்து அவர்களுக்காய் ஜெபிப்பதைக் குறிக்கிறது.
பரிந்து பேசுகிற அன்பின் 3-வது அடையாளம்: நான் தேவனுடைய நீதியை உங்கள் மேல் பிரகடனப்படுத்துவேன்.
சகரியா 3-ஆம் அதிகாரத்தில், யோசுவா என்னும் பிரதான ஆசாரியன் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான். சாத்தானும் அவனோடே கூட அவன் மீது குற்றம் சாட்டும் படி நின்றுகொண்டிருந்தான். சகரியா 3:2-இல் கர்த்தர் “கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா?” என்றார்.
அதன் பிறகு, “இவன் மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்து போடுங்கள்” என்று தேவன் கட்டளையிடுகிறார். யோசுவாவை நோக்கி: “பார் நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன்” என்று கூறுகிறார். சகரியா 3:5-இல், “அவன் சிரசின்மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக” என்று சகரியா தீர்க்கதரிசி கூறுகிறார்.
கெட்ட குமாரனின் தகப்பனுடைய இருதயமும் இப்படித் தான் இருந்தது. மனந்திரும்புதலின் முதல் அறிகுறியிலேயே, தகப்பன் ஓடோடி வந்து அவனை அணைத்துக்கொண்டு, அவனுக்கு விலையுயர்த்த உடையுடுத்தி, அவனை மீட்டெடுத்து, களிகூருகிறார். ஓர் உண்மையான மனந்திரும்புதலைக் காணும்போது, நம்முடைய பிரதியுத்தரமும் தகப்பனுடைய எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அதே சந்தோஷத்தையும், கொண்டாட்டத்தையும், நீதிமானாக்கப்படுவதையும் வெளிப்படுத்த வேண்டும். “சரி , நீ இப்போது தான் மனந்திரும்பி ஒரு புதிய துவக்கத்தை ஆரம்பித்திருக்கிறாய். நீ தீவிரமாக இருக்கிறாயா என்று பார்ப்போம்” என்று சொல்லக்கூடாது. அதற்கு மாறாக “நீ மனந்திரும்பிய பின்பு தேவன் உன் அக்கிரமத்தை எல்லாம் நீக்கி உன்னை நீதிமானாக்கிருக்கிறார். நானும் அவர் உனக்கு அளித்த தீர்ப்பை சந்தோஷமாய் எண்ணி களிகூர்ந்து மகிழ்கிறேன்” என்று கூறவேண்டும்.
நம் குடும்பங்களுக்கும் சபைக்கும் ஓர் அழைப்பு
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆயுததாரியாய் இருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள்; பெற்றோர் குற்றம் சாட்டுதலை ஒழித்துவிட்டு பிள்ளைகளுக்காய் விழித்திருந்து ஜெபிக்கிறவர்களாய் மாறுவது எத்தனை மேன்மை! ஒரு சபையில் சகோதர சகோதரிகள் அமைதியாக ஒருவருக்கொருவருடைய பரிசுத்தத்திற்காக போராடுவதை எண்ணிப் பாருங்கள். குடும்பங்களும் சபைகளும் கீழ்கண்டவாறு இருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள்:
நம் திருமண வாழ்விலும், குடும்பத்திலும், சபையிலும் பரிந்து பேசுகிற அன்புள்ளவர்களாக - காவலாளிகளாகவும், ஆயுததாரிகளாகவும் - தேவன் தாமே நம்மை எழுப்புவாராக!