WFTW Body: 

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதல் அடைவார்கள்” (மத்தேயு 5:4). “Comfort” (ஆறுதலடைதல்) என்ற வார்த்தையின் அர்த்தம் “பலப்படுத்தப்படுதல்” என்பதாகும். “Comforted” என்ற வார்த்தையின் நடுவில் “f-o-r-t” எனப்படுகிற சிறிய வார்த்தை உள்ளது; இந்த வார்த்தை ஒரு பெரிய இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதியாகிய ஓர் உறுதியான அரணைக் குறிப்பிடுகிறது. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதல் அடைவார்கள். இந்த உலகத்திலுள்ள அநேக ஜனங்கள் பலவிதமான காரியங்களுக்காக துயரப்படுகிறார்கள். பெரும்பாலானோர் ஏதோ ஒரு தனிப்பட்ட இழப்புக்காக துயரப்படுகிறார்கள். அவர்கள் பணத்தை இழந்ததினாலோ, தனக்கு அன்பானவர்களை இழந்ததினாலோ, தங்கள் நற்பெயரை இழந்ததினாலோ, அல்லது தங்களுடைய கௌரவம், பதவி, வேலை, அல்லது அதுபோன்ற பூமிக்குரிய ஏதோ ஒன்றை இழந்ததினாலோ துயரப்படுகிறார்கள். ஆனால் அத்தகைய துயரத்தைப் பற்றி இயேசு பேசவில்லை. யாரோ ஒருவர் என்னைக் காயப்படுத்தியதற்காக துயரப்படுவதில்லை; என்னுடைய சொந்தக் காரியங்களுக்காக அழுவதும் இல்லை.

இயேசு ஒருபோதும் தமது சொந்தக் காரியங்களுக்காக அழவில்லை, ஆனால் அவர் மற்றவர்களுக்காக நிச்சயமாக அழுதார். அவர் எருசலேமைப் பார்த்து அழுதார் (லூக்கா 19:41) என்றும், லாசருவின் கல்லறையில் அழுதார் (யோவான் 11:35) என்றும் நாம் வாசிக்கிறோம். ஆனால், ஜனங்கள் அவரை நடத்திய விதத்திற்காக ஒருமுறை கூட அழவில்லை: அவர்கள் அவரைப் பிசாசு என்று அழைத்தாலும், அவர் முகத்தில் துப்பினாலும் அவர் தமக்காக ஒருபோதும் அழுததில்லை. அது மட்டுமல்லாமல், அவர் கல்வாரிக்குச் செல்லும் பாதையில் தட்டுத் தடுமாறி சிலுவையை சுமந்துகொண்டு சென்றபோது, லூக்கா 23:27-இல் வாசிக்கிறபடி ஏராளமான ஜனங்கள், அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். அவர் வாரினால் அடிக்கப்பட்டு, முதுகில் இரத்தம் வழிந்து ஓடுகிறதையும், இந்த கனமான சிலுவையை அவர் தடுமாறி சுமந்து செல்வதையும், அவர் தலையில் முள்முடி சூட்டப்பட்டதையும் கண்டபோது, சில ஸ்திரீகள் துயரப்பட்டு சத்தமிட்டு அழுது புலம்பிக்கொண்டு சென்றனர். இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி என்ன சொன்னார் தெரியுமா? “எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழ வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன். ஆம், என் முதுகு கிழிக்கப்பட்டிருக்கிறது, என் தலையில் ஒரு முள்முடி இருக்கிறது, நான் ஒரு கனமான சிலுவையைச் சுமந்து செல்கிறேன், சில நிமிடங்களில் நான் கொல்லப்படப் போகிறேன். ஆனாலும், நான் என் பிதாவின் சித்தத்தின் மையத்தில் இருக்கிறபடியால் முற்றிலும் நலமாக இருக்கிறேன்” (லூக்கா 23:28)!

நீங்கள் வெகுவாய் துன்பப்படும்போது அப்படிப்பட்ட மனப்பான்மையைக் கொண்டிருக்க முடியுமா? “எனக்காக அழாதீர்கள், நான் நலமாக இருக்கிறேன். ஆனால் நீங்கள் அழ விரும்பினால், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்” என்று கூற முடியுமா? அவர்களுடைய ஆவிக்குரிய நிலையைப் பாருங்கள். ஆமாம், இந்த பரிசேயர்கள் அனைவரும் அங்கிகளை அணிந்துகொண்டு மிகவும் ஆடம்பரமான தோற்றம் அளிக்கிறார்கள், ஆனால் அவர்களது ஆவிக்குரிய நிலையைப் பாருங்கள். கிறிஸ்து மீண்டும் திரும்பி வரும்பொழுது மலைகளை நோக்கி ‘எங்கள்மேல் விழுங்கள்’ என்றும், குன்றுகளை நோக்கி, ‘எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்’ என்றும் அவர்கள் சொல்லும் அந்த நாளில் என்ன நடக்கும்? (லூக்கா 23:30). இயேசுவின் மனப்பான்மை இப்படித் தான் இருந்தது. ஒரு பாடலில் சொல்லப்பட்டிருப்பது போல், அவர் தமது சொந்த வியாகுலங்களுக்காகக் கண்ணீர் சிந்தவில்லை, ஆனால் என்னுடைய துக்கங்களுக்காக அவருடைய வியர்வையை இரத்தத்தின் பெருந்துளிகளாய் சிந்தினார்.

இயேசுவின் ஒரு மெய்யான சீஷனானவன், தான் கிறிஸ்துவைப் போல இல்லாததினிமித்தம் துயரப்படுவான். அவன் பாவம் செய்யும்போதும் தவறும்போதும் துயரப்படுவான். ஜனங்கள் தன்னை நடத்தும் விதத்திற்காக அவன் துயரப்படுவதில்லை. கிறிஸ்துவினிமித்தம் நிந்திக்கப்படுவது இந்த பூமியில் தேவனால் தனக்கு நியமிக்கப்பட்ட பங்கு என்று அவன் விசுவாசிக்கிறான். ஆனால், பாவத்தினாலோ அல்லது வீழ்ச்சியினாலோ தேவனுடைய நாமத்தை கனவீனம்பண்ணும் போதெல்லாம் அவன் துயரப்படுவான். அவன் ஆவிக்குரிய வாழ்வில் இன்னும் உயர்ந்த நிலைக்குச் செல்லும்போது, இயேசு எருசலேமுக்காக அழுதது போல, மற்றவர்களுடைய பாவங்களுக்காகவும், வீழ்ச்சிக்காகவும் அவன் துயரப்படுவான். இவ்வித துயரப்படுதலைக் குறித்தே இயேசு பேசினார். “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் பலப்படுத்தப்படுவார்கள்.” ஒருவேளை நம்மில் சிலர் பலப்படுத்தப்படாததற்குக் காரணம், நாம் நம்முடைய பாவத்திற்காக துயரப்படாததேயாகும்.

மற்றவர்களுடைய பாவங்களுக்காக துயரப்படுவது என்பது இதைக் காட்டிலும் மேலானதோர் உயர்ந்த நிலையாகும். அப்போஸ்தலனாகிய பவுல் அந்த உயர்ந்த நிலையை அடைந்திருந்தார். மிகவும் பரிதாபமாக வீழ்ச்சியுற்றிருந்த கொரிந்தியர்களிடம், “நான் உங்களிடம் வருகிறபோது, என் தேவன் உங்களிடத்தில் என்னைத் தாழ்த்துவார்” (2கொரிந்தியர் 12:21) என்று கூறுகிறார். தேவன் ஏன் பவுலைத் தாழ்த்த வேண்டும்? அவர் அவ்வளவாய் நல்ல நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்தார். தான் அறிய தனக்கு எதிராக எந்தப் பாவமும் இல்லாதவராக இருந்தார். ஆனால் அவர், “முன் பாவஞ்செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் நடப்பித்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும் விட்டு மனந்திரும்பாமலிருக்கிறதைக்குறித்து, நான் துக்கப்படுவேன்” என்று கூறுகிறார். அந்தச் சபையில் அவர்கள் மத்தியில் இருந்த விரோதங்கள், கோபங்கள் வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோட்சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய பாவங்களை 2கொரிந்தியர் 12:20-இல் பவுல் பட்டியலிடுகிறார். தேவனுடைய ஜனங்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அந்தக் கொரிந்திய ஜனங்களிடத்தில் உள்ள இந்தப் பாவங்களையெல்லாம் அவர் எண்ணிப்பார்த்தபோது, அவர் அவர்களுடைய ஆவிக்குரிய தகப்பனாக இருந்ததினால், அவர்களுக்காக அழுதார். ஒரு பூமிக்குரிய தகப்பன் தன் மகன் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தால் அழுவது போன்றதாகும் அது. அந்தத் தகப்பன் ஆவிக்குரிய சிந்தையுள்ளவராயிருந்தால், தன் மகன் தேவனை விட்டு வழிவிலகி போதைப்பொருள் அல்லது தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டான் என்று அறியும்போது அவனுக்காக அவர் மிகவும் துக்கமடைவார்.

பவுல் கொரிந்தியருக்கு ஓர் ஆவிக்குரிய தகப்பனாக இருந்தார். ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவ மேய்ப்பனும் அல்லது போதகனும் தனது மந்தைக்கு ஓர் ஆவிக்குரிய தகப்பனாக இருக்க வேண்டும். ஒருவர் ஆவிக்குரிய தகப்பனாயிருக்கிறார் என்பதற்கான ஓர் அடையாளம் என்னவென்றால், அவர் மந்தையைக் குற்றப்படுத்துவதே வேலை என்று இராமல், பவுல் கொரிந்தியருக்காக அழுதது போல் அவர் அவர்களுக்காக அழுகிறவராயும் இருப்பார். அத்தகைய நபர் மட்டுமே ஆவிக்குரிய தலைவராக இருக்கத் தகுதியானவர். ஏசாயா 49-ஆம் அதிகாரம் ஆவிக்குரிய தலைமைத்துவத்தைப் பற்றிய ஒரு சிறந்த அதிகாரமாகும். ஏசாயா 40:10-இல், “ஜனங்களுக்காக இரங்குகிறவர் அவர்களை வழிநடத்துவார்” என்று கூறுகிறது.

ஓர் ஆவிக்குரிய தலைவனாக இருப்பதற்கு யார் தகுதியானவர்? ஜனங்கள் மீது இரக்கம் காட்டுபவரே. எனவே, மத்தேயு 5:4 கூறும் இந்தத் துயரம், தனக்காகவும், அதாவது தனது சொந்த பாவத்திற்காகவும், கிறிஸ்துவின் சாயல் தன்னிடம் இல்லாததற்காகவும், மற்றவர்களுக்காகவும் துயரப்படுவதைக் குறிக்கிறது. நாம் அவ்வாறு செய்தால் பலப்படுத்தப்படுவோம். மேலும் இந்த வழியில் செல்லுவோமாயின் மற்றவர்களையும் பலப்படுத்தக்கூடிய வல்லமையைக் கண்டடைவோம்.