நம் உள்ளத்திலிருந்து பரிசுத்த ஆவியானவர் பாயும் படியான வாழ்க்கைக்கு முதல் படியாக, ‘மனந்திரும்புங்கள்’ அல்லது ‘முழுமையாக எதிர் திசையில் திரும்புங்கள்’ என்று இயேசு கற்பித்தார் (மத்தேயு 4:17). பூமியில் உள்ளவற்றைத் தேடுவதிலிருந்து மட்டும் மனந்திரும்புவது அல்லாமல், எல்லாவற்றிற்கும் மேலாக, பாவத்திலிருந்து மனந்திரும்ப வேண்டும். பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு முன் நாம் பாவத்தை மேற்கொள்ள வேண்டியதில்லை. பாவத்தை மேற்கொள்ள பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வந்து உதவி செய்கிறார். குதிரைக்கு முன்னால் வண்டியை யாரும் வைப்பதில்லை. வண்டிக்கு முன்னால் தான் குதிரை இருக்க வேண்டும். நான் பாவத்தை விட்டு விட்டு, பிறகு ஆண்டவரிடம் வந்து, “ஆண்டவரே எனக்குப் பரிசுத்த ஆவியைத் தாரும்” என்று கூற முடியாது. மாறாக, நான் சொல்ல வேண்டியது என்னவெனில், “ஆண்டவரே, பாவத்தை மேற்கொள்ள எனக்கு பரிசுத்த ஆவியானவர் தேவையாய் இருக்கிறார்.” ஆனால், பாவத்தை மேற்கொண்டிராதபோதிலும், பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கு முன், என் மனதில், பாவத்திலிருந்து திரும்பியிருக்க முடியும்; அதாவது, எனது மெய்யான மனப்பான்மை என்னுடைய எல்லா பாவங்களையும் விட்டுவிட வேண்டும் என்பதாய் இருக்க வேண்டும்.
தேவன் உங்களிடம் கேட்பதும் அவ்வளவுதான். உங்கள் வாழ்க்கையில் தேவனை அவமதிக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் விட்டுவிட வேண்டும் என்ற மனப்பான்மை உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் உண்மையில் அவற்றைக் மேற்கொள்ள சில ஆண்டுகள் ஆகலாம், ஆனால் அது ஒரு பொருட்டல்ல. உங்கள் மனப்பான்மையானது எப்பொழுதும் உங்கள் பழைய வாழ்க்கை முறையிலிருந்து திரும்புகிற மனந்திரும்புதலுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்பதன் மூலம்தான் நாம் கிறிஸ்தவ ஜீவிய ஓட்டத்தின் தொடக்கக் கோட்டிற்கு வருகிறோம். எபிரெயர் 12:1-2-இல் கிறிஸ்தவ வாழ்க்கை ஓர் ஓட்டப்பந்தயம் போன்றது என்றும் மனந்திரும்பியிருந்தால் மட்டுமே நாம் ஆரம்பக் கோட்டிற்கு வர முடியும் என்றும் கூறுகிறது. மனந்திரும்புதல் மற்றும் பாவத்திலிருந்து திரும்புதல் என்ற செய்தி தான் இன்றைய கிறிஸ்தவ உலகத்தில் காணப்படாமற் போய்விட்ட செய்தியாகும்.
மனந்திரும்புதலைப் பற்றி எத்தனை நற்செய்திகளை நீங்கள் கேட்கிறீர்கள்? மனந்திரும்புதலைப் பற்றி எத்தனை பாடல்களைக் கேட்கிறீர்கள்? ஏதேனும் ஒரு பாடல் புத்தகத்தைப் எடுத்து பார்த்து, மனந்திரும்புதலில் எத்தனை பாடல்கள் இருக்கின்றன என்று பாருங்கள் - சொல்லப்போனால் ஒன்று கூட இருப்பதில்லை. விசுவாசத்தைப் பற்றிய பல பாடல்களை நீங்கள் காணலாம். உதாரணமாக, ‘தேவனுக்கு மகிமை, அவர் செய்த வல்ல பெரும் காரியங்கள்’ (To God be the glory, great things He has done) என்று ஒரு பிரபலமான ஆங்கிலப் பாடல் இருக்கிறது. அந்தப் பாடலில் உள்ள ஒரு வரி, "மெய்யாக விசுவாசிக்கும் மோசமான பாவி, அந்தத் தருணமே இயேசுவினிடத்திலிருந்து மன்னிப்பைப் பெறுகிறான்" என்று கூறுகிறது. நான் அதை ஏற்றுக்கொள்வதில்லை. சுவிசேஷத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஒரு மனிதன் - மிக மோசமான பாவி - ஒரு கூட்டத்தில் கலந்து கொள்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் அங்கு வந்து ‘தேவனுக்கு மகிமை, அவர் செய்த வல்ல பெரும் காரியங்கள்’ என்ற அந்தப் பாடலைக் கேட்கிறான். அப்போது அவன், “ஆம், நான் மிக மோசமான பாவி” என்று கூறி அதை அவன் ஒத்துக்கொள்கிறான். மேலும் அவன், “நான் செய்ய வேண்டியது அவ்வளவுதான், இயேசுவை விசுவாசிக்க வேண்டும். சரி, ‘அவர் தேவ குமாரன், அவர் என் பாவங்களுக்காக மரித்தார்’ என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுகிறான். அவன் மன்னிக்கப்பட்டானா? அவன் மனந்திரும்பவில்லை என்றால் மன்னிப்பைப் பெற முடியாது. மனந்திரும்பி, தேவனை விசுவாசிக்கும் மிக மோசமான பாவிதான் மன்னிக்கப்பட்டவராவார். “உண்மை தானே, இதுதான் 'மெய்யாகவே விசுவாசிப்பது’ என்பதன் அர்த்தம்” என்று பலர் சொல்வார்கள். ஆனால், இது (‘மெய்யாக விசுவாசிப்பது = மனந்திரும்பி + விசுவாசிப்பது”), ஒரு மனம் மாறாத, தேவனற்ற பாவி அறிய முடியாத ஒரு வேத விளக்கமாயிருக்கிறது. அவன் மனந்திரும்ப வேண்டும் என்று நாம் அவனுக்கு வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். இந்த மனந்திரும்புதலைப் பற்றி அப்போஸ்தலனான பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் தெளிவுபடுத்தினார். அதைத்தான் பவுலும் எல்லா இடங்களிலும் பிரசங்கித்தார். “தேவனிடத்திற்கு மனந்திரும்புதலையும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதையும்” (அப்போஸ்தலர் 20:21) என்ற இரண்டு காரியங்களை அவர் பிரசங்கித்தார்.
தேவனிடத்திற்கு மனந்திரும்பவேண்டும், செழிப்பு மற்றும் சரீர சுகத்தை நோக்கி திரும்புவதல்ல. மனந்திரும்புதல் என்பது வியாதியிலிருந்து விலகி சுகத்திற்கு நேராய் திரும்புவது அல்ல. நான் வறுமையிலிருந்து திரும்பி செழிப்புக்கு நேராய் மனம் மாறவில்லை. இல்லை! அது இன்று பிரசங்கிக்கப்படும் பொய்யான சுவிசேஷமாகும். ஆனால், இந்த வசனம் கூறுவது என்னவென்றால், ‘என் வாழ்க்கையில் தேவனுக்கு எதிராக இருந்த எல்லாவற்றிலிருந்தும் நான் தேவனை நோக்கி மனந்திரும்பி, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கிறேன்’ என்று கூறுகிறது. பவுல் தெசலோனிக்கேயர்களுக்கு எழுதும்போது “தேவனுடைய வார்த்தை அவர்களிடம் வந்தது” என்றும், “ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, அவர்கள் விக்கிரகங்களைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினார்கள்" என்றும் கூறுகிறார் (1தெசலோனிக்கேயர் 1:9).
விக்கிரகம் என்றால் என்ன? உங்கள் இருதயத்தில் தேவனுடைய ஸ்தானத்தைப் பெறும் எதுவாயிருந்தாலும் அதுவே விக்கிரகம் ஆகும். அது உங்கள் உடல்நலமோ, உங்கள் செல்வமோ, உங்கள் வேலையோ, உங்கள் வீடோ, உங்கள் காரோ, உங்கள் மனைவியோ அல்லது உங்கள் குழந்தைகளாகவோ கூட இருக்கலாம். அது உங்கள் இருதயத்தில் தேவனுடைய ஸ்தானத்தைப் பிடிக்கும் எதுவாகவும் இருக்கலாம். ஆபிரகாமின் இருதயத்தில் ஈசாக்கு தேவனுடைய ஸ்தானத்தைப் பிடித்து இருந்ததால், தேவன் ஆபிரகாமினிடத்தில் அந்த விக்கிரகத்தை (ஈசாக்கை) அகற்றும்படி கூறினார். விக்கிரகங்களை விட்டு, அதாவது, தேவனை உங்கள் இருதயத்தில் முதலானவராகவும் உயர்ந்தவராகவும் இருப்பதைத் தடுக்கும் எல்லாவற்றிலிருந்தும் திரும்புதல் - அதுதான் உண்மையான மனந்திரும்புதல். அதுவே, முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவதன் அர்த்தம். அவ்விதமே நமது பூமிக்குரிய தேவைகள் அனைத்தும் நமக்குக் கூடக் கொடுக்கப்படும் (மத்தேயு 6:33). நீங்கள் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடினால் உங்கள் பூமிக்குரிய தேவைகள் அனைத்தையும் தேவன் சந்திப்பார் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க முடியும். நீங்கள் ஒரு கோடீஸ்வரராக மாறாவிட்டாலும், உங்கள் பூமிக்குரிய தேவைகள் உங்களுக்கு கூட சேர்த்துக் கொடுக்கப்படுவதை அவர் உறுதிசெய்வார். அதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
ஒவ்வொரு கிறிஸ்தவனும் இப்படித்தான் வாழ வேண்டும். இன்று மிகவும் வருத்தமான விஷயம் என்னவென்றால், கிறிஸ்தவர்கள் பொருளாதார செழிப்பு மற்றும் சரீர சுகம் எல்லாம் தேவ ஆசீர்வாதத்தின் அடையாளங்கள் என்று நினைக்கிறார்கள். அது உண்மையாக இருக்க முடியாது, ஏனென்றால் ஆவிக்குரிய கிறிஸ்தவர்களை விட அதிகமான பொருளாதார செழிப்பு மற்றும் அதிக சரீர ஆரோக்கியம் கொண்ட கிறிஸ்தவரல்லாதவர்கள் அநேகர் உலகில் இருக்கிறார்கள். அது நற்செய்தி அல்ல என்பதை இதுவே நிரூபிக்கிறது. மேலும், ஒரு மெய்யான சீஷனுக்கு இருக்கும் ‘பாவத்திலிருந்து விடுதலை’ அவர்களுக்கு இல்லை.
இயேசு முதன்முதலாக அறிவித்த செய்தியும், நாம் தொடர்ந்து அறிவிக்க வேண்டிய செய்தியும் ‘மனந்திரும்புதல்’ ஆகும். “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” என்று இயேசு சொன்ன போது, அவர் என்ன கற்பித்தார்? முதல் படியாக, பாவத்திலிருந்து தேவனிடத்திற்கு மனந்திரும்பி, பரலோக ராஜ்யத்திற்கு உங்கள் இருதயத்தைத் திறக்கவேண்டும்; இதனால் உங்கள் மனம் மேலானவைகளான நீதியையும், சமாதானத்தையும், பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷத்தையும் நாடுவதாய் இருக்கும்.