WFTW Body: 

கடந்த சில வாரங்களாக, மாபெரும் கட்டளையை முழுமையாக நிறைவேற்றுவது என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயன்று வருகிறோம். மத்தேயு 28:19 -இல், நாம் சகல தேசத்திற்கும் சென்று சீஷர்களை உருவாக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார். எனவே லூக்கா 14 -இல் விவரிக்கப்பட்டுள்ள சீஷத்துவத்தின் நிபந்தனைகளை ஆராய்ந்து வருகிறோம்.

முதலாவது, இந்த பூமியில் உள்ள எந்த மனிதரையும் விட கிறிஸ்துவை அதிகமாக நேசிக்க வேண்டும். சங்கீதம் 73:25 -இல் காணப்படும் “பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை” என்னும் அறிக்கையே ஒரு மெய்யான சீஷனின் அறிக்கையாகும். கிறிஸ்துவை விட அதிகமாக பூமியில் யாரையும் நான் விரும்பவில்லை.

இரண்டாவதாக, என் சுய சித்தத்திற்கும் என் சுய விருப்பத்திற்கும் மேலாக கிறிஸ்துவை நேசிக்கவேண்டும். “ஆண்டவரே, நான் எந்த விஷயத்திலும் என்னுடைய தெரிந்தெடுப்பை விரும்பவில்லை, என் வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதியிலும் உமது சித்தத்தையே விரும்புகிறேன். எனது நேரத்தை, பணத்தை, பெலனை நான் எப்படி செலவிடப் போகிறேன் என்பதிலும், வாழ்க்கை மற்றும் எனது இலட்சியங்களுக்கடுத்த காரியங்களிலும் உமது சித்தத்தையே விரும்புகிறேன். என் வருங்காலமெல்லாம் இயேசுவின் பாதபடியில் அர்ப்பணிக்கப் பட்டிருக்கிறது.”

மூன்றாவதாக, என் உடைமைகள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும், பூமியில் உள்ள அனைத்தையும் இலேசாக வைத்திருக்க வேண்டும், ஏனென்றால் இவை எல்லாவற்றையும் விட கிறிஸ்து எனக்கு அதிக முக்கியம். கர்த்தர் அவற்றில் சிலவற்றை எடுத்துக் கொண்டாலோ அல்லது சிலவற்றை நான் இழந்தாலோ, யோபு 1:21 -இல் “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” என்று யோபு கூறியது போல நானும் கூறுகிறேன். இதுவே ஒரு மெய்யான சீஷனின் மனப்பான்மை.

லூக்கா 14 -இன் படி, ஒருவன் சீஷத்துவத்தின் இந்த மூன்று நிபந்தனைகளையும் நிறைவேற்றவில்லையென்றால், அவன் ஒரு சீஷன் அல்ல.

மத்தேயு 28:19 -இல் இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களிடம் சகல தேசங்களுக்கும் சென்று சீஷராக்கும்படி கூறியபோது, ​​கிறிஸ்துவை அவர்களுடைய பாவங்களை மன்னிப்பவராக மட்டுமல்லாமல், அவர்களுடைய கர்த்தராகவும் அறியும் இடத்திற்கு மக்களைக் கொண்டுவர வேண்டும் என்று அவர் அர்த்தப்படுத்தினார். அதன் பொருள், பூமியில் உள்ள எவரையும் விட, நம் சொந்த ஜீவனை விட, நம் சொந்த விருப்பத்தை விட, பூமியில் உள்ள அனைத்தையும் விட அதிகமாக நாம் அவரை நேசிக்கிறோம். எல்லாவற்றையும் விட அவரே நமக்கு அதிமுக்கியமானவராயிருக்கிறார்.

சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் கிறிஸ்தவ மிஷனரிகளும் சுவிசேஷகர்களும் அந்த மாபெரும் கட்டளையின் இரண்டாவது பாதியை நிறைவேற்றிவிட்டார்கள் என்று நீங்கள் கூறுவீர்களா? நான் இல்லை என்றே கூறுவேன். மாற்கு 16:15 -ஐ 99 சதவீதம் பேர் நிறைவேற்றுவதாகவும், மத்தேயு 28:19-20 -ஐ 1 சதவீதம் பேர் நிறைவேற்றுவதாகவும் சொன்ன அந்த உதாரணத்தை நான் ஏன் பயன்படுத்தினேன் என்று பார்க்கிறீர்களா? தொண்ணூற்றொன்பது பேர் மரத்துண்டின் ஒரு முனையைப் பிடித்துக் கொண்டு, ஒரு நபர் மரத்துண்டின் மறுமுனையைத் தூக்கிப் பிடிக்கிறார்களே? அதனால்தான், மரத்துண்டின் மறுமுனையை உயர்த்திப் பிடித்திருக்கும் ஒருவருக்கு உதவி செய்ய ஆண்டவர் என்னை அழைத்ததைக் கண்டேன். இன்று இதுவே ஒரு பெரிய தேவை என்று நான் நம்புகிறேன். மேலும் பல தேசங்களில் கிறிஸ்தவம் இவ்வளவு மோசமான சாட்சியைக் கொண்டிருப்பதற்கும் இதுவே காரணம்.

மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் ஆண்டவருடைய நாமத்துக்கு எவ்வளவு அபகீர்த்தியைக் கொண்டு வருகிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஏன்? ஏனென்றால் அவர்கள் இரட்சிக்கப்பட்டார்களே தவிர சீஷர் ஆகவில்லை. அவர்கள் தங்களுடைய சொந்த விருப்பத்தை விட்டுக்கொடுக்கவோ, அல்லது தங்களிடம் உள்ள உடைமைகளில் இருந்து விலகி இருக்கவோ கொண்டு வரப்படவில்லை, எனவே அதன் விளைவு லூக்கா 14 -இல் இயேசு கூறியது போல் உள்ளது: அவர்கள் அஸ்திபாரம் போட்டு, ஆனால் கட்டிடத்தை கட்டி முடிக்கவோ போதுமான திராணி இல்லாதவர்களாயிருக்கிறார்கள்.

லூக்கா 14 -இல் சீஷத்துவத்தைப் பற்றிய இந்த முழுப் பகுதியின் நடுவில், இயேசு ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பும் ஒரு மனிதனைப் பற்றிக் கூறுகிறார். இது முழு கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு சித்திரமாகும். அஸ்திபாரம் போட்டு முடிக்கும் தருவாயில், ​​​​அதை முடிக்கவோ அவனுக்கு போதுமான திராணி இல்லை என்று அது கூறுகிறது. சீஷத்துவத்தின் இந்த மூன்று நிபந்தனைகளின் பின்னணியில் நீங்கள் பார்த்தால், விலைக்கிரயம் செலுத்தி கோபுரத்தைக் கட்டி முடிக்க அவன் தயாராக இல்லை என்பதே விளங்குகிறது. ஒருவேளை அவனிடம் பணம் இருக்கலாம், ஆனால் அவனோ “நான் அதைக் கட்டி முடிக்க விரும்பவில்லை” என்று கூறுகிறான். நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கொடுக்கப்பட்டு, நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறுகிறோம். அதுவே அஸ்திபாரம். ஆனால் கிறிஸ்தவ ஜீவியம் என்பது அவ்வளவுதானா? இல்லை. இயேசு கூறிய படி அது ஒரு கோபுரமாக இருக்க வேண்டும், வெறும் அஸ்திபாரம் மட்டும் அல்ல. கோபுரத்தை முழுமையாகக் கட்டி முடிக்காத நபர் கேலிக்குரியவர் என்று வசனம் 29 கூறுகிறது. கிறிஸ்தவ வாழ்க்கையில் அஸ்திபாரம் மட்டுமே போட்டுவிட்டு அதுவே கிறிஸ்தவத்தின் முழு நோக்கம் என்று கிறிஸ்தவர்கள் எண்ணுவதைக் கண்டு பரலோகத்தில் உள்ள தேவதூதர்களும் ஆச்சரியப்படுகிறார்கள்.

அதனால் தான், மத்தேயு 28:19 -இல் சகல தேசத்துக்கும் சென்று சீஷராக்க வேண்டும் என்று கூறுவதை வலியுறுத்துவதும் புரிந்துகொள்வதும் மிகவும் அவசியம். இன்று நீங்கள் எந்த தேசத்தில் இருந்தாலும், நீங்கள் பிரசங்கம் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் சீஷர்களை உருவாக்க வேண்டும்.

இயேசு மாபெரும் கட்டளையின் இந்த இரண்டாம் பாதியை “இதோ நான் சகல நாட்களிலும் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்று கூறி முடித்தார். அதன் சாராம்சம் என்னவென்றால், “சகல தேசங்களுக்கும் சென்று சீஷர்களை உருவாக்கும் இந்தப் பணியை நீங்கள் செய்தால், அப்பொழுது நான் சகல நாட்களிலும் உங்களுடனேகூட இருப்பேன்” என்பதே. நிபந்தனையை நிறைவேற்றாமல் நாம் இந்த வியக்கத்தக்க வாக்குத்தத்தத்தை உரிமை கோர முடியாது.

ஆனால் நாம் சீஷர்களை உருவாக்கினால், இது எவ்வளவு அற்புதமானதோர் உறுதியாயிருக்கிறது! உலகமெங்கும் சென்று, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், சீஷராக்கவும் நான் தீர்மானித்திருந்தால், கர்த்தர் எப்போதும் என்னுடன் இருப்பார்.