WFTW Body: 

கோதுமை மணியைப்போல் பேதுருவைப் புடைக்க சாத்தான் தேவனிடம் உத்தரவு கேட்டுக்கொண்டான். தேவனும் அவனுக்கு அனுமதி கொடுத்தார் - ஏனென்றால், இவ்வாறு புடைக்கப்படாத மற்றவர்களை விட பேதுருவுக்கு மிக முக்கியமான ஊழியம் ஒன்று காத்திருந்தது. பேதுருவின் விசுவாசம் மாத்திரம் ஒழிந்துபோகாதபடிக்கு இயேசு ஜெபித்தார். பேதுரு கர்த்தரை மூன்று முறை மறுதலித்தார். ஆனால், அதன் விளைவாக, அவர் முற்றிலும் உடைந்து, தாழ்த்தப்பட்டு, மனமுடைந்து அழுது மனந்திரும்பினார். இவ்வாறு தேவனுடைய திட்டம் நிறைவேறி, அவரிடம் இருந்த பெருமை என்னும் பதறெல்லாம் புடைத்து எடுக்கப்பட்டது. அதை நிறைவேற்ற தேவன் சாத்தானைப் பயன்படுத்தினார். தேவன் இன்னும் சாத்தானை அழிக்காததற்கு அதுவும் ஒரு காரணம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, தேவன் கல்லறையில் தூதன் மூலமாக, "நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்: 'இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார், அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்...' என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள்" (மாற்கு 16:7) என்ற ஒரு விசேஷமான செய்தியை அனுப்பினார். "...பேதுருவினிடத்திற்கும் போய்..." என்ற வார்த்தைகள் நமது ஆண்டவருடைய தன்மையைக் காட்டுகின்றன. பேதுருவும் சீஷன் அல்லவா? கர்த்தர் ஏன் அவரைப் பற்றி விசேஷமாகக் குறிப்பிட்டார்? ஏனென்றால், பேதுரு தன்னுடைய மோசமான தோல்வியின் காரணமாக, "அவருடைய சீஷர்" என்ற நிலைமைக்கு இனியும் தான் சொந்தக்காரனல்ல என்று உணர்ந்திருப்பார். ஆகவே, கர்த்தர் இன்னும் அவரைத் தம்முடைய அப்போஸ்தலராகவே கருதுகிறார் என்பதை அவருக்குச் சொல்லவே அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

இருந்தபோதிலும், பேதுரு மிகவும் சோர்வடைந்து, தனது பழைய மீன்பிடித் தொழிலுக்கு நிரந்தரமாகத் திரும்ப முடிவு செய்தார் (யோவான் 21:3). எனவே கர்த்தர் தனிப்பட்ட முறையில் சென்று பேதுருவை தம்முடைய அப்போஸ்தலராக அழைத்தார். இப்படிப்பட்டது தான் ஆண்டவருடைய அன்பு. அவர் நம் பின்னால் வந்து கொண்டே இருப்பார். அவ்விதமாகத்தான் பேதுரு திரும்பி வந்தார், அவருடைய "விசுவாசம் ஒழிந்து போகவில்லை" - பேதுரு ஒருபோதும் தோல்வியடையவோ, தவறு செய்யவோ இல்லை என்பதனால் அல்ல.

எனவே, நாம் மெய்யாகவே மறுபடியும் பிறந்து இயேசுவின் சீஷர்களாகியிருந்தால், தேவன் நம்மை கிறிஸ்துவுக்குள் ஏற்றுக்கொண்டார் என்றும் நிபந்தனையின்றி நம்மை நேசிக்கிறார் என்றும் நாம் விசுவாசிக்க வேண்டும் - ஏனென்றால் தேவன் அன்பாகவே இருக்கிறார். விசுவாசிகளில் இரண்டு வகையினர் உண்டு:

(1) தங்களுடைய பரலோகப் பிதாவின் அன்பு நிபந்தனையற்ற அன்பு என்று விசுவாசிப்பவர்கள்.

(2) தங்களுடைய பரலோகப் பிதாவின் அன்பு நிபந்தனைக்குட்பட்டது என்று விசுவாசிப்பவர்கள்.

முதல் வகையினர் உண்மையை (சத்தியத்தை) நம்புவதால் இளைப்பாறுதலாய் இருப்பார்கள். மற்றவர்கள் நிரந்தர அமைதியின்மையில் இருப்பார்கள், ஏனென்றால் அவர்கள் சிறப்பாக செயல்பட்டால் தான் தேவன் அவர்களை தொடர்ந்து நேசிப்பார் என்று நம்புகிறார்கள். உலகில் உள்ள ஒவ்வொரு பொய்யான மதமும் தேவனுடைய அன்பு நிபந்தனைக்குட்பட்டது என்றும், அது "செயல்பாடு-சார்ந்த-அன்பு" – அதாவது, நாம் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்ட ஓர் அன்பு - என்றும் போதிக்கிறது! இயேசு வந்து அதற்கு நேர்மாறாக போதித்தார். இருப்பினும் பெரும்பாலான விசுவாசிகள் தங்கள் சிந்தனையில் இன்னும் புறஜாதிகளாகவே இருக்கிறார்கள். சாத்தானின் பொய்யை நாம் அம்பலப்படுத்த வேண்டும். ஏனெனில் தேவன் தம்முடைய பிள்ளைகளை நிபந்தனையின்றி நேசிக்கிறார் என்பதே உண்மை. நாம் அந்த அன்பை நிராகரித்து, தேவனிடமிருந்து விலகி, தொலைந்துபோகக் கூடும். ஆனால் அவரது பிள்ளைகள் மீதான அவரது அன்பு இன்னும் நிபந்தனையற்றதாகவே இருக்கிறது. கெட்டகுமாரன் மீது தகப்பன் வைத்திருந்த அன்பின் உவமை இதை மிகச்சரியாக விளக்குகிறது.

மனிதர்கள் மீதுள்ள தேவனுடைய அன்பில் வெவ்வேறு அளவுகள் இருப்பது உண்மைதான். உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் தேவன் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நேசிக்கிறார் (யோவான் 3:16). ஆனால் தேவன் மறுபடியும் பிறந்த பிள்ளைகளை அதிக அளவில் நேசிக்கிறார். அவருடைய பிள்ளைகளில், அவர் மற்றவர்களை விட சிலரை அதிகமாக நேசிக்கிறார், ஏனென்றால் அவர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்கிறார்கள் - யோவான் 14:21 இல் இயேசு கூறியது போல்: "என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்". அதற்கும் மேலாக, இயேசுவைப் பின்பற்றும்படிக்கு எல்லாவற்றையும் இழந்த சீஷர்களை தேவன் மிக உயர்ந்த அளவிற்கு நேசிக்கிறார் - தேவன் இயேசுவை நேசித்தது போல் அவர்களையும் நேசிக்கிறார் (யோவான் 17:23 ஐப் பார்க்கவும்).

ஆயினும் தேவனுடைய அன்பு நிபந்தனையற்றது.

தெய்வீக அன்பிற்கு பிரத்தியேக அடையாளமாக “பிரதிபலன் எதிர்பாராதது” (கைம்மாறு கருதாதது) என்று லுக்கா 6:35 ல் சொல்லப்பட்டிருக்கிறது. மனுஷீக அன்பு எப்போதும் மரியாதை, அன்பு மற்றும் வெகுமதிகளை எதிர்பார்க்கும். ஆனால் தெய்வீக அன்போ எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காது. அது நேசிக்கிற யார்மீதும் மறைமுகமாக ஒரு நிபந்தனையை வைப்பதில்லை. தேவன் நல்லோர்மீதும் தீயோர்மீதும் சூரியனை உதிக்கச் செய்கிறார்; தீயோர்மீதும் நன்றியறியாதோர்மீதும் இரக்கமுள்ளவராக இருக்கிறார். இந்த தெய்வீக அன்பில் நாம் ஜீவித்தால் மட்டுமே எல்லாப் பரிசேயத்தனத்திலிருந்தும் நாம் இரட்சிக்கப்பட முடியும்.