WFTW Body: 

பவுல் “மாயையல்லாத மெய்யான பரிசுத்தத்தைக்” குறித்துப் பேசுகிறார் (எபேசியர் 4:24 – J.B.பிலிப்ஸ் பொழிப்புரை). இந்தப் பரிசுத்தமானது நாம் உபதேசத்தைப் புரிந்து கொண்டதனால் வருவதல்ல. அது, இயேசு தாமே தம் வாழ்க்கையை நம் மூலம் வாழ்வதனால் வருவதாகும். 1தீமோத்தேயு 3:16-ல் குறிப்பிடப்பட்டிருக்கிற தேவ பக்தியின் ரகசியமானது இயேசு நம் மாம்சத்தில் வந்தார் என்கிற உபதேசம் அல்ல. நம் மாம்சத்தில் வந்த இயேசுதாமே தேவபக்தியின் இரகசியமாயிருக்கிறார். எந்த உபதேசத்தையும் நோக்கிப்பார்ப்பதனால் அல்லாமல், இயேசுவை நோக்கிப் பார்ப்பதனாலேயே நாம் அவருடைய சாயலுக்கொப்பாய் மறுரூபப்படுகிறோம் (2கொரிந்தியர் 3:18). இதை உங்கள் வாழ்நாளெல்லாம் நினைவில் கொள்ளுங்கள்.

(1) உங்கள் கண்களை நீங்கள் கர்த்தர் மேல் மாத்திரமே பதித்திருக்க வேண்டும்.

(2) கர்த்தரை நேசிக்கிறவர்கள் எந்தக் குழுவில் இருந்தாலும், அல்லது எந்த உபதேசத்தைப் பின்பற்றினாலும், அவர்கள் அனைவரையும் நீங்கள் நேசிக்க வேண்டும்.

இந்த இரண்டும் உங்களிடம் இல்லையென்றால், நீங்கள் பின்பற்றும் எந்த உபதேசமானாலும் அவை ஒவ்வொன்றும் உங்களை வழிவிலகச் செய்துவிடும். இயேசு தாமே தமது சரீரமான சபைக்குத் தலையாய் இருக்கிறார். ஆனால் ஒரு உபதேசம் தலையாக மாறிவிட்டால், ஜனங்கள் பரிசேயராக மாறிவிடுவார்கள் - மேலும் அந்த உபதேசம் எந்த அளவுக்குத் தூய்மையானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு மிகப்பெரிய பரிசேயர்களை அது உருவாக்கி விடும். இந்த ஆங்கிலப் பாடலின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள்: “ஒரு காலத்தில் ஆசீர்வாதமே எனக்குப் பெரிதாய்த் தோன்றியது; ஆனால் இப்போது ஆண்டவர் மட்டுமே எனக்குப் பெரிதாயிருக்கிறார்".

சபையாக நாம் பிறருக்குக் காண்பிக்க வேண்டிய தோற்றமானது இயேசு வெளிப்படுத்திக் காண்பித்த பிதாவின் தோற்றத்துக்கு ஒத்ததாயிருக்க வேண்டும் - விசேஷமாக நாம் யோவான் 8:1-12-ல் காண்பது போல, அவர் மார்க்கவாதிகளான பரிசேயர்களுக்கு எதிராக மனந்திரும்பிய விபச்சாரியின் பக்கமே இருந்தார். இயேசு பூமியில் இதுவரை எவரும் பிரசங்கித்திராத உயரிய தரமான பரிசுத்தத்தைப் பிரசங்கித்தார். ஆயினும், அவர் மிக மோசமான பாவிகளோடு கலந்திருந்தார் (உதாரணமாக, மகதலேனா மரியாள் உயிர்த்தெழுந்த கர்த்தரை முதன்முறையாகக் காணும் சிலாக்கியத்தைப் பெற்றாள்). அவர் ஒருபோதும் அப்படிப்பட்ட பாவிகளை விமர்சித்ததோ அல்லது அவர்களது கடந்தகாலத்தை நினைவூட்டியதோ இல்லை. சபையாக நமது அழைப்பும் கூட இதுதான், அதாவது, இயேசு பிரசங்கித்த அதே தரமான பரிசுத்தத்தை நாமும் பிரசங்கித்து, அதே நேரத்தில் மோசமான பாவிகளையும் பின்மாற்றக்காரையும் கிறிஸ்துவண்டை இழுப்பதற்காக அவர்களை நாம் பரிவோடு நடத்த வேண்டும்.

நமது சபையானது, மிக மோசமான நோயாளிகள் வரவேற்கப்படுகிற ஒரு மருத்துவமனையைப் போன்றது. அவர்கள் எல்லாரும் குணமாக்கப்பட முடியும். “யாருமே எனக்கு உதவி செய்ய முடியாத அவல நிலையில் இருக்கிறேன்” என்று ஒருவரும் நினைக்கத் தேவையில்லை. சில சபைகள் பணக்காரர்களும், சுய-திருப்தியாளர்களும் கூடிவரும் சங்கங்களைப் போல இருக்கின்றன. ஆனால் நாமோ மோசமான பாவிகளுக்கான ஒரு மருத்துவமனையைப் போல இருக்க விரும்புகிறோம்.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் எல்லா சமயங்களிலும் தேடுங்கள். அப்போது நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும். மேலும் தேவன் பயங்கரமான பராக்கிரமசாலியாய் உங்கள் சார்பாகச் செயல்படுவார் (எரேமியா 20:11). இதைத்தான் என் வாழ்நாள் முழுவதும் நான் அனுபவித்திருக்கிறேன்.

தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுவதென்பது பிரதானமாக சுவிசேஷம் அறிவிப்பதையோ அல்லது மிஷனரி(missionary) ஊழியம் செய்வதையோ குறிப்பிடுவதில்லை. அது, தேவனை உங்கள் வாழ்க்கையில் அரசாளும் இராஜாவாக வைத்து, அவரது அதிகாரத்தின்கீழ் எப்பொழுதும் அடங்கி வாழ்ந்து, பணத்தின் ஈர்ப்பு, உலக இன்பங்கள், மனுஷனுடைய கனம், போன்றவற்றிற்கு மேலாய் தேவனது பரலோக மதிப்பீடுகள் மேலோங்கியிருக்க அனுமதிப்பதாகும்.

முதலாவது தேவனுடைய நீதியைத் தேடுவதென்பது அவரது திவ்யசுபாவம் உங்கள் உள்ளான வாழ்க்கையிலும், உங்கள் வெளிப்புற நடத்தையின் ஒவ்வொரு பகுதியிலும் வெளிப்படும்படி வாஞ்சிப்பதாகும்.

உங்கள் வாழ்நாளெல்லாம் இந்த சத்தியம் உங்களைப் பற்றிப் பிடிக்கட்டும். உங்கள் பிள்ளைகளும் தங்கள் வாழ்க்கையில் இதே பலனைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்கும் இந்த சத்தியத்தை நீங்கள் கற்றுக்கொடுங்கள். இவ்விதமாக கர்த்தர் திரும்ப வரும் வரையிலும் இப்பூமியில் சந்ததி சந்ததியாய் அவர் தமக்கென்று ஒரு சாட்சியைக் கொண்டிருப்பார்.