WFTW Body: 

1கொரிந்தியர் 12:27,28-ல் "நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள். தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், உதவிகளையும் (ஊழியங்களையும்), ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்" என வாசிக்கிறோம்.

மேற்கண்ட வசனங்களில் சொல்லப்பட்ட ஒவ்வொருவரும் சபையைக் கட்டும் பணியில் உதவுவதற்காக, தேவன் அவர்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சில திறமைகளை தந்திருக்கிறார். அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், அற்புதங்கள் மற்றும் குணமாக்கும் வரங்கள் முதலியவை எல்லாம் வெளிப்படையாய்த் தெரியும் திறமைகளாகும். தேவன்தான் அவர்களுக்கு அவ்வரங்களையெல்லாம் கொடுத்தார். அது போலவே போதகர்கள், உதவிகள், ஆளுகைகள் போன்றவர்களும் கிறிஸ்துவின் சரீரத்தில் பணி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆகவே தேவனே அவர்களுக்கும் தேவையான இயற்கைக்கு அப்பாற்பட்ட திறமைகளை தந்தருளியிருக்கிறார் என்பதும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும். சில இயற்கையான திறமைகளை உடையவர்களைப் பற்றி இங்கு சொல்லப்படவில்லை.

உதாரணமாக, தேவன் சபையிலே ஏற்படுத்தி இருக்கும் "உதவிகள்" என அழைக்கப்படுபவர் களைப் பற்றி ஆலோசியுங்கள். இந்த ஜனங்கள் தரையைக் கூட்டுவதற்கும், கழிப்பறையைச் சுத்தம் செய்வதற்கும் தன்னார்வமாய் முன்வருபவர்கள் என்று எண்ண வேண்டாம். நிச்சயமாகவே இது போன்ற கீழான வேலைகளை மனமுவந்து செய்வதற்கென்று ஒவ்வொரு சபையிலும் தன்னார்வலர்கள் தேவைதான். ஆனால் இது மாதிரியான பணிகளைச் செய்வதற்கென்று எந்தவிதமான இயற்கைக்கு அப்பாற்பட்ட உந்துதல்களும் தேவையில்லை. ஆனால் "உதவிகள்" என்று மேலுள்ள வசனத்தில் சொல்லப்பட்ட வர்கள், பிறருக்கு உதவி செய்யும் பொருட்டு, தேவனிடமிருந்து இயற்கைக்கப்பாற்பட்ட தாலந்தைப் பெற்றவர்கள் ஆவர். இப்படிப்பட்ட ஜனங்கள்தான் இன்று சபையிலே அதிகமாகத் தேவைப்படுகிறார்கள். இதுமாதிரியான ஊழியத்தைச் செய்ய தேவனால் சித்தப்படுத்தப்படும்படிக்கு நாம் எல்லாருமே ஆர்வம் கொள்ள வேண்டும். இது போன்ற "உதவிகள்" என்று சொல்லப்படுபவர்கள், சபைகளிலுள்ள பெலவீனரும், தேவையுள்ளவருமாய் இருப்பவர்களுக்கு "ஆவிக்குரிய ஆதரவளித்து, உதவி செய்பவர்களாக" இருப்பவர்களாவர்.

பரிசுத்த ஆவியானவர், உதவியாளர் (தேற்றரவாளர்) என அழைக்கப்படுகிறார் (யோவான் 14:16). அவர் நமக்கு நல்கிடும் உதவியை நமது கண்களுக்குத் தெரியாதவாறுதான் செய்கிறார். அது போலவேதான் கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள "உதவிகள்" எனப்படும் இவர்களும், பெரிய உதவியாளரான பரிசுத்த ஆவியானவரைப் போலவே பணி செய்கிறார்கள். இவர்கள் எந்தவிதமான ஆடம்பர, ஆரவாரமுமின்றி, அறியப்படுவதையோ, அங்கீகாரத்தையோ நாடாமல், மௌனமாய் பின்னணியிலிருந்து பணி செய்வார்கள். அவர்கள் சகோதரராக இருக்கக்கூடும் அல்லது சகோதரியாகவும் இருக்கக்கூடும். இப்படிப்பட்ட விசுவாசிகளுக்குத் தேவனால் தரப்பட்ட ஒரு தனித்துவமான வரம் உண்டு. அது குணமாக்கும் வரத்திற்கு ஒப்பான தனித்துவம் உடையதாகும். சபையிலே சந்தேகங்களோடும், பயங்களோடும் போராடிக் களைப்படைந்த ஜனங்களுக்குத் தங்களுடைய வாயைத் திறந்து சொல்ல முடியாத காரியங்களும் இருக்கும். ஆனால் இவர்கள் உணர்வுடையவர்களாய் இருந்து அப்படிப்பட்ட காரியங்களையும் அறிந்து அவர்களுக்கு உதவி செய்வார்கள். இவர்கள் உதவி செய்ய அழைப்பு வரும்வரை காத்திருக்க மாட்டார்கள். ஆனால் ஆவியினால் வழிநடத்தப்பட்டு, போராடித் தவிக்கும் ஜனங்களுக்கு அருகாமையில் சென்று நின்று, விசுவாச வார்த்தைகளாலும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளாலும் அவர்களுக்கு உதவிடுவார்கள். இவர்கள் யார் மீதும் தங்களைத் திணிக்க மாட்டார்கள். இவர்கள் அன்றாடம் தேவனிடம் கவனித்துக் கேட்டு, "இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்லும்படிக்கு" (ஏசாயா 50:4) வார்த்தையைப் பெற்றிருப்பார்கள்.

நம்முடைய நாட்களிலே இதுமாதிரியான வரம் பெற்ற ஜனங்கள் பெரிதும் தேவைப்படுகிறார்கள். ஏனெனில் ஒவ்வொரு சபையிலும், அநேக ஜனங்கள் தங்களுடைய வாழ்க்கைப் போர்க்களத்திலே சோர்வுற்றவர்களாகவும், வருத்தமுற்றவர்களாகவும், பதட்டமுற்றவர்களாகவும், களைப்புற்றவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களோடு இணைந்து அவர்களுக்கு அருகாமையிலேயே நடந்து, அவர்களை உற்சாகமூட்டுவதற்கு, யாரேனும் ஒருவர் அவர்களுக்குத் தேவை. ஆதலால் மௌனமாகவும், அமைதியாகவும் கிறிஸ்துவின் சரீரத்தை ஆசீர்வதிக்கும்படியாக, அநேக சகோதர, சகோதரிகள் இந்த வரத்திற்காக ஆண்டவரைத் தேட வேண்டும்.