பரிசுத்த வேதாகமத்தில், நம்முடைய காலத்திற்கு அதிக பொருத்தமுள்ள இரண்டு முரண்பாடான ஊழியங்களைப் பற்றி நாம் வாசிக்கிறோம்.
தானியேலின் ஊழியம்
தானியேல் அவருடைய சந்ததியில், ஒரு அந்நிய தேசத்திலே தேவனால் வல்லமையாக உபயோகப்படுத்தக்கூடிய மனிதராக இருந்தார். மற்ற யூதர்களோடு வாலிபனாய் பாபிலோனில் சிறைப்பட்டிருந்தபோது “தன்னைத் தீட்டுப்படுத்தாதபடிக்கு தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டான் “ (தானியேல் 1:8).
இவ்வாறு கர்த்தருக்காக வைராக்கியமாய் இளைஞன் தானியேல் நின்றதைக் கண்ட அனனியா, மீஷாயேல், அசரியா என்ற மூன்று சிறைபட்ட யூத இளைஞர்கள், கர்த்தருக்காக தாங்களும் தைரியமாக நிற்க ஊக்கமடைந்தனர் (தானியேல் 1:11). இவர்கள் தாங்களாகவே கர்த்தருக்காக நின்றிட தைரியமற்றிருந்தார்கள். ஆனால் தானியேல் கர்த்தருக்காக நின்றதைக் கண்டவுடன் இவர்களும் தைரியம் பெற்றார்கள். கர்த்தருக்காக தனியாக நிற்கத் தைரியமற்ற அநேக கிறிஸ்தவர்கள் இன்று உலகத்தில் உள்ளனர். ஆனால் அவர்கள் எங்கோ ஒரு தானியேல் கர்த்தருக்காக நிற்பதைக் காணும்பொழுது கூட சேர்ந்து கொள்கின்றனர். ஆகவே தேவன் இன்று தானியேல்களைத் தேடுகிறார்.
நீங்கள் கர்த்தருக்காக இப்படியொரு தானியேலாய் இருப்பீர்களா? “சீஷத்துவத்தைக் குறித்த தேவனுடைய வார்த்தையின் போதனைகளைக் குறித்தோ (லூக்கா 14:26-33), அல்லது இயேசு மலைப்பிரசங்கத்தில் கற்பித்தவைகளைக் குறித்தோ (மத்தேயு 5 - 7), அல்லது புது உடன்படிக்கையைக் குறித்தோ (ரோமர் 6:14), அல்லது கிறிஸ்துவின் சரீரத்தைக் குறித்தோ (எபேசியர் 4:11-16), அல்லது வேதாகமத்திலுள்ள மற்ற போதனைகளைக் குறித்தோ, ஒருபோதும் ஒத்தவேஷம் செய்துக் கொள்ளமாட்டேன்” என்று கூறுவீர்களா? “ஒரு ஒத்தவேஷந் தரித்த போதகரையோ, அல்லது ஒரு மூத்த சகோதரனையோ, அல்லது ஒரு விசுவாசியையோ பிரியப்படுத்த பிரயாசப்படாமல், கர்த்தருடைய வார்த்தையில் சொல்லப்பட்டவைகளுக்கு 100% கர்த்தருக்காக நிற்பேன்” என்று கூறுவீர்களா?
அநேகரை நீதிக்குட்படுத்தும் (தானியேல் 12:4) “தானியேல் ஊழியத்திற்கு” சகோதர சகோதரிகள் இன்றைய உலகில் அதிகமாக தேவைப்படுகிறார்கள். இந்த வசனம் (தானியேல் 12:4), பிரசங்கிமார்கள் நீதியைப்பற்றி பிரசங்கம் செய்வதைக் குறிப்பிடாமல், தங்கள் வார்த்தையினாலும், தங்கள் வாழ்க்கையினாலும் மற்றவர்களை நீதிக்குட்படுத்துகிற சாதாரண விசுவாசிகளைக் குறிப்பிடுகிறது.
லூசிபரின் ஊழியம்
தானியேலின் ஊழியத்திற்கு நேர்மாறான வேறொரு ஊழியத்தையும் வேதாகமத்தில் வாசிக்கிறோம்.
அது “லூசிபரின் ஊழியம்”.
வெளிப்படுத்தல் 12:4 -ல், லூசிபர் (ஏசாயா 14:12 -ல் லூசிபர் சாத்தானாய் மாறினான் என்று சொல்லப்பட்டிருக்கிறது) வானத்தின் தூதர்களில் (நட்சத்திரங்கள்) மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளினான் என வாசிக்கிறோம். (யோபு 38:7 -ல் தூதர்களை “நட்சத்திரங்கள்” என்றும் ஏசாயா 14:12 -ல் லூசிபரை “விடிவெள்ளி” என்றும் சொல்லப்பட்டிருக்கிறது). தேவனுக்கு எதிராக முரட்டாட்டம் செய்வதில் கோடிக்கணக்கான தூதர்களில் மூன்றிலொருபங்கு தூதர்களை லூசிபர் தன்னோடே சேர்த்துக்கொண்டான். முரட்டாட்டமுள்ள தூதர்களெல்லாரையும், லூசிபர் ஒன்றாக கூட்டி சேர்க்கும்வரை தேவன் காத்திருந்தார். பின்பு தேவன் அவர்கள் அனைவரையும் தம்முடைய பிரசன்னத்தை விட்டு உடனே தள்ளிவிட்டார். இவைகள்தான் பூமியெங்கும் இன்று சுற்றித்திரிந்து ஜனங்களை ஆட்கொள்கிற பிசாசுகள்.
அநேகம் தூதர்கள் வழித்தப்பி போவதற்கு லூசிபரை தேவன் ஏன் அனுமதித்தார்? அதிருப்தியும், முரட்டாட்டமுமுள்ள தூதர்களிடத்தினின்று பரலோகத்தை சுத்திகரிப்பதற்கேயாகும்! லூசிபர் எழும்பி, தூதர்களோடு பேசி, தேவனுக்கு எதிராக முரட்டாட்டத்தில் வழிநடத்தியிராவிட்டால், அந்த தூதர்களின் முரட்டாட்டமுள்ள இருதயங்கள் வெளியரங்கமாக்கப்பட்டிருக்காது.
இதுப்போல இன்றும்கூட, சபையில் சகோதர சகோதரிகள் லூசிபரின் ஊழியத்தைப் பெற தேவன் அனுமதிக்கிறார். சபையின் அதிகாரத்திற்கு எதிராக முரட்டாட்டமுள்ள ஆவியைப் பெற்றிருக்கிற இவர்கள் (அன்றிருந்த லூசிபர் போல), இங்கும் அங்கும் சென்று வெவ்வேறு விசுவாசிகளை சந்தித்து அல்லது மின்னஞ்சல் (email) அனுப்பி, புறங்கூறவும், குற்றஞ்சாட்டவும், பொய்சொல்லவும், தீமையானவைகளைப் பேசவும் தேவன் அனுமதித்து, அதன்மூலமாய் சபையிலுள்ள அதிருப்தியும், முரட்டாட்டமும், லௌகீகமுமான விசுவாசிகளை அடையாளப்படுத்தி வெளியரங்கப்படுத்துகிறார். பின்பு ஒருவர் பின் ஒருவராகவோ அல்லது எல்லாரும் ஒன்றாகவோ, அவர்கள் சபையை விட்டு சென்றுவிடுவார்கள். இப்படியாக ஸ்தல சபை சுத்திகரிக்கப்பட்டு (பரலோகம் சுத்திகரிக்கப்பட்டது போல), கிறிஸ்துவின் சரீரத்தின் தூய்மையான வெளிப்பாடாக மாறும்.
கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக, லூசிபரை பரலோகத்தில் உலாவுவதிலிருந்து தேவன் எப்படி தடுக்கவில்லையோ, அப்படியே இன்றும்கூட லூசிபரின் ஊழியத்தில் ஈடுபட்டிருப்பவர்களையும் சபையில் உலாவுவதிலிருந்து தேவன் தடுப்பதில்லை. அது தேவன் சபையை சுத்திகரிக்கும் வழிமுறையாகும்.
ஆனால் இத்தகைய லூசிபரின் ஊழியத்தில் ஈடுபடும் ஜனங்களைக் குறித்து நாம் விசுவாசிகளுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். “அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.” (ரோமர் 16:17,18) என்று பவுல் விசுவாசிகளை எச்சரிக்கிறார்.
இப்படிப்பட்ட ஜனங்கள் என்ன செய்து விடுவார்களோவென்று நாம் பயப்படுவதில்லை. எனவே அவர்களோடு நாம் சண்டைப்போடுவதில்லை. அவர்களால் சபையைக் கறைப்படுத்த முடியாது. அவர்கள் தேவனுடைய தோட்டத்திலிருந்து களைகளை மாத்திரமே அகற்றுவார்கள். பார்க்கப்போனால் அவர்கள் சபையைச் சுத்திகரித்து நமக்கு சேவை செய்கிறார்கள்! தேவன்தாமே தமது சபையைப் பாதுகாக்கிறார்.
“அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்”(1யோவான் 2:19). என்று அப்போஸ்தலனாகிய யோவான் சொன்னது போலாகும்.
ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார் (1கொரி 3:17). ஆனால் தேவன் யாரையும் கெடுக்க விரும்புவதில்லை. நாமும்கூட அப்படி யாரையும் கெடுக்க விரும்புவதில்லை. ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, கர்த்தர் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து, அநேக ஆண்டுகள் நியாயத்தீர்ப்பை தாமதிக்கிறார். நாமும் அப்படியே எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்புகிறோம்.
நோவாவின் நாட்களில் தேவன் 120 வருடங்கள் காத்திருந்தார். ஆனால் தேவன் நியாயந்தீர்க்கும்போது, அவருடைய தீர்ப்பு கடுமையாக இருக்கும்.
பிரிவினைகளில் தேவ நோக்கம்!
எங்கள் சபையில் பிளவு ஏற்பட்டதேயில்லை எனக்கூறி மேன்மை பாராட்டுவது மதியீனமாகும். நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, ஆதி நாட்களிலேயே பரலோகத்தில் தூதர்கள் மத்தியில் இந்தப் பிளவு உண்டானது. இப்படிப்பட்ட பிளவு அவசியமானதேயாகும். ஏனெனில், “உங்களில் உத்தமர்கள் (கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்) இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் (பிளவுகளும்) உங்களுக்குள்ளே (சபையிலே) உண்டாயிருக்கவேண்டியதே” (1கொரி 11:19) எனப் பரிசுத்த ஆவியானவர் கூறுகிறார்.
தேவன் முதல் நாளில் வெளிச்சத்தை உண்டாக்கியபோது “வெளிச்சம் நல்லது என்று கண்டார்”. அவர் செய்த அடுத்த காரியம் “வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்”. தேவன் இந்த பிரிவினையைத் தம்முடைய சபையிலே எப்பொழுதும் செய்கிறார் – ஏனெனில் ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமில்லை. இவ்வகையான பிரிவினையில்லாமல் இப்பூமியில் தேவனுடைய சாட்சி கறைப்பட்டதாக இருக்கும். எனவே நமக்கொரு துய்மையான சபை இருக்கும்படியாக ஜனங்கள் தங்களுடைய லூசிபரின் ஊழியத்தை செய்வதற்கு நாம் அனுமதிக்கிறோம். மெய்யாகவே தேவனுடைய வழிகள் வியக்கத்தக்கவைகளே!
நாமெல்லாரும் தானியேலின் ஊழியத்தையோ (சபையில் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் கட்டும் ஊழியம்) அல்லது லூசிபரின் ஊழியத்தையோ (பிரிவினையை விதைக்கும் ஊழியம்) கொண்டிருக்ககூடும். பிரிவினையை விதைக்கிறவர்களைக் (சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுகிறவர்களை) கர்த்தர் வெறுக்கிறார் (நீதி 6:16-19). இந்த காரியத்தில் நடுநிலையாயிருக்க முடியாது. ஏனென்றால் “என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்” என இயேசு கூறினார். சபையிலே இரண்டு ஊழியங்கள் மாத்திரமே உண்டு – சேர்ப்பது அல்லது சிதறடிப்பது (மத்தேயு 12:30).
நம்முடைய சபைகளில், பதவி மற்றும் கெளரவத்தை தேடியவர்களையும், தர்க்கத்திற்குரிய ஆவியை உடையவர்களையும், தங்களைவிட இளைய சகோதரர்கள் ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறி செல்லும்போது பொறாமை கொள்ளுபவர்களையும், வெளியரங்கப்படுத்தி நம் மத்தியிலிருந்து நீக்குவதற்காக கர்த்தர் அற்புதமாய் நயமான சூழ்நிலைகளை ஏற்படுத்துகிறார். தேவன் இப்படிப்பட்ட “ஞானிகளை”, “அவர்களுடைய தந்திரத்திலே” பிடித்து (1கொரி 3:19), சபையை “கடத்தி” செல்ல அவர்கள் தீட்டிய ரகசிய திட்டத்தை விரக்தியடையச் செய்கிறார்! இது தேவன் நம்மேல் கொண்டுள்ள அக்கறைக்கும், நம்முடைய சபைகளில் அவருடைய நாமத்திற்கு ஒரு தூய்மையான சாட்சியிருக்க வேண்டுமென்கிற அவரின் தீவிர வாஞ்சைக்கும் ஆதாரங்கள்.
இப்படிப்பட்ட சாத்தானின் தாக்குதல்களினின்று நம்மை பாதுகாத்து, தொடர்ந்து நம்மை கண்காணித்து வருகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். “கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா” (சங்கீதம் 127:2). சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிற இடத்தில்தானே கர்த்தர் தமது ஆசீர்வாதத்தைக் கட்டளையிட முடியும் (சங்கீதம் 133:1,3). ஒன்றாய் ஐக்கியப்பட்டிருக்கும் சபையே பாதாளத்தின் வாசல்களை மேற்கொள்ள முடியும். எனவே சபையானது ஒரே ஐக்கிய சரீரமாய் பாதுகாக்கபடுவதற்கு, இடையூறாயிருப்பவர்கள் எல்லாரையும் அகற்றும் கிரியையைப் பரிசுத்த ஆவியானவர் வல்லமையாய் நம்முடைய எல்லா சபைகளிலும் செய்கிறார்.
பரிசுத்த ஆவியானவர் எதிர்காலத்திலும் நம் மத்தியில் இந்த கிரியையைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்று நாம் ஜெபிக்க வேண்டும். ஏனென்றால் நம் மத்தியில் இருப்பவர்கள் எந்த நேரத்திலும் பெருமையுள்ளவர்களாகவோ அல்லது தங்களுக்குரியவைகளை தேடுகிறவர்களாகவோ மாறுவதற்கு எப்போதும் வாய்ப்பு உண்டு. எனினும் தேவனுடைய வாக்குத்தத்தம் நமக்கு என்னவென்றால் “அப்பொழுது நான் உன் பெருமையைக்குறித்துக் களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன்; அவர்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள்” (செப்பனியா 3:11,12). இப்படிப்பட்ட சிறுமையும் எளிமையுமான ஜனங்களைக் கொண்டே சபை ஐக்கியத்தில் கட்டப்பட முடியும்.
கர்த்தர் தமது சபையை பரிசுத்தத்தில் பாதுகாக்க வைராக்கியமுள்ளவர், ஆகவே காசுக்காரர்களை சரியான நேரத்தில் தேவாலயத்திலிருந்து வெளியே துரத்தியதுபோல, தங்களுக்குரியவைகளை தேடுகிறவர்களை அவருடைய நேரத்தில் அவருடைய வழியில் வெளியரங்கப்படுத்தி அகற்றுவார்.
தேவனுடைய மகிமைக்காக இந்த கடைசி நாட்களில், தேவன் விரும்புகிற விதமாக வாழவும், எல்லா இடங்களிலும் சுத்தமான சாட்சியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபையை கட்டியெழுப்பவும் தேவன் நமக்கு கிருபையையும் ஞானத்தையும் தருவாராக. ஆமென்.