சில நேரங்களில் பிறர் நம்மீது அதிகமாகக் கோபப்படும் சூழ்நிலைகளை நாம் சந்திக்கக்கூடும். நாம் சிறு வயதினராயிருந்தாலும் கூட அவ்வித சூழ்நிலைகளை நாம் சந்திக்கிறோம். உதாரணமாக, வீட்டில் உடன் பிறந்தவர்களுடனும், பள்ளியில் அடாவடியாகத் துன்புறுத்துபவர்களுடனும், கொடூர நண்பர்களுடனும் நமக்கு சண்டை ஏற்படுகிறது. நாம் வளர்ந்து பெரியவர்களாகும்போது, சக ஊழியர்கள் அல்லது குடும்பத்தினர் நம்மீது கோபமடைந்து மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் கூட நம்மிடம் பேசாமல் இருக்கலாம். ஒருவேளை நாம் செய்த ஏதாவது ஒன்று தவறாய் இருந்திருக்கலாம், ஒருவேளை நாம் அவர்களுக்கு எதிராகப் பாவம் செய்திருக்கலாம். அல்லது அந்த சூழ்நிலையில் தவறு பிரதானமாக நம்முடையதாக இல்லாமலிருக்கலாம். ஆனால், நடந்த எதோ ஒன்றிநிமித்தம், அவர்கள் நம்மீது கடுங்கோபமாக இருக்கலாம்.
அது நமக்கு பதிலுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். அல்லது அவர்கள் நம்மை மன்னிக்கவில்லை என்றால் வருத்தமாகவோ அல்லது கவலையாகவோ உணரலாம். அல்லது அவர்கள் நம்மீது கோபப்படுவதால் அவர்கள் மிகவும் தேவ பக்தியற்றவர்கள் என்று நாம் கருதி அவர்களை இழிவாகப் பார்க்கலாம். இதில் எதுவுமே தேவனுடைய சித்தம் அல்ல.
நம்மிடம் யாராவது கோபமாக இருந்தால் நாம் என்ன செய்வது?
முதலாவது நாம் செய்யவேண்டிய காரியம் நம்மை நாம் தாழ்த்துவது தான். மேலும், நம்மை நாமே தாழ்த்துவதின் ஒரு பகுதி என்னவென்றால், ஒப்புரவாகி சமாதானம் நாடும் முதல் நபர் நாமாக இருக்க வேண்டும்.
வாக்குவாதம் வரும் நேரத்தில், மிகவும் ஆவிக்குரியவர்களே மன்னிப்புக் கேட்டு ஒப்புரவாகி சமாதானத்தைத் தேட வேண்டும். நான் இயேசுவைப் பின்பற்ற விரும்பினால், முதலில் ஒப்புரவாகி சமாதானம் நாடுவது நானாக இருக்க வேண்டும்.
மத்தேயு 5:23-24 இல், நம் சகோதரன் நம்மீது கோபமாக இருந்தால், நாம் தேவனிடத்தில் வருவதற்கு முன்பு நம் சகோதரனோடே ஒப்புரவாகி சமாதானம் செய்ய வேண்டும் என்று இயேசு கூறினார். மன்னிப்புக் கேளுங்கள், காரியத்தை சரி செய்யுங்கள், ஒப்புரவாகி சமாதானம் செய்ய முயற்சி செய்யுங்கள் - ஒருவேளை தவறு நம்மிடத்தில் இருக்கலாம். நாம் தவறு செய்யாவிட்டாலும், நாம் இன்னும் சமாதானத்தை நாடலாம்... ஒருவேளை நாம் செய்யாத தவறுக்கு நாம் மன்னிப்பு கேட்க வேண்டியதாயிருக்கலாம்! இயேசுவும் கூட இதுபோன்ற இருதயம் உள்ளவராய், ஒரு பாவமும் செய்யாதவராய், நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்று நான் நம்புகிறேன் - ஒப்புரவாகி சமாதானத்தைத் தேடும்படி நாம் சுயத்திற்கு மரிக்க வேண்டும். நாம் மன்னிப்புக் கோரி வருத்தம் தெரிவிப்பதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றபோதிலும், சமாதானத்தைத் திரும்பவும் நிலைநிறுத்துவதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்திருக்கிறோமா என்பது தான் கேள்வி.
ரோமர் 12:18 - கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.
நான் பார்த்த மற்றொரு காரியம் என்னவென்றால், நான் என்னை நானே தாழ்த்துவதன் ஒரு பகுதி, நான் தேவனால் எவ்வளவு மன்னிக்கப்பட்டேன் என்பதையும், ஒவ்வொரு தருணத்திலும் அவர் எனக்கு எவ்வளவு இரக்கத்தைப் பொழிகிறார் என்பதையும் நினைவுகூருவதாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, என் பிள்ளை எனக்குக் கீழ்ப்படியாமல் போனதைக் கண்டு நான் கோபமாக இருக்கும்போது எனக்கு உதவும் விஷயங்களில் ஒன்று, என் குழந்தையின் கீழ்ப்படியாமையை விட என் கோபம் மிகவும் முக்கியமானதாகும் என்பதை நினைவில் கொள்வதாகும். ஏனென்றால் நான் வளர்ந்தவன், புத்தியுள்ளவன்! தேவன் தமது அன்பையும் கிருபையையும் மன்னிப்பையும் பற்றி என்னிடம் கூறியிருக்கிறார். நான் தேவனுக்கு எப்படி கீழ்ப்படியாமல் இருந்தேன் என்று எனக்கு நன்றாகவே தெரியும்... ஆகவே, என் பிள்ளைகள் எனக்குக் கீழ்ப்படியாததினிமித்தம் அவர்கள் மீது நான் மிகவும் கோபமாக இருக்கும்போது, அவர்களை விட, முதலில் தேவனுடைய கிருபையும் இரக்கமும் அதிகம் தேவைப்படுவது எனக்குத் தான் என்பதை நினைவுகூருவது எனக்கு உதவியாய் இருந்திருக்கிறது.
பிறருடன் நாம் ஒப்புரவாகி சமாதானத்தைத் தேடும்படிக்கு நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்திருந்தாலும், அவர்கள் இன்னமும் நம்மீது கோபமாக இருந்தால், அது நம்மை கவலையடையச் செய்யலாம், வருத்தப்பட வைக்கலாம் அல்லது அவர்கள் மீது கோபப்படுவதற்கு நம்மைத் தூண்டலாம். சில சமயங்களில் மற்றவர்கள் என்னை உடனடியாக மன்னிக்காதபோது அதுபோன்ற சூழ்நிலைகளில் நான் மிகவும் விரக்தியடைந்திருக்கிறேன். எனது இளைப்பாறுதலும் பெலனும் தேவனிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும் அவருடைய அன்பும் அங்கீகாரமும் மட்டுமே முக்கியம் என்பதையும் நான் கற்றுக்கொண்டேன்.
இதற்கு ஒரு சிறந்த உதாரணம் தாவீது:
1சாமுவேல் 30:6 - தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.
நம்முடைய பிதாவின் அன்பிலே நாம் நிற்கிறோமே தவிர வேறு எவருடைய அன்பின்மீதோ அங்கீகாரத்தின்மீதோ அல்ல. நாம் பலப்படுத்தப்படுவதற்குத் தேவையானதெல்லாம் அவருடைய அங்கீகாரமும் அன்பும் மட்டுமேயாகும்.
யாராவது என்னிடம் பேசவில்லை என்றாலும், தேவன் என்னுடன் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார் என்ற உண்மையை நினைத்து நான் உற்சாகமடைய முடியும்! நான் மனந்திரும்பிய பிறகு யாராவது என் பாவத்தை எனக்கு எதிராக வைத்திருந்தால் நான் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் தேவன் அவ்விதமாக என் பாவத்தை நினைத்துக்கொண்டிருப்பதில்லை! வேறு யாராவது என் பாவத்தை எனக்கு எதிராக வைத்திருக்கிறார்கள் என்பதை விட, இன்னமும் தேவன் என் பாவத்தை எனக்கு எதிராக வைத்திருக்கவில்லை என்ற உண்மையானது எனக்கு எல்லையற்ற முக்கியத்துவம் வாய்ந்ததாயிருக்கிறது.
மற்றவர்கள் நம்மீது கோபமாக இருந்து, நம்மை உடனடியாக மன்னிக்காதிருந்து, அல்லது நாம் ஒப்புரவாகி சமாதானத்தை நாடும்படி முயற்சித்தும் அவர்கள் நமக்கு பதிலளிக்காதிருந்தால், உடனடியாக அவர்களைக் குறித்து நாம் நம்பிக்கையிழந்து விடக்கூடாது என்பதை நான் கவனித்திருக்கிறேன். தேவன் நம்முடன் பொறுமையாக இருப்பதைப் போல நாம் அவர்களிடம் பொறுமையாக இருக்க வேண்டும். நாம் மன்னிப்புக் கேட்டும் அவர்கள் இன்னும் நம்மை மன்னிக்கவில்லை என்றால், அவர்களை அவர்களைத் தாங்களே அமைதிப்படுத்த நாம் இடங்கொடுக்க வேண்டும். விறகில் சமைக்கும் போது, விறகு பெரிய தீப்பிழபாய் எறியும் போது அதில் சமைக்க முடியாது - நீங்கள் சமைக்க அந்த விறகின் தீப்பிழம்புகள் குறையும் வரை காத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் அந்த விறகுகளை உபயோகிக்க முடியும். அதே போல், சில சமயங்களில் சம்பாஷணையில் பிரயோஜனம் உண்டாயிருப்பதற்கு, அடுத்த நபரின் கோபத்தின் தீயை அணைக்க வேண்டும். ஒருவேளை, தேவன் என்னிடத்தில் பொறுமையாக இருப்பதைப் போலவே நானும் மற்றவர்களிடத்தில் பொறுமையாக இருக்கும்படி கற்பிக்க முயற்சிக்கலாம்.
“தீமைக்குத் தீமையையும்..., சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, ஆசீர்வதியுங்கள்” (1பேதுரு 3:9) என்று பரிசுத்த வேதம் கூறுகிறது. நாம் இயேசுவைப் போல இருக்க விரும்பினால், தீமைக்குத் தீமை செய்வதற்கு பதிலாக தீமைக்கு நன்மையைத் திருப்பிச் செய்வதே சிறந்த வழியாகும். மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; உக்கிரத்துக்குப் பதிலாக மெதுவான பிரதியுத்தரத்தைத் திரும்பிச் செலுத்துங்கள் (நீதிமொழிகள் 15:1). பிறருடைய கோபத்துக்குப் பதிலாக பொறுமையையும் மனதுருக்கத்தையும் திரும்பிச் செலுத்துங்கள். தம்மை இழிவாகக் கருதின இந்த உலகத்திற்காக தம்முடைய உயிரைக் கொடுக்க வந்த இயேசுவின் வாழ்க்கையின் சரிதையும் இதுவேயாகும். அவரையே நாம் நோக்கி பார்க்கிறோம்.
"ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்." (எபிரெயர் 12:3)
இயேசுவைப் பார்த்து, அவர் எவ்வளவு சாந்தமானவராகவும், பிறருடைய விரோதச் செயலை எவ்வளவு பொறுமையுடனும் இரக்கத்துடனும் தாங்கிக்கொள்கிறார் என்பதைப் பார்ப்பதன் மூலம் நாம் உற்சாகப்படுத்தப்பட முடியும்.
நம்முடைய கோபத்தின் ஒவ்வொரு மில்லி லிட்டரையும் தேவனுடைய ஆவியின் வல்லமையால் கீழ்ப்படுத்திடவும், பிறர் நம்மீது கோபப்படும் வேளையில், அவர்கள் மீது அன்புள்ளவர்களாகவும் (நம் எதிரிகள் உட்பட), நம்முடைய பதில்களில் ஞானம் விளங்கவும், பொறுமையாகவும், இரக்கமாகவும் இருக்கவும் தேவன் நமக்கு உதவுவாராக.