வெளிப்படுத்தின விசேஷம் 2ம் மற்றும் 3ம் அதிகாரத்தில், கர்த்தரால் கடிந்துகொள்ளப்பட்ட ஐந்து தூதர்களையும் சபைகளையும் பற்றி நாம் வாசிக்கும்பொழுது, திட்டவட்டமாய் கீழ்நோக்கிச் செல்கிற போக்கை அவைகளிடம் நாம் காண்கிறோம்.
(1) எபேசுவில், கர்த்தர்மேல் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டதை நாம் காண்கிறோம். கிறிஸ்துவைப் பற்றும் பக்தியை (Devotion) நாம் இழக்கும்பொழுது, கீழ்நோக்கிச் செல்கிறதில் முதல் படியை எடுத்துவைக்கிறோம். இன்னும் சிறிது நேரத்தில், நம்முடைய சக விசுவாசிகள்மேல் கொண்டிருக்கும் அன்பையும் கூட இழந்து விடுகிறதற்கு நேராக இது நம்மை வழிநடத்தும்.
(2) பெர்கமுவில், பிலேயாமின் உபதேசத்தின் மூலமாய் உலகப்பற்று ‘எந்த ஒரு சத்தமுமில்லாமல் (Slyly)’ உள்ளே புகுந்ததை நாம் காண்கிறோம். இங்கே நிக்கோலாய் மதஸ்தர்கள் (எபேசு சபையில் வெளியே வைக்கப்பட்டவர்கள்) இப்பொழுது அதிகாரம் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்துவைப் பற்றும் பக்தியை இழக்கும்பொழுது உலகப்பற்று உள்ளே புகுந்து, ‘மதம்சார்ந்த ஆளுமையின் வரிசைமுறை’ (Religious Hierarchy) சபையை மேற்கொள்கிறது. ஒரு சபையிலுள்ள தலைமைத்துவத்தின் இடத்தை மதம்சார்ந்த ஆளுமையின் வரிசைமுறை எடுத்துக்கொண்டவுடனே, பாபிலோன் எளிதில் கட்டப்படுகிறது.
(3) தியத்தீராவில், சபை முற்றிலும் உலகப்பற்று நிறைந்ததாய் மாறினதின் விளைவாக, ‘மதம்சார்ந்த வேசித்தனம்’ (Religious Harlotry) பரவலாயிற்று. சபையின் காரியங்களில் செல்வாக்கு (Influence) செலுத்த இப்பொழுது ஒரு ஸ்திரீக்கு அதிகாரம் இருக்கிறது. பொய்யான கிருபையைப் பறைசாற்றுகிறது. போலியான ஆவிக்குரிய வரங்களையும் (குறிப்பாக தீர்க்கதரிசன வரத்தை) உருவாக்கிற்று.
(4) சர்தையில், மாய்மாலத்தை நாம் காண்கிறோம். பாவம் மூடப்பட்டு, மனிதனுடைய அபிப்பிராயம் தேவனுடைய அபிப்பிராயத்தைக் காட்டிலும் அதிகமாகக் கருதப்படுகிறது. அந்த சபையின் தூதன் ஆவிக்குரிய நித்திரையில் (ஆவிக்குரிய மெய்யான நிலைமையை அறியாமல்) இருக்கிறார். தன்னிடத்தில் தேவன் காண்கிற ஆவிக்குரிய மரணத்தைக் காணக்கூடாதபடிக்கு தேவ பக்தியின் வேஷமானது மனிதனுடைய கண்களை மறைத்துவிடுகிறது.
(5) லவோதிக்கேயாவில், சரீரம் செத்தது மாத்திரமல்லாமல், அது சிதைந்து துர்நாற்றம் வீசத் தொடங்கும் அளவிற்குக் காரியங்கள் சீர்கெட்டுப் போயிருக்கிறது. வெதுவெதுப்புத் தன்மையையும் ஆவிக்குரியப் பெருமையுமே ஆவிக்குரிய மரணத்திற்குக் காரணமாகும். மேலே சொல்லப்பட்ட நான்கு சபைகளிலும், ஏதோ சில நன்மைகளை அவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் கர்த்தரால் காண முடிந்தது. ஆனால் இங்கே லவோதிக்கேயாவில் அவரால் ஒன்றும் காண முடியவில்லை.
மேலே சொல்லப்பட்ட சபைகளின் தூதர்கள் எல்லாரும், தங்களுடைய சொந்த வாழ்கையையும் தங்களுடைய சபைகளையும் குறித்ததான உண்மையான ஆவிக்குரிய நிலைமையை அறிந்திருக்கவில்லை. தங்களைக் குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி அதிகமாக எண்ணினபடியால், அவர்கள் எல்லாரும் மனநிறைவோடு இருந்தனர். மற்றவர்களுக்கு பிரசங்கிக்கப் பிரசங்கங்களை ஆயத்தம் செய்வதில் அவர்கள் எல்லாரும் மும்முரமாக இருந்தபடியால், கர்த்தர் தங்களுக்குத் தனிப்பட்ட விதத்தில் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை அவர்களால் கேட்கக் கூடாமற்போயிற்று. தங்களுடைய சொந்த தேவையைப் பார்ப்பதைக் காட்டிலும், பிரசங்கம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். சபையின் தூதனாக மாறினபின் ஒரு நபர் ‘தான் திருத்துதலுக்கு அப்பாற்பட்டவன்’ என்று கற்பனை செய்து கொள்வது மிகவும் எளிது. “இனி எவ்வாறு ஆலோசனைப் பெறுவது என்பதை அறியாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைக் குறித்து வேதாகமம் கூறுகிறது” (பிரசங்கி 4:13). இந்த ஐந்து சபைகளின் தூதர்கள் எல்லாரும் அந்த மூடனான இராஜாவைப் போலவே இருந்தனர். அவர்களுடைய வார்த்தையே நீண்ட காலமாய் நியாயப்பிரமாணமாக இருந்தபடியால், எந்தவொரு விஷயத்திலும் தவறுதற்குரிய சாத்தியம் இருப்பதை அவர்களால் கற்பனைகூட செய்ய முடிவதில்லை!! இதுவே அவர்களுடைய ஏமாற்றமடைந்த மோசமான நிலை. தேவனுடைய அபிஷேகத்தை தங்களுடைய வாழ்க்கையில் ஒருபோதும் இழக்க மாட்டோம் என்று அவர்கள் கற்பனை செய்தார்கள். அவர்களுடைய பெருமையான மனப்பான்மையே அவர்களை ஆவிக்குரிய செவிடர்களாக்கியது.
சவுல் ராஜா மற்றொரு முட்டாளான ராஜா, அவர் நன்றாக தொடங்கினார், ஆனால் வெகு சீக்கிரத்தில் வழியருகே விழுந்து போனார். அவர் தம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ கர்த்தர் சவுலை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக முதலில் அபிஷேகம் பண்ணினார் (1சாமுவேல் 15:17). ஆனால் அவர் தம்மைப்பற்றின குறைந்த எண்ணங்களிலே தம்மைக் காத்துக்கொள்ளவில்லை. அதனால் அவர் தேவனின் அபிஷேகத்தை இழந்தார். பின்னர் இளம் தாவீதுக்கு இந்த அபிஷேகம் கடந்து சென்றது. சவுல் அதை உணர்ந்தார், ஆனால் அதை எதிர்கொள்ள அவர் மறுத்துவிட்டார். அவர் பிடிவாதமாக தம்முடைய சிங்காசனத்தில் தொடர்ந்து அமர்ந்துகொண்டே இருந்து தாவீதைக் கொலை செய்ய முயன்றார். கடைசியாக, சவுலின் உயிரைத் தேவன் எடுத்து, தாவீதை சிங்காசனத்தில் அமர வைத்தார். இன்றும் பல சபைகளில் இதே போன்ற சூழ்நிலைகளை நாம் காண்கிறோம். ஆவியின் அபிஷேகம், அன்று கர்த்தருடைய தூதர்களாக இருந்த அநேகரை விட்டு விலகி, இப்பொழுது அவர்களுடைய சபைகளிலுள்ள சில இளைய சகோதரர்களிடம் வல்லமையாக அமர்ந்துள்ளது. ஆனால் "கிழவர்களும் மூடர்களுமாகிய ராஜாக்கள்" இதைப் பார்த்து தாங்கிக்கொள்ள முடிகிறதில்லை. அதனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களது பொறாமையும் அவர்களுடைய ராஜ்யங்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற அவர்களது சுயநல வாஞ்சையும் ஒரு வழியிலோ வேறு வழியிலோ அந்த இளம் சகோதரர்களை ஒடுக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்துகிறது.
ஆசியா மைனரிலுள்ள ஐந்து பின்மாற்றமடைந்த சபைகளிலும் இதுபோன்ற எதாவதொன்று ஒருவேளை நடந்திருக்கக் கூடும். எனவே கர்த்தர் அந்த தூதர்களுக்குக் கடைசியாக ஒரு எச்சரிக்கையைக் கொடுத்தார்.
தேவனிடத்தில் பட்சபாதம் இல்லை. அவருடைய விருப்பத்துக்கு உகந்தவர்கள் என்று சிறப்பாய் ஒருவரும் இல்லை. ஒரு ஒழுக்கமான வாழ்க்கை வாழக் கவனமாக இருக்காவிட்டால், தானும் ஆகாதவனாய்ப் போய்விடுவான் (1கொரிந்தியர் 9:27) என்பதை அப்போஸ்தலனாகிய பவுலும்கூட உணர்ந்திருந்தார்.
“உன்னைக்குறித்தும் உன்னுடைய உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்” (1தீமோத்தேயு 4:16) என்று பவுல் தீமோத்தேயுவிடம் கூறுகிறார். தீமோத்தேயு முதலாவதாகத் தனது சொந்த வாழ்க்கையை ஜாக்கிரதையாய் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பின்னர் அவர் தனது சொந்த ஜீவியத்தில் கிறிஸ்துவின் சாயலில் இல்லாத காரியங்களிலிருந்து இரட்சிப்பை அனுபவிக்க முடியும். இவ்வாறாக மற்றவர்களையும் அத்தகைய இரட்சிப்புக்குள் வழிநடத்தி உதவ முடியும். ஒவ்வொரு சபையிலுள்ள எல்லா தூதர்களுக்கும் கர்த்தர் நியமித்த வழி இதுவே.
“முதலாவதாக உங்கள் வாழ்க்கையைக் குறித்தும், பின்னர் உங்களுடைய மந்தை முழுவதையுங்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்.” (அப்போஸ்தலர் 20:28) என்று எபேசு சபையின் மூப்பர்களுக்கு பவுல் கூறுகிறார். இது ஒவ்வொரு கர்த்தருடைய தூதரின் பொறுப்பாகும் - முதலாவதாக தூய்மையினாலும் ஆவியானவரின் தொடர்ச்சியான அபிஷேகத்தின் கீழும் தனது சொந்த வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். “உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக” (பிரசங்கி 9:8).
கர்த்தர் நேரடியாக இந்த தூதர்களிடம் பேச விரும்பினார். ஆனால் அவர்களுக்கு செவிகொடுக்கக் கூடிய காதுகள் இல்லை. இறுதியாக அவர் ஒரு அப்போஸ்தலர் மூலமாக அவர்களிடம் பேச வேண்டியிருந்தது. கர்த்தருடைய சத்தத்தைத் தெளிவாய் கேட்பதற்கு யோவான் மாத்திரமாவது இருந்தார் என்பதைக் குறித்து தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
அவர்கள் தோல்விகளைச் சந்தித்தபோதும் அந்த ஐந்து தூதர்களிடத்திலும் கர்த்தர் நம்பிக்கை வைத்திருந்தார் - அவர் இன்னமும் அவர்கள் எல்லாரையும் தம்முடைய வலது கரத்தில் ஏந்தியுள்ளார் (வெளிப்படுத்தின விசேஷம் 2:1). அவர்கள் மனந்திரும்பினால், அவர்கள் மீண்டும் மகிமையான சகோதரர்களாக மாற முடியும். அவர்களுடைய சபைகளும் கர்த்தருடைய மகிமையை மறுபடியும் வெளிப்படுத்த முடியும். ஒருவேளை இந்த கடைசி எச்சரிக்கைக்கு அவர்கள் செவிகொடுக்காவிட்டால், கர்த்தர் அவர்களைத் தள்ளிவிடுவார்.
கடந்த இருபது நூற்றாண்டுகளில், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இந்த செயல்முறை எப்படி மீண்டும் மீண்டும் வருகிறது என்பதைக் கிறிஸ்தவ சபையின் சரித்திரம் காட்டுகிறது. அதனால்தான் நாம் எல்லா இடங்களிலும் அநேக பாபிலோனிய "சபைகளை" காண்கிறோம். ஒரு நகரத்தில் ஒரு குத்துவிளக்கும் இல்லை என்ற மிகவும் மோசமான நிலையும் ஒரு கட்டத்தில் வரலாம். சபை என்று அழைக்கப்படுபவையெல்லாம் பாபிலோனியச் சபையாக இருக்கலாம்.
கர்த்தர் ஒரு சபையில் எதைத் தேடுகிறார்?
(i) கிறிஸ்துவைப் பற்றும் பக்தியிலும், ஒருவரையொருவர் நேசிப்பதிலும் கொழுந்துவிட்டு எரிகிற ஒரு சபை;
(ii) தேவன் மீதுள்ள உயிருள்ள விசுவாசத்தைப் பிரசங்கிக்கிற ஒரு சபை;
(iii) தேவனுடைய எல்லா கற்பனைகளுக்கும் முழுமையான கீழ்ப்படிதலை வலியுறுத்துகிற ஒரு சபை;
(iv) இயேசுவின் சாட்சியை வெட்கமின்றி பறைசாற்றுகிற ஒரு சபை;
(v) ஆவிக்குரிய பெருமைக்கும், மாய்மாலத்திற்கும், உலகப்பற்றுக்கும் எதிர்த்து நிற்கிற ஒரு சபை;
(vi) போலியான அப்போஸ்தலர்களையும், போலியான போதகர்களையும், போலியான வரங்களையும் வெளியரங்கப்படுத்துகிற ஒரு சபை;
(vii) மாம்சத்தைச் சிலுவையில் அறைகிறதைத் தொடர்ச்சியாகப் பிரசங்கிக்கிற ஒரு சபை;
(viii) எல்லா விசுவாசிகளையும் தொடர்ச்சியாக தங்களை தாங்களே நியாயந்தீர்ப்பதற்கு ஊக்கப்படுத்துகிற ஒரு சபை;
(ix) இயேசுவைப் போலவே ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருப்பதற்கு சவால்விடுகிற ஒரு சபை;
ஒவ்வொரு இடத்திலும் தம்முடைய நாமத்திற்கு இப்படிப்பட்ட ஒரு சாட்சியைக் கர்த்தர் வாஞ்சிக்கிறார்.