ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு (எபேசியர் 6:12).
3500 ஆண்டுகளுக்கு முன்பு, மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கிவந்து, இஸ்ரவேலருக்கு ஒரு பூமிக்குரிய ராஜ்யத்தை வாக்குத்தத்தமாக தேவனிடமிருந்து கொண்டு வந்தார். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, இயேசு பரலோகத்திலிருந்து இறங்கிவந்து, நமக்குப் பரலோகராஜ்யத்தை வாக்குத்தத்தமாகக் கொண்டுவந்தார். இதுவே புதிய உடன்படிக்கைக்கும் பழைய உடன்படிக்கைக்கும் உள்ள அடிப்படையான வித்தியாசமாகும். இதை நாம் புரிந்துகொள்ளாவிட்டால், சாத்தானை எதிர்த்து நம்மால் வலிமையாகப் போரிட முடியாது.
நமது ராஜ்யம் இவ்வுலகத்துக்குரியது அல்ல. எனவே நாம் எந்தக் காரியத்திலும் மனுஷரோடு ஒருபோதும், ஒருபோதும் சண்டையிடவே கூடாது. வலிமையானதோர் ஆவிக்குரிய யுத்தத்திற்கு இதுவே நமது முதலாவது தேவை. விசுவாசிகளை அவர்களுடைய அழைப்பிலிருந்து திசைதிருப்ப சாத்தான் முயற்சிக்கும் முக்கியமான வழிகளில் ஒன்று, அவர்களை மற்றவர்களோடு - அதாவது, அவர்களது உறவினர்களோடு, அண்டை வீட்டாரோடு அல்லது சகோதர சகோதரிகளோடு - சண்டையிட வைப்பதாகும். அந்த சண்டை எப்போதும் ஏதாவதொரு பூமிக்குரிய காரியத்தைப் பற்றியதாகவே இருக்கும். இவ்வாறு, விசுவாசிகளை அவர்களுடைய பரலோக ஸ்தானத்திலிருந்து இந்த பூமிக்கும் அதற்குரிய காரியங்களுக்கும் இழுப்பதில் சாத்தான் வெற்றிகொண்டு, அதன்மூலம் தனக்கு எதிரான போரில் அவர்களை வலிமையற்றவர்களாக மாற்றிவிடுகிறான்.
நீங்கள் சாத்தானுக்கு எதிராக வலிமையாக யுத்தம்செய்யவும் சபையைக் கட்டவும் விரும்பினால், ‘எந்த மனுஷரிடமும் அல்லது எந்த உலக விஷயத்திலும் ஒருபோதும் வாக்குவாதத்தில் ஈடுபடமாட்டேன்’ என்று தீர்மானம் எடுத்திடுங்கள். நம் மனதில் மற்றவர்களுடன் கற்பனையாகக் கூட சண்டை செய்திடக்கூடாது. யாரையும் பற்றி ஒருபோதும் ஒரு குறைசொல்லுதல் கூட நமக்கு இருக்கக்கூடாது.
மேலும், நாம் எவரிடமும் அந்தரங்கமாக ஒரு எதிர்பார்ப்பும் கொண்டிடக் கூடாது. உதாரணமாக, மக்கள் நம்மை மரியாதையுடனோ அல்லது கவனத்துடனோ நடத்த வேண்டும் என்றோ, நமக்கு அன்பு காட்ட வேண்டும் என்றோ, அல்லது அவர்கள் நம்மை ஏமாற்றக்கூடாது அல்லது மோசடி செய்யக்கூடாது என்றோ, அது போன்ற எவ்வித எதிர்பார்ப்பும் நாம் வைக்கக்கூடாது. நமது வாழ்க்கைத் துணையிடமிருந்தும் கூட நமக்கு இத்தகைய எதிர்பார்ப்புகள் இருக்கக்கூடாது. அத்தகைய அனைத்து தகராறுகளும் குறைசொல்லலும், எதிர்பார்ப்புக்களும் ஒருவருடைய ராஜ்யம் இந்த உலகத்திற்குரியது என்பதையும், அவர் தனது இருதயத்தில் சாத்தானுக்கு இடம் கொடுத்திருக்கிறார் என்பதையுமே காட்டுகிறது. மேலும் இப்படிப்பட்ட ஜனங்கள் தங்கள் வாழ்நாளை துக்கத்தில் கழிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
தேவன் ஒருவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் (எபிரெயர் 4:13). நம்முடைய அனைத்து சூழ்நிலைகளும் (நம்மை மற்றவர்கள் நடத்தும் விதம் உட்பட), நமது அன்பான தகப்பனால் நமது மிகச்சிறந்த நன்மைக்காகவே, அதாவது, தம்முடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக நம்மை மாற்றும்படிக்கே வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, எவர் மீதும் எந்தக் குறைசொல்லுதலுக்கும் நமக்கு இடமில்லை, ஆனால், எல்லா நேரங்களிலும் தேவனைத் துதிப்பதற்கு நமக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.