WFTW Body: 

ஆதியாகமம் 22-ம் அதிகாரத்தில் “இந்தக் காரியங்கள் நடந்த பின்பு” என்ற சொற்றொடருடன் தொடங்குகிறதை பாருங்கள். இந்த இரு சமயங்களிலும் ஆபிரகாம் சோதனையின் உச்சகட்டமான நிலையில் நின்று கொண்டிருந்தான்!! ஆம், ஆபிரகாம் வெற்றி சிறந்தவனாய் மின்மினுங்க, சுற்றியிருந்த புறஜாதியார்கள் “நீர் செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்" (ஆதியாகமம் 21:22) என அவனுக்கும் புகழாரம் சூட்ட... அங்கே, ஆபிரகாம் தனக்குத் தானே திருப்தி காணும் நிலையை வெறுமையாக்க வேண்டிய கட்டத்தில் இருந்தான்! அந்த விசுவாசப் பாடத்தை ஆபிரகாம் நேர்த்தியாய் கற்றுக் கொள்ளவும் செய்தான்!! பின்பு, இஸ்மவேலைத் தன்னைவிட்டு போகும்படி அனுப்பிய காலத்தில் இந்த ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றெடுத்தான்! இப்போதோ இந்த ஆபிரகாமின் இருதயத்திற்கு இந்த ஈசாக்கு மிக அருமையானவனாய் மாறிப்போனான்!! இந்த கொடிய இடத்தில்தான், ஆபிரகாம் தான் தேவன்மீது கொண்டிருந்த முதன்மையான அன்பையும், அவர் மீது கொண்டிருந்த தியானப்பற்றையும் இழக்கும் தருவாயில் இருந்தான்! இப்போது ஆபிரகாமை தேவன் சோதித்துப் பார்ப்பதற்கு “ஈசாக்கையே பலியாகத் தரும்படி” கூற வேண்டியதாய் இருந்தது!! ஆனால் ஆபிரகாமோ கேட்பதற்கு காதுள்ளவனாய் இருந்தான் அவன் இருதயமோ தேவன் கட்டளையிடும் எதற்கும் கீழ்ப்படிந்திட ஆயத்தமான விருப்பம் கொண்டதாகவே இருந்தது. ஆகவே, கட்டளையைப் பெற்றவுடன், அடுத்த நாள் அதிகாலையிலேயே தேவனுக்குக் கீழ்ப்படிய துரிதமடைந்து விட்டான்!! (ஆதியாகமம் 22:3). தன் வயது முதிர்ந்த பக்தனிடம் தேவன் இவ்வாறு பேசிய அந்த ராத்திரியை அவன் எவ்வாறு கழித்தான் என வேதம் கூறவில்லை. இருப்பினும், அந்த ராத்திரியில் அவன் தூங்கியிருக்க மாட்டான் என்றே நான் எண்ணுகிறேன். அந்த ராத்திரியில் அவன் அடிக்கடி எழுந்து சென்று, தூங்கிக் கொண்டிருந்த தன் செல்ல மகனை மீண்டும் மீண்டுமாய் பரிதாபத்தோடு பார்த்து வந்தான். பொழுது விடிந்ததும் தன் மகனுக்கு ஆபிரகாம் செய்யப் போகிற செயலை எண்ணி எண்ணி கண்ணீர் வடித்திருப்பான்!

அந்தத் தள்ளாத வயதில் தன் மகனை பலி செலுத்த வேண்டியிருப்பது ஆபிரகாமின் உள்ளத்திற்கு எத்தனை பாரமாய் இருந்திருக்க வேண்டும்! என்ன விலைக்கிரயம் செலுத்தியாகிலும், தேவனுக்குக் கீழ்ப்படிந்திட அவன் முழுமனதாய் இருந்தான்!! சுமார் 50-வருடங்களுக்கு முன்பாக, ஊர் தேசத்திலிருந்து தன்னை தேவன் அழைத்தபோது, கலப்பையில் வைத்த தன் கையை, இப்போது எடுத்துவிட்டுத் திரும்பிப் பார்க்க துளியும் அவன் விரும்பவில்லை! அவனுடைய கீழ்ப்படிதலுக்கு ஓர் எல்லையே இல்லை! தேவனுக்காக தியாகம் செய்திடும் மனவிருப்பத்திற்கும் ஓர் முடிவே இல்லை!! அவன் தேவனுடைய சிநேகிதன் என்பதில் ஆச்சரியமில்லை,,

தன் மகன் ஈசாக்கைப் பலிசெலுத்த கொண்டு சென்றபோது, மரிக்கும் தன் மகனை தேவன் மீண்டும் எழுப்புவார் என்ற விசுவாசத்தை ஆபிரகாம் தன் நெஞ்சில் கொண்டிருந்தான். அந்த விசுவாசத்தையே எபிரேயர் 11:19 எடுத்துரைக்கிறது. செத்துப்போன தன் பெலனிற்கும், செத்துப்போன சாராளின் கர்ப்பத்திற்கும் உயிர் மீட்சியை ஈசாக்கின் பிறப்பின் மூலம் தேவன் தந்திருப்பதை ஏற்கனவே இந்த ஆபிரகாம் தன் சரீரத்தில் ருசித்திருந்தான். அப்படியிருக்க, பலிபீடத்தில் வெட்டப்படும் ஈசாக்கிற்கு மீண்டும் உயிரூட்டி எழச் செய்வது இந்த தேவனுக்கு நிச்சயமாய் ஓர் கூடாத செயல் அல்லவே அல்ல! ஆகவேதான், மோரியா மலை அடிவாரத்தில் நிறுத்தி வந்த தன் வேலைக்காரர்களிடத்தில், இங்கே காத்திருங்கள், “நானும் பிள்ளையாண்டனும் (இருவரும் சேர்ந்து) அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்திற்குத் (மீண்டுமாய்) திரும்பி வருவோம்!" (ஆதியாகமம் 22:5) எனக் கூறினான். இதுவன்றோ விசுவாச வார்த்தை! ஆம், ஈசாக்கு தன்னோடு மீண்டும் திரும்பி வருவான் என்பதை ஆபிரகாம் விசுவாசித்திருந்தான்!!

தன்னுடைய வேலைக்காரர்களிடத்தில் ஆபிரகாம் கூறிய வார்த்தைகளைக் கவனியுங்கள்: "நாங்கள் தேவனை தொழுதுகொள்ளச் செல்லுகிறோம்!" என்றே கூறினான். ஆம், 'இத்தனை அதிகமாய்' எங்களிடம் தேவன் கேட்டுவிட்டாரே' என்ற குறை சொல்லும் இல்லை! 'எத்தனை பெரிய தியாகச் செயலை தேவனுக்கு நான் செய்யப் போகிறேன்' என்ற மேட்டிமையும் இல்லை! தேவனுக்காக செய்திடும் தியாகங்களைப் பிறருக்கு நாசூக்காக அறிவிக்கும் குழுவைச் சார்ந்தவனல்ல இந்த ஆபிரகாம்!! தான் தேவனைத் தொழுது கொள்ளப் போவதாகவே அவன் கூறிச்சென்றான். ஆம் இங்குதான் நாம் "தொழுது கொள்ளுதலின்" உண்மையான அர்த்தத்தை ஓரளவு விளங்கிக்கொள்ள முடிகிறது! இயேசு ஒரு சமயம் "ஆபிரகாம், என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான், கண்டு களிகூர்ந்தான்” (யோவான் 8:56) எனக் கூறியதை இந்த இடத்தில் நாம் நினைவுகூருவது நல்லது. நிச்சயமாகவே, ஆபிரகாம் இந்த மோரியா மலையில் “கிறிஸ்துவின் நாளைக்" கண்டான் என நாம் கூறிட முடியும்! இந்த வயது முதிர்ந்த பக்தன், தன் சொந்த அனுபவத்தின் நிகழ்ச்சியிலேயே ஓர் தீர்க்கதரிசனமான காட்சியைக் கண்டான்!! பிதாவாகிய தேவன், தன் ஒரேபேறான குமாரனையே (ஆபிரகாம் போலவே) கல்வாரி மலைக்கு நடத்திச் சென்று, மனுக்குலத்தின் பாவங்களுக்குப் பலியாகத் தரப்போகும் காட்சியை ஆபிரகாமின் கண்கள் தீர்க்கதரிசனமாய் கண்டுவிட்டது! அன்று அந்த மோரியா மலையில், வழிதவறிப்போன உலகத்தை இரட்சிப்பதற்கு, தேவனுடைய இருதயம் எத்தனை சொல்லொண்ணா கிரயம் செலுத்த வேண்டியிருந்தது என்பதையும் கண்டு கொண்டான்! ஆம், அந்த அதிகாலை வேளையில், இந்த ஆபிரகாம் தேவனுடைய இருதயத்திற்கு அருகில் கிட்டிச் சேரும் ஓர் நெருக்கமான ஐக்கியத்தின் உறவைப் பெற்று விட்டான்!! உண்மைதான்..... ஆபிரகாம் தேவனைத் தொழுதுவிட்டான்!! அந்தத் தொழுகை வெறும் நயவசனிப்பும் துதிபாடலும் அல்ல... மாறாக, விலையேறப்பெற்ற கீழ்ப்படிதலும், தியாகமும் தொழுகையின் ஒப்பற்ற வாசலுக்கு ஆபிரகாமை கொண்டு சென்றுவிட்டது!!

இது போன்ற கீழ்ப்படிதல் மூலமாகவே, தேவனை அறிந்து கொள்ளும் ஓர் ஆழமான நெருங்கிய உறவு ஏற்பட முடியும்! நாம் வேண்டுமானால், ஏராளமான வேதவிளக்கங்களை மிகத் துல்லியமாய் நம் மனதில் சேர்த்து குவித்துக் கொள்ளலாம். ஆனால், ஓர் மெய்யான ஆவிக்குரிய அறிவானது, நமக்குரிய யாவற்றையும் தேவனிடத்தில் சமர்ப்பணம் செய்யும்போது மாத்திரமே ஏற்பட முடியும்! இதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை. கொடுத்தவரா? அல்லது அவர் கொடுக்கும் பரிசா? : இங்கு ஆபிரகாமிற்கு ஏற்பட்ட சோதனை என்னவெனில், இந்த ஆபிரகாம் “கொடுத்தவரை” நேசிக்கப் போகிறானா? அல்லது, அவர் "கொடுத்த பரிசை " நேசிக்கப் போகிறானா? என்பதுதான். சந்தேகத்திற்குத் துளியும் இடமில்லாமல் "ஈசாக்கு" தேவன் கொடுத்த பரிசே ஆவான்! ஆனால், ஆபிரகாமோ தன் மகன் மீது ஓர் அசாதாரணமான நேசம் கொண்டிடும் அபாயத்தில் இருந்தான், ஆபிரகாமின் ஆவிக்குரிய தரிசனத்தை ஓர் கார்மேகமாய் வந்து மறைக்கும் அளவிற்கு இந்த ஈசாக்கு ஓர் விக்கிரகமாய் மாறிக் கொண்டிருந்தான். இந்தத் துயரம் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஆபிரகாமை இரட்சித்திட தேவன் தலையிட வேண்டியதாயிருந்தது.