WFTW Body: 

பரிசுத்தமே எல்லாத் தீர்க்கதரிசிகளின் பாரமாக இருந்தது: உங்கள் விக்கிரகங்களைத் தள்ளிவிட்டு, உங்கள் வாழ்க்கையில் தேவனுக்கு முதலிடத்தைக் கொடுங்கள். நம்முடைய வாழ்க்கையில் விக்கிரகங்களே இல்லாமல் இருப்பதுதான் மெய்யான பரிசுத்தமாகும். நம்முடைய முழு இருதயமும் தேவனால் நிறைந்திருப்பதே பரிசுத்தமாகும். தேவன் மகிழ்வுடன் வாசம்செய்யும் இடமாகச் சபை இருப்பதற்கு, இந்த மெய்யான பரிசுத்தத்தை நாம் பிரசங்கிப்பதே இன்று நம்முடைய அழைப்பாகும்.

தன் முழு இருதயத்தோடும் பரிசுத்தத்தை தேடுகிற மனிதனுக்கே மெய்யான பரிசுத்தம் கிடைக்குமேயல்லாமல், வெறுமனே சரியான உபதேசத்தை தன் தலை அறிவில் வைத்திருப்பவனுக்கு அல்ல. முழு இருதயத்தோடும் உண்மையோடும் தேவனை பிரியப்படுத்தும் வாஞ்சையின் மூலமாகவே பரிசுத்தத்தின் இரகசியத்தைக் கண்டுபிடிக்க முடியுமேயல்லாமல் புதிய ஏற்பாட்டிலுள்ள கிரேக்க வார்த்தைகளையும் காலங்களையும் (Tenses) ஆய்வு செய்வதின் மூலமாகக் கண்டுபிடிக்க முடியாது. தலை அறிவை அல்ல, தேவன் நம்முடைய இருதயங்களைப் பார்க்கிறார்!

தேவனுடைய சந்நிதியில் தன்னுடைய சொந்த பாவத்தைக் குறித்த உணர்வை அதிகமதிகமாக பெறுவது, பரிசுத்தத்தில் வளருதல் என்பதோடு இணைந்தே வருகிறது. பரிசுத்தம் தேவனுடைய இயல்பாகவேயிருக்கிறது. தேவன் நமக்கு கொடுக்கும் ஆவி, பரிசுத்த ஆவியாய் இருக்கிறார். ஏசாயா தேவனுடைய தரிசனத்தைப் பெற்றபோது, தேவனை அவருடைய பரிசுத்தத்தில் கண்டு தம்மை ஒரு அசுத்தமுள்ள மனிதனாகக் கண்டார் (ஏசாயா 6:1-7). பரிசுத்தத்தில் வளருகிற வாழ்க்கையே ஆவியில் நிறைந்த வாழ்க்கையாகும். ஒரு மனிதன் தன்னுடைய சொந்த வாழ்க்கையின் பரிசுத்தத்தில் எவ்வளவு அதிகமாய் வளருகிறானோ அவ்வளவு அதிகமாய் தேவனுடைய முழுமையான பரிசுத்தத்தின் உணர்விலும் வளருவான். இவை இரண்டும் இணைந்தே செல்லும். உண்மையில், தேவனுடைய முழுமையான பரிசுத்தத்தின் உணர்வில் வளருவதே ஒரு மனிதன் உண்மையிலே தன்னுடைய சொந்த வாழ்க்கையின் பரிசுத்தத்தில் வளருகிறானா இல்லையா என்பதற்குரிய பரீட்சைகளில் ஒன்றாகும். பவுல் மனந்திரும்பி 25 ஆண்டுகளுக்குப் பிறகு “நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்” (1கொரிந்தியர் 15:9) என்று சொல்லுகிறார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு, “பரிசுத்தவான்களெல்லாரிலும் நான் சிறியவனாயிருக்கிறேன்” (எபேசியர் 3:8) என்று சொல்லுகிறார். இன்னும் ஒரு ஆண்டுக்குப் பிறகு “பாவிகளில் பிரதான பாவி நான்” (1தீமோத்தேயு 1:15) என்று சொல்லுகிறார். (ஆங்கில வேதாகமத்தில் "பாவிகளில் பிரதான பாவியாய் நான் இருந்தேன் (I was the chief of sinners)” என்று சொல்லப்படாமல் " பாவிகளில் பிரதான பாவியாய் நான் இருக்கிறேன் (I am the chief of sinners)" என்று சொல்லப்படுவதைக் கவனியுங்கள்). இந்தக் கூற்றுக்களிலிருந்து, பரிசுத்தத்தில் அவர் அடைந்த முன்னேற்றத்தை உங்களால் காண முடிகிறதா? பவுல் எவ்வளவு அதிகமாய் தேவனோடு நெருக்கமாய் சஞ்சரித்தாரோ, அவ்வளவு அதிகமாய் தம்முடைய இருதயத்திலுள்ள பொல்லாப்பையும், சீர்கேட்டையும் உணர்ந்தார். தம்முடைய மாம்சத்தில் நன்மை ஒன்றும் வாசமாயிருக்கிறதில்லையென்று அவர் அறிந்திருந்தார் (ரோமர் 7:18).

முழுமையான ஆரோக்கியத்தை விரும்புவதைக் காட்டிலும், முழுமையான பரிசுத்தத்தை அதிகமாக விரும்புகிற இடத்திற்கு நாம் வர வேண்டும். சரீரத்திலிருக்கிற எல்லா நோயிலிருந்து விடுதலையடைய நாம் விரும்புவது போல நம்மை அசுசிப்படுத்துகிற எல்லாப் பாவத்திலிருந்தும் முற்றிலுமாக விடுதலையடைய நாம் விரும்ப வேண்டும். நோயை நாம் பொறுத்துக் கொள்ளாதது போல, பாவத்தையும் ஒருபோதும் சகித்துக் கொள்ளக்கூடாது. அசுத்த சிந்தனையை சகித்துக்கொள்வது காசநோயையாவது (Tuberculosis) தொழுநோயையாவது (Leprosy) சகித்துக்கொள்வதைப் போன்றது. "இது என்னுடைய பலவீனம் அல்லது இது என்னுடைய மனப்பாங்கு" என்று சொல்லி கோபத்தை நியாயப்படுத்தி, அதை நம் வாழ்க்கையில் அனுமதிப்பது எய்ட்ஸ்நோய்க்கும் (AIDS), சிபிலிஸ்நோய்க்கும் (Syphilis) நம்முடைய சரீரத்தில் இடம் கொடுப்பது போன்றது. பாவமும் நோயும் மிகவும் ஒத்ததேயாகும்.

நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக (1தெசலோனிக்கேயர் 3:12,13). நாம் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கவேண்டுமானால், எல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பில் பெருகவும் நிலைத்தோங்கவும் வேண்டும் என்று இந்த வசனங்கள் நமக்குப் போதிக்கின்றன. அன்பில்லாத பரிசுத்தம் போலியானது - அப்படிப்பட்ட எந்த ஒரு பரிசுத்தமும் உண்மையில் சுயநீதியும் பிரமாணத்துவமுமாகும். அது தேவனுடைய பார்வையில், அழுக்கான கந்தைபோல இருக்கிறது (ஏசாயா 64:6).

பரிசுத்தமும், தேவனுடைய மாறாத அன்புமே எல்லாத் தீர்க்கதரிசிகளுடைய பாரமாக இருந்தன. தேவனுடைய ஜனங்களிடத்தில் பரிசுத்தமும், தம்முடைய ஜனங்கள் ஆவிக்குரிய வேசித்தனம் நடப்பித்து வழி விலகிப் போனபின்னும் அவர்களிடத்தில் தேவன் கொண்டிருக்கும் மாறாத அன்புமே அவர்களுடைய பாரமாக இருந்தன. தேவனுடைய வாஞ்சை தம்முடைய ஜனங்களை எப்போதும் தம்மிடமாய்த் திருப்பிக் கொண்டு வருவதேயாகும். தேவன் அவர்களை சிட்சிக்கிறார். ஆனால் அந்தச் சிட்சை முடிந்தபிறகு அவர்களை தம்மிடத்தில் திரும்பக் கொண்டுவர விரும்புகிறார்.

இப்படித்தான் மெய்யான தீர்க்கதரிசன ஊழியம் சபையிலும் செயல்பட வேண்டும். இன்றும் சபையிலுள்ள ஒவ்வொரு மெய்யான தீர்க்கதரிசியும், தேவ ஜனங்கள் மத்தியிலே பரிசுத்தம் காணப்பட வேண்டுமென்று பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் கொண்டிருந்த அதே பாரத்தை உடையவராகவே இருப்பர். பின்வாங்கிப் போன தம்முடைய ஜனங்களை தம்மிடத்திற்கும் உண்மையான பரிசுத்தத்திற்கும் கொண்டுவர இடைவிடாமல் விரும்புகிற தேவனுடைய மாறாத, நீடிய பொறுமையுள்ள, மனதுருக்கமான அன்பினால் தீர்க்கதரிசி அசைக்கப்படுவார். ஒவ்வொரு சபையும் ஜீவனோடு செயல்பட வேண்டிய விதத்தில் தேவனுக்காக செயல்படுவதாக இருக்க வேண்டுமானால் அங்கே ஒரு தீர்க்கதரிசன ஊழியம் இருந்தே ஆக வேண்டும்.