WFTW Body: 

1.நேசம் மனப்பூர்வமாய் மெச்சிக்கொள்ளும்!

திருமணத்தின் தூய அன்பைக் குறிப்பிட்டு ஒரு புத்தகத்தையே வேதாகமத்தில் தேவன் வைத்திருக்கிறார். அந்தப் புத்தகத்தின் பெயர் தான் "சாலொமோனின் உன்னதப்பாட்டு." இந்த உன்னதப்பாட்டில் கணவன் தன் மனைவியிடம் பேசிடும் முதல் பகுதியை "Message Bible" மொழிப்பெயர்ப்பின்படி கவனித்துக் கேளுங்கள்: "என் நேசத்துக்குரிய அன்பே, நீ உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஒப்பிட முடியாத அழகுள்ளவளாய் இருக்கின்றாய்! அந்த அழகில் மாசு மருவு எதுவும் இல்லை. என் உள்ளத்திற்குப் பரவசம் தரும் பரலோக தரிசனத்திற்கு ஒத்த மனம் கவர்ந்தவள் நீ! உன் குரல் மன ஆறுதலையும் உன் முகம் எனக்குப் பரவசமளிப்பதாயும் இருக்கிறது! உள்ளும் புறமும் ஆன உன் தூய அழகு அத்தனை சம்பூரணமாய் இருக்கிறது, என் பிரியமுள்ள சிநேகிதியே! நீ எனக்கு ஒரு பரலோகம்!" "நீ என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டாய்! என்னை நீ பார்த்த கணமே நான் உன் நேசத்தால் பிடிக்கப்பட்டுவிட்டேன். உன் பார்வை என்மீது ஒருமுறை திரும்பியது, நானோ உன்மீதுள்ள தீரா நேசத்தில் வீழ்ந்துவிட்டேன்! என் இருதயம் பரவசத்தில் ஆழ்ந்திருக்கிறது! உன்னைக் காணும் போது எனக்குள் தூண்டப்படும் ஆசை உணர்வுகளை நான் என்னவென்று சொல்வேன்! நான் மிகவும் கொடுத்துவைத்தவன்!" "இந்த பூமியில் உன்னைப்போல் ஒருவரும் இல்லை, முன்பு இருந்ததும் இல்லை, இனியும் இருக்கப் போவதுமில்லை! அந்த அளவிற்கு ஒப்பிட முடியாப் பெண்மணி நீ!" இத்தனை அன்புள்ள கணவனுக்கு அந்த மனைவி அளித்த பதிலை சற்று கவனியுங்கள்: "என் நேசரே, நீர் மகா அழகுள்ளவர்! ஆயிரம் பதினாயிரங்களில் நீர் ஒருவரே சிறந்தவர்! உம்மைப்போல் ஒருவரும் இல்லை! நீர் பொன்னைப் போன்றவர்! பர்வதம் போன்ற கட்டுமஸ்தானவர்! உமது வார்த்தைகள் ஆறுதலும், நம்பிக்கையும் கொண்டவைகள்! உம்முடைய சொற்கள் முத்தங்களுக்கு ஒப்பாய் இருக்கிறது... உம்முடைய அனைத்து சொற்களும் உமது முத்தங்களாகவே இருக்கிறது! உம்மைக்குறித்த ஒவ்வொன்றும் என் உள்ளத்தை மகிழச்செய்கிறது! நீர் என்னை முற்றிலும் புளகாங்கிதம் அடையச் செய்கிறீர்! உம்மையே வாஞ்சித்து என்னுள்ளம் நாடித் தேடுகிறது! நீர் இல்லையென்றால், அதுவே என் வேதனையாயிருக்கும்! உம்மைக் காணும் போது என் கரங்களால் உம்மை இறுக்கமாகக் கட்டித் தழுவிக் கொள்வேன்! நீர் என்னை விட்டுச் சென்றிட அனுமதியேன்! நான் உமக்கு மாத்திரமே சொந்தம், நீரே எனக்குரிய ஒரே நேசர், எனக்குரிய ஒரே புருஷனும் நீரே!"

2. அன்பு ஒருவரையொருவர் மன்னித்திட துரிதம் கொள்ளும்!

அன்பு, குற்றப்படுத்தத் தயங்கி, மன்னிப்பதற்கோ தீவிரமாய் இருக்கும்! ஒவ்வொருவருடைய திருமண வாழ்விலும், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பிரச்சனைகள் மிக சகஜமாய் வரும். ஆனால், அந்த பிரச்சனைகளை உங்களுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டால், அந்தப் பிரச்சனை உங்களுக்குள் கண்டிப்பாய் பற்றி எரியத் தொடங்கும். (அதாவது, அந்தப் பிரச்சனைகளை உடனடியாகத் தீர்ப்பதை விடுத்து, பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று வைத்துவிட்டால், அவை மோசமான பிரச்சனைகளாகிவிடும்). எனவே வெகு துரிதமாய் மன்னித்து, வெகு துரிதமாய் மன்னிப்பும் கேட்டுவிடுங்கள். அவ்வாறு செய்திட "மாலையில் ஒப்புரவாகலாம்" எனக்கூட நேரத்தை தள்ளிப் போடாதீர்கள். உங்கள் காலில் ஒரு முள் காலை நேரத்தில் குத்திவிட்டால், அதை நீங்கள் உடனே எடுத்து விடுவீர்கள். மாலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போட மாட்டீர்கள். அதுபோலவே, நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையை எவ்விதத்திலாகிலும் மனம் புண்படச் செய்திருந்தால், அது அவர்களை நீங்கள் ஒரு முள்ளைக்கொண்டு குத்தியதற்கு ஒப்பானதேயாகும்! அந்த முள்ளை உடனே எடுத்து விடுங்கள்! உடனே மன்னிப்புக் கேளுங்கள்! உடனே மன்னித்து விடுங்கள்!

3. அன்பு எதையும் இணைந்து செய்திடவே வாஞ்சிக்கும்! ஆம், தனித்தல்ல!

ஏதேன் தோட்டத்தில் ஏவாளை சோதிக்க பிசாசு வந்த போது, "நான் தீர்மானம் எடுப்பதற்கு முன்பாக என் கணவரை ஆலோசித்து வருகின்றேன்" என ஏவாள் கூறியிருந்தால் 'மனுஷனின் சரித்திரமே' எவ்வளவு மாறுபட்டதாய் அமைந்திருக்கும்! அவனுடைய வாழ்வுதான் எத்தனை வித்தியாசமானதாய் இருந்திருக்கும்!! ஆகவே இந்த முழு உலகத்தின் எல்லாப் பிரச்சனைகளும் ஆரம்பித்த முதல் இடமே "ஒரு ஸ்திரீ, தானாகவே முடிவு செய்தாள்" என்பதிலிருந்து தோன்றியது என்பதை மறந்து விடாதீர்கள். அந்த முடிவை அவள் எடுப்பதற்கு முன்பாகவே, தேவன் தனக்கென தந்த வாழ்க்கைத் துணையோடு அவள் ஆலோசனை செய்திருக்க வேண்டும். மெய்யான அன்பு இணைந்து செயல்படும். தனித்து நிற்பதைவிட இருவராய் இருப்பதே எப்போதும் மேலானது.