"தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமை உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது" என எபிரேயர் 4:12-ல் நாம் வாசிக்கிறோம்.
தேவனுடைய வார்த்தையானது ஆத்துமாவையும், ஆவியையும் பிரிக்கின்றது (எபி 4:12). தேவனுடைய வார்த்தையை ஜனங்களிடம் முழுமையாகக் கொண்டு செல்லுவதற்கு, நாம் ஆத்துமாவைச் (மனம் மற்றும் உணர்ச்சிகள்) சார்ந்து நிற்கிறோமா அல்லது பரிசுத்த ஆவியைச் சார்ந்து நிற்கிறோமா என்பது ஆத்துமாவையும், ஆவியையும் பிரிக்கும்போதுதான் நமக்குப் புலனாகும். பழைய உடன்படிக்கையில் வாழ்ந்தவர்களுக்கு ஆத்துமாவுக்கும் ஆவிக்குமுள்ள வித்தியாசம் பற்றி எதுவும் தெரியாது.
பழைய உடன்படிக்கையிலிருந்த ஆசரிப்புக் கூடாரமானது வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் ஆகிய மூன்று பிரிவுகளைப் பெற்றிருந்தது. இது மனிதனின் சரீரம், ஆத்துமா, ஆவி முதலியவற்றைக் குறிக்கும் ஒரு படமாக உள்ளது (1 தெச 5:23). ஆத்துமாவானது பரிசுத்த ஸ்தலமாகவும், ஆவியானது மகாபரிசுத்த ஸ்தலமாகவும் அடையாளப்படுத்திச் சொல்லப்படுகின்றது. தேவப்பிரசன்னம் மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் இருந்தது. பரிசுத்த ஸ்தலத்தையும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் ஒரு கனத்த திரையானது பிரித்தது. அந்த மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் பிரவேசிக்க ஒரு மனிதனுக்கும் அனுமதி இல்லை. பிரதான ஆசாரியன் மட்டும் ஆண்டிற்கொரு முறை அதனுள் பிரவேசித்தான். பழைய உடன்படிக்கையில் வாழ்ந்த மனிதனுக்கு "ஆவியில் வாழ்கிற வாழ்க்கையானது" சாத்தியமில்லாத ஒன்று என்பதையே இது குறிப்பிட்டுக் காண்பிக்கின்றது. ஆதலால் இஸ்ரவேலருக்கு ஆத்துமாவுக்குரியது எது, ஆவிக்குரியது எது என்று வேறுபடுத்திப் பார்க்கக் கூடாமற் போயிற்று. இன்றும்கூட இவற்றை இனம் பிரித்துக் காணத் தெரியாதவர்களை பழைய உடன்படிக்கைக் கிறிஸ்தவர்கள் என்றே அழைக்கலாம்.
தேவனுடைய வார்த்தையானது ஆத்துமாவுக்குரியது எது என்றும், ஆவிக்குரியது எது என்றும் உங்களுக்கு வேறுபடுத்திக் காட்டும். இந்நாட்களில் "கிறிஸ்தவப்" பணி என்ற பெயரில் செய்யப்படுவனவற்றில், பெருவாரியானவை ஆத்துமாவிலேதான் செய்யப்படுகின்றன. ஆத்துமாவில் செய்யப்படும் பணி என்பது, மனுஷ எண்ணங்களில் உதயமானதைக் கொண்டு தேவனுக்கு ஊழியம் செய்வதாகும். ஒரு வேளை அந்த எண்ணங்களெல்லாம் தீமையற்றதும், மாம்சீகமாய் இல்லாததுமாய் நல்ல எண்ணங்களாகவே இருக்கக்கூடும். ஆயினும் அவை மனுஷீகமானதும், ஆத்துமத்துக்குரியதாகவுமே உள்ளன. மூவகையான கிறிஸ்தவர் உள்ளனர். மாம்சீகக் கிறிஸ்தவர்கள் எனப்படுவோர் மறுபடியும் பிறந்தவர்களாக இருந்தாலும், ஒரு "குறிப்பிட்ட அளவு" பாவ இன்பங்களை அனுபவிக்கிறவர்களாகவும், பண ஆசை உடையவர்களாகவுமே இருப்பார்கள். அடுத்துள்ள ஆத்துமத்துக்குரிய கிறிஸ்தவர்கள் மேற்சொன்னவற்றை எல்லாம் விட்டுவிட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் இன்னமும் தங்களது புத்திக் கூர்மையிலும், உணர்ச்சிகளிலும் வாழுபவர்கள் ஆவர். அதன்பின்னர், ஆவிக்குரியவர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் தாங்கள் செய்கின்ற எல்லாவற்றிலும் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுகிறவர்களாய் இருப்பார்கள்.
ஆத்துமக் கிறிஸ்தவர்கள் எனப்படுபவர் கர்த்தருக்கென்று சாட்சியாக இருக்கவும், ஊழியம் செய்யவும் ஆவலுள்ள நல்ல ஜனங்கள்தான். ஆனால் அவர்கள் அதைச் செய்வதற்குப் பயன்படுத்தும் வழிமுறையானது மனுஷீகமானதாக உள்ளது. அவர்கள் தேவனுடைய வழிகளை அறியாதவர்கள். "என்னுடைய வழிகள் உங்களுடைய வழிகளல்ல. பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே என் வழிகளும் உயர்ந்திருக்கிறது" என்று தேவன் உரைக்கிறார் (ஏசா 5:8,9). இழந்து போன ஆத்துமாக்களை மீட்பதற்கு மனுஷீகமான வழிமுறைகளும் உண்டு. தேவனுக்கு ஊழியம் செய்வதற்கும் மனுஷீக வழிமுறைகள் உண்டு. தாவீது ஒரு முறை, பிலிஸ்தியர்களின் வழியைப் பின்பற்றி, உடன்படிக்கைப் பெட்டியை மாடுகளின் மேல் வைத்து எடுத்துச் சென்றான் (2 சாமு 6:13; 1 சாமு 6:11). இப்படிச் செய்வதால், இந்த நீண்ட பயணத்தின் போது கோகாத்தியர் பெட்டியைத் தங்களது தோள்களின் மேல் வைத்துப் பாரத்தைச் சுமந்து கஷ்டப்படாமல் இருக்கும்படியான ஒரு நல்ல திட்டமாகவே இது இருந்தது. ஆனால் அது தேவனுடைய வழியல்ல. ஆகவே வழியிலேயே அவர் அவர்கள்மீது நியாயத்தீர்ப்பைக் கொணர்ந்தார்.
தேவனுடைய வேலையை நிறைவேற்றுவதற்கு, மனுஷன் எங்கெல்லாம் மனுஷீக வழிமுறைகளைக் கையாளுகிறானோ, அங்கெல்லாம் குழப்பம் உண்டாகும். வெளிப்படையாய் தெரிகிற முடிவுகளெல்லாம் கவர்ச்சிகரமாக இருக்கக் கூடும். ஆனால் தேவ மகிமையானது அங்கு இருக்காது. தேவன் சொல்லியபடியே மோசே மிகத் துல்லியமாய் ஆசரிப்புக் கூடாரத்தைச் செய்து முடித்தார். பிரம்மாண்டமான பிரமிடுகளைக் கட்டுவதற்கானக் கலைகளை கற்றுக் கொடுக்கும் எகிப்து கலாசாலைகளில் கற்றவற்றைக் கையாண்டு, மோசே அதைக் கட்டவில்லை. மோசேயைப் பொறுத்தவரை, தேவனுடைய வீட்டைக் கட்டுவதற்குத் தான் பெற்றிருந்த புத்திசாலித்தனத்தை எல்லாம் விட்டுவிட நேர்ந்தது. தேவன் மோசேயை 40 ஆண்டுகள் வனாந்திரத்தை வட்டமடிக்க வைத்ததற்கான காரணங்களில் ஒன்று அவர் தன்னுடைய மனுஷீக ஞானத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதாகும். இதே கதிதான் பவுலுக்கும் நேர்ந்தது. பவுல் கமாலியேலின் வேத கல்லூரியிலே 3 ஆண்டுகளாகக் கற்றுப் பெற்றுக் கொண்ட மனுஷீக திட்டங்களையெல்லாம் விட்டுவிடும்படிக்கு தேவன் அவரை 3 ஆண்டுகள் அரேபியாவிற்கு அனுப்பி வைத்தார் (கலா 1:17,18). அவர் தேவனுடைய வழிகளைக் கற்றுக் கொள்ளும் முன்னர் தனது ஆத்தும புரிந்து கொள்ளுதலையெல்லாம் மரணத்தில் ஊற்ற வேண்டியிருந்தது.
ஆத்துமா என்று சொல்லும்போது அது மனுஷீக வழிமுறைகளைச் சார்ந்து நிற்கும் மனுஷீக வல்லமையையும் குறிக்கின்றது. இன்னும் அதிகமான மின்னணு சாதனங்களும், அரசியல் செல்வாக்கும் இருந்தால் தேவனுடைய வேலையைச் சிறப்பாகச் செய்துவிடலாம் என நாம் கற்பனை செய்யக் கூடும். அது ஒரு வஞ்சனையாகும். பரிசுத்த ஆவியின் வல்லமையைக் கொண்டுதான் தேவனுடைய பணியை செவ்வனே செய்ய முடியும். எந்தவிதமான பணபலமோ, உபகரணங்களோ, செல்வாக்கோ இல்லாமல்தான், ஆதி அப்போஸ்தலர் அதைச் செய்து முடித்தார்கள். அவர்களது மனுஷீக வழிமுறைகளெல்லாம் பூஜ்ஜியத்தைத் தொட்டுநின்றது. தங்களது உபகரணங்கள், பணம், செல்வாக்கு ஆகியவற்றைக் கொண்டு இன்றைய கிறிஸ்தவர்களால் சாதிக்க முடியாததை அவர்கள் சாதித்துவிட்டார்கள். அப்போஸ்தலரிடம் இருந்ததெல்லாம் ஆவியின் வல்லமைதானே ஒழிய ஆத்தும வல்லமை அல்ல.
நாம் ஆவிக்குரியவர்களாய் மாற வேண்டுமானால், ஆத்துமாவையும், ஆவியையும் பிரித்தறியப் பழக வேண்டியது அவசியமாகும். வெறுமனே உரத்த சத்தத்தையும், உணர்வுகளையும் வைத்தே பரிசுத்த ஆவி அசைவாடுகிறார் என்று சொல்லும் அநேகக் கூட்டங்களுக்கு நான் போயிருக்கிறேன். ஆனாலும் நான் முட்டாளாவதில்லை. நடைபெற்றுக் கொண்டிருப்பது மனுஷ ஆத்துமாவினால் உண்டானதுதானே தவிர ஆவியின் கிரியையல்ல என்பதை என்னால் தெளிவாகக் காண முடிகிறது. "ஆத்தும ஞானஸ்நானத்தைத்தான்," அவர்கள் "ஆவியின் ஞானஸ்நானம்" என்று சொல்லுகிறார்கள். இயேசுவோ இன்றும்கூட கிறிஸ்தவர்களுக்கு பரிசுத்த ஆவியின் மெய்யான ஞானஸ்நானத்தைத் தந்து கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அது கிறிஸ்துவுக்கு சாட்சிகளாய் இருக்கும்படியான ஆவிக்குரிய வல்லமையைத் தருகின்றது (அப் 1:5,8). ஆத்தும வல்லமையானது ஒருவருடைய உணர்ச்சிகளைத்தான் எழுப்பிவிடுகின்றது. ஆனால் பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு இதைப் பகுத்தறியத் தெரிவதில்லை. எனவே அவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் கிறிஸ்தவரல்லாத கூட்டங்களிலும்கூட அந்நிய பாஷைகளில் பேசுகிறார்கள். அதன் மூலம் தங்களது உணர்ச்சிகளையெல்லாம் முடுக்கிவிட்டு, "உள்ளான இளைப்பாறுதலுக்குள் வந்து விட்டதாக" மார்தட்டுகிறார்கள். பல்வேறு மதங்களும் தங்களது ஆத்தும வல்லமையைக் கிளறிவிடும் செயலில் ஈடுபட்டுக் கொண்டுதான் உள்ளன. இந்நாட்களில், நாம் ஆத்துமாவையும், ஆவியையும் பகுத்தறியத் தவறிவிட்டால், முழுக்கமுழுக்க வஞ்சிக்கப்பட்டு விடுவோம். இயேசுவின் நாமத்தில் "சுகமளித்தல்" என நடக்கும் பெரும்பாலான சம்பவங்களெல்லாம், பரிசுத்த ஆவியின் மெய்யான வரத்தைக் கொண்டு செய்யப்படாமல், ஆத்தும வல்லமையைக் கொண்டே செய்யப்படுகின்றன. கூட்டத்தில் நிறைய பாடல்களைப் பாடுவதின் மூலமாக ஏற்ற "சூழல்" உருவாக்கப்படுகிறது. "ஆண்டவரே, விசுவாசிக்கிறேன்" என்பது போன்ற பாடல்களை எண்ணற்ற முறை பாடுவதின் மூலமாக ஜனங்களின் உணர்வுகள் கிளறிவிடப்படுகின்றன. அதன் பின்னர் "உங்களது விசுவாசத்தை வெளிவிடுங்கள்" என்று ஜனங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்படி நடக்கும் சம்பவங்களுக்கும், தேவனுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. பிரசங்கி ஜனங்களை மனமயக்கம் செய்து கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இயேசுவோ, அப்போஸ்தலரோ ஜனங்களுக்கு இதுபோல சுகமளிக்கவில்லை. அவர்கள் பாடல்கள் மற்றும் உணர்வுகள் போன்ற எந்தவிதமான ஆரவாரமுமின்றி, வியாதியஸ்தரை அமைதியாய்க் குணமாக்கினர்.
இந்தப் போலித்தனத்தை உங்களால் அடையாளம் காண முடியவில்லை எனில், தேவனுக்கு இப்படித்தான் ஊழியம் செய்யவேண்டுமென நீங்களும் நினைத்துக் கொண்டு, அவர்களைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுவீர்கள். அதன்பின்பு நீங்களும் உங்களது ஆத்தும வல்லமையை வெளிப்படுத்தி ஜனங்களை வஞ்சிப்பதோடல்லாமல், உங்களையும் வஞ்சித்துக் கொள்ளுவீர்கள். ஆகவே ஆத்துமத்துக்குரியது எதுவென்றும், ஆவிக்குரியது எதுவென்றும் பிரித்துக் காட்டும்படிக்கு தேவனுடைய வார்த்தையானது உங்களுக்குள் ஊடுருவிச் செல்ல அனுமதியுங்கள். நீங்கள் இயேசுவை உற்று நோக்கினால், உங்களுக்குப் பதில் கிடைத்துவிடும். ஒரு சுகமளிக்கும் கூட்டத்தில் பங்கு பெறும் வாய்ப்போ அல்லது TV-யில் சுகமளிக்கும் நிகழ்ச்சியைக் காணும் வாய்ப்போ உங்களுக்குக் கிடைத்தால், அந்த சமயங்களில், இயேசு இப்படித்தான் செய்திருப்பாரா என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். உண்மை நேரடியாய் விளங்கிவிடும். ஆனால் அதை விடுத்து, நீங்கள் தேவனுடைய வார்த்தையை அசட்டை பண்ணினால், வஞ்சிக்கப்படுவீர்கள். தேவனுடைய வார்த்தையானது ஆத்துமாவையும், ஆவியையும் பிரிக்கட்டும். மெய்யான ஆவிக்குரிய காரியங்கள் எவை என்று நாம் மெய்யாகவே விளங்கிக்கொள்வதற்கு, தேவன் அவருடைய வார்த்தையையும், இயேசுவின் முன்மாதிரியையும், அப்போஸ்தலரின் முன்மாதிரியையும் நமக்குத் தந்துள்ளார்.