WFTW Body: 

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் (ஆங்கில வேதாகமத்தில் அறிவின்) ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள். (நீதிமொழிகள் 1:7)

இது முதல் நீதிமொழி. இது முதல் நீதிமொழி என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இது அறிவின் ஆரம்பம் என்று கூறும்போது, அஸ்திபாரத்தைக் குறிக்கிறது என்று கூறலாம். பின்னர் நீதிமொழிகள் 9:10ல், "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" என்று கூறுகிறது. அறிவும் ஞானமும் உண்மையில் ஒன்றோடொன்று இணைந்தவை, ஏனென்றால் இங்கே அறிவு என்பது வேத அறிவைக் குறிக்கவில்லை. அது தேவனை அறிந்துகொள்ளும் அறிவைக் குறிக்கிறது. நாம் ‘அறிவு’ என்று படிக்கும்போது, ​​அது வேதத்தைப் பற்றிய கல்வி அறிவைக் குறிப்பதில்லை. ஏனென்றால் பிசாசுக்கு அது இருக்கிறது, அவனுக்குள் கர்த்தருடைய பயம் இல்லை. எனவே நீதிமொழிகள் 1:7 வேத அறிவைக் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது. இங்கே பேசப்படும் அறிவு தேவனை அறிந்துகொள்ளும் அறிவு! அது வேத அறிவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

வேத அறிவுள்ள அநேகருக்குத் தேவனை அறிகிற அறிவு இல்லை. கர்த்தருக்குப் பயப்படுதலே அறிவின் ஆரம்பம். “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” (யோவான் 17:3). தேவன் எப்படிப்பட்டவர் என்பதை மேன்மேலும் அறிவதே இது. இதனை பவுல் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய ஏக்கம் என்று கூறினார்: "...நான் அவரை அறிகிறதற்கு..." (பிலிப்பியர் 3:10). அதாவது, அவர் தேவனை மேன்மேலும் மேன்மேலும் அறிய விரும்பினார். தேவன் எப்படிப்பட்டவர், தேவன் மக்களை எப்படிப் பார்க்கிறார், தேவன் சூழ்நிலைகளை எப்படிப் பார்க்கிறார், தேவன் பொருட்களை எப்படிப் பார்க்கிறார் என்பதை மேன்மேலும் அறிய விரும்பினார். அப்போது பவுல் தனது மனதை அந்த சிந்தனை முறைக்கு மாற்றிக்கொள்ள முடியும். அதுதான் இங்கே பேசப்படும் அறிவு.

முதல் நீதிமொழி போதிக்கிறது என்னவென்றால், தேவனை அறிந்துகொள்வதற்கான முதல் படி அவருக்குப் பயப்படுவதே. அவரிடத்தில் பயபக்தியோடு நடந்துகொள்வது; பாவத்தை வெறுத்து நீதியை நேசிப்பது; அதுவே தேவனுக்குப் பயப்படுவதாகும். பின்னர் நாம் அவரை மேன்மேலும் நன்றாக அறிந்து கொள்ள முடியும். அதனால்தான் நமக்கு எவ்வளவு புத்திக்கூர்மை இருக்கிறது என்பது கேள்வி அல்ல, மாறாக நமக்கு எவ்வளவு தேவ பயம் இருக்கிறது என்பதே ஆவிக்குரிய அறிவிலும் ஆவிக்குரிய ஞானத்திலும் நாம் எவ்வளவு அதிகரிக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது.

எனவே கர்த்தருக்குப் பயப்படுதலை ஆரம்பம், அஸ்திபாரம், மூலைக்கல் என்று எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கலாம். அது பந்தயத்தின் தொடக்கக் கோடு. நீங்கள் அங்குச் செல்லவில்லை என்றால், எங்கும் செல்ல முடியாது. எல்லா அறிவின் சாராம்சம் அதுவே என்றும் கூறலாம். எல்லா அறிவின் முக்கிய பகுதி தேவ பயம், நான் தேவ பயத்தை இழக்கும் நாளில் தானே, தேவனை இன்னும் அறிந்துகொள்ளவோ அல்லது இன்னும் ஞானத்தைப் பெற்றுக்கொள்ளவோ முடியாது. ஞானத்தை அதிகரிப்பதற்கான வழி தேவ பயத்தை அதிகரிப்பதாகும். தேவ அறிவை அதிகரிப்பதற்கான வழி தேவ பயத்தை அதிகரிப்பதாகும்.

இந்த வசனத்திலிருந்து ஒரு மூடன் யார் என்பதையும் நாம் புரிந்துகொள்கிறோம். வேதம் ஒரு மூடனைப் பற்றிப் பேசும்போது, ​​கணிதத்தில் பதினைந்து சதவீதமும் அறிவியலில் பத்து சதவீதமும் பெற்ற ஒருவரைப் பற்றிப் பேசவில்லை. அந்த மதிப்பெண்களை ஒருவர் பெற்றிருந்தாலும், அவருக்குத் தேவ பயம் இருந்தால், வேதத்தின்படி அவர் ஞானி. வேதம் ஒரு மூடனைப் பற்றிப் பேசும்போது, ​​அது படிப்பில் மோசமாக இருக்கும் ஒருவனைப் பற்றிப் பேசவில்லை. அது கர்த்தருக்குப் பயப்படாத ஒருவனைப் பற்றியே பேசுகிறது - அதாவது ஸ்திரீகளை இச்சித்தும் அதைக்குறித்து கொஞ்சமும் துயரப்படாமலும் கண்ணீர் சிந்தாமலும் இருக்கக்கூடிய ஒருவன், கணிதத்திலும் அறிவியலிலும் தொண்ணூறு சதவிகிதம் பெற்றாலும் அவன் ஒரு மூடன்! அவன் ஒரு முழுமையான மூடன், அவனைப் பற்றித்தான் சாலொமோன் நீதிமொழிகள் புத்தகத்தில் அறுபத்தாறு விஷயங்களை எழுதியுள்ளார். பாவம் செய்யும்போது - அதாவது பொய்களைச் சொல்லும்போது, பொய்யான அறிக்கைகளில் கையெழுத்திடும்போது அல்லது மற்ற எல்லா வகையான பாவங்களையும் செய்யும்போது - தனது இருதயத்தில் கொஞ்சமும் கலங்காதவன் தேவ பயம் இல்லாதவன். சாலொமோன் அத்தகைய மூடர்களைப் பற்றி அறுபத்தாறு விஷயங்களை எழுதியுள்ளார்.

ஞானத்தையும் போதனையையும் வெறுப்பவர்கள் மூடர்கள். தேவனின் பார்வையிலிருந்து காரியங்களைப் பார்க்கும் புரிதல் அவர்களிடம் இல்லை. தேவன் மக்களையும், பொருட்களையும், முழு உலகத்தையும் எப்படிப் பார்க்கிறாரோ அப்படியே நாமும் பார்ப்பதே ஞானம் என்று கூறலாம். எனக்கு எவ்வளவு அதிகம் ஞானம் இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக ஜனங்களைத் தேவன் எப்படிப் பார்க்கிறாரோ, அப்படியே நானும் அவர்களைப் பார்க்க முடியும் - மென்மையோடும், மனதுருக்கத்தோடும், இரக்கத்தோடும், அன்போடும் தூய்மையோடும் பார்க்கவேண்டும். மக்களை மென்மையோடும், மனதுருக்கத்தோடும், அன்போடும் தூய்மையோடும் நான் பார்க்க முடியாவிட்டால், வேத அறிவில் நான் எவ்வளவு வளர்ந்தாலும் (பிசாசுக்கு என்னைவிட அதிக வேத அறிவு உண்டு), நான் ஞானத்தை பெற்றுக்கொள்ளவில்லை. தேவனுக்குப் பயப்படாதவன், தன் வாழ்க்கையில் தேவனிடத்தில் பயபக்தியாயிராதவன், பாவத்தை வெறுக்காதவன், நீதியை விரும்பாதவனே வேதம் சொல்லும் மூடன் என்பதை நாம் இங்குப் பார்க்க வேண்டியது அவசியம்.

ஞானப் புத்தகம் வலியுறுத்தும் முதல் காரியம் தேவனுக்குப் பயப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது. ஆவியானவர் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.