WFTW Body: 

தேவன் நம் சுய வலிமையையும், பெருமையையும் உடைப்பதற்குக் கையாளும் மற்றொரு வழி, நம் தலைவர்கள் மூலமாய் நம்மைக் கண்டித்துத் திருத்துவதேயாகும்! கிட்டத்தட்ட எல்லா விசுவாசிகளுமே, இவ்வித கண்டித்துத் திருத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள அதிக சிரமப்படுகிறார்கள்! இரண்டு வயது குழந்தைக்குக்கூட தான் கண்டிக்கப்படுவதை, அதுவும் குறிப்பாக மற்றவர்களுக்கு முன் வெளிப்படையாகக் கண்டிக்கப்படுவதை 'ஏற்றுக்கொள்வது' எளிதானதாக இருப்பதில்லை!

இவ்விதமாய் எல்லோருக்கும் முன் நீங்கள் வெளிப்படையாய் திருத்தப்பட்டதை கடைசியாக எப்போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள்? உங்கள் வாழ்க்கையில் ஒரு தடவையாவது அவ்விதம் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டதுண்டா? அப்படியில்லையென்றால், உங்களிடம் ஆவிக்குரிய அதிகாரம் காணப்படவில்லை என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை!

இதுவே பேதுருவுக்கும், யூதாஸ்காரியோத்திற்கும் இடையே இருந்த ஒரு பெரிய வித்தியாசமாகும். பேதுரு மதியீனமாய் ஆண்டவரைப் பார்த்து “சிலுவை உமக்கு வேண்டாம்” எனக் கூறிய போது “எனக்குப் பின்னாகப் போ சாத்தானே” என ஆண்டவர் அவனைக் கடுமையாய் கடிந்துகொண்டார். இயேசு இந்தப் பூமியில் எந்த மனிதனைக் கடிந்துகொண்டதைக் காட்டிலும் இதுவே அவரது மிகக் கடினமான கடிந்துகொள்ளுதலாய் இருந்தது. பரிசேயர்களைக்கூட “விரியன்பாம்புக்குட்டிகள்” என மாத்திரமே இயேசு அழைத்தார். ஆனால் பேதுருவையோ “சாத்தான்” என்றே கூறிவிட்டார்! இவ்வித கடினமான கடிந்துகொள்ளுதலை, தமக்கு மிக நெருக்கமானவர்களுக்கென்றே இயேசு வைத்து வைத்திருந்தார்! ஆம், தம்மை அதிகமாய் நேசிக்கிறவர்களையே, அவர் அதிகமாய்க் கடிந்துகொள்கிறார் (வெளி 3:19).

இதன் பிறகு அநேக சீஷர்கள் ஆண்டவருடைய போதகத்தால் மனம்புண்பட்டு, அவரை விட்டு விலகிச் சென்றுகொண்டிருந்தபோது, ஆண்டவர் தம்முடைய சீஷர்களைப் பார்த்து “நீங்களும் போய்விட மனதாய் இருக்கிறீர்களோ?" எனக் கேட்டார். அப்போது பதிலளித்த ஒரே நபர் இந்த பேதுருதான்! அவன் கூறினான், “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே” என்றான் (யோவான் 6:60,66-68). இங்கு பேதுரு கேட்ட நித்திய ஜீவ வசனங்கள் எவைகள்? “எனக்குப் பின்னாகப் போ சாத்தானே” என்ற இயேசுவின் கடிந்துகொள்ளுதலே அவனுக்கு நித்திய ஜீவ வசனங்களாய் இருந்தது!

இவ்வாறு நம்மைத் திருத்தும் வார்த்தைகளை, நித்திய ஜீவனுக்குள் நடத்துகிற வார்த்தைகளாய் நாம் காண்கிறோமா?

தன்னைத் திருத்திய வார்த்தைகளைப் பேதுரு அவ்விதமே கண்டான். அந்த வார்த்தைகளே, அவனை தேவ மனுஷனாய் உருவாக்கியது!

இன்னொரு சந்தர்ப்பத்தில் இதே பேதுரு, ஆண்டவருடைய திருத்துதலை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டதையும் நாம் காண்கிறோம். கடைசி இராப்போஜனத்தில் பேதுரு ஆண்டவரைப் பார்த்து “எல்லா சீஷர்களும் உம்மை மறுதலித்தாலும், நான் மறுதலிக்கமாட்டேன்” எனக் கூறினான். அதற்கு உடனே ஆண்டவர், அடுத்த பன்னிரண்டு மணி நேரத்திற்குள் பேதுரு தம்மை மூன்று முறை மறுதலிப்பான் என பதில் கூறினார். இவ்வித பதிலைக் கேட்ட பின்பும், பேதுரு சற்றேனும் மனம் புண்படவில்லை! இத்தகைய மனிதனைத் தான் ஆண்டவர் தெரிந்து கொண்டு முடிவில் தம்முடைய பிரதான அப்போஸ்தலனாகவும், பெந்தெகொஸ்தே நாளில் தம்முடைய ஸ்தானாபதியாகவும் நிறுத்தினார்!

இவ்வாறு தான் திருத்தப்பட்டதை ஏற்றுக்கொண்டு பேதுரு தன்னைத்தானே தாழ்த்தியபடியால், தேவன் அவனை உயர்த்தினார்! இவ்விதமாய் தன் சொந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பின்பே, பேதுரு இப்போது நம் யாவரையும் பார்த்து “நம்மை நாமே எப்பொழுதும் தாழ்த்தும்படி” புத்தி கூறுகிறார் (1பேதுரு 5:5,6). நம்மை நாமே தாழ்த்துவதால் நாம் எதையும் இழந்து போகவேமாட்டோம். மாறாக, ஒரு நாளில் தேவன் நம்மை உயர்த்துவார்!

யூதாஸ்காரியோத்து திருத்தப்பட்டபோது கொண்ட மனப்பான்மையானது பேதுரு திருத்தப்பட்டபோது கொண்ட மனப்பான்மைக்கு நேர்மாறாக இருப்பதை இப்போது பாருங்கள். ஒரு ஸ்திரீ இயேசுவின் மீது விலையேறப்பெற்ற நளதத்தை ஊற்றியபோது, “இப்படி பணத்தை விரயம் செய்வதற்குப் பதிலாய் தரித்திரர்களுக்குக் கொடுத்திருக்கலாம்” என யூதாஸ்காரியோத்து கூறினான் (யோவான் 12:5; மத்தேயு 26:10-13). அதற்கு இயேசு யூதாஸ்காரியோத்தைப் பார்த்து “இந்த ஸ்திரீயை தொந்தரவு செய்ய வேண்டாம், அவள் என்னிடத்தில் நற்கிரியை செய்திருக்கிறாள்” என மிக மிக மென்மையாகக் கடிந்து பேசினார். ஆனால் யூதாஸோ உடனே மனம் புண்பட்டுவிட்டான்.

14-வது வசனத்தில், யூதாஸ்காரியோத்து “உடனே பிரதான ஆசாரியரிடத்திற்கு போய் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு சம்மதித்தான்” என வாசிக்கிறோம் (மத்தேயு 26:14). ஆம், யூதாஸ் மனம் புண்பட்டுவிட்டான். ஏனெனில், இயேசு அவனை எல்லோருக்கும் முன்பாகத் திருத்தினார்!'

இயேசு யூதாஸ்காரியோத்தை அப்படி என்ன கடிந்து திருத்திவிட்டார்? “அந்த ஸ்திரீயின் செயலைக்குறித்த அவனது மதிப்பீடு தவறு” என மாத்திரமே திருத்தினார். ஆனால், அதுகூட அவனை மனம்புண்படச் செய்துவிட்டது. நீங்கள் நொறுங்கியிராத பட்சத்தில், சிறுகாரியம்கூட உங்களை மனம்புண்படச் செய்துவிடும்!

ஆனால், இவ்விதம் யூதாஸ் நடந்துகொண்டதன் நித்திய விளைவைப் பாருங்கள்! பேதுரு நடந்துகொண்டதன் நித்திய விளைவையும் பாருங்கள்! இந்த இருவருமே திருத்தப்படுவதின் மூலமாய் சோதிக்கப்பட்டார்கள். ஒருவன் தோற்றுவிட்டான்! மற்றவன் தேறிவிட்டான்!!

இன்று நாமும், இதே வழியில்தான் சோதிக்கப்படுகிறோம்.

ஜனங்களுக்கு முன்பாய் திருத்தப்படும் செயல் நம்மை மனம்புண்படச் செய்தால், நாம் “மனுஷர்களின் கனத்தைத் தேடுகிறோம்” என்பதையே அது நிரூபிக்கிறது. காரியம் அப்படியிருந்தால், நம்மைச் சுத்திகரித்துக்கொள்ள ஏதுவாக, நம்மிடமுள்ள சுய-கனத்தின்மீதான நாட்டத்தை இப்போதே கண்டறிந்துகொள்வது மிகவும் நல்லது! “நாம் எவ்வளவாய் மனுஷர்களுடைய அபிப்பிராயத்திற்கு அடிமைப்பட்டிருக்கிறோம்” என்பதை நமக்கு காட்டுவதற்கென்றே, தேவன் இவ்வித சூழ்நிலைகளை அனுமதித்திருப்பார். அதன் விளைவு? 'இப்போது' நம்மை அக்கொடிய சுபாவத்திலிருந்து சுத்திகரித்துக் கொண்டு நாம் விடுதலை அடைந்திட முடியுமே!

ஆகவே, ஆண்டவர் நம்மைத் தம்முடைய ஆவியின் மூலமாய் நேரடியாகவோ அல்லது வேறு யார் மூலமாகவோ கண்டித்துத் திருத்தினால், அது போன்ற எல்லா நேரங்களிலும் “பேதுருவின் மனப்பான்மையையே” நாம் கொண்டிருக்கக்கடவோம்! இதுவே நாம் எல்லோரும் நடந்து வரவேண்டிய நித்திய ஜீவபாதையாகும். நாம் மாத்திரம் “நம்மை நாமே தாழ்த்திவிட்டால்” தேவனிடத்திலிருந்து நாம் கிருபையைப் பெறுவது மாத்திரமல்லாமல், ஏற்றகாலத்தில் அவர் நம்மை உயர்த்தியும் விடுவார்!