அப்போஸ்தலர் 2:3 -ல் "அக்கினிமயமான நாவுகள் அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது" என்று சொல்லப்படுகிறது. இது புது உடன்படிக்கையின் காலத்தில், நம்முடைய சரீரத்தின் மிக முக்கியமான அவயவயமான நாவைக் கர்த்தர் உபயோகப்படுத்துவார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பரிசுத்த ஆவியானவரால் அக்கினிமயமாக்கப்பட்ட நாவு, அவருடைய முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் எல்லா நேரங்களிலும் இருக்கும். அந்நியபாஷை வரத்திற்கு இந்த அக்கினிமயமான நாவுகள் ஒருவிதத்தில் அடையாளமாகும். நீங்கள் பிரசங்கியாராயிருந்தால் மாத்திரமல்ல, உங்களுடைய சாதாரண உரையாடலிலும் பிறரை ஆசீர்வதிக்க உங்கள் நாவைக் கர்த்தர் ஒவ்வொரு நாளும் உபயோகப்படுத்த விரும்புகிறார். ஆனால் இதற்கு, வாரத்தின் ஏழு நாட்களும், நாளின் 24 மணிநேரமும், பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய வார்த்தைகளை முற்றிலுமாக கட்டுப்படுத்த நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்.
நாம் பேசுகிற விதத்தில் மாற்றம் வந்திருப்பதே பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதின் முதன்மையான அடையாளங்களில் ஒன்றாகும். நம்முடைய நாவு அக்கினிமயமான நாவாக மாறும் (அப்போஸ்தலர் 2:3). இது வேறு பாஷைகளில் பேசுவது அல்ல. ஆனால் நம்முடைய தாய் மொழியில், தேவனுடைய அக்கினியாகிய அன்போடும் தூய்மையோடும் பேசுவதாகும். நம்முடைய பாஷை பரலோகத் தன்மையுடையதாக மாறும். நம்முடைய வார்த்தைகளைக் குறித்து வலியுறுத்துகிற இந்த வசனங்களைக் கவனியுங்கள் "ஆவியினால் நிறைந்து; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்". (எபேசியர் 5:18-20). பரிசுத்த ஆவியினால் நாம் நிறைந்திருக்கும்போது புறங்கூறுதல், கோட்சொல்லுதல், கசப்பு, கோபம் என்கிற ஆவிக்குப் பதிலாக ஸ்தோத்திரத்தின் ஆவியினால் நிறைந்திருப்போம்.
எபேசியர் 5:18 -ல் சொல்லப்படுகிற வினைச்சொல் ஒரு தொடர்ச்சியான வினைச்சொல் - அதனுடைய பொருள் "நிறைந்து கொண்டே இருங்கள்", "எப்பொழுதும் நிறைந்து கொண்டே இருங்கள்" என்பதாகும். "ஒரு முறை நிறைந்திருங்கள்" என்றல்ல. பரிசுத்த ஆவியினால் நாம் காலையில் நிறைந்திருந்தால், மாலையும் மற்றும் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக நிறைந்திருக்க வேண்டும். கர்த்தர் உங்களை எல்லா நேரத்திலும் தம்முடைய ஆவியினால் நிரப்பக் கேளுங்கள். இப்படிப்பட்ட ஜனங்கள் "பரிசுத்த ஆவியினால் நிறைந்த புருஷர்கள் மற்றும் ஸ்திரீகள்" என்று அப்போஸ்தலர் நடபடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எபேசியர் 5:18 -ஐ தொடர்ந்து வருகிற எல்லா வசனங்களும் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்களின் பண்புகளைக் குறிப்பிடுகிறது (எபேசியர் 5:19 - 6:24) அது ஸ்தோத்திரத்தோடு இருப்பதிலிருந்து தொடங்கி, தொடர்ந்து ஒருவருக்கொருவர் சபையிலும் குடும்ப உறவிலும் கீழ்ப்படிந்திருந்து (எபேசியர் 5:21 - 6:9), பிறகு சாத்தானின் சேனைகளோடு போராடி ஜெயங்கொள்ளுவதில் முடிவடைகிறது. (எபேசியர் 6:11).
எனவே, நம்முடைய கிறிஸ்தவ நடைக்கும், பூமியிலுள்ள ஆவிக்குரிய போராட்டத்திற்கும் பரிசுத்த ஆவியின் நிறைவே இரகசியமாயிருக்கிறது.
• பரிசுத்த ஆவியினால் நிறைந்திருக்காமல் ஒழுங்காக தேவனை நாம் துதிக்க முடியாது.
• பரிசுத்த ஆவியினால் நிறைந்திருக்காமல் தேவ பக்தியுள்ள கணவனாகவோ மனைவியாகவோ நாம் இருக்க முடியாது.
• பரிசுத்த ஆவியினால் நிறைந்திருக்காமல் நம்முடைய பிள்ளைகளை ஒழுங்காக நாம் வளர்க்க முடியாது.
• பரிசுத்த ஆவியினால் நிறைந்திருக்காமல் சாத்தானுடைய சேனைகளை நாம் தோற்கடிக்க முடியாது.
நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் அனைத்தும், நாம் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதையே சார்ந்திருக்கிறது.