ஈசாக்கு ஆபிரகாமின் நேசக்குமாரன் என்றழைக்கப்படும் இடத்தில்தான் (ஆதியாகமம் 22:2 – ஆங்கில மொழிபெயர்ப்பில், ஆபிரகாமால் அன்புகூரப்பட்ட ஒரே மகன் என்று சொல்லப்படுகின்றது) அன்பு என்னும் வார்த்தையானது ஆதியாகமம் புத்தகத்தில் முதன்முதலில் இடம் பெறுகின்றது. அதைத் தொடர்ந்து வரும் வசனங்களில், ஆபிரகாம், ஈசாக்கைப் பலிபீடத்தின்மீது பலியிடும் காட்சியானது, நம்முடைய பாவங்களுக்காக, தேவன், தமது ஒரே பேறான குமாரனை பலியாக ஒப்புக் கொடுத்த அந்தக் கல்வாரியை மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றது. இதன் பிரகாரமாகப் பார்க்கும்போது, 2 -ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அன்பு என்னும் வார்த்தையானது, பிதாவாகிய தேவன், தமது குமாரனாகிய கிறிஸ்து மீது கொண்டிருந்த அன்பிற்கு அடையாளமாகவே சொல்லப்படுகின்றது. ஆதியாகமத்தில், இரண்டாம் தடவையாக “அன்பு” என்னும் வார்த்தையானது ஆதியாகமம் 24:67-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஈசாக்கு ரெபெக்காளிடத்தில் காட்டிய அன்பாக, கணவன் மனைவிமீது காட்டிய அன்பாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த இடத்திலும், தொடர்ந்துவரும் வசனங்களிலும், கிறிஸ்து சபையின்மீது கொண்டுள்ள அன்பை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது. புதிய ஏற்பாட்டில் இவ்விரு கருத்துக்களும், யோவான் 15:9 -ல் ஒருங்கிணைத்துச் சொல்லப்படுகின்றது. “பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல (ஆதியாகமம் 22:2 –ல் மகன்மீது காட்டப்படும் தகப்பனின் அன்பு சித்தரிக்கப்பட்டுள்ளது போல), நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன் (ஆதியாகமம் 24:67 –ல், மணவாளன் தன் மணவாட்டிமீது காட்டும் அன்பிற்கு இணையாக கிறிஸ்துவின் அன்பு ஒரு பாவியின் மீது காட்டப்படுவதாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது). இப்படியாக, பழைய ஏற்பாட்டை ஓர் ஆய்விற்குட்படுத்தினாலும், அங்கேயும் தேவன் மனிதன் மீது கொண்டுள்ள அனல்மிகு அன்பானது பிரதிபலிப்பதைக் காண முடியும்.
ஆதலால், ஆதியாகமம் 24 -ல், ஈசாக்கு, ரெபெக்காள் ஆகியோருக்கிடையில் இருந்த உறவைப் பற்றிய நிழலாட்டமான படத்தை வைத்து, தேவன் நம்மீது கொண்டுள்ள பெரிதான அன்பின் பண்புஇயல்புகளை காணலாம். தேவன் நம்மீது எவ்வளவாய் அன்பு பாராட்டியிருக்கிறார் என்பதைப் பற்றி அவர் நமக்குச் சொல்லுகின்ற வேளையில், கணவன்-மனைவி அன்பையே அவர் முன்வைத்துப் பேசுவது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இப்பூமியிலுள்ள அனைத்து வகையான உறவுகளிலும், கணவன் மனைவிக்கிடையே உள்ள ஐக்கியமே மிகவும் நெருக்கமானதாகும். இந்த உதாரணத்தைப் பல இடங்களுக்குப் பயன்படுத்துவது ஞானமில்லாத செயலாக இருந்த போதிலும், தேவன் காண்பித்த இந்த உதாரணமானது, புதிய ஏற்பாட்டுப் பகுதியில், எபேசியர் 5:21-23 -ல் உள்ள வசனங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஆண்டவர் நம் ஒவ்வொருவருடனும் தனிப்பட்டவிதத்தில் நெருக்கமாக இருக்க விரும்புவதும், நாம் அவருடன் நெருக்கமாக ஐக்கியம் கொள்ள வேண்டுமென அவர் விரும்புவதும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. ஆதியாகமம் 24 -ல், மனுஷனோடு அத்தகைய உறவை நிலைநாட்ட வேண்டுமென்ற ஒரு தெய்வீகத் தேடலை நம்மால் ஓர் உருவகமாகக் காண முடிகிறது. இங்கு ஆபிரகாம், பிதாவாகிய தேவனுக்கு ஒப்பனையாகவும், ஆபிரகாமின் வேலைக்காரன் பரிசுத்த ஆவியானவருக்கு ஒப்பனையாகவும், ஈசாக்கு தேவக் குமாரனுக்கு ஒப்பனையாகவும், அந்நிய தேசத்திலிருந்த ரெபெக்காள், பரிசுத்த ஆவியால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு குமாரனுக்காக ஆதாயம் பண்ணப்பட வேண்டிய மீட்கப்படாத மனிதனுக்கு ஒப்பனையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆபிரகாமின் வேலைக்காரனுடைய மனோபாவம் (இந்தப் பணியைப் பொறுத்தவரை அவன் ஆபிரகாம், ஈசாக்கு ஆகிய இருவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறான்), ஈசாக்கு ரெபெக்காளிடத்தில் காட்டிய மனோபாவம் ஆகியவற்றின் மூலமாக கிறிஸ்துவானவர் நம்மீது காட்டும் அன்பை நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.
முதலாவதாக, ஆபிரகாமின் வேலைக்காரன், தன்னுடைய எஜமானின் ஐஸ்வரியத்திலிருந்து ரெபெக்காளுக்குப் பரிசளிப்பதைப் பார்க்கிறோம் (ஆதி 24:22,53). தேவனுடைய இருதயத்தை அறிந்து கொள்ளத்தக்க உணர்வை இது நமக்குத் தருகிறது. அவர் நம்மிடத்தில் வரும்போது, நம்மிடமிருந்து எதையுமே எதிர்பார்க்காமல், முதலாவதாக அவர் நமக்குக் கொடுக்கிறார். ஒரு நல்ல புருஷனானவன், எவ்வாறு தன்னிடத்திலுள்ளதையெல்லாம் தன்னுடைய மனைவிக்குக் கொடுக்கிறானோ, அவ்வாறே நம்முடைய ஆண்டவரும் அவரிடத்திலுள்ளதையெல்லாம் நம்முடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். நாம் நம்மை ஆண்டவருக்கு முற்றிலுமாக ஒப்புக் கொடுத்துவிட்டால், அவர் நம்மிடமிருந்து ஏகப்பட்ட காரியங்களை எதிர்ப்பார்த்து, நம்மை ஒரு பரிதாபமான நிலைக்குத் தள்ளிவிடுவார் என்பதே இன்று அநேகருடைய எண்ணமாக இருக்கின்றது. நாம் இவ்வாறான எண்ணங்களுக்கு, வார்த்தை வடிவம் கொடுக்காவிட்டாலும், இவ்விதமான காரணத்தின் நிமித்தமே, பிசாசானவன் தான் நம்மிடத்தில் உள்ளதையல்லாம் திருடி கொள்கிறான் என்று இயேசுவானவர் உறுதியாக சொல்லிருந்தும் நிபந்தனையற்ற ஒப்புவித்தலிருந்து பின்வாங்குகிறவர்களாய் இருக்கின்றோம். (யோவான் 10:10). ஆனால் இதை விசுவாசிக்கிறார்களும் மிகச் சொற்பமானவர்களே. கர்த்தராகிய இயேசு, தம்மிடத்திலுள்ளதையெல்லாம் நமக்குக் கொடுத்துவிட விரும்புகிறார் என்று நாம் மெய்யாகவே விசுவாசிப்போமென்றால், நாம் நம்முடைய வாழ்க்கையை அவருக்கென்று முழுமையாக ஒப்படைப்பதிலே எவ்வித காலதாமதமும் இருக்காது.
ஓர் ஏழைப் பெண்ணுக்கு அவளது வீட்டு வாடகையைக் கொடுத்து உதவுவதற்காகப் பணத்துடன் சென்ற ஒரு பாஸ்டரைப் பற்றிய கதை உண்டு. அவர் அவளுடைய வீட்டுக் கதவின் முன் நின்று கொண்டு, அதைத் தட்டுவதும், காத்திருப்பதுமாக இருந்தார். ஆனால் எந்தப் பதிலும் உள்ளிருந்து வராதபடியால், அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். சில தினங்களுக்குப் பிறகு, அவர் அவளை ஒரு தெருவில் சந்தித்தார். அவர் அவளைப் பார்த்தவுடன், அவளிடத்தில், “நான் அன்றொரு நாள் உன் வீட்டிற்குப் பரிசுப் பொருளுடன் வந்து, கதவைத் தட்டினேன். ஆனால் உள்ளிருந்து பதிலேதும் வரவில்லை. கதவும் தாளிடப்பட்டிருந்ததால், நான் அங்கிருந்து போய்விட்டேன்” என்று சொன்னார். உடனே அவள், “அடடே, நான் அச்சமயத்தில் வீட்டினுள்தான் இருந்தேன். வீட்டின் உரிமையாளர் என்னிடம் வீட்டு வாடகையைக் கேட்பதற்காக வந்திருக்கிறார் என எண்ணிக் கதவைத் திறக்காமல் இருந்து விட்டேன். என்னை மன்னித்துவிடவும்” என்றாள். சகோதர, சகோதரிகளே, கர்த்தராகிய இயேசு வாடகையை வசூலிக்க வரவில்லை. அவர், தாம் பெற்றுள்ள யாவற்றையும் நமக்குத் தரும்படிக்கே வந்திருக்கிறார். கற்பனைக்கெட்டாத ஐஸ்வரியங்களை அவர் கொண்டு வருகிறார். அவருக்கு நாம் கதவைத் திறக்காமல் இருப்பது எவ்வளவு மதியீனம்! நம்முடைய வாழ்க்கையை முற்றிலுமாய் அவருக்கென்று ஒப்புக் கொடுக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய மதியீனம்!
மீண்டுமாய் ஆபிரகாமின் வேலைக்காரனைப் பாருங்கள். ரெபெக்காள்தான் ஈசாக்கிற்கென்று தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவள் என்று அவன் அறிந்திருந்த போதிலும், அவளைத் தன்னுடன் வரும்படிக்கு அவன் கட்டாயப்படுத்தவில்லை என்பது இக்கதையின் இன்னொரு சிறப்பம்சமாகும். அவன் அவளுடைய சுய சித்தத்தை மதித்தான். அவள் தானாகவே வருவதற்கு விருப்பம் தெரிவித்த பிறகுதான், அவளை அழைத்துச் சென்றான் (ஆதி 24:54-59). இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் நாம் சுருக்கமாகப் பார்த்தது போல, இதுவும் கிறிஸ்துவின் அன்பைப் பற்றியதான குணாதிசயமாக உள்ளது. மனிதனின் தெரிந்தெடுக்கும் விருப்பத்தை தேவன் மதிக்கிறார். தேவ அன்பானது எவரையும் கட்டாயப்படுத்துவதில்லை. நீங்கள் ஏதாவதொன்றைச் செய்ய வேண்டுமென அவர் நிர்ப்பந்திப்பதில்லை. உலகத்திலுள்ள மனிதர்கள் – சொல்லப்போனால், கிறிஸ்தவ தலைவர்களும் கூட – உங்களுடைய விருப்பத்திற்கு மாறான காரியங்களைச் செய்யும்படிக்கு உங்களுக்கு அழுத்தம் தரக் கூடும். ஆனால் தேவன் ஒருபோதும் அப்படிச் செய்யவே மாட்டார். (இத்தருணத்தில், தேவனைப் போல மாற விரும்புகிற எவனும், அவரை இந்த விஷயத்திலும் பின்தொடருவான் என்பதை உங்களுக்குச் சொல்லி விடுகிறேன்). நீங்கள் வேதத்தை வாசிக்கும்படிக்கோ, ஜெபிக்கும்படிக்கோ, அவரை பற்றி சாட்சி பகரும்படிக்கோ அவர் உங்களைக் கட்டாயப்படுத்த மாட்டார். அவர் எந்த ஒரு பாவியும் தம்மிடம் திரும்ப வேண்டுமென கட்டாயப்படுத்துவதுமில்லை, எந்த ஒரு விசுவாசியும் தமக்குக் கீழ்ப்படிய வேண்டுமென கட்டாயப்படுத்துவதுமில்லை. ஆசரிப்புக் கூடாரத்தைக் குறித்து மோசேக்கு தேவன் கட்டளையிட்ட போது, மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவனிடத்தில் காணிக்கையை வாங்குமாறு அவனைப் பணித்ததையும் (யாத் 25:2), இதே விதியானது மறுபடியுமாக புதிய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் (2கொரி 9:7) பார்க்கிறோம். உள்ளபடியே இது வேதம் முழுவதுமாகப் பரவிக் கிடக்கிறது. தேவன் தமக்குக் கீழ்ப்படிய வேண்டுமெனக் கட்டளையிட்டாலும், அவர் ஒருவரையும் கீழ்ப்படிய வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவதில்லை. அவராகவே மனிதனுக்குத் தந்த சுய சித்தத்தை, அவர் எப்பொழுதுமே மதிக்கின்றார். இத்தகைதொரு அன்பை குறித்து பயம் கொள்ள இனியும் நமக்கு அவசியம் ஏதுமில்லை.