எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   சீஷர்கள்
WFTW Body: 

நீங்கள் 1960 வருடங்களுக்கு முன்பாக வாழ்வது போலவும், "நசரேயனாகிய இயேசு" என்பவர் செய்யும் ஊழியத்தில் அநேகர் சுகமளிக்கப்படுவதைக் கேள்விப்படுவது போலவும் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் இதுவரை அவரை நேரடியாய் கண்டதில்லை. இந்நிலையில் எருசலேமிலே திரள் கூட்ட ஜனங்கள் குணமளிக்கும் கூட்டங்களிலே கூடி இருப்பதைப் பார்க்கிறீர்கள். 'இயேசு' என அழைக்கப்படுபவர் அக்கூட்டத்தின் பேச்சாளராக இருக்கிறார்.

நீங்கள் கிட்ட நெருங்க, நெருங்க 'இயேசு' (செய்தியாளர்), மேடையிலே ஏரோது, பிலாத்து, அன்னா, காய்பா என்பவர்களோடு அமர்ந்திருப்பதைக் காண்கிறீர்கள். 'இயேசு' எழுந்து முன்னால் வந்து நின்று, ஜனக்கூட்டத்தைப் பார்த்து, பாலஸ்தீனத்தின் இரு மாபெரும் தலைவர்கள் நம் மத்தியில் வந்திருப்பது நமக்கெல்லாம் எவ்வளவு பெருமிதம் அளிக்கிறது என்று சொல்லுகிறார். "மிகவும் கனம் பொருந்திய ஏரோதுவும், பிலாத்துவும் தயவாய் இக்கூட்டத்துக்கு வருகை புரிந்து சிறப்பித்துள்ளார்கள்" என்றும் அவர் சொல்லுகிறார். அது மட்டுமின்றி, "இருபெரும் தேவ மனிதர்களாகிய, சங்கை மறைதிரு அன்னா அவர்களும், காய்பா அவர்களும் இக்கூட்டத்துக்கு வருகை புரிந்து கூட்டத்தைச் சிறப்பித்துள்ளார்கள்" என்கிறார்.

இப்படியெல்லாம் வார்த்தைகளைப் பேசி அவர்களை அறிமுகப் படுத்திய 'இயேசு', ஏரோதுவையும், பிலாத்துவையும் முன்னால் வந்து சில வார்த்தைகளைச் சொல்லி கூட்டத்தை ஆரம்பித்து வைக்குமாறு அழைக்கிறார். பிலாத்துவும், ஏரோதுவும் 'இயேசு' அவருடைய ஊழியத்தின் மூலமாய் சமுதாயத்திற்கு ஏராளமான நன்மைகளைச் செய்கிறபடியால், அவரை ஜனங்கள் எல்லாரும் ஆதரிக்க வேண்டும் என்றெல்லாம் வெகுவாகப் புகழுகிறார்கள். அதன்பின்பு "சங்கை மறைதிரு அன்னாவும், காய்பாவும்", "ஆரம்ப ஜெபத்தை" ஏறெடுக்கும்படியாய் 'இயேசுவால்' அழைக்கப்படுகிறார்கள். அவர்களும் 'இயேசுவை' வானுயரப் புகழ்ந்து, தங்களுடைய ஸ்தாபனங்களில் உள்ளவர்களை எல்லாம் 'இயேசுவின்' ஊழியத்தை முழு இருதயமாய் ஆதரிக்கும்படி சொல்லுகிறார்கள்.

அதற்கடுத்ததாக, 'இயேசு' யூதாஸ்காரியோத்தைக் கூப்பிட்டு ஊழியத்தின் தேவைகளை எடுத்துச் சொல்லும்படி கேட்டுக் கொள்ளுகிறார். யூதாசும் ஊழியத்தின் தேவைகளைச் சந்திப்பதற்கு பல்லாயிரக்கணக்கான தினாரிகள் தேவை எனக் குறிப்பிடுகிறான். அரங்கினுள் பணிபுரிபவர்களிடமிருந்து கவர்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், 1000 வெள்ளிப்பணத்துக்கு மேலாய் கொடுப்பவர்களுக்கு 'இயேசு' விசேஷித்த ஜெபம் ஏறெடுப்பார் என்றும் அறிவிக்கிறான். (அப்படி அதிகப் பணம் கொடுப்பவர்கள் விசுவாசியோ அல்லது அவிசுவாசியோ என்பதெல்லாம் காரியமல்ல. சொல்லப்போனால் அதிக ஐஸ்வரியவானுக்கு அதிக நலம் பயக்கும்). உடனே ஏரோது எழுந்திருந்து இந்த ஊழியத்துக்காக நன்கொடை அளிப்பவருக்குப் பூரண வரிவிலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கிறான். அதன் பிறகு காணிக்கை வசூலிக்கப்படுகிறது. பின்பு 'இயேசு' ஒரு சிறு செய்தியைக் கொடுத்துவிட்டு, அங்கிருந்த எளிய மக்களையெல்லாம் தனது அற்புதமான வல்லமையை நிகழ்த்தி வியப்பில் ஆழ்த்துகிறார்; ஒரு சில வியாதியஸ்தர்களை சுகப்படுத்துகிறார். பிறகு ஒருவராவது தன்னை வந்து சந்தித்து விடுமுன்னர், ஏரோது, பிலாத்து, அன்னா, காய்பா மற்றும் யூதாஸ்காரியோத்து (பணமூட்டையுடன்) ஆகியோருடன் ரோம அரச ரதத்தில் ஏறி மத்திய எருசலேமிலிருக்கும் தலைமைக் குருவின் அரண்மனைக்கு அவர்களுடன் விருந்துக்குப் பறந்து விடுகிறார்.

எப்படியோ, கொஞ்சம் பகுத்தறிதலும், அனுபவமும் மட்டுமே உள்ள ஒரு புதிய விசுவாசியான நீங்கள் இதை எல்லாவற்றையும் பார்த்து முடித்துவிட்ட பிறகு ஒருவித சங்கடத்துடன் நெளிகிறீர்கள். நீங்கள் கண்டவை அனைத்தும் மத்தேயு, பேதுரு, யோவான் ஆகியோர் மூலமாய் கேட்ட காரியங்களோடு பொருந்தவில்லை.

அந்த வேளையிலே, சாத்தான் உங்கள் காதுக்கருகில் வந்து, "மத்தேயு 7:1 ல் 'நீங்கள் ஒருவரையும் நியாயந்தீர்க்காதிருங்கள்' என்று எழுதி இருக்கிறதே" என்று கிசுகிசுக்கிறான். ஆனால் நீங்களோ, " '1 யோவான் 4:1-ல் உலகத்தில் அநேகங் கள்ளத் தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்து அறியுங்கள்' என்றும் எழுதி இருக்கிறதே" என்று சொல்லுகிறீர்கள். இறுதியில் ஒரு திட்டவட்டமான தீர்மானத்திற்கு வருகிறீர்கள்: "நான் கேள்விப்பட்ட இயேசு இவரில்லை. இவர் நிச்சயமாகவே 'வேறொரு இயேசு' (2 கொரி 11:4). நீங்கள் முற்றிலும் சரி. அவர் 'வேறொரு இயேசுவே தான்'. நீங்கள் எப்படி இந்த முடிவுக்கு வந்தீர்கள்? எப்படியென்றால், உங்களுக்குள் இருக்கும் அந்த அபிஷேகம் இந்த உண்மைகளை உங்களுக்குப் போதித்தது (1யோவா 2: 19,20, 27).

1. மெய்யான இயேசு, தம்முடைய ஊழியத்திற்கான செலவுகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளும்படிக்கு உலகத் தலைவர்களின் உதவியை நாடிச் செல்ல மாட்டார். அல்லது தமது ஊழியத்துக்கு ஏதாவது சிபாரிசு வேண்டுமென மனந்திரும்பாத மதத் தலைவர்களின் தயவையும் நாடிப் போகமாட்டார். அவர்களை முகஸ்துதி பண்ணவும் மாட்டார். ஒருமுறை ஒரு பிஷப் இயேசுவினிடத்தில் வந்தபோது, அவர் அவனை மறுபடியும் பிறக்க வேண்டுமென சொல்லிவிட்டார் (யோவா 3:1-10). இயேசு, ஏரோதுவை ஒரு நரி எனக் குறிப்பிட்டார் (லூக் 13: 31,32). இன்னும் சொல்லப் போனால், அவர் அவனைச் சந்தித்த போது, அவனிடம் பேசவும் மறுத்து விட்டார் (லூக் 23:8,9).

2. மெய்யான இயேசு தமது ஜெபத்தை எந்த ஒரு விலைக் கிரயத்திற்கும் "விற்க" மாட்டார். ஒரு தடவை சீமோன் என்னும் மாயவித்தைக்காரன் பேதுருவின் ஜெபங்களை விலை கொடுத்து வாங்க முன் வந்த போது, தெய்வீக வரத்தைப் பணம் கொடுத்து வாங்கிவிடலாம் என்ற அவனுடைய பொல்லாப்பான யோசனைக்காக பேதுரு அவனைக் கடிந்து கொண்டான் (அப் 8:18-23). சீமோன் உடனே மனந்திரும்பிவிட்டான். ஆனால் இதுபோன்று மனத்திரும்பாத அநேகர் இன்னும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் அவனைப் பின் தொடர்கிறார்கள். சீமோனைக் கடிந்து கொண்ட பேதுருவின் வழித்தோன்றல்கள் எனத் தங்களை உரிமை பாராட்டும் ரோமன் கத்தோலிக்க போப்கள், தங்களது ஜெபங்களை விற்பனை செய்கிறார்கள். மார்ட்டின் லுத்தர் அவரது நாளிலே, பேதுருவைப் போல இவர்களது பொல்லாப்புகளை எதிர்த்து நின்றார். ஆனால் இன்றைய பிராட்டஸ்டன்ட் மார்க்கத்தார் தங்களை லுத்தரின் வழித்தோன்றல்களென்று சொல்லிக் கொண்டு, தங்களுடைய "ஜெபங்களையும்," "தீர்க்கதரிசனங்களையும்" பணத்துக்காக விற்பனை செய்யக்கூடிய இடத்திற்குத் திரும்பிவிட்டனர்; அந்தோ! இவற்றையெல்லாம் வாங்குவதற்கு சீமோன்களைப் போல பலர் காத்திருக்கிறார்கள்!

இயேசு கடைசி நாட்களைக் குறித்துக் குறிப்பிடும் போது வஞ்சனையைப் பற்றி எச்சரித்துக் கூறுகிறார். வஞ்சனையானது தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கிற அளவுக்கு மிக நுட்பமாக இருக்கும். குறிப்பாக அவர்கள் அடையாளங்கள், அற்புதங்கள் மூலமாக வஞ்சிக்கப்படுவார்கள் என்றார் (மத் 24:24). எங்களுடைய அறைக்குள் வந்து இயேசு எங்களோடு பேசினார் என்று ஜனங்கள் சொன்னால் அவர்களை நம்ப வேண்டாம் என்று அவர் சொன்னார் (மத் 24:26). உயிர்த்தெழுந்து இத்தனை வருடங்களாகியும் (1900 வருடங்கள்), உயிர்த்தெழுந்த இயேசுவின் சரீரமானது பிதாவின் வலது கரத்தை இன்னும் விடவில்லை. பவுலும் ஸ்தேவானும் அவரை அங்கேதான் கண்டார்கள் (அப் 7:55; 9:3). யோவானும் கூட இயேசுவின் சரீரத்தைப் பார்க்கவில்லை. அவரைக் குறிப்பிட்டுக் காட்டும் அடையாளங்களை மட்டுமே பார்த்தான் (வெளி1:13-16). இயேசு பரலோகத்தை விட்டு வருவாரென்றால், அது அவரது இரண்டாம் வருகையாகத்தான் இருக்கும்.

ஆதலால் தங்களுடைய அறை வீட்டுக்குள்ளே இயேசு இன்று வந்தார் என்று எவரேனும் சொன்னால் அவர்களை நம்பாதிருங்கள். ஏமாளிகளாய் இருக்கும் விசுவாசிகள் மத்தியிலே, நாம் பகுத்தறியத் தெரியாதவர்களாய் இருந்து விடக் கூடாது. இந்த கடைசி நாட்களில் யாரெல்லாம் தேவனுடைய வார்த்தையின் மீது வாஞ்சையுடன் இருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் அது தெளிவான வெளிச்சத்தைக் கொடுக்கும். நாம் அந்த வெளிச்சத்தை மட்டுமே பின்பற்றினால், ஒரு போதும் வஞ்சிக்கப்பட மாட்டோம்.