வேதம் 1 யோவா. 1:27-ல், நாம் ஒளியில் நடவாத பட்சத்தில் நம்மால் தேவனோடு ஐக்கியப்படவே இயலாது என்று அழுத்தமாகக் கூறுகிறது. நாம் ஒளியில் நடந்தால், எதையுமே மறைக்க முடியாது. ஏனெனில், ஒளியானது எல்லாவற்றையும் வெளியரங்கப்படுத்திவிடும். இருளில் நடக்கிற மனிதன்தான் தன்னுடைய வாழ்க்கையில் ஏதாவது காரியத்தை மறைக்க விரும்புவான்.
நாம் ஒளியில் நடக்கிறவர்களானால், நம்முடைய வாழ்க்கையானது எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருக்கும். அப்படி இருப்போமென்றால், நம் அந்தரங்க வாழ்க்கையையோ, வரவு செலவு கணக்குகளையோ, வேறு எந்த காரியத்தையோ யார் எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளட்டும் என்று விடுதலையாயிருப்போம். நாம் யாரிடத்திலும் எதையும் மறைக்கவேண்டியதிருக்காது. இப்படி நாம் வாழ்வோமானால், அதனிமித்தம் நம்மைப் பூரணமானவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியாது. நாம் நேர்மையுள்ளவர்களாக இருக்கிறோம் என்று மட்டுந்தான் சொல்லிக்கொள்ள முடியும்.
தேவன் நம்மெல்லாரிடத்திலும் முதலாவதாக நேர்மையையே எதிர்பார்க்கிறார். நாம் நேர்மையாய் நடந்துகொள்வோமென்றால், நாம் சந்திக்கின்ற பலவிதப் பிரச்சனைகளுக்கு மிக எளிதில் பதில் கிடைத்துவிடும். தேவனுக்கும், மனிதனுக்கும் முன்பாக நாம் மனத்தாழ்மையோடு வாழவேண்டும் என்பது ஒரு அடிப்படை விதியாகும். இதை நாம் கைக்கொண்டு வாழ்வோமானால், நமது ஆவிக்குரிய வாழ்க்கையானது கிடுகிடுவென்று வளர்ச்சி பெற்றுவிடும்.
இது ஒரு யுத்தம் போன்ற விஷயம் என்பதை மறக்க வேண்டாம். "இந்த புத்திமதியை நான் ஏற்றுக் கொள்ளப்போகிறேன்; இன்று முதல் நான் நேர்மையாய் இருக்கப்போகிறேன்," என்றெல்லாம் நீங்கள் தீர்மானம் எடுக்கக் கூடும். அப்படித் தீர்மானம் எடுத்த பிறகும் நீங்கள் தேவனுடைய மகிமையை விட மனுஷனுடைய மகிமையை அதிகமாய்த் தேடுவீர்களானால், ஒரு வாரத்திற்குள்ளாகவே பழைய நிலைமைக்குத் திரும்பி ஒரு நடிகனாக மாறி விடுவீர்கள். ஆனால் நீங்களோ அப்படியில்லாமல் தீவிரமாயிருந்து இதில் ஜெயிக்கப் பிரயாசப்படவேண்டும்.
நேர்மையாய் இருக்க வேண்டும் என்ற இந்த அடிப்படைப் பாடத்தை இருபது அல்லது முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்னர் மறுபடியும் பிறந்தவர்கள்கூட இன்னும் கற்றுக் கொள்ளாமலிருப்பதைக் கண்டு தேவன் துயரப்படுகிறவராயிருக்கிறார். இப்பாடத்தைக் கற்றுக்கொள்ளாதவர்கள் ஆவிக்குரிய வளர்ச்சி எதுவுமின்றி தேக்க நிலையிலேயே உள்ளனர். நம்முடைய வாழ்விலும் மாய்மாலத்தை வைத்துக் கொண்டு நம்மால் நிச்சயமாய் வளர இயலாது. நம்முடைய ஜெபங்களும் கேட்கப்படாது. நாம் முழு இரவு ஜெபங்கள் நடத்தினாலும் அது காலவிரயமாகத்தான் இருக்கும். நாம் நம்முடைய மாய்மாலத்திலிருந்து வெளி வராத பட்சத்தில் நம்முடைய ஜெபங்கள் ஒரு போதும் கேட்கப்படாது.
தேவனுக்கு முன்பாக நாம் என்னவாக இருக்கிறோம் என்பதைத் தவிர வேறெதுவுமே நம்முடைய ஆவிக்குரிய தரத்தை நிர்ணியிக்க முடியாது என்பதை நாம் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். நம்முடைய ஆவிக்குரிய நிலை என்பது, நம்முடைய வேத அறிவு, நம்முடைய ஜெப நேரத்தின் அளவு, நாம் பங்குபெறும் கூட்டங்களின் எண்ணிக்கை, நம்முடைய மூப்பர்களும், மற்றவர்களும் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையெல்லாம் வைத்து ஒரு நாளும் அளவிடப்பட முடியாததாகும். மாறாக," என் ஜீவியத்தின் எல்லாப் பகுதிகளையும் காண்கிற தேவன் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்?" என்ற கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதிலிலேயே உங்கள் ஆவிக்குரிய நிலையை கண்டுகொள்ள முடியும். தினந்தோறும் இக்கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொள்ளாவிட்டால், மீண்டும் நாம் நடிக்கிறவர்களாக மாறி விடுவோம்.
இயேசு நாத்தான்வேலைப் பார்த்துச் சொன்ன, "இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்", என்ற வார்த்தைகளை நான் மிகவும் நேசிக்கிறேன். இப்படிப்பட்டதான வார்த்தைகளை உங்களையும், என்னையும் பார்த்து தேவன் சொல்வாரென்றால், இதைவிட மேலான புகழ்ச்சி நமக்கு வேண்டியதில்லை என்றே சொல்லுகிறேன். நாத்தான்வேலைப் பொறுத்தமட்டில் அவன் ஒரு பூரணமற்ற மனிதன்தான். ஆனால் அவனோ தன்னுடைய பூரணமற்றத் தன்மைகளைக் குறித்து நேர்மையுள்ளவனாயிருந்தான். அவன் தன்னிடத்தில் இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டிக்கொள்ளவில்லை. இந்த இடத்தில்தான் அவன் அனனியா, சப்பீராள் ஆகியோரிடமிருந்து வேறுபட்டு நிற்கிறான்.