பிலிப்பியர் 3-ஆம் அதிகாரத்தில், நாம் தேவனுடைய முழுமையான நோக்கத்தை அடைய வேண்டுமாயின், நம்முடைய மனப்பான்மையின் போக்கானது எவ்விதமாய் இருக்க வேண்டும் என்பதைக் குறித்து பவுல் விவரிக்கின்றார். அவர் பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நோக்கி முன்னேறியதாக நம்மிடம் சொல்லுகிறார். ஒவ்வொரு முறையும் அவர் பின்னானவைகளை நினைக்கும்படிச் சோதிக்கப்பட்டாலும், அவர் அப்படிச் செய்ய மறுத்துவிட்டார். அவருக்கு முன்பாக உபத்திரவங்கள் அவருக்காகக் காத்திருந்த போதிலும், அதினிமித்தம் தான் அசைக்கப்படவில்லை என்பதாக அப்போஸ்தலர் 20:23,24 –ல் அவர் கூறுகின்றார். இதைக் குறித்த எந்தவிதமான பயமும், தேவனுடைய இலக்கை நோக்கித் தொடரும் உறுதியான தீர்மானத்திலிருந்து அவரை அசைக்க முடியவில்லை. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பாக கர்த்தரிடத்திலிருந்து தான் பெற்ற பரம தரிசனத்திற்குத் கீழ்ப்படியாமல் இருக்கவில்லை என அகரிப்பா ராஜாவிற்கு முன்பாக மறுபடியும் அப்போஸ்தலர் 26:19 -ல் சாட்சியாகக் கூறுகின்றார். அவர் நல்ல போராட்டத்தைப் போராடி ஓட்டத்தை முடித்ததாக அவரால் தனது கடைசி நிருபத்திலும் உரிமை பாராட்ட முடிந்தது (2தீமோ 4:7). தன்னுடைய வாழ்வின் கடைசி நாள் பரியந்தமும் தேவனுடைய குறிக்கோளைப் பின் தொடரும் பாதையில், விடாப்பிடியாக இருந்த ஒரு மனிதனை நாம் இங்கு காண்கின்றோம். இந்தப் பின் தொடருதலை கைவிடும்படியாக எண்ணற்ற தூண்டுதல்கள் உண்டான போதிலும், கடுமையான உபத்திரவங்களுக்கு மத்தியிலும், நிந்தைகள் பழிச்சொற்களுக்கு மத்தியிலும், எல்லாவிதமான இளைப்பாறுதல்கள் இருந்த போதிலும், அவர் இலக்கை உத்தமமாய்ப் பிடித்துக் கொண்டவராய், அதின்மீது கண்களைப் பதியவைத்திருந்தார். இத்தகைய சாட்சியை நாமும் நமது இறுதி நாட்களில் பெற்றிருப்போமானால், நாம் பாக்கியவான்களாக இருப்போம்.
நாம் அடிக்கடி திரும்பிப் பார்க்கும்படி எவ்வளவாய்ச் சோதிக்கப்படுகிறோம்! நம்முடைய கடந்த கால தோல்விகள் நம்மைச் சோர்வடையச் செய்கின்றன. அப்படி நடக்கும்போது, பிசாசானவன் நம்மிடத்தில் வந்து, நாம் இனிமேல் தேவனுக்கு எவ்விதத்திலும் பயன்படப் போவதில்லை என்று நம்முடைய செவிகளில் கிசுகிசுக்கிறான். ஆண்டவருக்கு ஒரு கழுதையினிடத்திலும் ஒரு தேவை இருந்தது என்று சொல்லப்படுகிற காரியம் எனக்கு எப்பொழுதுமே ஓர் உற்சாகத்தைத் தருகின்றது (மத் 21:2,3). ஆண்டவராகிய இயேசுவுக்கு மேசியாவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்கு ஒரு கழுதைத் தேவைப்பட்டதானால், ஒரு சமயம் தேவனால் ஒரு கழுதையைக் கொண்டு பேச முடியுமானால் (எண் 22:28), நம் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக நம்பிக்கை உண்டு. ஏனெனில் முன் நாட்களில் எழுதப்பட்டவை யாவும், பிலேயாமின் கழுதையைப் பற்றி எழுதப்பட்டதையும் சேர்த்து, நம்மை உற்சாகமூட்டும்படிக்கே எழுதப்பட்டவையாகும் (ரோமர் 15:4). ஒரு வேளை நீங்கள் ஒரு கழுதையைப் போல மூடனாய் இருப்பதாக உணரலாம்; ஆயிரக்கணக்கான தவறுகளையும் செய்யலாம். இருந்தாலும் ஆண்டவருக்கு நீங்கள் தேவை. அவர் உங்களைத் தெரிந்தெடுக்கும் போது, அவரால் உங்கள் மூலமாய் பேசவும் முடியும்.
நாளைய தினத்தைக் குறித்துக் கவலைப்படக் கூடாது என்று கூறிய அதே வேதமானது, கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டாம் என்பதையும் அதற்கு இணையாகவே வலியுறுத்துகின்றது. நாம் நேற்றைய தினங்களையெல்லாம் மூட்டைகட்டி வீசிவிட்டு, நாளைய தினத்தை கர்த்தரின் கைகளில் கொடுத்துவிட்டு, இன்றைய தினத்தை எதிர்கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் நாளைய தினத்தில் தோல்வியைத் தழுவ நேர்ந்தால், அது உங்களை விரக்தியில் ஆழ்த்திவிட அனுமதிக்க வேண்டாம். நீங்கள் ஆண்டவரிடம் சென்று பாவத்தை அறிக்கையிட்டு, அவருடைய இரத்தத்தினால் உங்கள் பாவம் நீங்கக் கழுவப்படுங்கள். பிறகு தொடர்ந்து முன்னேறுங்கள். மீண்டுமாய் இன்னொரு முறை தவறிவிட்டால், இதையே மீண்டுமாய்ச் செய்யுங்கள். ஒருபோதும் விரக்திக்கு ஆளாகிவிட வேண்டாம். கடந்தகாலத்தைக் கவலையுடன் திரும்பிப்பார்க்கும் வீண்பார்வையை உறுதியாய் எதிர்த்து நில்லுங்கள். ஏனெனில் கறந்தபால் மடியினுள் புகாது என்பதற்காகக் கதறினால், அது நஷ்டத்தைத்தான் உண்டாக்கும். அதுபோலவே ஆத்துமாவுக்குக் கேடு விளைவிக்குக்கூடிய மேட்டிமையுடன், பின்னோக்கிப் பார்ப்பதையும் எதிர்த்து நில்லுங்கள். தேவன் உங்களை அற்புதமான வகையிலே நாளைய தினம் பயன்படுத்துவாரானால், அதை மறந்துவிடுவதற்கானக் கிருபையைத் தேடுங்கள். சுய வாழ்த்துக்களில் அமிழ்ந்துவிடாதீர்கள். ஒரு புறம் சோர்வு, இன்னொரு புறம் பெருமை ஆகிய இவை இரண்டுமே, நம்முடைய ஓட்டத்தைத் தேக்கமடைய வைத்து, நம்முடைய ஆற்றல்மிகு பயன்பாட்டைத் திருடுவதற்கு சாத்தான் பிரயோகிக்கும் இரு வகையான வழிமுறைகளாகும்.
இந்தத் தீங்கு நாட்களில், நாம் ஞானமாய் நடந்து கொள்ள வேண்டுமானால், காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டுமென நாம் எபேசியர் 5:15,16 -ல் சொல்லப்படுகின்றோம். அதன் பொருள் என்னவென்றால், நம்முடைய பாதையில் வரும் ஒவ்வொரு தருணத்தையும் நாம் வாங்கி, அதை கர்த்தரின் மகிமைக்காக மாற்றிக் கொள்வது என்பதாகும் (1கொரி 15:58). நம் ஒவ்வொருவருக்கும் ஒரு குறுகிய கால வாழ்க்கைதான் உண்டு. இந்த வாழ்வின் ஒவ்வொரு நாளும் தேவனுக்காக எண்ணப்பட வேண்டும். ஆனால் அப்படி நடப்பதற்கு, நாம் தொடர்ச்சியாய் அவரையே முன்வைத்து நடக்க வேண்டும். நாம் எத்தனை முரண்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் பரவாயில்லை. இதே மனப்பான்மையை நாம் பின்பற்றுவோமாக. ஆனால் நாம் மற்ற விசுவாசிகளைப் பார்ப்பதற்கும், அவர்கள் பெற்றிருப்பனவற்றுடன் நமக்குக் கிடைத்ததை அல்லது நம்முடைய வெற்றிகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் மறுத்துவிட வேண்டும். ஏனென்றால் அவை நம்மைச் சோர்வுக்குள்ளாகவோ, பெருமைக்குள்ளாகவோ உட்படுத்திவிடும் (ஒப்பிடுக யோவான் 21:20-22; 2கொரி 10:12). நம்முடைய பார்வையானது எப்பொழுதும் நேராக இருக்க வேண்டும்; வேறு திசைகளில் இருக்கக் கூடாது (நீதி 4:25).
பவுல் மனந்திரும்புவதற்கு முன்னரே தன்னுடைய மதத்தைக் குறித்து முழு இருதயம் உடையவராக இருந்தார் (அப் 22:3,4). அவருடைய விசுவாசமானது, நாம் இன்று பார்ப்பது போல பெலவீனமாயும், சோர்வுற்றதாயும் இருக்கவில்லை. அவர் மனந்திரும்பிய பிறகு கிறிஸ்துவின் மீதிருந்த தியானத்திலும் முழு இருதயம் உடையவராகவே இருந்தார். ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில், அவர் இப்பூமிக்குரிய காரியங்களில் தனது மனதைப் பதிக்காமல், மேலான காரியங்களிலே பதிய வைத்தார். வெதுவெதுப்பான நிலையைத் தாம் ஒருதுளியும் பாராட்டுவதில்லை என்று உயிர்த்தெழுந்த நம்முடைய கர்த்தர் நமக்கு மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார் (வெளி 3:16). தேவன் தமது ஜனங்களிடமிருந்து முழுமையை எதிர்பார்க்கிறார். ஏனென்றால் தங்களை முழுமையாய்க் கொடுத்தவர்களால் மட்டுமே தேவனுடைய முழுமையான நோக்கத்தையும் நிறைவேற்ற இயலும். நம்மில் அநேகர் தங்களுடைய கிறிஸ்தவத்தில் அரை இருதயம் உள்ளவர்களாக இருப்பதைப் போலவே தங்களுடைய படிப்பிலும் இருந்திருந்தால், அவர்கள் ஆரம்பப் பள்ளியையேத் தாண்டியிருந்திருக்க மாட்டார்கள். அல்லது அநேக விசுவாசிகள் தேவனுடைய ஊழியத்திலே அரை இருதயமாய் இருப்பதைப் போல ஒருவன் தன்னுடைய வேலையிலே இருந்தால், அவனை உடனடியாக வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். கிறிஸ்தவர்களின் முழு இருதயமானது இவ்வுலத்துக்குரிய காரியங்களில் திரளாய்ப் பூத்துக் குலுங்குகின்றது. ஆனால் அந்தோ, அவர்களுடைய மதச் செயல்பாடுகளில் அது அபூர்வமாகத்தான் காணப்படுகின்றது. எசேக்கியா ராஜா முழு இருயத்தோடும் காரியங்களைச் செய்த போது, சித்தி பெற்றான் என்று நமக்குச் சொல்லப்படுகின்றது (2நாளா 31:21). ஆனால் அவன் “முன்பிருந்த காரியங்களை” மறந்தவனாய், ஆசுவாசமாய் இருக்கும் ஒரு நாள் வந்தது. அந்த நாளிலே அவன் கர்த்தரை மிகவும் துக்ககரமாய் விட்டுவிட்டான்.
தம்மைப் பின்பற்றினவர்கள் இலக்கின்மீது கண்களை வைத்திருக்க வேண்டுமென இயேசுவானவர் தம்முடைய வார்த்தையினாலும், மாதிரியினாலும் ஏவினார். கலப்பையின்மேல் கை வைத்துவிட்டுப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்ஜியத்திற்குப் பாத்திரன் அல்ல என்றும் எச்சரித்தார் (லூக் 9:62). இயேசுதாமே பிதா தமக்குச் சுட்டிக்காட்டின திசையை நோக்கிப் போக “தமது முகத்தை ஸ்திரமாய்த் திருப்பினார்” (லூக் 9:51). “நான் என் பிதாவுக்கடுத்த காரியங்களில் இருக்க வேண்டும்” என்பதே அவரது இடையறாத மனோபாவமாக இருந்தது. அவரைப் பின்பற்றினவர்கள் இதே பாதையிலே, இதே திசையிலே செல்ல மனமில்லாதவர்களாய் இருந்ததை அவர் விரும்பியதில்லை. இயேசு கிறிஸ்துவின் சீஷனுக்கு தனது வாழ்க்கையில் ஒரேயொரு நோக்கந்தான் இருக்க வேண்டும். தேவ சித்தம் செய்து அவரை மகிமைப்படுத்துவதுதான் அந்த நோக்கமாகும். வாழ்க்கையில் உள்ள பணம், பதவி, திருமணம், வேலை இன்னுமுள்ள யாவும் அவனை இதை நோக்கியே நகர்த்த வேண்டும். தேவனுடைய நோக்கத்திற்காக யாவும் தளர்த்தப்பட வேண்டும். இந்த மனநிலைக்கேற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்ளும்போதுதான், நம்மால் ரோமர் 8:28 -ல் உள்ள வாக்குத்தத்தை நமக்கென்று சொந்தமாக்கிக் கொள்ள முடியும். தேவனிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய திட்டத்திற்கேற்ப தங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டவர்களுக்காக மாத்திரமே சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கும்.
இப்பூமியில் தேவ சித்தத்தைச் செய்தவர்களின் கிரியைகள் மாத்திரமே நித்தியத்தில் நிலைநிற்கும் என்பதை நாம் நினைவில் கொண்டிருந்தால், அது நமக்கு நலமாக இருக்கும் (1யோவான் 2:17). மற்ற எல்லாமே அழிக்கப்படும். ஆகவே தேவ சித்தம் செய்வது மட்டுமே நமது நோக்கமாய் இருந்துவிடட்டும். இயேசுவுக்கு இருந்ததைப் போலவே, நமக்கும் அது போஜனமாயும், பானமாயும் இருக்கட்டும் (யோவான் 4:34). அவருடைய சித்தம் முழுமையும் செய்யப்பட வேண்டும் என்று துடிப்பவனே அவரது இருதயத்திற்கு ஏற்ற மனுஷனாக இருந்திட முடியும். அப்படிப்பட்ட ஒருவனால்தான், அவனுடைய சந்ததிக்கு தேவனுடைய பார்வையிலே வல்லமையாய் சேவை செய்திட இயலும் (அப் 13:22,36). இத்தகைய புருஷர்களையும் ஸ்திரீகளையுமே தேவன் இன்று இவ்வுலகில் தேடிக் கொண்டிருக்கின்றார்.