நாம் தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொண்டதை சுய நலத்துடன் பற்றிக்கொள்ளும் போது, ஆவிக்குரிய மரணத்தைத் தழுவுகிறோம். இறுக மடக்கின விரல்களானது, நாம் ஆதாமின் சந்ததி என பறைசாற்றுவதற்கு மிகப் பொருத்தமான அடையாளமாகும். அது கிடைப்பதையெல்லாம் பிடுங்கி வைத்துக்கொண்டு, பெற்றுக்கொண்டதையெல்லாம் இறுகப் பற்றிக் கொள்ளும் தன்மையுடையது. கல்வாரிச் சிலுவையிலே இயேசுவின் உள்ளங்கைகள் திறந்திருந்தது போலவே நம்முடைய கைகளும் திறந்தே இருக்க வேண்டும். "…… உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எப்பொழுதும் தேவனுக்கு முதலிடம் தர வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுப்பதே தசமபாகம் தருவதின் நோக்கமாகும்" என்று இஸ்ரவேலருக்குச் சொல்லப்பட்டது (உபா 14:23 living). புதிய உடன்படிக்கையிலே தசமபாகம் கொடுக்க வேண்டுமென்ற கட்டளை எதுவும் இல்லை. சீஷனாயிருக்க விரும்புகிறவன் எல்லாவற்றையும் (10% மட்டுமல்ல) விட்டுவிட வேண்டுமென இயேசு கூறினார் (லூக் 14:33). பணத்தின் எந்தப் பகுதியும் இப்போது நமக்குச் சொந்தமானதில்லை. அவையெல்லாம் இப்பொழுது தேவனுடையவை. அப்படியென்றால் நம்முடைய பணம் எல்லாவற்றையும் அவருடைய ஊழியத்திற்கென்று கொடுத்துவிட வேண்டுமென அர்த்தம் கொள்ளக்கூடாது. ஆனால் எல்லாமே தேவனுடையவை என்று நாம் இனங்கண்டுகொள்ள வேண்டும். நாம் நமக்காகச் செலவு செய்தாலும், அதுவும் தேவனுடைய மகிமைக்காகவே இருக்க வேண்டும் (1 கொரி 10:31). ஆனாலும் தேவனுக்கென்றும், அவருடைய ஊழியத்திற்கென்றும் நாம் கொடுக்க வேண்டும். சரி, எவ்வளவு கொடுக்கவேண்டும்? உற்சாகமாய் எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்க வேண்டும் (2 கொரி 9:7). பழைய உடன்படிக்கையிலே அளவை வலியுறுத்தி கொடுக்கின்ற காரியத்தைக் குறித்துப் பேசப்பட்டது போல அல்லாமல், புதிய உடன்படிக்கையிலே தரத்தை முன்வைத்தே பேசப்படுகிறது.
ஆனாலும் நாம் கொடுப்பதற்கேற்பவே அறுவடை செய்கிறோம் (2 கொரி 6:9). நாம் தேவனுக்கென்று கொடுப்பது, ஒரு விதையை விதைப்பதற்குச் சமமாகும். நாம் சிறுக விதைத்தால், கொஞ்சமாய் அறுப்போம். அநேக விசுவாசிகள் தொடர்ச்சியாய்ப் பணக்கஷ்டத்தில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்கக்கூடும்: அவர்கள் தேவனுக்கு முன்பாக 'ஐஸ்வரியவான்களாய்' இருக்கவில்லை (லூக்.12:21). ஒரு மனுஷன் தேவனுக்கு முன்பாக ஐஸ்வரிய வானாயிருந்து, அவனுடைய தேவையின் போது, அவர் அவனைக் கடனாளியாய் விட்டுவிட்டார் என்பது ஒரு சாத்தியமற்ற செயலாகும்.
"… வாங்குவதைக் காட்டிலும் கொடுப்பதே பாக்கியம்" என இயேசு சொன்னார் (அப் 20:35). நாம் மற்றவர்களிடமிருந்து அன்பளிப்புகளைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறோமா? அப்படியென்றால் மற்றவர்களைப் போலவே நாமும் ஆதாமின் பிள்ளைகள்தான் என்பது இதிலிருந்து புலனாகிறது. மெய்யான பக்தியுடையவர்களின் ஓர் அடையாளம் என்னவென்றால், அவர்கள் எப்போதுமே வாங்குவதைவிட, கொடுப்பதையே தெரிந்து கொள்ளுவார்கள். "பக்தியுள்ளவன் கொடுப்பதை நேசிக்கிறான்"(நீதி 21:26 living). "வெகுமதிகளை வெறுக்கிறவனோ பிழைப்பான்" (நீதி 15:27) என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய மனமானது வெகுமதிகளைப் பெறுவதற்கு வெறுப்படைவதாகவும், வெகுமதிகளைக் கொடுப்பதற்கு விருப்பம் உடையதாகவும் இருக்கும்படிக்கு மறுரூபமடைய வேண்டியது அவசியமாகும்.
சக விசுவாசிகளுக்கு அவர்களுடைய தேவையில் கொடுப்பதற்கு மனமில்லாமல் இருப்பது நம்முடைய பணக்கஷ்டங்களுக்கு இன்னொரு காரணமாய் இருக்கக்கூடும்."ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்பட மாட்டான்" (நீதி 21:13). அதன் மறுபக்கமாக, "நீங்கள் ஏழைக்கு உதவும்போது, உண்மையில் நீங்கள் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறீர்கள். அதை அவர் உங்களுக்கு அற்புதமான வட்டியுடன் திருப்பித் தருவார்" (நீதி 19:17 living). நிச்சயமாகவே இதை ஞானத்துடன்தான் செய்ய வேண்டும். இதற்குண்டான ஞானம் உங்களுக்கு இல்லையென்றால், அந்தப் பணத்தை நீங்கள் மூப்பர்களிடம் (உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாய் உள்ளவர்களிடம்) கொடுத்து அதை ஞானமாய் பகிர்ந்தளிக்கும்படி கேட்டுக்கொள்ளலாம். இந்த முறைமைதான் ஆதி சபையில் பின்பற்றப்பட்டது (அப் 4:34,35).
"கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; … நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் " (லூக் 6:38) என்ற பிரமாணமானது நாம் சம்பூரணமாய் இருக்கப் போகிறோமா அல்லது பற்றாக்குறையில் இருக்கப் போகிறோமா என்பதைத் தீர்மானிக்கும் தேவனுடைய பிரமாணமாகும். நாம் பிறரிடத்தில் தாராளமாய் இருந்தால், தேவனும் நம்மிடத்தில் தாராளமாயிருப்பார். நாம் பிறரிடத்தில் பிசினித்தனம் பண்ணினால், தேவனும் நம்மிடத்தில் பிசினித்தனமாகவே நடந்து கொள்ளுவார்.
அநேகக் கிறிஸ்தவர்கள் தேவையிலிருப்பதற்கு பண ஆசையும் ஒரு காரணியாக உள்ளது. நாம் மறுபடியும் பிறக்கும் போது பண ஆசையானது தானாகவே நம்மிடத்திலிருந்து மறைந்துவிடுவதில்லை ஆனால் நாம் உண்மையுள்ளவர்களாய் இருந்து, நம்மைநாமே நியாயந்தீர்த்து, நம்மைநாமே சுத்திகரித்துக் கொள்ளுவோமென்றால், அது படிப்படியாய் நம்மிடத்திலிருந்து மறைந்து, முற்றிலுமாய் இல்லாமல் போய்விடும்.