WFTW Body: 

"சமாதானக் கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்" என எபேசியர் 4:3-ல் எழுதப்பட்டுள்ளது.

ஒருமைப்பாடு என்பது பவுலின் பல கடிதங்களில் காணப்படும் ஒரு மிகப் பெரும் மையக் கருப்பொருளாகும். ஆண்டவரும் அவரது சபைக்காக இதே பாரத்தைத்தான் கொண்டிருக்கிறார். ஒரு மனித உடம்பானது மரணித்த பின்பு, அதனுடைய ஒருங்கிணைப்பு சிதைய ஆரம்பிக்கின்றது. நம்முடைய உடம்பானது மண்ணால் செய்யப்பட்டதாகும். அதனுள் உயிர் இருப்பதால்தான் எல்லா மண்துகள்களும் ஒன்றாக இணைந்திருக்கின்றன. உயிர் பிரிந்த மாத்திரத்திலே அது சிதையத் தொடங்குகின்றது. கொஞ்ச காலம் சென்றவுடன் அது மண்ணோடு மண்ணாகி விடுகின்றது. விசுவாசிகளின் ஐக்கியத்திலும் இப்படித்தான் நிகழ்கிறது.

ஒரு சபையிலுள்ள விசுவாசிகள் மத்தியிலே ஒருமைப்பாட்டிற்கு குலைச்சல் ஏற்படும்போது, அந்தச் சபையானது மரணத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துவிட்டது என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஒருவேளை, கணவன் மனைவிக்கிடையில் ஒருமைத்தாழ்ச்சி உண்டாகிவிட்ட பின்பும், அவர்கள் விவாகரத்து செய்யாமல் வாழலாம். ஆனால் ஏற்கனவே மரணம் பிரவேசித்துவிட்டது. திருமணத்திற்கு மறுநாளே ஒருமைப்பாட்டிற்குப் பாதகம் ஏற்பட முடியும். தவறாகப் புரிந்துகொள்ளுதல், பதற்றம் (tension), சண்டைகள் போன்றவையெல்லாம் இவற்றிற்கான காரணங்களாகும்.

இது சபையிலும் நிகழக்கூடும். வழக்கமாக ஆண்டவருக்கென்று ஒரு தூய்மையான பணியைச் செய்ய வேண்டும் என்ற பெரும் வைராக்கியம் உள்ள ஒரு சில சகோதரர்கள் ஒன்று கூடி வரும்போது சபையானது தொடங்குகின்றது. ஆனால் வெகு சீக்கிரமே ஒருமைப்பாடின்மை உண்டாகி, மரணம் பிரவேசித்துவிடுகிறது. மணவாழ்க்கை, சபை ஆகிய இரண்டிலுமே ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்வதற்கு நாம் தொடர்ச்சியாக யுத்தம் செய்ய வேண்டும்.

இந்த மனித சரீரமானது மண்துகள்களால் சேர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டிருந்த போதிலும், அந்த மண்துகள்களெல்லாம் எந்தெந்த பகுதிகளில் ஒன்றாக இணைந்திருக்கின்றன என்பது கண்களுக்குப் புலப்படாமல் இருப்பது ஒரு விந்தையான விஷயமாகும். சரீரத்திலே ஒரு காயம் ஏற்படுமானால், அக்காயத்தை மூடுவதற்காக ஒருவித செயல்முறையானது உடனே செயல்பட ஆரம்பிக்கின்றது. இந்த உடம்பானது தன்னுடைய தோலில் எந்த ஒரு இடத்திலும் பிளவுண்டாகி, திறந்து கிடப்பதை விரும்புவதில்லை. திறந்த தோலை இணைப்பதற்கான முயற்சியை உடனடியாகச் செய்கிறது. எலும்புமுறிவின்போதும் இதுதான் நடக்கின்றது. இந்தச் சரீரம் அதை ஒன்றிணைக்கும் வேலையை உடனே ஆரம்பிக்கிறது. இப்பூமியிலே ஒரு மனிதனாலும் முறிந்த எலும்பை ஒன்று சேர்க்க முடியாது. ஒரு மருத்துவரால் உடைந்த பகுதிகளை ஒன்றுடன் ஒன்று அருகருகே வைக்கத்தான் முடியும். சரீரந்தான் அவ்விரு பகுதிகளையும் ஒன்றாக இணைத்துவிடுகிறது. இதே பிரகாரமாகத்தான் கிறிஸ்துவின் சரீரமும் இயங்கவேண்டும். ஒரு சபையானது இப்படி இயங்கத் தவறினால், அது கிறிஸ்துவின் சரீரத்தை பிரதிபலித்துக் கொண்டிருக்க இயலாது.

தேவன் பரிசுத்தமான தனிதனி ஆட்களாலான கூட்டத்தைச் சேர்க்கின்ற பணியைச் செய்யவில்லை. அவர் ஒரு சரீரத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார். இதைப்பற்றித்தான் பவுல் எபேசியர் 4-ஆம் அதிகாரத்தில் பேசுகிறார். "ஒரே சரீரம் இருப்பதால், ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்ளுங்கள்" என்று அவர் நம்மை ஏவுகிறார்.

ஒரு ஸ்தல சரீரத்திலே ஒருமைப்பாடு உள்ளது என்று நம்மால் எப்பொழுது சொல்ல முடியும்? "சமாதானக்கட்டினால்தான்" (எபே 4:3). "ஆவியின் சிந்தை சமாதானம்" (ரோம 8:6). நீங்கள் ஒரு சகோதரனையோ அல்லது ஒரு சகோதரியையோ நினைக்கும்போது, அவரைப் பற்றியதான சிந்தனை, சமாதானமாயும், இளைப்பாறுதலுள்ளதாயும் இருந்தால், உங்களுக்கும் அவருக்கும் இடையில் சமாதானக்கட்டு உள்ளது என்று நீங்கள் கண்டுகொள்ளலாம். ஆனால் உங்களுக்குள் ஒரு சிறிதளவு கிளர்ச்சி உண்டானாலும், நீங்கள் அந்நபரோடு ஒருமைப்பாட்டில் நிலைத்திருக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் அவரைப் பார்த்ததும் பேரார்வம் பொங்க, "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" சொல்லலாம். ஆனால் அது வெறும் மாய்மாலமே.

சமாதானம்தான் பரீட்சையாகும். ஆகவே ஆவியின் ஒருமையானது சமாதானக்கட்டினால் காக்கப்பட வேண்டும்.