WFTW Body: 

“பிசாசானவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை” (யோவான் 8:44) என்று இயேசு சொன்னார். இங்கு சாத்தானின் குணாதிசயம் ஒன்று சொல்லப்படுகின்றது. அவனிடத்தில் சத்தியம் இல்லை; அவன் சத்தியத்தில் நிலைநிற்பதில்லை. மேலும் “சாத்தான் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால், அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்” என்று இயேசு கூறினார். தேவன் அன்பாயிருக்கிறார்; சாத்தான் பகைக்கிறவனாக இருக்கிறான். நான் சத்தியமாயிருக்கிறேன்; சாத்தான் பொய்யனாய் இருக்கிறான் என்றும் இயேசு கூறினார். பிசாசானவன் சத்தியத்திலே நிலைநிற்பதில்லை, அவனிடத்தில் சத்தியம் இல்லை. அவன் பொய் பேசும்போது, தன்னுடைய சொந்தத்திலிருந்து பேசுகிறான். அவனது சுபாவமே பொய் பேசுவதாகும்; ஏனெனில் அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான். எல்லாப் பொய்களும் பொய்யின் பிதாவாகிய சாத்தானிடமிருந்தே பிறக்கின்றன. நீங்கள் சொல்லும் பொய்யானது, சாத்தான் தகப்பனாகவும், நீங்கள் தாயாகவும் இருந்து பிறக்கும் குழந்தையாக இருக்கிறது. அந்நேரத்திலே, பொய் என்னும் ஒரு குழந்தையை நீங்கள் பெற்றெடுப்பதற்காக, உங்களது இருதயத்தையும், நாவையும் சாத்தானுக்கு ஒப்புக் கொடுக்கிறீர்கள். தேவன் ஒருக்காலும் பொய்யைப் பெற்றெடுக்கும் தகப்பனாய் இருப்பதில்லை. ஆகவேதான் நாம் கிறிஸ்தவர்களான பிறகு (விசுவாசிகளான பிறகு), எப்பொழுதுமே உண்மையைத்தான் பேச வேண்டுமென்பதின் முக்கியத்துவத்தை அறிய வேண்டியது மிக அவசியமாகின்றது.

“உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்” (மத் 5:37) என்று இயேசு இதைப் பற்றிக் கூறியிருக்கிறார். அத்துடன், “சத்தியம் பண்ண வேண்டாம்; சத்தியமே பண்ண வேண்டாம்” (மத் 5:34) என்றும் சொல்லியிருக்கிறார். நீங்கள் சத்தியம் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில், ஒருவன் சத்தியம் செய்யும் போது, அவன் வேதத்தின் மீதோ அல்லது தேவன் மீதோ அல்லது பரத்தின் மீதோ அல்லது இது போன்ற ஏதோ ஒன்றின் மீதோ தனது கைகளை வைத்துத்தான் அதைச் செய்ய வேண்டும். அவன் உள்ளபடியே என்ன சொல்லுகிறான் என்றால், ‘நான் பெரும்பாலான நேரம் பொய்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இப்போது சத்தியம் செய்வதின் மூலம் ஓர் உண்மையைச் சொல்லுகிறேன்’ என்று சொல்லுகிறான். ஆனால் இயேசுவோ, “நீங்கள் அப்படி இருக்கலாகாது. நீங்கள் எல்லா நேரமும் உண்மையைத்தான் பேச வேண்டும். நீங்கள் சத்தியம் பண்ண வேண்டிய தேவையே இல்லை” என்று சொல்கின்றார். சத்தியம் செய்து சொல்லப்படும் வார்த்தைகள், சத்தியம் செய்யப்படாமல் சொல்லப்படும் வார்த்தைகளைவிட உண்மையுள்ளவைகளாக இருந்துவிடக் கூடாது. இரண்டும் ஒன்று போலவே இருக்க வேண்டும். இதற்கு மிஞ்சின யாவும் தீமையாய் இருக்கும்.

நாம் தேவனிடத்தில் வரும்போது, அவர் முதலாவது நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? பூரணத்தை அல்ல, பரிசுத்தத்தை அல்ல, நற்கிரியைகளை அல்ல, அன்பை அல்ல, இவை எதையுமே அவர் நம்மிடமிருந்து முதலில் எதிர்பார்ப்பதில்லை. நாம் அவரிடத்தில் வரும்போது அவர் நம்மிடமிருந்து ஒரேயொரு காரியத்தைத்தான் எதிர்பார்க்கிறார். அது நம்முடைய நேர்மையே.

பரதீசு என்பது பூரணமான மக்களுக்காக உண்டாக்கப்பட்டதல்ல. அது நேர்மையான மக்களுக்காக உண்டாக்கப்பட்டது. உண்மை மாத்திரமே பேச விரும்பும் மக்களுக்காக உண்டாக்கப்பட்டது. வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் முதல் பாவம் பொய் பேசுவதாகும். முதன்முதலில் செய்யப்பட்ட பாவத்தைப் பற்றி ஆதியாகமம் 3-ல் சொல்லப்படுகிறது. அது விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசித்ததினால் ஏவாள் செய்த பாவமல்ல. அது ஆதியாகமம் 3-க்கு முன்னதாகவே சாத்தானால் செய்யப்பட்ட பாவமாகும்; அது மனிதனால் செய்யப்பட்டதன்று. சாத்தான் ஏவாளிடத்தில் வந்து, ‘இந்த மரத்தின் கனியைப் புசிக்கக் கூடாதென்று தேவன் சொன்னதுண்டோ?’ என்று கேட்டான். அதற்கு ஸ்திரீயானவள், ‘தோட்டத்தின் நடுவிலுள்ள மரத்தின் கனியைப் புசிக்கும் நாளில் நீ சாகவே சாவாய் என்று தேவன் சொல்லிருக்கிறார்’ என்று பதிலளித்தாள். சர்ப்பமானது, “நீ சாகவே சாவதில்லை” என்று ஆதியாகமம் 3:4 -ல் சொல்லிற்று. அது ஒரு பொய்யாகும். அதுதான் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள முதலாவது பொய்யும், முதலாவது பாவமும் ஆகும். நீ சாவதில்லை; நீ தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தாலும், அதற்கான தண்டனை உனக்குக் கிடைக்காது. நீ நரகத்திற்குப் போக மாட்டாய். பாவத்திற்கு எத்தகைய தண்டனையும் இல்லை. இத்தகைய ஒரு பொய்யைக் கொண்டுதான் சாத்தான் ஏவாளை வஞ்சித்தான். அன்று முதல் இன்று வரையிலும், பல்லாயிரம் ஆண்டுகளாய் அவன் மனுக்குலம் முழுவதையும் வஞ்சித்து வருகிறான். பாவிகள் அவர்களது பாவங்களில் இருப்பதைக் கண்டாலும், “நீங்கள் ஆண்டவரை ஏற்றுக் கொண்டு விட்டீர்கள். நீங்கள் எவ்வளவுதான் பாவம் செய்தாலும், பரலோகத்திற்குதான் போவீர்கள்” என்று ஆறுதல் சொல்லும் பிரசங்கிமார்களும் உண்டு.

“துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது” என்று பிரசங்கி 8:11-ல் சொல்லப்படுகின்றது. தேவன் அவ்வப்போதே பாவத்திற்கான தண்டனையைத் தராதபடியால், மக்கள் தொடர்ந்து பாவத்தில் வாழ்ந்து கொண்டுள்ளனர். ஆதலால், ‘நீ தண்டிக்கப்படப் போவதில்லை. உன்னைச் சுற்றியுள்ள மற்ற ஜனங்களையெல்லாம் பார். அவர்கள் செய்யும் பாவங்களையெல்லாம் பார். அநேக கெட்ட காரியங்களைச் செய்தும், எவ்விதத் தண்டனையும் பெறாமல் வாழும் விசுவாசிகளைப் பார்’ என்று பிசாசு சொல்லுகிறான். அவர்கள் தண்டனையிலிருந்து தப்பவில்லை. அவரது தண்டனையான, தேவனுடைய நியாயத்தீர்ப்பு இன்னும் வரவில்லை. அவ்வளவுதான். நீ பாவம் செய்தாலும் துன்பப்பட மாட்டாய் என்ற ஒரு பொய்யைக் கையில் வைத்துக் கொண்டு, சாத்தானானவன் எல்லா மக்களையும் முட்டாளாக்கிக் கொண்டு உலகை வலம் வந்து கொண்டிருக்கிறான். “மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்” (ரோமர் 8:13) என வேதம் எச்சரிக்கின்றது. ஆனால் சாத்தானோ, ‘இல்லையில்லை, நீ சாவதில்லை. தேவன் இரக்கமுள்ளவர். தேவன் கிருபையுள்ளவர். நீ இயேசுவை உன் வாழ்க்கைக்குள் வருமாறு அழைத்திருக்கிறாய். ஆகவே நீ மாம்சத்தின்படி பிழைத்தாலும், சாக மாட்டாய்’ என்று சொல்லுகிறான். அது ஒரு வஞ்சனை. நீங்கள் மாம்சத்தின்படி பிழைத்தால், சாவீர்கள். இதைக் குறித்துக் கடுகளவேனும் ஐயம் கொள்ள வேண்டாம். சாத்தான் ஒரு பொய்யனாக இருப்பதால், அவன் தனது சுபாவத்தைத் தன்னுடைய பிள்ளைகளுக்குக் கடத்த விரும்புகின்றான். இந்த சுபாவம் ஒரு விசுவாசியை வெகு எளிதாகத் தொற்றிக் கொள்ளும். நீங்கள் ஒவ்வொரு முறை பொய் சொல்லும் போதெல்லாம், உங்களுடைய நாவை சாத்தானுக்குக் கொடுத்து, அவனை இன்னொரு பிள்ளைக்குத் தகப்பனாக்குகிறீர்கள்.

வேதத்தில், கடைசி பாவத்தைக் குறித்து வெளிப்படுத்தல் 22:15 -ல் சொல்லப்படுகின்றது. கடைசி நாளில், தேவனுடைய நகரத்திற்கு வெளியில் இருக்கப் போகிறவர்கள் யார் என்பதைக் குறித்து அங்கு சொல்லப்பட்டுள்ளது. “பொய்யை விரும்பி, அதன்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.” பொய்தான் வேதத்தில் முதலாவது பாவமாகவும், கடைசிப் பாவமாகவும் சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் என்றாவது கவனித்ததுண்டா? பொய் சொல்வது மிக சீரியஸான ஒன்றாகும். தேவனிடத்தில் பொய் சொல்வதற்கும், ஜனங்களிடத்தில் பொய் சொல்வதற்கும் மற்ற எல்லாப் பொய்களுக்கும் தகப்பனாய் இருப்பது சாத்தான்தான். பேதுரு அனனியாவைப் பார்த்து, “பரிசுத்த ஆவியினிடத்தில் ஏன் பொய் சொன்னாய்?” என்று கேட்டார். பொய்தான் ஆதிசபையிலே முதன்முதலாக நியாயந்தீர்க்கப்பட்ட பாவமாகும். அது வெகு சீரியஸான விஷயமாகும். ஆகவே, பொய் சொல்வதை நிறுத்திவிட வேண்டும் என்று நம்முடைய குழந்தைகளுக்குக் கற்றுத்தருவது, பெற்றோர்களாகிய நாம் நம் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டிய மிக முக்கியமான பாடங்களுள் ஒன்றாகும். நம்முடைய பிள்ளைகள் நமது சுபாவத்துடன்தான் பிறந்திருக்கிறார்கள். அவர்கள் பிறந்ததிலிருந்தே பொய் சொல்கிறார்கள். அது எவ்வளவு சீரியஸானது என்று காட்டப்படாத பட்சத்தில், அவர்கள் அதை நம்முடைய வாழ்க்கையில் காணாத பட்சத்தில், அவர்களால் அதைக் கற்றுக் கொள்ள முடியாது. பெற்றோர்களாகிய நாம் உண்மை பேசுவதை எவ்வளவு சீரியஸாக எடுத்திருக்கிறோம் என்றும், நாம் ஏதாவது ஒன்றைச் சொன்னால், அதைச் செய்துவிடுவோம் என்றும் அவர்கள் காண வேண்டும். நம்முடைய பிள்ளைகளிடத்தில் ஏதேனும் வாக்குப் பண்ணினால், அதை நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், அதைச் செய்ய முடியாமற் போனதற்கான நியாயமான காரணத்தை விளக்கிச் சொல்ல வேண்டும்.

உண்மை பேசுதல் ஒரு குணம், நற்பண்பு. இந்த நற்பண்பை நாம் பெற்றுக் கொள்ள விரும்பினால், அதற்காக முழு இருதயத்துடன் போராட வேண்டும். பரிசுத்த ஆவியானவர், சத்திய ஆவியாவார். நீங்கள் சத்தியமுள்ளவர்களாயிருக்க விரும்பினால், பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்ப வேண்டுமென கேட்க வேண்டும். பொய் பேசும் பழக்கத்தை முற்றிலுமாய் அழித்துவிட வேண்டுமாய் அவரிடத்தில் நீங்கள் கேட்க வேண்டும். அதை நாம் செய்வோமானால், சாத்தான் நம்மை வஞ்சிப்பதற்காகப் பயன்படுத்தும் பொய்களை நாம் கண்டுகொள்ளத்தக்கதான பகுத்தறிவை தேவன் நமக்கு தந்தருளுவார்.