WFTW Body: 

அப்போஸ்தலனாகிய பவுல் மூன்று வருடம் எபேசு பட்டணத்தில் தங்கியிருந்து, இடைவிடாமல் இரவும் பகலும் பிரசங்கித்தார் (அப் 20:31). அப்படியானால் பவுலின் உதடுகள் உதிர்த்த பல நூறு பிரசங்கங்களைக் கேட்டவர்கள்தான் இந்த எபேசியக் கிறிஸ்தவர்கள் என்று நாம் இதை அர்த்தப்படுத்தலாம். கர்த்தர்தாமே அவர்கள் மத்தியிலே நடப்பித்த அசாதாரணமான அற்புதங்களை அவர்கள் கண்டிருந்தனர் (அப் 9:14). மிகக் குறுகிய கால இடைவெளியான 2 வருடங்களுக்குள்ளாக அவர்கள் நடுவிலிருந்துதான், சுற்றியிருந்த ஆசியா மைனர் பகுதிகளிலெல்லாம் தேவனுடைய வார்த்தை பரவினது. அவர்கள் எழுப்புதலை அனுபவித்தவர்களாய் இருந்தனர் (அப் 19:10,19). அப்போஸ்தலர் காலத்திலிருந்த சபைகளிலேயே இவர்கள்தான் மிகவும் சிலாக்கியம் பெற்றவர்களாய் விளங்கினர். அச்சமயத்தில், ஆசியா மைனரிலேயே இந்த சபைதான் ஆவிக்குரியதாய் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. (பவுல், மற்ற சபைகளில் காணப்பட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைச் சரி செய்ய வேண்டுமென்று அவர்களுக்குச் சொன்னது போல, எபேசியருக்கு எழுதிய நிருபத்திலே எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டிய நிலை எழவில்லை என்பதிலிருந்து நாம் இதை அறிந்து கொள்ளலாம்). ஆனால் அடுத்த தலைமுறையில் உருவாகும் புதிய தலைமையின் கீழ், சபையானது கேடான நிலைக்குச் சென்று விடும் என்று பவுல் எபேசுவை விட்டுக் கிளம்பும் முன்பாக மூப்பர்களை எச்சரித்தார். அவர்களுக்குள்ளே கொடிதான ஓநாய்கள் வரும் என்றும், அவர்களிலும் சிலர் எழும்பி மாறுபாடானவைகளைப் போதிப்பார்கள் என்றும், ஜனங்களைக் கர்த்தரிடத்திலே நடத்துவதற்குப் பதிலாக, தங்களிடத்திலே இழுத்துக் கொள்வார்கள் என்றும் அவர் அவர்களிடத்திலே சொன்னார் (அப் 20:29,30).

பவுல் அங்கிருந்த வரையிலும், எபேசு மந்தைக்குள்ளே எந்த ஓநாயும் நுழையத் துணியவில்லை. கர்த்தரிடமிருந்து ஆவிக்குரிய அதிகாரத்தைப் பெற்றிருந்த பவுல் ஓர் உண்மையுள்ள காவல்காரனாய் இருந்தார் (மாற்கு 13:34). அவர் அபிஷேகிக்கப்பட்டவராய் இருந்ததாலும், தேவனுக்குப் பயந்தவராய் இருந்ததாலும், தனது விருப்பங்களைத் தேடாமல், கர்த்தருடைய விருப்பங்களையே தேடினவராய் இருந்ததாலும் அவரால் அவ்வாறு இருக்க முடிந்தது. அதே சமயம், எபேசு பட்டணத்து மூப்பர்களின் ஆவிக்குரிய நிலை மோசமாக இருந்தது என்று அறிந்து கொள்ளக்கூடிய ஆவிக்குரிய பகுத்தறிதலும் அவருக்கு இருந்தது. எனவே அத்தகைய மூப்பர்களெல்லாம் சபையிலே தலைமைத்துவத்தை எடுக்கும் போது, காரியங்களெல்லாம் படிப்படியாக சீர்கேடு அடைந்துவிடும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எபேசுவிலே உறுதியாய் என்ன நேரிடும் என்று பவுல் அந்த மூப்பர்களுக்குத் தீர்க்கதரிசனமாக எதையும் சொல்லவில்லை. இல்லை. அது ஓர் எச்சரிக்கைதான். மூப்பர்கள் தங்களைத்தாங்களே நியாயந்தீர்த்து, மனந்திரும்பியிருந்தால், அவர் முன்னறிவித்த பிரகாரமே காரியங்கள் நடந்திருந்திருக்காது.

நினிவேயின் அழிவைக் குறித்து யோனா ஒரு முறை தீர்க்கதரிசனம் உரைத்தான். ஆனால் நினிவே மக்கள் மனந்திரும்பியபடியால், யோனா முன்னறிவித்தது போல நடக்கவில்லை. அது போலவே எபேசு சபையும் பவுல் சொன்ன துர்பாக்கிய நிலையிலிருந்து தப்பியிருந்திருக்கக்கூடும். ஆனால் அந்தோ! புதிய தலைமுறையில் தோன்றிய எபேசு தலைவர்கள் பவுலின் எச்சரிக்கையை அசட்டை பண்ணி ஆண்டவரைவிட்டு வழிவிலகி விட்டார்கள். முதலாம் நூற்றாண்டின் இறுதிக்குள், மூன்றாம் தலைமுறையானது அதிகாரத்தில் அமர்ந்துவிட்டது. அதன்பின்பு, காரியங்கள் மோசமாகி விட்டன. அவர்களுடைய உபதேசங்கள் சரியானவையாகத்தான் இருந்தன; அவர்கள் கிறிஸ்தவ நடவடிக்கைகளில் வைராக்கியமாகத்தான் இருந்தனர். அநேகமாக அவர்கள் முழு இரவு கூட்டங்களையும், விசேஷித்தக் கூட்டங்களையும் இன்னும் நடத்திக் கொண்டுதான் இருந்தனர். ஆனால் கர்த்தர் அவர்களை ஒரு சபைக்குரிய அங்கீகாரத்திலிருந்து அகற்றிவிடுமளவுக்கு அவர்களது ஆவிக்குரிய தரமானது படுமோசமாக மாறியிருந்தது. அவர்கள் செய்த குற்றம் என்ன? அவர்கள் கர்த்தர்மேல் கொண்டிருந்த பக்தியை இழந்தார்கள் (வெளி 2:4,5).

எபேசுவிலிருந்த சபையின் சரித்திரம் நமக்குப் போதிப்பது என்ன? “கர்த்தர்மேல் கொண்டிருக்கும் ஊக்கமான பக்திக்கு மேலான உபதேசம் ஒன்றுமேயில்லை” என்பதுதான். மெய்யான ஆவிக்குரிய தன்மைக்கு (Spirituality) ஒரேயொரு அடையாளம்தான் உண்டு. இயேசுவின் ஜீவன் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகதிகமாக வெளிப்படுவதும், அந்த ஜீவனானது ஆண்டவரிடத்தில் தனிப்பட்ட பக்தியின் மூலமாகத்தான் பெருகுகின்றது என்பதும்தான் அந்த அடையாளமாகும்.

பவுல் ஒரு தேவபக்தியுள்ள மனிதனாய் இருந்தார். ஊக்கமான, உண்மையுள்ள அப்போஸ்தலனாய் இருந்த அவர், தன்னுடைய இறுதி மூச்சு வரை, கர்த்தராகிய இயேசுவின் மீது கொண்டிருந்த பக்தியை இழந்துவிடவேயில்லை. அத்துடன் அவர் எல்லா இடங்களிலும் இருந்த எல்லா விசுவாசிகளுக்கும், "கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி" (2கொரி 11:3), சாத்தானானவன் எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்தி முயற்சிப்பான் என்று எச்சரிக்கை விடுத்தார். ஒருவன் கிறிஸ்துவுடன் உள்ள தனிப்பட்ட பக்தியை இழந்துவிடும் அபாயமானது, "தண்ணீர் ஞானஸ்நானம்", "பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்" ஆகிய உபதேசங்களில் காணப்படும் தவறுகளைக் காட்டிலும் பயங்கரமானதாகும். என்றாலும் அநேகர் இதைப் பற்றிய உணர்வற்றவர்களாகவே உள்ளனர். பவுலும்கூட, தம்முடைய காலத்தில் மாத்திரமே தேவனுடைய சித்தத்தின்படி ஊழியஞ்செய்ய முடிந்ததை நாம் காண்கிறோம். தீமோத்தேயுவைப் போல அவரோடு வாழ்ந்தவர்கள், பவுலின் ஆவியை மனதிற்கொண்டு, தன்னலமற்ற பக்தியைக் கிறிஸ்துவுக்குக் கொடுத்து வாழ்ந்தார்கள் (பிலி 2:19-21). இல்லையெனில், பவுல் தமது ஆவிக்குரிய தன்மையை அவர் நிறுவிய சபைகளிலுள்ள இரண்டாம் தலைமுறை விசுவாசிகளுக்குக்கூடக் கடத்த (transmit) முடியவில்லை.